சில்லென்ற தீப்பொறி – 12

சில்லென்ற தீப்பொறி – 12

சில்லென்ற தீப்பொறி – 12

கோவை குடும்பநல நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அன்றைய தினம் இணையவழி காணொளி, ஒலி அழைப்பின் மூலம் முதற்கட்ட ஆலோசனையைத் தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொதுவாக வழக்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதில்லை என்றாலும் வழக்கின் தன்மை மற்றும் வாதி, பிரதிவாதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரே நாளில் அப்படி நடைபெறுவதும் உண்டு. விவாகரத்து வழக்கில் தம்பதிகளின் நன்மை கருதியே குடும்பநல நீதிமன்றம் இப்படியான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

லக்கீஸ்வரி தனது வீட்டு அலுவலக அறையில் இருந்தும், அமிர்தசாகர் ஜெர்மனியில் தான் தங்கியிருக்கும் குடியிருப்பு அறையில் இருந்தும் இணையத்தின் மூலம் இணைந்து கொள்ள, முதற்கட்ட ஆலோசனை துவங்கியது.

இருவரிடமும் முதலில் தனித்தனியாக பிரிவினைக்கான காரணங்களை கேட்டறிய, பதில்களை அமைதியாவே அளித்தனர். தங்களுக்குள் விருப்பங்கள், முடிவுகள் ஒன்றுபடவில்லை என ஒன்று போல பிரிவிற்கான காரணங்களை கூறி முடித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆலோசகரும் தன் சார்பாக ஆலோசனைகளை கூறி முடித்து விட்டு நகர, வழக்கின் விசாரணை ஒருமணி நேர இடைவெளியில் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இக்கால விவாகரத்துகள் விலையில்லா பொருட்களாக மலிந்து போன காலநிலையில் இத்தனை நடைமுறைகள் தேவையில்லை தான். இருவரும் மனமொத்து கேட்டு வரும் பொழுது, ‘இந்தா பிடி… வைத்துக் கொள்!’ தீர்ப்பினை வழங்கிவிட்டு எளிதாக வழக்கினை முடித்துவிட்டு சென்று விடலாம். இன்றளவில் விவாகரத்து வழக்குகள் எல்லாம் அப்படிதான் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இவர்களின் வழக்கில் தடையாக புதிய திருப்பம் ஒன்று கோரிக்கை மனு வடிவில் நீதிபதியின் வசம் வந்திருந்தது. அதனை முன்னிட்டே நீதிபதியும் உடனடியாக வழக்கு விசாரணையை மேற்கொள்ளத் ஆயத்தமானார்.

குடும்ப நல நீதிமன்ற பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் ஒருமணி நேரம் கழித்து இணைய இணைப்பில் வர, மீண்டும் விவாகாரத்து தொடர்பான சாராசம்சம் அமைதியான முறையில் விசாரிக்கப்பட்டது.

இருவருக்கும் பொதுவான ஒருவரே வழக்கறிஞராக செயல்பட்டதால் குழப்பங்கள் இல்லாத தெளிவான வாதத்தினை அவர் எடுத்து வைக்க, அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டார் பெண் நீதிபதி.

பின் தனது இறுதி முடிவினை அறிவிக்கும் விதமாக அவரே பேசினார்.

“உங்க விவாகரத்து வழக்கு சம்மந்தமாக, இந்த குடும்பநல நீதிமன்றத்திற்கு ஒரு கோரிக்கை மனு வந்திருக்கு. உங்களை பற்றி கூறியிருக்கும் அந்த மனுவில் மேற்கொண்டு அதுல என்ன சொல்லி இருக்காங்க… என்ன கோரிக்கை வைக்கிறாங்கன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணும். இப்போது அந்த மனுவை வாதிகளின்(அமிர்&லக்கி) எதிர்தரப்பு வழக்கறிஞர் படிப்பார்.” என பெண் நீதிபதி கூறவும் எதிர்தரப்பு வழக்கறிஞர் எனக் கூறப்பட்ட புதியவர் ஒருவர் வந்து நின்று மனுவின் சாராம்சத்தை படிக்க ஆரம்பித்தார். 

“திரு.அமிர்சாகர் மற்றும் திருமதி.லக்கீஸ்வரி, இவர்களின் விவாகரத்துக்கு வழக்கினை தள்ளுபடி செய்து, எங்களின் கோரிக்கை மனுவை தயை கூர்ந்து படித்து, சிரமேற்கொண்டு அதனை ஆவண செய்யுமாறு கணம் நீதிபதி அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளும் கோரிக்கை மனு…” என வாசித்து இடைநிறுத்திய வழக்கறிஞர் மேலும் தொடர்ந்தார்.

“கணம் பொருந்திய உயர்திரு குடும்பநல நீதிபதி அவர்களுக்கு கோவை **** பகுதியை சேர்ந்த ரெங்கேஸ்வரனாகிய நானும், கோவை *** பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரும் ஒருமித்த கருத்தோடு எங்களின் சுய சிந்தனையில், சுய விருப்பத்தின் பேரில் எங்களின் வழக்கறிஞர் மூலமாக கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றோம். இந்த மனுவினை படித்து தீர ஆலோசித்து எங்களின் கோரிக்கையை ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ரெங்கேஸ்வரனின் மகளான லக்கீஸ்வரிக்கும், அவரது நண்பர் சடகோபன் மகனான அமிர்தசாகருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்தில் ஊரறிய திருமணம் நடத்தி வைத்தோம்.

ஒரு ஆண்டு முடிவதற்குள் இருவரும் தங்களுக்குள் எந்த ஒரு நிலையிலும் சேர்ந்து வாழ ஒத்து வரவில்லை எனக் கூறி பிரிவிற்கான மனுவை தாக்கல் செய்து தங்களின் முன் விவாகரத்து கேட்டு நிற்கின்றனர்.

இப்போதுள்ள காலச் சூழ்நிலையில் திருமண முடிந்த ஒரு மணி நேர இடைவெளியில் கூட விவாகம் ரத்து செய்யப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனாலும் எங்களுக்கு, எங்கள் பிள்ளைகளின் மேல் இன்றளவும் நம்பிக்கை இருப்பதால் மட்டுமே இந்த கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருக்கின்றோம்.

திருமணம் நடந்து ஒன்பது மாதங்கள் முடிந்தாலும் இருவரும் சேர்ந்தாற் போன்று முப்பது நாட்கள் கூட தொடர்ந்து குடும்பம் நடத்தவில்லை. இவர்களின் பிரிவிற்கான அழுத்தமான காரணங்கள் என எதுவும் இல்லை.

சுய விருப்பு வெறுப்புகள் என்றில்லாமல், இவர்களை தாண்டிய, பிறருடைய நன்மைகளுக்காகவே இருவரும் தங்களுக்குள் தர்க்கங்களை வளர்த்து கொண்டு பிரிந்து வாழ்வது என்கிற முடிவில் விவாகாரத்தை முன் வைத்துள்ளனர்.

அவர்களின் பெற்றோர்களாகிய நாங்கள் விரும்புவதை எங்களின் கோரிக்கையாக முன்வைக்க வந்துள்ளோம்.

இவர்கள் இன்றிலிருந்து ஒரு வருடம் கட்டாயமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் சேர்ந்து வாழந்தே ஆக வேண்டுமென்று நீதிமன்றம் மூலம் அறிவுறுத்த படவேண்டும்.

அப்படி சேர்ந்து வாழும் சமயத்தில் இருவரின் குடும்பத்தாரின் தலையீடுகளும் தொந்திரவுகளும் எதுவும் இருக்காது என்று நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.

ஒரு வருடத்தையும் கடந்து மேற்கொண்டு இவர்கள் இணைந்து வாழ விருப்பப்படும் பொழுது, அதற்கு முட்டுக்கட்டையாக உற்றார் உறவினர், தொழில் சம்பத்துக்கள் இடையூறு விளைவிக்கும் என்று இவர்களில் ஒருவரேனும் கருதினால் அத்தனை இடையூறுகளையும் ஒதுக்கி தந்து, அவர்களிடமிருந்து ஒதுங்கி கொள்ளவும் உறுதி அளிக்கின்றோம். எங்களுக்கு வேண்டியது இவர்களின் நல்வாழ்க்கை மட்டுமே.

தவறுகள் இருவரின் மீதும் இல்லாத பட்சத்தில் மூன்றாம் மனிதர்களால் மட்டுமே இவர்கள் பிரிவதை குடும்பத்தினர் யாரும் விரும்பவில்லை. அத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் தவிர்த்து நிற்கும் கோழைகளாக எங்களின் வாரிசுகள் வாழ்ந்துவிடக் கூடாது என்கிற ஆதங்கமும் காரணம். அதோடு காலம் சென்ற என் நண்பன் சடகோபனின் ஆசையும் நிறைவேற வேண்டுமென்ற ரெங்கேஸ்வரனாகிய எனது உறுதியான உணர்வின் வெளிப்பாடு. 

சமுதாய தொடர் சங்கிலியான குடும்ப வாழ்க்கையின் உன்னதத்தை இவர்கள் அறிந்து கொண்டாலே அங்கே  பிரிவினை அர்த்தமற்றதாகி விடும்.

எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எங்களின் சொல்பேச்சினை ஏற்றுக் கொள்ள முடியாத பிடிவாதத்தில் நிற்பதால் மட்டுமே எங்களின் கோரிக்கையை நீதிமன்றம் வரை கொண்டு வந்து தங்களின் முன் தாக்கல் செய்தது.

இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் வரம்பு மீறிய செயலாக கருதினால் அதற்குரிய தண்டனையை ஏற்கவும் மனமுவந்து மன்னிப்பு கோரவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வையும் அவர்களின் எதிர்கால மகிழ்ச்சியையும் நீதியின் கைகளில் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். சட்டத்தின் ஆணை எதுவாக இருந்தாலும் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கிக் கொள்ளவும் தயாராக உள்ளோம்.” என முடிந்திருந்தது அந்த கோரிக்கை மனு.

பெருமூச்சுடன் படித்து முடித்த வழக்கறிஞரை தொடர்ந்து அமிர்தசாகர் மற்றும் லக்கீஸ்வரியின் கண்களும் நீதிபதியின் உரையினை எதிர்நோக்கிக் கொண்டிருந்தன. இருவருக்குள்ளும் உறைந்த அதிர்ச்சியினை வெளிபடுத்திக் கொள்ளவும் அவகாசம் இல்லாமல் செயலற்று ஊமையாக இருந்தனர் இளம் தம்பதியினர்.

அந்த கோரிக்கை மனுவினை வாங்கி இரண்டு முறை தனக்குள் படித்து பார்த்த நீதிபதியும் தனது தீர்ப்பினை கூறத் தொடங்கினார்.  

“சமூக கட்டமைப்பில் இருந்து விலகாமல், மனிதன் அறநெறி வாழ்க்கையினை வாழ வழிகாட்டவே சட்டங்களும் நீதிமன்றங்களும் ஏற்படுத்தபட்டன. அந்த நெறிமுறைகளின் ஒன்றான பெரியவர்களின் கோரிக்கையை என்றும் எப்போதும் செவி சாய்க்க வேண்டுமென்பதை நம் நாட்டு பண்பாடு ஒரு விதிமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதன்படி இந்த கோரிக்கையில் கூறியிருக்கும் நன்மைகளை பரிசீலித்தும், இளைய தம்பதியரின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை கருத்தில் கொண்டும் அமிர்தசாகர் மற்றும் லக்கீஸ்வரியின் விவாகரத்து வழக்கினை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது.

இந்த மனுவில் கூறியுள்ளபடி இருவரும் ஒன்றாக இன்றிலிருந்து ஒருவருடம் சேர்ந்து வாழ வேண்டுமென்றும் அதற்கு பிறகும் திருமண பந்தத்தினை முறித்துக் கொள்ள விருப்பப்பட்டால் விகாரத்து வழக்கினை மீண்டும் தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இதற்கு மனம் ஒப்பாமல் இப்பொழுதே விவாகரத்து வேண்டுமென இருவரும் தீர்மானித்தால், இந்த மனுவிற்கு எதிரான வேறொரு எதிர்மனுவினை தாக்கல் செய்துவிட்டு, உங்கள் வழக்கினை மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் எடுத்துக் கூறுகிறது.

இது போன்ற கோரிக்கை மனுக்களை இன்றளவும் இந்த நீதிமன்றம் வாய்மொழியாகவும் கோரிக்கையாகவும் கண்டும் கேட்டும் வருகிறது. அவற்றினை தங்கள் விருப்பம் போல் வாதி, பிரதிவாதிகள் ஏற்றுக் கொண்டும் நிராகரித்து வருவதும் இன்றைய காலகட்டத்தில் நடந்தும் வருகின்றது. பெற்றோர் பேச்சினை எக்காலத்திலும் கேட்டு அதன்படி நடந்து கொள்வதே இன்பமான வாழ்க்கைக்கு இனிய மருந்து.” என்ற தனது நீண்ட உரையை தீர்ப்பாக கூறி வழக்கினை முடித்து வைத்தார் நீதிபதி.  

நண்பர்களே நீதிமன்ற காட்சியும் அதனைத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புகளும் முழுக்க முழுக்க எனது கற்பனையே… இப்படியும் நடக்குமா இருக்குமா என்ற கேள்வியுடன் உள்பெட்டி கதவினை தட்டி என்னை கதிகலங்க வைக்க வேண்டாம். கதைக்காக என் சிறுமூளையில் உதித்த யோசனையை மட்டுமே இங்கே இறக்கியிருக்கிறேன். இனி கதைக்குள் செல்வோம்! 

இணையவழி வழக்கு விசாரணை முடிந்த பொழுதில் இருந்து மனதிற்குள்ளாக எரிமலையினை கக்கிக் கொண்டிருந்தான் அமிர்தசாகர். அவனது பார்வையில் பெரியவர்களின் இந்த செயல் மிகவும் அதிகப்படியாகவே தோன்றியது.

ஒருவரின் சுய விருப்பத்தையும் தடை செய்யும் செயலை, மற்றவரின் வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் அநாகரீகத்தை அத்தனை எளிதில் ஏற்றுக் கொண்டு சமன் செய்துகொள்ள சற்றும் விரும்பவில்லை அமிர்.

‘யார் வாழக்கைக்கு யார் முடிவெடுப்பது? இவர் சொன்னால் சேர்ந்து வாழ்ந்து, பிரிந்தும் போக வேண்டுமா?’ பொருளுக்குள் அடங்கா வார்த்தைகளில் பெரியவர்களை நிந்தித்து கொந்தளித்து கொண்டிருந்தான்.

‘இனி விடப்போவதில்லை, இவரது ஆசை மகளை, அருமை பொக்கிசத்தை இவர்களே அனுப்பி வைக்கட்டும். இவர்களின் முடிவிற்கு இவர்களே அலறிக் கொண்டு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கும் படி செய்கிறேன்.’ என மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டவனின் மனமெல்லாம் பழிக்குபழி வாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது.

“பெத்தவருக்கும், மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எனக்கு உணர்த்திட்டீங்க சித்தப்பா… என் முதுகுக்கு பின்னாடியே நின்னு சாதிச்சுட்டீங்க. உங்க ஆசைய நான் எதுக்கு கெடுக்க போறேன்? உங்க முடிவு என்னவோ அப்படியே நடக்கட்டும். ஆனா, நான் எக்காரணம் கொண்டும் என் இடத்தில இருந்தோ, என் நிலையில இருந்தோ இறங்கி வர மாட்டேன்.

இனி அவளோட சந்தோசத்தை மட்டுமில்ல உங்களோட நிம்மதியையும் என்கிட்ட எல்லாரும் அடமானம் வச்சுட்டீங்க. இனிமே என் வாழ்க்கையில விவாகரத்துங்கிற பேச்சுக்கே இடமில்லை. சாகுற வரைக்கும் எல்லாரும் ரணப்பட்டு நிக்கணும், நிக்கட்டும். அந்த ரணம் எனக்கே வந்தாலும் என் முடிவுல இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.” அலைபேசியில் ஆக்ரோசமாய் கர்ஜித்து தனது முடிவினை உறுதியாகக் கூறினான் அமிர்தசாகர்.

இங்கே லக்கீஸ்வரியோ வேரோடு அறுபட்டு வீழ்ந்த நிலையில் வெறுமையோடு அமர்ந்திருந்தாள். தன்னிடம் கூட இந்த கோரிக்கை மனுவைப் பற்றி கூறாமல் மூடி மறைத்த தந்தையின் மேல் அத்தனை அதிருப்தி வந்திருந்தது அவளுக்கு.

தந்தைக்கென பார்த்து ஒவ்வொன்றையும் இவள் சிரமேற்கொண்டு செய்ய, அவரோ அவளை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் வேலையை அல்லவா செய்து முடித்திருக்கிறார்.

அமிரின் கோப மனோபாவத்தை, ஆதிக்கதன்மையை நன்றாக அறிந்திருந்தும் மீண்டும் அவனிடத்தில் தன்னை பலியாடாக நிறுத்தி விட்டாரே என்று அவளின் மனமெல்லாம் வேதனையில் உழன்று தவித்தது.

இத்தனை உதாசீனங்களை கணவன் காட்டியும் அவனிடமே சென்று சேர் என்ற வீம்பில் ஏன் தந்தை நிற்கிறார் என்பதே அவளுக்கு புரியவில்லை. உலைகலனாய் கொதித்த மனதை அடக்கும் வழி தெரியாமல் வெகுண்டு தந்தையிடமே மல்லுக்கு நின்றாள் லக்கி.

“என்கிட்டே கூட சொல்லாம ஏன் டாடி இப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க? திரும்பத் திரும்ப அவரையே தேடிப் போய் நிக்கிறது, எனக்கும் உங்களுக்கும் கௌரவம் கொடுக்கும்னு நினைக்கிறீங்களா?” வெளியில் கொட்டாத கோபத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்டி லக்கி கேட்க, கண்களை அழுந்த மூடி உள்வாங்கிக் கொண்டார் ரெங்கேஸ்வரன்.

“பெரியவங்க சொல்லிக் கேக்குற நிலையில ரெண்டு பேருமே இல்லையே லக்கிமா… அதுதான் காரணம். அவனோட சுபாவமும், இந்தக் கால பொண்ணா உன்னோட படிப்பறிவும், சுய நம்பிக்கையும் உங்ககிட்ட எங்க முடிவை சொல்லவிடாம தடுத்துடுச்சு. அப்படியே கட்டாயபடுத்தினாலும் நீங்க ஏத்துக்க மாட்டீங்க!” அதிருப்தியுடன் முகத்தை சுளித்து விளக்கினார் ரெங்கேஸ்வரன்.

“அப்படின்னா உங்க சந்தோசத்துக்காக… நீங்க கொடுத்த வாக்கு தவறக் கூடாதுன்னு பிடிக்காத கல்யாணத்துல கூட ஒரு பிடிப்போட வாழ்ந்தேனே… அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” விவரிக்க முடியாத வேதனையில் கரகரத்தது லக்கியின் குரல்.

“அதுதான்மா நான் செஞ்ச தப்பு! ரெண்டு பேரையும் கேட்டு முடிவு பண்ணியிருக்கணும். என் தோல்வியை ரொம்ப தாமதமா நான் உணர்ந்துட்டேன். ரெண்டாவது வாழ்க்கைக்கு நீங்க ரெண்டுபேரும் அவ்வளவு ஈசியா மாத்திக்க போறதில்லங்கிற விஷயம் எங்களுக்கு ஆணித்தரமா புரிஞ்சதாலதான் இந்த தீர்மானம் பண்ணினோம். இன்னைக்கு உங்களுக்கு பெரியவங்க மேல அதிருப்தி வரலாம். ஆனா, அது எப்பவும் அப்படியே இருக்கப் போறதில்ல. வாழ்க்கை ஒரு வட்டம் டா பாப்பா!” வாஞ்சையுடன் கூறிய ரெங்கேஸ்வரனின் குரலிலும் வருத்தம் வெகுவாய் இழையோடியது.

“வீட்டோட மாப்பிள்ளை, தொழிலை நடத்தணும்னு டிமாண்ட் பண்ணாமயே என்னோட கல்யாணத்தை நடத்தி இருக்கலாமே… அதை ஏன்பா நீங்க செய்யல? உங்களுக்கே உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சா! நான் உங்க பிசினசை நல்லபடியா நடத்த மாட்டேனா?” குற்றமோ குதர்க்கமோ இல்லாமல் தன்னிரக்கத்தில் மகள் கேட்ட கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போனார் தந்தை.

“உன் வருத்தம் எனக்கும் புரியுதுடா! உன் மேல உள்ள நம்பிக்கை குறையாம இருக்கப் போயிதான் இன்னைக்கு உங்க வாழ்க்கையில என் முடிவை திணிச்சுருக்கேன் பாப்பா! அப்பாவை தப்பா பார்க்காதே!

என் தொழிலை நடத்த மட்டுமே நான் ஒரு ஆம்பளையை தேடல… எனக்கு பிறகு என் ஸ்தானத்துல இருந்து உன்னைப் தாங்கிக்க, என் பொண்ணுக்கு கண்ணுக்கு நிறைஞ்ச புருசனைதான் நான் மொதல்ல தேடுனேன். தவறான கண்ணோடத்துல நான் தேடியிருந்தாலும் சரியான ஆளை தான் தேடிப் பிடிச்சுருக்கேன். இதுக்கும் மேல என்கிட்ட விவரம் கேட்காதே!” மகளை தவிரித்துவிட்டு விலகிச் சென்றார் ரெங்கேஸ்வரன்.

‘தொழில், குடும்பம், நிர்வாகம் என மொத்தத்திற்கும் அஞ்சிவிடுவேன் என்று, என்னை தவறாக நினைத்து விட்டாரே என் அப்பா? பிறந்ததில் இருந்தே என்னை பார்த்து வரும் தந்தையே என்னைப் பற்றி தவறாக கணித்தால், நேற்று வந்து என்னை சொந்தம் கொண்டாடும் கணவன் என்னை எவ்வாறு புரிந்து கொள்வான்?  

அனைத்திலும் ஒரு பெண் பொறுப்பெடுத்து வாழ்க்கையில் வெற்றி வாகையை சூடிட முடியாதா? அதுவும் இந்த காலத்தில் பெண்களால் முடியாதது எதுவும் உண்டா? இல்லையென்றால் எனது சிறுபிள்ளை தனத்தை பார்த்து இதற்கெல்லாம் நான் சரிபட்டு வரமாட்டேன் என்று தந்தை தவறாக முடிவெடுத்து விட்டாரா?’ நினைக்க நினைக்க அவளுக்குள் தாளம் தப்பிப் போனது.

தன்மீது தனக்கே நம்பிகையற்ற மனோபாவம் உள்ளுக்குள் தோன்ற, மிகுந்த மன உளைச்ச்சலில் நடமாட ஆரம்பித்தாள் லக்கீஸ்வரி. அடுத்தடுத்து ஏற்பட்ட அழுத்தங்களை சமன்செய்து கொள்ளும் வழி தெரியாது திண்டாடியவளின் உள்ளமெல்லாம் அனைவரின் மீதும் வெறுப்பாய் மாறியிருந்தது.

காலம் அனைத்தையும் மாற்றி விடுமென்ற நம்பிக்கையில் ரெங்கேஸ்வரன் மகளை மீண்டும் கணவனிடம் அனுப்பி வைக்க, லக்கியோ மனம் முழுவதும் வெறுப்போடு, அழுந்திய மனக்குழப்பத்தோடு வெறுமையான மனநிலையில் ஜெர்மனிக்கு பயணமானாள்.

Leave a Reply

error: Content is protected !!