சூரியநிலவு 24 1
சூரியநிலவு 24 1
அத்தியாயம் 24
மழைத்துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும்போது வானவில் தோன்றுகிறது.
இங்கோ வானிலிருந்து அடைமழை பொழிய. அந்த மழைத்துளிகளினூடாக சூரிய (பிரதாப்பின் காதல்) கதிர்கள் சென்று நிலவின் மனதில் ‘பிரதாப்பிற்கான காதல்’ வானவில்லை தோற்றுவிக்குமா?
கோவிலிலிருந்து திரும்பியிருந்த நண்பர்கள் மேல்மாடியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வானிலிருந்து சிறிது சிறிதாக மழைத்துளி சிதறியது.
‘மேகத்திற்கு மழைத்துளி சேராது அதனால் அதை உதிர்த்துவிடுகிறது’ அதுபோல் மேகாவிற்கும் மழை ஒத்துக்கொள்ளாது அதனால் சென்றுவிட்டாள். அவள் பின்னோடு ஆகாஷும் வால் பிடித்துச் சென்றுவிட்டான். இப்போது எஞ்சியது பிரதாப்பும் நிலாவும் மட்டுமே.
தன் குடும்பத்தாரிடம் விளக்கமளித்த பின் நிலாவின் முகம் சற்று தெளிவடைந்திருந்தது. இதுவரை பிரதாப்பிடம் முகம் திருப்பி சென்றதை மறந்து, அவனுடன் இணக்கமாக நடந்து கொண்டாள்.
சற்று ஒதுங்கி நின்று மழை பொழிவதை இருவரும் ரசித்தனர். மழைப்பொழிவு அதிகமாக ஆக நிலாவின் விழிகளில் அதில் நனைய ஆசை அதிகரித்தது. அவளிற்கு மழையில் நனைவது என்றால் கொள்ளை பிரியம்.
பிரதாப்பிடம் அனுமதி வேண்டி, விழிகளில் மலையளவு ஆசையை தாங்கி, அவனின் விழியோடு விழி கலந்தாள்.
நிலாவின் விழிகளில் எதிர்பார்ப்பு. பிரதாப்பின் விழிகளிலோ மறுப்பு. நிலாவின் முகம் வாடிவிட்டது. அதை பொறுக்க முடியாதவன் அனுமதி அளித்தான்,’பத்து நிமிடம் மட்டும் விளையாடலாமென.’ சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த நிலவு மழையில் நனைந்தது.
அவளின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற துடிப்பவன் எப்படி மறுத்து கூறுவான். லண்டனில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சமயத்தில், நிலாவின் ஆசையை நிறைவேற்ற துபாய் சுற்றுலா சென்றவர்கள் ஆகிற்றே! நிலாவின் வாக்கியம் அவர்கள் பயணத்தையே மாற்றியமைத்தது.
“எப்படியும் கனெக்டிங் ஃப்ளைட் துபாயில் மாறனும், ஒரு வாரம் சுத்தி பார்த்திட்டு போகலாம்.” என அவளின் ஆசையை தெரிவிக்க
“என்ன விளையாடுறயா? உன்னோட உயிர் ஆபத்துல இருக்கும்போது எப்பிடி ஊர் சுத்தரது.” என மறுப்பு தெரிவித்தனர்.
“அதுக்குதான் போகலாமென்று சொல்லறேன். மறுபடியும் இப்படியொரு சந்தர்ப்பம் வராமலே போய்ட்டா? இதுவே என்னோட கடைசி ஆசை ஆகிட்டா? என்னோட ஆப்ரேஷன் வரை ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் சந்தோசமா உங்க கூட செலவு பண்ணனும்.”
அதன் பிறகு ஏது தடை. அவ்வளவு ரிஸ்க் எடுத்து அந்த பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் மூவரும், மனதில் ஆயிரம் கவலைகளோடு இருந்தாலும், மற்றவர்களுக்காக சந்தோசமாக நடித்துக் கொண்டிருந்தனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட உடம்பு, இன்னும் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது, தொலைக்காட்சி பார்த்தாலோ, படம் பார்த்தாலோ சிலசமயம் தலைவலி வருகிறது. அதனால் அவ்விரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரதாப்பிடம் ஊடல் கொண்டிருந்த நிலா, அவனை வெறுப்பேற்ற தொலைக்காட்சி பார்த்தது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று.
சூர்யாவுடன் மாயாஜாலில் படம் பார்க்க நிலா சென்ற அன்று, சூர்யாவின் மேல் கொலைவெறியிலிருந்த பிரதாப், நிலாவின் நலம் கருதியே அங்கே ஆராவுடன் சென்றான். நிலாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தபோது, அவள் முகத்தில் தெரிந்த மாறுதலை வைத்தே அவளின் நிலையை புரிந்துகொண்டு, யாரையும் பேச விடாமல் அவளை அங்கிருந்து இழுத்துச் சென்று உறங்கவைத்தான்.
இப்போதும் மழையில் நனைவது பயத்தை அளித்தாலும், அவள் ஆசையை தவிர்க்க மனம் வரவில்லை. அதனால் சிறிது நேரத்தில் வர வேண்டும் என்ற கட்டளையுடன் அனுப்பினான். ஆனால் இவன் கட்டளைக்கு அடிபணிபவளா அவள்?
அவள் கண்ணசைவில் இவனை ஆட்டிப்படைக்கும் காந்த கண்ணழகி ஆகிற்றே?
**********
அவன் மனதில் என்றோ படித்த கவிதையின் ஊர்வலம்
மழையை ரசிப்பது ஆனந்தம் என்றால்
மழையில் நனையும் உன்னை ரசிப்பது பேரானந்தம் பெண்ணே
“நிலா வா நேரமாச்சு” என்றான் நேரமாவதை உணர்ந்து.
“இன்னும் கொஞ்ச நேரம் பா” கண்களை சுருக்கி கொஞ்சினாள்.
அதில் மயங்கி அவளை ரசித்து நின்றான்.
பிரதாப் இப்போது மது உண்ட வண்டின் நிலையிலிருந்தான், விட்டாள் மதுவையே சுவாகா செய்யும் நிலையிலும் இருந்தான்.
மாலை அணிந்திருந்த புடவையை மாற்றாமலேயே அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண், இப்போது புடவையுடன் மழையில் நனைந்து கொண்டிருந்தது.
அவள் அணிந்திருந்த புடவை அவள் உடலோடு ஒட்டி, அவள் உடல் அழகை பிரதாப்பின் விழிகளுக்கு விருந்தாக்கியது. அவன் விழிகளும் காணக்கிடைத்ததை அள்ளிப் பருகி இதயத்தில் சேமித்துக் கொண்டிருந்தது.
அவனின் பார்வை மாற்றம் பெற்றது. அவளை முழுதும் ஆட்கொள்ளும் வேட்கை உண்டாகியது. இதற்கு மேல் தாமதித்தால் தவறாகிவிடுமென அவளை இழுத்துச் செல்ல முயற்சிதான்.
ஆனால் இவனின் இழுப்பிற்கு வர மறுத்த பெண், முரண்டு பிடித்து தன் கரத்தை அவனிடமிருந்து உருவ பார்த்தாள். அவள் கரத்தை விடுவிக்க முயல்வாளென அறியாத பிரதாப்பின் பிடி விலகியது.
அடுத்த கணம் நீரில் கால் வழுக்கிக்கொண்டு கீழே விழப்போன, பெண்ணவளின் இடைபற்றி தன்னை நோக்கி பிரதாப் இழுத்திருந்தான். அவனும் சரியாக கால் பதிக்காத நிலையில், அவன் கீழே விழுக அவன் மேலே நிலா விழுந்தாள். அப்போதும் அவளை இறுக்கிப் பிடித்து அவளுக்கு அடி படாதவாறு அவன்மேல் சாய்த்து இருந்தான்.
பயத்திலிருந்த நிலா அவன் மார்பில் தன் முகத்தை பதித்து அவனை இறுக அணைத்து கொண்டாள். அவன் கரம் பதிந்த இடமோ சேலை மறைக்காத அவளின் வெற்று இடை. அதன் மென்மையில் மதி மயங்கிய பிரதாப், தன் கரத்தை விலக்காமல் மேலும் அவளை தன்னுள் புதைத்துக்கொண்டான். பயம் தெளிந்த பின்னரும் அவனின் அணைப்பிலிருந்து விலகவில்லை அந்த நிலவுபெண்.
சோ வென்று வான்மழை கொட்ட, இவர்கள் காதல்மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.
எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தார்களோ முதலில் மயக்கத்திலிருந்து மீண்டது பெண்ணவளே. அவனிடமிருந்து விலகி நடக்க, அவளது நடையை தடுத்தது ஈர சேலை. தன் புடவையை சரி செய்ய முயன்றாள், அந்தோ பரிதாபம் ஈரத்தில் நனைந்த புடவையை எப்படி சரி செய்ய முடியும்? பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.
அவளின் நிலை உணர்ந்த அவன், ரகசிய சிரிப்புடன், அவளை தன் கரங்களில் அள்ளிக்கொண்டான். அவன் கரத்திலிருந்த அவளின் சில்லிட்டிருந்த தேகம் குளிரால் நடுங்கியது, பற்கள் தந்தியடித்தது. மோகத்தில் உஸ்னமேறிய அவனது சூடான வெப்பம், அவளுள் சுகமாக இறங்கியது.
அவளின் அறையை அடைந்த பிறகும் அவளை விடுவிக்க மனமில்லாமல், கொண்டு சென்று அவளது குளியலறையில் விட்டு விட்டு, இரவு உடையை எடுத்து அங்கே வைத்துவிட்டு, தனக்களித்த அறைக்கு சென்று வேறு உடையை மாற்றி மீண்டும் அவளின் அறைக்கு திரும்பினான்.
அவள் இரவு உடைக்கு மாறி தன் தலையை துவட்டி கொண்டு இருந்தாள். அவள் கரங்களிலிருந்த துவாலையை வாங்கி எறிந்துவிட்டு. மின்சார ஹேர் டிரையர் கொண்டு அவள் அரையடி கூந்தலை உலர்த்தினான். உணர்வு பிடியில் சிக்கித்தவித்த இருவரும் மௌனமாக நிமிடங்களை கடந்தனர்.
அவன் மின்சார சாதனையை அணைக்கவும், அவள் சென்று ஜன்னலில் கண்ணாடி வழியே கொட்டும் மழை நீரை ரசிப்பதுபோல் திரும்பி நின்றிருந்தாள்.
மது உண்ட வண்டின் நிலையிலிருந்த பிரதாப்புக்கு, இப்போது போதை தலைக்கேறியிருந்தது. இந்த நிமிடம் அவள் வேண்டும் என்று அவன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் பேயாட்டம் போட்டன.
தானாக அவன் கால்கள், அவள் பின்னே கொண்டு நிறுத்தியது. அவனின் நெருக்கத்தை உணர்ந்தாலும் உணர்வு பிடியில் சிக்கித் தவித்த நிலாவால் திரும்பி அவன் முகம் காணமுடியவில்லை. ஜன்னல் கம்பிகளை இறுகப்பற்றி நின்றாள்.
காதல் போதையிலிருந்த பிரதாப், தன் முன்னுடல் அவள் முதுகோடு உரச, ஒரு கரத்தால் அவளை வயிற்றோடு இறுக்கி, மறு கரத்தால் அவள் கரத்தில் சிறைபட்டிருந்த ஜன்னல் கம்பிகளுக்கு விடுதலை அளித்தான். அவள் உடலில் மெல்லிய நடுக்கம். அன்றைய முதல் அச்சாரத்தை அவளின் உள்ளங்கைக்கு வழங்கினான்.
அவள் கரத்தை சிறைப்பிடித்திருந்த, அவன் கைகளை மெல்ல எடுத்து, அவளின் கழுத்தோடு உறவாடிய கூந்தலை ஒரு விரலால் விலக்கி, அவளின் சங்கு கழுத்தில் தன் இதழை பதித்திருந்தான். அதில் மயங்கிய நிலாவின் விழிகள் தானாக மூடியது.
அடுத்து காதுமடலென தொடர்ந்து, அவனது இதழ்கள் அவள் முகமெங்கும் ஊர்வலம் போக அவளை தன்னை நோக்கி திருப்பியிருந்தான். முகம் சிவக்க, அவளது விழிகள் நிலம் நோக்க, ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி அவளின் விழிகளை காண, அந்த விழிகளில் மயக்கம். அந்த மயக்கம் அவனின் ஆசைக்கு தூபம் போட, சற்றும் தாமதிக்காது அவள் இதழை சிறை செய்திருந்தான் தன் இதழ் கொண்டு.
அவள் மூச்சுக்கு திணறவும், அவளை விடுவித்து அவள் கழுத்தில் முகம் புதைத்து, தன் இதழ் அவள் செவிமடல் உரச,”ஐ லவ் யூ நிலா. ஐ நீட் யூ டில் மை எண்டு. ஐ அம் நாட் ரெடி டு லூஸ் யூ பார் எனிதிங். வில் யூ மேரி மீ மை ஸ்வீட்டி?” (நான் உன்னை விரும்புகிறேன் நிலா. காலம் முழுக்க நீ எனக்கு வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் உன்னை இழக்க நான் தயாரில்லை. என்னை திருமணம் முடிக்க சம்மதமா?) என இத்தனை நாள் சொல்லத் தயங்கிய தன் காதலை, தன் உயிரான நிலாவிடம் சொல்லியே விட்டிருந்தான் சூரியன் அவன்.
***********
மேகாவின் பின்னோடு சென்ற ஆகாஷ், அவளின் அறை வாயிலில் வைத்து அவள் கரம் பற்றி தடுத்து நிறுத்தி, அவளைத் தலை முதல் பாதம்வரை தன் விழிகளால் ஸ்கேன் செய்தான்.
அவன் பார்வையில் கூச்சம் அடைந்த மேகா, நெளிந்துகொண்டே “என்ன வேணும் உனக்கு? நான் ரூமுக்கு போகனும்” திடமாக பேச முயற்சித்து, முடியாமல் குழைந்து பேசி முடித்தாள்.
“வர்ஷூ டார்லிங்! என்ன கேட்டாலும் கிடைக்குமா?” அவள் முகத்தை விழிகளால் விழுங்கி கொண்டே.
“என்… வேண்…டும்” திக்கி திணறியது வார்த்தை.
“புடவையில் சும்மா கும்முன்னு இருக்க. அப்படியே ஒரு உம்மா கிடைக்குமா?” ஒற்றை விரலால் அவள் உதட்டை அளந்து கொண்டே சரசம் பேசினான்.
“கிடைக்கும் கிடைக்கும் ஒன்னு என்ன இரண்டே கிடைக்கும்” என தன் கையால் அடிப்பதுபோல் செய்கையோட சொன்னாள்.
அதில் உஷாரான ஆகாஷ், பயந்ததுபோல்,”வேண்டாம் வேண்டாம். எனக்கு நீதான் வேண்டும். எப்போ வசுக்களாம் நம்ம கல்யாணத்தை” டன் கணக்கில் ஆசை வழிந்தது.
என்ன பதிலளிப்பது என தெரியாத பெண் மௌனமானது.
‘எப்போது?’ புருவம் உயர்த்தினான்.
“மது…” என தயங்கி இழுத்தாள் பதில் சொல்ல முடியாமல்.
அவளது அறைக்கு கூட்டிச்சென்று அவளை படுக்கையில் அமர்த்தி, ஒரு நாற்காலியை அவள் எதிரே போட்டு அமர்ந்து கொண்டு ஆகாஷ் பேசத் தொடங்கினான்.
“பிரது ஓட ஆக்டிவிட்டீஸ பார்க்கும்போது, சீக்கிரம் நிலா கிட்ட அவனோட காதலை சொல்லிடுவான்னு தான் நினைக்கிறேன். இனி எல்லாம் நிலாவின் கையில்தான் இருக்கு. உங்க சீனியர், அதுதான் உன்னோட மானசீக அண்ணன், நடுவில் புகுந்து ஆட்டையை குழப்பாமல் இருந்தால் விரைவில் எல்லாம் சுபம்.”
அவனை முறைத்த மேகா,”உங்க ரெண்டு பேத்துக்கும் அவரை குறை சொல்லாமல் இருக்க முடியாது. எந்திரிச்சு போ நான் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு தூங்கணும்.”
“ஓகே ஓகே நான் போறேன். அதுக்கு முன்னால் ஒண்ணே ஒண்ணு கொடுத்துட்டு போறேன்” என்றான் அவளை பார்வையால் விழுங்கிக்கொண்டே.
அவள் வதனம் நிலம் நோக்க,”எ..ன்..” மீண்டும் வெட்கத்தால் வார்த்தை தந்தி அடித்தது.
அவளது முகத்தை நிமிர்த்தி இருவிரலால் அவள் இதழை பிடித்து,”இங்க கொடுக்கவேண்டுமென்று ஆசை. ஆனால் இப்போதைக்கு இங்க போதும்” என அவள் நெற்றியில் தன் இதழை அழுந்த பதித்து, அது போதாமல் அடுத்து இரு கன்னங்களிலும் பதித்து,”குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ் டார்லிங்” என அங்கிருந்து சென்றான்.
ஆகாயத்தில் சரணடைந்த மேகமானது, கன்னங்கள் சிவக்க,’கள்ளன்’ என மனதில் செல்லமாக அவனை கொஞ்சி மகிழ்ந்து.
விடியல் இவர்களுக்கு என்ன அதிர்ச்சி அளிக்க காத்திருக்கிறது.
***********
காலையில் ஆகாஷ் மேகா இருவரும் ஒன்றாகவே தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது கமகம நெய் மணம், வீடு முழுவதும் சூழ்ந்திருந்தது. அது ஏன் என்று தெரியாத ஆகாஷ் மேகாவிடம்
“நமக்கு தடபுடலாக விருந்து ரெடி ஆகுது போல்”
“ஆமா இவரு மறுவீடு வந்த மாப்பிள்ளை இவருக்கு விருந்து போட. வாய வச்சுகிட்டு பேசாமல் வர. இல்லை உனக்கு பழைய சோறு கூட போடக்கூடாது சொல்லிடுவேன்.” என ஒற்றை விரலை, அவனின் உதட்டில் வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள்.
“நீ செஞ்சாலும் செய்வ. ஆமா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு சாப்பாடாவது போடுவையா?”
“ம்ம்” என அவனை மேலிருந்து கீழ் நோக்கி,”பார்கலாம் பார்க்கலாம்” என முன்னாள் சென்றாள்.
“எல்லாம் என் நேரம்” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிக்கொண்டான்.
உன்மையில் மாப்பிள்ளைக்காக தான் அங்கே விருந்து தயாராவது தெரியாமல் இவர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசிக்கொண்டு அப்படியே வரவேற்பறையை அடைய, அங்கே நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து ஷாகடித்தது போல் தேங்கி நின்றனர்.