சூர்யநிலவு 16

சூர்யநிலவு 16
அத்தியாயம் 16
அந்த கல்லூரியின் வளாகத்திற்குள், நுழையும் போதே எங்கும் எதிலும் பணத்தின் செழுமையை காணமுடிந்தது. கல்லூரியின் நிர்வாகத்தினர், வானுயர்ந்த கட்டிடத்தில் பணத்தை வாரி இறைத்திருந்தனர். மருத்துவம் பொறியியல் இரண்டையும் சொந்தமாக கொண்ட, சென்னையின் புகழ் பெற்ற கல்லூரி.
பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய, அந்த கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கம்.
“கமான் எஸ்.பி, கமான், யு கேன் டூ இட் ட்யூட்.” (Come on SP come on, you can do it dude) என அந்த கால் பந்து அரங்கமே அதிருமளவு, சத்தத்தால் நிரம்பி இருந்தது.
அன்று கல்லூரியில், இரு குழுவினர்களுக்கு இடையேயான, கால் பந்து விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒரு குழு வெற்றியின் தலைமையிலும், ஒரு குழு பிரதாப்பின் தலைமையிலும், ஆடிக்கொண்டிருந்தனர்.
வெற்றி விளையாடும்போது, தனது அணியினரை சரியாக வழிநடத்தி, பந்தைத் தனது கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றான். கண்ணிமைக்கு நொடியில் அந்த பந்தை கைப்பற்றியிருந்தான் பிரதாப்.
மிக நேர்த்தியாகவும் லாவகமாகவும், அதே சமயம் விரைவாகவும் தனது அணியினருடன் இணைந்து, அந்த பந்தை கொண்டு சென்று கோல் அடித்திருந்தான், அனைவராலும் எஸ்.பி என செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் (s/o) சத்யமூர்த்தி.
பிரதாப்பும் வெற்றியும் விளையாட்டில் சூரப்புலி. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
பிரதாப், ஆகாஷ், வெற்றி ஒரே ஆண்டு மாணவர்களானாலும், வேற வேற பாடப்பிரிவை சேர்த்தவர்கள். நிறம், மனம், குணம் என அனைத்திலும் வேற்றுமையை கொண்டவர்கள்.
வெற்றி விளையாட்டில் கெட்டியாக இருக்கும் அதே சமயம், படிப்பிலும் ஆர்வம் காட்டினான். ஸ்ரீராமனாகப் பெண்களை எட்ட நிறுத்தி விடுவான். மது, ஓவியா என்ற இலக்கை தாண்டி, அவன் பார்வை சென்றதில்லை.
ஆகாஷை பொறுத்தவரை, விளையாட்டில் அதிகம் ஆர்வம் இருந்ததில்லை, ஆனால் படிப்பில் மிகவும் கெட்டி. யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். கொஞ்சம் அமைதி, சிந்தித்து செயல் படுவான். பெண்களிடம் நட்புடன் பழகுவான்.
இருவரின் நேரெதிர் குணம் பிரதாப்பிற்கு. விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிக ஆர்வம்கொண்ட அவன், படிப்பில் ஆர்வம் காட்டியதில்லை. படிப்பை பொறுத்தவரை, கஷ்டப்பட்டு முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றுவிடுவான். துடிப்பும் கலகலப்பும் கொண்டவன்.
ஒரு கூட்டம், அந்த இருவரை சுற்றியும் எப்போதும் இருக்கும், அதில் பெண்களும் அடக்கம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பெண்களின் சகவாசம் தான், வெற்றிக்கு இவர்களை பிடிக்காமல் போனதிற்கான முக்கிய காரணம்.
ஆகாஷும் பிரதாப்பும் தானாக சென்று எந்த பெண்களிடமும் வழிந்ததில்லை. நெருங்கிய பெண்களை விலக்கி வைத்ததுமில்லை, அதே நேரத்தில் எல்லை மீறியதுமில்லை. மொத்தத்தில் கோகுல கிருஷ்ணர்கள்.
ஆகாஷ் மற்றும் பிரதாப் சிறுவயது முதலே ஒன்றாக படித்து, ஒன்றாகவே சுற்றித்திரிபவர்கள். கல்லூரியிலும் சேர்ந்தே சுற்றினர்.
ஆகாஷ் எந்த வம்பிற்கும் அவ்வளவு சீக்கரம் போகமாட்டான். பிரதாப் சரியான அடாவடிக்காரன், வம்பைவாங்காமல் இருக்கமாட்டான். ஆகாஷ் எந்த இடத்திலும் பிரதாப்பை விட்டுக்குடுத்ததில்லை. ஆகாஷ், பிரதாப்பிற்கு இடையே மோதல் வந்து யாரும் கண்டதில்லை. மதுநிலாவிற்கு மட்டுமே அந்த பாக்கியம் இதுவரை கிடைத்துள்ளது.
வெற்றி, பிரதாப் இருவருக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும். விளையாட்டுகளில் இருவரும் மாறி மாறி வெல்வார்கள். பிரதாப்பிற்கு நல்ல குரல் வளம், பாடலில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை, அந்த கல்லூரியில். அவனின் குரல் அனைவரையும் மயக்கிவிடும். அதனால் அவனிற்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம்.
பிரதாப்! விளையாட்டு வீரன் என்பதாலும், தினசரி உடற்பயிற்சியினாலும், அவனின் கட்டுடல் மேனியில் ஒரு வசீகரம் இருக்கும். அவனின் முறுக்கேறிய உடல் வசீகரத்திலும், குரல் வளத்திலும் மயங்கிய பெண்கள் ஏராளம்.
பிரதாப் கோல் போடுவதற்கும், ஆட்ட நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. துள்ளி குதித்த அவனின் குழுவினர்கள், ஒன்றுகூடி அவனை தூக்கி பிடித்து மகிழ்ச்சியை கொண்டாடி விட்டனர்.
“எஸ்.பி…”
“எஸ்.பி…”
“எஸ்.பி…” என அந்த அரங்கம் முழுவதும் கூச்சல் நிரம்பியிருந்தது.
ஆண்கள், பெண்கள் என பாரபட்சமில்லாமல் பிரதாப்பை முற்றுகையிட்டனர். ஆகாஷ் அவர்களிடமிருந்து பிரதாப்பை பிரித்து எடுக்க, படாதபாடு பட்டுவிட்டான். அவனையும் பெண்கள் விட்டுவைக்கவில்லை. இருவரும் மிகவும் போராடி அவர்களிடமிருந்து பிரிந்தனர்.
ஒரு மனம் மட்டும் அவனை முறைத்து நின்றது. வெற்றி மனதில்,’ச்ச இந்த தடவை அவனை ஜெயிக்கவிட்டுட்டேனே’ என்ற ஆற்றாமை நிரம்பி இருந்தது.
ஆகாஷ், பிரதாப் மேல் விழுந்து பழகும் பெண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இவர்களை நோக்கியும் இகழ்ச்சி புன்னகை புரிந்து, அந்த அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டான்.
முதல் வருடத்திலிருந்தே, இவர்கள் பயணம் மோதலிலே சென்றது கடைசிவரை. ஆகாஷ், பிரதாப்பின் பெண்களுடனான பழக்கம், வெற்றிக்கு அவர்கள்மேல் ஒரு அதிருப்தியை வரவைத்திருந்தது. ‘நல்ல திறமையானவர்கள் பெண்களை விலக்கினால் உருப்படுவார்கள்’ என்பது வெற்றியின் எண்ணம்.
ஜல்லிக்கட்டுக்காளைகளை போல சுற்றித்திரியும் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். ‘அவர்கள் செய்யும் குறும்பில் யாரும் பாதிக்க படவில்லை என்பதாலும், திறமையானவர்கள் என்பதாலும்’ அவர்களை கண்டிக்கத்தான் எவருமில்லை.
இப்படியே நாளொரு முறைப்பும், பொழுதொரு சண்டையுமாக கல்லூரி தேர்தலில் வந்து நின்றது. அதிலும் பிரதாப்பே வென்றான். அன்று கல்லூரியே ஆர்ப்பரித்தது.
****************
வெற்றி நண்பர்களுடன் இருக்கும்போது, அவன் நண்பர்களில் ஒருவன்,”வெற்றி எல்லா விஷயத்திலும் கூட இருக்க நீ. ஏன் சைட் அடிக்கமட்டும் சேரமாட்டேங்கற?” என கேட்டான்.
“என்னோட மதுக்கு நான் உண்மையா இருக்கணும். அவளை பார்த்த கண்ணுக்கு, வேற யாரும் அழகா தெரியமாட்டாங்கடா” என்றான். அவளை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளாமல். (என்னது வெற்றி மதுவை பார்த்தானா? இது எப்போ நடந்தது? பொய் சொல்லவும் அளவு வேண்டாமா தம்பி? மனசாட்சி குரல் கொடுக்க மறந்துவிட்டது.)
“உன் மாமன் மகள் மது, அவளோ அழகா?” என்றான் மிக ஆர்வமாக.
“அழகா! அவ தேவதை டா” என்றான் கனவில் மிதந்து கொண்டே. அந்த கண்களில் ஆசை மட்டுமே இருந்தது, காதல் இல்லை. அவளின் அழகை ரசிக்க தெரிந்த வெற்றிக்கு, அவளின் மனதின் ஆசைகள் புரியவில்லை.
அவளிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து வாங்கி அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. அவளிடம் மணிக்கணக்காகப் பேச வேண்டும் என்ற விருப்பமிருந்ததில்லை. அவளை பார்க்க வேண்டும் என்ற தாபமிருந்ததில்லை. அவளை பிரியும்போது உயிர் பிரியும் வேதனையிருந்ததில்லை. வெற்றிக்கு மதுவின் மேல் இருந்தது காதலுமில்லை. அதை புரிந்து கொள்ளாமல் போனது யாரின் தவறு.
அவனின் “தேவதை” என்ற வார்த்தை, அந்தபுறம் சென்ற பிரதாப்பின் செவியை தீண்டியது. “இவனோட மாமன் மகள் இவன மாதிரிதானே இருப்பா” என இகழ்ச்சியாக நினைத்து, அவனை கடந்து சென்றான். பாவம் அவன் அறியவில்லை, அவனின் மாமன் மகள்தான், இவனிற்கு உலகமாவாளென்று.
“மதுவை கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லுற. அவ போட்டோவை கூட கண்ணுல காட்டமாட்டிங்கற” என அவன் நண்பன் குறைபட்டுக் கொண்டான்.
“போட்டோ எதுக்குடா நேருலயே காட்டுறேன். இந்த வருஷம் காலேஜ் டேக்கு வர சொல்லுறேன்.”
மேகாவுடனான அவளின் இந்த கல்லூரி வரவு, சிலரின் வாழ்க்கை பாதையை மாற்ற போவதை அறியாமல், வெற்றியின் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் மதுநிலா.
***************
சும்மாவே பணசெழுமையை காட்டும் கல்லூரியின் ஆண்டு விழா சொல்லவும் வேண்டுமா? பணம் புகுந்து விளையாடியிருந்தது. அந்த வருடத்தின் சேர்மேன் பிரதாப், மிக சிறப்பாக திட்டமிட்டிருந்தான்.
நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தான் பிரதாப், அவனுடன் ஆகாஷும். அன்று ட்ரெடிஷனல் உடை அவர்கள் தீம். ஆண்கள் கட்டிக்கோ ஒட்டிக்கோ வேட்டி சட்டையில் சுற்ற, பெண்களோ புடவையில் ‘எங்கே புதையல் எடுத்துவிடுவோமோ?’ என அன்ன நடையிட்டனர்.
மதுவோ மேகாவை வற்புறுத்தி புடவை கட்ட வைத்து, வெற்றியின் கல்லூரிக்கு சென்றாள். கல்லூரியினுள் நுழையுமுன், வெற்றிக்கு அழைப்பு விடுத்து, அவன் எங்கிருக்கிறானென கேட்டு அங்கே சென்றாள்.
பிங்க் நிற ஷிபான் புடவையுடுத்தி, எளிய ஆபரணங்கள் அணிந்து, உதட்டிற்கு அளவான லிப்ஸ்டிக்போட்டு, கண்களில் மைத்தீட்டி, தலைக்கு ஒரு சிறு கிளிப்பை மட்டும் போட்டு முடியை விரித்துவிட்டிருந்தாள். முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையுடன், அவளின் அழகால் அனைவரையும் கவர்ந்திழுத்து, அந்த மாலை நேரத்துச் சூரியனுக்கே சவால்விட்டாள்.
வெற்றியின் கல்லூரி மாணவர்கள் அனைவரின் பார்வையும் மதுவையே வட்டமிட்டது. வெற்றியின் நண்பர்களோ திறந்த வாய் மூடவில்லை. அவர்கள் விடும் ஜொள்ளில் கப்பல் விடலாம்.
மது அவர்களை நெருங்கி செல்ல, அவசரமாக சென்ற மாணவன் ஒருவன், அவளை தெரியாமல் இடித்து விட்டு, அவள் முகம் கூட பார்க்க நேரம் இல்லாமல், தன் கல்லூரி மாணவி, என நினைத்து”சாரி டியர். அப்பறம் பார்க்கறேன்” என ஓடிவிட்டான். அவன் மனதில் அந்த புடவை தெளிவாக பதிந்து விட்டது. அந்த ஸ்பரிசம் அவனுக்கு எதையோ உணர்த்த முயன்று தோற்றது.
அதை பார்த்திருந்த வெற்றி “வேணும்னே இடிச்சிருப்பான் ராஸ்கல்” என கொதிக்க தொடங்கிவிட்டான். மது வெற்றியின் அருகில் செல்ல,
“பார்த்து வர மாட்டியா? கண்டவனெல்லாம் இடிச்சுட்டு போறான்” என காய்ந்தான்.
மது அவனை அதிசய பிறவியைப்போல பார்த்துவைத்தாள். திடீரென அக்கரை கொண்டால் அவளும் என்ன செய்வாள்?
இங்கே ஆரம்பித்தது, அவனின் உரிமை போராட்டம் பிரதாப்பிடம்.
மதுவை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது சாட்சாத் நம்ம பிரதாப்பே.
பிரதாப்பையும், அவனின் உயிர் நண்பன் ஆகாஷையும், அந்த நிமிடத்திலிருந்து, முழுதாக வெறுக்க ஆரம்பித்தான் வெற்றி. அதுவரை இவர்களுக்குள் போட்டி மட்டுமே இருந்தது, வெறுப்பு இருந்ததில்லை.
மதுவை அருகில் நிற்கவைத்து, அவளின் தோளில் கையிட்டு அணைத்த நிலையில்,”இது மதுநிலா. நான் கட்டிக்க போற என் மாமன் மகள்.” என அறிமுகப்படுத்தினான்.
அவனின் கரங்களிலிருந்து நாசுக்காக விடுபட்டுக்கொண்டு, யார் கவனத்தையும் கவராமல்,”வெற்றி, ஐ டோன்ட் லைக் டச்சிங். தயவுசெய்து இத்தனை நாள் இருந்த மாதிரி விலகியே இரு.” சிரித்த முகத்துடன் அவனை எச்சரித்துவிட்டு, அவன் நண்பர்களிடம் கைகுலுக்க ஆரம்பித்துவிட்டாள்.
வெற்றி ஸ்தம்பித்து விட்டான். அவளின் வார்த்தைகள் அவனை அசைத்து பார்த்தது உண்மை. ஆனாலும் பெண்ணின் மனதை அறிய முயற்சிக்கவில்லை.
வெற்றி திருமணம் செய்யவிருக்கும் பெண், வந்த தகவல் பிரதாப், ஆகாஷ் இருவரையும் அடைந்தது. அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அப்போதே பார்த்திருக்கலாம். விதி ஆகாஷ், பிரதாப்பிற்கு மதுநிலாவை வெற்றியின் வருங்கால மனைவியாகக் காட்ட மறுத்து விட்டது.
‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன்’
அதை மாற்ற மனிதனால் முடியுமா?
*********************
ஆகாஷின் நண்பர்கள்,”மச்சி, வெற்றி சொன்ன மாதிரி தேவதைதான். இன்னைக்கு எல்லாரோட கண்ணும் அவ மேலதான்.” என ஆகாஷிடம் வாய் ஓயும் வரை சிலாகித்து விட்டனர்.
“வெற்றி கண்ணுக்கு ஏன் எந்த பெண்ணும் தெரியலன்னு? இப்ப புரியுதுடா. நிலாவை ரசித்த கண்களுக்கு, நட்சத்திரம் தெரியுமா?” என மயக்கத்திலேயே வர்ணித்துக்கொண்டிருந்தான்.
ஆகாஷின் கவனம் முழுவதும், சற்று முன் அவனை திட்டிச்சென்ற அவனின் தேவதை மேலிருந்தது.
”புடவை தடுக்கி கீழே விழத் தெரிந்த பெண்ணை, பிடித்தது ஒரு தப்பா? அந்த திட்டு திட்டிட்டு போறா. அடங்காபிடாரி” என மனதில் அவளை அர்ச்சித்தாலும், ‘தன்னவளின் முகம் அவன் மனதில் ஆழ பதிந்துவிட்டது’ என்பது மறுக்க முடியாத உண்மை.
அவன் அவளை தாங்கி பிடித்தது தவறில்லை, அவன் கைகள் பதிந்த இடம் தவறாகிவிட்டது. சேலை மறைக்காத வெற்று இடையில், அவன் கரம் பதிந்தால் சும்மா இருப்பாளா, அந்த அடங்காபிடாரி மேகவர்ஷினி.
ஆகாஷின் மனதை ஆட்சி செய்ய போகும், அவனின் அடங்காபிடாரி, செல்ல ராட்சசி, மேகவர்ஷினி தான் அவன் இடித்த பெண்.
அவ்வப்போது ஆகாஷின் விழிகளில் மேகவர்ஷினியும், மதுநிலாவும் தென்பட்டனர். அவனிற்கு மதுநிலா கருத்தில் பதியவில்லை. ஆனால் மேகவர்ஷினியின் முகம், அவனின் மனதில் ஓவியமாக பதிந்து, அவனுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
‘அவனை கோவமாக முறைத்த விழிகள், காதலோடு பார்த்தால் எப்படி இருக்கும்? தன்னை திட்டிய இதழ்கள், காதலை கூறினாள்’ என கற்பனையில் மிதக்க ஆரம்பித்தான்.
‘இன்னொரு முறை திட்டட்டும், அந்த இதழ்களுக்கு சரியான தண்டனையை, என்னிதழ் கொடுக்கும்.’ என தறிகெட்டு ஓடிய எண்ணத்தை கண்டு அரண்டுவிட்டான் ஆகாஷ்.
“டேய் அஷு! உனக்கு ஏன்டா புத்தி இப்படி போகுது? பெண்களையே பார்த்ததில்லையா? இது கானல் நீர். இது மறைந்துபோகும். பி ஸ்டெடி மேன்” என மனதில் உருபோட்டுக் கொண்டான்.
நாம் அடக்கினால் அடங்குமா மனது, மீண்டும் அவன் பார்வை காந்தத்தின் ஈர்ப்பு விசையால், ஈர்க்கப்படும் இரும்பை போல அவளின் புறமே சென்றது.
‘இங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது’ என பிரதாப்பிடம் சென்று, மேடையின் அருகே நின்றுவிட்டான்.
அங்கே பிரதாப்பின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.
‘என் மனது என்ன சொல்லுகிறது? அந்த பெண்ணின் சுவாசம் என்னிடம் தெரிவித்தது என்ன? என் உணர்வுகள் ஏன், என் கட்டுப்பாட்டை இழந்து தவிக்கிறது? மொத்தத்தில் நான் மோதிய அந்த பெண் யார்?’ என்ற கேள்விகள் அணிவகுத்து, வண்டாக அவனை குடைந்தது.
அவன் பார்வை கூட்டத்தில் பிங்க் நிறப்புடவையை தேடி அலைந்து தோற்றது.
‘இவ்வளவு பெரிய கல்லூரியில், அவளை எப்படி தேடிக்கண்டுபிடிக்க போகிறேன்? நிகழ்ச்சி இன்னமும் ஆரம்பிக்கவில்லை, என்னால் இங்கிருந்து அசையக்கூட முடியாதே?’ என அவன் மனம் அரற்றிக்கொண்டிருந்தது.
நிகழ்ச்சியை தொடங்க நேரமானதை உணர்ந்து, மேடையில் கவனத்தை பதித்தான். ஆங்காங்கே இருந்த மாணவர்கள் அந்த திறந்த வெளி மைதானத்தில் ஒன்று கூடினர்.
வெற்றியும் குழு உறுப்பினர் என்பதால், பிரதாப் இருந்த இடம் வந்து விட்டான். மதுவும் மேகாவும் மேடையை விட்டு, கொஞ்சம் தள்ளி ஒரு ஓரமாக அமர்ந்து விட்டனர். சாதாரணமாக பார்த்தால் அவர்கள் தெரியமாட்டார்கள்.
***************
நிகழ்ச்சி சீராகவும் நேர்த்தியாகவும், சென்று கொண்டிருந்தது. திடீரென கூட்டத்தில் ஒருகுரல் “வி வாண்ட் எஸ்.பி” என ஒலிக்க ஆரம்பிக்க, அதை தொடர்ந்து பல குரல்கள் எழுந்தது.
“வி வாண்ட் எஸ்.பி”
“வி வாண்ட் எஸ்.பி”
கூட்டத்தை பார்த்த மதுவின் செவியில், மேகா “யாருப்பா அந்த எஸ்.பி?” என கேட்டாள்.
“எனக்கும் தெரியல. பார்க்கலாம்” என்ற மதுவின் கவனம் மேடைக்கு சென்றது.
“ஹே கைஸ் வாட்ஸ் அப் யா? நான் வந்துட்டேன் கொஞ்சம் அமைதியா இருங்க.” என அவன் கரங்களை உயர்த்தி, செய்கையால் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்திக்கொண்டே, மேடை ஏறினான்.
‘நான் பச்சை தமிழன்’ என தெரிவிக்கும் படி, அவன் உடுத்தி இருந்த உடை, அவனின் முறுக்கேறிய உடலிற்கு கண கச்சிதமாக பொருந்தி, அவனது கம்பீரத்தை கூட்டி காண்பித்தது. பெண்கள் அனைவரும் அவனின் வசீகரத்தில் மயங்கி தான் போயினர். ஆனால் அவன் மயங்கியது என்னமோ, அவனின் ரோஜா பெண்ணிடம் மட்டுமே.
மேடை ஏறிய அவன் விழிகள் கூட்டத்தில் அலைபாய்ந்து, அந்த பிங்க் நிற புடவையை அணிந்த, அவனின் தேவதையை கண்டுகொண்டது. அதன் பின் அவனது பார்வை, வேறு எங்கும் செல்லாமல், அவளிடமே மையம் கொண்டது. தஞ்சமானது அவனது பார்வை மட்டும் இல்லை, இதயமும் என்று தெரியாமல் போனான், அந்த சத்யமூர்த்தியின் மைந்தன் பிரதாப் சத்யமூர்த்தி.
இப்போது அவனிற்கு புரிந்தது, அவனின் மனம் என்ன சொல்ல முயன்றதென்று; அவளின் சுவாசம் என்ன தெரிவித்ததென்று; அவன் தன் கட்டுப்பாட்டை, இழந்த காரணம் எதனால் என்று; அத்தனை கேள்விகளுக்கும் விடையாக, அவனெதிரே பிங்க் ரோஜாவாக அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள் மதுநிலா.
**************
ஆகாஷ்! பங்களாவின் முன் வாகனத்தை நிறுத்த, கனவுலகில் சஞ்சரித்த வெற்றி பூலோகம் திரும்பினான்.
என்னதான் மதுவின் மீது காதல் இல்லை என்றாலும், சிறுவயது முதல் உடன் வளர்ந்த பெண், தன் பெற்றோர்களின் முழு அன்பிற்கும் சொந்தக்காரி, தன் அழகால் அவனை வசீகரித்தவளை, காண விரைந்து சென்றான் வெற்றிசெல்வன் ஆர்வமாக.
வீட்டிற்குள் நுழைந்ததும், நெருப்பை மிதித்தது போல் அங்கயே ஸ்தம்பித்து நின்றான். அடுத்த அடியை எடுத்து வைக்க அவன் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
அவன் கண்முன்னால் கண்ட காட்சியை நம்பமுடியாமல் சிலையாக நின்றான்.