தண்ணிலவு தேனிறைக்க… 21

TTIfii-5ecff7fb

தண்ணிலவு தேனிறைக்க… 21

தண்ணிலவு – 21

ஐந்து வருடத்திற்கு முன், பிரிந்து சென்றநாளின் தாக்கத்தில் உறைந்திருந்த இருவரின் அகமும் புறமும் ஒருசேர நடுக்கம் கொள்ள, ஒருவருக்கொருவர் ஆதரவாய் கைகளை இறுகப்பற்றிக் கொண்டனர்.

“உங்ககிட்ட இருந்து விலகியிருந்து, நானுமே ரொம்ப கஷ்டப்பட்டேன் மாமா! என் கோபத்தை உங்கமேல திணிக்ககூடாதுங்கிற பிடிவாதத்துல, உங்கமேல வெறுப்பை வளர்த்துக்க ஆரம்பிச்சேன்! ஆனா, உங்கள பார்த்தபிறகு, எல்லாமே தலைகீழா மாறிப் போயிடுச்சு… என் கோபத்த, உங்கமேல இறக்கி வைச்சு, இப்ப வரைக்கும் பழி வாங்கிட்டு இருக்கேன்” அடிபட்ட குரலில் சிந்தாசினி தன் நிலையை கூற, ஆதரவாக அவளின் தோளணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

நன்மையோ தீமையோ இதுநாள் வரையில் மனைவி பட்டபாடெல்லாம் தன்மேல் கொண்ட அன்பினால் மட்டுமே எனத் தெளிவாகப் புரியும்போது, இவனுக்குமே தனது சுயநலத்தை நினைத்து பெரும் தலைகுனிவாகிப் போனது. 

“எல்லாமே அவசரமா ஆரம்பித்து, அரைகுறையா முடித்து, கேள்விகுறியா நின்னுட்டோமேன்னு மனசுக்குள்ள அழாத நாளில்லை. என்னைப் பெத்தவரை நான் பக்கத்துல இருந்து பார்த்ததில்ல… ஆனா, நாராயணன் அப்பா, பெத்தவருக்கும் மேலா, பாசத்தை கொட்டி என்னை வளர்த்தாங்க!

விபுவ பார்க்கும் போதெல்லாம், அப்பா பாசம் கிடைக்காம வளர்ந்துட்டு வர்றானேன்னு மனசு தவிச்சுப் போகும். என்னோட கோபம் எந்த விதத்திலும் என் பையனை பாதிக்ககூடாதுன்னுதான், உங்களை அப்பாங்கிற பொறுப்பை எடுத்துக்கச் சொன்னேன். என்னோட எல்லா முடிவுலயும் நான், என் பிள்ளைங்கிற சுயநலம் மட்டுமே அடங்கியிருந்தது. தனியா வாழ்ந்து காட்டனும்னு பிடிவாதம் பிடிச்சே, வேறெந்த யோசனைக்கும் நான் போகல…” ஒய்ந்து போனவளாக, தனது நிலையை விளக்கியவளின் ஆற்றாமைகள் முடிந்தபாடில்லை.

“யாரோட பரிதாபமான பார்வையும் என்மேல விழக்கூடாதுன்னு, தைரியமா எல்லாத்தையும் உள்வாங்கிக்க பழகிக்கிட்டேன்! ஆனா, என்னோட வேதனையெல்லாம் உள்ளுக்குள்ள அடக்கி வைச்சு அவஸ்தைபட்டதுதான் என்னை பலகீனமா புரட்டி போட்டுடுச்சு!” விசும்பலுடன் கூறி முடிக்க, ஆறுதலாய் மனைவியை அணைத்துக் கொண்டான் பாஸ்கர்.

“சாரிடா… ரொம்ப சாரிடா சிந்தாசினி! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்து மன்னிப்பு கேட்கனும்னு தெரியலையே எனக்கு… இதெல்லாம் என்னோட பொறுப்பில்லாதனத்தால மட்டுமே வந்தது!” நலிந்த குரலில், அவனின் வாய் தன்னால் மன்னிப்பை யாசித்தது.

ஒன்றுமறியா சிறுபெண்ணின் உள்ளத்தையும் உடலையும் தன்வசப்படுத்தி, பற்றாகுறைக்கு உணர்வுகளையும் மரிக்கச் செய்ய வைத்த தன் பச்சோந்தி குணத்தை, என்னவென்று சொல்லி நியாயபடுத்திக் கொள்வதென்றே புரியாமல் குற்றவுணர்வில் பேதலித்துப் போனான் பாஸ்கர்.

தவறே செய்யாமல் மாமியாரின் வசைமொழிகளையும் அல்லவா தாங்கிக் கொண்டாள். அதையெல்லாம் மறக்காமல் உள்ளுக்குள் வைத்து வாழ்நாள் முழுவதும் குத்திக் காண்பிக்கப் போகிறாளோ என்றெல்லாம் மனம் சங்கடப்பட்டுக் கொள்ள, அவனையுமறியாமல் கேட்டும் விட்டான்.

“மாமியாரா, எங்கம்மா பேசினத எல்லாம் நான், நியாயப்படுத்த விரும்பல சிந்தா… ஆனா, அவங்களோட நினைப்பெல்லாம் ஒரு அம்மாவா, என்னோட நல்லதுக்காகவே கடைசி வரையிலும் பார்த்திருக்காங்க… என் முன்னாடி அவங்கள பத்தி தப்பா பேசமட்டும் செய்யாதே! என்னால அதை தாங்கிக்கவோ, கேட்டுட்டு அமைதியா இருக்கவோ முடியாது” இயல்பான சுபாவத்துடன் பாஸ்கர் கூறிட, சிந்தாசினிக்கு அழுகையினூடே சிரிப்பும் தொற்றிக் கொண்டது.  

மெல்ல அழுகையை நிறுத்திவிட்டு, கணவனைப் பார்த்துக் கொண்டே, “அவங்க மேல கோபம் ஆரம்பத்துல இருந்ததுதான். ஆனா, அது கொஞ்ச நாள்லயே விலகிடுச்சு மாமா! மகன் வாழ்க்கையில அவங்க எதிர்பார்ப்பு பொய்யாப் போன ஏமாற்றம்தான், கோபமான வார்த்தைகளா வெளிவந்திருக்குன்னு நல்லா புரிஞ்சது. அலமு அம்மாக்கும் கிட்டதட்ட அதே நெலமதான். அதை பார்க்கும்போதுதான் எனக்கு இந்த தெளிவு வந்தது. அதுவுமில்லமா, இறந்தவங்க தெய்வத்துக்கு சமானம். அவங்கமேல விரோதம் பாராட்டுனா, அதைவிட கேடுகெட்டதனம் வேறெதுவுமில்லை…” வெகுளியாக விளக்கம் சொன்னவளின் கைகளை எடுத்து கண்களுக்குள் ஒற்றிக் கொண்டான் பாஸ்கர்.

“தேங்க்ஸ்டா… நன்றி சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா, அதைவிட பெரிய வார்த்தை எனக்கு தெரியல…” உணர்வுகள் ஒருசேர இருவரையும் பந்தாடிக் கொண்டிருக்க, வார்த்தைகள் உணர்ச்சிவசப்பட்டே வெளிவந்தன.

“ஆனா, இப்ப… நீங்க என்னைத் தேடி வந்துட்டீங்க அப்படிங்கிற சந்தோசமா… இல்ல, உங்க அருகாமையில எனக்கு கிடைக்கிற நிம்மதியா, ஏதோ ஒன்னு, மனசுக்கு நிறைவைக் கொடுக்குது மாமா!

நாம மறுபடியும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சு, நம்ம காதலை, நாம விட்டுக்கொடுக்கலன்னு உணர்ந்த நேரத்துல இருந்தே நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்! குடும்ப வாழ்க்கையில நம்பிக்கை இழந்த எனக்கு இப்படியொரு நிம்மதி கிடைக்கும்னு, நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல…” மெல்லிய கீற்றாய் புன்னகை சிந்தி தனது தவிப்புகளை கொட்டி முடித்தாள் சிந்தாசினி.

மனைவியை இமைதட்டாது பார்த்திருந்தவனின் உள்ளமெல்லாம் பூரித்து கிடக்க, எந்த நிலையிலும் தன்னை ஏற்றுக் கொள்ளும் மனங்கொண்டவளின் காதலுக்கு என்றும் அடிமையாக இருக்கவே ஆசைகொண்டான்.

“எனக்கு நம்பிக்கை இருந்ததுடா! சுயநலமும் அவசரங்களும் நம்ம காதலை சிதைக்க முடியாதுன்னு உறுதியா இருந்தேன், நமக்குள்ள இருந்த பரஸ்பர அன்புதான், வாழ்ந்து காட்டணும்னு நமக்கொரு உத்வேகத்தை கொடுத்தது.

நமக்கு நெருக்கமானவங்களால மனம் காயப்பட்டு நிற்கும் போதுதான் சமாதானம், புரிதலுக்கான அருமை தெரியவரும். உன் வலிகளுக்கு மருந்தா இருக்கட்டும்னு நினைச்ச என்னோட விலகலும், என்னை தண்டிக்க கூடாதுன்னு நினைச்ச உன்னோட பிரிவுமே நமக்குள்ள இருக்குற நேசத்தை அழகா புரிய வைக்குதே…” உணர்ச்சிப்பெருக்கில் கூறியவன், மனைவியின் இதழணைத்து அன்பை வெளிப்படுத்த, காதலின் கரைசல்களாய் சிலநிமிடங்கள் கழிந்தன.

“உன்னால என்னைவிட்டு இருக்கமுடியாது, சீக்கிரமே என்னைத் தேடிவருவேன்னு நான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஃபோன்ல பேசும்போதும் உன்னை உசுப்பேத்தி விடனும்னே உன்னை பார்க்காம, உன்னைப் பத்தி விபுகிட்டயும் விசாரிக்காம இருந்தேன்!” இலகுவான பேச்சில், தானாக மனைவியின் மடியில் தலைசாய்த்துக் கொண்டான்..  

“ஆக, அப்பவும் பாவம் பார்க்காம, என்னை சீண்டி, நக்கல் பண்ணியிருக்கீங்க அப்படிதானே?” பொய்யாய் வெகுண்டு தலையில் நங்கென்று மனைவி கொட்டு வைக்க, தலையை தடவிக்கொண்ட பாஸ்கர்,

“மெதுவா கொட்டுடி! கோபத்துல என்கூட சண்டை போடுவன்னு நான் எதிர்பார்த்தேன்! ஆனா, நீ மனசுல எல்லாத்தையும் போட்டு அழுத்திகிட்டு என்னை அலைய விடுவேன்னு சத்தியமா நினைக்கல…”

“எது? நான் அலைய விட்டேனா உங்கள?”

“உன் மனசை தொட்டு சொல்லு! அதுவே ஆமான்னு சத்தியம் பண்ணும்!” என்றவனின் கைகள் அவள் மனதை தொடப்போக,

“பேச்சு பேச்சா இருக்கணும் பாச்சு… இல்லன்னா பிச்சு பிச்சு!” மனைவி மிரட்டலில் இறங்க,

“சரிதான் போடி! உன்கிட்ட அடியும் கடியும் வாங்கி ஸ்ட்ராங் ஹப்பி ஆகிட்டேன். இனி என்ன உதை விட்டாலும் உன்னை விடவும் மாட்டேன், தனியா பறந்து போற சுதந்திரத்தையும் உனக்கு கொடுக்க மாட்டேன்!” எகத்தாளப் பேச்சில் மீசையை முறுக்கிக் கொண்டான் பாஸ்கர். 

சீண்டல் பேச்சுக்கள் காதல்மொழியில் கரைய, பாஸ்கரின் வாட்ஸ்-அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் வந்து அவர்களை நிகழ்விற்கு இழுந்து வந்தது.

செய்தியை படித்துப் பார்த்தவன், “நாளைக்கு எட்டுமணிக்கே மீட்டிங் இருக்குடா… சோ டயர்டு, தூங்குவோம் வா!” சோம்பல் முறித்தவாறே, மனைவியை தோள்வளைவில் வைத்துக் கொள்ள,

“இத்தனைநாள் இந்த அக்கறையெல்லாம் எங்கே போயிருந்தது? போங்க… போங்க! நான் பசங்க ரூம்ல போயி படுக்கறேன்!” முறுக்கிக்கொண்டே விலகப்போனவளை இழுத்துக் கொண்டான்.

“புதுசா ஆரம்பிக்காதடி! நம்ம வீட்டுல, நமக்கான இடத்துலதான் உன்கூட இருக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்!” என்றவனை நம்பமுடியாமல் பார்க்க,

“இப்படியெல்லாம் பார்க்க கூடாது… நீ என்னை நம்பித்தான் ஆகணும். ஒவ்வொரு தடவையும் கியாரண்டி, வாரண்டி எல்லாம் கொடுக்க முடியாது சினிகுட்டி!”

“ஓஹோ… நீங்க பொண்டாட்டிதாசன் இல்லன்னு சொல்றதுக்கு இன்னும் என்னென்ன ரீல் சுத்துவீங்க? அதையும் கேட்டு பயந்தவ மாதிரியே நானும் இருக்கேன்…” நையாண்டி பாட்டு படித்தவளை,

“அநியாயத்துக்கு நக்கலடிக்கிற வாய விட்டுவைக்க கூடாதே…” சீண்டியபடியே தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

“டயர்டு, நாளைக்கு மீட்டிங்… சீக்கிரம் தூங்கனும்னு  சொன்னதுக்கு அர்த்தம் இதுதானா?” திமிறிக்கொண்டு தள்ளிச் சென்றவளை, தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன்,

“உனக்கு ஓகேதானே?” சரசமாய் கன்னத்தோடு உரசி சம்மதம் கேட்ட தினுசில், முணுமுணுப்பான மறுப்பும் மறைந்து, கணவனின் ஆளுகையில் மயங்கி, நெகிழ்ந்து, அவனில் அடைக்கலமானாள் சிந்தாசினி. 

கூடிக்களித்த நிமிடங்களை எல்லாம் கனவா நனவா என்றே நம்பமுடியாமல் விழிவிரித்து பார்த்தவளை, கொஞ்சிப்பேசி,  ஆசுவாசபடுத்தியே உறங்க வைத்தான் பாஸ்கர்.  

மறுநாள் காலை வேளையில் சிந்தாசினியின் முதன்முதலான சமையல் அரங்கேற்றம் அரக்கபரக்க நடந்து கொண்டிருந்தது. பாஸ்கரின் வேலைநேரத்தை கணக்கிட்டே பரபரப்புடன் சமைத்து உணவை, சாப்பாட்டு மேஜையிலும் வைத்துவிட்டாள் சிந்தாசினி.

“டிஃபன் ரெடி மாமா! நீங்க வந்து சாப்பிடுங்க… நான் பசங்களை எழுப்பிட்டு வந்துடுறேன்!” என்றபடியே நகல, செல்பேசியை தடவிக்கொண்டே, உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தான் பாஸ்கர்.

சரியாக இருபது நிமிடங்கள் கழித்து, மீண்டும் கணவனைதேடி வர, முன்னிருந்த நிலையில் சிறிதும் மாற்றமில்லாமல் செல்பேசியை பார்த்துக்கொண்டே கைவிரல்களுக்கு நாவினால் வெள்ளையடித்துக் கொண்டிருந்தான்.

“அய்ய… என்ன பழக்கமிது மாமா? நீங்க சாப்பிடலையா?” கணவனின் செய்கையில் முகம்சுளித்து கேட்க,

“இட்லி தீர்ந்து போச்சுடா… ரெண்டு எடுத்துட்டு வா!” என்றவன், காரியத்தில் கண்ணாயிருக்க, திடுக்கிட்டு ஹாட்பாக்ஸை திறந்து பார்த்தவளுக்கு இட்லி காலியாகி இருந்தது.

“எல்லாமே சாப்பிட்டீங்களா?”

“ம்‌ம்‌ம்… ஏன் கேக்குற? சீக்கிரம் கொண்டுவாம்மா… டைம் ஆகுது!”

“எத்தனை சாப்பிட்டீங்கன்னு கணக்கு வைக்கவே மாட்டீங்களா?”

“சாப்பாட்டு விசயத்துல என்னடி கேள்வி? அதெல்லாம் பார்க்க மாட்டேன்…”

“ஃபோன் கையில இருந்தா, உள்ளே என்ன போகுது, எவ்வளவு போகுதுன்னு கூட தெரியாதா?” கடுகடுப்புடன் இவள் கேட்க,

“இப்போ என்ன? இட்லி இல்லன்னு சொல்லிட்டு போவியா? இதுக்கு போயி விசாரணை கமிஷன் வச்சு மனுசனை கடுப்பேத்துறா!” பசி அடங்காத சிடுசிடுப்பு பேச்சிலும் வெளிப்பட, நொடியில் கோபம் கொண்டான் பாஸ்கர்.

“ஒரு ஈடு… பன்னெண்டு இட்லி அப்படியே கொண்டுவந்து வச்சேன்! அத்தனையும் உள்ளே தள்ளிட்டு, சலிப்பு வேறயா உங்களுக்கு?” பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவளை பார்த்து அசடு வழிந்து,

“அவ்வளவா சாப்பிட்டு இருக்கேன்? செல்லக்குட்டி… மாமாவ கண்ணு வைக்காதேடி! மொதமொதல்ல, என் வீட்டுல, என் பொண்டாட்டி சமையல சாப்பிட்டுறேங்கிற சந்தோசத்துல அப்பிடியே உள்ளே தள்ளிட்டேன்…” என்றவன் அவளின் இருகைகளுக்கும் இடைவிடாமல் முத்தம் கொடுக்க,

“என்ன சொன்னாலும் இனி உங்களுக்கு இட்லி இல்ல… ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு வயித்த நிரப்பிக்கோங்க!”

“அரைகுறையா சாப்பிட்டா வேலை பார்க்க முடியாதுடி! கொஞ்சம் ரிலாக்ஸா சாப்பிட நினைச்சு அன்லிமிடெட்டா போயிடுச்சு… ரெண்டே ரெண்டு முட்டைதோசை ஊத்தி கொண்டுவா! அதோட என் பந்திய முடிச்சுக்கறேன்!” திட்டு வாங்கியும் மீண்டும் தோசை கேட்டு நிற்பவனைப் பார்த்து சிரிப்பதா முறைப்பதா என்றே சிந்தாசினிக்கு தெரியவில்லை.

“என்னதான் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிப் போனாலும் இப்படியா அரக்கனாட்டம் சாப்பிடுறது?”

“நம்ம விபு உள்ளங்கை அளவு கூட இல்லடி நீ சுட்டு வைச்ச இட்லி… பேசுற நேரத்துல தோசை போட்டுக் கொண்டுவா… போ!” என விரட்டிய நேரத்தில், விபுவும் நந்தாவும் வந்து நிற்க, இருவருக்கும் பூஸ்ட் கலந்து கொடுத்து விட்டு, அடுப்பில் தோசைகல்லை வைத்தாள்.

“ம்மா… எனக்கும் நந்தாவுக்கும் முறுவல் தோசை வேணும்.  இன்னக்கு லஞ்ச் ஸ்விக்கில ஆர்டர் போடுவோம்” விபு ஆரம்பிக்க,

“ஆமா அத்தை! பக்கெட் பிரியாணி போட்டுடலாம் எல்லாருக்கும் சேர்த்து…” நந்தாவும் பெரிய மனிதனாய் யோசனை சொல்லிக்கொண்டே வர, பாஸ்கர் இடையிட்டான்.

“எனக்கு என்ன வேணும்னு கேக்கவே மாட்டீங்களாடா?”

“நீதான், ஊருல தனியா இருக்கும் போது டெய்லியும் ஆர்டர் போட்டுதானே சாப்பிட்டிருப்ப… அதையே இப்பவும் சாப்பிடுப்பா!” விபு சொல்ல,

“இதைதான்டா, காச்ச விட்டாலும் சீக்கு விடலன்னு சொல்றது…” பாஸ்கர் முகம் சிறுத்துக் கொண்டதில், பிள்ளைகள் புரியாமல் பார்க்க, சிந்தாசினி அடக்கப்பட்ட சிரிப்பினில் வேலையில் ஆழ்ந்தாள்.

“எனக்கு மதியம் சாப்பாடுதான் வேணும். யாரும் என்னவும் சாப்பிட்டுக்கோங்க… சிந்தாசினி, எனக்கு சாதம் வைச்சிடு!”

“வெறுமென சாதம் மட்டும் போதுமா? வெஜ்ஜா… நான்வெஜ்ஜான்னு சொல்லிடுங்க… எனக்கு அளவெல்லாம் சரியா தெரியாது, அம்மாகிட்ட கேட்டுதான் செய்யனும்” என்றவாறே தோசையை கொண்டுவந்து வைக்க,

“வெண்டிக்கா சாம்பார், கத்திரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொரியல், காலிபிளவர் பாக்கோடா பண்ணுடா… இந்த பக்கோடா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு! அப்புறம் அன்னைக்கு, எல்லா காயும் சேர்த்து போட்ட அவியல், அத்தை செஞ்சிருந்தாங்க… அதையும் கேட்டு செய்! அதோட மாங்கா இனிப்பு பச்சடி, வெயிலுக்கு வெள்ளரிக்கா, கேரட் துருவின தயிர்பச்சடி பண்ணு… அப்பிடியே பனிரெண்டு மணிக்கு கொஞ்சமா பாசிபருப்பு பாயாசம் வச்சு குடு…  வடகம் அப்பளம்னு வேலைய இழுத்துக்காதே! நாலுமணிக்கு  கொஞ்சமே கொஞ்சம் வெங்காய பக்கோடா போட்டுக் கொடு. அதிகமா செய்யாதே! என்னால நிறைய சாப்பிட முடியாது” அலட்டிக்கொள்ளாமல் தனக்கு தேவையானதை பாஸ்கர் வரிசைப்படுத்திவிட, சிந்தாசினிக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் மயக்கம் வராத குறைதான்.

“அப்பா… இன்னைக்கு அப்புறம் நீ சாப்பிடவே போறதில்லையா? இப்படி அடுக்கிட்டே போற?” விபு கேட்டுவிட,

“இப்படி லிஸ்ட் சொன்னா ஹோட்டாலா நடத்துறோம்னு அம்மா சத்தம் போடுவாங்க!” நந்தாவும் மிதுனாவின் நினைவில் கூறி முடித்தான்.

“போங்கடா பசங்களா! சாப்பாட்டோட அருமை உங்களுக்கெங்கே தெரியப்போகுது? ஒண்ணுமத்த காய்ஞ்ச ரொட்டிக்கும் க்யூல வெயிட் பண்ணி வாங்கி சாப்பிட்டுருக்கேன்! கொஞ்சநாள் இப்படிதான் அன்லிமிடெட் ஃபுட்தான் எடுத்துக்கப் போறேன். யார், என்ன திட்டினாலும் என்காது கேட்காது!” பாஸ்கர் வீரவசனம் பேசிய நேரத்தில் நைல்குட்டியுடன் தயானந்தன் வந்து சேர்ந்தான்.

“வாங்க மாமா…” என வரவேற்று, பிள்ளையை மடியில் அமர்த்திக்கொண்டவன், மனைவி கொண்டு வந்த தோசையை பிய்த்து குட்டிக்கு ஊட்டி விட்டான்.

“நேத்து நைட்டே உன் மருமக, உன்னை தேடிட்டா சிந்துமா! மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவியாம்… அம்மா சொல்லச் சொன்னாங்க!” தயா, சிந்துவிடம் சொல்ல,

“பாப்பா இங்கேயே இருக்கட்டும்ண்ணே! வெளியே அடிக்கடி கூட்டிட்டு வரவேணாம். அம்மாட்ட கேட்டு இங்கேயே சமைச்சிடுறேன். இப்ப நீங்களும் இங்கேயே டிபன் முடிச்சிட்டு போங்க!” வீட்டு மனுஷியாக அண்ணனை வரவேற்று, இட்லி, தோசைக்கென மீண்டும் அடுப்படியில் தஞ்சமடைந்தாள் சிந்தாசினி.

“நல்லா சமைக்க கத்து கொடுக்க சொல்லுங்க மாமா! உங்க தங்கச்சிக்கு ட்ரைனிங் பத்தல…” உணவுக்கென காத்திருக்கும் நேரத்தில் சிரித்துக்கொண்டே பாஸ்கர் குற்றப் பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்க,

“ஒருநாள்ல அப்படியென்ன குத்தம் கண்டுபிடிச்ச மாப்ள?” பாஸ்கரின் கேலிக்கு குறையாமல் தயாவும் சிரித்தபடி கேட்கவும்,

“சாதம் வைக்கத் தெரியும், குழம்பு, சைட் டிஸ் செய்ய தெரியாதுன்னு சொல்றா மாமா?”

“அதுக்கென்ன மாப்ள… யூ டியூப் பார்த்து நீதான் சொல்லிக் குடேன்! உனக்குதான் அதெல்லாம் கைவந்த கலையாச்சே!”

“அதானே, இவராவது, தங்கச்சிய கூப்பிட்டு சத்தம் போடுறதாவது…. நியாயம் கிடைக்கும்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் மாமா!” நொந்து போனவனாய் பாஸ்கர் கூற,

“இதுக்கே அசந்து போனா எப்படி மாப்ள? நானெல்லாம் உங்கக்கா செஞ்ச சப்பாத்தியில உலகத்தை சுத்திப் பார்த்து, தோசைகல்லுல இட்லி சுட்டு சாப்பிட்டவனாக்கும்… அதை பார்க்கும்போது உன் நிலைமை எவ்வளவோ பெட்டர்.” பல்லிடுக்கில் சிரிப்பை அடக்கிக்கொண்டு சரிக்கு சரியாக வாரினான் தயா.

“ஒன்னு சொல்லி மூச்சுவிட முடியுதா? உடனே பதிலுக்கு பதில் போட்டு தாக்குறீங்க! பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறதில எவ்வளவு கஷ்டம் இருக்கு? முடியலடா சாமி!” அங்கலாய்புடன் பாஸ்கர் சொல்லி முடிக்க, அடக்க முடியாமல் வெடித்து சிரித்தாள் சிந்தாசினி.

“உனக்கு ஜால்ரா அடிக்க, எங்கம்மாவும் உன் அக்காவும் ரெடியா இருப்பாங்க மாப்ள… அவங்ககிட்ட போய் சொல்லு…” என்றவன் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பி விட, அன்றைய நளபாகம் பாஸ்கர் விரும்பியபடியே மனைவியின் கைவண்ணத்தில் முடிந்தது.

சொந்த வீட்டில், மனைவியின் கைவண்ணத்தில் சாப்பிட வேண்டுமென்ற கணவனின் விருப்பத்தை நிறைவேற்றவே, மகிழ்ச்சியுடன் அசராமல் வேண்டியதை சிந்தாசினி செய்து கொடுக்க, பாஸ்கரும் வெட்கமேயில்லாமல் சப்பைக்கட்டு கட்டி வயிற்றை நிறைத்துக் கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

“வாக்கிங் போயிட்டு வாங்க மாமா… இல்லன்னா சைக்கிள்ல பசங்களோட தினமும் பத்து ரவுண்ட் சுத்திட்டு வாங்க. வேலை பாக்குற சாக்குல, ஒரே இடத்துல உக்காந்தே இருந்துட்டு பிள்ளையாருக்கு போட்டியா வந்தா, மூணுவேளை கஞ்சி மட்டுமே கண்ணுல காட்டுவேன்!” மனைவி செல்ல முறைப்பில் மிரட்டல் விடுக்க, இரவுநேர நடைப்பயிற்சிக்கு ஜோடியாகவே சென்றனர்.  

Leave a Reply

error: Content is protected !!