தண்ணிலவு தேனிறைக்க… 5

TTIfii-0e743802

தண்ணிலவு தேனிறைக்க… 5

தண்ணிலவு – 5

தயானந்தனின் வீடு காலைநேர பரபரப்பில் வெகு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பாஸ்கரின் அக்கா பெண்ணின் விசேஷம் இன்று நடைபெறும் வேளையில், மண்டபத்திற்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அலமேலுவும், தயாவின் சகோதரிகள் நர்மதா, கங்காவும் ஊரிலிருந்து காலையில் வந்திருந்தனர். வீட்டுப் பெரியவர்களாக பாஸ்கரின் பெரியப்பா, சித்தப்பா குடும்பமும் அங்கேயிருந்தே விசேஷத்திற்கு செல்லலாமென வருகை தந்திருந்தனர்.

சாந்தினி காலை உணவை அனைவருக்கும் சேர்த்தே கொடுத்து விட்டிருக்க, வீட்டில் உணவுநேரம் ஆரம்பமாகியிருந்தது.

முன்தினம் அதிகாலையில் வந்திறங்கிய பாஸ்கர், அப்போதிருந்தே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். தயாவின் குட்டியானையில் பாஸ்கர் சாமான்கள் ஏற்றிக்  கொண்டிருக்க, அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான் தயாவின் வலதுகையான குமரன்.

“மாமா, உன்னை சாப்பிட கூப்பிடுறார் குமரா… நீ உள்ளே போ! மிச்ச வேலையை நான் பார்த்துக்கறேன்!” என அவனை உள்ளே அனுப்பி வைத்த நேரத்தில், மழலைப் பட்டாளம் அவனைத் தேடி வர,

“நான் ஹெல்ப் பண்ணவாப்பா?” விபு அன்புடன் கேட்டு நின்றான்.

நேற்று, தன் தந்தையைப் பார்த்ததிலிருந்து அவனையே சுற்றிக் கொண்டிருக்கிறான் மகன். நொடிநேரமும் தந்தையை விட்டு விலகினானில்லை.

“என்னப்பா… நான் எப்படி வேலை செய்வேன்னு யோசிக்கிறியா? சேட்டை எல்லாம் பண்ண மாட்டேன்” விபு மறுபடியும் தந்தையிடம் கேட்டு நிற்க,

“நாங்க எல்லாம் பிக்பாய் ஆகிட்டோம் பாஸ்மாமா… எல்லா வேலையும் செய்வோம்!” என தன்பங்காக நந்தாவும் கூற, அவர்களின் உயரத்திற்கு மண்டியிட்டு, பிள்ளைகளை தன்னருகில் இழுத்துக் கொண்டான் பாஸ்கர்.

“அடடா… ரெண்டு பெரிய மனுசங்க, எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு இருக்காங்கங்கிறதயே தெரியாம இருந்துட்டேனே?” என சிறுவர்களை மெச்சிக் கொண்டவன்,

“இந்த சின்ன பையன் எப்படி வேலை செய்யுறான்னு பார்த்து  மார்க்ஸ் போடுங்க மைடியர் பிக்பாஸ்! அது போதும்…” தன்னை சிறியவனாக்கிக் கொண்டு அவர்களின் கன்னத்தில் முத்தம் கொடுக்க,

“பாஸ்மாமா எனக்கு… எனக்கும் முத்தா வேணும், தூக்கு!” துள்ளலுடன் கையை விரித்து நின்றாள் நைல்குட்டி. 

“ஹாஹா… என்னோட செல்லக்கிளிக்கு இல்லாததா? நெறைய தருவேன்டா மாமா!” பிள்ளையை தூக்கி தோளில் போட்டுக் கொண்ட நேரத்தில்,

“குட்டீஸ் சாப்பிட வாங்கடா!” என அழைத்த சிந்தாசினி, குட்டியை, கணவனின் கைகளில் இருந்து வாங்கிக்கொண்டு, ‘உனக்கும் சேர்த்துதான் சொன்னது’ என சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றாள்.

‘இவ ஒருத்தி, ரொம்பத்தான் பண்றா! போடி… போ… உனக்கு மட்டுமா? எனக்கும் தெரியும்டி! இந்த தடவ விட்டுக் கொடுக்கமாட்டேன்… பார்க்கலாம் நீயா, நானான்னு’ என அவனின் உள்மனது மனைவியிடம் ஒருகை பார்த்துவிடும் பாவனையில் சண்டையிடத் தயாராக இருந்தது.

ஊரில் இருந்தவரை மனைவியை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாதென்ற முடிவில் இருந்தவனுக்கு, மனைவி முகத்திருப்பலும், முந்தையநாளின் நிராகரிப்பும் சேர்ந்து  பெரும் கோபத்தை வரவழைத்திருந்தது.

பதிலுக்கு அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணமும் தலைதூக்கிவிட, அதை செயல்படுத்தும் முடிவினில் இருந்தான் பாஸ்கர்.

அதன் முதற்கட்டமாக காலையில் அனைவரின் எதிரிலும் தனக்கும் காபியை கொண்டுவந்து கொடு என்று உத்தரவிட்டவனை முறைக்க ஆரம்பித்தவள், இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் இவனின் மனைவி.

மிகப்பொறுப்பாக முகம் சுருக்கிக் கொள்ளாமல் அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள் சிந்து.

எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பாஸ்கரின் குடும்பத்தினரை பெரியமாமா, சின்னஅத்தை என உறவு கொண்டாடிக் கொண்டதில் அவர்களுக்கும் சந்தோஷமே!

அனவைரின் பார்வைக்கும் இவர்களுக்குள் அனைத்தும் சரியாகிவிட்டது என்ற எண்ணத்தையே கொடுத்ததில், எந்தவிதமான விசாரிப்பையும் யாரும் மேற்கொள்ளவில்லை. 

மனைவியின் நடவடிக்கைகளை புரியாமல் பார்த்த பாஸ்கர் ‘போனவாரம் வரமாட்டேன்னு வீம்பு பிடிச்சவ இவதானா? இவள புரிஞ்சுக்க எக்ஸ்ட்ரா கோச்சிங் கிளாஸ் போகணுமோ?’ குழப்பத்துடன் கிறுகிறுத்துப் போனான்.

மனைவியின் பாராமுகமெல்லாம் கணவனிடத்தில் மட்டுமே என்றானபோது, அவனாலும் பொது இடத்தில் ஒன்றும் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

முன்தினம் சொன்னபடியே ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்த பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு சிந்து தயாராகி வர, அவளைப் பார்த்து கடுகடுத்தான் பாஸ்கர்.

‘கொழுப்பு அநியாயத்துக்கு ஏறிப் போயிருக்குடி… தனியா சிக்கும்போது இருக்கு உனக்கு’ மனதோடு கருவிக் கொண்டவன்,

‘இவளை பார்த்ததுல இருந்து, மனசுக்குள்ள கவுண்டர் விட்டே பைத்தியமாகிடுவேன் போலிருக்கு! ஸ்டடிடா பாஸ்கர்! புள்ளபூச்சிடா அவ…’ என நொந்து போன மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.

கோபம் கொண்ட மனதோடு, அவ்வப்போது மனைவியைப் பார்த்து பெருமூச்செறிவதும் நடந்து கொண்டேதான் இருந்தது. அடுத்த ஒருமணி நேரத்தில் எல்லாரும் தயாராகி கிளம்பி நிற்க, மிதுனாவிற்கு மட்டும் தாமதமாகிப் போனது.

இரு குழந்தைகளையும் சீவி சிங்காரித்து, வீட்டை முடிந்த அளவில் ஒதுக்கி வைத்து விட்டு அப்பொழுதுதான் அவள் தயாராகிவர அறைக்குள் சென்றிருந்தாள்.

மண்டபத்திற்கு செல்வதற்காக மகேந்திரா வேனும், சாமான்களை கொண்டு செல்ல குட்டியானையும் தயார் நிலையில் இருந்தது.

“நேரம் போகுது மாமா! உங்க எஜமானியம்மாவ சீக்கிரம் வரச் சொல்லுங்க!” தயாவிடம் பாஸ்கர் சொல்ல,

“வாயை பூட்டிக்கோ மாப்ள… சீக்கிரம் ரெடியாகுன்னு பொண்ணுங்ககிட்ட, அதுவும் கட்டின பொண்டாட்டிகிட்ட புருசங்காரன் சொன்னா, அன்னையோட அவன் தீர்ந்தான். அந்த நேரமே அவன் பரம்பரையோட வாழ்க்கை வரலாறையே வாயால எழுத ஆரம்பிச்சுடுவாங்க!” தயா கிண்டலில் இறங்கினான்.

“வண்டி ரொம்ப அடிவாங்கிடுச்சு போலயே மாமா?” குறையாத கேலியில் பாஸ்கரும் கேட்க,

“ஏகப்பட்ட பஞ்சர் உள்ளே ஒட்டியிருக்கு மாப்ள! அதுதான் குடும்பஸ்தனோட அவார்ட், ரிவார்ட் எல்லாம்” சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டே தயா தொடரும் போதே, உள்ளே இருந்து வந்த மரகதம்,

“அட சரிதான்யா! போயி கூப்பிடு… மாப்பிள்ளை அத்தனை சொல்லியும் நின்னுட்டு இருக்க! எல்லாரும் காத்திட்டு இருக்கோம்ல?” என மகனை உள்ளே ஏவினார்.

‘விட்டா இந்த அம்மா மாப்பிள்ளைக்கு பூரணகும்ப மரியாதை பண்ணி ஊர்வலம் போயிடும் போல… ரொம்பத்தான் மாப்பிள்ளை, கருவேப்பிலைன்னு தாங்கிக்குது’ வேனில் அமர்ந்திருந்த சிந்து உள்ளுக்குள் நொடித்துக் கொள்ள,

மனைவியின் முகம் போனபோக்கை பார்த்து, அவள் பேச்சினை கணிப்பதும் பாஸ்கரின் தலையாய கடமைகளில் ஒன்றாகிப் போனது.

உள்ளே சென்ற தயா கதவை தட்டி, “சீக்கிரம் வா மிது! லேட் ஆகுது!” அழைக்கவும் கதவை திறந்தவள்,

“நல்ல வேலை வந்தீங்க! கொக்கி எட்ட மாட்டேங்குது… போட்டு விடுங்க தயா!” என ஆரத்தை அவன் கைகளில் திணித்தாள்.

மனைவிக்கு உதவி செய்தவன் கொக்கி மாட்டிய இடத்தை தடவி விட்டு மென்மையாக முத்தம் வைக்க,

“தோடா… வெளியே ஊரே கூடி நிக்குது! துரைக்கு இப்போதான் ரொமான்ஸ் கேக்குதோ… தள்ளுங்க!” என விரட்டி விட்டாள்.

“வரவர பளபளப்பு ஏறிட்டே போகுதுடி சலவைக்காரி! ஆள கொல்ற… சப்பை ஃபிகரா இருந்தவ, இப்ப சந்தனக் கட்டையா உருண்டு தெரண்டு பாலிஷாயிட்ட…” கிசுகிசுப்புடன் மனைவியின் இடையினை அழுத்திப் பிடிக்க,

“சேலை கசங்கிடும், கையை எடு தண்ணிவண்டி… நீயும்தான் இஞ்சி தின்ன கொரங்கா இருந்து, இப்ப கொஞ்சமே கொஞ்சம் சிரிக்கிற ஜந்துவா மாறியிருக்க..!” என அடுத்தடுத்து போட்டுத் தாக்கியபடி கணவனை விலக்கி விட்டாள் மிதுனா.

“அடியேய்… தண்ணிவண்டியா நானு? என்ன தைரியம் உனக்கு? ஜந்துன்னு சொல்ற…” பொய்க்கோபத்துடன் மனைவியின் பின்புறம் பலமாக தட்ட,

“அடேய்! கோபம் வந்தா முன்னாடி வந்து அடி… இப்டி பின்னாடி நின்னு பதுங்காதேடா முரடா!” என்றவள் தட்டிய இடத்தை தேய்த்துக் கொண்டவாறே முகம் சுருக்கினாள். 

“எதுக்கு? பத்த வைக்காமயே என்னை பஸ்பமாக்கவா? நான் ரொம்ப விவரம்டி!” என்றவன் மனைவியின் கைவேலையை இவன் செய்ய ஆரம்பிக்க,

“தள்ளுங்க தயா… ஏற்கனவே டைம் ஆகிடுச்சுனு சொல்லிட்டு இருக்காங்க!” வலுக்கட்டாயமாக அவனை வெளியே அனுப்பிவிட்டு, பத்து நிமிடங்கள் கழித்தே வெளியில் வந்தாள்.

“என்ன மாமா வெற்றியா தோல்வியா?” வெளியில் வந்த தயாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் பாஸ்கர் கேட்க,

“மஞ்சள் விளக்கு போட்டாச்சு, சீக்கிரம் பச்சை வந்திடும் மாப்ளே!” நிலவரத்தை சொன்னான் தயானந்தன்.

“நானும் அண்ணியும் சேர்ந்து வர்றோம்ன்னு சொன்னாலும் யாரும் கேட்கிறதில்ல… இப்போ அவங்க மட்டும் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறாங்க!” என சத்தமாகவே கடுப்புடன் சிந்தாசினி சொல்ல,

‘எல்லார் முன்னாடியும் குத்தம் காமிக்கிறா அதிகப் பிரசங்கி!’ அவளை முறைத்துக்கொண்டே முணுமுணுத்தான் பாஸ்கர். 

குழந்தைகள் மூவரையும் தன்னருகே வைத்துக் கொண்டு வண்டியில் அமர்ந்திருந்தாள் சிந்து. வீட்டு மனுஷியாய் நீ முதலில் சென்று நிற்கவேண்டும் என எல்லாரும் சேர்ந்து அவளை முதலில் வண்டியில் ஏற்றியிருந்தனர்.

அருகில் அலமேலுவும் அமர்ந்திருக்க, வண்டியில் ஏறிய மரகதம்,

“அண்ணனும், தமிழும் வந்திருக்கலாமே அண்ணி?” என்று பத்தாவது முறையாக விசாரிக்க,

“அறுவடை நேரம் உங்க அண்ணனுக்கு அசைய முடியல! தமிழும் கடை, மார்க்கெட்டுன்னு அலைஞ்சிட்டு இருக்கான். மருமகளை கூப்பிட்டா, புள்ளங்களுக்கு ஒத்துக்காதுன்னு சொல்லி மறுத்துட்டா… என்னால கூப்பிட மட்டும்தான் முடியும் மரகதம்!” என அலமேலு நிலைமையை விளக்கி விட்டார். 

“எல்லாரும் இப்படியே காரணம் சொல்லி, எந்த விசேஷத்துக்கும் வராமயே இருந்துடுறாங்க. வீட்டுலயேதான் புள்ளைங்க இருந்தும், இதுங்க ரெண்டும் கூட்டிட்டு வரல!” மகள்களைப் பார்த்து மரகதம் குறைபட,

“பெரிய கிளாஸ் படிக்கிற பசங்கம்மா… ஈஸியா ஆன்லைன் கிளாஸ் விட்டுட்டு வர முடியாது” நர்மதா பொதுவாக கூறி, தாயின் வாயை அடைத்தாள். 

ஊர்க்கதையை பேசிக்கொண்டே அனைவரும் மண்டபம் வந்தடைந்தது, வேனிலேயே வைத்து சீர் வரிசை தட்டுகளை நிரப்பி வைத்தனர்.

குமரனும் தயாவும் சேர்ந்து டென்தவுசண்ட்வாலா சரவெடியை கொளுத்திப்போட, ஆராவாரத்துடன் தாய்மாமன் சீர்வரிசையோடு மனைவியுடன் குடும்ப சகிதமாய் மண்டபத்திற்குள் நுழைந்தான் பாஸ்கர்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான் என்பது சொலவடை. உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு.

எந்தவித முன்னெடுப்பும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் பெண்ணைத் தாங்கிக் கொள்ள தயாராய் நிற்கும் இந்த தாய்மாமன் உறவு. 

அந்த உறவிற்கு எடுத்துக்காட்டாக, தமக்கைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாஸ்கர் பெருமிதத்துடன் வந்து நின்றான். தாய்மாமனுக்கு மரியாதை செய்து, சாந்தினி குடும்பத்தார் வரவேற்க, சீர்வரிசைகள் முறையாக சபையில் வைக்கப்பட்டன.

பட்டுசேலை, காக்ரா சோளியோடு ஐந்துபவுனில் தங்கஹாரம், வெற்றிலை பாக்கு, பூ, மாலை, தேங்காய், பழ வகைகள், கருப்பட்டி மற்றும் இனிப்பு வகைகள், பெண்ணிற்கான அலங்காரப் பொருட்கள், அதனுடன் வாழைத்தார் என மொத்தம் ஒன்பது தட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டன.

பித்தளை அண்டா, குத்துவிளக்கு மேலும் பல பொருட்களும் சீர்வரிசைகளாக சபையில் அடுக்கி வைக்கப்பட, மிகச்சிறப்பாகவே தனது தாய்மாமன் கடமையை செய்து முடித்தான் பாஸ்கர். 

வெகு விமரிசையாக விழா நடந்து கொண்டிருக்க, எல்லோர் மனதிலும் அத்தனை நிறைவு… சாந்தினி-மனோகர் தம்பதியினருக்கு பெருமையும் பூரிப்பும் ஒன்றாக குவிந்திருக்க, மழலைகளுக்கு போட்டியாகவே அந்த தருணங்களில் சிரித்து, மகிழ்ந்து கொண்டாடினர்.

வருகை தந்திருந்த அனைத்து குடும்பத்தாருக்கும் வெகு திருப்தியான மனநிலை வந்திருக்க, பாஸ்கரை மெச்சிக் கொண்டனர்.

‘உன் அம்மாவின் கனவு, ஆசையெல்லாம் மகன் இப்படி கௌரவமாய் இருக்க வேண்டுமென்பது தானே’ என பாஸ்கரின் அம்மா மஞ்சுளாவை நினைத்துக் கொள்ளவும் அவர்கள் தவறவில்லை.

அன்றைய விழா நாயகியான சின்னதேவதை அஞ்சனாவின் முகம் முழுவதும் பூரித்தே இருந்தது. தனது தாய்மாமனை பார்த்து பெருமையோ பெருமையாக தோழிகளிடத்தில் வாயடித்துக் கொண்டிருந்தாள்.

தயா-மிதுனா தம்பதியும் தங்களின் முறையாக இரண்டு பவுனில் தங்க நெக்லஸ் மற்றும் லெஹங்காவும் வைத்து செய்முறை செய்து முடித்தனர். சிந்து தன் பங்கிற்கு ஒரு பவுனில் கைசெயினை மாட்டிவிட,

“தம்பி எல்லாம் செஞ்சுட்டானே சிந்து! பின்ன ஏன் நீயும் செய்ற?” மிதுனா கேட்ட கேள்விக்கு,

“இது முறையில வராது… பிரியத்துக்கு போடுறேன் அண்ணி!” அனைவருக்கும் கேட்கும்படியாகவே பொதுவில் கூறி முடித்தாள்.

கணவனின் தயவை எதிர்பார்க்காமல் செய்முறைகளை செய்ய வேண்டுமென்று ஏற்கனவே முடிவெடுத்தவளுக்கு இது அதிகப்படியாக தோன்றவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் ஃபோட்டோகிராபரின் உதவியால் நிஜங்கள் அனைத்தும் நிழற்படமாகிக் கொண்டிருந்தன. கணவனுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் எந்த சுணக்கமும் காண்பிக்கவில்லை சிந்தாசினி.

விழாமேடையில் அன்றைய விழாநாயகியுடன் இவள் நின்றிருக்க, இவளை ஆட்டி வைக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

அவன் நில்லென்றால் நின்று, அமர் என்றால் அமர்ந்து கொண்டவளுடன், மகனையும் இணைத்துக் கொண்டு, குடும்ப சகிதமாய் பாஸ்கர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் தற்போதைய வெட்டிங்சூட் நிகழ்வை தோற்கடித்துக் கொண்டிருந்தன.

மேடையில் இருந்த மணமக்கள் இணைந்து அமரும் பெரிய இருக்கையை இவன் குடும்பம் ஆக்கிரமித்துவிட, அஞ்சனா வெடிக்க ஆரம்பித்து விட்டாள்.

பாஸ்கரின் அலம்பல்களை தடுக்க முடியாத சிந்துவும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் நிற்க, விபுவிற்கு அத்தனை பொறுமையில்லை.

“சோ போரிங்ப்பா… நானும் நந்தாவும் விளையாடப் போறோம்” என கூறிக்கொண்டு தப்பித்து விட்டான்.

“பாஸ்மாமா! இன்னைக்கு என்னோட ஃபங்கஷன்! நான்தான் இன்னைக்கு ஹீரோயின்…” அஞ்சனா சண்டையிட ஆரம்பிக்க,

“யாரு இல்லன்னு சொன்னாடா செல்லம்? நீ வா… மாமாவோட வந்து நில்லு!” எனக்கூறி, அப்போதும் ஃபோட்டோகிராபரை இவன் விடவில்லை.

“அத்த… மாமவ அந்த பக்கம் போய் மொபைல்ல போட்டோ பிடிச்சுக்க சொல்லுங்க… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்றாங்க!” அஞ்சனா நேரடியாகவே சிந்துவிடம் முறையிட்டு விட, இவளுக்குத்தான் எந்த சுவற்றில் போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை.

‘பொதுவுல மொகத்த திருப்பிக்க வேணாம்னு அமைதியா இருந்தா ரொம்பதான் அட்டகாசம் பண்றாரு! நான் இங்கே நிக்கிற வரைக்கும் இவரோட அலட்டலும் குறையப் போறதில்ல…’ உள்ளுக்குள் கடுகடுத்துக் கொண்டவள், மேடையிலிருந்து கீழிறங்கி விட்டாள்.

“நான் போயி, உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் வரச் சொல்றேன்டா சனாகுட்டி! அப்படியே ஃபோட்டோகிராபரையும் உன் பக்கம் மட்டுமே ஃபோகஸ் பண்ணச் சொல்றேன்” என்று சிறுமியை சமாதானப்படுத்தி விட்டு,

எதிரில் இருந்தால், மீண்டும் அழைத்து வம்பை வளர்ப்பானோ என்ற எண்ணத்தில் நைநிகாவை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு மகனை தேடிச் சென்றாள் சிந்து.

சாந்தினியின் மகன் ப்ரணவ் உடன் சேர்ந்து, விபுவும் நந்தாவும் ஐஸ்க்ரீம் மற்றும் ஜிகர்தண்டா போட்டியில் தீவிரமாய் இருக்க, கோபத்துடன் அவர்களை நோக்கி சென்று,

“என்னடா பண்றீங்க? எத்தனை ஐஸ் உள்ளே போயிருக்குடா விபு?” சிந்து கேட்க,

“மூணுதான்ம்மா” விபு சொல்ல,

“இல்லத்த அஞ்சு!” என்றான் ப்ரணவ்.

இவர்களிடம் கேள்வி கேட்கும் நேரத்தில் நைல் குட்டியும் தனக்கென ஜிகர்தண்டாவை எடுத்து வைத்துக் கொள்ள, சிந்துவிற்கு யாரை நிறுத்தி வைக்க, யாரிடம் கேள்வி கேட்கவென தெரியவில்லை.

“அதோட மூணு கிளாஸ் ஜிகர்தண்டாவும் குடிச்சோம்! யார் ஃபாஸ்டா குடிக்கிறான்னு போட்டி நடக்குது. அதுல ப்ரணவ் அண்ணாதான் ஃப்ரஸ்ட்! இப்போவே அஞ்சு கிளாஸ் குடிச்சுட்டான்…” நந்தா அனைத்தையும் புட்டுபுட்டு வைக்க, மற்ற இரு சிறுவர்களும் இவனை முறைக்க,

“பொய் சொல்றது பேட் ஹாபிட் விபு!” மிகநல்லவனாய் கூறிய நந்தா உள்ளே தள்ளியதோ ஏழாவது ஐஸ்கிரீம்.

“இவனும் செவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டான்!” என விபுவும் அவனை மாட்டிவிட்டு, தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டான்.

“வாலுப் பசங்களா! அம்மாக்கு தெரிஞ்சா கொட்டு வகையா விழும்டா!” அனைவரையும் கண்டித்த சிந்து,

“பெரிய மனுசங்களாட்டம் வேஷ்டி சட்டை போட்டுகிட்டு,  ஐஸ் கொட்டி வைச்சுருக்கீங்களேடா? இதோட போதும். எல்லாம் அந்த பக்கம் வாங்க!” என சிந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அத்த மீ குட்கேர்ள்! ஜில்ஜில் எக்கு வேவாம், நீயே குடி!” என தனது ஜிகர்தண்டாவை சிந்துவிற்கு கொடுத்தாள் நைநிகா.

“ஹேய் நைல்நதி! அம்மாக்கு ஃபீவர் வந்திடும் வேணாம் குடுக்காதே!” என சொல்லச்சொல்ல கேட்காமல் பிடிவாதமாக ஜிகர்தண்டாவை தன் அத்தைக்கு ஊட்டி விட்டாள் குட்டி மருமகள்.

அனலடிக்க ஆரம்பித்த மதிய வேளை, களைப்புடன் இருந்தவளுக்கு அதுவே தேவார்மிதமாக பட, வருவது வரட்டுமென மொத்தமாக நான்கு டம்ளர் ஜிகர்தண்டாவை அடுத்தடுத்து உள்ளே அனுப்பினாள் சிந்து.

நந்தாவும், ப்ரணவும் தங்களது பாசத்தை காட்டவென, முறையே ஐந்து ஐஸ்கிரீம்களை ஊட்டிவிட, சிந்தாசினியின் வயிற்றுக்குள் பாந்தமாய் சத்தமில்லாமல் தஞ்சமடைந்தன.

“போதும்டா பசங்களா! இப்பவே காதுகுள்ள கொய்ங்ன்னு கேக்குது எனக்கு” என இவள் தடுக்க,

“இன்னும் ஒண்ணே ஒண்ணு சாப்பிடு அத்தை… அதுக்குள்ள நான் பத்தாவது ஐஸ் சாப்பிட்டு போட்டியில வின் பண்ணிடுவேன்!” என்ற நந்தா ஐஸ்கிரீம் உள்ளே தள்ளுவதில் முதலிடத்திற்கு முன்னேறியிருந்தான்.

“யார் வின் பண்ணினான்னு நீதான் சொல்லணும் அத்தை! வின்னருக்கு என்ன ப்ரைஸ் குடுக்கப் போற?” நோகாமல் ப்ரணவ் கேட்க,

“அடிங்க படவா! நானா போட்டி வைக்க சொன்னேன்? எனக்கு அடிவாங்கிக் கொடுக்கன்னே இப்படி ஒரு ஜட்ஜ் போஸ்ட் குடுத்து, என்னையும் முழுங்க வச்சிட்டீங்களே!” என்றபோதே அவளின் பேச்சு நமநமத்த குரலுடன் வெளிவர ஆரம்பித்திருந்தது. 

“நைல்குட்டி அத்தை ஜில்ஜில் குடிச்சேன்னு பாட்டீஸ்கிட்ட சொல்லக் கூடாது. சரியா தங்கம்!” என மருமகளிடம் கோரிக்கை வைத்தவள்,

சிறுவர்களிடமும் திரும்பி, “உங்களுக்கும்தான்டா பெரிய மனுஷங்களா! யாருகிட்டயும் சொல்லாதீங்க” வேண்டுகோளை வைத்தாள் சிந்து.  

“நீயும் ஃபீவர் டேப்லெட் இப்பவே போட்டுக்கம்மா… இல்லன்னா சொல்லாமயே தெரிஞ்சுடும்!” பொறுப்பாய் அறிவுறுத்தினான் விபு.

சிறுவயதில் இருந்தே குளிர்ச்சியான பானமோ உணவோ, எதை எடுத்துக் கொண்டாலும் சிந்துவிற்கு அலர்ஜியை ஏற்படுத்த, இவள் வளரவளர, அதுவும் வளர்ந்து இந்த விஷயம் சிறுவர்களுக்கும் தெரிந்த ரகசியமாக இருந்தது.

குளிர்ச்சியை இவளின் உடல் எடுத்துக் கொண்டதும் மூன்றுநாள் காய்ச்சலும், தொண்டை கடுப்பும் அழையா விருந்தாளியாக வந்து தங்கிவிட்டுச் செல்லும் வழக்கமிருக்க, அதை மனதில் கொண்டே விபுவும் சிந்துவிடம் சொல்லி முடித்தான்.

ஒன்றுக்கு இரண்டு அம்மாக்களிடம் இதுநாள் வரையிலும் கொட்டு வாங்கிக்கொண்டு இருப்பவளின் அனுபவமும் பயமும் முன்கூட்டியே தன்னை உஷார்படுத்திக் கொள்ளும் வேலையை செய்தது.

ஜில்ஜில்லும், ஐஸ்கிரீமும் மனதையும் வயிற்றையும் நிறைக்க, பிள்ளைகளை கூட்டிக்கொண்டு, நல்லபெண்ணாக மண்டபத்தில் வந்து அமர்ந்தவளை, மேடையில் இருந்தே அழைக்க ஆரம்பித்தான் பாஸ்கர்.

“சிந்தாசினி… சிந்தாசினி… எங்கே போன? வா இங்கே…” என அழுத்தமான குரலில் உரிமையுடன் மேடையில் இருந்தே அழைக்க, இவளால் வரமாட்டேன் என்று மறுக்க முடியவில்லை.

“என்ன பொண்ணும்மா நீ? இத்தன வருஷம் கழிச்சு வந்தவன விட்டுட்டு, அங்கே இங்கே அசையலாமா?”

“கொஞ்ச நேரத்துல சல்லடை போட்டுட்டான் பாஸ்கர்?” பக்கத்துலயே போயி நில்லு!”

“இனிமேலாவது இப்டியே ஒத்துமையா இருங்க!” என கேலியாகவும், அன்பாகவும் அடுத்தடுத்து உறவினர்கள், பெரியவர்கள் சிந்துவிற்கு அறிவுறுத்த, பாஸ்கருக்கு உள்ளுக்குள் குஷியாகிப் போனது.

‘இதையே மெயின்டெயின் பண்ணுடா பாஸ்கி! இப்படியே இவளை இழுத்து வைச்சு மனசை மாத்த பாரு’ என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவன்,

”அங்கே உக்காந்து என்ன பண்ற சிந்தாசினி? இங்கே பெரியப்பா கூப்பிடுறாங்க வாடா!” அன்பொழுகிய குரலில் அழைக்க, இவளுக்கு தர்ம சங்கடமாகிப் போனது.

கோபமாய், காதலாய், ஆசையாய் எப்போதும் இவன் முழுப்பெயர் சொல்லியே அழைப்பான். அதில் அவனுக்கு அத்தனை சந்தோஷம். மனதிற்கு திருப்தியும் கூட…

வெகுவருடங்கள் கழித்து இந்த அழைப்பினைக் கேட்டவளுக்கு உள்ளுக்குள் ஏதோதேதோ எண்ண அலைகள் மூழ்கடிக்கத் தொடங்க, அடுத்தநொடி என்ன செய்வதென்று தெரியாமல் சிலையாய் சமைந்து விட்டாள்.

இவளின் அசையாநிலை பாஸ்கருக்கும் உள்ளுக்குள் மகிழ்வைத் தர, தன்னிலையில் இருந்து மாறாமல்,

“அட வாம்மா… எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?” என அவளிருக்கும் இடத்திற்கு வந்து, கைபிடித்து இழுத்துச் சென்றான்.

மண்டபத்திற்கு வந்ததில் இருந்தே தோள்தொட்டு அணைப்பதும், புகைப்படம் எடுக்கும் சாக்கில் இடையோடு கைபோட்டு நிற்பதும், தன்னை உரசியபடியே இவளை அமரவைப்பதும் என பாஸ்கரின் அட்டகாசங்கள் இன்னும் தொடர்ந்தே கொண்டே இருந்ததில், இவளுக்குள் உஷ்ணப் பெருமூச்சு வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.   

“இங்கேயே நில்லு சிந்தாசினி! நான் போயி குட்டீஸ் எல்லாரையும் கூட்டிட்டு வர்றேன்!” என்றவன்,

அஞ்சனாவிடம், “சனாகுட்டி! அத்தைக்கு டச்-அப் பண்ணி விடுடா… அவளுக்கு இதெல்லாம் தெரியாது” என்று மனைவியைத் தாங்க, இவளோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.  

“இன்னைக்கு ஃபங்ஷன் முடிஞ்சாலும் இவர் முடிக்க மாட்டாரு போல… இவர் என்ன இவர்? இனி உனக்கு மரியாதை இல்ல போடா…” வறுத்தெடுக்க ஆரம்பித்தவளின் மனம் அத்தனை எளிதில் அடங்கவில்லை.

‘திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்… இப்போ இவன் குடும்பத்தோட ஃபோட்டோ பிடிக்கலன்னு யார் அழுதா? இவ்வளவு ஆசையிருந்தா தனியா ஒருநாள் எல்லாருக்கும் விருந்து வைச்சு ஃபோட்டோ பிடிச்சுக்க வேண்டியதுதானே? பாவம் சின்னபொண்ணு சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கொரங்கா இடையில புகுந்து, கட்டம் கட்டுறான் பாவி!’ மனதிற்குள் கருவிக்கொண்டே மீண்டும் கீழே இறங்கி வர,

“சொல்பேச்சு கேட்க மாட்டியா? இங்கேயே நில்லுடி கொஞ்ச நேரம்…” என கணவனாக கடிந்து கொள்ள, இவளும் முறைக்க ஆரம்பிக்க,

“பாஸ்கி… போதும் பார்த்து நடந்துக்கோ!” பின்னாலிருந்து வந்த மிதுனாவின் எச்சரிக்கையில் அடங்கிப் போனான்.

சிந்துவின் நிலைமை மிதுனாவிற்கு நன்றாகவே புரிந்தது. இப்படியே விட்டால் எப்போதென்றாலும் இவள் வெடித்து விடுவாள் என்ற அபாயசங்கு உள்ளுக்குள் ஒலிக்க, உடன்பிறந்தவனை முயன்ற அளவு கட்டுப்படுத்தி வைக்க, அவனும் அமைதியாகிப் போனான்.

மனதிற்குள் மூண்ட ஆத்திரத்தை முணுமுணுப்பில் வெளிபடுத்திக் கொண்டே வந்த சிந்து, தயாவின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.

தன் அண்ணனின் அருகில் இருந்தால் மட்டுமே, கணவன் அடக்கி வாசிப்பான் என்பதை அறிந்து வைத்திருக்க, தயாவின் அருகே வந்தமர்ந்து விட்டாள்.

“என்னடாம்மா இங்கே வந்துட்ட…? உன்னை அங்கே தேட மாட்டாங்களா?” மொய் எழுதும் இடத்தில் அமர்திருந்தவன் கேட்க,

“எல்லாம் எப்பவோ முடிஞ்சதுண்ணே… இவர்தான் ஷோ காமிச்சுட்டு இருக்காரு!” கோபத்துடன் பல்லைக் கடிக்க, தயாவும் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.

அவனும் பாஸ்கரின் அடாவடியை பார்க்கத்தானே செய்கிறான். வெகுநாட்கள் கழித்து முதன்முதலாய் மனைவியுடன் கலந்து கொள்ளும் விழாவில் யாராக இருந்தாலும் ஒரு ஆட்டம் ஆடத்தான் செய்வார்கள்.

அதிலும் தன்னைதானே பெருமிதத்துடன் நிரூபித்துக் கொள்ளும் வகையில் அமைந்த சந்தர்ப்பத்தை யார்தான் விட்டு வைப்பர்?

“என்னண்ணா… மொய் எழுதினா ஏதாவது பெனிஃபிட் உண்டா?” என கேட்டவாறே குமரன் வர,

“வாடா… வாடா! நீ வந்த வேலையை முடிஞ்சதுன்னா, நம்ம வேலையை கவனி… நோட்டுல பேர் எழுதினா, தேங்காய், பழம், இனிப்பு அடங்கிய மஞ்சப்பை பார்சல் உண்டு” எனச் சொல்ல,

“சூப்பர்! என் குடும்பத்துல இருக்குற எல்லார் பேரையும் நோட்டுல எழுதி, அத்தனை பார்சல் குடுங்க முதல்ல…”

“எழுதலாமே! ஆனா பாரு… நீ கையில குடுத்தாலும் சரி, ஜீபே, ஃபோன்பே பண்ணினாலும் சரி, ஐநூறுக்கு குறைவா கொடுத்தா நோட்டுல பேர் எழுதாம, பிளாக்ல வாங்கி வைக்கச் சொல்லி மேலிடம் உத்தரவு போட்டிருக்கு… அதனால எவ்ளோ பேரு இருக்காங்களோ, அத்தனை ஐநூறு எண்ணி வைக்குற… நான் என்னோட தேங்காய் பையை உனக்கு போனாப் போகுதுன்னு எக்ஸ்ட்ரா குடுக்க பாக்குறேன்” என்று பேசிக்கொண்ட நேரத்தில் சிந்து தனது கோபத்தை மறந்து சிரிக்கத் தொடங்கி விட்டாள்.

“என்ன சிரிப்பு உனக்கு? சொன்னா நானும் சிரிக்க மாட்டேனா?” கேட்டபடி வந்த பாஸ்கர், மனைவியின் அருகில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர, ‘அடஅல்பமே’ என்ற பாவனையை மட்டுமே தந்தாள் சிந்து.

“உன் ஆட்டம் களைகட்டுது மாப்ளே! பார்த்து நடந்துக்கோ… கண்ணு பட்டுறப் போகுது…” பாஸ்கரைப் பார்த்து தயா கிண்டலடிக்க,

“அந்த வேலையெல்லாம் உங்க வீட்டம்மா டிபார்ட்மெண்ட் மாமா!” என்றவன் அடங்காமல் தனது அலைபேசியில் வரிசையாக செல்ஃபியை சொடுக்கிக் கொண்டே வந்தான்.

“மாமா, குமரா இந்த பக்கம் பாருங்க!” என இருவரையும் பார்க்க வைத்து, தொங்கவிட்டுக் கொண்ட சிந்துவின் முகத்தையும் தூக்கி பிடித்தே,

“கொஞ்சம் சிரி செல்லம்” என உத்தரவிட்டே பல படங்களை எடுத்து தள்ளி முடித்தான். அந்த நேரத்தில் மனைவியின் உடல் லேசாய் சுட,

“காய்ச்ச அடிக்குதா சிந்தாசினி?” எனக் கேட்டவனின் கை, மனைவியின் நெற்றி, கழுத்து, கரம் என தடையில்லாமல் பயணிக்க, அவளுள் இறங்கிய ஜில்ஜில், தனது வேலையை கனகச்சிதமாக செய்ய ஆரம்பித்திருந்தது.

 

Leave a Reply

error: Content is protected !!