தீயாகிய மங்கை நீயடி – 08

ei34NQ073963-7e20a3d6

தீயாகிய மங்கை நீயடி – 08

அருந்ததி மற்றும் அவளுடன் சேர்ந்து வசித்து வந்த ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வதிவிடங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்ற வேளை, அவசர அவசரமாக புறப்பட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்த வைஜயந்தி தன் கையிலிருந்த பணத்தை அங்கேயிருந்த ஒவ்வொரு நபருக்கும் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

“வைஜயந்தி க்கா! என்னக்கா இதெல்லாம்? இவ்வளவு பணம் எப்படி?” அங்கே நின்று கொண்டிருந்த திருநங்கைகளில் ஒருவர் வைஜயந்தியைப் பார்த்து வினவ,

அவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டவர், “இது எந்தவொரு தப்பான வழியிலும் வந்த பணம் கிடையாது மலர், இது சின்ன வயதிலிருந்தே நான் பல வேலைகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக என்னோட தேவைக்காக சேர்த்து வைத்த பணம். இப்போ அந்த பணத்தைத் தான் உங்க எல்லோருக்கும் தர்றேன்” என்று கூற,

இன்னொருவரோ, “உங்க தேவைக்கு வைத்திருந்த பணத்தை எங்க எல்லாருக்கும் கொடுத்துட்டு நீங்க என்னக்கா பண்ணப் போறீங்க?” என்று கேட்க, அவரோ அமைதியாக தன் கையிலிருந்த எல்லாப் பணத்தையும் சரி சமமாக எல்லோருக்கும் பகிர்ந்தளித்து கொடுக்க ஆரம்பித்தார்.

“எனக்குன்னு என்ன தேவை வந்தாலும் என்னைப் பார்த்துக் கொள்ள என் பொண்ணு அருந்ததியும், எனக்கு கூடப் பிறக்கலேன்னாலும் என்னையும் உங்க உடன்பிறப்பாக நினைக்கும் இத்தனை பேரும் இருக்கும் போது எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகுது?” வைஜயந்தி புன்னகை முகமாக அங்கிருந்த அனைவரையும் பார்த்து வினவ, அந்த இடமோ சட்டென்று அமைதியில் நிறைந்து போனது.

எங்கேயோ ஒரு இடத்தில் பிறந்து, வளர்ந்து தங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தினால் குடும்பத்தினாலும், சமூகத்தினராலும் ஒதுக்கப்பட்டு செல்வதற்கு இடம் இல்லாமல், வாழ்வதற்கு வழி தெரியாமல் தவிப்போடு தெருவில் அலைந்து திரிந்த வேளை தங்களையும் சக மனிதனாக மதித்து, ‘இனிமேல் நீங்களும் என் குடும்பம் தான்’ என்று சொல்லி தங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்த வைஜயந்தி அன்று சொன்ன வார்த்தைகளை எந்தளவுக்கு ஆத்மார்த்தமாக உணர்ந்து சொல்லியிருக்க கூடும் என்பதை அங்கிருந்த அனைவரும் இன்று நன்றாகப் புரிந்து கொண்டனர்.

ஒரே வயிற்றில் பிறந்த உறவுகளே தன் உடன்பிறப்புக்கு ஒரு சிறு உதவி செய்யத் தயங்கும் வேளை, முன்பின் தெரியாத முகங்களுக்காக இத்தனை தூரம் போராடும் வைஜயந்தியை அங்கேயிருந்த அனைவரும் தங்கள் அனைவருக்கும் முதன்மையானவராக நினைப்பதில் எந்தவொரு மாற்றமும் இருக்க முடியாது.

பல மணி நேரப் போராட்டத்தின் பின்னர் மெல்ல மெல்ல அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கிக் கொள்ள தங்கள் இருப்பிடங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டவர்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல முனைந்த போது திடீரென அந்த இடத்தில் பல வாகனங்கள் வந்து நிறைய ஆரம்பித்தது.

‘இப்போது தானே எல்லாப் பிரச்சினைகளையும் முடித்தோம், அதற்குள் அடுத்த பிரச்சினையா?’ என்கிற கலவரமான எண்ணத்துடன் அங்கேயிருந்த மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவரும் வைஜயந்தியின் பின்னால் சென்று நின்று கொள்ள, வைஜயந்தி எப்போதும் போல நிமிர்ந்த நடையுடன் முன்னே நடந்து செல்ல ஆரம்பித்தார்.

அவர் எதிர்பார்த்திருந்ததைப் போலவே கதிர் மற்றும் அவனது தந்தை மாணிக்கம் மறுபடியும் தங்கள் ஆட்களுடன் வந்திறங்கி நிற்க, கூட்டத்தை விலக்கிக் கொண்டு தன் அன்னையின் அருகில் வந்து நின்ற அருந்ததி, “நீயெல்லாம் ஒரு மனிஷனா? எதற்காக என் மேலே இருக்கும் வன்மத்தை எந்த தப்புமே செய்யாத இந்த அப்பாவி ஜனங்கள் மேலே காட்டுற? உன்னோட இந்த வெறிக்கு ஒரு முடிவே கிடையாதா? இன்னும் எத்தனை தூரம் எங்க எல்லோரையும் காயப்படுத்தப் போற? சொல்லுடா, இன்னும் எவ்வளவு தூரம் போவ?” என்றவாறே கதிரின் சட்டைக் காலரைப் பற்றி அவனது கன்னத்தில் ஓங்கி அறைய, மாணிக்கம், வைஜயந்தி மட்டுமின்றி அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களுமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

“ஏய்! உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் பையன் மேலேயே கை வைப்ப? உங்க எல்லோரையும் இதே இடத்தில் மண்ணோடு மண்ணாக்கிடுவேன், ஜாக்கிரதை” என்றவாறே மாணிக்கம் அருந்ததியை தள்ளி விடப் பார்க்க,

அவரது கையையும் கோபமாக தட்டி விட்டவள், “இப்படி எந்த தப்புமே செய்யாத மக்களை அழித்து அதை வீரம்ன்னு சொல்லித் திரியும் உன்னை மாதிரி ஆளுங்களே தைரியமாக இருக்கும்போது, அடுத்தவங்க எங்களுக்கு கஷ்டத்தையே கொடுத்தாலும் அவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற எங்களுக்கு தைரியம் இருக்கக் கூடாதா?” என்று கேட்க, அருந்ததியின் பேச்சில் மாணிக்கம் வாயடைத்துப் போய் நின்றார்.

“டேய் கதிரு! என்னடா இந்தப் பொண்ணு இந்தப் பேச்சுப் பேசுறா?” மாணிக்கம் ரகசியமாக கதிரின் காதில் வினவ,

அவரைக் கோபமாகத் திரும்பிப் பார்த்தவன், “இது அதிகமாக பேசுதுன்னு வேணும்னா சொல்லுங்க, ஆனா இதைப் பொண்ணுன்னு மட்டும் சொல்லாதீங்க” அருந்ததியை மேலிருந்து கீழாக அருவருப்பாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டே கூற, வைஜயந்தி கோபத்துடன் தன் கையை இறுக்கமாக மூடிக் கொண்டார்.

“ஆமா நான் பொண்ணும் இல்லை, ஆணும் இல்லை தான். அதை சொல்லுவதில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை, வருத்தமும் இல்லை. ஏன் தெரியுமா? உன்னை மாதிரி ஆளுங்க நான் ஆம்பளைன்னு ஒரு போர்வையைப் போர்த்திட்டு எல்லாத் தப்பையும் பண்ணிட்டு அந்த போர்வையை ஒரு சாக்காக சொல்லிட்டு தப்பிச்சு ஓடுறீங்க, அப்படி ஒரு தவறான அடையாளம் எங்களுக்கு தேவையில்லை, நாங்க இங்கே திருநங்கைகளாகவோ, திருநம்பிகளாகவோ, இடையிலிங்கத்தைச் சேர்ந்த ஆட்களாகவோ இருந்துட்டு போறோம். அதுவே எங்களுக்கு மனப்பூர்வமான சந்தோஷத்தை தரும்” அருந்ததி தைரியமாக அங்கிருந்த ஒட்டுமொத்த நபர்களையும் தன் பார்வையாலும், பேச்சாலும் அடக்கி வைத்திருக்க கதிர் மற்றும் மாணிக்கம் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டு நின்றனர்.

“அப்பா, வாங்க போகலாம். இவ இல்லை இல்லை இது எந்த தைரியத்தில் இப்படி எல்லாம் பேசுதுன்னு எனக்குத் தெரியும். பெரிய வக்கீல் ஆகணும்ன்னு தானே காலேஜ் வந்து சேர்ந்தா, என்னை மீறி எப்படி இது வக்கீல் ஆகுதுன்னு பார்க்கிறேன். வாங்க போகலாம்” கதிர் அருந்ததியையும், வைஜயந்தியையும் முறைத்துப் பார்த்துக் கொண்டே தங்கள் வண்டியில் ஏறி புறப்பட்டுச் சென்று விட, அத்தனை நேரமும் தைரியமாக நின்று கொண்டிருந்த வைஜயந்தி இறுதியாக கதிர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு சிறு அச்சத்துடன் அருந்ததியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.

“அருந்ததி, அந்த பையன் சொல்லிட்டு போற மாதிரி உன் படிப்பில் ஏதாவது நாச வேலை செய்துடுவானா?”

“வைஜயந்தி ம்மா, நீங்க எதற்காக இவ்வளவு பதட்டம் ஆகுறீங்க? குரைக்கிற நாய் கடிக்காதுன்னு சொல்லுவாங்க தெரியுமா? அதேபோல்தான் இவங்களும் அவங்களுக்குள்ள இருக்கும் அந்த வெறியினால் இப்படி எல்லாம் கத்திட்டுப் போறாங்க. எதுவோ எதைப் பார்த்து கத்திட்டுப் போகுதுன்னு விட்டுத் தள்ளுங்கம்மா. இத்தனை நாள் நான் எந்தவொரு இலட்சியத்திற்காக தவமாக தவமிருந்து காத்துட்டு இருக்கேனோ அந்த இலட்சியத்தை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன், ஆனா அந்த எல்லை நிச்சயமாக யாரையும் காயப்படுத்தாது” அருந்ததியின் தெளிவான பேச்சைக் கேட்டு தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட வைஜயந்தி நிம்மதியாக பெருமூச்சு விட்டபடியே தங்கள் வீட்டை ஒழுங்கமைக்கும் வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.

வைஜயந்தி முகத்தில் சிறு நிம்மதி குடியிருப்பதைப் பார்த்து தன்னைத் தேற்றிக் கொண்ட அருந்ததி, ‘இந்த சமூகத்தாலும், குடும்பத்தாலும் இத்தனை வருடங்களாக நாங்க எல்லோரும் நிறைய நிறைய கஷ்டங்களை அனுபவிச்சுட்டோம், இனிமேல் அந்தக் கஷ்டம் யாருக்கும் வரக் கூடாது, இனிமேல் வரப்போகும் திருநங்கை, திருநம்பிகள், இடையிலிங்கத்தினர் யாருக்கும் வரக் கூடாது. இனிமேல் எங்களுக்கும் எல்லா உரிமைகளும் இருக்குன்னு இந்த ஊரில் இருக்கும் எல்லா நபர்களுக்கும் நான் புரிய வைப்பேன். மற்ற மற்ற இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் அவங்களுக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும் நாங்க வாழும் இந்தப் பிரதேசத்தில் எங்களுக்கு எந்தவொரு அடிப்படை உரிமைகளும் இலகுவாக கிடைத்தது இல்லை, இனிமேல் அந்த நிலமை மாறணும், நான் கண்டிப்பாக அதை மாற்றியே தீருவேன்’ என்று தன் மனதிற்குள் ஒரு உறுதியான முடிவை எடுத்துக் கொண்ட அருந்ததி வைஜயந்தியுடன் இணைந்து தங்கள் வீட்டை ஒழுங்கமைப்பதில் உதவி செய்ய ஆரம்பித்தாள்.

அதன்பிறகு ஒன்றிரண்டு வாரங்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நகர்ந்து சென்றிருக்க, அன்று அருந்ததியின் இறுதிப் பரீட்சை முடிவுகள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொலைத்தொடர்பு சாதன வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் வீட்டிலிருந்த படியே மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்க, பெரும் ஆவலுடன் தனது பரீட்சை முடிவுகளைப் பார்க்க அருந்ததி முயல அவளால் அவளது பரீட்சை முடிவுகளைப் பார்க்கவே முடியவில்லை.

பலமுறை முயன்று பார்த்தவள் அது முடியாது போகவே நேரடியாக தங்கள் கல்லூரிக்குச் சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக தனது கல்லூரியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றாள்.

அவளைப் போலவே அவளுடன் படித்த இன்னும் ஒரு சில மாணவர்கள் தங்களது பரீட்சை முடிவுகளும் தெரியவில்லை என்று கூற, அப்போதுதான் அருந்ததிக்கு சிறிது ஆசுவாசமாக இருந்தது.

ஏனெனில் கதிர் அன்று சொன்னது போல எதுவும் செய்து விட்டானோ என்கிற பயமும் அவளுக்குள் இருந்தது தான் காரணம்.

ஒரு வழியாக காத்திருந்து தனது பரீட்சை முடிவுகளைப் பார்த்தவள் தான் எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பாக தேர்ச்சி பெற்றிருக்க, அந்த நல்ல செய்தியை உடனடியாக வைஜயந்தியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் தன் வீட்டை நோக்கிப் புறப்படலாம் என்று எண்ணிக் கொண்டு திரும்பிய தருணம் அவளை உரசிக்கொண்டு ஒரு கார் வந்து நின்றது.

அந்தக் காரின் உரிமையாளர் யார் என்பது அருந்ததிக்கு ஏற்கனவே தெரிந்திருக்க, அதைக் கடந்து செல்ல அவள் எத்தனித்த தருணம் கதிர் வேகமாக அவள் வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.

“என்ன வக்கீல் மேடம்? ஐயோ! சாரி, சாரி. நீ வக்கீல் சாரா? மேடமா?” கதிரின் கேள்வியில் அருந்ததி அவனை முறைத்துப் பார்க்க,

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவன், “உனக்கே அது தெரியாது இல்லை, சாரி. அது சரி, என்ன இப்போ எல்லாம் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறீங்க? ஒருகாலத்தில் என்னைப் பார்க்காமல் இருக்கவே முடியாதுன்னு எப்படி எல்லாம் ஃபீல் பண்ண, அதெல்லாம் மறந்து போச்சா?” என்று கேட்க,

அவளோ, “நான் எதையும் மறக்கல மிஸ்டர். கதிர், இன்னும் சொல்லப்போனால் அந்த ஒவ்வொரு விடயங்களும் தான் எனக்கு இன்னும் இன்னும் வாழ்க்கையில் முன்னேறணும்னு உத்வேகத்தைக் கொடுக்கிறது. அதோடு நீ ஒவ்வொரு தடவையும் என்னோட அடையாளத்தை சொல்லி சொல்லி என்னை அவமானப்படுத்துவதாக நினைக்குற இல்லையா? உண்மையை சொல்லப் போனால் அது ஒண்ணும் என்னை பலவீனப்படுத்தல, எனக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கையை இன்னமும் அதிகரிக்கத்தான் செய்கிறது, அதனால நீ பண்ணிட்டு இருக்கும் இந்த மாபெரும் உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்று விட்டு அவனது அழைப்பைப் பொருட்படுத்தாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தாள்.

நாளுக்கு நாள் அருந்ததியின் பேச்சில் தெரியும் தைரியத்தைப் பார்த்து சிறிது அரண்டு போன கதிர், ஒரு சில நொடிகளுக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு, “நீ எவ்வளவு தூரம் வேணும்னாலும் போ அருந்ததி, ஆனா உன்னை மாதிரி ஆளுங்களை நிச்சயமாக எங்களுக்கு சரிசமமாக நான் வரவே விடமாட்டேன்” அவள் சென்ற வழியைப் பார்த்து சத்தமிட்டபடியே தன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.

**********
அதன் பிறகு நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி மின்னல் வேகத்தில் நாட்கள் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.

அருந்ததி அவள் சிறு வயதுக் கனவுப்படியே ஒரு வழக்கறிஞராக உருவாகியிருந்தாலும் அவளையும், அவளது திறமையையும் நம்பி எந்தவொரு நபரும் அவளை தங்கள் வழக்குகளை வாதாட அழைக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு நாளும் பல அவமானங்களையும், பல கேலிப் பேச்சுக்களையும் கடந்துதான் அவளது வாழ்க்கை காலம் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

மூன்றாம் பாலினத்தவர்களாக இந்த சமூகத்தில் வாழ்வது அத்தனை பெரிய தவறான காரியமா? என்பது போலத்தான் அவளை சுற்றியிருந்த நபர்களின் பேச்சுக்களும், நடத்தைகளும் அவளைத் தினமும் வதம் செய்து கொண்டிருந்தது.

தன் நினைவு தெரிந்த நாளில் இருந்து அவமானங்களை மட்டுமே சந்தித்து வளர்ந்தவளுக்கு இப்போது நடக்கும் அவமானங்கள் ஒன்றும் அத்தனை பாரதூரமானதாக இருக்கவில்லை.

என்றாவது ஒரு நாள் தன் திறமைகளை நிரூபிக்க தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அருந்ததி நம்பியிருக்க, அது நடக்கும் நாள் எப்போது என்றுதான் தெரியவில்லை.

எப்போதும் போல அன்றும் அருந்ததி தனது வேலைக்காக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த நேரம் அவளது அலுவலக அறைக்கு சற்றுத் தள்ளி ஒரு வாலிபன் அழுது கொண்டிருக்க, ஏனோ அவனைப் பார்த்ததும் அவளது மனம் சட்டென்று கலங்கிப் போனது.

அந்தப் பையன் அழுவதைப் பார்க்கும் போது அவளுக்கும் கண்கள் கலங்குவது போல இருக்க, தனக்கு என்ன ஆனது? என்று சிந்தித்தபடியே அந்தப் பையனின் அருகில் சென்றவள் அவனுக்கு உதவி செய்வதா? வேண்டாமா? என்று சிந்தித்தபடியே, “தம்பி, யாருப்பா நீ? எதற்காக இப்படி அழுதுட்டு இருக்க?” என்று கேட்க,

அவளை நிமிர்ந்து பார்த்த அந்த வாலிபன், “என்னை எங்க வீட்டில் இருந்து விரட்டி விட்டுட்டாங்க அக்கா, எனக்கு எங்கே போறது? என்ன பண்ணுறதுன்னு தெரியலை” என்று கூற, அவளுக்கோ அவனது கலங்கிய கண்களைப் பார்த்து துக்கம் தொண்டையை அடைப்பது போல இருந்தது.

‘முன்பின் தெரியாத ஒரு நபருக்காக எதற்காக நான் இவ்வாறு கலங்கிப் போக வேண்டும்?’ என்ற யோசனையுடனேயே அந்தப் பையனை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தவள் அவனுக்கு குடிப்பதற்கு நீர் கொடுத்து அவனை சிறிது நிதானத்திற்கு வரச் செய்தாள்.

“உன் பேரு என்ன? நீ எந்த ஊரு? உனக்கு என்ன ஆச்சு? உன்னைப் பற்றி எல்லாவற்றையும் தெளிவாக சொல்லு. அதற்கு அப்புறம் உனக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பார்க்கிறேன். அதோடு நானும் ஒரு வக்கீல் தான், என்னை நம்பி உன் பிரச்சினையை சொல்லு, நிச்சயமாக என்னால் முடிந்த உதவியை நான் கண்டிப்பாக செய்வேன்” என்று அருந்ததி கூற,

கண்ணீர் மல்க அவளின் கையைப் பிடித்துக் கொண்ட அந்தப் பையன், “ரொம்ப நன்றிக்கா. உங்களைப் பார்க்கும் போது எனக்கு கூடப் பிறந்த அக்கா மாதிரியே இருக்கு” என்று கூற, அருந்ததியோ அவனைப் பார்த்து சிறு புன்னகையுடன் அவனைப் பற்றி கூறும்படி கேட்டுக் கொண்டிருக்க, அவன் சொன்ன நிகழ்வுகளோ அவளை மொத்தமாக நிலைகுலையச் செய்திருந்தது……

 

Leave a Reply

error: Content is protected !!