தூர எறிந்து விடு மனமே..

தூர எறிந்து விடு மனமே..

  ‘இன்று மதியம் இளம்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு’ என தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னால் வரிசையாக போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்து, தன் மாமியாரின் தோளில் சாய்ந்து, தன் மகளை நினைத்து கதறிக்கொண்டிருந்தார் லலிதா,  ரம்யாவின் அம்மா.

         ஆசிட் அமிலத்தின் தாக்கத்தால் தன் இடது பக்க கன்னத்திலிருந்து கழுத்து வரையான  தோல் பொசுங்கி இருக்க, மயக்க நிலையில் இருந்தாள் ரம்யா. அவளை சுற்றி வைத்தியர்களும் தாதிமார்களும் அவளுக்கான சிகிச்சையை செய்துக்கொண்டிருந்தனர்.

          சிகிச்சை முடிந்து வெளியே வந்த வைத்தியர் கண் திறந்ததும் போய் பார்க்குமாறு கூறிவிட்டு செல்ல, இரண்டு மணி நேரம் கழித்து தன் சிப்பி கண்களை மெதுவாக திறந்தாள் அந்த பத்தொண்பது வயது பேதை. அதை கவனித்த தாதி வெளியில் வந்து லலிதாவிடம் சொல்ல, ஒரு வித பதட்டத்தில் உள்ளே நுழைந்தார் லலிதா.

         உள்ளே நுழைந்தவள் தன் மகளின் நிலைக்கண்டு உள்ளுக்குள் கதறினாலும், முகத்தை முடிந்தளவு சாதாரணமாக வைத்துக்கொள்ள முயன்றாள். சிறுவயதிலிருந்து பல கஷ்டங்களை தாங்கி, கடந்து வந்த லலிதா இந்த வேதனையையும் தன் மனத்திடத்தால் முகத்தில் காட்டாது சாதாரணமாக இருக்க முயன்றாலும், பெற்ற பிள்ளைக்கு என்று வரும் போது அவரின் மனதைரியம் கூட காற்றில் பறந்து சென்றது எனவோ உண்மை தான்..

        மகளின் அருகில் சென்றவர் அவளின் தலையை மெதுவாக கோதி, அப்பெயருக்கு வலித்து விடுமோ என்றளவுக்கு “ரம்யா” என்று மெதுவாக அழைத்தார். அம்மாவின் குரலில் கண்ணை திறந்த ரம்யா, லலிதாவை கண்ட மறுநொடி “ரொம்ப எறியுதுமா, தாங்க முடியல” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

பிறகு ஏதோ தோன்றியவளாக, “அம்மா, உங்க ஃபோன கொடுங்க” என்று ரம்யா கேட்க, அதில் ஒருநிமிடம் பதட்டமடைந்த லலிதா பிறகு நிதானித்து, ‘என்ன நடந்தாலும் அவளுக்காக நான் இருக்கிறேன்’ என்று உணர்த்த முடியும் என்ற நம்பிக்கையில், தனது தொலைப்பேசியை அவளிடம் கொடுத்தார்.

அதில் தனது முகத்தை பார்த்த ரம்யா கையிலிருந்ததை தூர எறிந்து, தன் தாயினை கட்டி அணைத்து, “அம்மா இது நான் இல்லை மா, என்னாலயே என் முகத்தை பார்க்க முடியல, இனிமே இந்த முகத்தோட உலகத்தை எப்படிமா சந்திப்பேன்!” என்று கதறி அழ, தன் மகளை தேற்ற வழியறியாது அவளை அணைத்துக்கொண்டு, உள்ளுக்குள் கதறினார் அந்த தாய்..

        அடுத்த நாள் ரம்யா கண்விழித்த செய்தியில் அவளை விசாரிக்க காவல்துறையை சேர்ந்த இருவர் வர, அவர்கள் எவ்வளவு கேட்டுப்பார்த்தும் மௌனத்தையே பதிலாக அளித்தாள் ரம்யா. அவர்களும் ஒரு கட்டத்தில் முடியாமல் லலிதாவை பார்க்க, தான் கேட்பதாக சைகையில் கூறியவர் தன் மகளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடி விட்டவாறு கேட்க,
         
         “நான் சொன்னா மட்டும் நான் அனுபவிச்ச அதே வலிய அவங்க அனுபவிச்சிருவாங்களாமா? இல்லல்ல!” என்று கூறிய மகளை பார்த்த லலிதா அவளுடைய கையை அழுத்தமாக பற்றி , “நீ சொல்லு மா அவங்களுக்கான தண்டனை கிடைக்கும் உன் அம்மா கிடைக்க வைப்பேன்” என்று உறுதியாக கூற, அதில் சற்று தெளிந்தவள் கண்களில் கோபத்துடன் நடந்ததை கூறத்தொடங்கினாள்.

        ரம்யா தற்போது தான் தன் உயர்தர பரீட்சை முடித்து தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், அவளுடைய பரீட்சை பெறுபேறு பல்கலைக்கழக இலவச நுழைவுச்சீட்டை பெறும் வகையில் இருந்ததால் தனது ஆசிரியரின் அறிவுரைக்கிணங்க தன் பள்ளிக்கூடத்திற்கு சென்று இணையத்தின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விட்டு வீட்டுக்கு வந்துக்கொண்டிருக்கும் வழியில் அவளை வழிமறைத்தான் அவன்.

       அந்த ஊரில் வசதி வாய்ப்புக்கள் கொண்ட பெரிய பணக்காரரின் மகன்.ரம்யா பள்ளிக்கூடம் செல்லும் காலத்திலிருந்தே அவளை பின்தொடர்வது, தொல்லை செய்வதுமாக இருந்தவன் இன்று அதிகப்படியாக அவள் கையைப்பிடித்து தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சினை செய்ய, ஒருகட்டத்தில் கோபத்தில் அவனை அறைந்தே விட்டாள் ரம்யா.

         அவனை எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் மனம் சற்று படபடப்பாக இருந்தாலும், பின் ‘இனி அவன் தொல்லை இல்லை’ என்ற நம்பிக்கையில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆனால், அவனோ அவள் மேல் உள்ள கோபத்திலும், தான் என்ன செய்தாலும் தன் வீட்டினர் தன்னை மீட்டிடுவர் என்ற நம்பிக்கையிலும் ரம்யா தன் நண்பியை பார்த்து விட்டு தன் வீட்டுக்கு வரும் சமயம் தன் முகத்தை மூடியவாறு இருசக்கர வாகனத்தில் வந்து அவளுடைய முகத்தில் ஆசிட்டை அடித்து விட்டு அவ்விடத்திலிருந்து பறந்து விட்டான். 
  
         என்று அச்சம்பவத்தை தன் மனக்கண்முன் கொண்டு வந்து கண்கள் கலங்க கூறியவளை பார்த்த லலிதாவிற்கு, ‘தன் மகள் தன்னிடம் அவளுடைய பிரச்சினையை சொல்லுமளவிற்கு தான் சுதந்திரம் கொடுக்கவில்லையோ!’என்ற குழப்பமும், கூட வேதனையும்  தொற்றி கொண்டது. பின் வந்தவர்கள் சென்றுவிட, தன் மகளை சமாதானம் செய்து உறங்க வைத்தார் லலிதா.

         இதோ ஒருமாதம் கடந்த நிலையில் வீட்டில் தன் முன் அழுததற்கு அடையாளமாக கண்ணீர் கோடுகள் தெரிய, உறங்கிக் கொண்டிருக்கும் மகளை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் லலிதா.

      இந்த ஒரு மாதத்தில் அவள் தேறியிருந்ததால் ரம்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தவர் இந்நிலைக்கு காரணமானவர்கள் மேல் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவர்களிடம் முறையிட, அந்த பணத்துக்கு பேர் போன அதிகாரிகளோ, “அவர்கள் பெரிய  இடம், அதனால் நடவடிக்கை மேற்கொள்வதில்
சிக்கல்” என்று  சொல்லி விட்டனர்.

இதை எல்லாம் யோசித்த லலிதா, பின் ஒரு முடிவு எடுத்தவராக அறையை விட்டு செல்ல முற்பட, தன் மகளின் “எங்க போறீங்க அம்மா? ” என்ற குரலில் சற்று நின்று திரும்பி பார்த்தார். தன் மகளை பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று மனதில் தோன்ற, ரம்யாவின் அருகில் அமர்ந்து, அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் லலிதா.

     “ரம்யாமா இன்னும் எவ்வளவு நாள் உன் நிலைமைய நினைச்சி ராத்திரி யாருக்கும் தெரியாம அழுவடா…! இன்னும் எவ்வளவு நாள் இந்த அறைக்குள்ளயே முடங்கி கிடக்க போற? இந்த உலகத்தில சாதிக்க தன்னம்பிக்கையும், மனதைரியமும், இலட்சியத்த அடையுறதுக்கான திறமையும் இருந்தாலே போதும்,  இந்த முக அழகு தேவையே இல்லை. இந்த உலக மக்கள் உன்னை பார்க்குற பார்வைக்கு நீ பயப்படுறன்னா அதவிட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை. நீ தப்பானவளா இருந்தா அவங்க பார்வைக்கு கூனிகுறுகி நிக்கலாம். ஆனால், நம்ம மேல தப்பில்லாத போது எவனோ ஒருத்தனோட செயலால நமக்கு கிடைக்கிற பார்வைய ஒரு சின்ன சிரிப்போட கடந்து போகனும்.

      தப்பு செய்தவனே வெளில முகத்த தைரியமா காட்டும் போது நீ ஏன்மா உன்ன நீயே உனக்குள்ள மறைச்சிக்குற? பார்க்குறவங்க பரிதாபமா பார்க்குறாங்களோ, அருவருப்பா பார்க்குறாங்களோ அந்த பார்வைய உன் இலட்சியத்திற்கு தடையா வச்சிராத. உன்னோட வாழ்கையில கடைசி வரை உனக்காக இருக்கப்போறது நீ மட்டும் தான். இந்த அம்மா கூட உயிர் இருக்கிற வரை உனக்காக இருப்பேன் அதுக்கப்றம், நீ தான் தனியா இந்த உலகத்தை சந்திக்கனும்.

       எதையும் தனியா சந்திக்க பழகு. இதே ஆசிட் வீச்ச வாங்கின லக்ஷ்மி அகர்வால் இப்போ ஊக்கமூட்டும் பேச்சாளராக, பெண்களுக்கு ஓர் உதாரணமா இருக்காங்க. காலம் யாருக்காகவும் நிக்காது, இதை கடந்து வா, உன் லட்சியத்திற்காக போராடு, உனக்குள்ள இருக்குற மனதைரியத்த வெளில கொண்டு வா. உனக்காக எப்போவும் உன் அம்மா இருப்பேன்”

        என்று கூறிய லலிதா ரம்யாவின் பதிலை கூட எதிர்பாராது அவளை தன் மாமியாரின் பொறுப்பில் விட்டு வெளியேற, போகும் தன் அம்மாவையே கண் இமையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

அன்று இரவு,

       ரம்யாவின் நிலைக்கு காரணமானவனோ தன் நண்பர்ளுடன் சந்தோஷமாக ஊர் சுற்றிவிட்டு தனியாக காரில் வர, அவன் வரும் வழியில் தன் முகத்தை மூடியவாறு ஒரு பெண் எதிரே நின்றிருந்ததில் காரை நிறுத்தியவன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே எட்டி பார்த்து நகர சொல்ல, அவள் நகராமல் அவனையே அழுத்தமாக பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

         கோபம் கொண்ட அவன் காரிலிருந்து இறங்கி அவளை திட்டிக்கொண்டே வர, அடுத்தகணம் தன் கையில் வைத்திருந்த ஆசிட்டை அவன் எதிர்பாராத சமயம் அவன் முகத்தில் வீசினாள் அவள். அவனோ வலி தாங்காது கதறிக்கொண்டு கீழே விழுந்து துடிக்க, அவன் முகம் முழுவதும் பொசுங்கிக்கொண்டே  செல்வதையும், அவன் துடிப்பதையும் பார்த்தவாறு தனது முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தார் லலிதா.

        சுற்றி இருந்தவர்கள் அங்கு கூடி காவல்துறையினருக்கு செய்தி சொல்லியும், லலிதா அவ்விடத்திலிருந்து நகரவில்லை. ‘என் மகளும் இப்படி தானே துடித்திருப்பாள், அனுபவி!’ என்ற ரீதியில் அவனையே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தார் அவர். மருத்துவ அவசர ஊர்தி வந்து அவனை ஸ்ட்ரெச்சரில் ஏத்திக்கொண்டு செல்ல, பொலிஸால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் லலிதா.

ஆனால், அவள் முகத்தில் பயமோ, பதட்டமோ தெரியவில்லை. தன்மகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டேன் என்ற மனநிறைவே இருந்தது.

       இச்செய்தி லலிதாவின் குடும்பத்தினருக்கும் கேள்விபட, ‘தன்னால் தான் தன் அம்மாவுக்கு இந்த நிலைமை’ என்று ரம்யா துடித்தே விட்டாள்.பொலிஸ் விசாரனையில் லலிதா இருந்தமையினால், லலிதாவின் குடும்பத்தினருக்கு அவளை பார்க்கவும் முடியவில்லை.

     அன்று நீதிமன்றத்தில் லலிதாவின் குற்றம் தொடர்பாக அவள் கூண்டில் ஏற்றப்பட, நீதிபதி கேட்கும் எல்லா கேள்விளுக்கும் “ஆம் நான் தான் செய்தேன்” என்று முகத்தில் எந்தவித சலனமுமின்றி, பயமுமின்றி அழுத்தமாகவே பதிலுரைத்தார் லலிதா. ‘எதற்கு’ என்ற கேள்விக்கு “தன் மகளுக்காக! தன் மகளுக்கு கொடுத்த வாக்கிற்காக!” என நெஞ்சை நிமிர்த்தி பதில் சொன்னவரை அங்கிருப்பவர்களும் ஆச்சரியமாகதான் பார்த்தார்கள்.

      பின் கொடுத்த தண்டனையையும் முழு மனதோடு ஏற்றவர் நிமிர்ந்து, தன் முகத்தை மறைத்த வண்ணம் கண்கள் கலங்க தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் மகளை ஏறிட்டார். இரண்டு காவல்துறையினரோடு செல்ல எத்தனித்த லலிதா தன் மகளிடம் பேச அனுமதி கேட்க, அவர்களும் சம்மதித்தனர்.

தன் மகள் அருகில் வர, அவள் தலையை வாஞ்சையோடு கோதிவிட்டவர் நெற்றியில் முத்தமிட்டு, “உனக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டேன் மா. நீ அனுபவிச்ச அதே வலிய அவனையும் அனுபவிக்க வச்சிட்டேன். இப்போ நா உன்கிட்ட கேட்டதை செய்யனும். உன் முகத்த மறைச்சிருக்க இந்த துணி இனி தெவையில்லை, இதுவும் கடந்து போகும்னு இதை கடந்து வா. அடுத்தவங்க பார்வைக்காக உன்னை நீ இழந்துடாத, இனி இதான் உன் அடையாளம்னா இதை ஏத்துக்க பழகு, இனி இந்த அம்மா துணையில்லாம நீதான் இந்த உலகத்தை சந்திக்கனும். உன் முகத்துல மூடியிருக்குற துணிய மட்டுமில்ல, உன் மனசுக்கு போட்டிருக்கிற பயம் என்ற முகமூடியையும் தூக்கி போட்டுறு. எப்போவும் உனக்காக இந்த அம்மா இருப்பேன் கண்மனி” என்று கூறியவர் தன் மகளின் நெற்றியில் மீண்டும் ஒரு முத்தம் வைத்து சென்றாள்.

     செல்லும் தன் அம்மாவை பார்த்த ரம்யா, அவர் கூறிய வார்த்தைகளை மனதில் ஏற்றிக்கொண்டு, தன் கண்களிலிருந்து கன்னத்தினூடே வழிந்த கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு, அவரை நோக்கியவாறு தன் முகத்தை மூடியிருந்த துணியை கழற்றி தூர எறிந்து, இந்த உலகத்தையும் அதன் பலவித பார்வைகளையும் நேருக்குநேர் சந்திக்க தயாரானாள்.

     இந்த உலகத்தை சந்திக்கவும், சமாளிக்கவும் மனதைரியமும், தன்னம்பிக்கையுமே போதுமே தவிர, முக அழகு என்றும் தேவையில்லை. தமக்கு இப்படி ஒரு அநியாயத்தை செய்பவர்கள் எதிர்பார்ப்பதே தாம் தன்னையே வெறுத்து முடங்கி விட வேண்டும் என்பதே. அவர்களை தவறையும் செய்யவிட்டு அவர்கள் ஆசையையும் நிறைவேற்றி வைப்பதா? அவர்களுக்கான தண்டனையை இந்த உலகத்திலே கொடுப்பதோடு, ‘இதுவும் கடந்து போகும்‘ என பிறர் பார்வைகளையும் சிறு இதழ் சிரிப்போடு கடந்து செல்வோம்.

 

SHEHA ZAKI
  

        

Leave a Reply

error: Content is protected !!