தேனாடும் முல்லை – 11

தேனாடும் முல்லை – 11

தேனாடும் முல்லை-11

‘மரபுரீதியாக மட்டுமே சிந்திக்கும் தலைமுறை மனிதர்களால் இவளைப் போன்ற மனுஷிகள் தான் எத்தனை இடர்பாடுகளைச் சந்தித்து சுயத்தை இழந்து நிற்கின்றனர். இதற்கு விடியல் எப்போது?’ விடை காணமுடியா கேள்வியில் ராம்சங்கரின் மனமும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தது.

இவன் இப்படியெல்லாம் யோசிப்பவனே அல்ல… உண்மையச் சொல்லப்போனால் எந்தவொரு விஷயத்திலும் லாப நஷ்டங்களை அலசிப் பார்த்து சிந்தித்து இவன் காரியத்தில் இறங்கியதில்லை. அப்பேற்பட்டவனையும் அசைத்துப் பார்த்திருந்தது இவனது மனைவியின் நிலை.

ஏதோதோ குழப்பங்களுடன் ராம்சங்கர் வீட்டிற்கு வந்தடையும் பொழுது இரவு மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. இவன் வந்த நேரத்தில் வழக்கம்போல மடிக்கணிணிக்குள் தன்னைத் தொலைத்திருந்தாள் விஸ்வாதிகா.

இவன் குளித்து முடித்து வந்த நேரத்திலும் கட்டிலில் அதே நிலையிலேயே அமர்ந்து வேலையைத் தொடர்ந்து  கொண்டிருந்தாள். அவளை ஆயாசமாகப் பார்த்தான். எக்காரணத்தை முன்னிட்டும் கடந்தகால வாழ்க்கையைப் பற்றிப் பேசி இவளை வருத்தக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். நிமிடத்தில் சகஜமானான்.

“சாப்பிட்டியா செல்லா?”

“ம்ம்…”

“சரி, சாப்பாடு எடுத்து வைச்சு எனக்கு கம்பெனி குடுப்பியாம், வா!” என்றழைக்க, நேரத்தைப் பார்த்துவிட்டு அவனை முறைத்தாள் மனைவி.

“நீ இவ்வளவு நேரம் வரலன்னு பார்த்துட்டு, ஜஸ்ட் இப்போதான் உன் சாப்பாட்டை செக்யூரிட்டிக்கு கொடுத்தேன் ராம். ஃபிரிட்ஜ்ல புரூட்ஸ் இருக்கும், சாப்ட்டுக்கோ!” சாதாரணமாகக் கூறிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள்.

“விளையாடாதேடி, செம பசியில இருக்கேன். எனக்கு சாப்பாடு தான் வேணும். அட்லீஸ்ட் தோசை இல்லன்னா சப்பாத்தியாவது போட்டுக் கொடு!”

“எனக்கு வேலையிருக்கு ராம், நீயே செஞ்சுக்கோ!” அலட்சியமாகப் பதிலளிக்க, பொறுமையிழந்து போனான்.

“புருஷன் பசிக்குதுன்னு சொல்றேன். அதைவிட உனக்கு வேலை முக்கியமா போச்சா?” கோபத்துடன் மடிக்கணிணியை இவன் இழுத்து மூட, அவளுக்கும் சினமேறிப் போனது

“என்ன… புருஷன், ஆம்பளைன்னு ரவுசு பண்றியா! நீ சத்தம் போடவும் உனக்கு சலாம் போட்டுட்டு அடங்கிடணுமா? டைமுக்கு வராம, சரியா இன்ஃபார்ம் பண்ணாம இருந்தது உன் தப்பு. அன்டைம்ல உன் பசிக்கு நீதான் ஏற்பாடு பண்ணிக்கணும். நான் இல்ல.” வெகு கறாராய் பேசியவளைப் பார்த்து இவனது கோபம் சற்றே பின்னடைந்தது.

“ஏன்டி, ஒரு மனுசன் பசியில கேக்குறேன், அந்த பாவம்கூட பாக்க மாட்டியா?”

“அடுத்தவங்களுக்கு பாவபுண்ணியம் பாக்கற கருமத்தை எல்லாம் எப்பவோ தூக்கி போட்டுட்டேன் ராமா… அதட்டுறேன்னு வீணா என்மேலே குத்தம் சொல்லி   வாங்கிக் கட்டிக்காதே. இப்ப இருக்கிற வேலைக்கு என்னால ஒரு டம்ளர் தண்ணி கூட எடுத்துத் தர முடியாது.” இரக்கமே இல்லாமல் பேசியவளை அறைந்து தள்ள கைகள் பரபரத்தது. முயன்று அடக்கிக் கொண்டான்.

“வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சாளாம் ஒருத்தி… நீ பண்றதும் அப்படித்தான்டி இருக்கு. நீ பழி வாங்க நான்தான் கிடைச்சேனா!” கோபத்தோடு கனன்று விட்டு கட்டிலின் மறுபக்கத்திற்கு சென்று படுத்துக் கொண்டான்.

அவனது கோபப் பேச்சிலேயே, தன்னைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்டுதான் வந்திருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டு ஒருநொடி அவனையே உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் மடிக்கணிணிக்குள் புதைந்து போனாள் ஆதி.

இவளின் அமைதியில் தன்னிடத்தில் அதிகப்படியாக இருந்த தலையணையை காலால் எட்டி உதைத்து அவளின் முகத்தில் பறக்க விட்டான்.

“அடேய்… என்ன கன்றாவிடா இது?” வெறுப்பாய் இவள் பேசும்போது,

“நீ மூஞ்சியில அடிச்சாப்ல பேசும்போது நான் இதைக்கூட செய்யக்கூடாதா? தூக்கம் வருது, லைட் ஆஃப் பண்ணு!” ஏகத்திற்கும் முறுக்கிக் கொண்டான்.

“பத்து நிமிஷம் பொறுடா!”

“ஹால்ல போயி வேலையைப் பாரு, எனக்கு டிஸ்டர்ப் ஆகுது.” என்றபபடியே நைட் லாம்பை எரியவிட்டு ரிமோட்டில் அறையை இருட்டாக்கி விட்டான்.

“இடியட், ஒருத்தி வேலை பாக்கறான்னு கூட பார்க்காம எவ்வளவு செல்பிஷா நடந்துக்கிற!” முணுமுணுப்போடு நகர,

“நீ செஞ்சதை நான் ஃபாலோ பண்றேன். போவியா…” வீராப்பு மட்டும் இருவரிடத்திலும் குறையவில்லை.

பசியில் இவனுக்கு உறக்கம் வராமல் போக கீழே சென்று ஃபிரிட்ஜை குடையவும் உடல் நோவு கண்டது. ‘மனைவிக்கு ஆறுதலளிக்க வேண்டும். உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை இவளுக்கு கொடுக்க வேண்டும். பின்னர் எதுவானாலும் பேசிக் கொள்ளலாம்.’ பல யோசனையில் வந்தவனுக்கு, வயிற்றுப் பசி பூதமாக வந்தமர்ந்து மனதின் எண்ணங்களை மறக்கடிக்க வைத்திருந்தது.

‘இவ இப்படி கொஞ்சமும் ஒட்டாம இருந்தா எப்படித்தான் வாழ்றது? நிம்மதிங்கறது மருந்துக்கும் கெடைக்காது. இவகூட விதண்டாவாதம் பேசியே காலம் கழிஞ்சிடும். என்ன பண்ணலாம்? எல்லாம் இந்த அம்மா பண்ண வேலை. என் வேலை, வீக் என்ட், டேட்டிங்னு ஜாலியா இருந்தவனை இவகிட்ட தள்ளி விட்டுட்டு அவஸ்தையில மாட்டி விட்டுட்டாங்க…’ உள்ளுக்குள் பல யோசனைகளுடன் உருண்டு புரண்டு கட்டிலில் பிரதட்சனம் செய்த வேளையில் பால் டம்ளரை கொண்டு வந்து நீட்டினாள் மனைவி.

“பால் சாப்பிட்டு படு ராம், தூக்கம் வரும்.”

“நீயே சாப்பிட்டுக்கோ… எனக்கொன்னும் வேண்டாம்.”

“கடுப்பேத்தாதே ராம்! கழுத்து வலியோடு உனக்காக கண்டு வந்துருக்கேன். சும்மா சொல்ல வைக்காதே, எடுத்துக்கோ!”

“என்னவாம், இப்ப அக்கறை பொத்துகிட்டு வருது.”

“எந்த சக்கரையும் கொட்டல… நான் டிஸ்டர்ப் இல்லாம தூங்கணும். நீ இப்படி கட்டில்லயே புரண்டு சுத்திட்டு இருந்தா நான் எப்படி தூங்குறது? அதுக்குத்தான்…”  அசிரத்தையுடன் அவன் கைகளில் பால் டம்ளரை திணித்துவிட்டு இந்த பக்கம் உறங்க வர,

“அடிப்பாவி எப்பேற்பட்ட கல்நெஞ்சக்காரியா இருக்க… பேரளவுக்கு கூட பரிதாபப் படமாட்டியா?”

“போரடிக்காத டா!” என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டி கண்ணை மூடினாள்.

‘நீயே இப்படி இருக்கறப்போ நான் மட்டும் எதுக்கு நல்ல பிள்ளையா அடங்கி இருக்கணும்? உன்னை இன்னைக்கு தூங்க விட்டா நான் ராம் இல்லடி… உன் புருசன்னு காமிக்கிறேனா இல்லையா பாரு!’ மனதோடு எழுந்த  உஷ்ணங்களை அடக்கிக் கொண்டு, வம்படியாக அவளின் பின்னோடு அணைத்து உறங்க வந்தான்.

“இங்கே வலிக்குதா செல்லா?” அக்கறையாய் கேட்டு, அழுத்தமாய் பின்னங்கழுத்தில் முத்தம் கொடுக்க அசதியாய் அலுத்தாள்.

“டேய், தள்ளிப் படு, இப்பதானே என்கூட சண்டை போட்ட…”

“சண்டைக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. பதிலுக்கு பதில் பேசும்போது என் கையும் அதோட வேலை பாக்கட்டும்.” என்றவனின் கைகள் என்றுமில்லாத வேகமாய் மூர்க்கமாய் அத்துமீற, அவளால் சமாளிக்க முடியவில்லை.

“தடியா… ரோசமே இல்லையா? உன்னை அவ்வளவு பேசியும் பக்கத்துல வர்றியே!”

“உன் ஆசைக்கு நீ வாழ நினைக்கும்போது, என் ஆசைக்கு பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க நான் நினைக்கக் கூடாதா? என் ரோசத்த இப்ப காட்றேன்டி!” என்றவன் அதற்குமேல் அவளை பேச விடவில்லை.

அவள் கொண்டு வந்த பாலும் கவனிக்கப்படாமல் வீணாகிப் போக, விடிய விடிய சிவராத்திரியானது. மறுநாள் சிறுசிறு அசைவிலும் கூட தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் ஆதி.

“சாரிடி, ஏதோ ஒரு வேகத்துல…” இவன் சமாதானம் செய்ய முன்வந்தாலும்,

“என் முன்னாடி நிக்காதேடா மடையா… சூடா காபியை மூஞ்சியில ஊத்திடுவேன்.” நொடிக்குநொடி சிடுசிடுப்பைக் காட்டினாள்.

“நீ அப்படி பேசப் போயி தான் செல்லா…”

“மூஞ்சியில முட்டையை அடிச்சிடுவேன்டா… ரெண்டுநாள் என் முன்னாடி வந்து தொலைக்காதே!” கடுப்புடன் அன்றையநாள் முழுதுவம் கழிய இவனும் அதற்குமேல் மனைவியை தொந்தரவு செய்யவில்லை.

இரவு படுக்கையிலும் அதே அமைதியைத் தான் கடைபிடித்தான். ரோசம் கெட்டுப்போய், “என்ன ராம், இன்னுமா கோபம் குறையல?” கேட்டபடி முதுகை அணைப்பது இன்றைக்கு இவளின் முறையானது.

“போடி அந்தப்பக்கம்… புள்ள வேணாம், புருசனை பாக்க மாட்டேன்னு சொல்றவளுக்கு இது மட்டும் வேண்டியிருக்கா?” எக்குதப்பாகப் பேசி மீண்டும் ஏழரையை கூட்டினான்.

“பாவம் பார்த்து உன்னை சமாதானப்படுத்த வந்தா, என்னையே அலையுறவ லிஸ்டல சேக்கறியா வாத்து மடையா!” தலையணையால் மொத்திவிட்டு விலகிப் படுக்க இவன் பேந்தப் பேந்த முழித்தான்.

“ஐயய்யோ… ஆஃபர் கொடுத்ததை யூஸ் பண்ணிக்கத் தெரியாம உளறி வச்சுட்டேனே! நிஜமாவே நான் வாத்து மடையன் தான்டி செல்லா… செல்லமே, செல்லாத்தா… என் வெல்லமே!” ஏகத்துக்கும் கொஞ்சி அழைக்க இவள் அசைவேனோ என்றிருந்தாள்.

“எனக்கும் ரோசமிருக்குன்னு காட்டிக்க கொஞ்சம் எடுத்து விட்டேன்டி! இப்ப பாரு, உனக்கும் வலிக்குது தானே, அதே மாதிரிதான் நீ பேசும்போது எனக்கும் வலிக்கும். புரிஞ்சுக்கோ தங்கமே!”

“என்னையே சுத்தி வர்றியே… கொஞ்சம் நல்லவன்னு உன்னை நினைச்சேன். நீயும் ஆம்பளை புத்திய காமிச்சுட்ட டா…” அவனைத் தள்ளிவிட்டு கண்களை மூடிக்கொள்ள, இவனது கெஞ்சல்கள் தொடர்ந்தன.

“செல்லத்தா… கொஞ்சம் சிரியாத்தா… கோபம் இறங்கி என்னையும் கொஞ்சம் கொஞ்சாத்தா!” ரைமிங்காக பாடியதில் துளிர்த்த கோபமும் சிரிப்பாய் மாறியது.

“இந்த வாய் மட்டும் இல்லன்னா உன்னை தூசியா கூட கவனிக்க மாட்டாங்கடா!” செல்ல அடிகளோடும் கூடலோடும் இரவு கரைந்தது.

அதற்கடுத்த நாட்களில் எப்படியெப்படியோ பேசி அவளின் முடிவுகளை, மனதை மாற்றப் பார்த்தான். அவளோ மசியவில்லை.

“நமக்கும் லைஃப்ல ஒரு பிடிப்பு வேணும் செல்லா… குழந்தை பெத்துக்கலாம்.” மீண்டும் பல்லவி பாடியவனை காட்டமாக முறைத்தாள்.

“அது வேண்டாம்னா நம்ம வீட்டுக்கு போவோம். அண்ணிகிட்ட பேசி குழந்தைகளை கூட்டிட்டு வருவோம்!” பழைய கதையை பேச ஆரம்பிக்க, அலுத்துப் போனாள்.

“திருந்தவே மாட்டியாடா நீ? இந்த கம்பெல்சன் எல்லாம் உன்கிட்ட இருந்து வராதுன்னு எதிர்பார்த்துதான் உன்னை மேரேஜ் பண்ணிகிட்டேன். சொன்னதையே சொல்ல வெச்சு அறுக்காதே ராம்! லீவு முடிஞ்சதும் நல்ல பிள்ளையா யூஎஸ் கெளம்புற வழியப் பாரு!” தீர்மானமாக முற்றுப்புள்ளி வைத்தாள்.

அவனுக்கோ மனம் சமாதானம் அடையவில்லை. ‘மனைவிடம் இத்தனைக்கும் இறங்கிப் போக வேண்டுமா’ என்று மனம் ஒருபுறம் ரோசப்பட்டாலும், எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடக் கூடாதென்பதில் அமைதி காத்தான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு மனைவி பணிக்கு கிளம்பும் நேரத்தில் தானாகாவே முன்வந்து லம்போர்கினியை எடுத்தான் ராம்சங்கர்.

“இன்னைக்கு நான் டிராப் பண்றேன் செல்லா!”

“கோபம் போயிடுச்சா ராம்? குட்பாய்!” மெச்சியவளாக ஆதியும் காரில் ஏறியமர வண்டியைக் கிளப்பினான்.

வழக்கமாக அவள் செல்லும் கட்டுமானப் பணியிடத்திற்கு செல்லாமல் கார் வேறு திசையில் செல்ல ஆரம்பிக்க, “எங்கே போறே ராம்?” புரியாமல் கேட்டாள்.

“எல்லாம் உன் வேலைக்காகத் தான்… பேசமா என்கூட வா! ஃபிரென்ட் ஒருத்தன், வீடு ரீகன்ஸ்ட்ரக்ஷன் பண்ணணும்னு சொன்னான். அதைப் பாக்கத்தான் உன்னை கூட்டிட்டுப் போறேன்.”

“முன்னாடியே சொல்லியிருந்தா டைம் ஒதுக்கி வந்திருப்பேன். இப்ப பாரு, உன்னால, என்னோட புல் டே செட்யூல் ஸ்பாயில் ஆகுது. சுத்த இடியட் ரா நீ!” ஏகத்துக்கும் அர்ச்சிக்க ஆரம்பிக்க, சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான்.

நண்பனின் வீடு அத்தனை சீக்கிரத்தில் வந்து சேரவில்லை. காரில் ஏறி ஒரு மணி நேரத்திற்கும் மேல் கழிந்திருந்தது. ஆதியும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு முழித்தாள்.

“இன்னுமா உன் ஃபிரென்ட் வீடு வரல?” என்றவளாக வெளியில் பார்க்க கார் மதுரையை தாண்டிச் சென்று கொண்டிருந்தது.

“எங்கே போற ராம்? ஒழுங்கா சொல்லு!” திகைப்புடன் கேட்க சிரித்து மழுப்பினான்.

“இன்னும் கொஞ்சநேரம் தூங்குடி, இடம் வந்ததும் சொல்றேன்.”

“கோபத்தை கிளப்பாதேடா… ஒழுங்கா பதில் சொல்லலன்னா காருல இருந்து குதிச்சுடுவேன்.”

“லாக் போட்ருக்கேன் செல்லா டார்லிங்!”

“உன் மண்டையில நாலு அடி போட்டு, காரை என் கையில எடுத்துக்க ரொம்ப நேரமாகாது வாத்து. உன்னை அடிச்சு என் கை புண்ணாக வேண்டாம்னு பாக்கறேன்”

“என்னமோ வில்லன் கடத்திட்டு போற மாதிரியே துள்ளிட்டு இருக்க… எங்கூட, என்னை நம்பி வரமாட்டியா?”

“இந்த சென்டிமென்டல் பேத்தல் எல்லாம் வேண்டாம். வீணா கிறுக்குத்தனம் பண்ணி, எப்பவும் கோமாளியா நிக்காதே… உண்மையைச் சொல்லு, இல்ல… மூஞ்சிய பேத்துருவேன்” என்றவாறே கையை மடக்கி குத்த வந்து விட்டாள் விஸ்வாதிகா.

“அவ்வளவு செய்வியா நீ… என்னை கொலையே பண்ணாலும் போற இடத்தை நான் சொல்ல மாட்டேன். முடிஞ்சா என்னை அடிச்சு போட்டு காரை உன் கஸ்டடியில எடுத்துக்கோ!” சாவ்டால் பேசியவனை வெட்டவா குத்தவா என முறைத்துக் கொண்டே அமைதியாக வந்தாள்.

“உன்னை பாம்புன்னு அடிக்கவும் முடியல… பழுதுன்னு பாவம் பாக்கவும் முடியல, என் கையில சிக்காமயா போயிடுவ…” பல்லைக் கடித்து ஆவேசத்தை அடக்கிக் கொண்டாள்.

தனது லம்போர்கினியை முடிந்தளவு விரைவாக ஒட்டிக் கொண்டு அடுத்த மூன்றரை மணிநேரத்தில் வந்து சேர்ந்தான்.

தமிழக எல்லையைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்ததுமே எங்கே செல்கிறோம் என்பதை ஓரளவிற்கு கணித்து விட்டாள் விஸ்வாதிகா. அந்த நேரமே அவளின் மனம் அதீத இறுக்கத்தில் அவளை முடக்கி விட்டது.

அந்த வீட்டிற்கு வெளியே காரினை நிறுத்தி விட்டு, “இறங்கு செல்லா!” அமைதியாக அழைக்க, அவள் பதிலும் பேசவில்லை அசையவும் இல்லை.

“இந்த ஸ்ட்ரெஸ் குறையணும்னு தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். என்னை தப்பா நினைக்காதே… மனசுல இருக்கற ஏக்கத்தை தீர்த்துக்கிட்டா நீ ஃபிரீயா இருக்கலாம். உனக்குத் தான்டி நல்லது, வா போவோம்.” வம்படியாக இழுத்தாலும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

“தெருவுல வர்றவன், போறவன் எல்லாம் வேடிக்கை பாக்கிறான்டி, அடம் பிடிக்காதே! உன்னை நான் பார்த்துக்கிறேன் செல்லா… நான் சொல்றதைக் கேளு!” அவன் சொல்லச் சொல்ல இவளின் முகமும் மனமும் இறுக்கம் கொண்டதே ஒழியே தளர்த்திக் கொள்ளவே இல்லை.

“என்னை எதுக்கும் கம்பெல் பண்ணாதே ராம். உன் தேவைக்கு நீ போய் பார்த்துட்டு வா! இல்ல, புருசன்ற உரிமையெடுத்து என்ன வம்படியா இழுக்கறதா இருந்தா, இந்த நிமிசமே நமக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுப்போம். என்ன சொல்ற?” காரப்பர்வையில் அழுத்தமாய் பேச, மறு வார்த்தையின்றி வாயடைத்துப் போனான்.

அந்த நேரம் அவனது செல்பேசி ஒலிக்க, அதை எடுத்துப் பேசியவன், “இப்ப வாசல்ல தான் நிக்கிறோம்.” என பதிலளிக்க, “அப்படியே உள்ளே வாங்க தம்பி!” என்று அழைத்தார் எதிர்புறம் பேசிய நபர்.

“உன் வீம்புக்கு, என்னால வந்த வேலையை விட்டுட்டு இங்கேயே நிக்க முடியாது.” கடுப்புடன் கூறிவிட்டு உள்ளே சென்றவனை எதிர்கொண்டு அழைத்தார் செல்பேசியில் பேசிய நபர் முத்து.

“வாங்க தம்பி, விஸ்வநாதன் ஐயா காலையில தான் ஃபோன்ல சொன்னாங்க!” என்று கூறிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

 வெகு நாட்களுக்குப் பிறகான அழுகையும் நடுக்கமும் தன்னை வசமிழக்க வைத்தாலும் எதற்கும் உடைந்து போகக் கூடாதென்ற உறுதியில் அசையாமல் இறுகிப் போய் காரினுள் அமர்ந்திருந்தாள் விஸ்வாதிகா.

 

 

error: Content is protected !!