தேனாடும் முல்லை-12
தேனாடும் முல்லை-12
தேனாடும் முல்லை-12
“நீங்க பாக்க வந்த பெரிய மனுசன் வர்ற வரைக்கும் வீட்டை சுத்திப் பாக்கலாம், வாங்க தம்பி!” என்றவாறே ராம்சங்கருக்கு அந்த வீட்டை நன்றாக சுற்றிக்காட்டத் தொடங்கினார் முத்து.
தோட்டத்தோடு இணைந்திருந்த அந்தப் பெரிய வீடு சரியான பராமரிப்பின்றி பாதிக்கும் மேல் சிதலமடைந்திருந்தது. வீட்டின் பின்புறமுள்ள பெரிய தோட்டத்திற்கும் அழைத்துச் சென்று காண்பித்தார்.
அந்தப் பகுதி மட்டும் நன்றாக ஒதுக்கப்பட்டு வரிசையாக மரக்கன்றுகளும், பூ, காய்கறி செடி வகைகளும் பதியமிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
“இவங்களோட கடத்தல் வேலையெல்லாம் வெளியே தெரிஞ்சதும் நேர்வழியில நடந்திட்டு இருந்த தொழில் கூட மொத்தமாக முடங்கிப் போயிடுச்சு தம்பி… கோர்ட்டு, வக்கீல், ஜாமீன் செலவோட, ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு வரிசையா உடம்பு நோவு கண்டு, எல்லா செலவுக்கும் சொத்து பத்துகளை விக்க ஆரம்பிச்சாங்க… பெரியய்யா, பெரியம்மா போனதுக்கப்புறம் எல்லாம் மொத்தமா கரைஞ்சு போச்சு.
அஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச இந்த நர்சரி வியாபாரம் தான் குடும்பத்துக்கே கஞ்சி ஊத்துது. இப்ப இருக்கிற இந்த வீடும் இல்லன்னா இவங்க எங்கே போய் வாழ்ந்திருப்பாங்களோ… அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.” விளக்கம் கொடுத்தபடி வீட்டின் பெரிய அறையின் வாசலுக்கு அழைத்து வந்தார் முத்து.
“இதுதான் பெருசுங்க தங்கியிருக்கிற ரூமு… வெளியாளுங்க யாரையும் உள்ளே சேர்க்க மாட்டாங்க. கொஞ்சம் இருங்க, நான் போயி பேசிட்டு வந்திடுறேன்.” ராமிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர்,
“கஞ்சி குடிச்சீங்களா ம்மா?” கேட்டு நிற்க,
“யாரு முத்துவா? ஏன்யா உன் பொஞ்சாதிக்கு இந்த கஞ்சியும் துவையலும் விட்டா வேற எதுவும் கொடுத்தனுப்பத் தெரியாதா?” முகச் சுளிப்போடு கண்களுக்கு மேல் கையை வைத்து உற்றுப் பார்த்தார் பஞ்சவர்ணம்.
அப்பொழுதும் அவருக்கு முத்துவின் உருவம் சரிவரத் தட்டுப்படவில்லை. குத்துமதிப்பாக எதிரில் நிற்பவரைப் பார்த்து பேசத் தொடங்கினார். வயோதிகம் சற்று அதிகமாகவே வாட்டி வதைத்திருந்தது.
“என்னமோய்யா… ஒரு காலத்துல வகைதொகையா பொங்கித் தின்னு ருசி கண்ட நாக்கு, பொழுதுக்கும் வக்கணையா கேட்டுத் தொலைக்குது. அடக்க முடியல.” தனது இயலாமையில் புலம்பவும் செய்தார்.
அவருக்கு எதிரே கட்டிலில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒன்றை சொல்ல முற்பட்டார் கந்தன். ஆனால் அதை சரியாகச் சொல்ல முடியவில்லை.
பக்கவாதத்தில் கையும் வாயும் கோணிக்கொண்டு எச்சிலும் ஒழுகியது. மறுகையால் துணியை எடுத்து துடைத்துக் கொள்வதற்கே அத்தனை பாடு! தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையென்று இவர்களைப் பார்த்தால் புரிந்து போய்விடும்.
“மாசக் கடைசி கை கட்டுதுங்கம்மா… நான் என்ன செய்ய? மதியத்துக்கு மிளகு ரசமும் தொட்டுக்க கருவாடும் கொண்டு வர்றேன். சாப்பிட்டுக்கோங்க!” சொல்லிவிட்டு கந்தனை நோக்கித் திரும்ப, ஏதோ உளறிக் கொட்டினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது முத்துவிற்கு மட்டுமே வெளிச்சம்.
“நர்சரியை பார்க்க வந்தாங்கய்யா… அப்படியே வீடு பெரிசா இருக்கேன்னு சுத்திப் பார்த்திட்டு இருக்காங்க, நம்மாளுங்க தான். ஒன்னும் பயமில்ல.” சொல்லிவிட்டு முத்து வெளியேறவும், “ஹாங்… ஹாங்.” என அமைதியானார் கந்தன்.
“பெருசு ரொம்ப விவரம், பாம்புக் காது. நடையை வச்சே யார் என்னன்னு கண்டுபிடிச்சுடுவாரு. அதுக்கு நேர்மாறா இருப்பாங்க, அம்மா… அவ்வளவு சுலபத்துல இப்ப எல்லாம் யாரையும் அடையாளம் தெரியுறதில்ல. வாங்க, அந்த பக்கம் போயி பேசுவோம்.” ராம்சங்கரை அங்கிருந்து தோட்டத்திற்கு அழைத்து வந்தார்.
“ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்காங்க? சரியான டிரீட்மென்ட் குடுக்கலாமே முத்து.” ராம் கேட்க,
“மூனு வருசத்துக்கு முன்னாடி வந்த விஷக் காய்ச்சல்ல அம்மாவுக்கு கண்பார்வை ரொம்பவே மங்கிப் போச்சு. அப்புறம் கொஞ்சநாள்ல கந்தன் ஐயாவுக்கு ஒரு பக்கம் வாதம் வந்து முடக்கிப் போட்ருச்சு. வயசாகிடுச்சு, இனி ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டரும் சொல்லிட்டாங்க… பணம், காசு செலவழிச்சு இவங்களுக்காக எடுத்துச் செய்ய யாரும் இல்லாம போனதுல இப்படியே காலத்தை தள்ளுறாங்க!” வருத்தத்துடன் முடித்தார் முத்து.
இங்குள்ள நர்சரி வியாபாரத்தை மேற்பார்வை பார்த்துக் கொள்வதோடு இந்த வீட்டில் உள்ளவர்களையும் கவனித்துக் கொள்கிறார் முத்து. ஒரு காலத்தில் இந்த வீட்டின் எடுபிடியாக இருந்தவர், இன்று இவர்களுக்கே பக்கபலமாக நிற்கிறார்.
மாதச் சம்பளம் முறையில் நர்சரியில் வியாபாரமாவதைப் பொறுத்து பெற்றுக் கொள்வார். இவரது குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவுகளை விஸ்வநாதன் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது இவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத செய்தி.
“குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்த நாள்ல இருந்து எனக்கும் விஸ்வநாதன் ஐயாவுக்கும் பழக்கம். ஆரம்பத்துல பேரப்புள்ள எப்படி இருக்கான்னு விசாரிக்க ஆரம்பிச்சவரு, ஒரு கட்டத்துல அந்த புள்ள ஆதரவில்லாம வளரக் கூடாதுன்ற காரணத்துக்காகவே இவங்களுக்கே தெரியாம இவங்களை பொறுப்பா கவனிச்சிக்கற வேலையை என்கிட்டே கொடுத்தாரு! இப்பவும் ஒரு கஷ்டம்னா நான் போய் நிக்கிறது அவர்கிட்ட தான்.
பேரன் எந்த குறையும் இல்லாம வளரணும்னு ஆசைப்படுறவரு, தன் பொண்ணை மனசுல வச்சும் வீண் பிரச்சனை வேண்டாம்னு நினைச்சும் பேரனை வந்து பாக்காம காலத்தை தள்றார்!” பெரும் வேதனையோடு கூறி முடித்தார் முத்து.
அந்த வீட்டின் நுழைவு வாயிலின் நடுவில் கார் நிறுத்தி வைக்கபட்டிருக்க, மன இறுக்கத்துடன் எந்தவித சிந்தனையும் இல்லாமல் அமைதியாய் காருக்குள் அமர்ந்திருந்தாள் விஸ்வாதிகா.
அந்த நேரத்தில் சைக்கிளோடு வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுவனுக்கு, வாசலை அடைத்துக் கொண்டு நின்றிருந்த கார் அதீத எரிச்சலைத் தர, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே, வேகமாக சைக்கிளை விட்டு இறங்கினான்.
சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே கிடந்த சின்னக் கல்லை எடுத்து ஹெட்லைட்டை குறி பார்த்த நேரத்தில் உள்ளே அமர்ந்திருந்த ஆதி அவசரமாக கதவை திறந்து வெளியில் வந்து விட்டாள்.
அவன் சைக்கிளை விட்டு இறங்கிய பொழுதில் இருந்தே அவனை கவனித்துக் கொண்டிருக்கிறாள். திடீரென்று இவன் கல்லை எடுத்து குறிபார்த்ததும், அவனைக் கண்டிக்கும் நோக்கத்துடன் சட்டென்று இவளும் இறங்கி விட, ‘ஐயோ’ என்று தனது நிலையில் இருந்து தளர்ந்தவன்,
“ரோடில கார் பார்க் செய்யுக, வாதிலல்ல நிற்த்தறது (காரை ரோட்ல பார்க் பண்ணனும், வாசல்ல நிறுத்தக்கூடாது.)” மலையாளத்தில் வேகமாய் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டான்.
மறந்தும் கூட இவன் யாராக இருப்பான் என்ற ஆராய்ச்சியை அவள் மேற்கொள்ளவில்லை. தோற்றமும் பாவனைகளுமே சொல்கிறதே அவன் யாரென்று… அவன் பேச்சிற்கு எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் மீண்டும் அமைதியாக காரினுள் சென்று அமர்ந்தாள்.
மறந்தும் சிறுவன் சென்ற திசையைக் கூட திரும்பிப் பார்க்கவில்லை. அவன் கூறிச் சென்றதை யோசித்தபடியே வீட்டை ஒட்டிய சாலையோரத்தில் வாகனத்தை கொண்டு போய் நிறுத்தி விட்டாள்.
சைக்கிளை நிறுத்திய சிறுவன் தோட்டத்தில் பேச்சு சத்தம் கேட்டுவிட்டு அங்கே சென்று நின்றான்.
“எந்தா சேச்சா… செடி வாங்ஙான் வந்ததானோ… (என்ன சித்தப்பா, செடி வாங்க வந்திருக்காங்களா?)” கேட்டு நிற்க,
“இல்ல சக்தி, உன்னை பாக்கத்தான் வந்திருக்காங்க, வா!” என்று தன்னருகில் அழைத்த முத்து,
“இவன்தான் நீங்க பார்க்க வந்த பெரிய மனுசன் சக்திமாறன். எங்க சின்னய்யா வாரிசு.” என்று இளமாறனை முன்னிறுத்தியே சிறுவனை அறிமுகப்படுத்தினார்.
“இவனுக்கு மலையாளம் தான் ஈசியா வருது. தமிழ் புரியுது, ஆனா வேகமா பேச வரல.” சக்தியைப் பற்றி சொல்லிச் சிரித்தார் முத்து.
“எப்படி இருக்க சக்தி?” அன்பாகக் கேட்டு சிறுவனின் தோளில் கை போட்டான் ராம்சங்கர்.
இமைக்காமல் அவனையே மேலிருந்து கீழாக பார்வையால் அலசினான். முக வெட்டுத் தோற்றம், உடல்மொழி, பாவனை, நிறம் என எதிலும் விஸ்வாதிகாவின் வார்ப்பினைக் காண முடியவில்லை.
“இவன் அப்பா ஜாடையில இருப்பான் போல.” முத்துவிடம் சொல்லிவிட்டு மீண்டும் சக்தியை கூர்ந்து பார்த்தான். சிறுவனின் கண்களில் குடி கொண்டிருந்த துறுதுறுப்பு பெற்றவளின் ஜாடையை சொன்னது. தன்னால் மகிழ்வோடு அணைத்துக் கொண்டான்.
“சந்தோஷமா இருக்கியா சக்தி?” வாஞ்சையோடு கேட்க, அவனுக்கோ அதன் அர்த்தம் புரியவில்லை.
“ம்ம்… ஐ அம் ஆல்வேஸ் ஹாப்பி அங்கிள்.” பெரிய மனித தோரணையில் இலகுவாய் கூறி தோள்குலுக்கிக் கொண்டான்.
“குட், குட்! உன்னோட ஸ்கூல், இந்த வீடு, அட்மாஸ்பியர் எல்லாம் உனக்கு பிடிக்குதா?” மீண்டும் கேட்க,
சற்றே யோசித்து, “ம்ம், இஷ்டப்பட்டு இல்லெங்கிலும் இவிட தன்னே ஜீவிக்கணும். (ம்ம், பிடிச்சிருக்கு, இல்லன்னா கூட இங்கேதானே இருக்கணும்.)” சிறுவன் மலையாளத்தில் கூறியதை இம்மி பிசகாமல் தமிழில் எடுத்துக் கூறினார் முத்து.
“நீ திக்கிப் பேசினாலும் தமிழ்ல பேசு சக்தி. நமக்குள்ள ட்ரான்ஸ்லெட்டர் வேண்டாம்.” சிரிப்புடன் ராம் கேட்டுக்கொள்ள,
“அத்தன மோசமில்லா… கொறைச்சு நன்னாயிட்டே அறியும் அங்கிள்!” சகஜமாய் பேசி சிரித்தான் சக்தி.
“அப்புறம் உன் அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?” ஏதுமறியாதவனாகக் கேட்டு அவன் முகம் பார்த்தான்.
தாயை பற்றி மகனிடத்தில் என்ன சொல்லி வளரத்திருக்கிறார்கள் என்பதில் ஆர்வம் மேலோங்கி நிற்க, தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டான்.
“எனக்கு பேரண்ட்ஸ் இல்ல அங்கிள். செத்துப் போயிட்டாங்க!” என்றதும் பெரிதாய் அதிர்ந்தான் ராம்சங்கர்.
ஏனோ மனம் வலித்தது. காரணமே இல்லாமல் உயிரோடிருக்கும் அம்மாவையும் இறந்தவளாக்கி பொய்யுரைத்து சிறுவனை வளர்க்கும் பெரியவர்களின் வக்கிரம், அவனுக்குள் பெரும் கோபத்தை வரவழைத்தது.
இவர்களிடம் வளர்ந்தால் இவனுமே அப்படி வளர்ந்து விடுவானோ என்றதொரு சிந்தனை மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. ‘உண்மையைக் கூறி இவனை கையோடு அழைத்துக் கொண்டு போனால் என்ன?’ வழக்கம் போல அவசரமாக முடிவெடுத்து அவனோடு பேச ஆரம்பித்தான்.
“இந்த தாத்தா பாட்டிய விட்டுட்டு புது இடம், புது ரிலேசன் கூட இருக்கலாம் சக்தி. என் கூட வர்றியா?”
“நீங்க சொல்றது புரியல அங்கிள்?”.
“ஸ்ட்ரைட்டா கேக்கறேன், உங்க அம்மா கூட நீ இருக்கலாம். நான் கூட்டிட்டு போறேன், என் கூட வர்றியா?”
“எனக்குதான் அம்மா இல்லையே!”
“இருக்காங்க சக்தி, இதோ காட்டுறேன்!” என்று மொபைலில் இருந்த விஸ்வாதிகாவின் புகைப்படத்தை காண்பிக்க, நொடிநேரம் அதையே உற்றுப் பார்த்தான் சக்தி.
“இவங்களை இப்போதான் வெளியே பார்த்தேன். காருல இருந்து இறங்கினாங்க!” என்று சொன்னதும்.
“குட், இப்ப சொல்லு, என்னோட வந்துடுறியா? அம்மா கூட இருக்கலாம்.” ராம் மீண்டும் கேட்க, மறுப்பாக தலையசைத்து,
“இவங்க என் அம்மா இல்ல அங்கிள்!”
“எப்படி சொல்ற சக்தி?”
“என் அம்மா, அப்பாவை ஃபோட்டோவுல பார்த்திருக்கேன். அந்த அம்மா இவங்க இல்ல” விஸ்வாதிகாவின் புகைப்படத்தை சுட்டிக் காட்டியவனை நம்பாமல் பார்க்க,
“என்கூட வாங்க காட்றேன்!” வேகமாக அவர்களை அந்த வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே தவறிப் போன குடும்பப் பெரியவர்களின் புகைப்படங்களின் வரிசையில் ஒரு புகைப்படம் மட்டும் பெரிதாக்கப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.
”இவங்க தான் என் அம்மா ஸ்வாதி, அப்பா இளமாறன்.” அவர்களின் திருமண புகைப்படைத்தை சுட்டிக்காட்டினான் சக்தி.
திருமணக் கோலத்தில் புதுமணத் தம்பதிகளாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது. இப்போதுள்ள விஸ்வாதிகாவின் தோற்றத்திற்கும் அப்போதைய சின்னப்பெண் ஸ்வாதியின் தோற்றத்திலும் நூறு அல்ல ஆயிரம் வித்தியாசங்களைச் சொல்லி விடலாம்.
நிறம். உருவம், நிமிர்வோடு வளர்ச்சியும் அதிகரித்த தோற்றம்தான் இப்போதைய விஸ்வாதிகா. பெரியவர்களிடமே, ‘அந்தப் பெண்தான் இவள் என்று சொன்னாலும் நம்புவதற்கு யோசிப்பர். அப்படியிருக்க இந்த பதினொரு வயதே ஆன சிறுவனிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது?’ மனதிற்குள் வெகுவாய் குழம்பிப் போனான் ராம்.
“அங்கிள் சொல்றது உண்மை தான் சக்தி. உனக்கு அம்மா இருக்காங்க… நீ அம்மா கூட போய் தங்கிகிட்டா பெரிய ஸ்கூல்ல படிக்கலாம், நல்ல சாப்பாடு, துணிமணி எல்லாம் கிடைக்கும். வசதியா இருக்கலாம்” முத்துவும் அவனுக்கு வலியுறுத்த.
“அப்போ தாத்தா பாட்டிய யார் பார்த்துப்பா?” எதிர்கேள்வி கேட்டான் சக்தி.
“நான் பாத்துக்கறேன்பா!”
“எப்படி சேச்சா… நான் ஸ்கூல் விட்டு வந்தப்பறம் தானே நீங்க செடியெல்லாம் எடுத்துட்டு வியாபாரத்துக்கு வெளியே போறீங்க! அப்படி போகலன்னா நமக்கு காசு கிடைக்காதே, சித்தியும் உங்களை திட்டுவாங்கள்ல!” பொறுமையாக எடுத்துச் சொல்ல, அவனது பொறுப்புணர்ச்சியை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“இவங்க என் அம்மா கிடையாது. அப்புறம் ஏன் நான் இவரோட போகணும்? இவர் யாரு? ஏன் என்னை கூப்பிடுறாரு?” சக்தி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வர அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
“நீங்க பொய் சொல்லி என்னை ஏமாத்தப் பாக்குறீங்களா அங்கிள்?” ராம்சங்கரின் முகத்திற்கு நேராக கேட்டவனை, பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
“செம ஸ்மார்ட் ரா நீ! பயங்கரமா பேசுற, கேள்வியெல்லாம் கேக்குற… இப்போதைக்கு நான் உன்னோட வெல்விஷர். நான் சொன்னது எல்லாமே உண்மைடா! டிரெஸ்ட் மீ மை பாய்!” தன் நிலையில் இறங்கி பேசிய ராமை நம்ப மறுத்தான்.
“அப்படி அவங்கதான் என் அம்மான்னா, என் தாத்தா பாட்டியும் அவங்களுக்கு ரிலேஷன் தானே? அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ல… இல்லன்னா, அவங்களே இங்கே வந்து எங்க கூட தங்கிக்கலாம். ஆனா உள்ளே கூட வராம வெளியே ஏன் நிக்கிறாங்க? சோ, அவங்க என் அம்மா இல்ல. சரிதானே!” தனது கணிப்பைக் கூறி முகத்தில் அடித்தாற்போல் பேசிக்கொண்டே சென்றவனை தடுக்க முடியாமல் தவித்தனர்.
இக்கால குழந்தைகளின் அறிவார்ந்த கேள்வியில் தன்னை மறந்து நின்றான் ராம்சங்கர். வளரும் சிறுவனிடம் தாத்தா பாட்டியின் காழ்புணர்ச்சி மனதைச் சொல்லி குழப்பவிட அவனும் விரும்பவில்லை. சக்தி பேசுவதும் ஒரு வகையில் நியாயம் தானே எனத் தோன்றவும் செய்தது.
‘இவனது அம்மாவினிடத்தில் இவனை அழைத்துச் சென்று பேச வைத்து விட்டால் போதும், தன் தாயை உணர்ந்து விடுவான். ஆனால் அதுதான் சாத்தியப்படாதே!’ என்றெண்ணி பெருமூச்சு விட்டான். பிடிவாதமாக மறுப்பதில் அம்மாவும் பிள்ளையும் ஒரே நேர்கோட்டில் நின்றனர்.
வீம்பாக ஒரு உறவை வற்புறுத்தி உணர வைப்பதில் பிரச்சனைகள் தான் வளருமே தவிர பாசங்களும் உறவுகளும் பலப்படாது போலிருக்க மேற்கொண்டு சக்தியை வற்புறுத்தி அழைப்பதையும் தவிர்த்தான் ராம்சங்கர்.
“ஓகே சக்தி, டேக் கேர், தாத்தா பாட்டியை பத்திரமா பார்த்துக்கோ… நாம அப்புறம் மீட் பண்ணலாம்.” என்று விடைபெற்றுக் கொண்டு வந்தான்.
வெளியில் வந்து காரில் ஏறி மனைவியைப் பார்க்க கண்களை மூடி அமைதியாக இருந்தாள் விஸ்வாதிகா. “கதவு சாத்துற சத்தம் கேட்டும் அசையுறாளா பாரு? கல்நெஞ்சகாரி! உனக்கு இவ்வளளவு அழுத்தம் ஆகாதுடி!” கடுப்பில் கத்தவே ஆரம்பித்து விட்டான்.
“ம்ப்ச்… சும்மா சவுன்ட் விடாதே ராம், வண்டியை எடு… டைம் வேஸ்ட் பண்ணாதே!” இவள் வெகு சாதரணமாகச் சொல்ல,
“ஃபிலீங்க்ஸ் இல்லாத புண்ணாக்கு பொம்பளைடி நீ!” திட்டியபடி ஆத்திரத்துடன் காரினை எடுத்தான்.
சில நிமிட பயணத்தில் பாலக்காடு உயர்தர ஹோட்டலில் தங்குவதற்காக அறையை எடுத்த பொழுது, மீண்டும் இருவருக்கும் முட்டிக் கொண்டது.
“இப்ப எதுக்காக ரூம் எடுக்குற ராம்?”
“வந்த வேலை முடியல செல்லா!”
“சரி, கார் கீ குடு… நான் கிளம்புறேன். வேலை எல்லாம் அப்படியே விட்டுட்டு வந்திருக்கேன்.”
“உன்னை யாருடி போக விட்டா?” என்றவன் அவளைத் தன்னருகில் இழுத்து, கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டான்.
“கிராஸிங் யுவர் லிமிட்ஸ் ராம்! உன் வேலைக்கு என்னை ஏன்டா இழுத்துட்டு அலையுற?” இறங்கிய குரலில் பல்லைக் கடித்தாள்.
மனதில் குமைந்து கொண்டிருந்த கோபத்தை பொது இடத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.
“நான் மட்டும் என்ன இதெல்லாம் எதிர்பார்த்திட்டா வந்தேன்? இப்ப நான் கிளம்பிப் போனாலும் என்னால அங்கே இருக்க முடியாது. சோ, ரெண்டுநாள் இங்கே இருப்போம்.” அவளை இழுத்துக் கொண்டே டிபன் சாப்பிட தனி கேபினுக்கு அழைத்து வந்திருந்தான்.
“ஓவரா ரியாக்ட் பண்ணாதே ராம்! கையை வீசிட்டு வந்து ரெண்டுநாள் ஸ்டே பண்ணணும்னு சொன்னா எப்படி?”
“டிபன் முடிச்சிட்டு ஷோ-ரூம் கூட்டிட்டு போறேன். வேணும்ங்கிறதை பெர்செஸ் பண்ணிக்கோ, மூனு வேலை சாப்பாட்டுக்கு ஹோட்டல் இருக்கு. வேறென்ன வேணும்?”
“உன் அவசர முடிவால என் வொர்க் எல்லாம் ஸ்பாயில் ஆகுறது தெரியலையா?”
“டோன்ட் வொரி செல்லா டார்லிங்… உன் வேலையெல்லாம் அடுத்தவங்களுக்கு மாத்தி விட்டாச்சு. உனக்கு மூனுநாள் லீவு ஆல்ரெடி சாங்க்ஷன் ஆகிடுச்சு.”
“என்ன சொல்ற நீ?”
“உன் பாஸ்கிட்ட, அதாவது என் மாமனார் கிட்ட உனக்காக நானே லீவு கேட்டானாக்கும்!”
“கடுப்பை கிளப்பாதேடா!”
“உண்மைடி வெல்லமே… நாம செகண்ட் ஹனிமூன் போறோம்னு சொன்னேன். யோசிக்காம லீவ் சாங்க்ஷன் பண்ணிட்டாரு தட் கிரேட் ஜென்டில்மென்!” சிலாகித்து சொல்லவும் கொதித்துக் கொண்டிருந்தவள், அவனது தலையை குனிய வைத்து வகையாக கொட்டுகளை வைத்தாள்.
“அடியே, தனி கேபினா இருந்தாலும் சிசிடிவி கேமரா நம்மை நோட் பண்ணும்டி! உன்னைத்தான் எல்லாரும் கொடுமைக்காரியா பாப்பாங்க, விடு செல்லா!” தலையைக் கொடுத்து அலறியபடி வஞ்சனையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டான்.
“பார்க்கட்டும்டா பிசாசே! அப்படியே சோஷியல் மீடியால அப்லோட் பண்ணி விடட்டும். வெளங்காதவன் என்ன பண்ணித் தொலைச்சானோ, இப்படி அடி வாங்குறான்னு தான் பேசிப்பாங்க, ஜஸ்ட் ஐ டோன்ட் கேர்!” சகிப்புத்தன்மையை கைவிட்டவளாக மேலும் பல கொட்டுக்களை வைத்தாள்.
அவன் சொன்னபடியே ஷோரூம் சென்று உடையை வாங்கும் பொழுதும், “சேலை எடுத்துக்கோ செல்லா… பெர்ஃபெக்ட் ஹனிமூன் சூட் அது.” அடங்காமல் வாயைவிட்டு மறைமுகமாக அடிகளை வாங்கி, கடுப்பை சம்பாதித்துக் கொண்டான்.
அறைக்குள் வந்து சிறிது நேரத்திலேயே விஸ்வநாதன் செல்பேசியில் அழைத்து நிலவரத்தை கேட்க, வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தான் ராம்சங்கர்.
அவருடனான பேச்சினை மனைவியும் கேட்க வேண்டுமென்ற முடிவெடுத்து, அவளை எங்கும் நகர முடியாதபடிக்கு கைகளை இறுகப் பற்றிக்கொண்டு லவுட் ஸ்பீக்கரில் பேசத் தொடங்கினான்.
சக்தியின் பற்றாக்குறை வாழ்வை, அவன் கேட்ட கேள்விகளை எல்லாம் சொல்லச் சொல்ல சிடுசிடுத்துக் கொண்டிருந்தவளின் முகம் மெல்ல மெல்ல இறுகத் தொடங்கியது.
“சக்திகிட்ட எப்படியாவது உண்மையைச் சொல்லி நம்ம பக்கம் அழைச்சுக்கணும் அங்கிள்… பெத்த பிள்ளைகிட்ட இப்படியொரு பொய்யை சொல்லி என்ன கிடைக்கப் போகுது அவங்களுக்கு?” மனம் ஆறாமல் ஆதங்கப்பட்டான் ராம்சங்கர்.
“அவங்க பேரன் அவங்களுக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்குறாங்க மாப்ள… இப்ப போயி கேட்டு நின்னா வீணா பிரச்சனை வந்து மனக்கசப்புதான் மிஞ்சும். ஒருதடவ பாக்கணும்னு நீங்க ஆசைப்பட்டதால சரின்னு நானும் ஏற்பாடு பண்ணேன். இதுக்கு மேல எதுவும் வேண்டாம்.” மனத் தாங்கலுடன் பேசியவரின் குரலில் அத்தனை வருத்தம் கொட்டிக் கிடந்தது.
“இல்ல… அவங்க வழியிலேயே நாமளும் திரும்ப கேஸ் போட்டு எகனாமிக்கலா அவங்க நிலைமை சரியில்லன்னு சொல்லி பிள்ளையை கேக்கலாம் அங்கிள்!” ராம்சங்கர் கூறவும் சட்டென்று இடையிட்டாள் விஸ்வாதிகா.
“கொஞ்சம் அடங்குறியா! எதுக்கு இத்தனை கிறுக்குத்தனம் பண்ணிட்டு இருக்க… யாரும் உன்கிட்ட ஏமாற மாட்டாங்க ராம்!”
“ஏய், என்ன உளர்ற?”
“இவனுக்கு நல்லது செஞ்சா உன் பிள்ளைக்காக உன் பின்னாடியே வந்துடுவேன்னு நினைச்சு தானே நீ இதெல்லாம் பண்ற!” அழுத்தமாய் கேட்கவும், ராம்சங்கர் தலையில் கை வைத்துக் கொள்ள, அந்த நேரமே விஸ்வநாதனும் அழைப்பினைத் துண்டித்து விட்டார்.
“நல்லவனா நடிக்கிறதும் தப்புன்னு சொல்ற… நிஜத்துக்குமே நல்லவனா மாறுனாலும் தப்பானவனாவே பாப்பியா நீ?”
“உண்மையை சொல்லு சக்தியை உன் பிள்ளையா ஏத்துகிட்டு, உன்கூட தங்க வச்சுக்க உனக்கு சம்மதமா? அவனை இந்த பக்கம் கூட்டிட்டு வந்து அங்கே இருக்கிறவங்களை உசுரோட கொல்லப் போறியா?” அவளிடம் இருந்து வார்த்தைகள் வெடித்துக் கொண்டு கிளம்பின
“நீ ஏண்டி அவங்களைப் பாக்கற? அவன் வளர்ற விதத்தை பாரு… கொஞ்சம் யோசி, உன் பிள்ளை பஞ்சத்துல அடிபட்டு வளரான். நீ காபி குடிக்கவே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போற… உனக்கு பொறந்து பாவத்துக்கு அவன் அனுபவிக்கணுமா? உன் வீட்டுப் பெரியவங்க செஞ்ச அதே அதே முட்டாள்தனத்தை நீ, உன் பிள்ளைக்கு செஞ்சிட்டு இருக்க… அதை யோசி செல்லா!”
இவன் எத்தனை விதமாய் எடுத்துச் சொன்னாலும் கேட்கவே மாட்டேனென்று காதுகளை பொத்திக் கொண்டு, “எனக்கு அவன் வேணாம், உனக்கும் வேண்டாம்.” கதறலாக கூறி அழத் தொடங்கினாள் விஸ்வாதிகா.