தேனாடும் முல்லை-13

தேனாடும் முல்லை-13

தேனாடும் முல்லை-13

தன்னால் முடிந்த மட்டுக்கும் அழுது ஒய்ந்தாள் விஸ்வாதிகா. அவளை அணைத்து ஆறுதல் கொடுத்தானே தவிர, ‘அழாதே’ என்று சொல்லவில்லை ராம்சங்கர். அப்படிச் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இல்லை என்பதுதான் உண்மை.

“இப்ப சந்தோசமா உனக்கு? நான் அழறதைப் பார்த்து நல்ல ஹாப்பியா என்ஜாய் பண்ணு!” அழுகையோடு கோபத்தில் கணவனை பிடித்துத் தள்ளிவிட்டு கடிந்து கொண்டாள் ஆதி.

“கரெக்டா சொல்லிட்டடி! என் பொண்டாட்டியோட அழுமூஞ்சி பாக்க ஆசைப்பட்டு தான் இவ்வளவு தூரம் உன்னை இழுத்துட்டு வந்து, அவனையும் போய் பார்த்தேன்.” நக்கலாகச் சொல்ல, கண்ணீரோடு அவன் முகத்தை ஏறிட்டாள்.

“ஏன்டா உனக்கிந்த கொலைவெறி?”

“ஹாங்… உங்கப்பா கல்யாணத்துக்கு கொடுக்கறேன்னு சொன்ன வரதட்சணைய சரியா குடுக்கல. அதான், உன்னை அழ வைச்சு பழி தீர்த்துக்கறேன்!” நையாண்டியுடன் கூறிய வேளையில் அவளும் இயல்பிற்கு வந்திருந்தாள்.  

“வாய் அடங்குதா பாரு… கொஞ்சம் கூட பொண்டாட்டி வேதனைப்படுறாளேன்னு வருத்தப்படுறியா பிசாசே… நீ, யாரைத் தான் பாவமா பார்த்தே? என்னை பார்க்கறதுக்கு!” தன்னிலையில் இருந்தே அவள் வெடிக்க ஆரம்பிக்க, அழுகை நின்று கோபம் முழுவதும் கணவனின் மீது திரும்பியிருந்தது.

“சரி விடு, நான் இப்படித்தான்னு தெரிஞ்ச விஷயம் தானே! இன்னும் கொஞ்சநேரம் மூச்சு பிடிச்சுட்டு அழு… அப்புறமா ஸ்ட்ராங்கா பாதாம்பால் குடிச்சிட்டு ஹனிமூன் கொண்டாடுவோம்.” அசராமல் வார்த்தைககளை விட்டு அலட்டிக் கொள்ளாமல் அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

“ரோசமே இல்லடா…. எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சிட்டு வாங்கிக்கற!”

“என்ன பண்றது? பேய்க்கு வாக்கப்பட்டா பிசாசு வேஷம் போட்டுத்தானே ஆகணும்!”

“என்னடா ஓவரா பேசுற…”

“அசராம அடி வாங்கிட்டு பிசாசு மாதிரி நான் சிரிக்கிறத சொன்னேன் செல்லமே!”

“அப்போ பேயி?”

“அது எனக்கு வாழ்க்கை கொடுத்த மகராசிய சொன்னது, நீ வொரி பண்ணிக்காதே!” அசராத கவுண்டர் கொடுத்து மனைவியின் உஷ்ணப் பார்வையில் குளிர் காய்ந்தான்.

அவளின் அதிரடிகளுக்கு சாமரம் வீசி, அடுத்த பத்தாவது நிமிடம் தனது மடியில் மனைவியின் தலைக்கு தஞ்சம் கொடுத்து அவளின் கோபத்தை தணித்திருந்தான் கணவன்.

“ஏன் ராம் என்னை இங்கே கூட்டிட்டு வந்தே… ஒழுங்கா பதில் சொல்லு!” அழுத்திக் கேட்க,

“உன் மைன்ட் ரிலாக்ஸ் ஆகணும்னு தான் உன்னை வம்படியா இழுத்துட்டு வந்தேன். மிஷின் பாதி மனுஷி மீதின்னு நீ வாழ்ந்துட்டு இருக்க செல்லா… இன்னும் கொஞ்சநாள் போனா ரோபாவா மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.” வருத்தத்துடன் அவளின் தலை கோதினான்.

“நான் எப்படியோ மாறிட்டு போறேன், உனக்கென்ன வந்தது?” திமிராகக் கேட்டவளின் தலை இன்னும் அவனது மடியில்தான் இருந்தது.

“குட் குவஸ்டீன்… உன் கழுத்துல என்னை கட்டி வைக்காம இருந்திருந்தா, எப்படியோ போன்னு உன்னை விட்ருப்பேன். ஆனா விதி வலியது வெல்லமே! பிடித்தம் இருக்கோ இல்லையோ ரெண்டுபேரும் ஒன்னு சேர்ந்துட்டோம். இந்த ரிலேஷன் நம்மை பொருத்த வரைக்கும் கமிட்மெண்ட்ஸா இருந்தாலும் பெரியவங்க பார்வையில நமக்கான வாழ்க்கை இது. சொல்லப்போன அவங்க பார்த்து பார்த்து அமைச்சுக் கொடுத்த ரெண்டாவது வாழ்க்கை. இதுக்கு மேல டிவோர்ஸ், சண்டை சச்சரவுன்னு சொல்லி முட்டிட்டு நிக்க எனக்கு பிடிக்கல.” தீர்க்கமாக கூறியவனை நம்பாமல் பார்த்தாள்.

“பிலீவ் மீ செல்லா… எங்க வீட்டுல பெருசுங்களோட அட்வைஸ் டார்ச்சர் அன்ட் எனக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பாக்கணும்ங்கற ஆசையும் வந்ததால எடுத்த முடிவு இது. அதோட லைஃப்லாங் உன்கூட விதண்டாவாதம் பண்ணி குஸ்தி விளையாட எனக்கு தெம்பில்ல.”

“அப்ப நான்தான் சண்டைக்கு அலையுறேனா?”

“சொல்றதை முழுசா கேளுடி! வீட்டுக்கு வந்தா புள்ளைங்களோட விளையாடினோமா, பொண்டாட்டி கூட ஆசையா பேசி லவ் பண்ணி லைஃப் என்ஜாய் பண்ணோமான்னு இருக்கணும். அதுக்கு யோசிச்சுதான் இப்படி ஒரு ஐடியா வந்தது.”

“ரொம்ப நல்லாவே மூளையை கசக்கி இருக்க… ஆனா பாரு, நீ இருக்கிற லட்சணத்துக்கு யாரா இருந்தாலும் பத்ரகாளியா மாறி உன்னை நிம்மதியா வாழ வைக்க மாட்டா!”

“என்னைப் பார்த்தா அவ்வளவு கொடுமைகாரனாவா தெரியுது?”

“ச்சே, ச்சே… அந்த வில்லன் போஸ்டுக்கெல்லாம் நீ வொர்த் இல்ல. அவனை விட அலும்பு பிடிச்சவன்டா நீ… உன் சந்தோசம், உன் துக்கம், உன் வேலைன்னு மட்டுமே சுயமா யோசிச்சு எல்லாரையும் உன் பக்கம் திரும்பி பாக்க வைக்கிற பார்த்தியா… அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கு வராது.”

“இதுல என்ன தப்பிருக்கு? என் சம்பாத்தியத்துல என் பொண்டாட்டி, புள்ள கூட நான் சந்தோசமா இருக்கும்போது அவங்களுமே ஹாப்பியா தானே இருப்பாங்க? உண்மையைச் சொல்லு… இத்தனை நாள்ல நீ, என்கூட சந்தோசமா ஒரு நிமிஷம் கூட இருந்ததே இல்லையா?” அவளையே உற்றுப் பார்த்துக் கேட்க,

‘இல்லையே’ என தலையசைத்து மறுக்க ஆரம்பித்து, பின் இதழ் விரிந்த சிரிப்போடு, “நம்ம கல்யாணத்துக்கு பிறகு நல்லாவே சிரிக்க ஆரம்பிச்சுருக்கேன் ராம்!” என்றவளை ஆவேசமாய் அள்ளிக் கொண்டான்.

“இந்த வார்த்தை எனக்கு எத்தனை சந்தோசத்தை குடுக்குது தெரியுமா? நீ இதேபோல லைஃப் புல்லா என்னை நினைக்கணும். அதுக்குதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.”

“ஷப்பா… செகண்ட் ஹனிமூன் யாரும் இப்படி பிளான் பண்ணியிருக்க மாட்டாங்கடா!” கிண்டலடித்து அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

 

“வேற வழி? உன்கிட்ட நேரடியா சொன்ன பாலைவனத்துல தானே ரூம் போடச் சொல்ற, அதான்…” என்றவன் அதற்குமேல் அவளை பேச விடவில்லை.

‘மகனைப் பார்த்தாயா? அவனுக்காக யோசித்தாயா!’ என்றெல்லாம் கேட்கவே இல்லை. மனைவியை அவள் போக்கிலேயே சென்று அறிந்துகொள்ள முயற்சி செய்தான். வழியில் பார்த்த நண்பனாக மகனை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு தனது ஆசையால் அவளை குளிர வைக்க நினைத்தான்.

“எந்த ப்ரிகாசனும் இல்லாம என்னால முடியாது ராம்!” வெகு ஜாக்கிரதையாக இவள் தடுக்க, சட்டென கோபம் கொண்டான்.

“ஒருநாள்ல பிள்ளை வந்துடாதுடி… அதுவும் நீ இருக்கிற மனநிலைக்கு எதுவும் உள்ளே தங்காது.” கிறக்கத்தோடு அவளின் வாயடைக்க, மறுப்பு கூற முடியவில்லை.

“கெட்டபையன்டா நீ!” என்றவளின் கரங்கள் கணவனைத் தழுவிக் கொண்டன.

எவ்வளவு சண்டையிட்டாலும் இவளை வழிக்கு கொண்டு வருவது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்க, அவளின் உணர்வுகளை தூண்டிவிட்டு உணர்ச்சிகளுக்கு தன்னை வடிகாலாக்கிக் கொண்டான் ராம். அவன் பாஷையில் எந்த மோதலும் இவர்களுக்கு இடையேயான மோகத்தை தடைசெய்து விடாது.

மறுநாள் காலையில் ஆதிக்கு முழிப்பு தட்டும்போதே பத்து மணியை கடந்திருந்தது. “படுபாவி… பேசிப்பேசியே வேண்டியதை சாதிச்சுக்கிறான், எங்கே அவன்?” முணுமுணுப்புடன் தேடும்போது குளியலறையில் இருந்து வெளியில் வந்தான் ராம்சங்கர்.

“செகண்ட் ஹனிமூன் நல்லா என்ஜாய் பண்ணியா செல்லம்?” விஷமமாய் கண்சிமிட்டிக் கேட்க, அவனை நோக்கி வழக்கம் போல தலையணை பறந்து வந்தது.

“ஹோட்டல் பிராப்பர்டி இது… உன் இஷ்டத்துக்கு தூக்கி எறிஞ்சா பில் கட்ட என் பர்ஸ் வெயிட்டா இல்ல.”

“ஊருக்கு போலாம் ராம்… ப்ளீஸ், உன்கூட ஊர் சுத்துற மூட்ல நான் இல்லவே இல்ல!” முதன்முதலாய் சிணுங்கி, கெஞ்சலாய் சொன்ன மனைவியை இமைக்காமல் பார்த்து ரசித்தான்.

“இதுதானா…. எதிர்பார்த்த நன்னாளும் இதுதானான்னு பாடத் தோணுது வெல்லமே! நீ இப்படியெல்லாம் என்கிட்டே கொஞ்சிப் பேச மாட்டியான்னு எவ்வளவு எதிர்பார்த்திருப்பேன் தெரியுமா? நீ ப்ளீஸ் போட்டதுக்கே உன்கிட்ட நான் சரண்டர் ஆகிட்டேன்டி! என்னை கண்கலங்காம வச்சு காப்பாத்து தங்கமே!” ஏகத்திற்கும் அசடு வழிந்து நிற்க, அவனைக் கடித்துக் குதறும் ஆத்திரம் வந்தது.

“டேய், உன் டிராமாவை நிறுத்துறியா? இப்ப குளிச்சுட்டு நான் கிளம்புறேன், நீ எப்படியோ வந்துக்கோ!”

“ஒரே ஒருநாள் இரு செல்லா!”

“எனக்கு போர் அடிக்குது ராம், வெட்டியா உக்காந்தா பைத்தியமாகிடுவேன்!”  

“உன்னை யாருடி வெட்டியா விடப் போறா?” நமுட்டுச் சிரிப்புடன் கூற,

“நேத்து நடந்த அசட்டுத்தனம் இன்னைக்கு நடக்காதுடா வாத்து! நான் இங்கே இருக்கணும்னா, எனக்கு தனி ரூம் போடு!”

“கிறுக்கி, நெனப்பு போகுது பாரு! நான் இன்னைக்கு முழுக்க நல்ல பிள்ளையா இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.” அப்பாவியாகப் பேசியவனை நம்பாமல் பார்த்தாள்,

“உனக்கு வொர்த்தான வேலை ஒன்னு வெயிட்டிங்ல இருக்கு செல்லா, கொஞ்ச நேரத்துல உங்கப்பா ஃபோன் பண்ணுவார், என்னன்னு கேட்டுக்கோ!” என்றபடி அவளை குளியலறைக்குள் தள்ளி விட்டான்.

இவள் வெளியே வரவும் விஸ்வநாதன் செல்பேசியில் மகளை அழைக்கவும் சரியாக இருந்தது.

“செல்லம்மா… மாப்ள என்ன சொல்றாருன்னு கேட்டு செஞ்சு குடுடா!”

“உங்க கருவேப்பில என்கிட்டே ஒன்னும் சொல்லலையே ப்பா?” என்றபோதே இடையிட்டான் ராம்.

“நீ டிபன் சாப்பிட்டு முடிச்சதும் சொல்லலாம்னு இருந்தேன் செல்லா!” என்றதும்

“சரிப்பா… அவர்கிட்ட கேட்டுக்கறேன்!” பேசி அழைப்பினை துண்டித்தாள்.  

அறைக்கு காலை உணவை வரவழைத்து உண்டு முடித்த நேரத்தில் அவள் என்ன செய்ய வேண்டுமென்பதை ராம் எடுத்துச் சொல்ல அடுத்த சண்டை வெடித்தது.

“என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க, மாமாவும் மாப்பிள்ளையும்? நான் ஊருக்கு போயி பேசிக்கறேன்!” ஆத்திரத்துடன் அப்பொழுதே கிளம்பி நிற்க, அந்த இடைவெளியில் விஸ்வநாதனை அழைத்து செல்பேசியை மனைவியின் கைகளில் திணித்தான்.

“சக்தி வீட்டுக்கு போயி பில்டிங் லெவல் பார்த்துட்டு வந்துடு செல்லம்மா!” அவரும் சாதரணமாகச் சொல்ல,

“முடியாதுப்பா, வேற ஆளை அனுப்புங்க!” தந்தையிடமே வெடித்தாள்.

“இதுக்குன்னு தனியா ஆளை அனுப்ப முடியாது. நீ அங்கே தானே இருக்க, போயி பார்த்துட்டு வா!”

“கம்பெல் பண்ணாதீங்க டாடி!”

“கம்பெனி சிஈஓ சொல்றேன், அங்கே போயி பார்த்துட்டு வந்து எனக்கு ரிப்போர்ட் பண்ற… ஆர்டர் ஒபே பண்ணாதவங்க என் கன்செர்ன்ல இருக்க வேண்டாம்.” கறாராகச் சொல்லி வைக்க, அடுத்தநொடி வேகமாய் கணவனின் கழுத்தை நெறிக்க வந்து விட்டாள்.

“அச்சோ… ஏன்டி இவ்வளவு எமோசனல் ஆகுற? தொழில்னு வந்தப்புறம் விருப்பு வெறுப்பு பாக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

“அதுக்காக நான் செத்து போனவன்னு சொன்ன வீட்டுக்கே என்னை போய் பாக்கச் சொல்வியா?”

“நீ விஸ்வா பில்டரோட என்ஜினியராத் தான் வரப்போற… ஸ்வாதியா இல்ல. நாங்க சொல்ற மாதிரி அது சக்தி வீடுன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ! எந்த இடத்துலயும் நீ வாழ்ந்த வீடுன்னு நினைச்சும் பார்க்காதே! அவங்க கூட பேசுற வேலை நமக்கு இல்லவே இல்லை. நீ உன் வேலையை பார்த்துட்டு வந்திடலாம், சிம்பிள்!”

அவன் என்னமோ இலகுவாய் சொல்லி விட்டான். அவளுக்குத் தான் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுதே உள்ளம் ரணமாய் வலித்தது. அதோடு, ‘இது சாத்தியப்படுமா?’ என்ற பெரும் சந்தேகமும் முளைத்தது.

“அதெப்படி முடியும் ராம்? வீட்டுல இருக்கிறவங்க கண்ணுல படாம வேலை பார்க்க முடியாது.”

“அதெல்லாம் முத்து மூலமா பேசி அவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு!” என்றவனை ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள்.

“சக்தி படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணப் போறேன். பணமா குடுக்கறதுக்கு பதிலா இந்த வீட்டை இடிச்சு குடித்தனம் பண்ற மாதிரி நாலஞ்சு வீடுகளா கட்டித் தரேன். அதுல வர்ற வருமானத்தை வச்சு அவன் படிக்கட்டும்ன்னு நேத்து நைட்டே உங்கப்பாகிட்ட பேசி, முத்து மூலமா அவங்ககிட்ட சொல்ல வைச்சு சம்மதமும் வாங்கியாச்சு…” விளக்கமாக கூறி முடிக்க, ‘நீ செய்றவன் தான்!’ என்ற பார்வையை மட்டுமே தந்தாள்.

“ஓவரா கிறுக்குத்தனம் பண்றியோன்னு தோணுது ராம்… எப்படியோ போ! ஆனா என்னையும் அவனையும் மட்டும் சேர்க்கணும்னு நினைக்காதே!” கூறிவிட்டு வேண்டா வெறுப்பாக சக்தியின் வீட்டிற்கு கணவனுடன் கிளம்பினாள்.

வழக்கமான ஜீன்ஸ் ஓவர்கோட், தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க் என பக்கா மாடர்னாக அங்கே சென்றாள். மனதை முயன்று தான் வந்த வேலையில் மட்டுமே மூழ்கடித்துக் கொண்டு எங்கும் பிசகாமல் கடமையாகச் செயல்பட ஆரம்பித்தாள்.

ராம்சங்கரும் முத்துவும் உதவிக்காக அவளின் துணையாக நின்றனர். பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு நிலையில் இங்கு வருவதை நினைத்து நொடிக்குநொடி அவள் மனம் ஆச்சரியப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இரண்டு சுற்றுகளாக வீட்டை நன்றாகச் சுற்றிப் பார்த்து விட்டு தோட்டத்திலும் வீட்டின் முன்வாயிலிலும் மண்ணை சற்று தோண்டிப் பார்த்தாள். மண்ணின் தரத்தை பரிசோதிக்க முத்துவை அனுப்பி வைத்தாள். பின்னர் அங்கிருந்த சிறிய கல்லைக் கொண்டு சுவற்றை பலமாய் தட்ட அது வேகமாக பெயர்ந்து விழுந்தது.

அறையை விட்டு வெளியே வந்து நடப்பதை பார்க்க கந்தனின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவர்களுக்குள்ளான பேச்சும் கூட அனேகமாக ஆங்கிலத்தில் நடக்க குரலைக் கூட உள்ளே இருப்பவர்களால் அனுமானிக்க முடியவில்லை. சக்தியும் பள்ளிக்குச் சென்றிருந்தான்.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாலும் தொப்பியணிந்த அவளது பின்புறத் தோற்றத்தை பார்த்து அவர்களால் சுத்தமாய் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை உருவத்தில் முழுதாக மாற்றம் பெற்று நிற்பவள், எதிரில் சென்று நின்றாலும் அத்தனை சுலபமாய் அனுமானித்து விடமுடியாது.  

இரண்டு மணிநேரம் வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு ஹோட்டலுக்கு வந்தனர். அன்றைய நாளின் மிச்சப் பொழுதுகளை கட்டிடத்திற்கான தோராயமான மதிப்பீட்டை கணித்து அனுப்புவதில் முனைந்து செயல்பட்டாள்.

“ஃபுல்லா இடிச்சு புது மண்ணு அடிச்சுட்டு தான் வேலையை ஆரம்பிக்கணும். பார்ட்டி கொட்டேசன் பார்த்து ஓகே சொல்லிட்டா புளூ பிரின்ட் போட்டுடலாம் பாஸ்!” மாஸ்டர் பில்டராக, தந்தையிடம் பட்டும் படாமல் பேசி, கணவனை ஓரப்ப்பார்வையில் பார்த்தாள்.

“இன்னைக்கு என் பேமன்ட் ஃபைவ் தவுசன்ட் பார்ட்டிகிட்ட கேட்டு வாங்கிக் குடுங்க பாஸ்!” அசராமல் கேட்க,

“இட்ஸ் டூ மச் செல்லம்மா!” பெற்றவர் பல்லைக் கடித்தார்.

“அஸ் எ பில்டரா என்னை டிரீட் பண்ணுங்க போதும்.” தந்தையிடமே கடுப்பைக் காண்பிக்க, மகளின் செல்பேசியிலேயே,

“இவளை மாத்த முடியாது மாப்ள, பைசல் பண்ணிடுங்க…” அலுப்புடன் கூறி அழைப்பை துண்டித்தார்

“இதெல்லாம் உங்க கம்பெனி குடுக்காதா செல்லா?”

“அங்கே மாசச் சம்பளம் தான் மிஸ்டர்.வாத்து… இப்படி  தனியா ஃபீல்ட் விசிட் பண்ணி கொட்டேஷன் கொடுக்கறதுக்கு, சம்மந்தப்பட்ட பார்ட்டி தான் பே பண்ணனும்.” நடைமுறையைக் கூறியவள்,

“எங்கே? இன்னும் கிரெடிட் ஆகல?” மேலும் கடுப்பைக் கிளப்ப, ‘கொடுமையே’ என பணம் அனுப்பி வைத்தான்.

“இந்த செலவை எல்லாம் உன் மாமனார் கிட்ட தள்ளி விட வேண்டியது தானே? நீ ஏன் பொறுப்பெடுத்துக்கற?” சீண்டலாய் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.

“பெத்தவளுக்கே பிள்ளை மேல இல்லாத அக்கறை, பேரன் மேல எனக்கென்ன வேண்டி இருக்குன்னு அவரும் கை கழுவிட்டாரு!”

“ஓ… இப்படி சொன்னா நான் அவனை திரும்பி பார்த்திடுவேன்ற நினைப்பா அவருக்கு?”

“என்ன எழவோ… அதை அவர்கிட்டயே கேட்டுக்கோ! யாரா இருந்தாலும் அவர் பொண்ணைத் தாண்டி, அவ சம்மதிச்சா தான் அவர் பார்ப்பாராம்!”

“அப்போ இந்த கன்ஸ்ட்ரக்ஷன்க்கு யார் ஸ்பான்சர் பண்ணப் போறா?” நக்கலாகக் கேட்க,

“நானேதான்… உனக்கு நல்லது செய்ய நினைச்சதோட விலை இந்த பில்டிங் கட்றது என் தலைமேல விழுந்திருக்கு.” பாவமாய் கூறியவனை சின்னச் சிரிப்போடு பார்த்து,

“இத்தனை நாள்ல இப்படி யாரும் யோசிக்கல… இப்படியாவது நல்லது பண்ணு ராம்!” அன்போடு கூறி செல்லமாய் தலையைக் கலைத்து விட, ஜென்ம சாபல்யம் அடைந்தவனாக மகிழ்ந்தான் ராம்சங்கர்.

“நீ ஏன்டா சக்திய அவாயிட் பண்ற?” அவளின் அமைதியான மனநிலையை உத்தேசித்தே இவனும் கேட்க, அவளின் முகம் கூம்பிப் போனது.

“நல்லதோ கெட்டதோ, சக்தி, அவனோட தாத்தா பாட்டி நிழல்ல வளர்ந்துட்டு வர்றான். இந்த வயசுல அவன் முன்னாடி போயி நின்னு அம்மாவா, அவங்களான்னு யோசிக்கிற குழப்பத்தை அவனுக்கு குடுக்க விரும்பல ராம்… விவரம் தெரிஞ்ச பிறகு அவனா வந்து சேர்ந்தா நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்.”

“இதுல என்ன குழப்பம் வரும் செல்லா? அம்மா அப்பா இல்லைங்கிற ஏக்கம் தான் அவன் மனசுல வளரும்.”

“தேவையில்லாம அவனைச் சார்ந்தவங்களை பழி சொல்ற நிலைமை வரும். அது இத்தனை நாள் அவங்களோட வளர்ந்த பாசத்தை மறக்கடிச்சு விரோதத்தை உண்டு பண்ணினா, அது, அவன் வயசுக்கு நல்லதில்ல…

அவங்க தாத்தா பாட்டி காலத்துக்கு பிறகு எப்படியும் நம்மை தேடி வருவான்ற நம்பிக்கை இருக்கு. அப்போ என்னை புரிஞ்சுப்பான். இல்லன்னா கூட பாதகமில்லை. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்காம வாழ்ந்து பழகிப் போயிடுச்சே… அப்படியே இருந்துட்டுப் போறோம்.” சொல்லி முடித்தவளின் முகம் அழுகை எட்டிப் பார்க்கும் நிலையில் இருக்க, முயன்று தன்னை அடக்கிக் கொண்டாள்.

“இப்படிதான் உனக்குள்ள பிரசர் ஏத்திக்கிற!” அக்கறையுடன் ராம் கண்டிக்க,

“போடா… எல்லாம் உன்னால தான். வீணா இங்கே கூட்டிட்டு வந்து என் வேதனையை கிளறி விட்டுட்ட…” கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டதில், வழக்கம் போல அவளைத் தாங்கிக் கொண்டான்.

 

 

 

 

 

 

  

error: Content is protected !!