தேனாடும் முல்லை – 6

தேனாடும் முல்லை – 6

தேனாடும் முல்லை-6

ராம்சங்கரின் அதிர்ந்த பார்வைக்கு அலட்சிய பாவனையையே பதிலாகத் தந்தாள் விஸ்வாதிகா.

“என்னடி சொல்ற? ஏட்டிக்கு போட்டியா பேசணும்னு வாயில வந்ததை உளறி வைக்கறியா?”

“நான் எதுக்கு உளரணும்?”

“ம்ப்ச்… உண்மையைச் சொல்லு, நீ ஒரு விதவைன்னு தான் சொன்னாங்களே தவிர உனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு யாரும் என்கிட்ட சொல்லவே இல்லை.” பதட்டமும் கோபமும் அடங்கியிருந்தது அவனது கேள்வியில்.

“நீ பொறுமையா தெளிவா கேட்டுருக்கமாட்டே ராம்… உன் குடும்பத்துல எல்லாருக்கும் தெரியுமே!” தோள்குலுக்கி சொன்னவள் தனது சிறிய டிராவை இழுத்து மாத்திரை ஒன்றை கையில் எடுத்தாள்.

அவளின் பேச்சிற்கு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தவன், இப்போதைய அவளின் செயலுக்கு வெளிப்படையாகவே கொதித்துப் போனான்.

“இதென்னடி பழக்கம்? தினமும் இப்படி ஒரு மாத்திரையை போட்டுக்கற, அப்படியென்ன உடம்புக்கு?” கோபத்துடன் அவளின் கையில் இருந்த மாத்திரை அட்டையை பறித்தவன் பெயரைப் பார்த்ததும் மீண்டும் அதிர்ச்சியில் கண்களை விரித்தான்.

“என்னடி இது? ஏன் இந்த பில்ஸ் எடுக்கற? நாம் பேபி வேணாம்னு எல்லாம் பிளான் பண்ணலயே!”

“நீ பண்ணலன்னு சொல்லு ராம். ஆனா, எனக்கு பேபி வேணாம்.” என்றவளை அறைந்து தள்ளும் ஆத்திரம்தான் வந்தது.

“தலையை பிச்சுக்க வைக்கிறடி? இப்ப எதுக்காக உனக்கு குழந்தை வேணாம்னு சொல்ற?”

“டெய்லி நான் டேப்லெட் போடுறதை பார்த்தும் கேக்காம இருந்தவனுக்கு, இன்னைக்கு என்ன புதுசா அக்கறை வந்து உதைக்குது?”

“நீ விட்டமின் டாப்லெட் போடுறேன்னு நினைச்சேன் செல்லா… சைட்ல எந்த உயரமா இருந்தாலும் தம் பிடிச்சிட்டு ஏறி நிக்கிற… வெயில்ல அலையுற… அதுக்குத் உன்னை பிரிபேர் பண்ணிக்கிறதா நினைச்சேன்.”

“ஆனாலும் கேட்டுருக்கலாமே ராம்?”

விடாமல் கேட்டதில் இவனுக்கு தான் மூச்சுமுட்டிப் போனது. சத்தமில்லாத அனுவீச்சுகளை சந்திக்க திராணியின்றி தன்மனதில் தோன்றியதை கேட்டுவிட்டான்.

“சரி, இப்ப கேக்குறேன். எதுக்கு இப்ப பேபி வேண்டாம்னு சொல்ற?”

“எனக்கு எப்பவுமே வேண்டாம். உனக்கு பிள்ளை பெத்துக் கொடுக்கிற பெரிய மனசெல்லாம் எனக்கில்ல ராம்…” மிக எளிதாக தனது முடிவினைக் கூறி மாத்திரையை முழுங்கினாள்.

“ஏன் உன் அழகு போயிடுமா? இல்ல, பிள்ளை பெத்து வளர்க்கத் தகுதியில்லாத அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போயிட்டேனா?” அவளது அலட்சியமான வெறுமையான பேச்சு, ராமிற்கு பல வகையாக யோசிக்கத் தோன்றியது. 

‘ஒருவேளை இவள் தன்னை சராசரி மனிதனாகக் கூட நினைக்கவில்லையோ!’ என்ற கழிவிரக்கத்தில் கேட்டு விட்டான்.

இவன்தான் கவனித்துக் கொண்டே வருகிறானே… இதுநாள் வரையில் கணவனைத் தனது கைப்பொம்மையாக மட்டுமே ஆட்டுவிக்கிறாளே தவிர அவனது பேச்சிற்கு மதிப்பு கொடுத்து இவள் எந்தக் காரியமும் செய்ததாக நினைவில் இல்லை. அவளது பதிலுக்காக மனைவியின் முகத்தை இமைக்காது பார்த்தான்.

“பரவாயில்ல சரியா கெஸ் பண்ணிட்ட… எஸ், உன்னை மாதிரி கல்நெஞ்சக்காரன், கடைஞ்செடுத்த சுயநலவாதிக்கெல்லாம் பிள்ளை பெத்து கொடுக்கக் கூடாதுன்ற முடிவோடதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என்றதும் ஆத்திரத்தில் தன்னை அடிக்க வந்த ராம்சங்கரின் கையை சட்டென்று தட்டிவிட்டாள் விஸ்வாதிகா.

அவனுக்கோ கோபம் அடங்கவில்லை. முழுமையாக தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற ஆத்திரம் ஒரு புறமும், தன்னை மனிதனாகக் கூட மதிக்காதவளுடன் இத்தனை நாட்கள் கூடிக் கழித்திருக்கிறோம் என்ற அசூயை மறுபுறமும் இடியாய் தாக்க, உஷ்ணத்துடன் அவளது கழுத்தைப் பிடித்தான்.

“அப்படியென்ன கெடுதல் பண்ணேன் உனக்கு? ஏன் இந்த முடிவை எடுத்திருக்க?” கோபத்துடன் பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பிய நேரத்தில் அவனது இறுக்கப் பிடியினை தட்டிவிட்டாள்.

“நிமிசத்துக்கு நிமிஷம் குணம் மாறிட்டே இருக்கிறவனை நம்பி யாருடா வாழ்க்கையை ஒப்படைப்பா? நானே உன்னை நம்பி இல்லாதப்போ எப்படி உன்னை நம்பி ஒரு குழந்தையை நான் பெத்துப்பேன்?” தொண்டையை செருமிக்கொண்டு அவனுக்கு குறையாத கோபத்தில் விளக்கம் கொடுத்தாள்.

“பேசத் தெரியும்னு பேசாதே செல்லா… அது எனக்கும் மட்டுமில்ல உனக்கும்தானே குழந்தையா இருக்கும். ஒரு அம்மாவா பெத்த குழந்தை மேல நீ பாசமா இருக்க மாட்டியா?”

“அப்படி பாசம், அன்பு வைச்சு கடைசியில நான் ஏமாந்து போறதுக்கா?”

“என்னதான் சொல்ல வர்ற?”

“உன் நல்லதை மட்டுமே யோசிச்சு நிமிசத்துக்கு நிமிஷம் மாறிட்டு இருக்கிறவன் நீ… உனக்கு எனக்கும் இருக்கிற ஈகோ கிராஸ்ல பொண்டாட்டி வேணாம், பிள்ளை வேணாம்னு நீ சொல்லிட்டு போயிட்டா, நான் கேள்விக்குறியா நிக்கணுமா? உன் குடும்பத்துக்கு இன்னொரு சுமையா நானும் மாறிப் போகணுமா? அடுத்தவங்க பரிதாபப் பார்வையை எல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது.”

“இந்தளவுக்கு கீழ்த்தரமா என்னை இறக்கி இருக்க வேண்டாம்டி!”

“வேறே எப்படி நினைக்கணும்னு சொல்ற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன் பேச்சை கேக்கலன்னா என்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்னது நீதானே? இதே அவசரப்புத்தியோட நான் பெத்த உன் பிள்ளையையும் வேண்டாம்னு சொல்றதுக்கும் நீ யோசிக்க மாட்டே… ஒரு காலத்துல அப்படி சொன்னவன் தானே நீ!” வார்த்தைகளில் தெறித்த அழுத்தத்தில் திகிலாகிப் போனான்.

இவனது முன்வினைப் பயனெல்லாம் மனைவியின் ரூபத்தில் வந்து நின்று இவனைக் கேலி செய்து சிரித்தது. ஒரு காலத்தில் தன்னை நம்பிய பெண்ணின் மனதை மதிக்காமல், அவளின் உணர்வுகளை மிதித்து, கனவுகளை நசுக்கிக் கை கழுவியதின் பாவமெல்லாம் அவனது வாழ்க்கைத் துணையின் உருவில் வந்து நின்று ஆட்டம் காட்டியது.

“அன்னைக்கு செஞ்சது தப்புன்னு நல்லாவே உணர்ந்துட்டேன் செல்லா… அதனாலதான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே என் பிள்ளைகளை கேட்டுட்டு வந்து நின்னேன். இப்பவும் அதே நினைப்புல தானே உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கேன். இப்ப கூட என்னை நம்பலையா?”

“உண்மையா திருந்தினவங்க யாரும் உன்னை மாதிரி மைக் பிடிக்காத குறையா சொல்லிட்டு திரிய மாட்டாங்க?”

“இதுல கூட சந்தேகப்பட்டா எப்படி?”

“உன் லட்சணத்தை நான் சொல்றேன் ராம்… உன் பாட்னர்கிட்ட தோத்துப்போன உன் ஈகோ, உன்னை நல்லவனா நாடகம் ஆட வச்சு குழந்தையை கேக்க வச்சது. இல்லன்னு பொய் சொல்லாதே!” காட்டமாய் கூறவும் வாயடைத்து நின்றான் ராம்சங்கர்.

தன்முகத்தில் காறி உமிழ்ந்த பெண்ணிடம் தன்னை மிக நல்லவனாய் நிரூபிப்பதற்காகவே இவன் தனது குழந்தைகளைக் கேட்டு இந்தியா வந்தது. ஆனால் அதுவே அவனுக்கு பெரும் பாதகமாக முடிந்துவிட வந்து சுவடு தெரியாமல் மீண்டும் வெளிநாட்டிற்கே சென்று விட்டான்.

வெளியே தெரியாமல் இருந்த ரகசியத்தை மனைவி எளிதாக கண்டுபிடித்து போட்டுடைக்கவும் பதில் பேச்சின்றி மௌனமாய் அவளையே பார்த்தபடி நின்றான்.

“கெட்டதுலயும் நல்ல விசயமா உனக்கு உன் பிள்ளைங்க மேல பாசம் வர்றதுக்கு பதிலா உன் அண்ணன் பொண்ணு பிரணவி மேலதான் பாசம் வந்தது. அதுக்கு காரணம் அந்த குழந்தை உன்னோட பைத்தியக்கார தனத்தால கஷ்டப்பட்டதாலோ, இல்ல இனிமேலாவது நல்லவனா நடந்துக்க முயற்சி பண்ணுவோம்ன்ற உன்னோட நினைப்போ கூட காரணமா இருக்கலாம்.”

கணவனது பகல் வேசத்தை இவள் புட்டு புட்டு வைக்க பதில்பேச வார்த்தையின்றி அமைதியாக நின்றான்.

“இப்பவும் அதே ஈகோல தானே பிள்ளை வேணும்னு கேக்கப் போற… இல்லன்னு பொய் சொல்லாதே! ஏன் ராம்? இன்னும் எத்தனை நாள்தான் உன் சுயநலத்துக்காக மத்தவங்க மனசை கால்ல போட்டு மிதிப்ப?” இறங்கிய குரலில் சொன்னதும் கோபத்தில் வெடித்தான்.

“எனக்கு யாரும் புத்தி சொல்லத் தேவையில்ல… என் பொறுப்பை நான் சுமக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு பேரு சுயநலம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டும். என் விசயத்துல நீ தலையிடாதே… முழுக்க முழுக்க பொய்யா இருக்கற நீயெல்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் இறங்கிப் போகல…” 

“நான் பொய்யா இருக்கேனா?”

“பின்ன… உனக்கு குழந்தை இருக்கற விஷயத்தை ஏன் மறைச்சே?”

“நீ கேக்கலன்னு சொல்லு, அப்படி நீ கேட்டும் நான் மறுத்திருந்தா நான் பொய்யானவனு நீயே முடிவு பண்ணிக்கோ… நல்லா யோசி! உனக்கு ஒரு டவுட் வந்தது தானே, நீ ஏன் கேக்கல?” என்றவளின் கேள்வியில் ராம்சங்கரின் நினைவுகள் அவர்களின் திருமண இரவினை நினைத்துப் பார்த்தன.

அன்றைய தினம் மனைவியின் கீழ் வயிற்றில் ஆள்காட்டி விரல் அளவிற்கு இருந்த தழும்பைப் பார்த்து கேள்வியாக அவளைப் பார்த்தான் தான். ஆனால் அவனது பார்வைக்கு பதில் சொல்லாமல் இவள் ஆசையோடு அவனை இழுத்துக் கொள்ள, அவனும் பேராசையோடு அவளில் மூழ்கத் தொடங்கி விட்டான்.

அந்த ஒருநாள் மட்டும்தான் அப்படி கேள்வியாகப் பார்த்தது அதற்கடுத்த நாட்களில் எல்லாம் அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவளோடு கூடிக்கழிப்பதில் மட்டுமே தனது கவனத்தை வைத்திருந்தான். மனைவி இப்பொழுது எடுத்து சொல்லவும் தான் அவனுக்கும் அப்போதைய நினைவுகள் பிடிபட்டன.

“அப்போ உன்மேல தப்பு இல்ல… நான்தான் ஏமாளியா, கிறுக்கனா இருந்திருக்கேனா? நல்லா நம்ப வைச்சு ஏமாத்தி இருக்கடி!”

“ம்ப்ச்… சும்மா சொன்னதையே சொல்லாதே! இந்த விசயத்தை உன்கிட்ட சொல்லாம மறைச்ச உன் வீட்டுல கேளு!”

“உன்னோட பாஸ்ட் லைஃப் எப்படின்னு நீ சொல்லி மாட்டியா?”

“ஏன் நீ சொன்னியா என்கிட்ட? நானா உன் வீட்டுல கேட்டுத் தெரிஞ்சுக்கல… அப்படி நீயும் கேட்டுத் தெரிஞ்சிட்டு இருப்பேன்னு நானும் இருந்துட்டேன்.”

“இப்படி எல்லாத்துக்கும் பதில் வைச்சிருந்தா எப்படித்தான் உன்கூட குடும்பம் நடத்துறது?”

“எதுக்கு ராம் இத்தனை சலிப்பு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட காலநேரம் பார்க்காம வஞ்சனையில்லாம கொஞ்சிக்கிட்டோமே… அப்படித்தான்!” நக்கலோடு கூறியவள்,

“விட்டா பேச்சு வளர்ந்துட்டே போகும். நமக்கு நம்ம பாஸ்ட் தேவையில்ல… அட் பிரசன்ட் இப்ப எப்படியிருக்கோமோ அப்படியே லைஃப் லாங் வாழ்ந்துட்டுப் போயிடுவோம். அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. நமக்கு எதுக்குடா குழந்தையும் குட்டியும்?” வெகு அலட்சியமாய் பதிலளித்தாள்.

“ரொம்பத்தான் வாழ்க்கையை வெறுத்தவ மாதிரி பேசுற!”

“வெறுக்கல… ஒவ்வொரு நாளையும் ஜாலியா அனுபவிக்கணும்னு நினைக்கிறேன். அர்த்தமுள்ள அழகான வாழ்க்கையை வாழனும்ன்கிற ஆசையெல்லாம் எப்பவோ என்னை விட்டுப் போயிடுச்சு ராம்!”

சமாதானமோ சமாளிப்போ எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு முடிவுடன் அமைதியாக கூறிவிட்டு குளியலறைக்குள் சென்று விட்டாள் விஸ்வாதிகா.

இவனுக்குதான் மனம் ஆறவில்லை. ஏமாளி என்று நெற்றியில் ஒட்டாத குறையாக தன்னை ஏமாற்றிய ஒட்டுமொத்த குடும்பத்தையே வரைமுறையற்ற வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினான். அவனது கோபத்தின் உஷ்ணம் மாறாமல் தனது தாயை அழைத்தான்.

“என்னடா பொண்டாட்டி பின்னாடி நூல் பிடிச்சுட்டு போனவேன், இப்ப என்னத்துக்கு கூப்பிடுற?” மதியம் ஒட்டுமொத்த குடும்பத்தினரையே மதிக்காமல் மகனும் மருமகளும் சென்றுவிட்ட கோபத்தில் பேசினார் பரிமளம்.

“நீயெல்லாம் ஒரு அம்மாவா?” கோபத்துடன் ராம்சங்கர் கேட்க, திடுக்கிட்டுப் போனார் பரிமளம்

“எதுக்குடா இந்த திடீர் சந்தேகம் உனக்கு?”

“பேசாதேம்மா… என்னை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது?”

“நான் என்னடா ஏமாத்தினேன்?”

“உன் சின்ன மருமகளுக்கு குழந்தை இருக்குன்னு நீ சொல்லவே இல்லையே, ஏன்? எதுக்காக இப்படி மூடி மறைச்சு கல்யாணம் பண்ண?”

“உன் பொண்டாட்டி எனக்கு மருமகன்னு உனக்கு ஞாபகம் இருக்காடா சின்னவனே? அதுவரைக்கும் சந்தோசம்.”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்மா!”

“என்னன்னு சொல்லச் சொல்ற? அவகூட ஒட்டவே ஒட்டாத குழந்தைய, இல்லன்னு சொல்றதுல தப்பே இல்லடா!”

“புரியல”

“உன் குழந்தைகளை உன் அண்ணன் தத்தெடுத்து வளக்கிற மாதிரி, அவளுக்கு பொறந்த குழந்தயை, அந்த குழந்தையோட தாத்தா பாட்டியே வளர்த்துட்டு வராங்களாம்! இவங்க எவ்வளோ கெஞ்சிக் கேட்டும் கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்! இவ அந்த குழந்தையை விட்டு பிரிஞ்சி வந்து கிட்டத்தட்ட பதினோரு வருசமாச்சு… இதுவரைக்கும் ஒட்டாத பிள்ளை இனிமேலா வந்து ஓட்டப் போகுது? அப்படியே வந்தாலும் வரட்டுமே… நம்ம வீட்டுப் பிள்ளையா வளர்த்துட்டுப் போவோம்.”

“உன் பெரிய மனசை காட்டிக்க என்னைத்தான் ஏமாத்தணுமா? இந்த வெவரத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்றதுக்கு என்ன?”

“சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்ப? வழக்கம் போல தட்டிக் கழிச்சுருப்ப… ஊரெல்லாம் மேய்ஞ்சிட்டு வந்தாலும் தனக்கு வர்றவ கை படாத ரோசாவா இருக்கணும்னு நினைக்கறது தான் ஆம்பள புத்தி. அதையும் மீறி வந்துட்டா, அவளோட மொத வாழ்க்கையை விசாரிக்கிறேன்ற பேருல அவ மனசை குத்திக் கிழிக்கிறதைத் தானே ஆம்பளைங்க வாடிக்கையா வைச்சுருக்கீங்க!

அதான், அவளோட மொத வாழ்க்கையை பத்தின எந்த விவரத்தையும் நான் சொல்லாம மறைச்சுட்டேன். வீணா இதுக்காக அவளோட சண்டை போடாதே! எதுவா இருந்தாலும் என்கிட்டே கேளு, நான் பதில் சொல்றேன்.”

பெண்களின் ஒட்டுமொத்த குரலாக பரிமளம் கூறியதில் வாயடைத்துப் போனவன் மறுபேச்சின்றி செல்பேசியை அணைத்துவிட்டு கட்டிலில் வீசியெறிந்தான்.

இனி என்னதான் செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. ‘என்னைப் போலவே இவளும் முறையற்ற வாழ்க்கையில் குழந்தையைப் பெற்று, உரிய குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு வந்து விட்டாளோ? அதனால்தான் அக்கா, மாமா, எல்லோரும் உனக்கேற்ற  ஜோடி இவள்தான் என வார்த்தைக்கு வார்த்தை சொன்னார்களா? அப்பொழுதே இதற்கான அர்த்தத்தை அழுத்திக் கேட்டிருக்க வேண்டுமோ!’ மனமங்கும் இவனது திருமண முன்னோட்டங்களே காட்சிகளாக ஓட பித்து பிடித்தவனைப் போல அமர்ந்திருந்தான்.   

தன்னைப் போலவே அவளையும் நினைத்து பார்த்து அலுத்தது. ‘இவனை சமாதனப்படுத்தவோ சமாளித்து பதில் கூறவோ யாருமில்லை. இவனது ஆற்றாமைகளுக்கு இவனே ஆறுதல் கூறிக்கொள்ள வேண்டும். அப்படியொரு லட்சணமான வாழ்க்கையை வாழ்கிறான்.’ தனது உண்மை நிலையை நினைத்து நினைத்து மனம் குமைந்து போனான்.

தான் செய்து முடிக்க நினைக்கும் காரியத்திற்கு யாரோ ஒருவர் முட்டுக்கட்டை போடுவார்கள் என நினைத்திருக்க சற்றும் எதிர்பாராமல் கட்டிய மனைவியே தனக்கு எதிராக நின்றதில் இவனது முடிவுகள் எல்லாம் உள்ளுக்குள் சிதறிப் போனது.

இவளை பக்கபலமாக தன்னருகில் நிறுத்திக் கொண்டே நினைத்ததை நடத்திக் கொள்ள எண்ணியிருந்தான். இப்போது முதலுக்கு மோசமாகி நின்றதில் பெருத்த சங்கடம் கொண்டான்.

எண்ணியதை செயலாற்றியே தீரும் பிடிவாதமும் மனைவியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஒன்றாய் சேர்ந்துவிட, வழக்கம்போல இவனே இறங்கி வந்தான்.

குளியல் முடித்து ஜீன்ஸ் டி-சர்டுடன் கண்ணாடி முன் நின்றவளை பின்னோடு அணைத்து அவளது தோளில் தாடையை பதித்தான்.

“கோபமா செல்லா?” கனிவாகக் கேட்க, ‘அட அல்பமே’ பார்வையைத் தான் பதிலாகத் தந்தாள்.

“உன்னை பார்த்ததும் மனசுக்கு பிடிச்சுப் போச்சுடி. உன் கலர், உன் கண்ணு, உன் சிரிப்பு, அழகுன்னு அப்படியே என் கண்ணுக்குள்ள நின்னு மனசுல நிறைஞ்சு போச்சு. அதான் உன்னோட பாஸ்ட் எனக்குத் தேவையில்லைன்னு கேக்காம விட்டுட்டேன்.” என்று ஆசை மிகுந்த குரலில் பேசியவனைப் பார்த்து சிரித்தாள்.

“என்னடி ஒரு மார்க்கமா சிரிக்கிற?”

“நத்திங் ராம், இப்ப என்ன வேணும் உனக்கு? உன் கிறுக்குக் தனத்துக்கு கூட்டு சேர என்னைக் கூப்பிடாதே, நான் வரமாட்டேன்.” சிரித்தபடி கறாராகச் சொல்ல

“அட அதை விட்டுத் தள்ளு… உன் விசயத்துக்கு வா… சொல்லு, உனக்கு என்ன குழந்தை? பையனா, பொண்ணா? எப்போ பொறந்தது?” சாதாரணமாகக் கேள்விகளை அடுக்கிகொண்டே செல்ல, விஸ்வாதிகாவின் உடலோடு மனமும் இறுக்கம் கொண்டது.

அவனது அணைப்பினை விட்டு விலகி நின்றாள். “இதைப் பத்தி நீ எப்படி கேட்டாலும் என்கிட்டே இருந்து பதில் கிடைக்காது ராம்!” அவனைப் பார்த்து அழுத்தமாகக் கூறினாள்.

“இதென்னடி நியாயம்? நீதானே உன்னைப் பத்தி கேக்கலன்னு சொன்ன… இப்ப கேக்கறேன், உன்னைப் பத்தி சொல்லு.”

“நான் விஸ்வாதிகா… சிம்பிளா ஆதி! இதோ உன் முன்னாடி நிக்கிறேன், அவ்ளோதான். அதுக்கு மேலே என் பூர்வீகம் எல்லாம் தெரியணும்னா என் வீட்டுல போயி கேட்டுக்கோ!”

“ஏன், நீ சொல்ல மாட்டியா?”

“கோழைத்தனத்தை அடியோடு வெறுக்கிறவ நான்… ஒரு காலத்துல அதே கோழையா வாழ்ந்து என் சுயத்தையே இழந்திருக்கேன். அதை சொல்றதுக்கு மட்டுமில்ல, நினைச்சுப் பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை. நீ தெரிஞ்சுக்க விரும்புற ஸ்வாதி எப்பவோ செத்து பூமியில புதைஞ்சு போயிட்டா!” இறுக்கமாய் கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

திடீரென்று, ‘ஸ்வாதி’ என்று அவள் கூறிவிட்டுச் செல்லவும், ‘புதுசா யார் அது?’ என மனதிற்குள் திகைத்தவன், அவளது பெயரின் மற்றொரு சுருக்கத்தைத் தான் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்பதை உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.

விஸ்வாதிகா, ஆதி, ஸ்வாதி… இதோடு நிற்காமல் பெற்றோரின், ‘செல்லம்மா’ இவளது நிஜம் எது? மூளை அவளை பற்றி அறிந்தே ஆக வேண்டிய அவசியத்தை உணர்த்த, மாமனாரிடம் சென்று நின்றான் ராம்சங்கர்.

 

 

error: Content is protected !!