அத்தியூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் வருவாய் தரும் கிராமங்களில் ஒன்று. காவிரித் தாயின் கருணையில் விவசாயம் செழிப்புற்று அக்கிராமத்து மக்களை பஞ்சமின்றி இன்றளவும் காத்து வருகின்றது.
நாகரீகத்தின் அனைத்து வசதிகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டு வஞ்சனையில்லாமல் வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அழகிய கிராமம்.
விவசாயத்தையே முழுமுதல் தொழிலாகக் கொண்ட அந்த ஊரின் பெரிய தனக்காரர் குடும்பத்தின் சகோதர்கள் ராசப்பன், மெய்யப்பன். நெற்பயிர்களும் கரும்புத் தோட்டமும், காய்கறிகளும் காலம் தவறாமல் விளைந்து இவர்களின் வாழ்வாதரப் பசுமையை செழிப்பாக்கி உயர்த்தி இருந்தது.
ராசப்பன் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தைப் பேறின்றி உடல் சுகவீனப்பட்டு இறைவனடி சேர்ந்திருக்க, அவரது மனைவி மனோன்மணியும்(அரவிந்தனின் அத்தை) பிறந்த வீட்டுச் சொந்தங்களோடு மதுரைக்குச் சென்று விட்டார். புகுந்த வீட்டுச் சொந்தங்களின் மீது ஏதோ ஒரு மனதாங்கல் ஏற்பட்டதில், சொத்து, உறவு உரிமை என எதுவும் வேண்டாமென்று ஒதுங்கி விட்டார்.
அடுத்ததாக அந்த குடும்பத்தின் ஆதர்ச தம்பதிகள் மெய்யப்பன், சோலையம்மாள். தனது நாற்பதாவது வயதில் சற்று தாமதாகவே மகன் விஸ்வநாதனை பெற்றெடுத்தார் சோலையம்மாள். தங்களுக்கு மூப்பு தட்டிவிடும் முன்பே மகனுக்கு நல்லது செய்து பார்த்துவிடத் தீர்மானித்து இருபத்திமூன்று வயதிலேயே தூரத்து உறவுமுறைப் பெண்ணான காஞ்சனாவை மகனுக்கு கட்டி வைத்தனர்.
திருமணம் முடிந்த அடுத்த வருடமே பேத்தி விஸ்வாதிகா பிறந்ததில் குடும்பத்தில் மகிழ்ச்சி தொடர்ந்தது. மகள் பிறக்கும் சமயம் விஸ்வநாதன் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்திருந்தார். விவசாயத்தில் அவர் மனம் அத்தனை நாட்டம் கொள்ளாமல் இருக்க மகன் விரும்பியதை படிக்க அனுமதித்திருந்தனர் பெற்றோர்கள்.
மகனின் ஆர்வத்திற்கும் கனவிற்கும் மதிப்பளித்து அவனுக்கான தொழிலை அமைத்துக்கொள்ள பண உதவியும் செய்து தனியாகவும் செயல்பட அனுமதித்தனர். ஒற்றை ஆண்மகனிற்கான அனைத்து சலுகைகளையும் தப்பாமல் அள்ளிக் கொடுத்து மகனின் வாழ்வை ஏற்றம்பெற வைத்தனர்.
தொழில் நிமித்தம் மகனும் மருமகளும் சென்னைக்கு பயணமாக, பேத்தியின் வளர்ப்பை தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர். வயதில்லை, அனுபவம் பத்தாது, தொழிலை சிறப்பாக நடத்த வேண்டுமென்ற பல காரணங்கள் அவர்களின் முடிவிற்கு துணை நின்றது.
“பொம்பளப் பிள்ளைய நாலும் சொல்லிக் கொடுத்து வளக்கணும் சாமி… எம் பேத்திக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க நானாச்சு! புள்ளைய இங்கேயே விட்டுட்டுப் போ… மாசத்துக்கு ஒருக்கா வந்து பார்த்துட்டு போனா, புள்ள பாசம் விட்டா போயிடும்!” சோலையம்மாளின் அக்கறையான பேச்சிற்கு மறுப்பு கூற முடியவில்லை.
மகளின் வளர்ப்பினை தனது பெற்றோரிடமே ஒப்படைத்து விட்டு கட்டுமானத் தொழிலில் முழுவீச்சில் இறங்கினார் விஸ்வாநாதன்.
மகளை விட்டுவிட்டுச் செல்ல யோசித்த காஞ்சனாவும் கணவன், பெரியவர்கள் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் அமைதியாகவே அனுமதித்தார்.
குடும்பத்தின் ஒற்றை வாரிசு, பெரியவர்களிடம் வளர்வதும் நல்லதுதான் என நினைத்து விஸ்வாதிகாவை ஒரு வயதிற்கு பிறகு கிராமத்தில் விட்டு வைத்தனர்.
தாத்தாவும் பாட்டியும் பேத்தியை கண்ணுக்குள் வைத்தே தாங்கி வளர்த்தனர். ஆனால் அவர்கள் வளர்த்த முறைதான் பேத்தியை முடக்கிப் போட போதுமானதாக இருந்தது.
ஆண்கள் மேன்மையானவர்கள், பெண்கள் எப்போதும் அவர்களுக்கு அடிபணிந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்ற அபத்தமான கோட்பாட்டை பேத்தியின் மனதிற்குள் திணித்தே வளர்த்திருந்தார் சோலையம்மாள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சொலவடையை உண்மையென்றே பேத்தியின் மனதிற்குள் பலமாக பதிய வைத்திருந்தார். காரணம் அந்த ஊரின் சட்ட திட்டங்கள் அப்டியொரு பத்தாம் பசலித்தனமாகவே இருந்தது.
‘ஆண்களின் முன்னால் நிற்காதே, சத்தமாகப் பேசாதே, சபையின் முன்னால் வராதே!’ இன்னபிற அடக்கு முறைகளை எல்லாம் அன்போடு சொல்லிச் சொல்லி வளர்க்க சின்னப்பெண்ணும், ‘இதுதான் உலகநியதி போல…’ என்று தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு வளர்ந்து விட்டாள்.
அவளோடு வளர்ந்த பெண் பிள்ளைகளும் அவ்வாறே வளர்க்கப்பட்டு வர எதிர்ப்பதற்கோ மறுப்பதற்கோ வழியில்லாமல் போனது. வேலை பரபரப்பில் மாதத்திற்கு ஒருநாள் மட்டுமே வந்து செல்லும் தன் தந்தையிடம் கூட அதிகம் ஒட்ட மாட்டாள் ஸ்வாதி.
“அப்பா பக்கத்துல உக்காருடா செல்லம்மா!” விஸ்வநாதன் மகளை இழுத்துப் பிடித்து அமர வைத்துக் கொண்டாலும் ஐந்தாவது நிமிடம், “அப்பத்தா கூப்பிடுறாங்க ப்பா!” கூச்சத்துடன் நழுவி விடுவாள்.
பெண் பிள்ளைகள் துடிப்பாய் இயல்புடன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் தடைபோட்டு, அன்போடு சோலையம்மாள் வளர்த்ததில் தயக்கம், பயத்தை மட்டுமே தனது சுபாவங்களாகக் கொண்டு வளர்ந்து வந்தாள் ஸ்வாதி. பாசத்தில், தேவைகளை நிறைவேற்றுவதில் குறை வைக்கவில்லை. அதனால் அவளும் பெற்றோரின் அருகாமைக்கு ஏங்கவில்லை.
பதிமூன்று வயதில் பெரிய பெண்ணான பிறகு பாட்டியின் எச்சரிக்கையில் பேத்தியின் சுதாரிப்பும் சற்று அதிகப்படியாகவே வளர்ந்தது. ‘ஆண்களிடம் நெருங்காதே!’ என்று பாட்டி சொல்லி வைக்க, அவளின் இயல்பான தயக்கம் தாத்தாவிடம் கூட தள்ளி நின்று பழகச் சொல்லியது.
தாய் காஞ்சனாவிடம் நின்று இரண்டொரு வார்த்தைகள் பேசுபவள் தந்தையிடம் பேசுவதை அறவே குறைத்துக் கொண்டாள். விடாமல் அவளைப் பேச வைத்தாலும் திக்கித் திணற ஆரம்பித்து விடுவாள். அந்த நேரம் பேத்தியிடம் இருக்கும் வாஞ்சையில் பாட்டியும் தன்னிடம் அழைத்துக் கொள்வார்.
மகளைப் பற்றி பெரிதாகக் கனவு கண்டு வந்த விஸ்வாநாதனுக்கு அவள் வளர்ந்து வந்த விதம் பெரும் மனத்தாங்கலைக் கொடுத்தது. மனைவியிடம் கூட வெளிப்படையாகக் கூறி கொள்ளக் முடியவில்லை. பெற்றோரின் பேச்சையே வேதவாக்காக கொண்டு வாழும் மகனுக்கு அவர்களள் பின்பற்றிய அடக்குமுறைகளை கண்டுகொள்ளத் தெரியவில்லை.
மகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அவளை சென்னைக்கு அழைத்துச் சென்று கல்லூரியில் சேர்க்கும் முடிவில் விஸ்வநாதன் அமைதியாக நாட்களை கடந்திக் கொண்டு வந்தார். இந்த முடிவை மனைவி காஞ்சனா உட்பட யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.
ஸ்வாதி பத்தாம் வகுப்பு முடித்த சமயம் மெய்யப்பனின் நண்பர் தணிகாசலம் தன் மனைவியோடு அவரின் வீட்டிற்கு வருகை தந்திருக்க, அவர்களிடம் தன் பேத்தியை அறிமுகப்படுத்த அழைத்தார்.
“ஸ்வாதிக்கண்ணு… ராசாத்தி, இங்கே வந்துட்டு போ ஆத்தா!” தாத்தாவின் கனிவான அழைப்பில், அமைதியாக வந்து நின்றாள் பதினைந்து வயது ஸ்வாதி.
பருவத்திலும் உருவத்திலும் வயதை மீறிய தோற்றம். செல்வச் சீமாட்டியின் அம்சங்களை எல்லாம் சொந்தமாகிக் கொண்டவளைப் போல அத்தனை அழகாய் வளர்ந்திருந்தாள். பதினெட்டு வயதிற்கே உரிய செழிப்பில் மலர்ச்சியுடன் வந்து நின்றாள்.
“இவதான் என் ஆத்தா! எங்க வீட்டு தவக்கொழுந்து.” வீட்டிற்கு வந்தவர்களிடம் பெருமையோடு பேத்தியை அறிமுகப்படுத்திய மெய்யப்பன், “பக்கத்துல உக்காரு தாயி!” வாஞ்சையுடன் கூற, சிறுமியின் பார்வையோ பாட்டியிடம் அனுமதி கேட்டது.
“புள்ள ஏற்கனவே வெளி மனுசங்கள பார்த்து மிரண்டு போயி பயப்படுறா… இப்ப என்னத்துக்கு கூப்பிடுறீக?” பேத்திக்கு வக்காலத்து வாங்கியவராக அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் பாட்டி.
தவிப்புடன் பேத்தியை தாங்கிக் கொள்ள சின்னவளுக்கு, ‘பாட்டியை விட வேறுயாரும் தன்னை அக்கறையாய் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.’ என்ற நம்பிக்கை மனதிற்குள் ஆழமாய் பதிந்து போனது.
அன்று வந்திருந்த நண்பரும் அடுத்தடுத்த கேள்விகளில் ஸ்வாதியைப் பற்றி விசாரிக்க தாத்தனும் மிகப் பெருமையாக அனைத்தையும் ஒப்புவித்தார்.
“பேத்திய அருமையா வளத்திருக்க மெய்யப்பா… மனசுக்கு நிறைவா இருக்கா, எங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சுடு!” திடீரென கேட்க, புரியாமல் பார்த்தார்.
“என்ன சொல்றடா?”
“உன் பேத்திய, என் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைச்சுருன்னு சொல்றேன். பட்டத்து ராணியாட்டம் பார்த்துக்கறேன்யா!” மீசையை முறுக்கிக்கொண்டு சொன்ன தணிகாசலம்,
அருகில் இருந்த மனைவி மருதாயியைப் பார்த்து, “என் முகத்தை ஏன் பாக்குறவ? உனக்கும் இதே நெனப்பு தானே ஓடுது!” தோரணையாக கேட்க அந்த அப்பாவியும் ஆமென்று தலையசைத்தார்.
“பின்ன என்ன? உங்க வீட்டுல கேட்டு சொல்லு மெய்யப்பா!”
“அவ சின்ன பொண்ணு தணிகாசலம். பதினைஞ்சு வயது தான் நடக்குது.” யோசனையுடன் தயங்கினார்.
“இந்த வயசுல என் பொஞ்சாதி, புள்ளயே பெத்துட்டா… ஏன் உங்க வீட்டம்மாவை கூட நீ பதிமூனு வயசுல தானே கட்டுன?” அவர்களின் பால்ய காலத்தைப் பேச, யோசனையின் வீரியம் சற்றே குறைந்தது.
“அந்த காலமும் இந்த காலமும் ஒன்னா? அரசாங்கமே ஆயிரத்தெட்டு காரணம் சொல்லி தடை போடுது. யோசிக்கணும்யா!”
“நல்லா யோசி… ஆனா உன் பேத்தி என் பேரனுக்கு தான். தட்டிக் கழிக்க நினைச்சா சிநேகிதத்தை அத்துபுடுவேன் பார்த்துக்கோ!” பாசமிரட்டலோடு சொல்லிச் சென்றிருக்க மெய்யப்பன் சந்தோஷ அவஸ்தையில் நெளிந்தார்.
இருவரின் குடும்பங்களும் பிறந்த பொழுதில் இருந்தே நட்புறவு பாராட்டி வாழ்ந்து வந்தது. ஏதோ ஒரு பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பிழைப்பிற்காக கேரளாவிற்கு சென்ற தணிகாசலத்தின் குடும்பம், பின்னர் காலப்போக்கில் தங்களின் ஜாகையை அங்கயே ஸ்திரமாக்கி கொண்டிருந்தனர்.
அங்கும் இதே விவசாயத்தையே சிறப்பாக செய்து, பெயர் பெற்ற செல்வச் செழிப்பான குடும்பமாக வாழ்ந்து வர, அவ்வப்போது நண்பர்கள் வெளியிடங்களில் சந்தித்துக் கொள்வதும் தொடர்ந்து கொண்டிருந்தது.
உறவுமுறை திருமணத்திற்காக சொந்த ஊருக்கு மனைவியோடு வந்த நண்பனை வற்புறுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் மெய்யப்பன். வந்தவரும் இப்படியொரு நல்ல காரியத்திற்கு அடித்தளம் போட்டுவிட்டுப் போக மனத்திற்குள் நண்பனின் குடும்பத்தைப் பற்றி அசைபோடத் தொடங்கினார்.
“நல்ல குடும்பம்… இங்கேயும் காடு, கரைன்னு வாங்கிப் போட்ருக்கான். அங்கேயும் ஏக்கர் கணக்கா பண்ணையம் பண்ணிட்டு இருக்கான்.” மெதுவாக மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தார் மெய்யப்பன்.
“அதெல்லாம் கிடக்கட்டும்… பையன் எப்படி என்ன குணம்னு சொல்லுமய்யா! எம் பேத்தி கண்ணு கசக்காம இருப்பான்னு ஸ்திரமா தெரிஞ்சா, நெறஞ்ச மனசா கொடுக்கலாம்.”
“இளவட்டப் பய… சதா ஊர் சுத்திட்டு திரியுறான்னு போன தடவ வெசனப்பட்டான். வயசும் இருபத்தைஞ்சுக்கு மேல இருக்காது. பார்வைக்கு நம்ம பக்கத்துக்கு முகவெட்டாத் தான் தெரிவான்.” என்று சொல்லவும் சோலையம்மாள் பலவாறு கணக்கு போட ஆரம்பித்தார்.
பேத்தியின் அழகும் வளர்ச்சியும் சீக்கிரமே சீரும் சிறப்புமாய் புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட வேண்டுமென்று எச்சரிக்கை செய்தது. தன் கண்முன்னரே எத்தனை பேர் பார்த்து பெருமூச்சு விடுகின்றனர் என்பதை அவரும் அறிவாரே!
ஜாதகம் பார்க்கவில்லை. இரு குடும்பங்களின் தொழில், மதிப்பு, மரியாதையை பொருத்தமாக பார்த்துக் கொண்டனர். தபாலில் மாப்பிள்ளையின் புகைப்படமும் வந்து சேர்ந்தது.
கட்டுமஸ்தான உடற்கட்டோடு, முரட்டு முகத்துடன் திராவிட அம்சமாக இருந்தான் மாப்பிள்ளை இளமாறன். பார்த்ததும் பெரியவர்களுக்கு பிடித்துப் போனது. ‘ஆம்பள சிங்கமாட்டம் இருக்கான்.’ சோலையம்மா பாராட்டியதில் அதற்கடுத்த காரியங்கள் விரைவாக நடந்தேறின.
பெண் பார்க்கும் படலத்தையும் சத்தமில்லாமல் நடத்திக் கொண்டார்கள். காரணம் பெண்ணின் வயது. என்னதான் மூடி மறைத்தாலும் மோப்பம் பிடித்துக் கொண்டு காவல்துறை படையெடுத்து வந்து விடுகிறதே… அந்தப் பயம் அவர்களுக்கு!
முதற் பார்வையிலேயே பெண்ணை மானசீகமாய் அள்ளி முத்தாடினான் இளமாறன். சின்னப்பெண்ணின் வனப்பும் மேனியழகும் அவனது உடல் உஷ்ணத்தை ஏற்றி வைத்து அவதியாக்கியதை யாரும் அறியவில்லை.
நிச்சயதார்த்தமும் வெகு கமுக்கமாகவே நடைபெற்றது. இதில் கொடுமை என்னவன்றால் சென்னையில் இருக்கும் மகன் மருமகளை கேட்காமலேயே அவர்களின் மகளுக்கு வைபவம் நடந்தேறிக் கொண்டிருந்தது.
ஸ்வாதிடம் மாப்பிள்ளை, திருமணம் பற்றிய அபிப்பிராயங்கள் பேச்சிற்கும் கூட கேட்கவில்லை. “சின்னப்புள்ளைக்கு என்ன தெரியும்? எல்லாம் நாம பார்த்து பண்றது தான்.” என்று காரியமாற்றியவர்கள் அந்த சின்னபிள்ளைக்கு திருமணம் எதற்கென்று மறந்தும் மாற்றி யோசிக்கவில்லை.
‘திருமணத்திற்கு மகனை அழைத்தால் போதும். பெற்றோர் சொல்லைத் தட்டாத பிள்ளை, மறுக்க மாட்டான். இத்தனை வருடங்கள் வளர்த்தவர்களுக்கு பேத்தியை திருமணம் செய்து வைக்கும் உரிமையில்லையா?’ அசைக்க முடியாத நம்பிக்கையில் திருமணத்தை விரைவாகவே நடத்த திட்டமிட்டனர்.
மாப்பிள்ளை வீட்டிலும் காலதாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, “சீக்கிரம் என் பேத்திய அனுப்பி வை மெய்ப்பா… அவ பேருல தான் தோப்பு வாங்கி பண்ணையம் பண்ணனும்னு பேரன் துடிச்சிட்டு இருக்கான்.” என்று கரிசனமாகப் பேச, பெண் வீட்டாருக்கு உச்சி குளிர்ந்து போனது. திருமணத்தை தள்ளி வைக்கும் யோசனையை சிந்திக்கவும் மறந்து போயினர்.
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் ஸ்வாதியின் பெற்றோர்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். தனக்கு தெரியாமல் நடந்த திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தப் பார்த்து, பெற்றவர்களிடம் சண்டையிடத் தொடங்கினார் விஸ்வநாதன். உறவை முறித்துக் கொள்ளும் அளவிற்கு வாக்குவாதங்கள் நடக்க வீடு போர்க்களமானது.
“உன் பிள்ளை சம்மதிச்சுதான்யா இந்த கல்யாண ஏற்பாடே நடக்குது.” முடிவாக சோலையம்மாள் சொன்னதும், மகளின் முகத்தை பார்த்தார் விஸ்வநாதன்.
“செல்லம்மா… அப்பத்தா சொல்றது நிஜமா? இந்த சின்ன வயசுல உனக்கு கல்யாணம் அவசியமா? வேண்டாம்டா!” சொல்லும்போதே தகப்பனின் குரல் தழுதழுத்து விட்டது.
‘இன்னும் பிள்ளை முகம் மாறாமல் மலுங்க மலுங்க விழிக்கிறாள். இவளுக்கு திருமணம் செய்து வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்?’ பெற்றவரின் உள்ளம் பொருமித் தள்ளியது.
“அப்பத்தா, எனக்கு எப்பவும் நல்லது மட்டுமே செய்வாங்க ப்பா… இந்த கல்யாணம் நடந்தா நான் ரொம்ப சந்தோசமா இருப்பேனாம்! இங்கே மாதிரியே அங்கேயும் ஜாலியா இருக்கலாம்னு சொன்னாங்க… அதான் சரின்னு சொல்லிட்டேன்.” குழந்தையாக பதில் பேசியவளுக்கு எப்படி புரிய வைப்பதென்றே தெரியவில்லை
“கல்யாணம்னா பெரிய விசயம்டா செல்லம். உனக்கு வயசு பத்தாது.” காஞ்சனாவும் தன் பங்கிற்கு எடுத்துச் சொல்ல, தாத்தனும் பாட்டியும் வெகுண்டு போனார்கள்.
‘வாக்கு கொடுத்தாகி விட்டது. திருமணம் நின்றுபோனால் ஊர் ரெண்டு பட்டு, பகை முளைத்து விடும். உயிரை மாய்த்துக் கொள்வோம்.’ போன்ற அரதப்பழசான மிரட்டல்களைக் கூறி பயமுறுத்த, ‘செத்துப் போங்க… நீங்க உறவை புதுப்பிச்சுக்க என் புள்ளைய பலியாக்கணுமா?’ ஆங்காரத்துடன் வாய் வரை வந்த வார்த்தைகளை வெளியில் தள்ளாமல் இருக்க பெரும்படுபட்டார் விஸ்வநாதன்.
“அவ பெரிய படிப்பு படிச்சு முடிச்சப்புறம் கல்யாணம் பண்றதுங்கற முடிவுல இருக்கேன். அது நடக்காம போனா என்னை உசுரோட பார்க்க முடியாது.” பதிலுக்கு வெடித்து நிற்கவும் சூழ்நிலை வீட்டை ரணகளமாக்கியது.
“கிளம்பு செல்லம்மா… இப்பவே சென்னை போயிடுவோம்.” என மகளின் கைபற்றி எழுப்பிவிட,
“அப்பத்தா பாவம், அழறாங்க ப்பா… நான் நல்ல பொண்ணா இருந்துப்பேன். நீங்க சொல்ற மாதிரியே படிக்கிறேன் ப்பா…” வளர்ந்த பெண்ணாக அவள் உபாயம் சொல்ல அதையே கெட்டியாகப் பற்றிக் கொண்டனர் பெரியவர்கள்.
“புரியலடா உனக்கு… கஷ்டபடுவ… அப்பாவால தாங்கமுடியாது.” மகளை அணைத்துக்கொண்டு அரற்றியவரின் மனம் சமாதானம் அடையவே இல்லை.
முடிவில் திருமணம் செய்த பிறகு படிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு மகளின் திருமணத்திற்கு மனமே இல்லாமல் சம்மதித்தனர் பெண்ணின் பெற்றோர்.
ஸ்வாதியின் பிள்ளைமனம் தனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாமல் திருமணக் கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மகிழ்ந்தது.
திருமணத்தன்று முரட்டு ஆண்மகனின் அருகில் அமரும் போதுதான் மிரண்டு போனாள். அவனது துளைக்கும் பார்வையும், வம்படியாக அவளை உரசிக் கொண்டு அமர்ந்த தோரணையிலும் பெரிதாய் பயந்து போனாள்.
முதன்முறையாக தனது ஆதரவிற்கு தகப்பனின் முகத்தைப் பார்த்தாள். ‘அப்பா இருக்கேன்டா செல்லம்மா…’ சத்தமில்லாமல் வாயசைத்து சமாதானப்படுத்தியதில் மெலிதான தலையசைப்போடு தாலியை வாங்கிக் கொண்டாள்.
சரியான காட்டானாக மருமகன் இருந்ததில் விஸ்வநாதனுக்கும் சுத்தமாய் பிடித்தமில்லை. பாரமேறிய மனதோடு திருமணத்தை வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. மகளின் திருமண விஷயத்தில் உரிமையாக எதையும் செய்ய முடியாத அப்பாவியாக நின்றதில் அவரும் ஒரு கோழையாகிப் போனார்.
வாய்ப்பு கிடைத்ததென்று, பிள்ளை வளர்க்கும் பொறுப்பினை தட்டிக் கழித்த தனது மடத்தனத்திரு மகள் பலியாகிப் போனதை எண்ணி குமைந்து போனார்.
பெற்றவர்களின் மீது பெருங்கோபம் வந்தது. அவர்களை நிந்திக்க முடியாத பாசத்தளைகளில் சிக்கிவிட்ட தனது துரதிர்ஷ்டத்தில் தன்மீதே வெறுப்பு கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகான சடங்குகளின் போதும் இளமாறனின் சீண்டல்களும் தீண்டல்களும் ஸ்வாதிக்கு அருவெறுப்பை வரவழைத்தன.
அவனை விட்டு விலகி நின்றால் யாருக்கு தெரியாமல் இடுப்பில் கிள்ளி கண்களில் பயம் காட்டினான். ஏற்கனவே பயந்த சுபாவம் உள்ளவளுக்கு இரவுநேரம் தொடும் பொழுது உடம்பில் உள்காயச்சலே கண்டு விட்டது.
“புள்ள சோர்ந்து போயிருச்சு அத்தே… இன்னைக்கு விசேசத்த வேற நல்லநாள்ல வைக்க சொல்லலாமே…” காஞ்சனா சோலையம்மாளிடம் மெதுவாகக் கூற கண்டிப்புடன் மறுத்தார்.
“பக்குவமாச் சொல்லி அனுப்ப வேண்டிய நீயே இப்படி தயங்கி நின்னா, அவ இன்னும் பயந்து போவா… நீ வெளியே போ! நான் அவளை அனுப்பிட்டு வர்றேன்.” மருமகளை விரட்டிவிட்டு பேத்தியின் வருகில் வந்தவர்,
“உள்ளே இருக்கறவன் உன் புருஷன் கண்ணு… அவன் மனசு கோணாம நடந்துகிட்டா தான் நீ சந்தோசமா வாழ முடியும். இப்ப உன் தாத்தாவும் நானும் எப்படி இருக்கோம் பார்க்கறல்ல… எந்நேரமும் பொண்டாட்டியை கூட்டிட்டே அலையுற உன் அப்பனை போல உன் புருஷனும் இருக்கணும்னா அவன் சொல்ற பேச்சை நீ தட்டாம கேட்டுக்கணும். மாப்பிள்ளை தம்பி என்ன செஞ்சாலும் மறுப்பு சொல்லக் கூடாது.” மெதுவாக பதமாக பேத்தியின் மனதில் ஏற்றி வைக்க, புரிந்ததோ இல்லையோ, சரியென்று தலையாட்டிக் கொண்டாள் ஸ்வாதி.
பாட்டியின் அறிவுரையை மனதில் சுமந்தபடி, சொல்லத் தெரியாத பயத்தில் உடல் நடுங்கிக் கொண்டு போர்களத்திற்கு செல்வதைப் போல முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் ஸ்வாதி.