ஒவ்வொரு பெண்ணின் நிமிர்வான வெற்றிக்கு சாத்தியமாக இருப்பவை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் சோதனைகள் தான். அவை முடிவிற்கு வரும்போது முழுதாய் வீரியம் கொண்டு உணர்வை, உயிரை அசைத்துப் பார்த்துவிடும். அப்படியான சூழ்நிலை ஸ்வாதியின் வாழ்விலும் வந்தது.
அவளுக்கென்று தனியறை, இடைஞ்சல் செய்வதற்கோ துணையாக இருப்பதற்கோ யாரும் வருவதில்லை. அவளது பேச்சு வார்த்தைகள் பிள்ளையிடம் மட்டுமே நடந்தது. வேளாவேளைக்கு ஆகாரமும் ஊட்டச்சத்து பானங்களும் தேடி வந்ததில் சிறுபிள்ளையாக மகிழ ஆரம்பித்தாள்.
நாட்கள் இப்படியே சென்றிருந்தால் அவளின் வாழ்க்கையும் ஏற்றம் கண்டிருக்காது. சோதனைகளுக்கு பிறகான சாதனைகளைச் செய்வதற்கு வாய்ப்புகளும் வாய்த்திருக்காது. வயிற்றுப் பிள்ளைக்கு ஐந்தாம் மாதம் நடந்த சமயம் அது.
அன்றைய தினம் வீட்டில் அனைவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றிருக்க, வேலையாட்கள் யாருமில்லாமல் முன்னறையில் தனியாக இருந்தாள் ஸ்வாதி. அப்போது வெளியூர் நபரைப் போலிருந்த ஒருவர் இளமாறனைத் தேடி வர, பதில் சொல்வதற்கென வெளியில் வந்தாள்.
வெளிஉலகத் தொடர்பில் இருந்திருந்தால் வந்தவரின் முகவெட்டுத் தோற்றத்தைப் பார்த்தே யாரென்று கணித்திருக்கலாம். அவளுக்கு அத்தனை தெளிவு இல்லை.
“அவர் இல்ல… வெளியே போயிருக்காரு!” மிகுந்த தயக்கத்தோடு மலையாளம் இன்னும் சரியாகப் பேச வராததால் தமிழில் பதில் கூறினாள்.
“நான் ரொம்ப தூரத்துல இருந்து வர்றேன்மா. எனக்கு இந்த பீடிக்கட்டு மொத்தமா வேணும்.” என்று வந்தவரும் தமிழில் பதிலளிக்க, இவளுக்குள் ஒரு உற்சாகம். நெடுநாட்கள் கழித்து வெளியாட்களிடம் தாய்மொழியைக் கேட்கிறாளே!
இளமாறன் பண்ணையில் தயாரித்து விற்பனை செய்து வரும் பீடிக்கட்டு ஒன்றினை அவர் கையில் வைத்திருந்தார். அதனை வெளியாட்கள் நேரடியாகவே வீட்டிற்கு வந்து இளமாறனிடம் மொத்தமாக வாங்கிச் செல்வதை அடிக்கடி பார்த்திருக்கிறாள்.
“நீங்க வெளித் திண்ணையில வெயிட் பண்றீங்களா? அவர் வந்ததும் சொல்றேன். ஃபோன் பண்ண முடியாது. லாக் போட்ருக்காங்க!” அப்பாவியாகச் சொல்லிவிட்டு சிநேகமாய் சிரிக்க,
“டிரெயினுக்கு நேரமாகிடும் தங்கச்சி… நீங்க சொன்னீங்கன்னா நானே போயி எடுத்துக்கறேன். பணமும் கொண்டு வந்துருக்கேன்.” என்று ரூபாய் நோட்டுகளை அவளிடம் எடுத்துக் கொடுக்க, பச்சாதாபத்துடன் அந்த நபரை வீட்டின் பின்கட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.
அங்குள்ள ஒரு அறையில், சிறிய சிறிய அட்டைப் பெட்டிகளில்தான் அந்த பீடிக்கட்டுகளை கொண்டு வந்து பதுக்கி வைப்பான் இளமாறன். எதற்காக, ஏன் பதுக்கல் செய்கிறான் என இதுவரையில் அவள் ஆராய்ந்து பார்த்ததில்லை. அந்த அறையைப் பார்த்தால் ஆகாத பழைய குப்பைகளைப் போட்டு வைக்கும் அறையாகவே வெளிப்பார்வைக்குத் தோன்றும்.
அங்கே அழைத்துச் சென்று, “இந்த ரூமுல தான் மொத்தமா இருக்கும். உங்களுக்கு வேண்டியது மட்டும் எடுத்துக்கோங்க… எனக்கு இந்த வாடை ஒத்துக்காது. குமட்டிட்டு வரும், வாந்தி எடுத்துருவேன். அதான்…” வெகுளியாகப் பேசி அந்த அறையின் உள்ளே அனுப்பி வைத்தாள் ஸ்வாதி.
வந்தவரும் அறைக்குள் சென்று பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளியில் வந்து அவளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். அவளும் அப்பாவியாக தனது பிறந்த வீடு, படிப்பின் மீதுள்ள ஆசை, இங்கிருக்கும் அவளது நிலை என பேசிக்கொண்டே போகவும் அடுத்தடுத்து காவல்துறையினர் அந்த வீட்டைச் சுற்றி வளைக்கவும் சரியாக இருந்தது.
“உன் புருஷனோட பண்ணையில சட்டத்துக்கு விரோதமா கள்ளச்சாராயம் காய்ச்சுறதாவும், பீடியில புகையிலை தூளுக்கு பதிலா கஞ்சாத்தூளை சுருட்டி கொடுக்கறதாவும் எங்களுக்கு தகவல் வந்ததும்மா, அதை விசாரிக்க வந்தோம்.
பண்ணையில நடக்கிற வேலைகளை எல்லாம் கண்டுபிடிச்சுட்டோம். சரக்கை எல்லாம் எங்கெங்கே பதுக்கல் பண்றான்னு தெரிஞ்சுக்க இங்கேயும், அவன் சினேகிதங்க வீட்டுலயும் சோதனை போட மஃப்டியில டிபார்ட்மெண்ட் ஆளுங்க வீடுவீடா போயிட்டு இருக்கோம்.
இப்ப அவனை அரெஸ்ட் பண்றதுதான் பாக்கி. உன் புருஷன் ஒரு பக்கா கிரிமினல், குடிசைத்தொழில்ங்கிற பேர்ல என்னென்னமோ காரியமெல்லாம் பண்ணிட்டு திரியுறான்.“ அவளுக்கு விளக்கமாக கூறி முடிக்க, ஒன்று புரியாதவளாய் அதிர்ச்சியுடன் நின்றாள்.
அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கந்தனும் பஞ்சவர்ணமும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மகன் மீது குற்றம் இல்லையென சத்தியம் செய்யாத குறையாக சாதித்தனர்.
இளமாறனுக்கும் எப்படியோ தகவல் தெரிந்து அந்த நேரமே தலைமறைவாகிப் போயிருந்தான். வீட்டினுள் காவல்துறையை அனுமதித்த செயலுக்காக மருமகளை கடிந்துகொண்ட பஞ்சவர்ணத்தின் வசைபாட்டுகள் உச்சஸ்தாதியில் ஆரம்பித்தன.
இளமாறனை கைது செய்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வீட்டைச் சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, எந்த நேரத்தில் அவன் வந்தாலும் தகவல் கொடுக்க வேண்டுமென்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டனர்.
பண்ணைநிலம் வாங்கியது மற்றும் அங்கு நடக்கும் தொழில் தொடர்பான மேற்படி விசாரணைகளுக்காக கந்தனைக் கைது செய்யவும் காவல்துறை முன் வந்தது. கல்லோ புல்லோ கணவனைக் கடவுளாக பாவித்த பஞ்சவர்ணத்தின் வாய்மொழி கந்தனைக் கருத்தாய் காப்பாற்றியது.
“பண்ணைக்குச் சொந்தக்காரியே இங்கே நிக்கும்போது என் புருசனை ஏன் பிடிச்சுட்டு போறீங்க? எதுவா இருந்தாலும் இவ அப்பன், ஆத்தாளை பிடிச்சு விசாரிங்க…. பிறந்த வீட்டுல இருந்து குடுத்த சீர் அது. அங்கே நடக்கிற தொழில் கூட அவங்க ஏற்பாடு தான். அங்கே என்ன நடந்தாலும் அவங்கதான் வந்து பதில் சொல்லணும். என் பிள்ளையும் என் வீட்டுக்காரரும் எந்த தப்பும் பண்ணாதவங்க….” நீட்டி முழக்கி முழுக் குற்றத்தையும் மருமகளின் பக்கம் திருப்பி விட்டார் பஞ்சவர்ணம்.
மாமியார் சொல்வதெல்லாம் பொய்யாக இருந்தாலும் எதிர்த்து பேச முடியாத அதிர்ச்சியில் ஊமையாக நின்றாள் ஸ்வாதி. நடப்பது என்னவென்றே தெரியாத நிலையில் எப்படித்தான் பதில் பேசுவது? இடத்தின் உரிமையாளராக அவள் பெயரில் பத்திரமும் பதிவு செய்யப்பட்டிருக்க அவளைக் கைது செய்து அழைத்து சென்றது காவல்துறை.
அவளுக்கோ கணவனின் தொழில் நிலவரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவன் பீடிக்கட்டுகளையும் சாராயக் கேன்களையும் கமுக்கமாக காய்கறிகளோடு அனுப்பி வைப்பதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறாள். நேரில் பார்த்ததில்லை.
வீட்டில் இருந்தே அந்த வேலைகள் நடந்தாலும் வெளியே எட்டிப் பார்ப்பதற்கும் அவளுக்கு அனுமதி கிடைக்காது. அறைக்குள் விரட்டியடிக்கப்படுவாள். அப்படியிருக்க அவனுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அவளால் பேச முடியவில்லை.
பெண் அதிகாரிகளின் பொறுப்பில் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டாள் ஸ்வாதி. அவர்களின் மூலமாகவே விஸ்வநாதனுக்கும் மெய்ப்பனுக்கும் செய்தி சொல்லப்பட்டது.
தங்களின் பெண்பிள்ளை பிணைக்கைதியாக காவல்நிலையத்தில் இருக்கிறாள் என்ற செய்தியே அந்தக் குடும்பத்தை வேரறுத்தி வீழ்த்தப் போதுமானதாக இருந்தது.
அடுத்த சில மணிநேரங்களில் சென்னையில் இருந்து விமானம் மூலம் பாலக்காடு வந்திறங்கினார் விஸ்வநாதன். அதே நேரத்தில் காரில் சோலையம்மாளுடன் வந்தடைந்தார் மெய்யப்பன்.
மாலை நேரத்திற்கு பிறகு பெண்களை காவல்நிலையத்தில் தங்க வைக்கக்கூடாதென்ற விதியின்படி அரசினர் மகளிர் காப்பகத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாள் ஸ்வாதி. அவளது உடல்நிலை, மனநிலை பின்னடையாமல் மேற்கொண்டு அவளை பயமுறுத்தாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் பெண் காவலர்கள்.
குடும்பத்தார் வந்தும் அவர்களுடன் செல்ல முடியாத நிலையில் அவள் உள்ளேயும் மற்றவர்கள் காப்பகத்தின் வெளியேயும் காத்திருக்கத் தொடங்கினர். பண்ணை வாங்கியது தொடர்பாக விஸ்வநாதனிடமும் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் நியாயம் கேட்பதற்காக ஆத்திரம் தாளாமல் இளமாறன் வீட்டிற்கு சென்றார் மெய்யப்பன். அவன் மேல் சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டினைப் பற்றிக் கேட்க மழுப்பலாக பதில் வந்தது.
“இவன் மேல தப்பில்லைன்னா, இவன் என்ன தொழில்தான் பண்றான்? பண்ணையம் பண்றான்னு சொன்னதை நம்பி நாங்களும் விசாரிக்காம பொண்ணைத் கொடுத்திட்டோம்.” ஆவேசமாகப் கேட்டார். காலம் கடந்து கேட்டதில் யாருக்கு என்ன பயன்?
“இதுவும் ஒரு தொழில்தான் மெய்யப்பா… நியாயமான தொழிலோட இதையும் சேர்த்து செஞ்சதால தான் இந்தளவுக்கு எங்களால வளர்ந்து நிக்க முடியுது. நான் லேசுபாசா ஆரம்பிச்சதை எம் பையன் கமுக்கமா செஞ்சான். இவன் கொஞ்சம் பெரிசா பண்ணி அதிகம் சம்பதிக்க நினைச்சான். இப்ப வெளியே வந்துடுச்சு!” தணிகாசலம் அலட்டாமல் பதில் கூறியதில், தன் குடும்பம் மொத்தமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுக்கலாய் உடைந்து போனார்.
ஆசையாக வளர்த்த பேத்தியின் வாழ்வை நட்புறவிற்காக பணயம் வைத்து நிற்கதி ஆக்கியதற்கு, தானே முழுமுதற் காரணமாக இருந்ததை நினைத்ததும் இதயத்தில் ஒருவலி சுருக்கென தாக்கியது. பாரமாய் அழுத்திய நெஞ்சை தடவி விட்டு பெருமூச்செடுத்தவர்,
“உன் பேரனுக்காக, என் பேத்திய பிடிச்சு வைச்சிருக்காங்கய்யா… ஸ்டேசன்ல வந்து உண்மையைச் சொல்லி அவளை வெளியே விடச் சொல்லு.” கதறாத குறையாக மன்றாடினார்.
“புருஷனுக்காக பொண்டாட்டி இருக்கறதுல தப்பே இல்ல… ரெண்டுநாள்ல அவங்களாவே வெளியே விட்ருவாங்க, கவலைப்படாதே!” அலட்சியமாக பேசி தட்டிக் கழித்தார் தணிகாசலம்.
“சின்னப் பொண்ணுய்யா… வாயும் வயிறுமா இருக்கா! அந்த இரக்கம் கூடவா இல்ல.” என்றபோதே இதயத்தின் வலியை அதிகமாக உணர்ந்து நெஞ்சை தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
“இப்படி நியாயம் பேசிட்டு இருந்தா, நோவு வரத்தான் செய்யும். வயசாயிடுச்சு இல்லையா… முக்கு கடையில என் பேரைச் சொல்லி சரக்கு வாங்கி அடிச்சிட்டு நிம்மதியா தூங்கு.” நயமாகப் பேசியவாறே அவர் வந்திருந்த காரிலேயே அனுப்பி வைத்தார் தணிகாசலம்.
‘பேத்தியின் வாழ்வு இனி எப்படி சீர்படும்? மகனிடம் என்ன பதில் சொல்லப் போகிறேன்’ என புலம்பியாவாறே காரில் வந்தமர்ந்தவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய, டிரைவரின் தயவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஸ்வநாதன் காவல்நிலைய விசாரணையிலும், காஞ்சனா, மகளின் துணைக்காக காப்பக வாயிலிலும் இருக்க, மெய்யப்பனின் விஷயமறிந்ததும் யாருடைய ஆதரவுமின்றி சோலையம்மாள் தனியாக மருத்துவமனைக்கு வந்தடைந்தார். முயற்சிக்கு பலனில்லாமல் போனது. பெரியவர் அன்றைய இரவில் வேதனை தாளாமல் பரலோகம் சென்று விட்டார்.
இந்தச் செய்தியை விஸ்வநாதனிடம் தெரிவிக்க, பைத்தியம் பிடிக்காத குறைதான். மகளை வெளியே அழைத்து வராமல் எந்தக் காரியத்தையும் செய்வதற்கு தயாராக இல்லை என தெரிவித்து தந்தையை மருத்துவமனையிலேயே வைத்திருக்கக் கேட்டுக் கொண்டார்.
***
அரசு காப்பகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் தனியறையில் தங்க வைக்கப்பட்டிருந்தாள் ஸ்வாதி. தனக்கு சாதகமாக மட்டுமே வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்று மனைவியை வற்புறுத்துவதற்காக எப்படியும் இளமாறன் வருவான் என்பதை எதிர்பார்த்த காவல்துறையினர், கண்ணுக்குத் தெரியாத பலமான ஏற்பாடுகளுடன் அந்த இரவு நேரத்தில் மறைந்திருந்து அமைதி காத்தனர்.
அவர்களின் கூற்றினை பொய்யாக்காமல் ஸ்வாதியை சந்திக்க இளமாறனும் வந்தான். காப்பகத்தின் கழிவறைச் பகுதியின் சுற்றுச்சுவற்றின் மேலேறி, உள்ளே நுழைந்து மனைவியைத் தேடியவனின் கைகளும் உடலும் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தது. வழக்கமான போதை வஸ்துவை இன்று காலையில் இருந்தே எடுத்துக் கொள்ளாத பலவீனத்தின் எதிரொலி அது.
அவன் எளிதாய் உள்ளே நுழைவதற்காக, அலட்சியமான போர்வையில் வெகு சாதூரியமாக வலையை விரித்திருந்தனர். அறைக்குள் தரையில் படுத்திருந்தவளின் வாயைத் துணியால் கட்டிவிட்டு அவளை தூக்கிக்கொண்டு, மேலேறி வந்த சுவற்றின் ஓரப் பகுதிக்கு வந்தான். அவன் வந்தால் எதிர்ப்பு காட்டாமல் அவனோடு அமைதியாகப் பேசுமாரு ஸ்வாதியிடம் சொல்லியிருக்க அவளும் அதையே கடைபிடித்தாள்.
அவளை சுவற்றையொட்டி நிற்க வைத்த இளமாறன், “இதை பாரு ஸ்வாதி… நான் சொல்றதை கவனமா கேளு. போலீஸ்ல நான் சொல்றமாதிரி தான் சொல்லணும்” என்று முறைத்துப் பார்த்து கண்ணை உருட்டியவனைக் கண்டு மிடறு விழுங்கினாள்.
“போலீஸ் விசாரிக்கும் போது, என் புருசனுக்கு எதுவும் தெரியாது, எங்கப்பா வாங்கிக் கொடுத்த நிலம் இது. அவர் மேற்பார்வையில தான் தொழில் நடக்குது. வரவு செலவு மட்டும் தான் என் புருஷன் பாக்குறாருன்னு நீ சொல்லணும். புரிஞ்சுதா…
அதை விட்டுட்டு வேற எதாவது சொல்லி வைச்சே… ஜென்மத்துக்கும் உன்னை தள்ளி வச்சிடுவேன். அப்புறம் நீ வாழவெட்டியாத் தான் நிக்கணும். உன் வயித்துல வளர்ற பிள்ளைக்கு நான் அப்பன் இல்லன்னு சொல்லிடுவேன்.” வழக்கம் போல பயங்காட்டி எச்சரிக்க, அவளோ எப்போதும் போல் புரியாமல் விழித்தாள்.
‘என் வயித்துல இருக்கிறது என் பாப்பா தானே… அதை ஏன் இவரோடதுன்னு நான் சொல்லணும்?’ என்ற கேள்விதான் ஓடியது.
‘வாழாவெட்டின்னா… அன்னைக்கு அப்பத்தா சொன்ன மாதிரி தனியா இருக்கிறதா? அப்படியிருந்தா நல்லாத் தானே இருக்கும்.’ வார்த்தையின் வீரியம் புரியாமல் தன்போக்கில் யோசிக்கத் தொடங்கினாள் ஸ்வாதி.
இளமாறன் சந்திக்க வந்தால் எப்படியாவது அவனைத் தடுத்து நிறுத்துமாறு கூறிய காவல் துறையினரின் எச்சரிக்கை நினைவிற்கு வந்ததும், அவளது மூளை பரபரப்புடன் யோசிக்க, அவனோ, இவளை மிரட்டுவதில் இறங்கி இருந்தான். கத்தி கூப்பாடு போட்டும் ஆட்களை அழைக்க முடியாது. வாயை துணியால் கட்டித் தொலைத்திருந்தான்.
இவளைச் சுவற்றில் சாய்த்து விட்டு இவளின் இருபக்கமும் கையை ஊன்றிக் கொண்டு இவளின் முகம் பார்த்தபடி நின்றிருந்தான். அந்த நிலையில் ஸ்வாதியின் கால்கள் சுதந்திரமாக இருக்க சட்டென யோசித்து, பாவம் பார்க்காமல் அவனது உயிர்நிலையில் கால்முட்டியால் பலமாக எட்டி உதைத்து, அவன் இடறிய நேரத்தில் மீண்டும் பலமாக வயிற்றில் உதை விட்டு கீழே தள்ளி விட்டாள் ஸ்வாதி.
ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவன் இவளைத் தூக்கி வந்த அசதியில் சற்றே தளர்ந்து நிற்க, மனைவியின் கால் வண்ணத்தில் அடி பலமாக பட்டதோ இல்லையோ, இவன் வலியோடு பலமாக கத்திக்கொண்டே விழுந்து தன்னைக் காட்டிக் கொடுத்துக் கொண்டான்.
“அடியே, அவ்வளவு தைரியமா உனக்கு? என்ன பண்றேன் பாரு…” என வேகமாக எழுந்தவன்,
“உன்னை உசுரோட விடமாட்டேன்டி!” என்றபடி அருகில் வந்து சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான்.
இவன் கீழே விழுந்த நேரத்தில் வாயிலிருந்த துணியை எடுத்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் ஸ்வாதி. “ஆ… ஆ…” என்ற இளமாறனின் குரலிலேயே உள்ளேயிருந்து ஓடி வந்தவர்கள், அவன் கழுத்தை நெறிப்பதை பார்த்தே இவர்களை நெருங்கி இருந்தனர்.
ஆள் வரும் சத்தம் கேட்டு எச்சரிக்கை அடைந்தவன், மீண்டும் சுவரின் மீதேறி அந்தப்பக்கம் குதிக்க முயற்சிக்க, அங்கேயும் காவல்துறை வந்து நின்று இவனைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றியது.
மனைவியின் மீது வெறித்தனமான கோபம் வந்தது ‘கணவனென்றும் பாராமல் காட்டிக் கொடுத்து விட்டாளே பாதகி… இனி இவளை நம்பி பிரயோஜனமில்லை’ கோபத்துடன் முடிவெடுத்தவன், எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்ற அவசரத்தில், ஜீப்பில் இருக்கும் ஆட்களை தள்ளிவிட்டு வெளியே குதித்து ஓட்டமெடுத்தான்.
இரவு நேரத்தில் ஒளியை உமிந்து கொண்டு வேகமாக வாகனங்கள் வருவதையும் பாராமல் இவன் ஓடிக் கொண்டிருக்க, எதிரெதிராய் வந்த வாகனங்களும் இவனைப் பாரபட்சம் பாராமல் இடித்துத் தள்ள, சின்னாபின்னமாக தலை சிதைந்து உயிரை விட்டான் இளமாறன்.
ஸ்வாதியின் வாழ்க்கையில் கணவன், புகுந்த வீடு அத்தியாயம் அன்றோடு முடிவுக்கு வந்தது. ஒருபக்கம் தாத்தாவின் காரியமும் மறுபக்கம் கணவனின் காரியமும் நடக்க, ஸ்வாதி காவல்நிலைய பாதுகாப்பில் அந்த காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டாள்.
எப்படியும் இளமாறனின் வீட்டினர் கலவரத்தை உண்டு பண்ணுவார்கள் என்ற நோக்கத்தில் விஸ்வநாதனே முன்வந்து மகளை காவல்நிலையத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு காரியங்களை கவனிக்கச் சென்றார்.
வாய் கொள்ளாத அளவிற்கு மருமகளை திட்டி ஓய்ந்தனர் இளமாறனின் குடும்பத்தினர். மூன்றுநாள் காப்பகத்தில் தங்கியிருந்து விட்டு தங்களுக்கும், போதை மருந்து கடத்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென நிரூபித்த பின்னரே காவல் துறையினரால் விடுவிக்கப்பட்டனர் விஸ்வநாதனும் ஸ்வாதியும்.
சடங்கென்ற பெயரில் மகளை அவதியுற வைக்காமல் அவளின் கைகளாலேயே தாலியை கோவில் உண்டியலில் போட வைத்தார் விஸ்வநாதன். அப்பொழுதும் கூட அழ வேண்டுமென்று அவளுக்கு தோன்றவில்லை. ஒரு உயிர் போய்விட்டது, அவ்வளவுதான்.
ஆனால் தாத்தா இறந்ததை அத்தனை சுலபமாக அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வளர்த்த பாசம் அரற்றி வைத்தது. தஞ்சாவூருக்கு வந்ததும் அவரைத் தேடி ஒய்ந்து அப்பத்தாவின் மடியில் கதறி அழுது தீர்த்தாள்.
பேத்தியின் கள்ளம் கபடமில்லாத அழுகையில் குற்ற உணர்ச்சியில் வெதும்பிக் கொண்டிருந்த சோலையம்மாளும் சேர்ந்து ஒப்பாரி வைக்க, விஸ்வநாதன் ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டார்.