தேன் பாண்டி தென்றல் – 1
தேன் பாண்டி தென்றல் – 1
- Posted on
- Nanthlala Ramalakshmi
- June 30, 2021
- 0 comments
1
“வேலம்மா ……………..”என்ற தன் தாயின் கூவலுக்கு வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருந்து குதித்து ஓடி வந்தாள் தேன்மொழி.
தினசரி காலையில் கண் விழித்ததும் அவள் செய்யும் முதல் வேலை வீட்டுத் தோட்டத்திற்கு நீர் ஊற்றி செடி கொடிகளின் அன்றைய வளர்ச்சியை கண்டு உவகை கொள்ளுவதுதான்.
செடியில் மொட்டு விட்டால் ஆனந்தம். முதல் நாள் நட்ட செடி உறுதியாக நின்று விட்டால் ஆனந்தம். செடியில் துளிர்க்கும் ஒவ்வொரு இலையும் கூட ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே அவளுக்கு.
தேன்மொழி என்பது அவள் அப்பாவின் சொந்த ஊர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து இவளுக்கு வைத்தப் பெயர்.
வேலம்மாள் என்பது வீட்டில் அவளது செல்லப் பெயர்.
தேன்மொழி இளங்கலை வரலாறு படித்துவிட்டு ஒரு வருடமாக வீட்டில் இருக்கிறாள். மேலே முதுகலை வரலாறு படிக்கலாமா அல்லது படிப்பை அப்படியே விட்டுவிடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாள்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவள் வீட்டில் இருந்தபடியே கணிணியில் ஜாப்டைப்பிங் செய்து தருகிறாள். அதற்கு வாடிக்கை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் உண்டு. அதனால் இதை விரிவாக்கம் செய்து தனியாக சென்டர் ஆரம்பித்துவிடலாமா என்றும் யோசித்து வருகிறாள். ஜாப் டைப்பிங் மட்டும் செய்தால் கட்டுப்படி ஆகாது. உடன் ஒரு ஜெராக்ஸ் மெசின் போட்டால் போகப் போக நல்ல வருமானம் வரும். கம்ப்யூட்டரும் இன்னும் ஒன்றாவது வேண்டும். இத்தனை செய்தால் வேலைக்கு ஒரு ஆளாவது வேண்டும். அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.
முதலில் ஒரு கம்ப்யூட்டர் ஒரு ஜெராக்ஸ் மிசின் மட்டும் போடலாம் .அதற்கு மெசினரிஸை லோனில் வாங்கிவிட்டாலும் அதற்கு தவனை மாதா மாதம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் காசு வேண்டும்.
சரி அதை பிறகு பார்க்கலாம் என்று அம்மாவின் வழியில் தையல் வேலைகளைச் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறாள். இப்போதைக்கு ஜாப் டைப்பிங் செய்வதுடன் சில துணிமணிகளையும் தைத்து மிகவும் பிசியாக இருப்பவள் தேன்மொழி.
அவள் இயல்பாகச் செய்யும் இரண்டு விசயங்கள் வீட்டுத் தோட்ட பராமரிப்பும் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவுவதும்தான். மற்றபடி ஆளைக் கையில் பிடிக்க முடியாது.
இத்தனை வெளிவட்டாரப் பழக்கங்கள் இந்த சின்ன வயதில் இருப்பதால் ஆள் பயங்கர ஸ்ட்ரிக்ட். அனைவரிடத்திலும் ஒரு ஒதுக்கம் தன்னைப் போல அவளிடம் இருந்தது. ஆனால் முகம் சிரித்த மாதிரிதான் எப்போதும் இருக்கும்.
தன்னை அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்த தாயிடம் குதித்து ஓடி வந்த தேன்மொழி அவர் கையில் இருந்த காய்கறிப் பையை வாங்கியவாறே தாயைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
தக்காளி, வெண்டை ,கத்தரி எல்லாம் வீட்டிலேயே வளர்க்கிறாள். அந்தந்த சீசனில் அவ்வப்போது கிடைக்கும் காய்கறி விதைகளைப் போட்டு விடுவாள். வீட்டு சமையலுக்கு முழுவதும் இல்லை என்றாலும் பெருமளவு வீட்டுத் தோட்டக் காய்கறிகள் உதவும். அதற்காக ஒரேயடியாக காய்கறிகள் வாங்காமல் இருக்க முடியாதே?
இத்தனைப் பொறுப்பான பெண் எப்போதும் தன் பொறுப்புகளை நிறைவேற்றுவாளா?
“தக்காளி எதுக்;கும்மா இவ்ளோ வாங்கினிங்க?”என்றவளைப் பெருiயாகப் பார்த்த பாக்கியம்-
“கிலோ இருபது ரூபாதான்” என்றார்.
ஆச்சரியப்பட்ட தேன்மொழி “அப்டியா? நாப்பது சொல்லுவாங்களே?” என தன் புருவங்களை அழகாய் உயர்த்த-
“அதுடாம்மா… நான் பாண்டியோட மளிகை கடையில காய் வாங்கினேன். அங்க மளிகை சாமான்தான் வச்சிருப்பான். இன்னிக்கு தக்காளி கம்மி ரேட்டுல வரவும் வாங்கிப் போட்டானாம். என்னைப் பாத்ததும் கூப்பிட்டுக் குடுத்தான்.” என்றார்.
அவன் பெயர் கேட்டதும் இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. மளிகைச் சாமான் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் பேன்சி ஸ்டோரும் அவனுடையதுதான்.
அங்கே இவள் தையல் தைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லுவது வழக்கம். அப்போதெல்லாம் மளிகைக் கடையில் வாடிக்கையாளர்களை கைவிட்டு விட்டு ஓடி வந்து இவளிடம் அவன் வம்பு வளர்க்க முயலுவதும் வாடிக்கை.
அப்பா இல்லாத பெண் என்ற வாஞ்சையில் பேசினானா? அல்லது இளக்காரத்தில் பேசினானா?
எப்படி இருந்தாலும் அவன் பேச்சுக்கள் இவளுக்கு ரசிப்பதில்லை.
அவள் குணத்திற்கு அவளிடம் அவனால் ஏட்டிக்குப் போட்டி பேச முடியவில்லை. பிடிக்காத பேச்சுக்களை முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிடுவாள். பாக்கியத்தின் மீது இருந்த மதிப்பால் இவளின் இந்தக் குணத்தைப் பொறுத்துக் கொள்வான். அதற்காக மட்டும்தானா? என்பது அவனுக்குத்தான் தெரியும்.
தேன்மொழியைப் பொறுத்தவரை இவனுக்கென்று தனித்த சிந்தனைகள் அவளிடம் இல்லை. அவனுக்குத் திருமணத்திற்குப் பார்த்துக்; கொண்டு இருப்பதாக பாக்கியம் எப்போதோ சொன்ன நினைவு. அதன்பிறகு சில திருமணங்களுக்கும் பாக்கியம் போய் வந்தார். அதில் அவனுடையதும் இருக்கலாம்.
தேன்மொழிக்கு ஊர் விசயங்கள் தெரிந்துதான் இருக்கும். அதில் அவளுக்குத் தேவை என்று அவள் நினைப்பவை மட்டும்தான் அவள் ஞாபகங்களில் இருக்கும்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை பாக்கியத்திற்கு . பாண்டியைப் பற்றி மகளுக்குச் சொல்ல நினைத்தார். அதற்கு அவன் பிறந்த ஊரும் மதுரை என்பதுதான் காரணம்.
தேன்மொழியின் தாய் பாக்கியம் மதுரையில் பாத்திரக் கடை வைத்திருந்த லட்சுமணனை மணந்து அங்குதான் குடித்தனம் நடத்தி வந்தார். தேன்மொழி பிறந்த சில வருடங்களில் லட்சுமணன் மாரடைப்பில் காலமாகிவிட பாக்கியம் தனது பிறந்த ஊரான கோவைக்கு மகளைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்.
மதுரையில் இருந்த சொந்த வீடு பாகத்தில் இருந்தது. கட்டியவனே இல்லை என்று ஆன பின் அவனுடன் வாழ்ந்த வீடும் ஊரும் வெறுத்துப் போனது பாக்கியத்திற்கு.
பாத்திரக் கடையை விற்றதில் ஒரு தொகை இருந்தது. இங்கே பாக்கியத்தின் தங்கை புஷ்பவதி செய்த உதவியிலும் இவரது தையல் வேலை கொடுத்த ஆதரவிலும் ஆரம்பத்தில் சமாளித்தார்.
பெண் பிள்ளையை வைத்திருக்கிறோமே என்ற பயத்தில் வேறு ஏதாவது வேலை செய்தால் தேவலை என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது அவருக்கு கிடைத்தது அங்கிருந்த பனியன் கம்பெனியில் பீஸ் வெட்டும் வேலை.
அங்கு கிடைக்கும் மாத வருமானம் இவரது தையல் தொழில் என்ற ஓரளவு நன்றாகவே இவர்கள் இருவர் கொண்ட குடும்பம் ஓட பாக்கியத்தின் தங்கையும் அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருக்கிறார். புஷ்பவதியின் கணவர் தனசேகரும் அதற்கு முணுமுணுத்ததில்லை.
குழந்தைகள் இல்லாத புஷ்பவதி – தனசேகர் தம்பதிகளுக்கு இந்த ‘வேலம்மாள’; தான் செல்லப் பிள்ளை.
தேன்மொழியின் மீது அப்படி ஒரு பிரியம் அவர்களுக்கு. தேன்மொழிக்கு புஷ்பவதி வைத்த பெயர்தான் வேலம்மாள்;. பிறந்தபோதே அத்தனை அழகாக இவர்கள் தாயை அப்படியே உரித்துக் கொண்டு பிறந்திருந்தவளுக்கு தங்கள்; தாயாரின் பெயரான வேலம்மாள் என்பதையே பெயராக வைத்து வாய் குளிர ஆசையாக அழைத்து வருகிறார்கள் அக்கா தங்கை இருவரும்.
பல வருட உழைப்பின் பலனாக போன வருடம்தான் இந்த ஸ்டார் காலனியில் சொந்த வீடு வாங்கி மகளுடன் குடியேறி இருக்கிறார் பாக்கியம்.
“வயசுப்புள்ள கல்யாணத்துக்கு நிக்குது. அதுக்கு நகை நட்டை சேக்காம எதுக்கு புது வீடும் காடும் உனக்கு?” என்ற பாக்கியத்தை குறை சொல்லத்தான் செய்தார்கள்.
ஆனால் சொந்த வீடு வாங்கியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவள் அவர் மகளே அல்லவா?
“அம்மா…எனக்கு நீங்க படிப்பைக் குடுத்திருக்கீங்க. அதுகூட டைப்ரைட்டிங் படிக்க வச்சிருக்கீங்க. கம்ப்யூட்டர்ல டாலி படிக்க வச்சிருக்கீங்க. நான் ஆசைப்பட்டா மட்டும் போதுமா? நீங்க நினைச்சதாலதான் என்னால இதுல்லாம் படிக்க முடிஞ்சுது. பத்து படிக்கும் போதே இந்த கிளாஸ்க்குலாம் ஒவ்வொன்னா போக ஆரம்பிச்சது உங்களாலதான்.
இத்தனையும் படிக்க வச்சிட்டு இதுக்கு மேல நகை போட்டு கல்யாணமும் பண்ணி வைக்கப் போறேன்னு சொல்றீங்க? அப்ப நான் எதை சாதிக்கப் பொறந்தேன்? நீங்க எனக்கு எவ்வளவோ செய்றீங்க. உங்க கிட்ட கேக்குறது தப்புதான் ஆனா நான் யார் கிட்ட கேக்குறது? எனக்கு சொந்த வீடு வேணும் ” என்று மகள் குமுறினாலும் பாக்கியத்திற்குப் பெருமைதான்.
ஒவ்வொரு பிள்ளைகள் போல படிக்கிற காலத்தில் அதைக் கோட்டை விட்டு விட்டு வருந்தாமல் காலத்தே படித்த தன் மகளை நினைத்து கர்வமும்தான்.
மகள் சொன்ன மாதிரி டைப்ரைட்டிங் – கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் படித்தாலும் சரியான கட்டணத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் படித்து முடித்து , சான்றிதழ்களும் வாங்கி , இவருக்;கு அதிலும் பெருமை சேர்த்தவள் தேன்மொழி.
இப்படியே போனால் மகள் கல்யாணம் செய்து கொள்ளால் இருந்து விடுவாளோ என்று பயந்தார் பாக்கியம்.
அவர் மணவாழ்வுதான் பாலைவனமாக விட்டது. மகளாவது தொங்கத் தொங்கத் தாலியுடன் தன் கணவனோடு மகிழ்வாக வாழ வேண்டும் என்று அவர் நினைப்பாரா? மாட்டாரா?
மகளின் சொந்த வீட்டு கனவும் நியாயமானதே. வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு வாடகை வீடுகளில் இருந்து அனுபவித்த இன்னல்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதிலும் குடும்பத் தலைவன் இன்றி ஒற்றைப் பெற்றோராக இவர் மகளுக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கப் போராடியதை பேய் கண்டாலும் இரங்கும். ஆனால் சுற்றி இருந்த சில ஜென்மங்கள் படுத்தியப் பாடென்ன? அதையெல்லாம் கண்களில் ரத்தம் வடிய இப்போது நினைத்துப் பார்க்கிறார்.
தங்கை வீட்டில் பல சமயங்களில் மகளை விட்டிருக்கிறார். என்ன இருந்தாலும்…. என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இதே தம்பி செய்திருந்ததால் உரிமையாக வாங்கிக் கொண்டு இருந்திருப்பாரோ என்னவோ?
இவரது சுய பச்சாதாப புலம்பலகளால் தானோ என்னவோ –
சொந்த வீட்டு ஜபத்தை பத்து வயதில் இருந்தே ஆரம்பித்து இருந்தாள் தேன்மொழி.
பாக்கியம் தன் சேமிப்பில் மகளுக்கு நகைகள் வாங்கவதை அவள் தடுத்ததே இல்லை.
வீடு வாங்க ஒரு வேளை வரவேண்டும் என்பார்களே? அப்படி ஒரு வேளை வந்த போது – அல்லது வரவழைக்கப்பட்ட போது தேன் மொழி உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
“நகைங்க எல்லாத்தையும் வித்துடுங்கம்மா. எனக்கு நகைங்க வேண்டாம். சொந்த வீடுதான் வேணும்.” என்று .
பாக்கியம் அதிர்ந்து விட்டார். ஒவ்வொரு நகையும் அவள் தேடி அவளுக்குப் பிடித்து எடுத்த நகைகள்.
இவர் அவற்றை அடமானம் வைக்க நினைத்திருக்க மகள் அவற்றை விற்கச் சொன்னதில் அத்தனைக் கஷ்டம் அவருக்;கு.
“இதுல்லாம் உனக்குப் பிடிச்ச நகைங்க பாப்பா” என்றார் ஆற்ற மாட்டாமல்.
“ஆமாம்மா. அது எல்லாத்தையும் விட எனக்கு சொந்த வீடு பிடிக்கும். நகை வாங்கும் போது நாம இப்படி ஒரு சூழ்நிலை வந்தா அடகு வைக்கனும்னு பேசிக்கிட்டோம். ஆனா அதை எப்ப மீட்கிறது? எப்படி மீட்கிறது? எதுக்கு மீட்கனும்?
அதான். வித்துடலாம்மா. எப்படியும் வீட்டை வாங்க இன்னும் கடன் படுவோம். அதை முதல்ல அடைப்போம். மத்ததை அப்புறம் பாப்போம்.” என்று மகளின் பேச்சைக் கேட்டு கசங்கிய மனதை
‘சரி… இப்பதானே இருபது வயசு ஆகுது. இன்னும் அஞ்சு வருசத்துல வேற நகைங்க சேத்திரலாம். எனக்கு வேற பிள்ளையா குட்டியா? காலத்துக்கும் இவ ஒருத்திதான். இவளுக்குத்தான் இந்த வீடு.
நகை தொகை குடுக்கலைன்னா என்ன? வீட்டை இவளுக்குக் குடுக்கத்தானே போறேன்? இவளுக்கும் ஒரு வேலை கிடைச்சிட்டா …. ‘என்று யோசித்து இந்த வீட்டை அதுவரை சேர்த்திருந்த சேமிப்புகளுடன் கடனை உடனை வாங்கி தங்கை மற்றும் தங்கை கணவரின் உதவியுடன் வாங்கி விட்டார்.
பாக்கியத்தின் உடனிருந்து கஷ்டங்களைச் சந்தித்து வளர்ந்த காரணத்தால் தன்னுடைய எதிர்கால மண வாழ்க்கையைப் பற்றி நல்ல எதிர்பார்ப்புகள் இல்லாமல் போய்விட, தன் தாய் யாரிடமும் அண்டி வாழக் கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்தாள் என்பது தேன் மொழி மட்டும் அறிந்தது.
புது வீட்டிற்குக் குடி வந்தப் பின்-
தேன்மொழி கல்லூரிக்குச் சென்று படிப்பதை விட கரஸில் படித்துக் கொள்ளலாம் அல்லது மேலே படிக்கவே வேண்டாம் என்று யோசித்து வர இவருக்குதான் குழப்பமாக இருந்தாது.
இந்தப் பொண்ணு என்ன நினைக்குது? என்ற கவலையாகிப் போனது.
ஒருவேளை அவரைப் போல தையல் தொழிலில் அவளுக்கு ஆர்வம் இருக்குமோ? இவள் தைப்பது வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும். கண்ணை உறுத்தாமல் அன்றைய நாகரீகப்படி ஜாக்கெட் , சுரிதார் செட்கள் தைப்பாள். என்ன ஒன்று? அவளுக்கு நேரம்தான் கிடைப்பதில்லை. ஜாப்டைப்பிங் வந்துவிட்டால் தையலை தாயிடம் ஒப்படைத்து விடுவாள். அவள் இருந்து முடிக்க வேண்டியது மட்டும் இரவு எந்நேரமானாலும் கண்விழித்து தைத்து முடிப்பாள்.
தந்தையில்லாமல் வளர்வதால் அவளுக்குப் பொறுப்பு அதிகமா? அல்லது இயல்பிலேயே இவள் இப்படித்தானா தெரியவில்லை.
மகள் ஒன்று கேட்டுவிட்டால் இவருக்கு ஆனந்தம் பிடிபடாது. பொதுவாக எதையும் விரும்பிக் கேட்காதவள் அவள். அவளே ஒரு வார்த்தை வேண்டும் என்ற சொல்லிவிட்டால் ஊர் உலகமே சுற்றி வந்தாவது அதை வாங்கித் தந்து விடுவார் பாககியம்.
அப்படி அவள் கேட்பவையும் வீட்டிற்காக அல்லது வேலைக்காக என்றுதான் இருக்;கும்.
இப்படி எப்போதும் போல மனதுக்குள் மகளின் எதிர்காலம் குறித்தே அவர் கவலைப்பட்டவாறு மகளிடம் பல்லைக் காட்டிப் பேசிக் கொண்டு இருந்தார்.
“ஆமா அவருக்கு வேற வேலை எதுவும் இல்லையா?” என்றவள் தாயின் முறைப்பில் –
“அதாவது இந்த மளிகைக் கடை, வளையல் கடை தவிர கேக்கிறேன். ஏன்னா இதுல்லாம் அவரு அப்பா சொத்துங்கிறீங்க. அவர் சம்சாரம் ஒன்னும் சொல்லலியா என்ன?”
என – கேட்க வேண்டுமே என்று கேட்டு வைத்தாள். பின்னே?
இருபது ரூபாய் அல்லவா குறைத்து இருக்கிறான். அவனுக்காக இப்படியாவது மெனக்கெட்டு கேட்காவிட்டால அன்னைக்கு ஒரு சுணக்கம் ஏற்படும் . அது எதற்கு வீணாக என்று கேட்டதுதான்.
மற்றபடி அவனுக்கு வேற வேலை இல்லையா? என்றுதான் கேட்க நினைத்தாள். மளிகைக் கடையில் அவனுடன் இன்னும் ஒருவர் இருப்பார். பேன்சி ஸ்டோரில் தனியாக ஆள் போட்டிருக்கிறார்கள்.
பின்னே இவனுக்கு என்னதான் வேலை? சும்மா வந்து கடையில் உட்கார்ந்து கொண்டு கையில் வைத்திருக்கும் லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டு போகிற வருகிறவர்களை வம்பிழுத்துக் கொண்டு இருப்பதைத் தவிர?
எத்தனை கொண்டு? நினைத்த அவளுக்கே ஆயாசமாக இருந்தது.
அவனைப் பற்றி அவள் அறிந்த வரையில் எண்ணிப் பார்க்கும் போது அவன் மீது பெரிய மரியாதை கிடையாது அவளுக்கு.
“அவங்க சொத்து பத்து விவகாரம்லாம் நமக்கு எதுக்கு பாப்பா? இருபது ரூபாய்க்குத் தக்காளிய வாங்குனமா? நடையைக் கட்டுனமான்னு இருக்கதுதான் நமக்கு நல்லது. அப்புறம் … அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. பொண்ணு பாத்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
என்ன ஒன்னு? இந்தத் தம்பிக்கு ஏதோ கொள்கையாம். அதுக்கேத்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்னு நிலையா நிக்குதாம்”
தாய் சொன்னதை அசுவாரசியாகக் கேட்டவள் ‘எவன் எவனுக்குத்தான் கொள்கை இருக்றதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு’ என்று மனதினுள் அவனைத் திட்டிக் கொண்டு கேரட்டைக் கழுவிக் கடித்தபடி அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றாள்.
ஏற்கனவே தக்காளி வாங்கியதில் நஷ்டம் இருந்தாலும் பாக்கியத்திடம் குழையடித்து நல்ல பெயர் வாங்கிய அழகு வீர பாண்டியன் ஏன் அதைச் செய்தானோ?
மன்னனுக்கும் மன்னவனே
என்னுடைய நாயகனே
என்று தேன்மொழி யாரை நினைத்துப் பாடுவாளோ?