தேன் பாண்டி தென்றல் _ 10
தேன் பாண்டி தென்றல் _ 10
- Posted on
- Nanthlala Ramalakshmi
- August 19, 2021
- 0 comments
10
அதற்கு மேல் பாண்டியன் தாமதிக்கவில்லை. உடனே தன் ஃபோனை எடுத்து அன்று சொல்லி வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் – நாச்சிமுத்துவின் எண்ணுக்கு அடித்தான்.
நாச்சிமுத்து அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருப்பவர்.
சும்மா ஜாலி ட்ரிப்பாக தங்கள் காலனியை சுற்றி வந்தால் போதும் என்று சொல்லி கூட்டி வந்திருந்தான்.
காலையில் அவர் வந்ததும் டீயும் வடையும் வாங்கி கொடுத்துவிட்டுப் வீட்டிற்க்கு வந்தான். அவர் கூடவே நின்றால் ஏதாவது வாயை விட்டு வம்பை வளர்க்க வேண்டி இருக்கும் என்றுதான் வீட்டிற்க்கு குதித்து ஓடி வந்திருந்தான்.
சரியான நேரத்திற்கு தென்றல் வீட்டை நோக்கி கிளம்பி விட்டான்.
இப்போது அங்கு கண்ட விசயத்தை உடனே காவல் துறையில் தெரிவிக்க வேண்டிய அவசியம் உணர்ந்து செயல் பட்டான்.
மறுபுறம் ஃபோன் எடுக்கப் பட்டதும்-
“ சார் நான் சொல்லி இருந்த வீட்டு வாசலுக்கு வந்து நிக்றிங்களா? இங்கே நிலைமை கொஞ்சம் பிரச்சனையா தான் இருக்கு” என்றான்.
“ ஓகே சார்” என்ற பிசி உற்ச்சாகமானார்.
சும்மா பெஞ்சை தேய்க்கும் வேலை அவருக்கும் பிடிக்காது. ஆனால் அவருக்கு கொடுக்கும் வேலையைத்தான் அவர் செய்ய முடியும்?
இப்போது ஏதோ பிரச்சனை என்று பாண்டியன் சொல்லவும் இவருக்கு சந்தோசமாக இருந்தது.
இது இன்று ஒரு சேலஞ்! இதில் அவர் பங்கு இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு அன்றைய பணியை செய்த நிரைவைத் தரும்.
பாண்டியன் பைப்பை பிடித்து மெல்ல கீழே இறங்கி விட்டான்.
இவன் இறங்கியதும் மணி இவனை பார்த்து மீண்டும் வாலை ஆட்டியது.
தன் தோழி தென்றல் வீட்டில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப் படுவதை சொல்ல நினைத்து இருக்கும் போல. அவளை போய் காப்பாற்றச் சொல்லி இருக்குமோ? என்றும் தோன்றியது.
ஆனால் தனது முதலாளி மல்லிகாதான் இதற்குக் காரணம் என்பதால் சோர்ந்து சாப்பிடாமல் இருந்திருக்கும் என்பதாக நினைத்துக் கொண்டான்.
மற்றபடி நாயைப் பற்றி அவன் பெரிதாக அறிந்து வைத்திருக்கவில்லயே? இத்தனை நாள் நன்கு அறிந்தவர் என்று அவன் நினைத்த மல்லிகாவே இத்தனை அதிர்ச்சி கொடுக்கும்போது?
மணியின் அருகில் சென்று அதன் வயிற்றைத் தடவிக் கொடுத்தான். மணி இவனைப் பார்த்து ஆர்வமாக வாலாட்டியது.
வாசலில் மோட்டார் பைக் சத்தம் கேட்டது.
நாச்சிமுத்து வந்து விட்டார். வரும் போது இவன் வண்டியில் கூட்டி வந்திருந்தான். “எதுக்கும் வச்சிக்கோங்க” என்று தன் வண்டியை அவருக்குக் கொடுத்துவிட்டு நடந்து வந்திருந்தான்.
இப்படி பிரச்சனைகளை அவன் எதிர் பார்த்திருக்கவில்லை. புஸ்வானம்தான் என்று நினைத்துதான் செயலில் இறங்கி இருந்தான். அதைத்தான் எதிர்பார்க்கவும் செய்திருந்தான்.
வாசலில் வந்திருந்த பிசியிடம் விபரங்களைச் சொல்ல அவர் சிரித்தார்.
“ பாப்போம்” என்றவரை அழைத்துக் கொண்டு காலிங் பெல்லை அடித்தான்.
இதற்கு முன் வாசல் வழியாக நுழையவே முடியவில்லை. ஏதேதோ பேசி சமாளித்து திருப்பி அனுப்பி இருந்தார் மல்லிகா.
ஒரு அளவுக்கு மேல் பேச முடியவில்லை. அதற்கு அவர்களிடம் எந்த சாட்சியமும் இல்லை.
பல முறை அடித்தப் பின் மெதுவாக கதவு திறக்கப்பட்டது.
மல்லிகா டீச்சர் நைட்டியில் இருந்தார். மேலே டர்க்கி டவல் ஒன்று போட்டிருந்தார். அந்த டவலை தென்றலின் அறையில் பார்த்த மாதிரியும் இருந்தது. பார்க்காத மாதிரியும் இருந்தது பாண்டியனுக்கு.
வந்தவர் போலீஸ் யூனிபார்மைக் கண்டு திகைத்தாற்போல்த் தோன்றியது. ஆனால் சட்டென சகஜமாகிவிட்டார்.
“வாப்பா. வீரா. நல்லா இருக்கியா? என்ன இந்தப் பக்கம்? சார் எதுக்கு வந்திருக்காங்க?”
இவனிடம் சந்தோசமாகப் பேசத் துவங்கி காவலரிடம் சற்று தயக்கமாக கேள்வியை நிறுத்தினார் அவர்.
அவரது பாட்டுக்குப் பின்பாட்டுப் பாட இப்போது பாண்டியன் தயார் இல்லை.
அவன் நாச்சி முத்து காவலரின் முகம் பார்க்க அவர் புரிந்து கொண்டார்.
அவனால் அந்தப் பெண்மணியிடம் இயல்பாகப் பேச முடியவில்லை.
“நீங்க டீச்சராம்மா?” என்று ஆரம்பித்தார்.
“ஆமா சார்” சொல்லும் போது அவர் முகத்தில் மகிழ்சியும் வேதனையும் போட்டி போட்டது.
“ எங்க வேலை பார்க்கிறீங்கம்மா?”
“இப்ப வேலை பாக்கலை சார். “
“கொஞ்சம் தண்ணீர் குடுங்கம்மா. இங்க ஒரு வேலையா வந்தோம். உங்களுக்கு எத்தனை பசங்கம்மா?” பேச்சு வாக்கில் கேட்பதாகக் கேட்டார்.
அவரது கேள்வியை அந்தரத்தில் விட்டுவிட்டு –
“இதோ தண்ணீர் எடுத்துட்டு வர்றேன். உள்ள வாங்களேன்?” என்று சம்பிரதாயமாகக் கூறியவர் ஒரு அடி பின்னோக்கி எடுத்து வைத்து வாசலில் அருகே இருந்த மண்பானையில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்.
“ தண்ணீர் இங்கயே வச்சிருக்கீங்க?” காவலர்தான் கேட்டார்.
“அது வாசல்ல உட்கார்ந்து இருக்கும் போது தாகம் எடுத்தா இதுக்காக உள்ள வரை போக வேண்டியதில்லைல?”
“அவ்வளவு நேரமா வாசல்ல உட்காருவீங்க? ஏன் வீட்ல வேலை இருக்காதா?எத்தனை பசங்க?” என்றார் மறபடியும்.
“ வேலைக்குப் போகாம வெட்டியாதானே இருக்கேன்? அதான் பொழுது போகாம இங்க வந்து இருப்பேன்.” இபபோதும் பிள்ளைகள் குறித்தக் கேள்வியைத் தவிர்த்தார்.
அதில் காவலருக்குக் கோபம் வந்துவிட – “ஏம்மா? எத்தனை தடைவ கேக்கிறேன்? எத்தனை பசங்கன்னு? சொன்னா என்ன தேஞ்சிருவியோ?” என்று காட்டமாகக் கேட்க –
மல்லிகா பாண்டியைப் பார்த்தார்.
அவன் இதுவரை அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“அட என்ன டீச்சர் நீங்க? உங்களுக்கு ஒரே பொண்ணு தென்றல் இருக்கறதைச் சொல்ல வேண்டியதுதானே? ஆமா…? தென்றல் எங்கே டீச்சர்?”
“அது …அவ ஊருக்குப் போயிருக்கா” அந்த சமயம் அவர் முகபாவனைகளை கூர்ந்துப பார்த்தான் பாண்டியன். அதில் ஒரு கள்ளத்தனம் – ஒரு கபடம் தெரிந்தது.
பாண்டியன் அதிர்ந்துவிட்டான். மல்லிகாவிற்கு இருக்கும் இன்னொரு முகத்தை அவர் தனது நல்ல முகம் காட்டும் இடத்தில் வைத்துப் பார்த்ததில் இவனுக்கு நெஞ்சு தடதடத்தது.
பேய் பிசாசு பயமில்லை. சிங்கம் புலி பயமில்லை.
இப்படிப்பட்ட மனிதர்கள்தான் பயம்.
“இலலையே? நேத்து கூட அவ சத்தம் கேட்டுதே?” என பாண்டியன் சந்தேகமாகக் கேட்க –
தன் மீதான விசாரணை ஆரம்பமானதை மல்லிகா உணராமல் இல்லை.
“அட நீ போப்பா. அவ ஊருக்குப் போய் ரெண்டு நாள் ஆவுது”
“அவளை நாங்க வெளிய பாக்கவே இல்லையே?”
“அது… அவ காலையிலயே கிளம்பிட்டா”
“மல்லிகாம்மா.. நான் காலங்காத்தால கடையில உட்காந்து பால் பாக்கெட் எண்ணி வாங்குறவன். எனக்கேத் தெரியாம அவ போயிட்டாளா என்ன?”
பாண்டியன் நக்கலாகக் கேட்க மல்லிகா முடிந்தவரை போராடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“அது எனக்கெப்படித் தெரியும்?” மல்லிகா நழுவ முயன்றார். இதுவரை அவரை ‘டீச்சர்’ என்று அழைத்துக் கொண்டு இருந்தவன் இப்போது ‘மல்லிகாம்மா’ என்று அழைத்தது உறுத்தாமல் இல்லை.
இப்படியே விட்டால் சரிவராது என நினைத்து நாச்சிமுத்துவைப் பார்த்துக் கண் அசைக்க அவர் தடாலடி ஆனார்.
“என்னம்மா? கதை சொல்லிக்கிட்டு இருக்கியா? நீ உன் பொண்ணை அடைச்சி வச்சிக் கொடுமைப் படுத்தறதா கம்ப்ளயின்ட் வந்திருக்கு. தம்பிதான் அப்படி எல்லாம் இருக்காதுனு சொல்லிச்சு. இரு. நான் வீட்டைச் செக் பண்ணிட்டு சொல்றேன்?” என்றார்.
“சும்மா நீங்க நினைச்சதும் வீட்டை ரெய்ட் பண்ணிருவீங்களா? வீட்டைச் செக் பண்ண ப்ரஸீஜர் இருக்கு. பேப்பர் கொண்டு வாங்க. அப்புறம் பாருங்க” என்றார் எகத்தாளமாக. முகத்தில் மீண்டும் அந்த பயங்கர தோற்றம் வந்தது.
“நாங்க சந்தேகத்தின் பேர்ல செக் பண்ண முடியும். நீ இவ்வளவு பேசறதுல இருந்தே ஏதோ வில்லங்கம்னு தெரியுது. நடம்மா உள்ள” மல்லிகாவை உள்ளே லத்தியால் தள்ளிக் கொண்டு போனார் நாச்சிமுத்து.
பாண்டியை கொன்றுவிடுவதைப் போல பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார் மல்லிகா. இது எல்லாவற்றுக்கும் அவன்தான் காரணம் என்பது கூடப் புரியாதா அவருக்கு?
மற்ற இடங்களைப் பெயருக்குத் துழாவிவிட்டு தென்றல் இருந்த அறைக்குள் வரப் பார்க்க மல்லிகா தடுத்தார்.
“அங்கே போக வேண்டாம் சார். அது என் வீட்டுக்காரர் யூஸ் செய்த ரூம். அதை பூஜை ரூம் மாதிரி வச்சிருக்கேன். ப்ளீஸ் “ என்றார்.
‘பாக்க வேண்டியதே அந்த ரூமைத்தான்’ என மனதில் நினைத்துக் கொண்டவன் தன் சந்தேகத்தைத் தானே நிவர்த்தி செய்து கொண்டான்.
‘தேன்மொழி பாத்தப்ப அந்த ரூம்ல இருந்திருக்கிறாங்க. அப்புறம் இங்க வந்திருக்காங்க. ஜன்னலை உடைச்சதை அவங்க கண்டுக்கலை. ஏன்னா ஒரு வருசத்துக்கும் மேலே அவங்க இங்கே தென்றலை அடைச்சு வச்சிருக்கிறதை யாரும் கவனிக்கலை. அந்த தைரியத்துல இருந்திருக்காங்க.’
“எந்த ரூமா இருந்தாலும் சந்தேகம்னு வந்தாப் பாக்கனும். என்னை அதைச் செய்யாதே இதைச் செய்யாதேன்னு சொல்ல நீ யாரும்மா. போம்மா அந்தப் பக்கம்” காவலர் அந்தக் கதவைத் திறந்தே விட்டார்.
உள்ளே தென்றல் கையில் பிளாஸ்டிக் தட்டில் உணவை வைத்துக் கொண்டு எதிரே சுவற்றை வெறித்துக் கொண்டு இருந்தாள்.
‘இனனு சாப்பிடலியா?” என்று மல்லிகா முணகியதில் வேதனையா? வலியா? எரிச்சலா? ஏதோ ஒரு உயர்வு இருந்தது. ஆனால் பாசம் இல்லை என்று தோன்றியது.
தென்றல் அவன் பார்க்க வளர்ந்தவள் அல்லவா? தென்றலை அப்படிப் பார்க்க இவனுக்குத் தாங்கவே இல்லை. ஓடிப்போய் அவளைத் தூக்கி நிறுத்தினான்.
அவள் ஸ்திரமாக நிற்க முடியாமல் இவன் மீதே சாய்ந்தாள்.
“தென்றல். தென்றல் பாப்பா. என்னைப் பாருடா” என்று பரிதவித்தான் பாண்டியன். முன்பு ஒருமுமுறை பார்த்த போது இடைவரை இருந்த அவளது கூந்தல் தோள்வரை கத்தரிக்கப்ட்டு இருந்ததுக் கண்டு இன்னும் அதிர்ந்தான்.
இதைக் கல்நெஞ்சுடன் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா கர்ஜத்தார்.
“தென்றல்! அது இவளுக்கு அவங்க அப்பா வச்ச பேரு. நான் என்ன பேரு வச்சிருந்தேன் தெரியுமா? ‘வேலம்மா’. இது எங்க டீச்சர் பேரு. அவங்க மேல அத்தனை பிரியம் எனக்கு. அதனாலயே நானும் டீச்சருக்குப் படிச்சேன்.
பாடத்தோட பிள்ளைங்களுக்கு அவங்களை மாதிரியே ஒழுக்கமும் சொல்லிக் கொடுத்தேன்.
ஆனா எனக்குப் பிறந்த இந்தக் கழிசடை எவனையோ… ச்சை! சொல்லவும் அருவறுப்பா இருக்கு. இதுக்கா இத்தனை அருமையா பெத்து பேர் வச்சு வளத்தேன்? நான் ஒழுக்கம் சொல்லிக் கொடுத்த பிள்ளைங்க மத்தியில எப்படி நான் நிப்பேன்?”
என்றவர் ஓடி வந்து இவர்கள் எதிரிலேயே பாண்டியன் தடுப்பதற்குள் அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாத தென்றலை அதிர்ச்சியும் பயமுமாகப் பார்த்தான் பாண்டியன்.
இவன் குழப்பத்தைக் கண்டு பயங்கரமாகச் சிரித்தார் மல்லிகா.
“அந்த பயம்! தப்பு பண்ண பிள்ளைங்க என்கிட்ட அடி வாங்கினா வாயைத் திறக்க கூடாது. பிரம்பால அடிச்சாலும் கத்த மாட்டா! அப்படி வளத்திருக்கேன்!” என பெருமிதத்தோடு மல்லிகா சொன்ன போது –
அந்த வீட்டில் மனநிலை பிறழ்ந்தவர்கள் இருவர் என முடிவானது பாண்டிக்கு.
தென்றலை நன்றாக தன் மீது சாய்த்துக் கொண்டு அவளைத் தட்டி கொடுக்க அவள் இவனைக் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
பாண்டியனுக்கு ‘அய்யோ’ என்று பாவமாக இருந்தது.
அப்போது தேன்மொழி அந்த காலனியில் சங்க உறுப்பினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்து இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தாள்.
காவலருக்கு அழைத்த போதே அவளுக்கும் அழைத்துச் சொல்லி இருந்தான்.
“என்ன பெருசா ஒழுக்கம் சொல்லிக் குடுத்தீங்க? ஒரு டீச்சர் – பொய் சொல்லக் கூடாதுனு சொல்லிக் குடுக்கலியா நீங்க? ஆனா எத்தனை பொய் நீங்க சொல்லி இருக்கீங்க? அடுத்தவங்களை துன்புறுத்த கூடாதுனு சொல்லிக் குடுக்கலியா நீங்க? ஆனா உங்க பொண்ணை அவ உங்களுக்குப் பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை துன்புறுத்தி இருக்கிங்க? பொண்ணுங்க பொதுவா முடியை அப்படி மெயின்டேய்ன் பண்ணுவாங்க. நீங்க அவ முடியை வெட்டி இருக்கீங்க. அவளுக்கு அழகே அந்த முடிதான் “ என்று பொருமியவன் தேன்மொழியின் பார்வை மாறியதை கவனிக்கவில்லை.
“ காதலிச்சா என்ன தப்பு? நீங்க உங்க வீட்டுக்காரரை ஒரு அரை செகண்ட்டாவது காதலிக்கலை? இல்லைனு சொல்லுங்க பாப்போம்?”
மல்லிகா அமைதியாக இருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு வந்திருந்த மற்றவர்களை பார்த்தார்.
தன் கவுரவம் பறிபோய் விட்டது என்பதை உணர்ந்தார். அவர் முகம் ஏதோ வலியில் சுருங்கியது.
திடீரென மயங்கி விழுந்தார். அவர் வாயில் இருந்து நுரை தள்ளியது.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்.
ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டிருந்தது.
நாச்சிமுத்து இதை தற்கொலை என்று பதிந்து கொண்டார். மேலும் குப்பையைக் கிளறாமல் “பொண்ணை நல்லாப் பாத்துக்கப்பா” என்று பாண்டியனிடம் சொல்லிச் செல்ல தேன்மொழி செய்வதறியாது நின்றாள்.
தென்றலையும் அதே மருத்துவமனையில்தான் சிகிச்சைக்கு சேர்திருந்தான் பாண்டியன். தேன்மொழி உடன்தான் இருந்தாள்.
“அவங்க ரொம்ப டிப்ரசன்ல இருக்காங்க. கிட்டத்தட்ட தன்னை மறந்த நிலை. ரொம்ப நாளா டார்ச்சர் அனுபவிச்சதால் புத்தி கொஞ்சம் தடுமாறிடுச்சு. இதுக்கு இங்கிலீஸ் டெர்ம்லாம் சொல்லி உங்களைக் குழப்பலை. இங்கே ஆர்டினரி டிரீட்மென்ட்டுக்கு அப்புறம் ஒரு சைக்காலஜிஸ்ட் கன்சல்ட் பண்ணுங்க.” என்ற புதிய மருத்துவரை குழப்பத்துடன் பார்த்தான் பாண்டியன்.
இனி தென்றல்?