தேன் பாண்டி தென்றல் _ 9

தேன் பாண்டி தென்றல் _ 9

 
9
  1. இந்த நேரம் மல்லிகா டீச்சர் குட்டித்

    தூக்கம் போடும் நேரம் என்பது இவர்கள் கணிப்பு. அவர் விழித்திருக்கும் போது சென்று பார்க்க குமார் குழுமத்தினர் எவ்வளவோ முயற்ச்சித்தும் முடியவில்லை. நாகரீகமாக முயன்றதால் மல்லிகாவின் நாசூக்கான மறுப்புகளில் திரும்பிவிட்டிருந்தனர்.

 
 
ஆனால் இன்னும் இன்னும் தாமதிக்க மனம் வரவில்லை.
 
காவல் துறையில் சொல்லிவிட சந்தேகம் என்றாவது எழுதித் தர சொன்னார்கள்.
அது முடியாததால் தான் இந்தத் திட்டம். இதில் காவல் துறையின் உதவியைக் கோரி இருந்தான்.
 
“ நான் செய்றது சரின்னா அங்கே என் பதிலை தயங்காம சொல்லுவேன். இல்லன்னா என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியும். நீங்க ஒரே ஒரு பிசியை அனுப்பினா போதும் “ என்று கெஞ்சி இருந்தான்.
 
இவனை அந்த வட்டாரத்தில் நன்கு அறிவார்கள் ஆதலால் காவல் நிலையத்தில் ஒத்துக் கொண்டார்கள்.
 
 “பதினொரு மணிக்கு உங்களை கூப்பிட வண்டி வரும். என் ஃபோன் வந்ததும் அந்த வீட்டுக்கு உள்ளே வந்திருங்க. பிளீஸ்”
 
இப்படியான இவன் ஏற்பாடுகளில் கொஞ்சம் மண்ணை அள்ளி போட்டவன் இந்தப் பிரச்சனையில் இவன் கூடவே இருந்த குமார் தான்.
 
மல்லிகா டீச்சர் வீட்டு வாசலில் நாய் உண்டு. என்ன பெரிதாக? எல்லாம் இவன் பார்த்து வளர்ந்த நாய்தானே? சொன்னால் கேட்டுக் கொள்ளும். மீறி குரைத்தால் பிஸ்கட்டைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். 
 
அவன் நேரம். இன்று ஞாயிற்றுக் கிழமை. ஒரு கடையும் இல்லை. அவன் கடையும்தான்.
 
வீட்டில் அதெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார் செண்பகம்.
 
இந்த பிஸ்கட் சமாச்சாரத்தை  ஆரம்பிக்கவும் அதற்கு ஒரு முடிவு எடுக்கவும் முக்கிய காரணம் தேன்மொழியைச் சந்திப்பதே. அவளைச் சந்தித்துப் பல நாட்கள் ஆகி விட்டனவே? போன ஞாயிற்றுக் கிழமைப் பார்த்தது. அதன் பிறகு அப்படி இப்படி என்று குமார் மூலம் அவள் தொலைபேசி எண்ணை வாங்கி இருந்தான். 
 
தவிர அது ஒன்றும் அத்தனை சிரமம் இல்லை. அவள்தான் பல அலுவலகங்களை வாடிக்கையாளர்களாக வைத்து இருக்கிறாளே? 
 
அனைத்து இடத்திலும் அவள் நேர்மையும் அழுத்தமும் பிரசித்தம். அதனால் எங்கும் அவளுக்கு ஒரு மதிப்பு எப்போதும் உண்டு. அதில் மிகுந்த பெருமை இவனுக்கு.
 
 
எப்படி பார்ப்பது அவளை ? என்று யோசித்துக் கொண்டே நடந்தால் தேவதை போல அவள் எதிரில் வந்தாள்;.
 
அவனைக் கேட்காமலே அவன் பற்கள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டன. அதாவது ஹி….ஹி எனப் பற்க்களைக் காட்டினான்.
 
 
முகத்திற்கு யாரோ சீரியல் செட் வைத்துக் கட்டியது போல பளிச்சிட்டது. முகம் வேறு பரந்து மலர்ந்தது.
 
“தேனும்மா.. என்னடா இந்தப் பக்கம்?”
 
“ஏன் இந்த வீதி உங்களுக்குனு எழுதிக் குடுத்திட்டாங்களா?”. சும்மா ஏதாவது பேச வேண்டுமே என சொல்லி வைத்தாள் தேன்மொழி.
.
“ப்ச் . சும்மா கேட்டாலும் என்கிட்ட வம்ப வளக்கிறது. நான் என்ன பேசினாலும் குத்தம்” என்று அழகாக முறுக்கிக் கொண்டான் அழகிய வீரபாண்டியன். 
 
“இல்ல. இல்ல. அப்படிச் சொல்ல வரலை” தேன்மொழிப் பதறிப் போக இவனுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.
 
 
“பின்னே? எப்போ என்னைப் பாத்தாலும் எகிறிக்கிட்டே இருக்க. முந்திதான் அப்படி. இப்ப என்னவாம்?”
 
“ஏன் இப்ப மட்டும் என்ன வந்துச்சு?” கேட்கும் போதே அவள் கன்னங்கள் சிவக்கத் தொடங்கி ரோஜாப்பூ முகம் மெல்லக் குனிந்தது. இவன் முகம் கனிந்து சிரித்தது.
 
அவள் தன் கூச்சத்தில் இருந்து விடுபட்டு முகம் நிமிர்த்தி-
 
“அது..அதுல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப எங்க பயணம்?”
 
“அடியேய்! போகும் போதே எங்க போறீங்கனு கேட்கக் கூடாதுடி.”
 
“அப்ப போகும் போது எங்க போறீங்கனு நீங்களே சொல்லி இருக்கனும்”
 
“ஆத்தா மகமாயி..உன் அளவுக்கு எனக்கு இப்ப தெம்பில்ல. நான் எங்க போனாலும் இதே உடம்போட இதே உசுரோட திரும்ப வரனும்னு ஆசிர்வாதம் பண்ணுடியம்மா”
 
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. உங்களால அடுத்தவனுக்கு வேணா சேதாரம் வரலாம். நீங்க திவ்வியமாத்தான் இருப்பீங்க.”
 
“நீ என்ன வாழ்த்துறியா?திட்டுறியா?”
 
“ஏதோ ஒன்னு. மொத்தத்துல நீங்க போற காரியம் நல்லபடியா முடியும். முடியனும். ஏன்னா உங்களுக்கு இப்ப எதிர்ப்பு நான் பாருங்க. அப்புறம் அது வேற எனக்கு கஷ்டமா இருக்கும்”
 
“லூசு! என்ன பேச்சு இது? எதிர்ப்பு ஆர்பாட்டம்னுகிட்டு. நீ என்னிக்கும் எனக்கு ராசிதான். என் மகாராணிதான்” அவன் குரல் சாதாரண பேச்சுவார்த்தையாக இருந்தாலும் அந்தக் குரல் எல்லையை மீறியதாக இருக்க இவள் பயந்துவிட்டாள்.
 
“சரி. சரி. போதும் உங்க வழக்கு. நடையைக் கடடுங்க. எனக்கும் வேற வேலை இருக்கு. “
“உன் வேலையை நீ பாரு. நானா வேண்டாங்கிறேன். அதுக்கு முன்ன ஒரு பாக்கெட் பிஸ்கட்டுக்கு வழி பண்ணு” என்றான்.
 
“அடப்பாவி. நீங்க பெரிய அப்பாட்டக்கர்னு நம்பி ஏமாந்திட்டேனே? ஒரு பாக்கெட் பிஸ்கட்டுக்கு விதியத்தவரா நீங்க?”
 
“இந்தா… இதுலாம் ஓவர்னு உனக்கே தெரியுதுல்ல? சும்மா பினாத்திகிட்டு இருக்காம பிஸ்கட்டுக்கு வழியப் பாரு”
 
“ம்? ஓகே. எங்க வீட்ல அம்மாவுக்கு உப்பு பிஸ்கட் வாங்கி வச்சிருப்பேன். பரவாயில்லயா?”
 
“அது தெரிஞ்சுதான் உன்கிட்ட கேட்கிறேன் “
 
“ எப்டி தெரியும்? “
 
“ அட அந்த உப்பு பிஸ்கட் நம்ம கடையில தானே வாங்குவே. எனக்கு தெரியாதா?” பாண்டி சாதாரணமாகச் சொன்னான்.
 
“ வேற என்னலாம் வாங்குவேன்?”
 
தேனுவின் குரல் கண்டிப்பாக கேட்கவும் பதறினான் பாண்டியன்.
 
“தெய்வமே! ப்ளீஸ். குடுடி”
 
“கொன்னுருவேன். கொடும்மான்னு சொல்லுங்க. தர்றேன்” சற்று முன்னால் அவன் ஆசையாக சொன்ன  ‘டி’யை கவனிக்கவில்லையா அவள்? என்று கடுப்புடன் பார்த்தான்.
 
“ஓய் என்ன விளையாடுறியா? அங்க பெரிய பிரச்சனை போயிக்கிட்டு இருக்கு. “
அதற்குமேல் தாமதிக்காமல் அவள் பிஸ்கட் எடுத்து வந்து தந்து அவன் உளறி குழறியவைகளை தற்காலிகமாக மறந்து இவனை கிட்டத்தட்ட வீரத் திலகமிட்டு அனுப்பி வைத்தாள் மல்லிகா டீச்சர் – தென்றல் வீட்டிற்கு.
 
பாண்டி தென்றல் வீட்டு காம்பவுண்ட் சுவற்றை நெருங்கும் போது அந்த வீட்டு நாய் மணி ஓய்ந்து போய் வீட்டு முன் வாசலில் படுத்து கிடந்தது இங்கிருந்து பார்க்கும் போதே தெரிந்ததால் முன் எச்சரிக்கையாக பிஸ்கட் பாக்கட்டை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டான்.
 
ஆனால் அவன் உள்ளே போகும் போது அந்த நாய் மணி அவனை பார்த்து வாலை ஆட்டி தன் சந்தோத்தைத் தெரிவித்தது.
 
மேலும் ஏதோ சொல்ல வருவது போல இவன் மீது நான்கு கால்களையும் வைத்து ஏற முயன்றது.
 
அதன் தலையைத் தடவி சமாதானப் படுதியவன் கையில் இருந்த பிஸ்கட்டை மணியின் வாயில் வைக்க அது பிஸ்கட்டை தள்ளிவிட்டு இவனை பிராண்டியது.
 
இதற்கு மேல் இங்கே நிற்க முடியாது!
 
பாண்டியன் அடுத்து சுவற்றை ஒட்டி இருந்த உயரமான பைப் லைன்னை பிடித்து ஏ தரைத் தளத்தில் இருந்த ஒரு ஜன்னலின் சன்சேட்டின் மீது தாவி நின்று தனது இடது பக்கவாட்டில் பார்த்தான்.
 
அங்கே முற்றிலும் அடைக்கப் பட்ட ஜன்னல் அதாவது ஜன்னல் உள் புறமாய் பூ ட்டப்பட்டு ஜன்னல் திரைகளும் உள்புறமாக இழுத்து விடப் பட்டு இருந்தது.
 
இதற்கு மேல் எப்படி போக?
 
ஜன்னலை நன்கு ஆராய்ந்து பார்த்தான்.
 
முன்தினம் அந்த ஜன்னலை உடைத்து ஒரு சிறு பிளவாவது ஏற்ப டுத்தி விடுவதாக சொல்லிவிட்டு சனிக்கிழமை தன் அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு நேற்றே சென்றுவிட்ட குமாரை நினைத்து பற்றிக் கொண்டு வந்தது.
 
ஒன்று ஒத்துக் கொண்டதைச் செய்ய வேண்டும். அல்லது முதலிலேயே முடியாது என்பதை தெரிவித்தது விட வேண்டும்.
 
இடியட் குமார்!
 
வேலையை முடித்து விட்டு போயிருப்பான் என் இவன் நினைத்திருக்க இப்படி சொதப்பி விட்டானே?
 
செய்யவில்லை என்ற தகவலாவது சொல்லிவிட்டு போயிருக்கலாம்.
 
அவனுக்கு இவன் பலமுறை ஃபோன் செய்து பார்த்தபோது நாட்ரீச்சபில் என்று தான் வந்தது.
 
 ‘நாய் சகவாசம் சேலையைக் கிழிக்கும் ‘என்று சும்மாவா சொன்னார்கள்?
பாண்டியன் அப்படியே மெதுவாக வலது பக்கம் பார்த்தான்.
 
அதிர்ந்து போனான்.
 
ஏனெனில் வலது பக்க ஜன்னல் அழகாக கைப் பிடி பக்கம் சிறிய அளவில் புதியதாக உடைக்கப் பட்டு இருந்தது.
 
‘அடேய் குமாரு! இப்டியாடா என்ன சோதிப்ப?
 
டைரக்சனைத் தப்பா புரிஞ்சுகிட்டியேடா? எதிரெதிரே நிக்கும்போது ஒருத்தரோட வலதுபக்கம் இன்னொருத்தங்களுக்கு இடது பக்கம்  ’ மனம் புலம்பினாலும் அடுத்து என்ன செய்ய? என யோசித்தான்.
 
தேன்மொழி சொன்னபடி பார்த்தால் இவன் நிற்கும் இடத்தின் இடதுபக்க அறையில் தென்றல் இருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு பிரச்சனை இருக்க வேண்டும்.
 
அங்கே எப்படி போவது?
 
குமாரிடம் எதிரெதிரே நின்று கொண்டு இந்த விசயம் சொல்லும் போது  இடதுபக்கம் என்று சொல்லி இருந்தான். 
இவனது இடது பக்கம் அவனுக்கு வலதுபக்கம்தானே? மாஸ்டர் பிளான் போட்டும் மண்ணைக்கவ்வி விடுமா இவன் திட்டம்?
 
 
ஒரே நாளில் அனைத்தும் நடக்க கூடாது என்று மெது மெதுவாக அந்த வீட்டை அணுகி இருந்தார்கள் இவர்கள். அதனால்தான் ஜன்னல் மீது கல் பட்டதை டீச்சர் எப்படியும் கவனிப்பார்கள். அன்றே வேலையை ஆரம்பிக்க வேண்டாம் என்றுதான் மறுநாள் வந்திருந்தான். 
 
சரி பார்ப்போம். இத்தனை தூரம் வந்தாகி விட்டது.
 
என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம் என முடிவுக்கு வந்தான் பாண்டியன்.
 
மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு மென்மையான பெண்கள். இவர்கள் என்ன செய்து விடுவார்கள்?
 
ஒரே பயம் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டால் எப்படி மல்லிகா டீச்சரை எதிர்கொள்வது என்பதுதான்.
 
அவருக்கு பிரச்சனை என்று வரவில்லையே? அவரால் பிரச்சனை என்பது தன் சந்தேகம் என்றால் அதுவும் தவறு என்று ஆகிவிட்டால் ஊரில் அவன் மதிப்பு மரியாதை சற்று தடுமாறும்.
 
இன்னும் என்னென்ன நேருமோ? தெரியாது.
 
 
பாண்டியன் வேறு வழி இன்றி கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு வலதுபக்க ஜன்னல் கண்ணாடியை உடைந்த இடத்தில் இருந்து சிறிது சிறிதாக மெதுவாக உடைத்து இரண்டு விரல்களை உள்ளே விட்டு தாளை திறந்தான்.
 
அந்த ஜன்னலில் கீழே ஏதும் லாக் இருந்தால் இவ்வளவு செய்தும் புண்ணியம் இல்லை.
 
இவன் நேரமோ – தேன்மொழியின் ராசியோ – வேறு எதுவுமோ? என்னவோ? ஜன்னல் திறந்து கொண்டது.
 
 ஜன்னல் திரையை விலக்கிவிட்டு உள்ளே பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.
 
மல்லிகா டீச்சர் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்து விடுவார்.
 
போகிற வருகிறவர்கள் இவர் மகளைப் பற்றிக் கேட்டால் அஞ்சல் வழி மேற்படிப்பு படிப்பதாக சொல்லுவார்.
 
பனிரெண்டு மணியில் இருந்து ஒரு மணி வரை வாசலில் இருக்க மாட்டார்.
 
அந்த நேரம் ஓய்வெடுக்கச் செல்வதாக அவர் சொல்லுவார் என்பது இவனுக்குக் கிடைத்த தகவல்.
 
ஒரு ஆசிரியர் எப்படி பொய் சொல்லுவார்?
 
எனவே அந்த சமயம் வீட்டை நோட்டம் விடலாம் என்பது அவன் எண்ணம்.
 
இதற்காக காலனியில் பொதுமக்கள் எவ்விதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு மீட்டிங் நடத்தி இருந்தான்.
 
அதில் இறுதியாக “ உங்கள் வீட்டு பாதுகாப்பை காவல் துறை உதவியுடன் சோதிக்கலாமா? என்று கேட்டு மேடையிலேயே அனைவரின் ஒப்புதலைப் பெற்று இருந்தான்.
 
அங்கிருந்த வீடுகள் எல்லாம் தகுந்த பாதுகாப்புடன் இருப்பதால் இது சும்மா ஒரு கண் துடைப்பு என்று மக்களும் ஜாலியாக சிரித்துவிட்டு கிளம்பி இருந்தார்கள்.
 
தென்றல் வீட்டில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் அவன் அதைச் சொல்லித்தான் தப்பிக்க இருந்தான்.
 
மற்றபடி இந்த அரை குறை ஐடியாக்களை காவல் துறையில் சொன்னால் யாரென்று பாராது முதலில் இவனைத்தான் தூக்கி உள்ளே வைப்பார்கள். வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களா? என்று பார்;க்க இவன் யார்?
 
பாண்டியன் அந்த அறையை பார்த்த போது உள்ளே அழுக்கு ஆடையுடன் பலநாள் வாரப்படாத தலைமுடியுடன் இளம் பெண் ஒருத்தி அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள். அவள் அணிந்திருந்த நைட்டி அவள் உடலை முழுதும் மூடி இருந்தது. ஆனால் வெளியில் தெரிந்த கைகள் மெலிந்து வெளிறி  இருந்தது. அவற்றில் ஓரிரண்டு தழும்புகள் . வடுவாக- புண்ணாக .
 
அவள் தென்றல் என்பதே அவனுக்கு சற்று நேரம் கழித்தே உரைத்தது. அவள் அருகில் பிளாஸ்டிக் தட்டில் உணவு வைக்கப்பட்டு இருந்தது. அந்த உணவு வைக்கப்பட்டு சிறிது நேரம் ஆகி இருக்க வேண்டும்.  
 
 
அவன் அதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் முகமாக “ உன் திமிரை என்கிட்ட காட்டாதன்னு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா வேலம்மா. ஒழுங்கா சாப்பாட்டை சாப்பிடு. இல்ல பிரம்படிதான் உனக்கு”
 
என மிரட்டியவாறு உள்ளே வந்து கொண்டு இருந்தார் மல்லிகா டீச்சர்!
 

Leave a Reply

error: Content is protected !!