நான் பிழை… நீ மழலை… 33
நான் பிழை… நீ மழலை… 33
நான்… நீ…33
மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து விட்டான்.
“எங்கே இருக்கே நகுல்?”
“ஆன் தி வே மாமா!”
“வரும்போது எங்க ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டு வந்துடுடா!”
“ஏன்… அக்கா ஒன்னும் பிரிபேர் பண்ணலையா மாமா?”
“இல்லடா… நல்லவேளை, நமக்கு ஆயுசு கெட்டி, நீ சீக்கிரம் வந்து சேரு… பசி தாங்கல!” நக்கலோடு சொன்னவனை பலமாக கொட்டினாள் மனு.
அவளின் செயலில் சட்டென்று வெகுண்டவன், “ஏதேது… விட்டா என் தலையை உருட்டி ஃபுட்பால் ஆடுவ போலிருக்கு?” கோபத்தோடு அவளின் கையை முறுக்கியவன், அவளது முதுகோடு சேர்த்து இறுக்கி தனதருகே இழுத்துக் கொண்டான்.
“ஆஹ்… வலிக்குது ஆனந்தா!” வலியோடு அவள் விடுபடத் துடித்த போதும் இன்னும் அதிகமாய் இறுக்க பிடித்து முறுக்கி விட்டான்.
“சரி… இனிமே கொட்டு வைக்கல டா!”
“வாய் அடங்கலடி இன்னும்!”
“சரிங்க ஆனந்தன்!” என்றதுமே கையை விட்டு, அவளின் வாயில் அடித்தான்.
சுள்ளென்று விழுந்த அடியில் துடித்துப் போனவள், மீண்டும் அவனுக்கு பலமான கொட்டு வைத்து விட்டு ஓடிச் சென்றுவிட, இப்பொழுது அவளை துரத்த முடியாத நிலையில், தனது அறை வாசலிலயே நின்று விட்டான் ஆனந்தன்.
“என்னால பின்னாடி வரமுடியாதுன்னு தெரிஞ்சே ஓடிட்டே இல்ல… நீயும் என்னை நொண்டின்னு சொல்லாம சொல்லிட்டடி!” குத்தலாக குதர்க்கமாக கத்தவும் மனுவிற்கும் பொறுமை பறந்து போனது.
வீட்டில் அக்கா தம்பியிடம் செய்யும் குறும்புத்தனத்தை போல் இவனிடமும் விளையாட நினைத்து, இவள் ஓடிய ஓட்டத்தை காரணமாக்கி தர்க்கத்தை வளர்ப்பான் என்று இவளென்ன கண்டாள்?
அவனது பேச்சினை கேட்க சகிக்க முடியாமல், “இவன் வாய்க்கு ஒரு பூட்டு போட அருள் செய்யும் ஆண்டவரே!” ஸ்பஷ்டமான முணுமுணுப்புடன் அவன் முன்பு சிடுசிடுவென வந்து நின்றாள்.
“என் பலவீனத்தை எடுத்துச் சொல்ற மாதிரி, எந்தவொரு காரியமும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்!” கறாராக இவன் பேச,
“ஐயா சாமி… கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசைப்பட்டு உங்க நெலமைய மறந்துட்டேன். உடனே சிம்பதி கிரியேட் பண்ணி முறுக்கிட்டு நிக்க வேணாம்!” சமாதானமாக மனு கூற, அதற்குமே மசியாமல் முகம் திருப்பிக் கொண்டு நின்றான் ஆனந்தன்.
“நான் சிரிச்சது தப்பா போச்சு! இல்லன்னா… மீதி கதையை ஒழுங்கா சொல்லி முடிச்சிருக்கலாம். இப்ப பசியும் இடையில வந்து எனக்கு கதையே மறந்து போயிடுச்சு! ஒரு ப்ளாஷ்பேக் தெரிஞ்சுக்க எத்தனை தடவைதான் கொசுவர்த்தி சுருளை சுத்துறது!” கன்னத்தில் கை வைத்து சோகத்துடன் கூறியதில் தனது ஆதங்கத்தையும் மீறி சிரித்து விட்டான் ஆனந்தன்.
“உன் தம்பி சொன்னது சரியாத்தான்டி இருக்கு.”
“என்ன சொன்னான் அந்த நரி?”
“நீ ஒரு குட் என்டர்டெயினர்ன்னு சொன்னான். நம்ம வீட்டு மிஸ்டர் பீன், ஜோக்கர் எல்லாமே எங்க குட்டி அக்காதான்னு பட்டமெல்லாம் கொடுத்து பெருமை பீத்திகிட்டான்!”
“படுபாவி பக்கி, வரட்டும் இன்னைக்கு… அவனுக்கு இருக்கு கச்சேரி!”
“என்ன பண்ணப் போற மனு? பாவம்டி, உன் கொட்டுக்கு அவன் தாங்கமாட்டான்!”
“என்னை காரணம் சொல்லி, உங்ககூட வந்து ஒட்டிகிட்டவன் மேல அத்தனை அக்கறையோ!”
“அதுல உனக்கு பொறாமையா? எடுத்ததுக்கெல்லாம் தண்டனை கொடுக்காதேடி!”
“ரெண்டு பேருக்கும் வைக்காம மூனுபேரு டிபனையும் நானே சாப்பிடப் போறேன்!” கடுகடுப்புடன் சொல்லி முடிக்க,
“சாப்பாட்டுல கை வைக்க கூடாது செல்லாயி… உன் பேரன் பாவமில்லையா?” விடாமல் சீண்டினான் ஆனந்தன்.
“வேண்டாம், திரும்ப கொட்டு விழும்!”
“இப்ப இந்த பண்ணையாரோட மிச்சச்சொச்ச வரலாறு வேணுமா… வேணாமா?”
“என் நேரம்… சொல்லித் தொலைங்க!” நொடித்துக் கூறியவளை செல்லக்கொட்டு பரிசளித்து அடக்கினான்.
ஏதோ ஒரு இளகியதன்மை அவனது பேச்சில் வெளிப்பட்டதை இருவரும் அறியாமல்தான் போயிருந்தனர்.
“தாத்தா தவறினதும், மிருதுளா மேஜர் ஆகுறதுக்கு முன்னாடியே நாலுல ஒரு பங்கு லாபத்தை அவளுக்கு பிரிச்சு கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டேன்… அவ எப்படி வாழ்ந்தா, என்ன படிச்சான்னு எதையும் இன்னைக்கு வரைக்கும் நான் கேட்டுக்கல…” விட்ட கதையை மீண்டும் கூற ஆரம்பித்தான் ஆனந்தன்.
“அப்புறம், இப்ப என்ன பிரச்சனை?”
“ஆசை அதிகமாகி பேராசையில பித்து பிடிச்சு அலையுறா… சதிகாரி!” கோபத்துடன் கருவிக் கொண்டான்.
“விஷயத்தை சொல்லாம கோபப்பட்டா என்னன்னு விளங்கும் எனக்கு!”
“சொந்தமா தொழில் தொடங்க ஆசைபட்டு, அந்த முதலீட்டுக்கு நிலத்தை அடமானம் வைச்சு பணம் வாங்கி இருக்காங்க… கடன் மிரு பேருல இருக்கு, தொழில் நடத்தப்போற ஃபாக்டரி ஸ்ரீராம் பேருல ரிஜிஸ்டர் பண்ணி இருக்காங்க!
ஆந்திராக்காரன் கூட பிஃப்டி பிஃப்டி பார்ட்னர்ஷிப்-ல லெதர் ஃபாக்டரி பாதிக்கு மேல கட்டிடம் எழுப்பிட்டாங்க… அந்த ஃபாக்டரி கட்டினதும் எங்க நிலத்துலதான். சரிபாதி சொந்தக்காரன் என்னோட அனுமதி வாங்காம கட்டிட வேலை நடந்துகிட்டு வருது.
உயில்படி நிலத்தை அடமானம் வைக்கவோ, விக்கவோ எங்க ரெண்டு பேருக்கும் உரிமையில்லை. லாபத்தை அனுபவிச்சிட்டு, நேரடி வாரிசுகளுக்கு மாத்தி எழுதி வைக்கற கடமை மட்டுமே! இதை மறந்துட்டு இஷ்டத்துக்கு இவ அடமானம் வச்சு பணம் வாங்கினா, நான் சும்மா விட்டுருவேனா…
சொத்துல சரிபாதி பங்குதாரனா, நில அடமானத்துக்கு கடன் கொடுத்தவன் மேலயும், மிரு மேலயும் மானநஷ்ட வழக்கு ஃபைல் பண்ணி இருக்கேன். ஸ்ரீராம் மேலயும் அந்த ஆந்திராக்காரன் மேலயும் அத்துமீறி நிலத்தை ஆக்கிரமிப்பு பண்ணி கட்டிடம் கட்டினதா தனியா இன்னொரு கேஸ் ஃபைல் பண்ணிட்டேன்!
தாய் பத்திரம் என்கிட்டே இருக்கும்போது, எப்படி இவன் கவர்மெண்ட்ல ஃபாக்டரி கட்ட அப்ரூவல் வாங்கினான்னு தெரியல… கதிரேசன் பிரச்சனை ஓடிட்டு இருக்கற நேரத்துல சத்தமில்லாமல் இவங்க வேலையை ஆரம்பிச்சுருக்காங்க! ஒருவேளை இதுலயும் கதிரேசன் கூட்டு இருக்கும்ன்னு நினைக்கிறேன்!” நிதானமாக அனைத்தையும் கூறி முடித்தான் ஆனந்தன்.
“எதை வச்சு சொல்றீங்க?”
“ஸ்ரீராம் உன் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டானே… நான் விசாரிச்ச வரையில அவனுக்கும் கதிரேசனுக்கும் இருக்கற லிங்க் இன்னும் கட் ஆகல… என்னோட பலவீனம் நீதான்னு அவங்களுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு!
இன்னைக்கு காலையில நீ, மிருகிட்ட பேசினதும் உன்னை நோட்டம் பார்க்கத்தான் அவன் வந்துருக்கான். எல்லாம் கனெக்ட் பண்ணி பார்க்கும்பொழுது கரெக்டா ஜாயின்ட் ஆகுது!” ஆனந்தன் சிந்தனையில் ஆழ்ந்தபடி சொல்ல மனுவின் மனதிற்குள் மீண்டும் கலக்கம் குடிகொண்டது.
“இவங்ககிட்ட இருந்து நமக்கு விடுதலையே கிடைக்காதா? இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பிரச்சனை பண்ணிட்டே இருந்தா எப்படி வாழ்றது?” கேட்டவளின் மனம் முழுவதும் பயம் அப்பிக் கிடந்தது.
“சீக்கிரமே எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணிடலாம் மனு… நான் இருக்கேன்!” ஆறுதலாக கூறியவன், அவளது உள்ளங்கைகளை தனது கைகளுக்குள் வைத்து நம்பிக்கை அளித்தான்.
“நினைக்கவே பயங்கரமா இருக்கே… எப்படி மீண்டு வரப்போறோம் ஆனந்த்!”
“சிம்பிள் மனு… சட்டப்படி மிருதுளா இன்னும் ஸ்ரீராமுக்கு மனைவி ஆகல… சோ, வொய்ஃப்-க்கு சொந்தமான இடத்துல பில்டிங் கட்டுறேன்னு அவனால ஃப்ரூப் பண்ண முடியாது. முழுக்க முழுக்க போர்ஜரி, ஏமாத்து வேலைன்னு கேஸ் கொடுத்து நிலத்து மேலயும் நான் ஸ்டே ஆர்டர் வாங்கிட்டேன்!
ஆரம்பிச்ச தொழிலும் தடைபட்டு, இப்ப கடனுக்கு மாசத் தவணையும் கட்ட முடியாம நடுத்தெருவுல நிக்கிற மாதிரி தத்தளிச்சுட்டு இருக்கான் அந்த பேராசைக்காரன். கேசை வாபஸ் வாங்கச் சொல்லி நேருல வந்தும் ஃபோன் பண்ணியும் கெஞ்சிட்டு இருக்கா மிருதுளா!
அவ சொத்தை அவ பேருலயே மாத்தி தரச் சொல்லி டிமாண்ட் பண்றா… ஆனா, நான் உயில்படி மட்டுமே நடக்கணும்னு சொல்லிட்டு இருக்கேன். அதுக்குள்ள எனக்கோ நம்ம குடும்பத்து ஆட்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அதுக்கு முழுக் காரணமும் இவங்கதான்னு கமிஷனர் கிட்டயும் ஒரு கம்பிளைன்ட் கொடுத்து வச்சுருக்கேன்… அதனால எல்லாம் அமைதியான முறையில முடியும்னு நம்புவோம் மனு!” மனைவிக்கு தைரியமளித்து பெருமூச்சு விட்டான் ஆனந்தன்.
‘எப்படி இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபமாக, சுமூகமாக முடியப் போகின்றது?’ என்பதை நினைத்தாலே மனஷ்வினிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
பற்றாக்குறைக்கு இவனுமே, ‘உயில்படிதான் நடந்து கொள்வேன்!’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதில் பிரச்சனையின் வீரியம் தீவிரமடைகின்றதே ஒழிய குறைவதற்கான வாய்ப்புகளை கண்டறிய முடியவில்லை.
“இந்த பிரச்சனையை எப்படி முடிக்கணும்னு ஏதாவது ஐடியா பண்ணி வச்சுருக்கீங்களா?”
“என்ன செய்யணும், எப்படி யோசிக்கிறதுன்னே எனக்கும் தெரியல மனு… ஆனா நிச்சயமா சொத்துக்களை மிரு பேருக்கு, மாத்தி வைக்க நான் உடன்பட மாட்டேன். அந்த ஸ்ரீராம் ஒரு பச்சோந்தி… அவனைப் பத்தி இவளுக்கு இன்னும் சரியாத் தெரியல! பழக்க வழக்கமும் சரியில்லன்னு கேள்விப்பட்டேன்!” என்றவனை பார்த்து, ‘ஆம்’ என்று தலையசத்தாள் மனு.
“என்கிட்டேயும் மிஸ்பிஹேவ் பண்ணப் பார்த்தான்!”
“ம்ம்… பார்த்தேனே நானும்… இதை மிருவுக்கு புரிய வைக்கணும். அதுவரைக்கும் எனக்கு நிம்மதி இல்ல…” என்றவனை பார்க்கவும் பாவமாக இருந்தது.
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது. ‘மச்சான், செல்லாயி’ அழைப்புகள் சகஜமாகயிருந்தன. இருவருக்குள்ளும் மெல்லிய இணக்கம் இருந்தாலும் அதைவிட இடைவெளிகளும் அதிகரித்துக் கொண்டே போவதை இருவரும் உணரத்தான் செய்தனர்.
தனது அழுத்தங்களை கொட்டி முடித்த ஆனந்தனிடம் முன்னைப் போன்ற மூர்க்கங்களோ, கோபங்களோ இல்லை. எதையும் எளிதாக கிரகித்துக் கொள்ளத் தொடங்கி இருந்தான். அதன் எதிரொலியாய் மனைவியிடம் எல்லாவற்றையும் ஒப்புவிக்கும் கணவனின் கடமையை செய்யவும் பழகிக் கொண்டான்.
இவளுமே கணவன் சொல்வதை கேட்டுக் கொள்வாளே தவிர, பதில் கேள்விகளோ யோசனைகளோ எதையும் சொல்வதில்லை. பெரும்பாலும் உணவு நேரத்தில் பேசிக் கொள்வது வழக்கம். அந்த நேரத்தில் நகுலேஷும் உடனிருக்க, இவனால் மனைவியின் விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டுக் கேட்க முடியவில்லை.
ஒரு வார்த்தைக்கு பத்து வார்த்தை பேசும் மனஷ்வினி இப்போதெல்லாம் ஒரு வார்த்தை பேசுவதற்கே யோசித்தாள்.
“உங்கக்கா ஏதாவது பசை போட்ட அல்வாவை முழுங்கிட்டாளா நகுல்… வாயை தொறந்து பேசவே இப்ப எல்லாம் ரொம்ப யோசிக்கிறாளே!” ஜாடையாக ஆனந்தன் கேட்டும் பதிலில்லை.
“டோன்ட் க்நோ மாமா… பட், இவளோட அமைதியில நான் நிம்மதியா இருக்கேன். இல்லன்னா… நிமிசத்துக்கு நிமிஷம் என்னை நரின்னு கூப்பிட்டே இவ ஊளையிடுவா!” வாரிவிட்டபடி அக்காவை பார்க்க, வழக்கமான கொட்டு ஒன்றினை வைத்து,
“சாப்பிட்டு முடிங்க நரியாரே… கச்சேரிய ஆரம்பிச்சிடுவோம்!” மல்லுக்கு நின்றாள் மனஷ்வினி.
“நான் சாப்பிட்டு முடிச்சா தானே நீ ஆரம்பிப்ப… நான் இப்பவே எஸ்கேப்! குட்நைட் மாமா… முடிஞ்சா நீங்களும் இப்படியே அபீட் ஆகிடுங்க! இல்லன்னா… வச்சு செஞ்சுடுவா!” கிண்டலடித்துக் கொண்டே வேகமாய் தனதறைக்குள் தஞ்சம் அடைந்தான் நகுலேஷ்.
“பொறாமையா இருக்கு மனு… இப்படியெல்லாம் என்னால ஆதி கூட பழக முடியலயேன்னு வருத்தமாவும் இருக்கு.” ஏக்கத்துடன் கூறியவன் சட்டென்று நிகழ்விற்கு வந்தவனாய்,
“இப்ப எல்லாம் நீ எங்கூட சரியா பேசாம பிடில் வாசிச்சுட்டு இருக்க… வாட் ஹாப்பெண்ட் செல்லாயி?”
“எனக்கு, என் நிம்மதியே போச்சு மச்சான்!”
“நிம்மதி போற அளவுக்கு என்ன நடந்தது?”
“இன்னும் என்னென்ன நடக்குமோன்னு பயமா இருக்கு!”
“தெளிவா சொல்லு… யாரவது உன்னை மிரட்டுனாங்களா?” ஆனந்தன் அழுத்தமாக கேட்டதில் பழைய கோபம் தெறித்தது.
“மிரட்டுனாதான் பயம் வரணுமா… உங்க தாத்தா சொன்னபடி மிருதுளா வாழ்றது தப்பான வாழ்க்கைன்னா இப்ப நீங்களும் நானும் வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ஆனந்த்?” மிகத் தீவிரமான குரலில் கேட்டாள் மனு.
“பைத்தியம்… ஊர் உலகமறிய நான், உனக்கு தாலி கட்டியிருக்கேன்டி!”
“முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவளை விலக்கி வைக்காமலேயே, என்னை கல்யாணம் பண்ணியிருக்கீங்க… அது எப்படி செல்லுபடியாகும்?”
“நீ இவ்வளவு தூரத்துக்கு யோசிக்க வேண்டிய அவசியமில்லை மனு!”
“சொத்தோட, உங்க சின்ன வயசுல நடந்த மொத கல்யாணத்தையும் பதிவு பண்ணி வச்சுருக்காரு உங்க தாத்தா… நீங்களும் அதை வைச்சே இப்ப மிரு, ஸ்ரீராம் மேல கேஸ் போட்டு இருக்கீங்க!
இந்த சந்தர்ப்பத்துல தன்னோட சொத்துக்கு சாதகமா எல்லாம் நடக்கணும்னு, மிரு, அவதான் முதல் மனைவின்னு உரிமை கொண்டாடிட்டு வரமாட்டாங்கிறது என்ன நிச்சயம்?” அசைக்கமுடியாத கேள்வியில் ஆனந்தனும் ஆடிப்போனான்.
இவள் சொல்வதுபோல் இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்! குடும்பம், குழந்தை என்றான பிறகு மிருவின் மனநிலையும் மாறியிருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான்.
‘ஒருவேளை அந்த மாற்றம்… அதே குடும்பம், வாழ்வாதாரம் என்கிற சுயநலத்தில் சேர்ந்து இவளை மாற்றியிருக்கா விட்டால் என்ன செய்வது?’ ஆனந்தனின் மனமும் குழம்பத் தொடங்கியது.
அன்று அவனிடம் அனைத்தையும் கேட்டறிந்த பிறகு, மனுவின் மனம் முழுவதும் கலக்கக் கூவல்கள் ஓலமிடத் தொடங்கின! சட்டப்படி கணவனாக ஆனந்தன் இருக்க, மிருவால் ஸ்ரீராம் உடனான உறவை பகிரங்கப்படுத்த முடியவில்லை. அப்படித்தானே இவளின் நிலையும்!
‘முதல் மனைவி உயிரோடு இருக்கும் பொழுது இரண்டாவதாக வந்தவளுக்கு ஒட்டிக்கொண்டு வாழும் உரிமை ஏது?’ என்று சட்டம் இவளிடமும் கேள்வி கேட்டு தனது கடமையை செய்யும்தானே!
‘ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லையா?’ என மிருவும் வந்து கேட்டால், எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வாள்?
மனஷ்வினி பயந்தபடியே அவ்வாறு வந்து கேட்டே விட்டாள் மிருதுளா… அன்று கல்லூரியில் மதிய உணவு இடைவேளையில் கேண்டீனில் இவளுக்காகவே காத்திருந்த மிருதுளா, இவளைக் கண்டதும் மனதில் அமிழ்ந்திருக்கும் கனலை வார்த்தைகளாக அள்ளி கொட்டி விட்டாள்.
“நீ மட்டும் யோக்கியமா… உன் கழுத்து இருக்கற தாலிக்கு மட்டும் இப்போது மதிப்பு கூடிப்போச்சா?” வன்மத்துடன் கேட்டவளுக்கு பதில் கொடுக்க வார்த்தையின்றி தவித்துப் போனாள் மனு.
“கோர்ட்டுல சட்டப்படி ஆனந்தனோட வொய்ஃப் நான்தான்னு சொன்ன, அடுத்த நிமிஷம் உன் கழுத்துல இருக்குற தாலி என் கைக்கு வந்திடணும். சொல்லிவை… உன் கள்ளப்புருசன்கிட்ட!” வக்கிரமாக கொக்கரித்துச் சென்றவளை இமைக்காமல் பார்த்து நின்றாள் மனஷ்வினி.
இப்பொழுது இவர்களின் சொத்துப் பிரச்சனையை விட, இந்த தாலிப் பிரச்சனைதான் பெருங் குழப்பத்தில் ஆழ்த்தி, நாளுக்குநாள் இருவருக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
எந்தவொரு பிரச்சனையையும் இதுவரையில் நேருக்கு நேராக எதிர்நோக்கியிராத சின்னப்பெண்ணிற்கு தன்னைச் சுற்றிலும் நடப்பதை நினைத்து பெரும் மலைப்பாக இருந்தது.
பிறந்தது முதல் இன்பமோ, துன்பமோ இவள் ஆறுதல் கூறி அரவணைப்பை தேடிக் கொள்வது இவளின் அக்கா தேஜஸ்வினியிடம் மட்டுமே! அவளின் தேறுதல் வார்த்தைகளை, வாஞ்சையான அணைப்புகளை தேடித் தவித்தது மனுவின் மனம்.
தகுந்த காரணத்தைக் கூறி இவள் அங்கு செல்வதற்கோ, அவள் இங்கு வருவதற்கோ வழியில்லாமல் போக, அலைபேசியிலும் தனது நிலைமையை குறித்துப் பேச வெகுவாக தயங்கிப் பின்னடைந்தாள் மனஷ்வினி.
ஆனந்தனுக்கு நடந்தவைகள் அனைத்தும் ஆதிக்கும் சரிவரத் தெரியாத பட்சத்தில் என்னவென்று விளக்கி கூறி எதை நியாயபடுத்துவது என்பதே பெரும் கேள்விக்குறியாகிப் போனது.
‘வேறு வழியில்லை உனது பிரச்சனைக்கு நீதான் தீர்வு காணவேண்டும்.’ என்ற மனசாட்சியின் தொடர் குரலுக்கு இவளுமே சிந்திக்க ஆரம்பித்தாள்.
***