நான் பிழை… நீ மழலை… 34

நான் பிழை… நீ மழலை… 34

நான்… நீ…34

பொள்ளாச்சியில் ஆதித்யன் தேஜஸ்வினியின் நாட்கள் எப்பொழுதும் போல் அக்கறையும் சக்கரையுமாய் கரைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது கசப்பு மருந்தாக கணவனை குற்றம் கூறி வருவதை தேஜு விட்டு விடவில்லை.

இப்பொழுது இவளுக்கு ஆறாம் மாதம். மசக்கைத் தொல்லைகள் சற்றே அடங்கி இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள். அருணாச்சலத்தின் வழக்கமான நோட்டுக் கணக்கை விடுத்து, மடிக்கணிணியில் பதிய வைத்தே தனது வேலைகளை சுலபமாக்கிக் கொண்டாள் தேஜஸ்வினி.

“உங்களுக்கு தேவையான ரிப்போர்ட்டை பிரின்ட் எடுத்துக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு தாத்தா!” என்று அருணாச்சலத்தின் மனதினை நோகடிக்காமல் அனைத்தையும் மாற்றத் தொடங்கி இருந்தாள்.

வீட்டு நிர்வாகத்தையும் ஆதித்யன் பெயரில் உள்ள விவசாயப் பண்ணைகளின் வரவு செலவுகளையும் ஏற்கனவே இவளிடம் ஒப்படைத்து விட்டபடியால் இவளுக்கும் பொழுதுகள் ஓய்வில்லாமல் கழியத் துவங்கின.

“ரொம்ப அலட்டிக்காதே தேஜுமா… உனக்கு திருப்தி இல்லன்னா அதிகமா ஸ்டெயின் பண்ணிக்க வேணாம். பண்ணைக் கணக்கு பார்க்க ஆள் போட்டுப்போம்!” அக்கறையாக ஆதி கூற,

“இதுக்கும் ஆள் போட்டுட்டு, நான் வீட்டுச் சுவத்தை பார்த்து உக்காரவா அத்தான்? ஏற்கனவே படிப்புக்கேத்த வேலையை செய்ய முடியலன்னு வருத்தத்துல இருக்கேன்! இந்த கணக்கு பாக்கிற வேலையையும் விட்டுக் கொடுத்துட்டா… எனக்கு பைத்தியம் பிடிச்சு போயிடும்!” அலுப்புடன் கூறியவளை பார்த்து கணவனின் மனமும் கவலை கொண்டது.

இவனும் மனைவிக்கு ஏற்றதொரு தொழிலை ஏற்பாடு செய்து கொடுக்க முயற்சிகள் எடுக்கிறான். ஆனால் அவை கை கூடி வராமல் பல்லிளித்துப் போய் விடுகின்றன. 

புதிய தொழிலின் ஸ்டாக்கிஸ்டிற்கு நகரங்களில் பல இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டம் வாரியாக பொருட்களை அனுப்பி வைப்பதில் இப்பொழுது தீவிரம் காட்டி வருகிறான் ஆதி.

ஆனந்தனுக்கு அவனது நில குத்தகை, வரவு செலவுகளை கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. பற்றாகுறைக்கு வழக்கு, வாய்தா என்று பல கோணங்களில் பிரச்சனைகள் அவன் முன்னே விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன. அதற்கும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டும் வருகிறான்.

இந்த நிலையில் கோவை ஸ்டாக்கிஸ்டிற்கான இடம் பார்த்து ஆட்களை நியமிக்கும் வேலையில் தேக்கநிலை ஏற்பட்டு விட, தானே நேரில் சென்று வேலையை முடிக்க முடிவு செய்து, கோவைக்கு புறப்படத் தயாரானான். இவனுடன் தேஜுவும், ‘வந்தே தீருவேன்!’ என்று அடம்பிடித்து காரில் ஏறி அமர்ந்திருந்தாள்.

மனைவியை முறைத்துக் கொண்டே இவன் பயணத்தை ஆரம்பித்திருக்க, வாயில் நுழையாத ஆங்கிலப் பாடல் நாராசமாய் கசிந்து கொண்டிருந்தது.

“தலைவெடிக்குது, பிளேயரை ஆஃப் பண்ணுங்க த்தான்!” எரிந்து விழுந்தவளின் கைகள் அதை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட, சட்டென்று தட்டி விட்டான்.

“எதுக்கு இந்த நரசிம்ம அவதாரம்?”

“வீட்டுல ரெஸ்டுல இருக்கச் சொன்னா கேக்கிறியாடி?” குறையாத எரிச்சலில் இவனுமே வெடித்தான்.

“அங்கே இருந்தாலாவது கொஞ்சமா அசைஞ்சுருப்பேன்… இந்த காருல நீங்க உருட்டுற உருட்டுக்கு நானே இறங்கி வேகமா நடந்துடலாம் போலிருக்கு. கொஞ்சமே கொஞ்சம் ஸ்பீடு ஏத்துங்க த்தான்!” அழாத குறையாக சொன்னாலும் செவி சாய்க்கவில்லை ஆருயிர் கணவன்.

“பேபிக்கான கேரிங் உனக்கு கொஞ்சம் கூட இல்லடி!”

“எனக்கும் சேர்த்து நீங்க தாங்குறீங்களே… அது போதும்!”

“உனக்கு… உன் தங்கச்சி, தம்பிதான் முக்கியமா போயிட்டாங்க! எப்பபாரு… மனு ஃபோன் பண்ணல… நகுல் வீடு வந்து சேரலன்னு ஒரே டேட்டாவை ரீபீடட் மோடுல பேசிட்டு இருக்க!” ஏகமாய் மனைவியை கடிந்து கொண்டான் ஆதித்யன்.

நாட்கள் தன்போக்கில் எந்த இடையூறும் இல்லாமல் சென்றாலும், மனைவியை தாங்கிக் கொள்ளும் இவனது கர்ப்பகால அக்கறைகள் குறைந்து விடவில்லை.

இவள் பசியெடுத்து உணவினை எடுத்துக் கொண்டாலும் உப்பு, புளி, காரத்தின் தன்மையைப் பார்த்தே உண்ணக் கொடுப்பான்.

“அம்மா வீடுன்னு இல்லாம உங்ககிட்ட மாட்டிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே…”

“டெலிவெரி டைம்ல பீபீ ரெய்ஸ் ஆகாமயிருக்க இப்ப இருந்தே கேர் எடுத்துக்கோ தேஜுமா!”

“நெட்டுல இருக்கற எல்லா கருமத்தையும் பார்த்துட்டு என்னை ஆட்டி வைக்கிறீங்க த்தான்… இப்பிடியே இருந்தா நான், மனு வீட்டுக்கு போயிடுவேன்!” மிரட்டிக் கொண்டிருந்தவள் கணவன் கிளம்பி நிற்கவும் வந்து ஒட்டிக் கொண்டாள்.

வீட்டின் பெரியவர்களும் கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் எனக் கூறி அனுப்பி வைக்க சித்தமாய் இருக்க, ஆதிக்கு சினமேறிப் போனது.

‘என் பிள்ளைக்கான அக்கறை என்னைத் தவிர வேற யாருக்கும் இல்ல!’ உள்ளுக்குள் குமுறிக் கொண்டே மனைவியை உடனழைத்துக் கொண்டான். இத்தனைக்கும் மருத்துவரின் ஆலோசனையை கேட்டே கிளம்பி இருந்தாள் தேஜஸ்வினி.

அதற்கும் ஏகப்பட்ட கெடுபிடி கட்டளைகளுடன், “மாடிப்படி ஏறியிறங்க கூடாது… அவ ரூமை கிளீன் பண்றேன், இவன் செல்ஃப் அடுக்கி வைக்கிறேன்னு ஹார்ட்வொர்க் பண்ணக் கூடாது. முக்கியமா அவங்க கூட ஊர் சுத்தி கொட்டமடிக்கக் கூடாது!” அடுக்கிக்கொண்டே போக,

“இங்க பாரும்மா… உன் மாப்பிள்ளை பண்ற கொடுமைய…” கையை உயர்த்தி தாயிடம் அழுகையில் கரைந்தே விட்டாள்.

“வரப்போற புள்ளைக்கு காமிக்கிற அக்கறையை, கண்ணுக்கு எதிர்ல இருக்கற பிள்ளைகளுக்கும் காமிக்கலாம் அத்தான், தப்பில்ல…” பேச்சுவாக்கில் பதில் கூறவும் தவறவில்லை அவள்.

“எனக்கு இந்த மாதிரி ஆனந்தனை கேர் எடுத்து பார்த்து பழக்கமில்ல தேஜு… என்னை குறை சொல்லாதே!” ஒரே வார்த்தையில் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு வாயடைத்தவனை எதில் சேர்ப்பது?

எத்தனை கெடுபிடிகள் செய்து கடுப்படித்தாலும் இரவின் தனிமையில் மென்வருடலில் அனைத்தையும் மறக்கச் செய்து விடுவான்.

“இப்ப மட்டும் என்னை கேர் பண்ணத் தோணாதா அத்தான்?” அவனுக்கு வளைந்து கொடுத்தே வீம்புக்கென்றே தேஜு கேட்டாலும், சிரித்தே மழுப்பி விடுவான்.

“உனக்கே தெரியும், என் அப்ரோச் உன்கிட்ட எப்படி மாறியிருக்குன்னு… பின்ன என்னடி கேள்வி?” என்ற பிறகும் இவள் பேசினால், பலமான வாய்பூட்டுதான் வன்மையாக போடப்படும்.

கோபமும் முறைப்புமாய் இருவரும் கோவை வந்தடைய, அங்கே இவர்களை வரவேற்க வேண்டியவர்கள் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

***

தனது குழப்பக் காட்டுக்குள் அடர்மழை கொட்ட, ஒரு முடிவுடன் ஆனந்தனின் முன்பு வந்து நின்றாள் மனஷ்வினி. தயக்கங்களும் தவிப்புகளும் ஆட்டிப்படைக்கும் அவஸ்தை அவளுக்குள்!

“என்ன வேணும் மனு?” மனைவியைக் கண்டு கொண்டவனாக இவனும் தன்மையாகவே கேட்டான்.

எப்போது மனு விளையாட்டு பேச்சை நிறுத்தி தனக்குள் சுருண்டிப் போனாளோ, அப்பொழுதே இவனது முகத்திலும் தீற்றாக நெளியத் தொடங்கியிருந்த புன்னகையும் மாயமாய் மறைந்து போயிருந்தது.

மனைவியின் கலங்கிய முகத்தை காணும் பொழுதெல்லாம் இவனது மனதிலும் அழுத்தம் கூடிப் போகின்றது. கடமைக்கென்று ஆரம்பித்த வாழ்க்கைப் பயணத்தில் சுவாரஸ்யத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டதின் விந்தையை என்னவென்று சொல்வது!

மனைவியின் நலனுக்கென்றே வசிப்பிடம், தொழில் என அனைத்தையும் மாற்றிக் கொண்டவனுக்கு இப்பொழுது என்ன சொல்லி இவளை சிரிக்க வைப்பதென்றுதான் தெரியவில்லை.

“என்னை ஹாஸ்டல்ல விட்ருங்க மச்சான்!” திடுதிடுப்பென்று கூறியதை கேட்டதும், அவளை அறைந்து தள்ளும் ஆத்திரம் வந்தது ஆனந்தனுக்கு!

“அங்கே சேஃப்டி இல்லன்னு தெரிஞ்சுதானே இங்கே வீடெடுத்து உன்னை தங்க வச்சுருக்கேன். ஒருதடவை அடிபட்டது பத்தலையாடி?” அழுத்தமாக மறுத்தான்.

“அப்போ நீங்க மட்டும் பொள்ளாச்சி போயிடுங்க… இங்க தாத்தா, அப்பா இல்ல அக்கா, வேற யாராவது துணைக்கு வந்து இருக்கட்டும். யாருக்கும் தோது படலன்னா நானும் நகுலும் தனியா இருந்துக்கறோம்! அப்படியும் முடியாதுன்னா என் படிப்பை நிறுத்திட்டு அப்பாகூட போயிடுறேன்!” இத்தனை பிடிவாதமாய் கூறியதற்கு காரணம் புரிபடவில்லை.

“எதுக்கு இந்த முடிவு மனு?”

“உங்க கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்!” உஷ்ணமாய் வந்து விழுந்தன மனுவின் வார்த்தைகள்.

“என்னடி சொல்ற?” ஆதங்கமும் கோபமும் போட்டிபோட முறைத்தான் ஆனந்தன்.

“நீங்க எனக்கு மட்டுமே சொந்தமானவரா, எல்லா பிரச்சனைக்கும் முடிவு கட்டிட்டு வாங்க… நாம சேர்ந்து வாழலாம்!” சிறுபிள்ளையாக தலைகுனிந்து பதிலளித்தாள்.

“ஒஹ்… என் கஷ்டத்துல பங்கெடுத்துக்க மாட்டேன்னு மறைமுகமாக சொல்றியா? இது உன்னோட கோழைத்தனமா இல்ல சுயநலமா!” வார்த்தை ஈட்டிகள் கூராக இறங்க, உதடு கடித்துக் கொண்டாள்.

தனது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, “என்னோட அப்பட்டமான சுயநலம்!” என்றவளை, அறையக் கையை ஓங்கி விட்டான்.

உடனே சுதாரித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “நினைச்சேன்… வேல்யூ ரீசன் இல்லாம புருஷனை, குடும்பத்தை கை கழுவிட்டுப் போறதை உன்னை மாதிரியான இந்த காலத்து பொண்ணுங்க ஃபேஷனாவே செய்ய ஆரம்பிச்சிட்டீங்கடி!” இகழ்ச்சியாக கூறி வெறுப்பாய் பார்த்தான்.

“எங்கேயும் போய்த் தொலையாதே… நான் மேலே எட்டி பாக்கல… கீழே ஆஃபீஸ்லயே தங்கிக்கறேன்! உன் பார்வையில படமாட்டேன். என் மூலமா எந்தத் தொந்தரவும் உனக்கு இருக்காது, போதுமா!” கோபத்திலும் ஆற்றாமையிலும் அவளின் நலம்நாடி நின்றவனைப் பார்த்து முழுதாய் உடைந்து போனாள் மனு.

“எனக்கு வெளியே தலை காட்டவே பயமாயிருக்கு… பொது இடத்துல நிக்க வச்சு நம்மை தப்பா பேசி அசிங்கப் படுத்திடுவாங்களோ இல்ல பெரிய பிரச்சனை பண்ணி, நம்மை பிரிச்சு சீரழிச்சுடுவாங்களோன்னு பதட்டமா இருக்கு.

மீடியாவை கூப்பிட்டு வச்சு கேவலப்படுத்துறது எல்லாம் இந்த காலத்துல ரொம்ப ஈசியா நடக்குது. நிச்சயமா என்னை வச்சு உங்களை லாக் பண்ணிடுவாங்க… நிமிஷத்துக்கு நிமிஷம் பயந்து செத்துட்டு இருக்கேன்!” பெரும் கலக்கத்துடன் புலம்பவே தொடங்கி விட்டாள் மனு.

“அவ்ளோ செக்யூரிட்டி தாண்டி உன்னை யாரும் எதுவும் பண்ண முடியாதும்மா… தைரியமா இரு!” கனிவாகக் கூறி மனைவியை அமைதிப்படுத்தினான் ஆனந்தன்.

“இல்லன்னா… என்னை நீங்களே நாலு சுவத்துல அடைச்சு வச்சுடுங்களேன் மச்சான்! நானும் நிம்மதியா இருப்பேன்!” பிடிவாதமாய் தன் முடிவில் நின்றவள், தாளமுடியாமல் அவன் மார்பில் சாய்ந்து கதறியழத் தொடங்கினாள்.

முதன்முதலாய் மனைவியாக இவள் ஆறுதல் தேடி தஞ்சம் புக, கணவனாக அரவணைத்துக் கொண்டான் ஆனந்தன்.

“எதுக்குடி இப்படி பயந்து சாகுற? இந்த ஆனந்தன் பொண்டாட்டி தில்லா இருக்க வேணாமா!”

“என்னால முடியல… என் இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு படிச்சிட்டு இருந்த என்னை, ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

“ம்ம்… முன்ஜென்ம வேண்டுதல்டி! ஆமா… நீ எதுக்கு இந்த வில்லனை கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

“ஃபோட்டோல பார்த்ததும் மனசுல வந்து உக்காந்துட்டீங்க… தானா வந்தவரை நானா கழுத்து பிடிச்சு வெளியே தள்ள எனக்கும் மனசு வரல…” அழுகையும் சிணுங்கலும் போட்டி போட்ட குரலில் இவள் கூற,

ஆற்றாமைகள் புகைந்த கணவனின் மனதில் மெல்லிய உல்லாசம் எட்டிப் பார்த்தது. உள்ளம் நிறைந்த பூரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டான் ஆனந்தன்.

“மனசுக்குள்ள என்னை பூட்டி வச்சுட்டு, நீ வெளியே போகப் போறியா செல்லாயி?”

“இத்தனை அக்கப்போரு பிடிச்சவர்ன்னு அப்பவே தெரிஞ்சிருந்தா, நானும் பூட்டி வச்சிருக்க மாட்டேன் மச்சான்!”

“அதான் தெரிஞ்சு போச்சே… என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடு!”

“முடியலையே என்னால…” இயலாமையுடன் கைகளை விரிக்க, அதை தன் கைகளால் பற்றிக்கொண்டு நெஞ்சில் பதித்துக் கொண்டான்.

“எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமாடி? இதுக்கு முன்னாடி என்னை நம்பி வந்தவளை காப்பாத்தணுங்கிற அக்கறை மட்டுமே இருந்தது. அதுக்காகவே உன்னை எந்த இடத்துலயும் விட்டுக்கொடுக்க கூடாதுன்னு தீவிரமா இருந்தேன்.

ஒருவேளை இதுதான் காதல் கன்றாவியா இருந்தா, அப்படியே இருந்துட்டு போகட்டும்னு என் முடிவுல உறுதியா இருந்தேன்! ஆனா, இப்ப உன் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சப்புறம், இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதோ ஒன்னு என்னை உசரத்துல பறக்க வைக்குது மனு!” உணர்ச்சிவசப்பட்டு கூறியவன் இறுக்கமாய் அவளைக் கட்டிக் கொண்டான்.

“உனக்கும் இந்த மாதிரி ஃபீல் ஆகுதா டா?” அவளது தோளில் முகம் புதைத்துக் ஆசையுடன் கேட்டவனிடம் உணர்ச்சிகளைத் தொலைத்த பதிலையே தந்தாள்.

“எனக்கு பயம் தவிர வேற எதுவும் தோணல மச்சான்!” தேம்பியவளின் கண்ணீர் அவனது சட்டையை நனைத்தது.

“எப்பவும் என்னை சூடாக்கற வேலையை நல்லாவே பண்றடி!” என்றவனின் அணைப்பு, மேலும் இறுகிப் போக விலக முயற்சித்தாள், முடியவில்லை.

உடும்பாய் ஒட்டிக்கொண்டவன், கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள, நெளிந்து அசைந்து அவனது தாபநிலைக்கு அணைபோட்டாள்.

“மனு… பிளீஸ் டா! கொஞ்சநேரம்…” மயங்கிக் கிறங்கியவனின் கைகள் மனைவியின் தேகத்தில் அலைபாய்ந்திட, பேதையின் உள்ளத்தில் கழிவிரக்கமும் கவலைகளும் மட்டுமே!

“நான் என்ன சொல்றேன்… நீங்க என்ன பண்றீங்க மச்சான்?” வெகுண்டவளின் பேச்சிற்கு பதிலடியாக கழுத்தில் மெலிதாய் கடித்து, காது மடலிலும் கடித்து விடுவித்தான் ஆனந்தன்.

அவனது செயலோ, தொடுகையிலோ அவளின் முகமும் செங்கொழுந்தாய் சிவந்து போய்விட, கணவனின் கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தாள் மனைவி.

“அச்சோ… ரொம்ப சிவந்து போச்சுடி!” கடித்த இடத்தை தடவிக் கொடுக்க, வெடுக்கென்று கையை தட்டி விட்டாள்.

“சரியான ராட்சசன்டா நீ! உனக்கெல்லாம் ரொமான்ஸ் ஒரு கேடு… ஒத்தடம் கொடுக்கிற இடத்துல கடிச்சு வச்சு எரிச்சல்படுத்துற!”

“நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா… கொஞ்சம் கோவாப்ரெட் பண்ணுடி… நீ எதிர்பாக்கிற ஒத்தடம் கொடுத்து காரியத்தை முடிக்கிறேன்!” என்றவனாக அவளின் தோளில் கையை போட்டுக்கொண்டு வம்படியாக கட்டிலுக்கு இழுத்துச் சென்றான்.

“விடு என்னை!”

“என்னை நல்லா பிடிச்சுக்கோ செல்லாயி… நான் கீழே விழுந்து சேதாரமான, நஷ்டம் உனக்குத்தான்!” என்றவனின் கைகள் அவளின் இடையில் அழுத்தம் கொடுத்திட, விலக முடியாத இழுவையில் கட்டில் வரையில் வந்தவள் ஒரேடியாக அவனை தள்ளிவிட்டு மூச்சு வாங்கினாள்.

“பொறுமைய ரொம்ப சோதிக்கிற நீ! என்னை பேச வைக்காதே… என் பிரச்சனைக்கு ஒரு முடிவை சொல்லு!” அவனது முகத்திற்கு நேரே விரலை நீட்டிப் பேச, விரலை பிடித்திழுத்தே அவளைத் தன் மீது விழ வைத்தான்.

“ஒத்த இழுவையில விழுந்து வைக்கிற வீராங்கனைக்கு வெட்டி வீராப்பு ஒன்னும் குறைச்சல் இல்ல!” ஆர்பாட்டமாய் சிரிக்க, அவள் முயற்சி செய்தும் அவனை விட்டு விலக முடியவில்லை.

“ஒரு நிமிஷம் அசையாம இரு மனு… நான் சொல்றதைக் கேளு!”

“பத்தடி டிஸ்டன்ஸ்ல சொல்லுங்க… கேக்கறேன்!”

“முடியாது!” என்றவனின் அணைப்பில் தோல்வியைத் தழுவி, கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“உன் படிப்பை தவிர வேற எதையும் மனசுல நிறுத்தாதேடா!”

“எனக்கு பயமா இருக்குடா மச்சான்!”

“நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது செல்லாயி! ஆனந்தன் இருக்க பயமேன்!”

“ம்ஹூம்… உங்க பக்கத்துல இருக்கத்தான் எனக்கு பயந்து வருது. பிரச்சனைகள் முடியுற வரைக்கும் என்னை தனியா விடுங்க!”

“ஏன் இவ்வளவு அடம்பிடிக்கிற மனு… என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றவன் அவளைத் தன்னில் இருந்து விடுவித்திருக்க, இருவரின் பார்வைகளும் பாவனைகளும் அழுத்தத்தோடு எதிரொளித்தன.

“நம்பிக்கையை தாண்டிய விஷயம் இது. நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு ஆசைபடுறேன். அது தப்பா?”

“இப்பவும் அப்படித்தானே இருக்கேன்!”

“இல்லை… இன்னும் நீங்க மிருவுக்கு சட்டப்படி புருஷனா இருக்கீங்க!”

“அசிங்கமா பேசாதே மனு!”

“இதுவே உங்களுக்கு அசிங்கமா தோணுதா… அப்போ என் நிலைமையை யோசிச்சு பாருங்க! உங்களை, என் கள்ளப்புருசன்னு சொல்லிட்டு போயிட்டா… அதை நினைச்சாலே உடம்பெல்லாம் கூசிப் போகுது எனக்கு.”

“அர்த்தமில்லாத பேச்சுக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லடி!”

“இப்படியெல்லாம் என்னால யோசிக்க முடியல மச்சான்… இதெல்லாம் எனக்கு புதுசு. எப்படி பொறுமையா இருக்கிறதுன்னும் தெரியல. என்னோட வாழ்க்கை தெளிந்த நீரோடையா இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

மிருவுக்கும் உங்களுக்கும் இருக்கற ரிலேஷனை, ஐ மீன் சட்டபடி இருக்கற உறவுமுறையை முறிச்சுக்கோங்க… அவ கழுத்துல நீங்க போட்ட தாலி இருக்கக்கூடாது.

நீங்க போட்ட கேஸை வாபஸ் வாங்குங்க… முடியாத பட்சத்தில உங்களுக்கு சாதகமா சாட்சி சொல்லக்கூட நான் கோர்ட் வாசலை மிதிக்க மாட்டேன். இப்பவே சொல்லிட்டேன்!

எனக்கு சொத்து, சுகம் எதுவும் வேணாம். அதை தானம் பண்றதும் அப்படியே அவளுக்கு விட்டுக் கொடுக்கறதும் உங்களோட இஷ்டம். எனக்கு, என் புருசன்… எனக்கே எனக்காக மட்டுமே வேணும்!

இதெல்லாம் எப்போ சாத்தியப்படு்தோ, அப்போ நாம வாழ ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் நீங்க யாரோ நான் யாரோங்கிற டிஸ்டன்ஸ்ல இருப்போம். அதுதான் என்னை இயல்பா மூச்சு விடவைக்கும்.” முடிவாகக் கூறிய மனு அழுத்தப் பார்வையுடன் அவனை விட்டு விலகிச் சென்றாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் தான் கோவைக்கு வந்து கொண்டிருப்பதாக அலைபேசியில் ஆதி கூறியதை அடுத்து, ஆனந்தனுக்கே சற்று ஆசுவாசம் ஏற்பட்டது.

துணைக்கு உடன் பிறந்தவன் வருகிறான் என்கிற மகிழ்ச்சியா அல்லது மனைவியின் மனதை தேஜுவின் துணையோடு மாற்றி விடலாம் எனும் நிம்மதியா ஏதோ ஒன்று அவனது இறுக்கத்தை தளர்த்தியிருந்தது.

அவர்களின் வருகையை மனுவிடம் கூறிவிட்டு மீண்டும் அவளின் முகம் பார்த்து நின்றான் ஆனந்தன். ‘ச்சை என்ன அவஸ்தைடா இது? விலகிப் போறவ பின்னாடியே சுத்தச் சொல்லுதே, இந்த மானங்கெட்ட மனசு! கருமம் புடிச்ச பொழப்பா இருக்கு!’ உள்ளுக்குள் தன்னைத்தானே காறிதுப்பிக் கொள்ளவும் தயங்கவில்லை.

“உண்மையாவே ஃபோட்டோவுல என்னைப் பார்த்ததும் உனக்கு புடிச்சு போச்சா மனு? பின்ன எதுக்கு உங்க வீட்டுல ரெண்டு பெண்களுக்கும் மனசு ஒப்பாமதான் கல்யானம் பண்ணினதா சொன்னாங்க?” பேசுவதற்கும் மனைவியை அறிந்து கொள்வதற்கும் விசயங்கள் வேண்டுமே… ஆரம்பித்து விட்டான் மற்றுமொரு கேள்விப் படலத்தை!

“இப்ப அதெல்லாம் எதுக்கு? எனக்கு இப்ப உங்ககூட இருக்க பிடிக்கல!” தன் முடிவில் உறுதியாய் நின்றாள் மனு.

“கேட்ட கேள்விக்கு பதில் வரணும்!” வழக்கமான மிரட்டல் குரல் வெளியில் வர, தானாய் பதிலும் வெளிவரத் துவங்கியது.

“எப்பவும் தம்பியை டார்கெட் பண்ணித்தான் எல்லா விசயத்தையும் அம்மா எங்கமேல திணிப்பாங்க…”

“இன்னும் என்னடி அம்மா… சித்தின்னு சொல்லித்தொலை!”

“ஏதோ ஒன்னு… கடன்ல, வீடு முழுகுற நிலைமை, வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து கடையையும் மூடிட்டாங்க… சாப்பாட்டுக்கே கஷ்டமான நேரத்துலயும் எங்க படிப்பை அப்பா நிறுத்தல… அதுல சித்தி கடுப்பாயிட்டாங்க…

இப்படி எல்லாத்தையும் மகள்களுக்கே செஞ்சு வைச்சு மகனுக்கு எதுவும் இல்லன்னு ஒப்பாரி வச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணி, எங்களை லாக் பண்ணிட்டாங்க…

கேம்பஸ்ல செலக்ட் ஆகி, ஆஃபர் லெட்டருக்கு அக்காவும் வெயிட் பண்ணிட்டு இருந்தா… அவளுக்கு இந்த கல்யாணத்துல ஒரு பெர்சன்ட் கூட இஷ்டம் இல்லாம இருந்தது. அது தெரியாம நானும், மாப்பிள்ளை பிடிச்சிருக்குன்னு அவகிட்ட ஓபனா சொல்லிட்டேன்!”

“நிஜமாவா!” நம்ப முடியாமல் கேட்டவனிடம்,

“அந்த நேரத்துல கல்யாணத்தை பத்தி நினைச்சும் பார்க்க பிடிக்கல… ஆனா, பார்த்ததும் உங்களை, எனக்கு பிடிச்சிருந்தது. அதை அக்காகிட்ட நேரடியா சொல்லிட்டேன்!” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

“உன் ஒருத்தி முடிவுலதான் இந்த குடும்பம் தலை நிமிர்ந்து நிக்கிறதும் புதைஞ்சு போறதும் இருக்குன்னு சித்தி அடிக்கடி மிரட்டியே அக்காவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட்டாங்க… அந்த வெறுப்புல மாமா ஃபோட்டோவை பார்க்காமலேயே அக்கா மணமேடை ஏறிட்டா… மாமாவோட முகம் இப்படி இருக்கும்னு எனக்குமே தெரியாது.

இவ்வளவு ஏன்? உங்களுக்கு கால் இப்படி இருக்கும்ங்கிற விசயத்தையும், உங்ககிட்ட பணம் கேட்ட விசயத்தையும் எங்ககிட்ட சொல்லமாலேயே கல்யாண மேடையில எங்களை சித்தி ஏத்திட்டாங்க!” விளக்கமாக கூறி முடிக்கவும் அதிர்ந்து நின்றான் ஆனந்தன்.

“மேடையில என் கால் ஊனத்தை பார்த்து ஏமாந்து போகலையா மனு?”

“ஏமாற்றம் இருந்தது. ஆனா, அதுக்கு முன்னாடியே அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டாளே! அந்த அதிர்ச்சியில என் ஏமாற்றத்தை மனசுலயே போட்டு புதைச்சுட்டேன்!” சோர்வுடன் கூறினாள் மனு.

“ம்ப்ச்… படிச்ச பொண்ணுங்க இப்படியெல்லாம் அடங்கிப் போகணும்னு அவசியமே இல்ல… எங்களால முடியாதுன்னு அப்பவே மேடையை விட்டு இறங்கி இருக்க வேண்டியது தானே!”

“இறங்கிட்டு… எங்களுக்கு சாதகமா பெரிய புரட்சி நடந்திருக்கும். ஆனா அடுத்தநாளே என் தம்பிக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதமும் நடந்திருக்கும்.” என்றவள் சிறுவயதில் இருந்தே மகனை வைத்தே தங்களிடம் காரியமாற்றும் சுலோச்சனாவின் குணத்தை விளக்கிக் கூறினாள்.

மனைவி சொல்வதைக் கேட்கக் கேட்க பிரமிப்பும் வருத்தமும் ஒன்றாய் கூடிப்போனது ஆனந்தனுக்கு! பெண்களைப் பற்றி எப்போதும் தரக்குறைவாய் எண்ணுபவனுக்கு இந்தச் சகோதரிகள் உலக அதிசயமாய் தெரிந்தனர்.

அதே சமயம் இவர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் எப்படியெல்லாம் இகழ்ச்சியாய் பேச முடியுமோ அப்படி எல்லாம் பேசி, தலைகுனியவும் வைத்த தனது முட்டாள் செயலை நினைத்து அவனுக்கே வெறுப்பினை வரவைத்தது.

தேஜஸ்வினியிடம் இந்த நிமிடம் வரை மரியாதையாக ஒருசொல் கூட பேசியதில்லை. இத்தனை ஏன்? தன் மனைவியான இவளிடம் கூட சமீப நாட்களாகத்தான் இணக்கமாக பேசியும் பழகியும் வருகிறான். இந்த பாவத்தை என்ன சொல்லி நியாயப்படுத்திக் கொள்வதென அவனுக்குமே புரியவில்லை.

தனது தவறை உணர்ந்த நிலையில் இளகிய மனதுடன் ஆனந்தன் இருக்க, ஆதியுடன் வந்திறங்கிய தேஜஸ்வினி தங்கைக்கு சார்பாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு இரட்டை சகோதர்களை கோபத்தின் உச்சாணிக் கொம்பில் ஏற வைத்தாள்.

***

Leave a Reply

error: Content is protected !!