நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…41

ஐந்து வருடங்களுக்கு பிறகு… பள்ளி வளாகத்தில் வருண் பிரனேஷின் முன் பெருமூச்சோடு நின்றிருந்தான் ஆனந்தன்.

“இப்ப மம்மா கால் அட்டென்ட் பண்ண மாட்டாங்கன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது அனுப்பா!” தெனாவெட்டாய் கேட்டுக் கொண்டிருந்தான் ஐந்து வயது வருண்.

நேற்றைய தினம் இருவருக்கும் தொடங்கிய தர்க்கப்போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. ‘என் சொல்லை விட உன் வீம்பா பெரிதா?’ என்றெல்லாம் மல்லுக்கு நிற்கத் தோன்றியது ஆனந்தனுக்கு.

ஆனால் முடியாதே… என்ன செய்வது? இந்த ஐந்து வருடங்களில் கரிசனம், அனுசரணை, வாஞ்சை, கனிவுகளோடு வாழ ஆரம்பித்து, இப்போது அதுவே இவனது சுபாவமாகி விட்டிருந்தது.

எப்போதும் போல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குழந்தையோடு மட்டுமே தனக்கான உலகத்தை கண்டு வருபவன், எந்தவொரு உணர்ச்சியையும் புதைத்துக் கொள்ளும் வழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

தற்போது அண்ணன் மகனின் வீம்பினை அப்படியே ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், சித்தப்பனின் மனம் பிள்ளைக்காக இறங்கி வந்தது.

தனது இறுதி முயற்சியாக, “வீம்பு பிடிக்காதே வரு! உன் தேஜுமாகிட்ட ஒன்ஸ் கேட்டு பாப்போம் கண்ணா!” நூலிழை நம்பிக்கையில் ஆனந்தன் கேட்க, பலமாய் மறுப்பு தெரிவித்தான் மகன்.

“நோ, அனுப்பா… நேத்தே நான் மம்மாட்ட சஜசன் கேட்டு, பெர்மிஷன் வாங்கிட்டேன்!” பெரிய மனிதனாக பேசிய பாவனையில், மனைவியை நினைத்து பல்லைக் கடித்தான் ஆனந்தன்.

“இருடா… அவகிட்ட நானும் கேக்கறேன்!” குறையாத கடுப்போடு அலைபேசியை கையில் எடுத்த வேளையில் சட்டென்று பிடுங்கிக் கொண்டு வக்கணையாக கொட்டு வைத்தான் பொடியன்.

“உனக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா அனுப்பா… இந்த நேரம் மம்மா டியூட்டில இருப்பாங்க! ஆஸ் யூஸ்வல் நீ லன்ச் டைம்லயே ஃபோன் பண்ணு! என் ஃபிரண்ட்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க… யூ கேன் கோ மேன்!” பாவம் பார்க்காமல் விரட்டி அடிக்க, அத்தனைக்கும் இளகிப் போய் நின்றான் சித்தப்பன்.

“எல்லாம் என் நேரம் டா!” நொந்து கொண்ட ஆனந்தன்,

“அடியே அழகி… உன்னைப் போலவே வீம்பு பிடிச்ச கழுதையா இவனை மாத்தி வச்சிருக்க!” முணுமுணுத்துக் கொள்வதற்கும் சுதந்திரம் இல்லை.

“ஷ்ஷூ… மம்மாவ திட்டினா என் எனிமி லிஸ்ட்ல உன்னை ஆட் பண்ணிடுவேன், சம்ஜே!” ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்த தினுசில் மனுவின் துருதுரு பார்வையே கண்முன்னே வந்து கதகளி ஆடியது ஆனந்தனுக்கு.

‘காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி!’

நொடிப்பொழுதில் மனைவியின் மலர்ந்த முகம் எதிரே மின்னி மறைய, கணவனின் மனம் குதுகலித்து கொண்டாடிக் கொண்டது.

‘எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!’

நித்தம் நித்தம் மனைவியின் நினைவில் சிக்கித் தொலைந்தே போகிறான் ஆனந்தன்.

அவள் விலகிப்போன சொற்ப நாட்களில் தொடங்கியது இவனது அவஸ்தை.. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்வதே இல்லை. அவளோ படிப்பு ஒன்றே பிரதானமென இருக்கின்றாள். யாரைச் சொல்லி யாரை நோவது!

சித்தப்பனுக்கும் பிள்ளைக்கும் நடக்கும் பஞ்சாயத்திற்கு மட்டும் என்றும் ஓய்வில்லை. இப்பொழுதும் மாலைநேர வகுப்பிற்கு நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடும் யோசனையில் இவன் இருக்க, சிறுவனோ, ‘சறுக்கு (ஸ்கேட்டிங்) விளையாட்டு பயிற்சிக்கு செல்வேன்!’ என்று அடம் பிடித்து நிற்கிறான்.

சிறிது நாட்கள் கழித்து செல்லலாமென்று அறிவுறுத்தினாலும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தனக்கு பிடித்த எந்த ஒன்றையும் சாதித்துக் கொள்ள வருண் நாடுவது மனஷ்வினியை மட்டுமே!

கண்டிப்பிற்கு தேஜுமா… அக்கரைக்கு ஆதிப்பா… தனது சலுகைகளை அதிகப்படியாக பெற்றுக்கொள்ள மனும்மா… இந்த அழைப்பு இவனது மழலையில் மம்மா ஆகி இருந்தது. இறுதியில் வீம்பு பிடிப்பதும் சண்டையிட்டு மீண்டும் ஒட்டிக் கொள்வதும் ஆசை அனுப்பாவான ஆனந்தனிடம் மட்டுமே!

“அவன், உன் பிள்ளையா என் பிள்ளையான்னு நானே மறந்து போற அளவுக்கு ரெண்டு பேரும் ஒட்டிட்டு திரியுறீங்கடா!” ஆதித்யனும் பல சமயங்களில் குறைபட்டுக் கொள்வதும் உண்டு.

கைக்குழந்தையாக இருந்த பொழுதே பசியாற்றும் நேரம் மட்டுமே தேஜூவிடம் விட்டு வைப்பான். சற்றே வளர்ந்த பிறகு முற்றும் முழுதாய் ஆனந்தனின் கையில் மட்டுமே தங்க ஆரம்பித்தான் வருண்.

“பிசினஸ், ஆட்(Ad), டிசைன்னு வெளியே இருக்கிற டென்சனோட இவனை கவனிக்கிறதையும் சேர்த்து சுமக்காதீங்க!” அமைதியாக கூறி பிள்ளையை எடுத்துக் கொண்டு செல்பவனை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

மீறி ஆதித்யன் வற்புறுத்தி குழந்தை தன்னுடன் இருக்கட்டுமென்று தூக்கிக் கொண்டால், “ஒத்த பிள்ளையை வச்சுட்டு ஏன் ஆதி ஆளா பறக்கிற? இன்னொரு பேபியை பெத்துக்கோ… பார்த்துக்கதான் நான் இருக்கேன்ல்ல!”

“ஆக மொத்தம் என் பிள்ளைகளை என்கிட்டே அண்ட விடமாட்டியா நீ?”

“அப்படியில்ல ஆதி… இந்த பிள்ளையோட நானும் வளரப் போறேன்னு நினைச்சுக்கோ… எப்பவும் கூட்டுக்குடும்பமா வாழப்போறோம். நம்ம ரெண்டு பேர் பிள்ளைகளையும் பிரித்து வளர்க்க வேண்டாம் மை டியர் ப்ரோ! எப்பவும் ஒரே குடும்பமா பாசம், மனுஷங்களோட மதிப்பை உணர வைச்சு வளக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்! நம்மை போல தனித்தனியா வளர நான் ஒத்துக்க மாட்டேன்!” என கண்டிப்புடன் கூறி விடுவான்.

இப்பொழுது தேஜுவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகின்றது. தனது பொறுப்பு இரட்டிப்பாக கூடிப்போனதாய் மனதிற்குள் பரசவபட்டு மகிழ்ந்தான் ஆனந்தன். ‘ஆரவ் பிரனேஷ்’ என அவனே பெயரையும் சூட்டி விட்டான்.

அக்காவையும் பிள்ளையையும் காணொளியில் பார்த்ததோடு சரி! நேரில் வந்து பார்க்க முடியாத அளவிற்கு மனஷ்வினியும் நகுலேஷும் அவரவர் லட்சியப் படிப்பில் ஆழ்ந்து விட்டனர்

உடன்பிறந்தவர்கள் இன்னும் தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கோபம் தேஜூவிற்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“பார்த்தியா தேஜுமா… சின்னகுட்டி என்னை மாதிரியே இருக்கான்ல?” ஆசையாக கேட்ட ஆதியைக் உற்றுப் பார்த்தாள் தேஜஸ்வினி. பிரசவகால ஓய்வில் சற்றே சோர்ந்து காணப்பட்டாள். அந்த ஷோபையும் பெண்களுக்கு அழகுதான்!

தற்போதைய ஆதியின் முகத்தில் தழும்புகள் முழுதாக மறையவில்லை என்றாலும் கோடாக மட்டுமே ஓரத்தில் தெரிந்தது. இதற்கு காரணம் மனஷ்வினியே!

ஐந்து வருட மருத்துவப் படிப்பு முடிந்ததும் மேற்படிப்பிற்காக அவள் தேர்ந்தெடுத்தது எம்.எஸ்.பிளாஸ்டிக் சர்ஜன். மூன்று வருடங்கள் கூடுதலாக படிக்க வேண்டுமென்று சொன்னதும் மறுக்காமல், மனைவி படிப்பதற்காக ஹைதராபாத் அனுப்பி வைத்தான் ஆனந்தன்.

இருவரின் முடிவிலும் யாரும் மூக்கை நுழைப்பதில்லை. மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக வசப்படும் போது அதுவே நிரந்தரமாகி விடுகின்றது. அதுபோல் இவர்களின் நிறைவான வாழ்க்கையை காண குடும்பமே தவம் கிடக்கின்றது.

மேற்படிப்பிற்கு பயிற்சியில் சேர்ந்த உடனேயே ஆதியின் முக அறுவை சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டாள் மனு.

“நீங்க என்னோட சர்ஜிக்கல் டிரையலா ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பித்தான் இந்த கோர்ஸ் எடுத்தேன் மாமா!” அசராமல் கோரிக்கை வைக்க கதிகலங்கிப் போனான் ஆதி

“இதெல்லாம் உங்க அக்கா ஏற்படா?” மனைவியை முறைத்த படி கேட்க,

“எனக்கென்ன தேவைக்கு…. இன்னும் கொஞ்சநாள்ல பிள்ளையோட முக்காடு போட்டுட்டு போயி, பூச்சாண்டியோட புள்ளைன்னு நீங்கதான் அவனை அடையாளப்படுத்தப் போறீங்க! அவனும் உங்களை மாதிரியே அட்டு பீசா வளரப் போறான்!” தேஜு உதடு பழித்துக் கூற,

“எக்ஸாட்லி கரெக்ட்டு க்கா… கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ் மாமா!” என்றவள் ஆனந்தனைப் பார்க்க,

“ஏய், உன் ஆட்டத்துல என்னைச் சேர்க்காதே! அவனை நான் எதுக்கும் கம்பெல் பண்ண மாட்டேன்!” என்று ஒதுங்கிக் கொண்டான்.

வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து வற்புறுத்தியதில் முக அறுவை சிகிச்சைக்கு சரி என்று தலையாட்டி விட்டான் ஆதித்யன். இரண்டு கட்டங்களாக நடந்த லேசர் அறுவை சிகிச்சையில் விகாரத் தழும்புகள் தொண்ணூறு சதவீகிதம் நீங்கி, உண்மையான முகப் பொலிவினைப் பெற்றான்.

“இதற்கு தானே ஆசைபட்டாய் என் மகாராணி… ஆசைதீர என்னைப் பார்த்துட்டே இரு… முத்தம் கொடுத்து என் முகத்தை இன்னமும் அழகாக்கு!” காதல் பித்தோடு உளறிக் கொட்டியவன், மனைவியின் கைகளை அவனே எடுத்து ஆசைதீர தன் முகத்தில் தடவிக் கொண்டான்.

“கிடைக்கற கேப்புல எல்லாம் ரொமான்ஸ் பண்ணக்கூடாது அத்தான்… பேட் ஹாபிட்!”

“ம்ப்ச்… ஆரம்பிக்காதேடி, நல்ல மூடுல இருக்கேன்! நீ என்ன பண்றேன்னா… நம்ம ஹனிமூன்ல நீ கம்ப்ளீட் பண்ணாம இருந்த டாஸ்கை எல்லாம் முடிக்கப் பாக்கற!”

“ஒரு தடவ ஃபைல் பண்ணின ரெக்கார்டுக்கு ஓராயிரம் முறை காம்ப்ளிமென்ட் வாங்கிக்க கூடாது அத்தான்!” கிண்டலுடன் மொழிந்த தேஜுவின் முகமெல்லாம் அத்தனை மலர்ச்சி!

“சோ வாட்? நெக்ஸ்ட் ஹனிமூன் பிளான் பண்ணிட்டா போச்சு!” ரசனையான பேச்சில் உல்லாசம் கண்டவர்களின் காதல் இரண்டாவது குழந்தையின் வரவில் நிறைவான ஏற்றம் கண்டது.

நான் பிழை நீ மழலை

எனக்குள் நீ இருந்தால்

அது தவறே இல்லை

நீ இலை நான் பருவ மழை

சிறு சிறு துளியாய்

விழும் தருணம் இல்லை

ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
    அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே

அடி அழகா சிரிச்ச முகமே…

நா நெனச்சா தோணும் இடமே!

அடி அழகா சிரிச்ச முகமே…

நெனச்சா தோணும் இடமே…

நான் பிறந்த தினமே

கெடச்ச வரமே!

***

Leave a Reply

error: Content is protected !!