ராகம் 2
ராகம் 2
ராகம் 2
‘நீலாம்பரி டைமாச்சு எழுந்துருடி.’ செவியோடு உறவாடிய ஆழ்ந்த குரல், அவளது மனதை தீண்டியது.
‘இன்னும் ஃபைவ் மினிட்ஸ் கட்டவண்டி.’ என செல்லமாக சிணுங்கினாள்.
தன் மார்பில் புதைந்திருந்த தன்னவலின் சிணுங்களை ரசித்தவனின் உதடு, ‘ஆபிஸ் போகனும். அப்புறம் லேட் ஆகிடும்.’ என சொன்னாலும், அவளை விலக மனமில்லாமல் தன் கரங்களால் அவளை மேலும் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான். உதடு ஒன்று சொல்ல, கைகள் வேறு சொல்ல பெண் பாவைக்கு குஷியாகி போனது.
அவனது மார்புச் சூட்டின் இதத்தில், ஐந்து நிமிடங்கள் கடந்தும் தன் உறக்கத்தை தொடர்ந்தவளை, ‘அம்மு’ மீண்டும் அழைத்தான்.
‘ம்… இன்னும் ஃபைவே ஃபைவ் மினிட்ஸ்.’ என்றாள் பாவை விழி திறக்காமல்.
‘இவளை இப்படி எழுப்பினால் எழுந்திரிக்க மாட்டாள்.’ என புரிந்தவன், கள்ள சிரிப்புடன் அவளை தன்னிலிருந்து பிரித்து படுக்கையில் விட்டு, அவளது முகம் நோக்கி குனிந்தான்.
இதுவரை இருந்த இதம் மறைந்து, பஞ்சு மெத்தை முள்ளாக உருத்த, தன் விழிகளை மெல்ல திறந்தாள் அம்மு. கணவனின் முகம் தன்னை நெருங்குவதை கண்டு, பெண்ணின் விழிகள் ஆவலுடன் பெரிதாக விரிந்தது. அவனது முகம் அவளை நெருங்க, நாணம் கொண்ட பெண்மை விழி முடியது.
சரியாக அந்நேரம் கைபேசியில் வைத்த அலாரம், சத்தமாக ஒலி எழுப்பி அவளது தூக்கத்துடன் கனவையும் கலைத்தது. அடித்துப் பிடித்து எழுந்தவளை வெறுமையான அறையே வரவேற்றது. நிதர்சனம் உரைக்க பெண்ணின் முகம் வாடியது.
“ச்ச! கனவா அதான பார்த்தேன். என்னடா சிடு மூஞ்சி ரொமான்ஸ் பண்ணுதுன்னு.” என்று புலம்பியவளின் மனசாட்சி, நேரம் காலம் இல்லாமல் ஆஜராகி, ‘அவன் உன்கிட்ட ரொமான்ஸ் பண்ணுனதே இல்லயா?’ என கேட்டது. ‘ஆமா! ஆமா அந்த சிடு மூஞ்சி அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்.’ என நொடித்தாள். ‘பொய் சொல்லாத.’ ‘ஆமா! அவன் பண்ற ரொமான்ஸை நீதான் மெச்சிக்கணும். அவன மாதிரியே அவனோட ரொமான்ஸும் டெரரா இருக்கும். அதை ரொமான்ஸ்ன்னு சொல்லக்கூடாது. வயலன்ஸ்னு சொல்லணும்.’ என்றவளின் வதனம் வெட்கத்தில் சிவந்தது. ‘பார்ரா முகம் என்னம்மா சிவக்குது. இதுல பிடிக்காத மாதிரியே நடிக்கிறது.’ ‘உனக்கு வர வர வாய் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு. நீ கம்முனு போய் தூங்கு.’ என உண்மையை சொல்லிய மனசாட்சியை அடக்கியவளின் எண்ணம், கனவில் வந்த நிகழ்வுக்கு சென்றது.
அன்று எதிர்பார்ப்புடன் விழி மூடிய பெண்ணின் முகத்தை கண்டு, ஆண் அவனின் முகத்தில் கள்ளச் சிரிப்பு பெரிதானது. தன்னவளின் இதழை நெருங்கியவனின் உதடு, அவளது முகம் திருப்பி கன்னத்தை கடித்து அவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கியது. ‘ஆ’ என அலறியடித்து எழுந்தவளின் கண்கள் கண்டது, மர்மச் சிரிப்புடன் இருந்த தன்னவனின் முகம். கன்னத்தை தேய்த்துக் கொண்டே, ‘யூ இடியட். இப்படித்தான் என்னை கடிச்சு வைப்பியா?’ என அன்று அவனை அடித்தது, இன்று கண் முன் தோன்றி மனதை ரணமாக்கியது.
தன் கைப்பேசியிலிருந்த தங்கள் திருமண புகைப்படத்தை பார்த்து, “ஆனாலும் கட்டவண்டி உனக்கு ரொம்ப கோபம் வருது. நேத்து அப்படி முறுக்கிக்கிட்டு போற. உன்னோட இந்த வெட்டி வீராப்பை என்கிட்ட வச்சுக்காதே. இன்னும் எவ்வளவு நாள், இந்த முறுக்கு சுடுற வேலையை பண்றேன்னு நானும் பார்க்கறேன். எப்பனாலும் என்கிட்ட வந்து தான் ஆகணும். அப்போ உன்ன கவனிச்சிக்கிறேன். என்னை முறைச்ச இந்த கண்ணை நோண்டி உன் கையில கொடுக்கிறேன்.” என்றவள் புகைப்படத்திலிருந்த அவனது கண்ணை குத்தினாள்.
அதே நேரம் அடித்துப் பிடித்து எழுந்த ருத்ரா, கண்ணை கசக்கி கொண்டே மணியை பார்த்தான். மணி ஆரை கடந்து சில நிமிடங்களாகி இருந்தது.
சுவற்றில் மாட்டியிருந்த அதே திருமண புகைப்படத்தை பார்த்து, “ஏண்டி நீலாம்பரி! நைட் எல்லாம் நினைவா வந்து தூங்க விடாம டிஸ்டர்ப் பண்ண. இப்ப கனவா வந்து எழுப்பி விடுற. அவன் தான் முக்கியம்ன்னு என்னை விட்டுட்டு போனில. அப்புறம் எதுக்கு கனவுல வந்து தொல்லை பண்ற? இனி நீயா என்னை தேடி வரனும். நானா உன்னை தேடி வரமாட்டேன்.” என்று கோபத்தோடு முணுமுணுத்தவன் உடற்பயிற்சிக்கு தயாரானான்.
பாவம் அவன் அறியவில்லை இன்னும் சில நிமிடங்களில் அவனது சபதம் உடைய போவது.
★★★
குளித்து முடித்து, புத்தம் புது மலராக வரவேற்பு அறையை தாண்டி சென்றவளின் கண்களில் பட்டது, இறுகிப் போயிருந்த ரிஷிவர்மாவின் சிந்தனை முகம்.
“என்ன வரு யோசனை பலமா இருக்கு?” என கேட்டவாறு அவனை நெருங்கினாள்.
அவளது குரல், அவனது செவியை தீண்டாமல் காற்றோடு கலந்தது. அவன் எந்த மாற்றமுமின்றி எங்கோ வெறித்திருந்தான். பெண்ணின் மனதில் சுருக்கென்ற வலி உண்டானது.
அவனது தோளை பற்றி உலுக்கினாள். அதில் திடுக்கிட்டவன், மித்ராவை கண்டு முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு, “குட்மார்னிங் மிரு.”
“வெரி குட்மார்னிங். நான் கூப்பிடறது கூட தெரியாம, அப்படி என்ன யோசனை வரு?”
அவளிடம் ஒரு செய்தித்தாளை நீட்டியவன், தன் கைகளை பின் கழுத்தில் அண்டை குடுத்து சோபாவில் நன்றாக சரிந்து அமர்ந்தான். அவனை கூர்ந்து பார்த்தவள், அவனுக்கு எதிரே அமர்ந்து செய்தித்தாளில் பார்வையை பதித்தாள்.
அதில், நேற்று ரிஷியின் கரத்தை பற்றி, மித்ரா இழுத்து சென்ற போது எடுத்த புகைப்படத்தில், அவர்களது முகத்தை மட்டும் மங்கலாக்கி அச்சிடப்பட்டிருந்தது. அதன் அருகில், “இரண்டு வருடங்களுக்கு முன் ஜோடியாக விருது வாங்கிய, ஐந்து எழுத்து பெயர் கொண்ட நடிகர், நடிகையின் தொடர் பழக்கம், இரு ஜோடிகளில் ஒரு ஜோடியின் சட்டரீதியான திருமண முறிவில் நிற்கிறது. அவர்கள் அந்த குற்றச்சாட்டை மறுத்தாலும், தற்போது இருவரும் தன் துணையை பிரிந்து, ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்வதே அதை உண்மை என்று நிரூபிக்கிறது.” என்ற செய்தி சினிமா துணுக்குகளில் முக்கிய இடத்தை பிடித்தது.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தவள், சமையலறை சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்தாள். ரிஷி எந்த வித மாற்றமும் இல்லாமல் விட்டத்தை வெறித்திருந்தான்.
சலிப்பாக தலையை இருபுறமும் அசைத்தவள், அவனை நெருங்கி ஒரு கோப்பையை அவன் கரத்தில் திணித்து விட்டு, அவன் அருகிலே அமர்ந்து கொண்டாள். மௌனமாக தேனீரை அருந்தினார்கள். சூடான தேநீர் இதமாக தொண்டையில் இறங்கியது.
கப்பை கீழே வைத்த அடுத்த நொடி ரிஷி, மித்ராவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். தன் மடியில் தஞ்சமாகிய அந்த வளர்ந்த குழந்தையை, தாயென மடி தாங்கினாள் பாவை. தானாக அவளது கரம் அவனது தலைக்கோதியது.
“இது நம்ம எதிர்பார்த்ததுதான வரு. அப்புறம் எதுக்கு இவ்வளவு பீல் பண்ற?”
“எதிர்பார்த்ததுதான். ஆனா அவங்க எழுதியிருக்கறத படிச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.” என வருந்தினான்.
“எப்படி மனசாட்சியே இல்லாமல் இப்படி எழுதுறாங்க?” என்றாள் முகம் சுளித்து.
“பேப்பர் சர்குலேஷனை அதிகப்படுத்த அடுத்தவங்க வாழ்க்கையை பயன்படுத்துறது புதுசா என்ன? அதுவும் அவங்கள பொறுத்தவரை சினி ஃபீல்டுல இருக்கவங்க எல்லாரும் தப்பானவங்க.” நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.
“அவங்க நம்மள பத்தி தப்பா எழுதிட்டா, நம்ம தப்பானவங்களா ஆகிடுவோமா? அதுக்கு எதுக்கு இவ்வளவு கவலைப்படுற?”
“நான் கவலைப்படுறது அதுக்கு இல்ல.”
“???” கேள்வி தாங்கிய பார்வை பெண்ணிடம்.
“எனக்காக பார்த்து உன்னோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமோன்னு பயமாயிருக்கு மிரு.” ரிஷியின் வார்த்தைகளில், அவனது தலையை கோதிக்கொண்டிருந்த மித்ராவின் கரம் சில நொடிகள் தன் இயக்கத்தை நிறுத்தியது.
‘உன் மனசுல இதையும் சேர்த்து குழப்பிக்கிட்டு இருக்கியா வரு?’ மனம் நொந்தவள், “அப்படி ஆகாது வரு. இப்ப ருத்ரா கொஞ்சம் கோபமா இருக்கார். அதனால முறுக்கிக்கிட்டு இருக்கார். கோபம் குறையவும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடுவார். சியரப் மேன்.” என அவனுக்கு தைரியம் சொல்வது போல், தனக்கும் சொல்லிக் கொண்டாள்.
அவள் மடியிலிருந்து எழுந்தவன், “நீ உண்மையா தான் சொல்றியா?” என முகம் தெளியாமல் கேட்டான்.
தன் முகத்தில் புன்னகையை பூசிக் கொண்ட பெண், “கண்டிப்பா வரு. ருத்ராவோட உலகமே நான் தான். அதனால் நிச்சயம் அவர் என்னை தேடி வருவார்.” என அவள் சொல்லி வாய் மூடும் போது, அவளை முறைத்துக் கொண்டு, அவள் முன் நின்றான் ருத்ரேஸ்வரன்.
அவளது வாய் முகூர்த்தம் பலித்ததில், ரிஷிவர்மாவின் முகத்தில் அழகான புன்னகை தோன்றியது. பொய் புன்னகை பூசியிருந்த மித்ராவின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. இருவரது முகபாவணையை கண்ட ருத்ரேஸ்வரனின் முகம் உக்கிரமாக மாறியது.
★★★
அதே நேரம் பசுஞ்சோலை கிராமத்தில், உணர்வுகள் துளைத்த முகத்துடன் தன் குழந்தையை மடியில் போட்டு, அந்த நாளிதழை வெறித்திருந்தாள் பிருந்தா.
அவளுக்கு என்ன உணர்வை பிரதிபலிப்பது என்பதே புரியவில்லை.
இப்படி செய்தியை போட்ட செய்தியாளர்களின் மீது கோபம் கொள்வதா? அல்லது இப்படி செய்தி வரும் அளவு இருந்த தங்கள் உறவின் நிலையற்ற தன்மையை நினைத்து வருந்துவதா? அல்லது தங்கள் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்வதா? என தெரியாமல் திண்டாடினாள்.
தற்போது பிருந்தா இருப்பது ருத்ரேஸ்வரனின் பாட்டி வீட்டில். பிரசவத்திற்காக வந்த பெண்ணை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார்கள் பாட்டியும், ரேகாவின் (அமிர்தா, பிருந்தாவின் பள்ளி தோழி) தாயும் (ருத்ராவின் மாமன் மனைவி)
பிருந்தாவுடன் இணைந்து, அவளுக்காக ரிஷி நியமித்திருந்த அவளது வயதை ஒத்த ஒரு யுவதியும் தங்கியிருக்கிறாள். பிந்துவுக்கு வேண்டும் உதவியை செய்து கொண்டு, அவளுக்கு உற்ற தோழியாக மாறி இருந்தாள் அந்த எலி (எலிஷா).
“இன்னும் எவ்வளவு நேரம் அந்த பேப்பரை பார்ப்பீங்க மேடம்?” என பிந்துவை கலைத்தாள் எலிசா.
“இந்த மாதிரி செய்தியை படிக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு லிசா.” பிந்துவின் வார்த்தைகள் வருத்தமாக வந்தது.
“நீங்க கவலைப்படாதீங்க மேடம். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும். அப்ப எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும்.” என தத்துவம் பேசினாள்.
அப்போது எலிஷாவின் கைப்பேசி அழைத்தது. அவளது பார்வை பிருந்தாவை தொட்டது. அவளோ தன் எதிர்காலத்தை நினைத்து வருத்தத்தில் மூழ்கி இருந்தாள். அவளது கவனம் தன் மீது இல்லை என்பதை உணர்ந்து நிம்மதி மூச்சுடன் கைப்பேசியை எடுத்து கொண்டு வெளியேறினாள்.
அப்போது நம்ம குட்டி தோழர்கள் (சோட்டு, பப்பு, கிட்டு, பிங்கி) பிருந்தாவை பார்த்து, பேசி, சிரித்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் குழந்தையுடன் செலவழித்து விட்டு, அவளிடம் விடை பெற்று சென்னை கிளம்பினார்கள்.
ஆம்! அவர்கள் படிப்பது சென்னை கல்லூரியில். அம்மு, பிந்துவின் வசிப்பிடம் சென்னையாக மாறியவுடன், அவர்களும் அடம்பிடித்து தன் கல்லூரி படிப்பை சென்னையில் தொடர்கிறார்கள்.
பப்பு இரண்டாம் ஆண்டும், மற்றவர்கள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள். இதில் பிங்கியும், சோட்டுவும் ஒரே பாட பிரிவை தேர்ந்தெடுத்து, ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். (அதன் காரணம் பின்வரும் பகுதிகளில் காணலாம்). பப்புவும், கிட்டுவும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு ஆண்டு படிக்கிறார்கள்
மாதம் ஒருமுறை பசுஞ்சோலை கிராமத்திற்கு வந்து செல்லும் அவர்களுடன், எப்பொழுதும் அம்முவும் இணைந்து கொள்வாள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக அவளால் பசுஞ்சோலை கிராமத்துக்கு வர முடியவில்லை.
★★★
“ஹா ஹா ஹா. அதுக்குள்ள கலங்கினால் எப்படி? இப்பதான ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு. இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியதிருக்கு. அதற்குள் சோர்ந்து போயிடாத.” என்று அவனது கரத்திலிருந்த புகைப்படத்தை பார்த்து, கொடூரமாக சிரித்தது ஒரு குரல்.
பின் அவனது படுக்கை அறையின் சுவற்றில், பெரிதாக மாட்டியிருந்த பெண்ணின் புகைப்படத்தின் முன் நின்று, “அன்னைக்கு உனக்காக என்னை அடிச்சான். அவன் கை வச்சது எமன் மேல. அது அவனுக்கு தெரிய வேண்டாம்? என் மேல கை வச்சவன் இன்னும் உயிரோடு இருக்க காரணம் என்ன தெரியுமா? அவன்ட்ட இருந்து உன்னை பிரிச்சு, உங்க கல்யாணத்தை தோல்வியடைய வச்சு, அவனை தனி மரமா நிக்க வச்சு, அவன் கண்முன்னால் உன் அழகை நான் அனுபவிச்சு, அவன் வாழும் போதே நரகத்தை காட்டுறேன். அதேபோல் என்னை நிராகரித்த உனக்கு என்ன தண்டனை தெரியுமா? நீ வாழும் வரை என் கைச்சிறையில் இருக்கணும். அதுதான் உனக்கான தண்டனை. அப்படி செய்யல என் பேர் ….. இல்லை. அந்த நாளுக்காக வருடக்கணக்கா காத்திருக்கேன். என் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் உன்னை கேக்குது. என்னை ரொம்ப காக்க வைக்காம, சீக்கிரம் என்கிட்ட வந்துடு கண்மணி.” என்றவனின் கரம், புகைப்படத்திலிருந்த அந்த பெண்ணின் முகத்தில் தொடங்கி உடலெங்கும் ஊர்வலம் போனது.
அவனது முகமெங்கும் பலி வெறியும், கண்களில் அவள் மீதான காம வெறியும் கொழுந்து விட்டெறிந்தது.