நினைவு தூங்கிடாது 11.2

நினைவு தூங்கிடாது 11.2

நிழல் 11.2

ஈஸ்வர் அம்முவைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம், தேவியின் சிந்தனை முழுவதும்! அமிர்தாவை பெண் கேட்டு, அது பிருந்தாவாக மாற்றம் கொண்ட உரையாடலுக்கு சென்றது.

கணவனிடம் சம்மதம் பெற்ற தேவி, தன் அன்னையை அழைத்துக்கொண்டு அமிர்தா வீட்டை அடைந்தார். பெரிய வீட்டு அம்மாவை தன் வீட்டில் கண்டதும், கஸ்தூரிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மிகுந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

“வாங்கம்மா, வாங்க” என தேவியின் அன்னை காந்திமதி அம்மாவையும், தேவியையும் வரவேற்று கூடத்திலிருந்த நாற்காலியில் அவர்களை அமர வைத்தார். பிருந்தா அவர்களுக்கு தண்ணீர் அளித்தாள். 

பொதுவாக கிராமப்புறங்களில் வீட்டிற்கு யார் வந்தாலும், முதலில் தண்ணீர் வழங்குவது வழக்கம்.

பிருந்தாவை ஆசையுடன் தழுவிய தேவியின் கண்கள், அமிர்தாவை தேடியது. அவளை காணாமல் முகம் சிறுத்து போனது. பாவம் அவர் அறியவில்லை ‘அமிர்தாவை அவர் மகன், மிரட்டி ஆற்றங்கரை வரவழைத்தது.’

கஸ்தூரி அவர்களுக்கு பலகாரங்களை பிருந்தாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.

“எப்படி இருக்க பிந்து? ஏன் வீட்டு பக்கம் வரவே மாட்டேங்குற?” என காந்தி மதி அம்மாவின் கேள்விக்கு, “நல்லா இருக்கேன் பாட்டி. வீட்ல நிறைய வேலை இருக்கு. அதனால தான் உங்க வீட்டுக்கு வர முடியலை. ரேகா எப்படி இருக்கா?”

“அவ நல்லா இருக்கா.”

பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த பிருந்தாவின் விழிகள், தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த தேவியை கண்டவுடன் மிரண்டு விழித்தது. அவளின் மிரண்ட விழிகளை கண்ட தேவியின், இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. 

“நான் ரேகாவோட அத்தை. அன்னைக்கு கோவிலில் பார்த்தோமே மறந்துட்டயா?” என வாஞ்சையாக கேட்டார்.

“இல்ல அத்த ஞாபகம் இருக்கு. ரேகாவும் உங்களை பத்தி சொல்லியிருக்கா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் அவரது உறவை ஏற்று கொண்டதன் அடையாளமாக.

“நல்லா இருக்கேன். அன்னைக்கு நீ பாடின பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு.” அவர் பாராட்டில் பிருந்தாவின் முகம் மகிழ்ச்சியை காட்டியது.

தேனீர் தயாரித்துக் கொண்டிருந்த கஸ்தூரியின் மனம் சிந்தனையின் பிடியில். ‘இவங்க ஏன் திடீர்ன்னு வந்திருக்காங்க? அம்மு எதுவும் சேட்டை செய்து விட்டாலோ?” என குழம்பி தவித்தது அந்த தாய் உள்ளம். 

தேனீர் வழங்கிய கஸ்தூரியிடம்,”இது என்னோட ரெண்டாவது பொண்ணு அம்பிகா தேவி. சென்னைல இருக்காங்க. இது கஸ்தூரி” என பாட்டி இருவருக்கும் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

“வணக்கம் எப்படி இருக்கீங்க?” இருவரின் நல விசாரிப்புகளுடன் உரையாடல் இனிதே துவங்கியது. அவர்கள் தேனீர் அருந்தி முடிக்கும் வரை பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

“அம்மு எங்க கஸ்தூரி? ஆளையே காணோம்?” பாட்டியின் குரலில் ஆர்வம் மிதமிஞ்சியிருந்தது. சும்மாவே அவருக்கு அம்மு என்றாள் கொள்ளை பிரியம், இப்போது தன் பேரனின் மனைவி ஆகப்போகிறாள். கேட்கவும் வேண்டுமா?

“கோவிலில் இருந்து வரவும், ட்ரெஸ்ஸ கூட மாத்தமா, விளையாட போறேன்னு ஓடிட்டா மா.” என சலித்துக் கொண்டார் பெண்ணை பெற்ற மகராசி.

“சின்ன பிள்ளை தானே சரியாகிடுவா.” தேவி, மருமகளை இப்போதே தாங்கி பேசினார்.

“வயசு புள்ள. ஒழுங்கா வீட்டில இருக்காளா? எப்ப பாரு அந்த குட்டி பசங்க கூட சேர்ந்து ஒரே ஆட்டம்.” என அலுத்துக்கொண்டார். அவருக்கு தானே தெரியும் அவர் கஷ்டம்.

“இப்ப விளையாடாமல் வேற எப்ப விளையாடுறது. நம்ம கஷ்டம் நம்மோடு. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்” என அவளை தாங்கிப் பேசிய பாட்டி பிருந்தாவை பார்த்து,

“பிருந்தா! நீ கொஞ்ச நேரம் பக்கத்து வீட்டில இருமா. அம்மாகிட்ட முக்கியமான விஷயம் பேசனும்” என பாட்டி, பிருந்தாவை வெளியே அனுப்பினார்.

திருமணம் நல்லபடியாக பேசி முடித்தால் பரவாயில்லை, அப்படி முடிவாகாத பட்சத்தில் வயது பெண்களின் மனம் அலைபாய கூடும். அதனால் அவர்கள் இல்லாத சமயத்திலே திருமணம் பேசி முடிப்பார்கள். 

பிருந்தா அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்த தேவி, “நாங்க சென்னையில் இருக்கோம். என் ஹஸ்பண்ட் சினிமா பீல்டுல இருக்காங்க. குடும்ப தொழில். என் பையனுக்கு அதுல இஷ்டமில்லை. சொந்தமா சாஃப்ட்வேர் ஏஜென்சி வச்சு நடத்துறான்.” தன் வரலாற்றை தெரிவித்தார்.

‘இதையெல்லாம் ஏன் தன்னிடம் சொல்கிறார்?’ என புரியாமல் கஸ்தூரி பார்த்திருக்க, விஷயத்தை தொடங்கினார் தேவி,”உங்க பொண்ணுங்களை கோவில்ல பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சது. உங்க பொண்ணு அமிர்தாவை, என் பையனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்கள் விருப்பத்தையும், உங்க பொண்ணு விருப்பத்தையும் தெரிஞ்சுக்கத்தான் வந்தேன்.” ரொம்ப சுற்றிவளைக்காமல் விஷயத்தை போட்டுடைத்தார்.

அவர் கூறியதை கேட்ட கஸ்தூரி பேச்சற்று மௌனமானார். ஏதேதோ நினைத்து பயந்திருந்தவர், கனவில் கூட இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை.”அவ ரொம்ப சின்னப்பொண்ணு. அவங்க கல்யாணத்தை பற்றி… நான் இன்னு… யோசிக்கக்…கூட இல்லை.” மௌனத்தை களைத்து திக்கி திணறினார்.

“இன்னு கொஞ்ச நாள்ல, ரேகாவுக்கும் கார்த்திக்கும் கல்யாணம் பண்ணுற ஐடியால இருக்கோம். அம்முவும் அவள் வயசு தானே. அப்புறம் என்ன?” பாட்டி அவர் பேச்சை மறுத்தார்.

“அவ படிக்கணும்னு ஆசை படுறா மா.” அவர்கள் விருப்பத்துக்கு அடுத்த தடை.

“அவ எவ்வளவு படிக்கணும் ஆசைப்பட்டாலும், அவளை படிக்க வைக்க வேண்டியது என்னோட பொருப்பு. சென்னைல நல்ல காலேஜில சேர்த்துவிடுறேன்.” அந்த தடையை தகர்த்தார்.

“அவள் இன்னும் விளையாட்டு பிள்ளையா தான் இருக்கா. கொஞ்சம் கூட பொறுப்பு வரல. குடும்பம் நடத்துற அளவுக்கு அவளுக்கு பக்குவம் இல்லை.” அவளது இயல்பை நினைத்து, மறுத்துக் கொண்டே இருந்தார்.

“அங்க வீட்ல, எல்லா வேலைக்கும் ஆட்கள் இருக்காங்க. உங்க பொண்ணு ஒரு துரும்பை கூட அசைக்க வேண்டாம். இங்க இருக்க மாதிரியே சந்தோசமா இருக்கலாம். அவளை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன்.” என தேவி, கஸ்தூரியின் குழப்பத்துக்கு விடை கொடுத்தார்.

‘அவர் சொல்வது புரிந்தது. ஆனால் இந்த ஊரின் மேல் அதிக பற்று கொண்ட அம்மு, சென்னை செல்லவேண்டும் என்றால், நிச்சயம் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டாள்.’ என்பதை தெரிந்த கஸ்தூரி,”பிருந்தா தான் மூத்தவள்.” என தேடியெடுத்து, அடுத்த காரணத்தை கூறினார்.

கஸ்தூரியின் தொடர் மறுப்பில் எதையோ உணர்ந்துகொண்ட தேவி,”சரி அப்ப உங்க மூத்த பொண்ணு பிருந்தாவை கொடுங்க. அவதான் பொறுப்பா இருக்காளே?” இலகுவாக பெண்ணை மாற்றினார். மொத்த தடைகளுக்கும் இரண்டு வரியில் பதில்.

‘என்னடா இவங்க அம்முவை கேட்டாங்க, இப்போ திடீர்னு பிருந்தாவை கேட்கிறாங்க’ எனத் திகைத்து விழித்தார் கஸ்தூரி.

அவரது எண்ணத்தை உணர்ந்ததுபோல் தேவி,”எனக்கு உங்க ரெண்டு பெண்களையும் பிடிச்சது. உங்ககிட்ட சம்மதம் வாங்கிட்டு அப்புறம் தான் பையன் கிட்ட பேசணும். அம்மு, பிந்து யாரா இருந்தாலும் எனக்கு ஓகே.”

அம்முவை குழந்தை, பொறுப்பில்லை என மறுத்தவரால், பிந்துவை அவ்வாறு மறுக்க முடியவில்லை.

“உங்க வசதிக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது” என வசதியை கூறி மறக்க முயன்றார்.

“வசதி என்ன பெரிய வசதி? ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு எங்ககிட்ட சொத்து இருக்கு. பொண்ணு வீட்டுல வாங்கிதான் நிறையனும்ன்னு இல்லை. எங்களுக்கு பொண்ணு மட்டும் போதும்.” என பேசி, பேசி அவரது மனதைக் கரைத்தார்.

“உங்க பெண் பிருந்தாவை என்னோட மருமகளாய் இல்லாமல், மகளாய் பார்த்துக்குவேன்.” என உறுதியளித்தார் தேவி.

அந்த ஊரிலேயே செல்வாக்கான குடும்பத்திலிருந்து, விரும்பி பெண் கேட்கும் போது கஸ்தூரியாலும் அதிகம் மறுக்க முடியாமல் சம்மதம் தெரிவித்தார்.

உடனே பிருந்தாவை அழைத்து சம்மதம் கேட்க,”அம்மா விருப்பம் தான் என்னோட விருப்பம். எனக்கு தனியா எந்த ஆசைகளும் கிடையாது. அம்மாவும் அம்முவும் என்ன சொன்னாலும் எனக்கு ஓகே.” என அமைதியாக தன் சம்மதத்தை தெரிவித்தாள். 

பிந்துவின் பதிலில் மகிழ்ச்சியடைந்த தேவி, அவளது நெற்றியில் இதழ் பதித்தார். அதில் கூச்சம் அடைந்த பெண், வெட்கத்தோடு அவரிடமிருந்து விலகிக்கொண்டாள். 

பிறகு என்ன பிரச்சினை, எந்த தடங்கலுமின்றி திருமண வேலைகள் சூடு பிடித்தது.

இதை நினைத்துக் கொண்டிருந்த தேவி, ஆண்டவனிடம்,’எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை அந்த நிமிடமே ஆண்டவன் தள்ளுபடி செய்து விட்டது பாவம் அவருக்கு தெரியவில்லை.

எந்த ஊரிலிருந்து அம்மு செல்ல மாட்டாளென்று, திருமணத்திற்கு தடைவிதித்தாரோ, அந்த ஊரில் காலடிவைக்கமுடியாமல் விதி அடப்போகிறது தனது ஆட்டத்தை?

†††††

கோவிலில் பாடிய அமிர்தாவின் குரலில் கவரப்பட்ட ஈஸ்வர், அவளை தேடி சன்னிதானத்தில் நுழைந்தான். அவன் வருவதற்குள் பாடல் முடித்திருக்க இப்போதும் அமிர்தாவை தவற விட்டிருந்தான்.

‘நம்ம லக் அவ்வளவுதான்.’ என நினைத்தவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தால், பாவாடை தாவணியில், தலைநிறைய பூவோடு, அழகோவியமாக நின்ற அம்மு. அவளை விட்டு பார்வையை விலக்கமுடியாமல் தவித்தவனின் கண்கள், அவளைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவள் தனியே சிக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான். 

அவனின் நல்ல நேரம், பொங்கல் வாங்க பிருந்தாவை தவிர்த்துவிட்டு அம்மு மட்டும் தனியே வந்தவள், ஈஸ்வரிடம் வசமாக சிக்கி கொண்டாள்.”ஹாய் நீலாம்பரி. என்ன கோயிலுக்கு சாமி கும்பிட வந்தியா?” அவளை சீண்டினான்.

அவனை மேலிருந்து கீழாக அளவெடுத்த அம்மு,”பார்த்தா எப்படி தெரியுது கட்டவண்டி?” சூடாகவே பதிலளித்தாள். இப்போது அவள் சொல்லும் கட்டவண்டியில் கோவம் வரவில்லை.

‘ஒரு மார்க்கமாகவே இருக்கு. என்னென்னமோ பண்ண தோணுது’ என மனதில் சலித்து கொண்டு,”பொங்கலும், புளியோதரையும் சாப்பிட வந்த மாதிரி தெரியுது” மீண்டும் சீண்டலே. 

‘சரியா கண்டுபிடிச்சிட்டானே’ என அம்மு திருதிருவென முழிக்க, அதை பார்த்த ஈஸ்வர்,’சோ ஸ்வீட்’ என மனதில் செல்லமாக கொஞ்சிக் கொண்டான். 

“சரி வளவளன்னு பேசாம சீக்கிரமா நம்ம சந்திக்கிற இடத்துக்கு வந்து சேர்” யாரும் கவனிக்காமல் அந்த இடத்திலிருந்து மறைந்தான்.

அவனை மனதில் அர்ச்சித்துக் கொண்டே அங்கு சென்றாள் பெண். 

“நேத்து தானே, என்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க. அப்புறம் என்ன மறுபடியும் கூப்பிடுறீங்க?” என எரிந்து விழுந்தாள்.

“உன்னை தொந்தரவு பண்ணகூடாதுன்னு தான் நினைச்சேன் நீலாம்பரி. உன்ன பாத்தாலே என்னோட மைன்ட் எல்லாம் மாறிடுது. நான் என்ன பண்ண?” என செல்லமாக அலுத்துக் கொண்டான். 

“கட்டவண்டி சார்! நீங்க எப்ப ஊருக்கு கிளம்பபோறீங்க?” அவன் போய் விட்டாலாவது நிம்மதியா இருக்கலாம் என அவள் கேட்க. 

“நீ என்கூட வரேன்னு சொல்லு. இப்ப கூட கிளம்பிடலாம்” எனக் கூறிக் கண்ணடித்தான். 

“நான் எல்லாம் இந்த ஊரை விட்டு வரமாட்டேன். நான் இங்கதான் இருப்பேன். நீங்க போய்ட்டீங்கனா எனக்கு நிம்மதி அதுக்குதான் கேட்டேன்.” 

அவள் ‘ஊரைவிட்டு வரமாட்டேன்’ என்றதும் ஈஸ்வர் மனதில் சோர்ந்து போனான். அதன் காரணத்தை உணர்ந்து கொள்ளவில்லை. 

சிறிது நேரம் அவளுடன் வம்பிழுத்து கொண்டிருந்தவன், இருட்ட தொடங்கவும், அவளை பிரியவேண்டுமென்ற வலி மனமெல்லாம் உண்டாகியது.

இனி அவளுடன் இணக்கமாக பேசமுடியாது, என்பதை உணர்ந்தவன் போல், அவளை மென்மையாக அணைத்து அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான். ஆறுதல் தேடும் அரவணைப்பு. பிரிவு துயரை ஆற்றமுடியாத அணைப்பு. அம்மு தடுக்கவுமில்லை உடன்படவுமில்லை.

சிறிது நேரம் சென்று பிரிந்தவன், அவள் நெற்றியில் மென்முத்தமொன்றை பதித்தான். அந்த முத்தம் பெண்ணின் உயிர்வரை சென்று தாக்கியது.

அவளை அனுப்பிவிட்டு, நண்பர்களுடன் இணைந்து கொண்டான். சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்றவனிடம் தேவி, அவனது திருமணத்தைப் பற்றி கூறினார். அம்முவின் பதிலில் சோர்ந்து இருந்தவன், அன்னையின் ஆசைக்கு தலையசைத்தான் அமிர்தா என நினைத்து.

ஆனால் இன்று பிருந்தாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவனது மனம் நடந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் மருகிக் கொண்டிருந்தது.

ஈஸ்வரின் மூளை அமிர்தா என்று உச்சரித்தது.

அவனின் மனமும் உடலும் அம்மு வேண்டும் என்றது.

ஆனால் நிச்சயக்கப்பட்டதோ பிருந்தா. 

Leave a Reply

error: Content is protected !!