நினைவு – 22

eiE6SA598903-d5207d73

நினைவு – 22

இரவு நேரத்து நிசப்தத்தை கலைப்பது போல கோட்டானின் ஒலி எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்க அர்ஜுன் மற்றும் வருண் அவர்கள் அறையின் பால்கனியில் அமைதியாக கண் முன்னே விரிந்து பரந்திருந்த வானத்தை பார்த்து கொண்டு நின்றனர்.

அர்ஜுன் சொன்ன விடயத்தை இன்னமும் வருணால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

இது நாள் வரையில் ஹரிணி ஒருவரை விரும்பியிருந்தாள் என்ற விடயத்தை மாணிக்கம் யாரிடமும் இதுவரையில் தெரிவித்திருக்கவில்லை அப்படி தெரிவித்திருந்தால் விஷ்ணுப்பிரியா அன்றே ஹோட்டலில் வைத்து அதைப் பற்றி சொல்லி இருப்பாள்.

நிச்சயதார்த்த நிகழ்வின் போது கூட மாணிக்கம் அர்ஜுனைத் தனக்கு முன்னரே தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளவும் இல்லை.

அப்படியிருக்கையில் அவன் சொன்ன விடயம் வருணிற்கு முற்றிலும் புதியது மட்டுமல்ல அதிர்ச்சியானதும் கூட.

பலவிதமான குழப்பங்கள் சூழ அர்ஜுனைத் திரும்பி பார்த்த வருண்
“அப்போ அங்கிளுக்கு முன்னாடியே உன்னைத் தெரியுமா அர்ஜுன்?” என்று கேட்கவும்

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“பிரியாவை நான் கடைசியாக சந்தித்த அந்த நாளுக்கு ஒரு நாள் முதல் தான் அவரையும் மீட் பண்ணேன்” என்று கூற வருணோ அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தான்.

“என்னடா சொல்லுற? இதை எல்லாம் நீ என் கிட்ட ஏன் அப்போவே சொல்லல?”

“பிரியாகிட்ட எல்லாவற்றையும் சொன்ன பிறகு உன்கிட்ட இதைப் பற்றி எல்லாம் விலாவாரியாக பேசணும்னு தான் நினைத்து இருந்தேன்டா ஆனா அதற்கிடையில் என்னன்னவோ நடந்து முடிந்து போச்சு!”

“சரி பரவாயில்லை விடு! அவர் உன் கிட்ட என்ன பேசுனாரு?”

“சொல்லுறேன் இரு!” அர்ஜுன் தன் கண்களை மூடி கொண்டு தலையை கோதி விட்டபடியே அன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றி கூறத் தொடங்கினான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு……

அர்ஜுன் அன்று தன் ஆபிஸ் விடயமாக ஹோட்டல் ஒன்றில் வைத்து கிளையண்ட் ஒருவரை சந்தித்து விட்டு அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறி வர சரியாக அந்த நேரம் அவனின் மேல் ஒரு நபர் தற்செயலாக மோதி நின்றார்.

“ஐ யம் ஸாரி சார்! ரியலி சாரி!” என்றவாறே அர்ஜுன் அந்த நபரைப் பார்த்து கூற

அவனைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டவர்
“பரவாயில்லை தம்பி! நோ ப்ராப்ளம்” என்று விட்டு அவனைக் கடந்து செல்லப் போனவர் கீழே விழுந்து கிடந்த அவனது போனை எடுத்து அவனிடம் நீட்ட சரியாக அந்த நேரம் அவனது தொலைபேசி திரையில் ஹரிணிப்பிரியாவின் புகைப்படமும் தென்பட்டது.

அந்த புகைப்படத்தை பார்த்ததுமே அதிர்ச்சியாக அந்த புகைப்படத்தை நன்றாக உற்றுக் கவனித்தவர்
“தம்பி இந்த பொண்ணு?” கேள்வியாக அவனை நோக்க

சட்டென்று தன் போனை அவரது கையில் இருந்து வாங்கிக் கொண்டவன்
“முன்ன பின்ன தெரியாதவங்க பர்ஷனலைப் பற்றி இப்படி தான் விசாரிப்பீங்களா?” கோபமாக அவரைப் பார்த்து கேட்டு விட்டு அங்கிருந்து வேகமாக நடக்க தொடங்க

மீண்டும் அவன் முன்னால் வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டவர்
“நீங்க வேணும்னா எனக்கு முன்ன பின்ன தெரியாதவங்களாக இருக்கலாம் தம்பி! ஆனால் உங்க போனில் போட்டோவா இருப்பது என் பொண்ணு ஆச்சே!” எனவும் இம்முறை அதிர்ச்சியாகி நிற்பது அர்ஜுனின் முறையாகிப் போனது.

“நீங்…நீங்க… என்ன சொல்லுறீங்க? பிரியா உங்க மகளா?”

“ஹரிணிப்பிரியா என் பொண்ணு!”

“ஐ…ஐ யம் ரியலி சாரி சார்! நான் வேணும்னு அப்படி பண்ணல! ஐ யம் சாரி! நீங்க தான் பிரியாவோட அப்பான்னு தெரியாமல் நான் கொஞ்சம் கோபமாக… ஐ யம் சாரி!” அர்ஜுன் தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்க்க

அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக நோட்டம் விட்டவர்
“உங்க பேரு என்ன? என் பொண்ணு உங்களுக்கு எப்படி பழக்கம்? எதற்காக என் பொண்ணு போட்டோவை உங்க போனில் வைத்து இருக்கீங்க? நீங்க யாரு? என்ன பண்ணுறீங்க?” மூச்சு விடாமல் கேள்விகளாக கேட்க

அவரையே வெறித்து பார்த்து கொண்டு நின்றவன்
“அய்யோ அங்கிள்! நீங்க தப்பாக எதுவும் நினைக்க வேண்டாம் நான் உங்க பொண்ணு படிக்கும் அதே காலேஜில் தான் படித்தேன்” என்று கூற மாணிக்கத்தின் பார்வையோ அவனை நம்பாதது போலவே நோக்கியது.

“என்னோட பேரு அர்ஜுன்! **** காலேஜில் பி.காம் கம்ப்ளீட் பண்ணி இருக்கேன் இப்போ ஏ.வி பிசினஸ் கம்பெனியோட வன் ஆஃப் தி சேர்மேனா இருக்கேன் அப்பா, அம்மா…”

“உங்களைப் பற்றிய தகவல்களை எல்லாம் அப்புறமாக சொல்லுங்க! முதல்ல என் பொண்ணு உங்களுக்கு எப்படி பழக்கம் என்று சொல்லுங்க!”

“அது தான் சொன்னேனே சார் நாங்க ஒரே காலேஜில் தான் படித்தோம்!”

“ஒரே காலேஜில் படித்தால் போட்டோவை உங்க போனில் போட்டு வைத்து இருக்கலாமா?”

“கரெக்ட் தான் சார்! ஒரே காலேஜில் படித்தால் போட்டோவை போனில் போடணும்னு இல்லை தான்! ஆனால் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு போட்டோவை வைத்து இருக்கலாம் இல்லையா?”

“என்ன?” மாணிக்கம் அதிர்ச்சியும், கோபமும் ஒன்று சேர முகம் சிவக்க அர்ஜுனை பார்க்க

அவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்துக் கொண்டவன்
“ஐ யம் சாரி சார்! நான் உங்களை கோபப்படுத்தணும்னு அப்படி சொல்லல! உங்க பொண்ணை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்! அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுகிறேன்” எனவும்

அவரோ
“என் பொண்ணு உங்களை விரும்புறதாக உங்க கிட்ட சொன்னாளா?” அவனை நம்பாதது போலவே தன் அடுத்த கேள்வியை கேட்டார்.

அவரது கேள்வியில் சட்டென்று முகம் வாட அர்ஜுனின் தலை இடம் வலம் அசைந்தது.

“நான் இன்னும் இந்த விடயத்தை சில்… பிரியாவிடம் சொல்ல! ஆனா அவளும் என்னை…”

“போதும்!”

“சார்! நான் சொல்ல வர்ற..”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்! ஆரம்பத்தில் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு போட்டோன்னு சொல்ல நான் கூட என் பொண்ணு இவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டாளோன்னு பயந்து போயிட்டேன் ஆனா இப்போ அந்த பயம் போயிடுச்சு! என் பொண்ணு எப்போதும் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டா! செய்யவும் விடமாட்டேன்!”

“சார் இது ரொம்ப தப்பு! பிரியா மனதில் நான் தான் இருக்கேன் வேணும்னா உங்க பொண்ணு கிட்ட நீங்களே கேட்டுப் பாருங்க!”

“என் பொண்ணை பற்றி நீங்க எனக்கு சொல்லி தர தேவையில்லை! அப்புறம் இன்னொரு தடவை இந்த காதல், கீதல்ன்னு சொல்லிட்டு என் பொண்ணு பின்னால் சுற்றி வரும் வேலை எல்லாம் வைத்து கொள்ள வேண்டாம்”

“சார் நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை ஒரேயடியாக வேண்டாம்னு சொல்லுறீங்க? என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?”

“ஓஹ்! அப்படி வர்றீங்களா? சரி சொல்லுங்க நீங்க யாரு? உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க? சொல்லுங்க தம்பி? உங்க அப்பா பேரு என்ன?” மாணிக்கம் தன் கையை கட்டிக் கொண்டு அர்ஜுனைப் பார்த்து வினவ

சிறிது தயக்கத்துடன் தன் கை இரண்டையும் கோர்ப்பதும் பிரிப்பதுமாக நின்றவன்
“என்னோட அப்பா பேரு விஸ்வநாதன் பிசினஸ் மேனாக இருந்தாரு!” எனவும்

“இருந்தாருன்னா? இப்போ இல்லையா?” மாணிக்கம் கேள்வியாக அவனை நோக்க இல்லை என்று தலையசைத்தவன்

“இறந்து போயிட்டாங்க” என்று கூற

“ஓஹ்! அது வேறயா? சரி அம்மா என்ன பண்ணுறாங்க?” என்று வினவினார்.

“அம்மா நான் பிறந்த அப்போவே இறந்து போயிட்டாங்க” அர்ஜுன் கலக்கம் நிறைந்த குரலில் அவரைப் பார்த்து கூற

“சுத்தம்! அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை! இந்த நிலைமையில் என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசையா?” மாணிக்கம் கேலியாக அவனைப் பார்த்து வினவ அவனது முகமோ அவமானத்தால் சிறுத்து போனது.

“நீங்க எவ்வளவு பெரிய பணக்காரனாக வேணும்னா இருங்க! என் பொண்ணை எப்போ, யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னே எனக்கு தெரியும் அதனால் இந்த ரோமியோ வேலையை எல்லாம் வேறு யாருகிட்ட வேணும்னாலும் வைத்துக் கொள்ளுங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று விட்டு மாணிக்கம் அவனை கடந்து செல்ல

“சார் ஒரு நிமிஷம்!” அவர் முன்னால் ஆண்மகனுக்கே உரிய கம்பீரமான நடையோடு வந்து நின்றவன்

“உங்களுக்கு என்னைப் பற்றி இன்னும் சரியாக எதுவும் தெரியல! எனக்கு இப்போ என்கூட என்னைப் பெற்ற அம்மா, அப்பா வேணும்னா இல்லாமல் இருக்கலாம் ஆனா கடைசி வரைக்கும் என்னை பாசமாக பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு குடும்பம் எனக்கு இருக்கு! இன்னைக்கு எந்த வாயால் நீங்க என்னை இவ்வளவு மட்டமாக பேசிட்டு போறீங்கலோ நாளைக்கு அதே வாயால் உங்களை என்னை பாசமாக மாப்பிள்ளைன்னு கூப்பிட வைப்பேன்! உங்க பொண்ணை உங்க கையாலேயே என் கையில் பிடித்து கொடுக்கவும் வைப்பேன்! எல்லாவற்றுக்கும் தயாராக இருங்க மாமா! வரட்டா மாமா?” முகம் நிறைந்த புன்னகையுடன் அவரைப் பார்த்து தன் புருவம் உயர்த்தி சொல்லி விட்டு நகர்ந்து செல்ல அவரோ அவனை முறைத்து பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.

அர்ஜுன் தன் காரில் ஏறி செல்லும் வரை அவரது கோபப்பார்வை அவனின் மேலேயே நிலைத்திருக்க அவரைப் பார்த்து கண்ணடித்து விட்டு தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன் அடுத்த நாள் ஹரிணியை சந்திக்க செல்ல வெகு ஆர்வத்துடன் தயாராகவும் மறக்கவில்லை.

ஹரிணிப்பிரியாவிடம் தன் காதலை சொல்லி விட்டு அடுத்த கணமே மாணிக்கத்தை சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அர்ஜுன் அன்றைய நாளை ஆரம்பித்திருந்தான் இருப்பினும் கடவுள் விதித்து வைத்ததை யாரால் மாற்ற முடியும்?

அர்ஜுன் கூறிய விடயங்களை எல்லாம் கேட்டு வருண் தன் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியாகி நிற்க
“வருண்! டேய் வருண்!” அவனது தோளைப் பற்றி உலுக்கி அவனை மீண்டும் நனவிற்கு வரச் செய்தவன்

“என்னாச்சு டா?” என்று வினவ வருணோ அவனது கையைத் தட்டி விட்டு விட்டு அவனை சாரமாரியாக அடிக்கத் தொடங்கினான்.

“டேய் வருண்! நான் பாவம்டா!” அர்ஜுன் வருணின் அடியில் சிக்கிக் கொள்ளாமல் விலகி ஓடியபடியே அலற

“யாரு நீயா? இவ்வளவு பெரிய விஷயத்தை என் கிட்ட சொல்லாமல் மறைச்சு வைச்சுட்டு நீ பாவமா?” அவனும் விடாமல் அவனைத் விரட்டிக் கொண்டே இருந்தான்.

“டேய் நான் வேணும்னு பண்ணலடா! சொன்னா நீ ஃபீல் பண்ணுவேன்னு தான் அடுத்த நாள் சொல்லலாம்ன்னு இருந்தேன்”

“கிழிச்ச! பார்க்க பூனைக்குட்டி மாதிரி இருந்தவரு எப்படி எல்லாம் பேசி இருக்காரு!”

“விடுடா! எந்த பெற்றவங்களாக இருந்தாலும் தங்களோட பொண்ணோ, பையனோ காதல் பண்ணுவதாக சொன்னால் ஆரம்பத்தில் கோபப்படுவது சகஜம் தானே!”

“அதற்காக இன்னொரு ஆளைப் பற்றி என்ன ஏதுன்னு தெரியாமலேயே மட்டம் தட்டிப் பேசலாமா? நீ ஏன் டா அன்னைக்கே இதை சொல்லல? நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப?” வருண் கவலையோடு அர்ஜுனைப் பார்த்து வினவ

சிறு புன்னகையுடன் அவனது தோளில் தன் கையை போட்டு கொண்டவன்
“இதோ பாரு நீ எப்படி ஃபீல் பண்ணுறேனு! இதற்காக தான்டா நான் அதை அன்னைக்கே சொல்லல! நீ கவலைப்பட்டால் நான் தாங்கிப்பேனா சொல்லு?” கேள்வியாக நோக்க

“அப்போ நீ மட்டும் தனியாக ஃபீல் பண்ணலாமா?” அவனும் பதிலுக்கு அவனைக் கேள்வியாக நோக்கினான்.

“சரி விடுடா! நடந்தது நடந்து போச்சு! இனி நடக்கப் போகும் விடயங்களை பார்ப்போம்!”

“ஆனா அர்ஜுன் மாணிக்கம் அங்கிள் ஒரு தடவை கூட உன்னைத் தனக்கு முன்னாடியே தெரியும் என்கிற மாதிரி காட்டிக் கொள்ளவே இல்லையேடா! எப்படி நடிச்சு இருக்காரு?”

“டேய்! ஏன்டா? சரி நீ சொல்லு அவரு என்னை எப்போ என்னை உன் கூட பார்த்தாரு? நீ ஹோட்டலுக்கு போனப்போ பார்த்தாரா?”

“இல்லை! ஆனா ஹாஸ்பிடலில் வைத்து பார்த்தாரு!”

“அப்போ ஏதாவது வித்தியாசமாக ரியாக்ட் பண்ணாறா?”

“வித்தியாசமான்னா! கொஞ்சம் அதிர்ச்சியான மாதிரி தான் இருந்தாரு! அதை நான் ஹரிணி ஹாஸ்பிடலில் இருக்கிறதைப் பார்த்து தான் அப்படி இருக்காங்கன்னு நினைத்து இருந்தேன்”

“சரி அதற்கு அப்புறம் என்னைப் பற்றி எதுவும் உன் கிட்ட கேட்டாரா?” அர்ஜுனின் கேள்வியில் சிறிது நேரம் யோசித்து பார்த்தவன் மறுப்பாக தன் தலையை அசைத்தான்.

“அவருக்கு நான் இப்படி ஆனதில் ஒரு வேளை நிம்மதி போல அது தான் எதுவும் கேட்காமல் இருந்து இருக்காரு! பரவாயில்லை விடு! அது தான் நான் திரும்பி வந்துட்டேன் இல்லையா? இனி மாம்ஸோட ஒரே என்டர்டெயின்மென்ட் தான்!”

“ஆமா பெரிய மாம்ஸு! வா வந்து தூங்கு ரொம்ப லேட் ஆச்சு!” வருண் அர்ஜுனின் தோளில் தட்டி விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட

நடந்து செல்லும் தன் நண்பனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றவன்
‘உன்னை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வைத்து இருக்கணும் டா வருண்! சாவிம்மா, ராமுப்பா நீங்க எல்லோரும் என்னோட எல்லா கஷ்டமான நிலைமையிலும் கூட இருந்து இருக்கீங்க! இந்த பாசம் கிடைக்க நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்! அம்மா! அப்பா! உங்க பையன் இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! நீங்க என்னைப் பார்த்துட்டு தானே இருக்கீங்க இல்லையா? இந்த சந்தோஷமான தருணத்தில் நீங்களும் என் கூட இருந்து இருக்கலாம் ப்பா! ம்மா!” கலங்கிய தன் கண்களைத் துடைத்து விட்டு தன்னறைக்குள் சென்று நீண்ட நாட்களின் பின் ஆழ்ந்த உறக்கத்தை தழுவிக் கொண்டான்.

அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து காலை நேரம் சூரிய கதிர்கள் தங்கள் ஒளியை அகிலமெங்கும் பரப்ப அந்த கதிர் வெளிச்சத்தில் தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த அர்ஜுன் வெகு உற்சாகமான மனநிலையுடன் ஆபிஸ் செல்வதற்காக தயாராகி வந்து நின்றான்.

இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் சில மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தவன் இப்போது பூரணமாக குணமடைந்தவனாக தேக ஆரோக்கியத்துடன் திரும்பி வந்து இருந்தான்.

வெகு வருடங்களுக்கு பின்பு அர்ஜுன் கோர்ட் அணிந்து வருணோடு பேசியபடியே நடந்து வருவதைப் பார்த்ததும் ராமநாதன் கண்கள் கலங்க சாவித்திரியின் தோளில் தன் கரத்தை வைக்க சிறு புன்னகையுடன் அவரது கையில் தன் கையை வைத்து அழுத்தி கொடுத்தவர்
“அர்ஜுன்! வருண்! வாங்கப்பா சாப்பிடலாம்!” என்று விட்டு

தன் கணவரின் புறம் திரும்பி
“நீங்களும் உட்காருங்க!” என்று கூற அவரும் தன் கண்களை துடைத்து விட்டு தன் மகன்களுடன் சேர்ந்து உணவருந்த அமர்ந்து கொண்டார்.

சந்தோஷமும், மகிழ்ச்சியும், சிரிப்பும் போட்டி போட மனம் விட்டு பேசி சிரித்த படியே தங்கள் உணவை உண்டு முடித்தவர்கள் ராமநாதன் மற்றும் சாவித்திரியிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு தங்கள் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அர்ஜுன் இதற்கு முன்னர் வருணோடு இணைந்து இந்த ஏழு வருடங்களும் அவனது அலுவலகத்திற்கு சென்றிருந்தாலும் இப்போது பரிபூரணமாக குணமடைந்து அலுவலகத்திற்கு செல்வது இதுவே முதல் தடவை என்பதனால் அங்கே வேலை செய்வோர் அனைவரும் பூங்கொத்துக்களை கொடுத்து அவனை வரவேற்க இயல்பான புன்னகை முகத்தோடு அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டவன் அதன் பிறகு வந்த நேரம் முழுவதையும் தன் வேலையை செய்வதிலேயே செலவழிக்க தொடங்கினான்.

ஒட்டுமொத்தமாக எல்லா வேலைகளையும் ஒரு தருணத்தில் செய்ய முடியாவிட்டாலும் அவனால் முடியுமான அளவில் இருக்கும் வேலைகளை செய்து முடித்தவன் அதைத் தாண்டி வரும் வேலைகளை எல்லாம் வருணின் உதவியுடனேயே செய்யத் தொடங்கினான்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் சரி செய்து விட்டு வெற்றி களிப்போடு இருக்க இது ஒன்றும் சினிமா இல்லை என்பதால் அர்ஜுனின் நிலை அறிந்து வருணும் வேலை சம்பந்தமான எல்லாவற்றிலும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தான்.

வேலை முடிந்து மாலை வீடு திரும்புவதற்காக வருண் காரை எடுத்துக் கொண்டு வர செல்லப் போக அவனது கையிலிருந்த சாவியை வாங்கி எடுத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வந்த அர்ஜுன் வருணைப் பார்த்து உள்ளே அமரும்படி ஜாடை காட்ட ஏதோ ஒன்று அவனால் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டவனாக வருண் புன்னகையுடன் அவனருகில் அமர்ந்து கொண்டான்.

போகும் வழி முழுவதும் தாங்கள் எங்கே செல்கிறோம் என்று அர்ஜுனும் கூறவில்லை வருணும் அவனிடம் கேட்கவில்லை.

அவனாக கூறட்டும் என்ற முடிவோடு வருண் கார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் அவர்களது கார் அடையார் மாநகராட்சி சபையின் கட்டடத்தின் முன்னால் சென்று நின்றது.

இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல காரில் இருந்து இறங்கி நின்ற வருண் சோம்பல் முறித்துக் கொண்டே அர்ஜுனை திரும்பி பார்க்க அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே காரில் இருந்து இறங்கி நின்றவன் தன் கூலிங் கிளாஸை கழட்டி விட்டு அவன் முன்னால் வந்து நின்று கொண்டான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற நேரம் சரியாக மாணிக்கம் அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறி வரவும்
“அதோ உன் மாம்ஸ் வர்றாரு!” வருண் அர்ஜுனைப் பார்த்து கூற சட்டென்று அவன் காண்பித்த புறமாக திரும்பி பார்த்தவன் அவனது கையைப் பிடித்து இழுத்து கொண்டு அவரை நோக்கி நடந்து சென்றான்.

அவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் அந்த இடத்தில் எதிர்பாராத மாணிக்கம்
“மாப்பிள்ளை! நீங்க எங்கே இங்கே?” அர்ஜுனையும், வருணையும் மாறி மாறி பார்த்து கொண்டே வினவ

அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்ட அர்ஜுன்
“என்ன மாம்ஸ்? எப்படி இருக்கீங்க? வாய் நிறைய மாப்பிள்ளைன்னு கூப்பிட வைப்பேன்னு சொன்ன மாதிரி செய்துட்டேன் போல!” எனவும் அவரோ அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவராக அவனை வெறித்து பார்த்து கொண்டு நின்றார்……

Leave a Reply

error: Content is protected !!