நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!04

295797628_586832783012651_1027496183334268553_n-146c5d44

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!04

அத்தியாயம் 04

 அன்று நடந்த அந்த சம்பவத்திலிருந்து ஆதினி அவளது வீட்டில் அமைதியாகி விட்டாள். எப்பொழுதும் எங்கு பார்த்தாலும் கேட்கும் அவளது குரல் அப்படியே அடங்கிவிட்டது. இளவரசியாக வலம் வந்தவள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் தனக்குள்ளே ஒடுங்கிக் கொண்டாள். தனக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே அவளது நடவடிக்கைகள் இருக்கும்.

அவளிடம் வாய் கொடுக்காத வரைக்கும் அமைதியின் சொருபினியாய் வலம் வரும் பாவை, ஆதனி என்று பெயரை அழைத்தால் போதும் வேங்கையாக மாறி, அனைவரையும் ஒரு வழி செய்து விடுவாள். அவள் மனம் விட்டு பேச நினைக்கும் ஒரே ஜீவன் அவள் ப்யூட்டியாக வலம் வரும் நங்கையே.

ஒரு ஒரு தேர்விற்கு நிறைய இடைவெளி வருவதால் கல்லூரிக்கு கூட செல்ல முடியவில்லை. கல்லூரிக்கு சென்றாலாவது கல்லூரியில் நடக்கும் காதல் கதைகளை பற்றி அளந்து கொண்டிருப்பர். இப்பொழுது அதற்கும் முடியாமல் போய் விட அறையே கதி என்று இருந்து விட்டாள்.

அறைக்குள்ளே அடைந்து இருப்பவளுக்கு ஏனோ மூச்சு முட்டியது போல் இருக்க, கோயிலுக்குச் சென்று வரலாம் என்று ஒரு மனம் நினைக்க மற்றொரு மனமோ நங்கையை சென்று பார்த்து வருமாறு கூறியது.

இருவிதமான மனநிலையில் இருந்தாலும், நங்கையை சென்று காணுவது என்பது இப்போது சாத்தியம் இல்லாத விடயமாக தோன்ற, கோயிலுக்கே செல்லலாம் என்று முடிவெடுத்து அதற்காக கிளம்பத் தொடங்கினாள்.

பத்து நிமிடத்திலே கிளம்பியவள், மஞ்சள் மற்றும் ஊதா நிறத்தில் ஆங்காங்கே மாங்காய் டிசைன் பதிக்கப்பட்டிருந்த தாவணியை அணிந்தவள் அதற்கு தகுந்தாற்போல் அணிகலன்களை அணிந்து கீழே வந்தாள்.

அவளின் வருகையை அறிந்த குடும்பத்தினர் அனைவரும் அவளையே கேள்வியாக நோக்குவதை கண்ட ஆதினி, அதனை கண்டு கொள்ளாமல் அமைதியாக பூஜை அறைக்கு சென்று கோயிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையானப் பொருட்களை எடுக்க தொடங்கினாள்.

“அவ எங்க போறான்னு கேளு?” என்று கண்ணாலே சைகை செய்த சதாசிவத்தை தவிப்போடு பார்த்தார் அவரது மனைவி சீதாலட்சுமி.

தான் கேட்க சொல்லி சைகை செய்தும் கேட்காமல் இருக்கும் மனைவியை பார்த்து முறைக்க, சீதாவோ கணவருக்கும் மகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவித்து போனார்.

ஆதினியிடம் சென்று பேச கூட இப்போது பயமாக இருந்தது. அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு அவளின் குணம் மறைந்து போய் எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை பாராபட்சமின்றி வார்த்தையால் காயப்படுத்த தொடங்கி இருந்தாள்.

‘இவளிடம் எப்படி கேட்பது’ என்று தயங்கிக் கொண்டிருந்த அன்னையின் நிலையை புரிந்து கொண்ட ஆதினி, ”நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்” என்று யாருக்கிட்டயோ சொல்வது போல் சொல்லிவிட்டு வெளியேற போக,

“ஒரு நிமிஷம் நில்லு” என்று சதாசிவத்தின் குரலில் நின்று திரும்பி, ‘எதற்கு’ என்பது போல் பார்வை பார்த்தாள்.

“வண்டில ஒன்னும் நீ போக வேணாம் ட்ரைவர கூட்டிகிட்டு நீ காருல கோயிலுக்குப் போயிட்டு வா” என்றார் கணீர் குரலில்.

அவர் சொல்லியதை கேட்டு கோபம் வந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், ட்ரைவரை நோக்கி நடையிட்டாள். வெளியே வந்து பார்த்தால் ட்ரைவர் இல்லாமல் போக, அடங்கிய கோபம் முற்றிலும் வெளி வர தொடங்கியிருந்தது.

“எங்க போனான் இந்த விருமாண்டி” என்று  முகத்தை சுருக்கி அங்கேயும் இங்கேயும் பார்வையை அலைபாய விட, அவனோ தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனை கண்ட ஆதினிக்கு புசு புசு வென கோபம் தலைக்கு ஏறிட, தன் கோபத்தை காரில் காட்டிக்கொண்டு இருக்க அதன் சத்தத்தில் திரும்பி பார்த்த அவன், ‘அய்யோ எதுக்கு இப்போ காரை குத்திட்டு இருக்காங்க?’ என்று பதறியவன் கத்திரியை வைத்து விட்டு அவளை நோக்கி ஓடி வந்தான்.

“மேடம்” என்று பவ்யமாக வந்து நிற்க,

அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள், ”நீ இந்த வீட்ல ட்ரைவர் வேலைக்காக தான வந்துருக்க அப்புறம் இங்க இல்லாம அங்க என்ன வேலை பார்த்துட்டு இருக்க” என்று கோபத்தில் கத்தினாள்.

கன்னத்தில் கை வைத்தவன், ”இல்ல மேடம் சும்மா இருந்தேன். அதுவும் இல்லாம இன்னைக்கு தோட்டக்காரன் வேற வரலை. அதான் மேடம் நான் அந்த வேலையை பார்த்தேன்” என்றான் அமைதியான குரலில்.

“மண்ணாங்கட்டி வேலை… முதல வண்டியை எடு வெளிய போனும்” என்று காரில் உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.

விருமாண்டி என்று அழைக்கப்படும் அவன் அவளை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியன் வேகமாக வண்டியை எடுத்து கிளப்பினான்.

‘இவங்க கிட்ட அடிவாங்குறதே எனக்கு வேலையா போச்சி. இதுக்கெல்லாம் ஒருநாள் இருக்கு இவங்களுக்கு’ என்று மனதில் சூளுரைத்து கொண்டவன், எங்கே போகணும் என்று கூட கேட்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் நினைவில் அவன் முதன்முறை அடி வாங்கியது ஞாபகத்தில் வந்தது.

 ***

புதிய ஊர் புதிய இடம் அதுவும் பிழைப்பதற்காக வந்த இடம் என்பதால் முதலில் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு அதன்பின் வேலையை தேடலாம் என்றிருந்தான் அவன்.

அதற்காக அந்த ஊரில் இருக்கும் கோயிலுக்குச் செல்லும் பேருந்தில் ஏறியவன், கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டான். அதன் பின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆட்கள் வந்து ஏறவே பேருந்தில் மக்கள் கூட்டம் பெருகியது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் ஒரு கர்ப்பிணி பெண் ஏற‌, அந்த கூட்டத்தில் அவரால் நிற்க முடியாமல் தடுமாறுவதை கண்ட அவன் எழுந்து அவருக்கு இருக்கையை கொடுத்தவன் அவரை இடிக்காமல் இருக்க வேண்டி அதே இடத்தில் சிறு இடைவேளி விட்டு நின்றுக்கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்க.

“பரவால்லை மா” என்று புன்னகைத்தான்.

அங்கே இருந்த ஒருவன் பக்கத்தில் இருந்த பெண்களின் மீது மோதிக்கொண்டு இருக்க, அந்த பெண்ணோ ஒதுங்கி ஒதுங்கி செல்ல அவனோ அந்த பெண்ணை ஒட்டிக்கொண்டே நின்றிருந்தான்.

அடுத்து நிறுத்தப்பட்ட நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கிக் கொள்ள, அவன் அடுத்த பெண்ணை உரச துவங்கி இருந்தான்.

அவன் காலில் ஓங்கி மிதித்தவள் அவள் திரும்புவதற்கு முன்பு அவன் மறைந்து விட, திரும்பியவள் அங்கு கர்ப்பிணி பெண்ணிற்கு பாதுகாப்பாக நின்ற அவனின் கன்னத்தில் பளார் என்று அடித்திருந்தாள்.

“என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? நிம்மதியா ஒரு பொண்ணால பஸ்ல வர முடியுதா பாரு எங்க பார்த்தாலும் இடிக்கிறது உரசுறதுன்னு இருக்கீங்க. அசிங்கமா இல்ல உங்களுக்கு. உங்கள மாதிரி ஆளுங்கனாலதான்  சின்ன குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாம போச்சி”என்று ஆதனி கோபத்தில் கத்த,

கன்னத்தில் கை வைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவமானத்தில் கூனிகுறுகி போனவன், அடுத்து வந்த நிறுத்தத்திலே இறங்கி கொண்டான்.

***

“ஹலோ மிஸ்டர் விருமாண்டி” என்று ஆதினி கத்தியதில் தன் உணர்வு பெற்றவன், “சொல்லுங்க மேடம்” என்றான் பார்வையை திருப்பாமலே.

“நான் கூப்பிடுறது கூட கேட்காத அளவுக்கு உனக்கு என்ன யோசனை சொல்லு. ஓஹோ! இனி எந்த பொண்ணுக்கிட்ட வம்பு இழுக்கலாம்னு யோசிக்கிறியா” என்று நக்கலாக கேட்டாலும் அத்தனை கடுமை இருந்தது அவளின் பேச்சில்.

அதனை கேட்டவன் முகத்தில் எந்த ஒரு முக மாற்றங்களும் இல்லை. அவளை அவன் பார்க்கக்கூட விருப்பப்படவில்லை என்பது போல் அவனது செய்கை இருந்தது.

“மேடம் இப்போ நீங்க எங்க போகணும்னு  சொல்லுங்க, நான் கொண்டு போய் விடுறேன்” என்க.

“இப்போதாவது கேக்கணும்னு தோனுச்சே. ஆனாலும் போயும் போயும் உன் கூடலாம் அங்க போகணும்னு  எனக்கு இருக்கு பாரேன்” என்றவள், “சக்தி விநாயகர் கோயிலுக்கு போ” என்று உத்தரவிட்டாள்.

“சரிங்க மேடம்” என்றவன் வண்டியை கோயிலை நோக்கி ஓட்ட, அதன் பின் ஆதினி எதுவும் பேசாது அமைதியாக இருந்தாள்.

நேராக கோயிலில் கொண்டு வந்து விட்டவன் அமைதியாக இருக்க, “யாரு இங்க வந்து கதவை திறந்து விடுவா சொல்லு, இதுக்காக நான் தனியா ஒரு ஆள் வைக்கனுமோ” என்று எகத்தாளமாக கேட்க,

“சாரி மேடம்” என்று மன்னிப்பை வேண்டியவன் வேகமாக இறங்கி அவள் புறம் வந்து கதவை திறந்து விட்டான்.

“ஒழுங்கா வேலை செய்யிறதா இருந்தா இங்க வேலை செய்யலாம், இல்லைன்னா வேலைய விட்டு தூக்கிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தவள் கோயிலுக்குள் சென்றாள்.

அவன் ஆதினி பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டானே ஒழிய அவளை மீறி எதுவும் பேசவில்லை அமைதியாகவே அனைத்தையும் உள்வாங்கி கொண்டான்.

உள்ளே வந்த ஆதினிக்கு, அக்னியை போல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த மனம் சிறிது சிறிதாக குளிர்வது போல் இருந்தது.

விநாயகர் சன்னதி முன்பு நின்றவள், ஐயர் வரவும், “சாமி அர்ச்சனை பண்ணணும்” என்று சொல்ல,

“சொல்லுங்கோ யார் பேருக்கு அர்ச்சனை” என்றவாறே பூ பழம் என அனைத்தையும் பிரிக்க தொடங்கினார்.

“சாமி ஆதினி, ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம், தேவநங்கை, மகர ராசி, உத்ராட நட்சத்திரம், அப்புறம் சாமி பேருக்கு” என்க.

அவர் அர்ச்சனை செய்ய தொடங்கிய நொடி கண்ணை இறுக மூடி சாமியிடம் முறையிட்டாள்.

“சாமி எங்க வீட்ல இருக்கிறவங்களோட யோசனையை என்னால மாத்த முடியும்னு தோனலை. எனக்கு எப்படி நங்கை அத்தையோட கஷ்டத்தை தீக்குறதுன்னு சுத்தமா தெரியலை சாமி. மனசு ஒரு மாதிரி கஷ்டமாவே இருக்கு. நீங்கதான் எப்படியாவது அவங்களை அவங்களோட கார்காரரோட சேர்த்து வைக்கணும் சாமி. அதுக்கான வழியை நீங்கதான்  எனக்கு உருவாக்கி கொடுக்கணும்” என்று மனமுருகி வேண்டுதல் வைத்து கண்ணை திறக்க, அங்கே மூன்று முறை மணி அடித்தது. கண்ணை திருப்பி மணி அடித்த இடத்தை பார்த்தவளின் முன்பு மிஸ்டர் விருமாண்டியான அவன் நின்றிருந்தான்.

அத்தனை நொடிகள் இருந்த அமைதி சென்று மீண்டும் மனதில் அனல் அதிகரிக்க தொடங்கியது. அதன் பின் எதுவும் பேசாது அமைதியாக விபூதியை வாங்கி வைத்தவள் சன்னதியை சுற்றி வந்தாள். சிறிது நேரத்திலே கிளம்பி வெளியே வந்தவள் பின்னே அவனும் ஓடி வந்தான்.

“நீ எதுக்கு உள்ள வந்த, உன்ன மாதிரி ஆளுங்க உள்ள வரதே பெரும் பாவம்” என்று வார்த்தையால் அவனை காயம் கொள்ள செய்ய,

“மேடம் உங்க மொபைல் ரிங் ஆகிட்டே இருந்துச்சி, அதான் எடுத்துட்டு வந்தேன்” என்றான் பணிவான‌ குரலில்.

அதில் எரிச்சலுற்றவள் அவனிடமிருந்து தன் போனை பறித்தவள், வண்டியை துடைக்க இருக்கும் துணியை கொண்டு துடைத்தவள் அதன் பின்பே அதனை உபயோகப்படுத்தினாள்.

அவளின் ஒவ்வொரு செயலும் எதிரில் இருப்பரின் மனதை நோகடிக்க செய்யும். ஆனால் அவள் எதிரில் இருந்த மிஸ்டர் விருமாண்டியோ சாந்த முகத்துடன் புன்னகையோடு நின்றிருந்தான்.

“சரி போய் வண்டியை எடு” என்று உத்தரவிட,

கதவை திறந்து விட்டு ஏறுமாறு சொல்ல, அவள் ஏறியவுடன் வண்டியை கிளப்பினான்.

***

சென்னையில்…

விபுனன் அட்வெர்ட்டைஸ்மெண்ட் யூனிட் மற்றும் மாலையும் அவனே பார்த்துக்கொள்ளும் படியாகி வந்து விட, தன் நண்பனுக்காக அவனும் இரண்டையும் ஒற்றையாளாய் இருந்து பார்க்கத் தொடங்கினான்.

வசீகரன் வீட்டை விட்டு சென்ற அன்றில் இருந்தே பாரிவேந்தர் எதுவும் செய்ய பிடிக்காமல் அறைக்குள்ளே அடைந்து கொண்டார். அவருக்கு இப்போது மகனை நினைத்து கவலையாக இருந்தது. அவனின் ஒவ்வொரு சொல்லும் அவரை இடி போல் தாக்கி இருந்தது.

அவரின் கண்ணம்மாவுக்கு செய்த சத்தியத்தை மீறியதை நினைத்தே உள்ளுக்குள் மருகிபோனார் என்றால் வசியின் ஒவ்வொரு சொல்லும் அவரை உயிரோடு கொன்றது.

உண்மை எதுவும் தெரியாத நிலையிலே வசியின் நடவடிக்கை இவ்வாறு இருக்கும்போது உண்மை தெரிந்த பின் அவனுடைய செயல்கள் எப்படி இருக்கும் என்று நினைக்க நினைக்க வெடவெடத்து போனார்.

எதற்காக இப்படி ஒரு கஷ்டமான நிலை, தாயையும் பிள்ளையையும் பிரித்து வைத்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதபடி இத்தனை வருடங்கள் பிரித்து வைத்தது எதற்காக? தான் மட்டும் இல்லையெனில் இவ்விரு உயிர்களின் நிலை என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும் போதே கண்கள் கலங்கியது. இவர்கள் வாழ்வில் இந்த நிலை ஏன் வந்தது என்று எண்ணியே நொந்து போனார். காலம் அதற்கான தீர்வை விரைவில் கொடுக்கவுள்ளது அதற்கேற்பதான் இத்தனை கஷ்டங்களும்.

எப்போதும் தன் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கும் கண்ணம்மாவின் புகைப்படம் இப்போது இல்லாமல் போக அந்த பெரிய வீட்டில் தனிமையை உணர்ந்தார்.

அவரின் தனிமையை உணர்ந்தோ உணராமலோ அங்கே விபுனன் வருகை தந்திருந்தான்.

“அப்பா… அப்பா” என்று அழைத்தபடி உள்ளே வந்தான் விபு.

அவனின் குரல் கேட்டு வெளியே வந்த பாரிவேந்தரை கண்ட விபுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

தான் தினமும் பார்த்து வியப்படைந்த மனிதரா இவர் என்ற நிலையில் இருந்தார் பாரிவேந்தர்.

இந்த ஒரு மாதத்தில், பார்க்கவே பல நாள் உண்ணாமல் உறங்காமல் இருந்தது போல் முகமெல்லாம் சுருங்கி போய் கருவளையம் வந்து எப்போதும் ட்ரிம் செய்து அழகாக வைத்திருக்கும் தாடி அடர்ந்து வளர்ந்து ஆளையே மறைத்திருந்தது.

அவரை பார்த்ததும், வசி தன்னிடம் பேசிய போது தந்தையை பார்த்துக்கொள்ளும் படி கிட்டத்தட்ட கட்டளையிட்டதை எண்ணி இவர்களின் பாசப்பிணைப்பை கண்டு வியந்துதான்  போனான் விபுனன்.

“வாடா விபு” என்று புன்னகையுடன் வரவேற்றார்.

“என்ன அப்பா நீங்க? ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா?” என்று கவலையுடன் கேட்க,

“சாப்பிட்டு என்ன ஆக போகுது சொல்லு. எனக்காக இங்க யாரு இருக்கான்னு நான் சாப்பிட்டு தெம்பா இருக்கிறதுக்கு” என்று விரக்தியுடன் பதில் சொன்னார்.

“என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்களுக்காக நாங்க எல்லாம் இல்லையா” என்று சிறு கோபத்துடன் கேட்க,

“எல்லாம் இருக்கீங்க தான்” என்றவர் விரக்தியாக புன்னகைத்தார்.

“என்ன, அவன் உன்கிட்ட பேசி என்னை பாத்துட்டு நலம் விசாரிச்சிட்டு வர சொன்னானா” என்றார் கோபத்தை அடக்கியவாறே.

“அப்படிலாம் இல்லை பா” என்று இழுக்க,

“டேய்! நான் உன் ஃப்ரெண்டோட அப்பன்டா. எனக்கு தெரியாதா அவன பத்தி. உனக்கு இப்போ இருக்கிற வேலைல நீ இங்க வந்து நலம் விசாரிக்க கூட டைம் இருக்காது. அத்தனை வேலையையும் விட்டு என்னை பாத்துட்டு போலாம்னு வந்துருக்க. அப்படினாலே அவன் சொல்லிதான்  வந்துருப்பன்னு என்னால கெஸ் கூட பண்ண முடியாதா என்ன” என்று புருவம் உயர்த்தி கேட்டிட,

‘அய்யோ இவர யாரு இவ்வளோ ஜீனியஸா இருக்க சொன்னது’ என்று மனதில் நினைத்தவன் வெளியில், ”அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பா” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.

“சரிடா… சரிடா ரொம்ப நடிக்காத பார்க்க சகிக்கல” என்று அவன் தோளில் அடி வைத்தவர், “என்ன சாப்பிடுற சொல்லு, இன்னைக்கு நான் சமைச்சி தரேன்” என்றார்.

‘ஆமா அடிக்கிறதெல்லாம் அடிச்சிட்டு சாப்பிட என்ன வேணும்னு கேக்குறத பாரு. எல்லா படத்திலையும் சாப்பாடு போட்டுதான்  அடிப்பாங்க. ஆனா இங்க மட்டும் அடிச்சிட்டு சோறு போடுறாங்க. இந்த குடும்பத்த என்ன மாதிரி டிசைன் பண்ணாரோ இந்த‌ கடவுள்’ என்று மனதினுள் புலம்பியவன் திடீரென, “அம்மாஆ” என்று கத்தினான்.

அவனை நறுக்கென்று கிள்ளிய பாரி, ”அடேய்! விபு என்னத்த இப்படி யோசனை பண்ணிகிட்டு இருக்க” என்க.

“ஹான் ஏன் சுரக்காய்க்கு உப்பிலைன்னு யோச்சிட்டு இருந்தேன்” என்றான் படக்கென்று. அதனை கேட்ட பாரிவேந்தர் ஒரு நொடி உறுத்து பார்த்தவர் அதன்பின் வாய் விட்டு சிரித்தார்.

அதனை பார்த்த விபுவிற்கும் சந்தோஷமாகவே இருந்தது. இவை அனைத்தையும் மொபைல் வழி கேட்டுக்கொண்டிருந்த வசீகரனுக்கும் நிம்மதியாக இருந்தது.

பின் பாரி சமையல் செய்ய, விபு அவருக்கு உதவி செய்த படியே அலுவலக வேலையை பற்றி கூறிக் கொண்டு இருந்தான். அனைத்தையும் கேட்டுக்கொண்டவர் அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல், “சரிடா நாளைல இருந்து நானும் மால்க்கு வரேன்” என்றார்.

சிறிது நேரத்திற்கு பின் உணவு உண்டு விட்டு கிளம்பினான். நேராக வீட்டிற்கு வந்த விபு, உடனே வசிக்கு அழைப்பு விடுத்தான்.

எடுத்த உடனே, ”மச்சான் ரொம்ப தேங்க்ஸ்டா” என்றான் கண்ணீர் மல்க.

“மச்சான் வசி அவரு எனக்கும் அப்பாதான்டா. இதுக்கு போய் நன்றிலாம் சொல்லி என்னைய அன்னியமாக்குற பாரேன்” என்று கோபித்துக் கொள்ள,

“ஹாஹாஹா” என்று சிரித்தவன், “இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்க.

“போடா டேய்” என்று முறுக்கிக் கொண்டான் விபுனன்.

“ஜோக்ஸ் அபார்ட் மச்சி, நீ அங்க இருக்க போய்தான் என்னால இங்க கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியுது. நீ மட்டும் இல்லன்னா நினைக்கவே முடியலடா. அதுக்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் சொன்னா பத்தவே பத்தாதுடா” என்றான் உணர்ச்சி பூர்வமாக.

“போதும் நிறுத்து. என்னோட காது வலிக்குது சரியா” என்றவன், “நீ போன காரியம் எப்படி இருக்கு. அம்மாவ கண்டுபிடிச்சிட்டியா அவங்க கிட்ட பேசிட்டியா, அம்மா என்ன சொல்றாங்க உன் கூட வர சம்மதிச்சிட்டாங்களா?” என்று கேள்வி கணைகளை அடுக்கிக்கொண்டே செல்ல,

“போதும் போதும் கொஞ்சம் நிறுத்துடாசாமி, இவ்ளோ கேள்வி கேக்குற” என்றவன் இடைவெளி விட்டு, “நான் அம்மாவ பாத்துட்டேன்டா. ஆனா அவங்க கிட்ட இப்போ என்னால பேச முடியாதுடா. இங்க இருக்கிற சிச்சுவேஷனே வேறடா. இங்க இருக்கிற எல்லாரும் அம்மாவ ஒதுக்கி வைச்சிருக்காங்கடா. அவங்களுக்கு சப்போட்டா கூட இந்த ஊருல யாரும் இல்ல, ஒருத்தவங்கள தவிர” என்றான் வருத்தமான குரலில்.

“என்ன சொல்ற யாரு அவங்க?” என்க.

“அவங்க பேரு ஆதினிடா” என்றான்.

“ஹோ சரிடா, சீக்கிரமாவே அவங்கள இங்க கூட்டிட்டு வந்துடுடா பாவம் அப்பா”

“சரி நான் அப்புறம் பேசுறேன்டா. எனக்கு இங்க வேலை இருக்கு” என்று அழைப்பேசியை வைத்து விட்டான்.

***

“தம்பி நாளைக்கு அடுத்த ஏலம் எடுக்க போகணும். அதுனால நாளைக்கு கொஞ்சம் காலைல சீக்கிரமா வந்துரு” என்று சதாசிவம் அவனிடம் சொல்ல,

“சரிங்க சார் நான் சீக்கிரமே வந்தறேன்” என்று கைகளைக் கட்டியப்படி பணிவுடன் சொன்னான் அவன்.

“சரிப்பா  இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

இதனை மேலிருந்து எட்டி பார்த்த ஆதினியின் மனம், ‘எப்படியாவது இவனை வேலையை விட்டு அனுப்பியே ஆகணுமே’ என்று சிந்திக்க தொடங்கியது.

வீட்டை விட்டு வெளியே வந்தவன், நேராக ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த ஒரு திட்டில் படுத்துக்கொண்டான்.

இந்த ஊருக்கு வந்த இந்த ஒருவார காலத்தில் எங்கு தங்குவது என்று தெரியாத நிலையில் இந்த கோயிலில் அடைக்கலம் ஆனான் அவன்.

தந்தையின் நலனிற்காக வேலையை தேடி வந்தவனுக்கு, அந்த ஊர் தலைவரான சதாசிவம் கண்ணில் பட, அவரிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என்று அவரை நோக்கி சென்றவனுக்கு அப்போதுதான்  அவரின் கார் பஞ்சர் ஆகியிருப்பது தெரிய வந்தது.

உடனே அவரிடம் சென்று, “சார் கார் பஞ்சரா இருக்கு, நான் வேணா சரி பண்ணி தரட்டுமா சார்” என்று கேட்க,

அந்த புதியவனை உற்று பார்த்தவர், “சரிப்பா  கொஞ்சம் சீக்கிரமா பண்ணி கொடேன், அவசர வேலையா போகணும் பா” என்று தன் அவசரத்தை அவனிடம் கூறியவர் அவனிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு வண்டியின் மற்றொரு புறம் நின்றுக்கொண்டார்.

அந்த புதியவனும் வேகமாக டயரை மாற்றி ஸ்பேர் டயரை தூக்கி மாற்றினான். பதினைந்து நிமிடங்களில் வேலையை முடித்தவன், “சார் வண்டி ரெடியாகிடுச்சி. இப்போ நீங்க போகலாம் சார்” என்று சொல்ல,

“சரி பா. நீ இந்த ஊருக்கு புதுசா, இதுக்கு முன்னாடி நான் உன்ன இந்த ஊருல பாத்தது இல்லையே?” என்று தன்மையாக கேட்க,

“ஆமாங்க சார், நான் இந்த ஊருக்கு புதுசுதான்  சார். இந்த ஊருல ஏதாவது ஒரு வேலை கிடைக்குமான்னு பார்க்கதான்  வந்தேன் சார்” என்றான் கையை கட்டி பணிவான குரலில்.

“ஹோ! வேலை ஏதும் கிடைச்சுதா” 

“இல்லை சார்” என்க, சிறிது நேரம் யோசித்தவர், “உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா?” என்று கேள்வியாய் நோக்க,

“நல்லா ஓட்டுவேன் சார்” என்றான் புத்துணர்ச்சியான குரலில்.

“அப்போ சரி, நீ என்கிட்டயே வேலைக்கு வரலாம். உன்ன பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்கு. ஆனாலும் உனக்கு என்ன கஷ்டம்னு தெரியல நீ பொழப்பு தேடி இந்த ஊருக்கு வந்துருக்க. அதுக்காகதான்  வேலை தரேன். போயிட்டு நாளைக்கு வா” என்று கரிசனத்துடன் சொன்னார்.

“ரொம்ப நன்றிங்க சார்” என்றவன், “சார் நாளைல இருந்து வேலைக்கு வரதுக்கு இன்னைல இருந்தே வரனே சார்” என்க.

“அப்போ சரி” என்ற சதாசிவம் கார் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு, எங்கு செல்ல வேண்டும் சொல்லி முன் இருக்கையில் அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

அன்றையிலிருந்து அவன் அவருக்கு ட்ரைவராக வேலையில் இருக்கிறான். தெரிந்தோ தெரியாமலோ இவனுடன் ஆதினிக்கு நடந்த முதல் சந்திப்பு மோசமாக அமைந்ததால் அவனை கண்டதும் மேலும் அவன் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டு இவ்வாறு அவனை சீண்டி கொண்டு இருக்கிறாள்.

இவை அனைத்தையும் நினைத்த படியே உறங்கியவனை குளிர் என்ற ஒன்று அவனை தூங்க விடாமல் கொடுமை செய்து படுத்தி வைக்க, நடுங்கிய படியே உறங்கியவனை தீடிரென்று யாரோ எழுப்ப, திடுக்கிட்டு எழுந்த அவனின் கண்களுக்குத் தெய்வம் போன்ற தோற்றம் உடைய ஒரு பெண்மணி மங்கலாக தெரிந்தார்.

“தம்பி தம்பி” என்று அவனை உலுக்க, சுயநினைவிற்கு வந்தவன், எழுப்பியவரையே கண் கொட்டாமல் பார்த்தான்.

“யாருப்பாநீ? எதுக்கு இந்த குளிருல இங்க வந்து படுத்திருக்க சொல்லு?” என்று பாசத்துடனே கேட்டார்.

“அது வந்துமா…” என்று இழுத்தவன், “நான் ஊருக்கு புதுசுமா. இங்க இப்போ ஒருவாரமா சதாசிவம் சார் கிட்டதான்ம்மா வேலை பார்க்குறேன்” என்றான்.

மா என்று சொல்லி பேசிய அவனை கண் கலங்க பார்த்தவர், அவன் பார்க்கும் முன்பே சுதாரித்துக் கொண்டு துடைத்து விட்டு, “சரி தம்பி அதுக்கு எதுக்கு இங்க படுத்து இருக்கிற சொல்லு. வீட்டுக்கு போய் இருக்கலாமே” என்று பரிவுடன் கேட்டார்.

“இல்லம்மா எனக்கு இங்க தங்க எந்த ஒரு வீடும் இல்லமா. அதான் இங்க படுத்திருக்கேன்” என்று கவலையுடன் சொன்னான்.

“சரிப்பா தம்பி இங்க என்னோட வீடு பக்கத்துலதான்  இருக்கு. அங்க வந்து தங்கிக்கோ பா” என்று மனிதாபிமானத்துடன் சொன்னார்.

“பரவாயில்லைமா” என்று தயக்கத்துடன் பதில் கூற,

“நீ என்னைய அம்மான்னு சொல்லி கூப்பிடுற‌ அப்புறம் என்ன தயக்கம் உனக்கு. என்னைய நீ அம்மான்னு நினைச்சி கூப்பிட்டா வாப்பா வீட்டுக்கு போலாம்” என்றார்.

அவரின் பதிலில் புன்னகைத்தவன், “சரிம்மா நான் உங்களோட வரேன். ஆனா மாசம் மாசம் பணம் கொடுத்திடுவேன் சரிங்களா” என்க.

“சரி தம்பி” என்று புன்னகைத்தவர், “ஒரு நிமிஷம் இருப்பா நான் சாமி கும்பிட்டு வந்தறேன், நாம ஒன்னா சேர்ந்து வீட்டுக்கு போலாம்” என்று சொல்லி சாமி கும்பிட சென்றார்.

சாமி கும்பிட்டு வந்த பெண்மணி, அவனுடன் சேர்ந்து அவர் வீட்டிற்கு சென்றார்.

போகும் வழியில் அந்த பெண்மணி, “உன்னோட பேரு என்ன தம்பி” என்று கேட்க,

ஒரு புன்னகையை கொடுத்தவன், “என்னோட பேரு வசீகரன் மா” என்றான். அந்த புன்னகையில் சந்தோஷத்தோடு கூடிய வலியும் அவன் கண்ணில் தெரிந்தது.

***

Leave a Reply

error: Content is protected !!