நேசமுரண்கள் – 5

நேசமுரண்கள் – 5

நேசமுரண்கள் – 5

உன் நேசத்தை

பொக்கிஷம் என்று

அறியாமல்…

இழந்துவிட்டேன் பெண்ணே!

மீண்டும் அதை பெறாமல்

இருந்து விடுவேனோ!

இல்லை…

இறந்து விடுவேனோ!

விஜயவர்மனிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்து கட்டிலில் விழுந்த அவன் மனைவியின் உள்ளமோ அழுகையில் விம்மி வெடித்தது.

‘விஜய்! எவ்வளவு ஈசியா, நம்ம ரூமுக்கு வரச் சொல்லிட்டீங்க! உங்களால எப்படி முடிஞ்சுச்சு? உங்களோட அந்த வார்த்தையை கூட என்னால ஜீரணிக்க முடியல… எப்பவுமே உங்களுக்கு, என்மேல உணர்வுகளைத் தாண்டிய பூரண அன்பு இருந்ததில்லை.

உங்களோட தேவை என்னவோ அது மட்டும்தான் உங்களுக்கு பிரதானம்… அப்பவும், இப்பவும் மட்டுமில்ல… எப்பவுமே உங்களுக்கு பெரிசா தெரியுது.

உங்க உணர்ச்சிகளுக்கு கொடுக்குற மதிப்புல, ஒரு சதவிகிதம் கூட, என்னோட உணர்வுகளுக்கு இதுநாள் வரைக்கும் நீங்க கொடுத்ததில்ல… உங்க அலட்சியத்தால எனக்குள்ள ஏற்படுற வலியும் வேதனையும் உங்களை இதுநாள் வரைக்கும் கொஞ்சமும் அசைச்சு பார்க்கலையே?

சேர்ந்து வாழ்ந்த போது இருந்த அதே அலட்சியம், இத்தனை வருட பிரிவுக்கு பிறகு, இப்பவும் தொடரத்தானே செய்யுது? நீங்க கொஞ்சம்கூட மாறவே இல்லை….’ என மனதோடு மருகியவளுக்கு தன் மீதான கழிவிரக்கமே மேலோங்கி நிற்க, பெரிதும் மனமுடைந்து போனாள்.

கல்யாணம், குடும்பம் என்பதெல்லாம் பெண்ணை வதைக்கச் செய்வதுதானா? எல்லார் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்குமோ! நான்தான் தப்பா… எனக்குத் தெரியலடா… நான் உன்னை புரிஞ்சுகிட்டதுல குறையா? இல்ல… உன்னை, என் மனசு ஏத்துக்கிட்டத, நீ அறிஞ்சுக்காதது குறையா? எதையும் இப்போ என்னால உணர முடியல… நீ சொல்ற மாதிரி நான் ஒரு அடிமுட்டாள் தான் போல’ புலம்பியவளின் மனம் முழுவதும் வேதனையில் சாரல்கள்…

இதுநாள் வரையில் கணவனிடம் ஏமாற்ற புயல்களை மட்டுமே பரிசாக பெற்றுக் கொண்டவளின் ஆதங்கம் எல்லாம், ஆற்றாமைக் கேள்விகளாக வெடிக்கத் தொடங்கியிருந்தது.

விடை தெரியாத கேள்விகளின் பயணம், திருமணத்திற்கு முன்பான காலங்களை மீட்டுச் செல்ல, வினோதாவின் பயணம் நடந்தவற்றை நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.

*****************

தஞ்சை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஆதவன் – சேர்மக்கனி இவர்களின் செல்ல மகள் தான் வினோதா.

கிராமத்திலே பிறந்து வளர்ந்து இருந்தாலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் எப்பொழுதும் அவர்கள் குடும்பத்தில் உண்டு.

வினோதாவின் அண்ணன் அரவிந்தன், விவசாயம் தொடர்பாக பட்டப்படிப்பு முடித்து இருந்த அதே சமயத்தில்… வினோவும் தனது விருப்பம் போல் விரும்பிய துறையில் கால்பதிக்க செய்திருந்தார் அவளின் தந்தை.

தனது வணிகம் தொடர்பான முதுநிலைப் படிப்பை டெல்லியில் முடித்துவிட்டு விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு பறந்து வந்திருந்தது, அதுவரை சுதந்திர வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அந்த சின்ன சிறிய பெண் சிட்டு.

அழகான நீர் நிறைந்த கரையில் ஆலமரம் படர்ந்து ஆற்றின் பாதி வரை தனது கிளைகளைப் பரப்பி தன் ஆளுமையை பறைசாற்றிக் கொண்டிருக்க.

அதன் படிக்கட்டில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் ஒருவித தீவிரத்துடன் ஆற்று நீரையே வெறித்து கொண்டிருந்தார்கள்

“ஏண்டி! பொழுதன்னைக்கும் நாமும்தான் இந்த ஆத்திலே குளிக்கிறோம். ஆனாலும், இவ அளவுக்கு நம்மளால மூச்சை புடிச்சிட்டு புள்ள இருக்க முடியல… சரியான ஹிப்போபொடமஸ்ஸா இருக்கிறா!”  என்று தோழிகளை புலம்ப விட்டு நீரின் அடியில் தவம் செய்யத் தொடங்கியிருந்தாள் வினோதா.

தன் போக்கில் நீரினுள் மூழ்கி இருந்தவள் பட்டென்று மூச்சு வாங்க வெளியே வர, சற்று முன்னர் தன் தூக்கம் கலைந்து எழுந்த கதிரவனின் காலை நேர ஒளி வினோதாவின் மெல்லிய மேனியின் மீது படர்ந்து பரவியது.

வயது பெண்களுக்கு உரிய அழகுடன் குறும்பு மிதக்கும் அழகிய நயனங்களுடன் பார்ப்பவர் மீண்டும் ஒரு முறை கண்களை அவள் மீது பதிக்கும் அளவிற்கு லட்சணமாக இருப்பவள்.

வெற்றிப் புன்னகை தவழ… முகம் மலர தனது சகாக்களை கண்டவள் மெல்ல வெளியே வரவும்.

“அடியேய் ஆத்தா! இப்பவாவது ஒரு வழியா வெளியே வந்தியே! முதல்ல மேலே ஏறி தண்ணியை விட்டு வெளியே வாடி… ஊர் உலகத்துல இல்லாத அதிசயமா டெல்லி வரைக்கும் போய் படிச்சிட்டு வந்தவளுக்கு, நம்ம ஊரு ஆத்து தண்ணி மேல என்ன ஆசையோ தெரியல? வந்த உடனேயே இதிலே கிடந்து ஊறுவா சீக்கிரம் வா… ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு மேலுக்கு வந்துச்சுன்னா, உன் அப்பத்தாளுக்கு என்னையால பதில் சொல் முடியாது அவ்வளவுதான்…” என்று வினோதவை பார்த்து உதட்டை சுளித்துக் கொண்டு, பதில் சொன்னாள் அவளின் தோழியும் அண்ணியுமான வருணி.

‘கட்டிக் கொடுத்த, கொஞ்ச நாளில் அவ்வளவு அமைதியாவா மாறிட்ட!’ மனதிற்குள் பூத்த நமட்டுச் சிரிப்புடன் தன் அண்ணியை பார்த்து அதிசயத்த வினோதா,

 “அப்படியே நீ! என் அப்பத்தாக்கு பயந்தவ தான், நம்பிட்டேன் போ… யாரு நீ! உன் மாமியாருக்கே பயப்பட மாட்ட…” என்று வஞ்சமாய் புகழ,

“நான் எதுக்கு பாவம் அவுகளுக்கு பயப்புட? அவுங்களே அப்புராணி! இன்னும் உங்க அப்பத்தா முன்னாடி ஒத்த வார்த்தை கூட பேச மாட்டாங்க… என் மாமியார அப்படி அரட்டி வச்சுருக்கு அந்த கிழவி… நீ, உன் அம்மா மாதிரி இல்லாம அந்த கிழவி மாதிரி இல்ல இருக்க, உன்ன போல ஒரு நாத்தனார் இருந்தா உலகம் தாங்காது… போடி பொடிமாஸ்!” என்று நொடித்து கொண்டாள்.

“ஏய்! அண்ணின்னு கூட பார்க்க மாட்டேன்… என்னைய பொடிமாஸ்ன்னு சொன்னா, உன்னை பவுடராக்கி, விபூதியா குடுத்துடுவேன் என் அண்ணன்கிட்ட…” என்று பொய்க் கோபமாக மிரட்டியபடி, அண்ணியின் கழுத்தை நெரிக்க வந்தவளின் கைகள், பின் ஆசையுடன் தோழியைக் கட்டிக்கொள்ள, வருணியின் முகம் தனது தோழியை கண்டு கனிந்து விட்டது.

ஒரே ஊரை சேர்ந்த ஒன்று விட்ட மாமன் மகளான வருணிகாவைத் தான், வினோதாவின் அண்ணன் அரவிந்தனுக்கு திருமணம் முடித்திருந்தனர்.

தங்கைக்கு பின்தான் திருமணம் என்று இருந்தவன். வருணிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன், விரும்பியவளை இழக்க முடியாமல் பல சண்டைகளை, தன் அப்பத்தாவிடம் போட்டு கெஞ்சிக் கூத்தாடி சமாதானம் செய்து மனம் முடித்திருக்க, அன்றிலிருந்து வருணிக்கும் வினோதாவின் பாட்டிக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

வினோவின் தாய் சேர்மக்கனி அமைதியே வடிவானவர், யாரையும் குறை சொல்ல தெரியாதவர், கணவன் மாமியார் என இருவரையும் அவர்களின் இயல்புடனே ஏற்றுக் கொண்டு உண்மையான அன்பு செலுத்த கூடியவர்.

கண்ணிற்கும் மனதிற்கும் பார்க்கப் பழக என நிம்மதியை தரும் தோற்றத்தை கொண்ட, மனம் திறந்த கிராமத்து பெண்மணி… தஞ்சையின் அருகே உள்ள ஒரு அழகிய சிறிய அந்த பகுதியையே தன் உலகமாக எண்ணி குடும்பத்தின் மறைமுக தூணாக விளங்குபவர்.

தன்னுடன் குளிக்க வந்தவர்கள் முன்னே நடக்க புடவையை அழகாக உடல் தெரியாமல் சுட்டி கொண்டு மெல்ல நடந்தனர் வருணியும், வினோவும்.

“விது! இந்த வாட்டி உன்னோட படிப்பு எல்லாம் முடிஞ்சிடுச்சு தானே… உங்க அண்ணா இந்த வருஷம் உனக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க, உன் மனசுல என்ன இருக்குடி, யாரையாவது விரும்புறியா?” என்றவள் கேள்வி சிறிது தயக்கத்துடன் வந்து விழுந்தது.

“என்னது கல்யாணமா!” என்று திகைத்தவள்.

முகத்தை பாவமாக வைத்து கொண்டு, “ஒரு பச்ச புள்ளை நான்! எனக்கு போய்… இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்லை… அட பாவிகளா இது மட்டும் நடந்தா, சிங்கம் மாதிரி சிங்கிள் ஸ்டேடஸ் போட்டு சுத்துற என் கெத்து என்ன ஆகும்?

இந்த ஊரு குட்டி பசங்க எல்லாம் அக்கானு அழகா கூப்புடுற என்னை, உன்னைய கூப்புடுற மாதிரி, ஆன்ட்டினு கன்வோர்ட் பண்ணிருவாங்க… நோ.. நெவர்” என்று அடுக்கி கொண்டே போக, அதில் கடுப்பான வருணி நறுக்கென்று ஒரு கொட்டை தனது நாத்திக்கு பரிசாக தந்தாள்.

“என்னைய விட ரெண்டு வயசு அதிகம் உனக்கு… எங்க கல்யாணம் முன்னால் நடந்த ஒரு காரணத்துக்கு நீ என்னய ஆன்ட்டியா ஆக்க பாக்குற… ஒழுங்கா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தும் வழியை பாரு” என்று பெரிய மனுஷி போல தோரணையை கூறியவள்.

“மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வரன் வந்து இருக்கு. உங்க அண்ணனுக்கு, அத உனக்கு முடிச்சு போடணும்னு எண்ணம்… அதோட உனக்கு முன்னமே கண்ணாலம் கட்டிக்கிட்டது அவுகளுக்கும் வருத்தம்தான் விது”. என கணவனின் மனவருத்தத்தை சுட்டிக் காட்டினாள் வருணி.

“கொஞ்சம் நீயும் சூழ்நிலையை புரிஞ்சுக்க பாருடா… அதுக்காக உன் விருப்பத்துக்கு முக்கியத்துவம் இல்லைன்னு நினைக்காதே! உனக்கு மாப்பிள்ளை புடிச்சாதான் எல்லாமே… கொஞ்சம் யோசிடி…” என்றவள் தவிப்புடன் எதிரில் இருப்பவள் முகத்தை பார்க்க.

அதுவரை திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாத இருந்தவள் முதல்முறை அதைப்பற்றி சிந்திக்க தொடங்கினாள்.

ஆதவன் அன்று மிகுந்த பரபரப்புடன் இருந்தார்… அவரது செல்ல மகளுக்கு ஏற்ற வகையில் நல்ல வரன் அமைய வேண்டிய இயல்பான தந்தையின் நிலை அது.

இதுவரை அவருக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்த வினோதாவின் சம்மதம் பெற்ற பிறகும் அவர் காலம் தாழ்த்த விரும்பாமல் பெண் பார்க்க மாப்பிள்ளையின் வீட்டினரை அந்த வாரமே வரவழைத்து விட்டார்.

தங்கைக்கான மாப்பிள்ளையை சல்லடை போட்டு சலித்துதான் தேடி எடுத்து இருந்தான் அரவிந்தன்.

எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாத, அவர்களது தூரத்து சொந்தத்தில், கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு படித்த அழகான மணமகனை தேர்ந்தெடுப்பதற்கு ஏறக்குறைய பத்து வரன்களைத் தட்டி விட்டவனின் இறுதியான தேர்வுதான் விஜயவர்மன்.

படிப்பு… அழகு… வசதி என யோசித்தவன், வர்மனின் மனதை பற்றி யோசித்திருக்க வேண்டுமோ? எதிர்காலத்தில் நடப்பதை அத்தனை எளிதாக மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது.

விஜயவர்மனின் தந்தை விஜயேந்திரன் சர்க்கரை ஆலை மற்றும் விவசாயத்தை தன் தொழிலாக கொண்டவர்.

ஊருக்குள் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வருபவர். இன்றளவும் தனது குடும்பத்தை மிகுந்த கட்டுப்பாடுடன் வழிநடத்தி செல்லும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர்.

வர்மனின் தாய் அருளாசினி (தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள்) பெயருக்கு ஏற்றது போல் மங்களகரமான தோற்றத்தில் இருப்பவர்… வீட்டில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் தன் ஆட்சியை செலுத்துபவர்.

ஒற்றை மகனான வர்மனை தங்கள் கூட்டுக்குள் அடைக்காமல் அவன் எண்ணம் போல விரும்பிய படிப்பான சட்டத்தை படிக்க விட்டனர்.

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு படிப்பு, கல்லூரி என அனைத்தும் நகரத்தில் அமைந்துவிட… ஏனோ பழைய வாழ்க்கை முறைக்கு செல்ல துளிகூட விருப்பம் இல்லை அவனிற்கு.

திருமணம், மனைவி என எந்தவித தளைகளும் இல்லாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பியவனுக்கு அது அத்தனை எளிது அல்ல என்று புரிய வைத்தனர் அவனின் பெற்றோர்கள்.

அவன் விரும்பிய எதையும் அவனுக்கு தடை சொல்லாதவர்கள்.

வாழ்க்கையின் அடிப்படை மற்றும் முக்கிய நிகழ்வான திருமணத்தில் அவனது கருத்தை கொஞ்சம் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

“இப்ப என்ன அவசரம் கல்யாணத்துக்கு… கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம் அப்படினு நினைச்சேன்…” என்று சற்றே குரலை உயர்த்தி அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தவனின் சப்தம் விஜயேந்தரின் காலடி ஓசையில் நின்றுவிட்டது.

மகனின் அமைதிக்கான காரணத்தை உணர்ந்துகொண்ட அருளாசினின் இதழ்கள் கேலியாய் வளைந்தன.

“என்ன தம்பி சொல்ற? சரியா காதுல விழுகலை… வேலையா இருந்தேன் இல்ல…” என்று இழுத்து நாடக பாணியில் சொல்லியவாறு,

“மறுபடியும் சத்தமா சொல்லுப்பா” என்றார் எதுவும் அறியாதது போல…

“ஒன்னும் தேவை இல்லை…” என்று முணுமுணுத்தவன் அமைதியாக சமையல் அறைக்குள் இருந்து, வெளியே வந்து முற்றத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

சிறு பிள்ளை போல முகத்தை தொங்கப் போட்டு சலித்து கொண்டு செல்லும் மகனை கண்டு, அவருக்கு வருத்தமாக இருந்தாலும் மகனை அவன் போக்கில் விட பெற்றவருக்கு விருப்பமில்லை.

“உன் மகன் என்ன சொல்றான் அருள்?” என்று ஹாலில் இருந்து பேசியவரின் குரல் கணீரென்று அடுப்படி வரை ஒலிக்க… செம்பு நிறைய நீரை எடுத்துக்கொண்டு அவரின் அருகே சென்றவர் அதனை கணவனின் கைகளில் தந்து விட்டு,

“கல்யாணம் பத்தி தான் மாமா!” என்றவர், “அவனிடம் பேசுங்கள்…” என்று கூறி முற்றத்தை பார்த்தார்.

அருளில் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்டவர், “விடுமா! எல்லாம் சரி ஆகிடும், எல்லாதையும் தன் இஷ்டம் போல செய்ய நினைகிறவன், மொத முறையா அதுல இருந்து முரண்பட்டு, நம்மகிட்ட மல்லுக்கு நிக்கிற ஆதங்கம் தான் இது எல்லாம்…” என மகனை விட்டுக்கொடுக்காமல், சாதகமாவே பேசினார்.

விஜயவர்மனால் ஓரளவிற்கு மேல் எதிர்ப்பை காட்ட முடியாமல் போய்விட, அவனது விருப்பத்தை மீறியே மிகச்சிறப்பாகவே திருமணத்தை முடித்து வைத்தனர் அவனைப் பெற்றவர்கள்.

அவனது அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு அவனின் வாழ்க்கையில் தனது அடிகளை எடுத்து வைத்தாள் வினோதா.

பருவ வயதிற்கு உரிய அழகுடன், குறும்பு விழிகளுடன்… அதில் அவன்மீது கடலளவு விருப்பத்தை காண்பித்த அந்த இளம் பெண்ணை தன்னிடமிருந்து விலக்கி வைக்க அவனால் முடியவில்லை.

மனைவி என்பவள் இல்லாமல் இன்பமாய் இருந்தவனால் அவள் வந்தபோது இருந்தும் இல்லை என்று மகிழ்வாய் இருக்க இயலவில்லை.

அவனின் வயதும் அவளின் இளமையும் அதற்கு மிகப் பெரிய தடையாக இருக்க… மன்மதனின் மலர் அம்புகள் அதன் வேலையை அழகாக செய்து முடித்தது.

அந்த அழகியல் எல்லாம் வினோதாவை பொறுத்தவரை அன்பின் வெளிப்பாடாக மனம் நிறைந்து காதலோடு கழிந்த நிமிடங்கள். விஜயவர்மனுக்கோ இளமையின் உச்சமாய்… உடல் தேவையின் காரணமாக நடந்த ஒரு சாதாரண நிகழ்வாகதான் மனதில் பதிந்தது.

அதன் பின் நடந்த நிகழ்வுகளில் அவள் தன்னை, தன்னுடைய அன்பை பெற வேண்டி நடந்தது… அவனது பிடிப்பற்ற போக்கு… பிரிவு என்று அனைத்தும் கண்முன்னே தோன்றவும் இன்றைய தன் நிலையை நியாயம் தான் என்று எண்ணியவன் எதையும் செய்ய முடியாமல் அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தான்.

மனைவி தன்னை தவிர்த்து விட்டு சென்ற வழியையே, வலி நிறைந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனமும் வேதனையுடன் கடந்த காலத்தைதான் அசைபோட்டுக் கொண்டிருந்தது.  

ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்று மனதளவில் குறைபட்டுக் கொண்டவர்களின் எண்ணங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் விசித்திரத்தை எந்த பெயரில் அழைத்து எதில் சேர்ப்பது? காலம் தான் பதில் சொல்லவேண்டும். இருவரின் நினைவுகளுடன் பயணம் மேலும் தொடரும்.

 

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை…

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை…

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி…

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..!

 

 

Leave a Reply

error: Content is protected !!