பூந்தளிர் ஆட… 10

பூந்தளிர் ஆட… 10

பூந்தளிர்-10

அடுத்து வந்த ஆறு மாதங்களையும் புதுமணத்  தம்பதிகளின் ஏக்கங்களோடு கடந்து வந்திருந்திருந்தனர் இருவரும்.

விடுமுறை நாட்களில் மதுரைக்கு வரும் கிருஷ்ணாவிற்கு ஏதாவது ஒரு வகையில் வெளி வேலைகள் அமைந்து கணவனின் அருகாமையை குறைத்தன.

குலதெய்வ வழிபாடு, இதர கோவில்களில் வேண்டுதல், உறவுகளில் விருந்தோம்பல் என வார இறுதிகள் எல்லாம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கடந்து செல்ல, காதல் பேசிய தருணங்கள் மிகச் சொற்பங்களாகிப் போயின.

அந்த வருட கல்வியாண்டு நிறைவு பெறவும், சுமதிக்கு இரண்டாவது வளைகாப்பு நடைபெறவும் நாள் சரியாக இருக்க, அப்பொழுதில் இருந்தே தனது ஜாகையை மதுரைக்கு மாற்றிக் கொண்டாள் கிருஷ்ணா.

“புள்ளை பேறு, பிரசவம்னு பாக்குற வீட்டுல வேலை ஏகத்துக்கும் இறுக்கிப் பிடிக்கும். எதுக்கும் மொகம் சுழிக்காம கேட்டுச் செய்ய கத்துக்கோ அச்சும்மா…” விசாலம் பாட்டியின் அறிவுரை மீண்டும் ஆரம்பமாக, ‘ஐயோ’ என தலையில் கைவைத்துக் கொண்டாள் கிருஷ்ணா.

“உன் நாத்தி பிரசவத்துக்கு முன்ன ஹனிமூன் போயிட்டு வந்துடுங்கடி… இல்லன்னா அந்த சான்ஸ் கிடைக்காமலேயே போயிடும்.” கோமளவல்லி தனது யூகத்தை கூற, அதற்கும் முறைத்தாள்.  

“புகுந்த வீட்டுல மெயின் கோர்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இதெல்லாம் அனுபவிச்சு முடிச்சிடணும் அச்சு… இளஞ்ஜோடிகளோட முக்கியமான கடமைடி இது!”

“என்னை பெரிய குடும்பஸ்திரின்னு சொல்லிக் காட்டுறியோ?” மூக்கு விடைத்துக் கொண்டு கிருஷ்ணா கேட்க,

“ஒருநாள் புகுந்த வீட்டுல உள்ளவங்களுக்கு சோறாக்கி போடு… உன் இஸ்திரி பொட்டி லட்சணம் அதுல தெரிஞ்சிடும்!” சலிக்காமல் நக்கலடித்தாள் கோமளவல்லி.

“அங்கே டைரக்ஷன் பண்றதுதான் முக்கியம். அதை நான் சரியா செஞ்சிருவேனாக்கும்! பாட்டியும் அத்தையும் இருக்கவே இருக்காங்க… அழகா சொல்லி குடுப்பாங்க…” இலகுவாய் கூறினாள் கிருஷ்ணா.

வாரத்தில் ஒருமுறை சந்தித்தாலும் பரிமளம், மனோன்மணியின் உணர்வுகளை அழகாய் உள்வாங்கிக் கொள்ளப் பழகி இருந்தாள் கிருஷ்ணா. கணவனைத் தான் அத்தனை எளிதில் கையில் பிடித்து விட முடியாது.

“இவேன் இத்தனை சுருக்குல கைக்கு அடங்கிட மாட்டான் ராசாத்தி! இவேன் பின்னாடியே சுத்தி நீ, இவேன் கழுத்துக்கு கத்தி வச்சாதான், உம் புருசன நேக்கா பிடிக்க முடியும்!” மனோன்மணியின் நையாண்டி பேச்சில் மனைவியை முறைத்துக் கொண்டே சென்று விடுவான் அரவிந்தன்.

சுமதியின் வளைகாப்பு முடிந்ததும் குடவுன் மற்றும் அவனது மசாலா தொழிற்சாலைக்கு கிருஷ்ணாவை அழைத்துக் சென்று காண்பித்தான். அவர்களது வீட்டின் பின்கட்டு வழியாகச் சென்றால் நடந்து விடும் தூரத்தில் குடவுன் வந்துவிடும். அதை ஒட்டியே மசாலாத் தயாரிப்பு தொழிற்சாலையும் அமைந்திருந்தது.

‘மாஸ் மசாலா…’ கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்ட பெரிய எழுத்துகள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலின் முன் பளபளத்தது. மூவாயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய இடம் மூன்றடுக்கு கட்டிடமாக பெரிதாக எழுப்பப் பட்டிருந்தது.

தானியங்களை சேமித்து வைப்பதை மூன்றாம் தளத்திலும், பொடிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு சீல் வைப்பது இரண்டாம் தளத்திலும், அரவை இயந்திரங்களும், பொடிகளை காற்றாட வைக்கும் வேலைகளும் முதல் தளத்தில் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன.

தானிய வகையறாக்களை சுத்தப்படுத்தி, புடைத்து, உலர்த்தி வறுக்கும் பெரிய அடுப்புகள் வாணலிகள் இன்னும் பிற உபகரணங்கள் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்தன.

சரக்குகளை ஸ்டாக் செய்து ஊர் ஊராக பிரித்து மார்க்கெட்டிற்கு அனுப்பும் தொடர்பணிகள் குடவுனில் நடந்து கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட அம்பத்தைந்து பொடி வகைகளும், பதினைந்து ஊறுகாய் வகைகளும், சில மருத்துவ மூலிகைப் பொடிகளின் தயாரிப்புகளையும் அங்கே ஒன்றாக பார்க்க முடிந்தது.

ஒரே நிறத்தில் ஓவர் ஜாக்கெட், ஸ்க்ரப்ஸ், கிளவுஸ் அணிந்த தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து நேர்த்தியாக வேலை செய்வதை பார்ப்பதற்கே அத்தனை அழகாய் இருந்தது.

தனது வயதையொத்த தொழிலாளர் மற்றும் சிறியவர்களை பெயர் சொல்லி அழைத்தும், பெரியவர்களை, ‘அக்கா, அண்ணா!’ என்ற முறையோடு அழைத்தும் அரவிந்தன் பேசிக் கொண்டிருந்தான்.

தொழிலாளர்கள் அனைவரும் அவனை, ‘மாஸ்டர்’ என்ற மதிப்போடு அழைத்தாலும் பேச்சில் மரியாதையோடு கலந்த கேலி வெளிப்பட்டது.

“இத்தன சுருக்கா அண்ணியை இங்கன கூட்டிட்டு வாரதுக்கு காரணம் உங்க பெரிய மனசா? இல்ல… அவுக சுறுசுறுப்பா மாஸ்டர்?” சிரிக்காமல் கேலி பேசினாள் வேலை செய்யும் கோமதி.

திருமணம் முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலாளி அம்மாவை அழைத்து வருபவனை வேறு என்ன சொல்லி கடிந்து கொள்வது? முதலாளியாக மட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருவனாய் இருப்பவனிடம் எப்போதும் உரிமையுடன் கூடிய அக்கறையான சம்பாஷணைகளை மேற்கொள்வர்.

“எனக்கு எப்பவும் பெரிய மனசுதான் கோமதி… நம்மை டீல்ல விடுற அளவுக்கு அவுக சுறுசுறுப்புலயும் குறை சொல்லிட முடியாது.” மனைவியை கேலிபேச முழங்கையில் கணவனை இடித்தாள் கிருஷ்ணா.

“ஆஹா… சும்மாவே வார்த்தையில் தோரணம் கட்டுற எங்க மாஸ்டருக்கு… பொஞ்சாதி பக்கத்துல இருந்தா சொல்லியும் தரணுமா!” அடுத்தடுத்த கேலிப் பேச்சுகளுக்கு பதிலளித்தபடியே தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தனர். 

அனைத்தையும் சுற்றிக் காண்பித்து விளக்கம் முடித்து, தனது அலுவல் அறையில் மனைவியை அமர வைத்தான் அரவிந்தன்.

“என்ன முதலாளியம்மா? உங்க புருஷன் தொழில் பண்ற விதம் புரிஞ்சுதா… உங்களுக்கு பிடிக்குதா?” என விளையாட்டாகப் பேச ஆரம்பிக்க,

“டாட்ட பிர்லா ரேஞ்சுக்கு இல்லன்னாலும் என் வீட்டுக்காரரையும் பிசினஸ் ஸ்டார்ஸ் சேர்த்துட்டேன்!” மலர்ந்த முகத்தோடு பெருமிதத்தோடு கர்வப்பட்டாள் கிருஷ்ணா.

“அம்மாடியோவ்… டீச்சர் வாயால நல்ல புள்ளைங்கிற பட்டம் கிடைக்குதே!” என்றவாறே மடிக்கணினியை விரித்து குறிப்பிட்ட வலைத்தளத்தில் இருப்பதை பார்க்கச் சொன்னான்

“உனக்கு பிடிச்ச மாதிரி பாரு சாலா… புக் பண்ணுவோம்!” என்றபடி உயர்தர தங்கும் ஹோட்டல் அறையின் வகைகளை காண்பித்தான்

“இது எதுக்கு ரவி?”

“எதுக்குன்னு நீதான் சொல்லேன்!”

“மார்க்கெட்டிங்ன்னு வெளியூர் போற சமயத்துல தங்குறதுக்கா?”

“வேற எதுவுமே தோணலையா உனக்கு?”

“நீங்தான் கோவிலுக்கு போனாலும் மஞ்சப்பொடி பாக்கெட்டை வித்துட்டு வர்றவராச்சே… வேற எப்படி யோசிக்க?” கணவனுடனான இத்தனை மாத அனுபவத்தை கூற, பொய்யாய் முறைத்தான் அரவிந்தன்.

“வியாபார விஷயத்தை தவிர்த்து, நீங்க வேற எதுக்கும் வெளியே போறதில்லையே மாஸ்டர்! அதை எடுத்துச் சொன்னா முறைப்பீங்களா?” குரலை இறக்கிக் கொண்டு பேச,

“ம்ஹூம்… நீ ஏன் சொல்லமாட்டே? கல்யாணம் முடிஞ்சு சினிமா, கோவில், ஹனிமூன்னு சுத்தி இருக்கணும். அதை விட்டுட்டு தொழில், வேலைன்னு ரெண்டு பேரும் ரெண்டு பக்ககமா பிரிஞ்சிருந்தா வேற நினைப்பு எங்கே இருந்து வரும்?” என பெருமூச்செறிந்தான்.

“ரொம்ப ஏங்கிப் போயிட்டீகளோ?”

“இல்லன்னு சொல்ல மாட்டேன்! நம்ம ஹனிமூனுக்கு தான் ரூம் பார்த்துட்டு இருக்கேன் சாலா… ஒரு வாரம் புரோகிராம், கேரளா போயிட்டு வருவோம்!”

“நான் வரலப்பா…” என்றபடி வேகமாக மறுத்தாள்.

“ஏன்மா? உன் தோது பார்த்து போயிட்டு வருவோம்! ஊரு கூட மாத்திக்கலாம்.”

“நாம போவோம்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.”

“நான் கூட்டிட்டு போவேன்கிற நம்பிக்கை இல்லையா உனக்கு?”

“மொதல்ல… நம்ம புரோகிராம் டீடெயில்ஸ் உங்க ஃபாமிலி யுனிவர்சிடியில சர்குலர் பாஸ் பண்ணி, சாங்க்ஷன் ஆகட்டும். அப்புறம் நம்ம காருக்கு முன்னாடி வந்து உங்க பெரிய மாம பச்சைக்கொடி காட்டட்டும்… அப்புறம் ரூம் லோகேஷன் எல்லாம் யோசிக்கலாம்!” உதட்டை பழித்துச் சொல்லவும் வெடித்து சிரித்தான் அரவிந்தன்.

“அதிகமா பேசலைன்னாலும் நச்சுன்னு பேசுற!”

“எனக்கு அடிக்கடி லா… லா… பாட பிடிக்காது ரவி!”

“ரொம்ப ஓட்டுற நீ!”

“ஹனிமூன்… சில்லிமூன் ஆகாம இருக்க வழி சொல்றேன் மாஸ்டர்!”

“ஒழுங்கா ரூம் செலக்ட் பண்ணி வை… டேட் ஃபிக்ஸ் பண்ணி புக் பண்ணுவோம்!”

“உங்க மாமா, பச்சைகொடி…” மீண்டும் கேலியாக இழுக்க

“மாஸ்டர் இருக்க பயமேன் சாலா!” சட்டைக்காலரை உயர்த்திக் கொண்டவன் சொன்னபடியே தேனிலவிற்கு பயணப்பட்டான்.

பத்துநாள் பயணமாக கேரளாவிற்கு சொந்தக் காரில் தேனிலவை தொடங்கினர். பயணம் செய்வதும் வாகனத்தை கையாளுவதிலும் மிகுந்த விருப்பம் இருந்த காரணத்தால் இந்த ஏற்பாட்டினை செய்து கொண்டான் அரவிந்தன்.

“நீங்க ஹனிமூன் கொண்டாடப் போறதில்ல… தூங்கி எந்திருச்சு ரெஸ்ட் எடுதுட்டு வரப் போறீங்க!” சுமதி கேலி பேச,

“ஊர் சுத்தி பாக்கணும் சின்னக்குட்டி… அதுதான் முக்கியம்!” சுத்த சாமியாராகப் பேசினான் அரவிந்தன்.

“சம்சாரியா இருக்கிற என் தம்பிய குடும்பஸ்தனா மாத்துற பொறுப்புல இருந்து நீ நொடிநேரமும் தவறிடக் கூடாது கிருஷ்ணா…” சுதாமதியின் தீவிரமான கிண்டலும்,

“உன் சாமர்த்தியத்துல தான் நீ நடத்திக்கணும். எந்தம்பி பத்திரம்!” சாருமதியின் கேலியும் தந்த கலகலப்புடனே பயணம் ஆரம்பமானது.

கதிரவன் ஸ்நாக்ஸ் வகையறாக்களை கொண்டு வந்து கொடுத்து வழியனுப்பி வைத்தது அன்றைய நாளின் முத்தாய்ப்பாக மாறிப்போனது

“சோ லக்கி ரவி நீங்க… யாருக்கு கிடைப்பா இப்படி ஒரு மாமா!”

“இந்த டிரிப்ல உன்னையும் என்னையும் தவிர வேற யாரைப் பத்தியும் பேசக்கூடாது. இந்த நிமிசத்துல இருந்து  ஆர்டர் அமுலுக்கு வருது.”

“ஏனாம்… பேசினா என்னவாம்?”

“பேசினால் வரையறை இல்லாத கடுமையான வாய்ப்பூட்டு போடப்படும்!” அரவிந்தன் கண்டிப்புடன் கூற, கிளுக்கி சிரித்தாள்.  

“கிவ் மீ மோர் சொல்லி பனிஷ்மென்ட் கேட்டு வாங்கிப்பேனே தவிர, பேச்சை கொறைச்சுக்க மாட்டேன் ரவி!” நக்கல் நையாண்டியோடு பயணம் இனிதே ஆரம்பமானது.

முதல் மூன்று நாட்கள் படகு வீட்டில் தேனிலவைத் தொடங்கியவர்கள், மூணார், கோவளம், கொச்சி, திருவனந்தபுரம், ஆலப்புழா என வரிசையாக பயணம் மேற்கொண்டனர்

“அப்படியே அந்த பக்கம் இருக்கற திவ்யதேசத்துக்கு எல்லாம் போயிட்டு வந்துடுங்க அரவிந்தா! அப்புறம் உங்களுக்கு நேரம் கிடைக்காது.” மனோன்மணி தன்போக்கில் கூற பல்லைக் கடித்தான் அரவிந்தன்.

மனைவியின், ‘கிவ் மீ மோர்!’ மந்திரத்தை அவளை விட இவனே அதிகம் உச்சரித்தான். காதலின் ரசவாதங்களை அறிந்து கொள்ளவே பொழுது போதவில்லை அவனுக்கு…

“எல்லா நேரமும் கிவ் மீ மோர் சிலபஸ் வேலைக்கு ஆகாது ரவி… பக்கத்துல இருக்கிற அக்வேரியம் பார்த்துட்டு வருவோம். கெளம்புங்க ப்ளீஸ்…”

“நோ வே… எனக்கு அசதியா இருக்கு… நீயும் ரெஸ்ட் எடு!”

“உங்க அசதிக்கு, நான் ரெஸ்ட் எடுக்கவா?”

“வேற வழி… நீ கத்து குடுத்த கிவ் மீ மோர் ஸ்லோகன் அப்படி.” என்றவன் தனது எண்ணப்படியே ஒய்வெடுத்து மீண்டும் அந்த ஸ்லோகனை சொல்ல ஆரம்பித்தான்.

“குழந்தைங்க வந்த பிறகு கோவில், ஜூ, எல்லாம் சுத்திப் பாக்கலாம் சாலா!” கிறக்க குரலில் சமாளித்தவனை மாற்ற முடியாமல் அவனுள் புதைந்தாள் கிருஷ்ணா.

பத்துநாள் பயணமாக திட்டமிட்டே வந்திருந்தனர். அதில் ஏழு நாட்கள் இன்பமாகக் கழிந்திருக்க, எட்டாம் நாள் கதிரவன் அழைத்து விட்டார்.

“ஒரு முக்கியமான மேட்டர் மாப்புள… நீ உடனே கெளம்பி வா!” கதிரவன் கண்டிப்புடன் அழைக்க, இருவருமே பதறிப் போயினர்.

“யாருக்கு என்ன ஆச்சு மாமா? நேத்து கூட எல்லார் கூடவும் பேசினேனே… சுமதிக்கு எதுவும் பிராப்ளமா?”

“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லப்பா… நீ வா! நேருல பேசுவோம்.”

“எங்க வீட்டுல யாருக்கும் உடம்பு முடியலையா ண்ணே?” கிருஷ்ணாவும் இடையிட்டுக் கேட்டு விட, அதற்குமே இல்லையென்று மறுத்து இருவரையும் உடனே புறப்பட்டு வரச் சொன்னார் கதிரவன்.

***

மகள் சீரழிந்து வந்த வாழ்க்கைப் பாதையை கேட்டறிந்த பிறகு ஹக்கீமின் நடவடிக்கைகள் மிகக் கடுமையாக மாறத் தொடங்கின.

அவள் வந்திறங்கிய பதினைந்து நாட்களில் ஹனியாவை கட்டாயப்படுத்தி ஹைதராபாத்தில் உள்ள சகோதரியின் வீட்டில் அனுப்பி வைத்தார்.

“இந்த காலத்துல இதெல்லாம் சகஜம். சிங்கிள் பேரண்ட்-ஆ நான் குழந்தைகளோட வாழ முடிவு பண்ணிட்டேன்! என் பிள்ளைகளை விட்டுப் போகமாட்டேன்!” பெற்றவர்களை எதிர்த்துப் பேசிய ஹனியாவிற்கு மீண்டும் அடிகளும் திட்டுகளும் வஞ்சனையின்றி கிடைத்தன.

“அந்தக் காலம் மாதிரி இருக்க மாட்டேன்னு வாய் கூசாம சொல்லுறவ, எதுக்கு லே, உன் குழந்தைகள இன்னமும் நெஞ்சுல சுமந்திட்டு திரியுதே? இதுல பாசம் வந்து உம்ம கண்ணை மறைக்குதோ!” ரௌத்திரமாய் கேட்ட ஹக்கீம்,

“பொறந்து மூனு மாசம் தாண்டாத உன் புள்ளைகளுக்கு நீ பாக்கும்போது, நான் பெத்த இருபத்தியாறு வயசு கழுதைக்கு, பெத்தவனா நான் பாக்க மாட்டேனா?” குத்தலாக பேசி அவளை மிரட்டலாகப் பார்த்தார்.

“இவ்வளவு ஹார்சா பீஹேவ் பண்ணாதீங்க அத்தா! இது உங்க சுபாவமே கிடையாது.”

“எது லே என் சுபாவம் கிடையாது. உன் குழந்தைன்னு நீ பாக்குற அதே சுயநலம்தான் என் குழந்தைக்கு நான் பாக்குறேன்… உயிர் கொடுத்தவனுக்கு இல்லாத அக்கறை உருவம் கொடுத்தவளுக்கு இருக்கணும்னு அவசியம் இல்லன்னு சொல்லுறேன்! இது இந்தக்கால வழக்கமா இருக்கட்டும். கெளம்பு நீ!” அதீத அதட்டல் போட்டவரிடம் தன்னை புரிய வைக்க முடியாமல் தாயை நாடினாள் ஹனியா.

“ப்ளீஸ் ம்மா… நீங்களாவது எடுத்துச் சொல்லுங்களேன்… குழந்தைங்க இன்னும் சரியா மொகம் பாக்க கூட ஆரம்பிக்கல…”

“அதனால தான் கண்ணு இவ்வளவு அவசரப்படுறோம்… புள்ளைக்கு தாயோட அடையாளம் தெரியுறதுக்கு முன்னாடி தனித்தனி ஆக்கிட்டா, பொறவு ரெண்டு பக்கமும் கஷ்டமில்ல பாரு!” வேதனையை அடக்கிக் கொண்டு மகளை நிர்பந்தித்தார் ஜன்னத்.

“எங்க பேச்சையும் மீறி நீ வீம்புல சாதிக்க நினைச்சா… உன்னை அடைச்சு வைச்சு, அந்த பிஞ்சுகளோட நாங்களும் பட்டினியா கெடந்து உசுரை விடுவோம்!” கடுமையான குரலில் கர்ஜித்தவர், இரண்டு நாட்கள் அதை செயல்படுத்தியும் காட்டிட, ஹனியா குற்றவுணர்வில் உயிரோடு குமைந்தாள்.  

நாளுக்குநாள் ஹக்கீமின் அடக்கு முறைகள் தீவிரமாகின…

“நீ வேலை பார்த்து சம்பாதிச்சு கிழிச்சது போதும். இனி என் பேச்சை கேட்டுத்தான் நீ மூச்சே விடணும்.” கண்டிப்பாக கூறிவிட, சரியென்று தலையசைத்தாள்.

அவரின் உச்சபட்ச கெடுபிடியாக, ஒட்டு மொத்தமாக அவளை ஹைதராபாத் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்க முன்வந்த போது பிடிவாதமாக இவள் மறுத்து நிற்க, தனது முழு சுயரூபத்தையும் காட்டி விட்டார் ஹக்கீம்.

“என் ஊரு, என் மனுஷ மக்க முன்னாடி உன்னால, நான் அசிங்கப்பட்டு நிக்கிறதுக்கு பதிலா, நானும், உன் உம்மாவும் மொத்தமா இல்லாம போயிடுறோம். அப்புறம் கூட உன்னால நிமிந்து நடக்க முடியாது லே!” என்றதோடு அறையில் சென்று அடைந்து கொள்ள, ஹனியாவின் உணர்வுகள் எல்லாம் பொசுங்கிப் போயின.

“நீ பெத்த புள்ளைங்களை ஏதாவது ஒரு அநாதை ஆசிரமத்துல கொண்டு போய் விடுவேன்… என்னை நம்பு!”

“அப்படியே என்னையும் கொன்னு போட்ருங்க அத்தா!”

“அந்த பாவத்தை நான் ஏன் சுமக்கறேன்? நீ திமிரெடுத்து, கொழுப்பெடுத்து போயி வயித்துலயும் கையிலயும் ஏந்திட்டு வருவ… அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா? உனக்காக மட்டும்தான் என்னால பாக்க முடியும்.” விட்டேற்றியாகப் பேசிவிட, அவளுக்குள் மிச்சம் மீதி இருந்த சுயமும் புதைந்து போனது.

“நீ அவ்வளவு ஈசியா சாகக்கூடாது லே… ஒவ்வொரு நாளும் நீ செஞ்ச தப்போட வீரியத்தை நினைச்சு அணு அணுவா சித்திரவதை பட்டு, மனசு ரணமா வலிச்சு உன் முடிவு உன்னை தேடி வரணும்!” அவரது கோபத்தின் பரிமாணங்கள் வக்கிர வார்த்தைகளாக உருமாற்றம் பெற்றிருந்தன.

‘ஐயோ!’ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை காறித் துப்பினார் ஹக்கீம். ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் கௌரவத்தை போற்றிப் பாதுகாத்தவருக்கு தனது மகளின் தறிகெட்ட நிலை, அவரது கருணையை காவு வாங்கியிருந்தது.

“எந்த மாதிரி தண்டனை கொடுத்தாலும் நீ செஞ்ச வேசிதனத்த அல்லா கூட மன்னிக்க மாட்டான்!” அடங்காத கோபத்தில் ஆர்பரித்தார்.

அவரது சொல்படியே ஹனியா ஹைதராபாத் அத்தை வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானாள். அவளின் கையில் குழந்தைகளை பெயரளவிற்கு கூட கொடுக்க விடவில்லை ஹக்கீம்.

அவர் நினைத்தபடி குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்ப்பது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. பெரிய தொகையை நன்கொடையாக அளித்து, சேர்த்துக் கொள்ளச் சொன்னாலும் இன்னாருக்கு பிறந்த குழந்தைகள் என்கிற சட்டபடியான ஒப்புதலை கொடுக்க வேண்டி இருந்தது.

அப்படி இல்லையென்றால் இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கண்டெடுத்தது என்கிற ஆதாரப்பூர்வமான சாட்சியங்களை ஒப்படைக்க வேண்டி இருந்தது.

இத்தனையும் மீறி குழந்தைகளை விடுதியில் சேர்த்து கொள்வதற்கு பிள்ளைகளின் தாய் தந்தையரின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கையொப்பம் அளித்த ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருக்க, ஹக்கீமின் காரியங்கள் எல்லாம் பெரிதும் பின்னடைந்து போயின.

தாயாக, மகளிடம் வாக்குமூலம் பெற்றாலும் தந்தையாக அவள் காதலித்த இழிபிறவியை தேடிக் கண்டுபிடிக்கும் பொறுமையும் அவசியமும் வந்து சேர, உள்ளுக்குள் கனன்று போனவராக அடுத்த முயற்சியை மேற்கொண்டார்.

மீண்டும் மகளிடம் அவனது பூர்வீகத்தை அதட்டி மிரட்டியே வாங்கினார். மகளிடம் இருந்து வந்த பதிலில் காதலுக்கு கண்கள் மட்டுமல்ல… சுய அறிவும் இல்லையென்று காறித் துப்பினார்.

“அவனோட கரெக்டான வீட்டு அட்ரஸ் எனக்குத் தெரியாது அத்தா…” என்றவளை கொன்று போடும் ஆத்திரம் வந்தது.

“மெயில், வாட்ஸ்-அப் ல பேசிட்டு இருந்தோம். போன ஏழு மாசமா அந்த காண்டாக்ட் கூட நின்னு போயிடுச்சு!

“அப்போ அந்த செத்த மூதிக்கு புள்ள பொறந்தது தெரியுமா, தெரியாதா லே?”

“குழந்தைங்க பொறந்ததும் அவங்க போட்டோவை அனுப்பி வைச்சேன்! அதைப் பார்த்து வாழ்த்து சொல்லிட்டு என் ஐடி, நம்பரை எல்லா மீடியால இருந்தும் பிளாக் பண்ணிட்டான் அத்தா!” எனக் கதறினாள் ஹனியா.

ஆசையாய் வளர்த்த மகள் அறிவீலியாய் காரியங்களை செய்துவிட்டு கதறும் நேரத்தில் ஆதரவாய் அணைத்துக் கொள்ளவும் முடியவில்லை. ‘ஒழிந்து போ!’ என தலை முழுகவும் முடியவில்லை.

பெற்ற பாசம் கண்ணை மறைக்க, அத்தைகளின் வளர்த்த பாசமும் சேர்ந்து ஹனியாவிற்கு ஆதரவாகப் பேசியது.

“நம்ம புள்ளைய நல்ல விதமா வாழ வைக்கிற வழிய பார்ப்போம் ண்ணே… ரெண்டு சின்னதுகளோட பொறுப்பை இறக்கி வைச்சுட்டு வா… என் புள்ளைக்கே அவளை கட்டி வைச்சுடலாம்.” என ஹைதராபாத் சகோதரி ஆயிஷா கூற, அவரது மகன் இம்ரானும் நிறைவான மனதோடு திருமணம் செய்துகொள்ள சம்மதத்தை அளித்து விட்டான்.

அன்றில் இருந்து ஹக்கீமின் தேடல்கள் தீவிரமடைந்தன. பிள்ளைகளை பெற்றவனின் குடும்பத்தில் சேர்த்து விட்டு ஒரேடியாக ஒதுங்கி விடுவது என்கிற முடிவில் அவர்களது குடும்பத்தை தேடி அலைந்தார்.

வீட்டு முகவரி தெரியாது. அந்த ஏமாற்றுக்காரனின் அலைபேசிக்கு அழைத்தாலும் அது, உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.

இத்தனையும் தேடி சலித்து களைத்த பொழுது ஏழு மாதங்கள் முடிந்திருந்தன. உள்ளுக்குள் வெறுப்பு இருந்தாலும் மழலைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முழுதாய் தனதாக்கிக் கொண்டிருந்தார் ஜன்னத்.

நாற்பது வயதிற்கு மேல் தவமாய் தவமிருந்து, தான் பெற்ற ஒற்றை மகளின் வாரிசுகள் இவர்கள் என்ற கண்நோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது என்ற கணவரின் கட்டளைக்கு கீழ்படிந்து ஒரு தாயின் பரிவோடு மட்டுமே பார்த்து இரு மழலைகளையும் வளர்க்கத் தொடங்கினார்.

ஹனியாவிடம் அடுத்தடுத்து விடாமல் கேட்டதில் அவளும் பெரிதாய் மூளையை கசக்கிப் பிழிந்து காதலன், தன் குடும்பத்தைப் பற்றி பேசிய பொழுதுகளை நினைவு கூர்ந்தாள்.

அத்தனை எளிதில் விவரங்களை கூறி விடமாட்டான் அந்த காரியக்காரன். ‘உறவில்லாத பழக்கத்திற்கு குடும்ப விவரங்கள் எதற்கு?’ எனக் கூறியே அவனும் இவளிடம் கேட்டிருக்கவில்லை, அவனும் சொல்லி இருக்கவில்லை

இப்படியான ஒரு பொழுதில் ஒருநாள் சமைக்கும் பொழுது அவனது அடுப்படியில் ஒரே பெயரை பொறித்த மாசலா பாக்கெட்டுகளை பார்த்திருந்தாள் ஹனியா.

“உன் பெர்ஃபெக்சனுக்கு அளவே இல்லையா மச்சான்? மசாலா அயிட்டம் கூட ஒரே பிராண்டா தான் யூஸ் பண்ணுவியா?”

“ஹேய் பப்ளி… எங்க ஃபாமிலி புராடெக்ட்டி இது. நீ டெய்லியும் சப்பைக்கட்டு கட்டுற சாம்பார், ரசம், புளிசாதம் எல்லாம் நம்ம வீட்டு தயாரிப்புதான்!” தன் வீட்டுப் பெருமை பேசியவனின் கையில் இருந்த மாசலா பாக்கெட்டுகளின் பெயரை மெதுவாய் படித்தாள் ஹனியா.

“மாஸ் மசாலா… பேரே மாசா தான் இருக்கு!”

“அம்மாஸ் மசாலான்னு தான் ஃபர்ஸ்ட் செலக்ட் பண்ணாங்க… நான்தான் கேட்சியா இல்லன்னு மாஸ் மசாலான்னு மாத்துனேன்!” அவன் பெருமை பீற்றிக் கொண்ட பொழுதுகள் நினைவில் வந்தன.

அந்த மசாலா நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, “இது அவனோட குடும்பத் தொழில்னு சொன்னான் அத்தா!”   தயங்கித் தயங்கியே கூறி முடித்தாள்.

ஹனியா சொன்னதை வைத்து இணையத்தில் முகவரியைத் தேடி சலித்து, மதுரைக்கு குழந்தைகளுடன் வந்த சேர்ந்த ஹக்கீமிடம் மசாலா நிறுவனத்தின் முகவரி மட்டுமே கைகளில் இருந்தது.

தொழில் செய்யும் இடத்தில் தன்மையாக பலமுறை நயந்து பேசி, முதலாளியின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற பொழுது அரவிந்தன் தேனிலவிற்கு சென்றிருக்க, ஹக்கீமின் பேச்சினை ஏற்றுக் கொண்டு பதில் பேச யாரும் முன்வரவில்லை.

போர்ஜரி, திருட்டுத்தனம் என பல தகாத வார்த்தைகளில் எல்லோரும் வாய்க்கு வந்ததை பேசி துரத்தி அடிக்க, மீண்டும் கொதித்துப் போனார் ஹக்கீம்.

ஆக்ரோசமான வார்த்தைகளில் குடும்பத்தையே சாடிப் பேசியவரை அடக்க முடியாமல் அரவிந்தனை உடனே அழைத்து விட்டார் கதிரவன்.

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!