பூந்தளிர் ஆட… 11
பூந்தளிர் ஆட… 11
பூந்தளிர்-11
தத்தித் தடுமாறி தளிர்நடை போட்ட பெண் குழந்தை இரண்டடி எடுத்து வைத்த நேரத்தில், வேகமாய் தவழ்ந்து முன்னே சென்று தனது இரட்டையை பின்னால் திரும்பிப் பார்த்துச் சிரித்தது ஆண் குழந்தை.
பால் பற்கள் தெரிய கன்னங்குழி விழச் சிரித்த இரண்டு மழலைகளையும் மேய்க்கும் மேய்ப்பனாய் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தான் சுமதியின் மகன் சஞ்சய்.
“ஹே அம்மு… நீயும் யானையா போ! அப்புவ வின் பண்ணலாம்!” நான்கு வயது பெரிய மனிதன் கூறியதைப் புரிந்து கொண்டதின் அடையாளமாக சட்டென்று தரையில் அமர்ந்து தவழ ஆரம்பித்தது பெண் குழந்தை.
“அப்பு, கோ ஸ்லோ… அம்மு கமிங்!” சஞ்சய் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்க, அவனை அடக்கி வைக்கும் வழி தெரியாமல் அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.
முன்தினம் மாலையில் ஹக்கீம் வந்து பேசத் தொடங்கும் போது ஆரம்பித்த மழலைகளின் தோழமை, நிமிடத்திற்கு நிமிடம் இறுக்கமாகி பின்னிப் பிணைந்து கொண்டது.
இரண்டு பிள்ளைகளையும் தோளில் தாங்கிக் கொண்டு தனது வயதையொத்த நண்பரின் துணையுடன் அரவிந்தனின் வீட்டினைத் தேடி வந்திருந்தார் ஹக்கீம்.
தனது ஊர், பெயர், தொழில், குடும்பப் பாரம்பரியம், சகோதரிகள் என அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை பெண்கள் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
முதியவர்களின் கையில் குழந்தைகளைப் பார்த்ததுமே பரிமளம், தனது இயல்பாய் பாலாற்றி அவர்களுக்கான சிப்பரில் ஊற்றிக் கொடுக்க, வீட்டிலிருந்த சுமதி குழந்தைகளின் வயிற்றுப் பாட்டை கவனிக்கும் பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள்.
அதன் பிறகு ஆரம்பித்தது சஞ்சய்க்கு இரட்டையர்கள் உடனான விளையாட்டுப் பொழுதுகள். ஹக்கீமின் அறிமுகம் முடிந்த பிறகு, தான் ஏந்தி வந்த குழந்தைகள் உங்கள் வீட்டு வாரிசுகள் என்ற குண்டை அலுங்காமல் போட, அந்த நேரம் வீடே கலவரம் கொண்டது.
பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த அபாண்ட பழியை ஏற்க முடியாமல் மறுத்து வாதிட ஆரம்பித்தனர். சுமதியின் அலைபேசி அழைப்பில் கதிரவனும் வந்து சேர்ந்து அவருமே தனது மறுப்பினை, குரலை உயர்த்திப் பேசியே சாதித்தார்.
“எனக்கு உங்ககூட பேச வேண்டிய அவசியமில்ல… இந்த வீட்டு குடும்பத் தலைவரை கூப்பிடுங்க! நான் சொல்ல வேண்டியதை சொல்லி பொறுப்பை இறக்கி வைக்கிறேன்.” கறாராகப் பேசிய ஹக்கீம், வீட்டில் சட்டமாக அமர்ந்து விட்டார்.
கையில் குழந்தைகளோடு வந்த வயதானவரை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அநாகரீகத்தை அரங்கேற்றும் அளவுக்கு அரவிந்தன் குடும்பத்தினருக்கு மனதில் வலுவில்லை.
காவல்துறையில் சென்று புகார் கொடுக்கவும் வீட்டுப் பெண்கள் விரும்பவில்லை. பார்வைக்கு தோரணையாக இருந்த ஹக்கீம், அருவாளை கையில் எடுக்காமலேயே கர்ஜித்த தோற்றத்தை கண்டு கதிரவன் முதற்கொண்டு அனைவருமே பின்னடைந்திருந்தனர்.
அரவிந்தன் வந்தால் ஒழிய இவர் இடத்தை காலி செய்ய மாட்டார் என்பது ஸ்திரமாகத் தெரியவர கதிரவனும் அவனை அழைத்து விட்டார். இரவு பயணத்தை தவிர்த்து விடிகாலையில் புறப்பட்டு வருவதாக அவனும் உறுதியாக கூற, வந்தவர்களை எங்கு தங்க வைப்பது என்கிற பிரச்சனை எழுந்தது.
வெளித்திண்ணையில் தங்கிக் கொள்வதாக ஹக்கீமும் அவரது நண்பரும் கூறினாலும் கதிரவன் ஒப்புக் கொள்ளவில்லை.
அப்படிச் செய்வது ஊராரின் வேண்டாத யூகங்களுக்கு வழி வகுக்கும். அது மனிதாபிமானமற்ற செயலும் கூட! எது எப்படியோ இவர்கள் ஒன்றும் ஜென்ம விரோதிகள் அல்லவே!
ஒருவாறாக சமாளித்து இரண்டு பெரியவர்களையும் குடவுனில் தங்கிக் கொள்ளுமாறு கூறி ஏற்றுக்கொள்ள வைத்தார். இளம் பிஞ்சுகளை அங்கிருந்த மசாலா நெடியில் தங்க வைக்க பெரியவர்களுக்கு மனம் வரவில்லை.
அதோடு திடீர் உற்ற தோழனாகிப் போன சஞ்சயின் அடாத வீம்பும் சேர்ந்து கொள்ள, சுமதியின் பொறுப்பில் குழந்தைகளின் இரவு வீட்டினில் கழிந்தது.
மறுநாள் விடியலில் இருந்து மீண்டும் திண்ணை வாசத்தை தொடர்ந்தார் ஹக்கீம். உணவினையும் வெளியே ஹோட்டல்களில் முடித்துக் கொள்ள மழலைகளின் பொறுப்பு மட்டும் வீட்டைச் சார்ந்திருந்தது.
சந்தோசப் பேரிரைச்சலில் வீட்டையே ஆட்டம் காண வைத்திருந்தான் சஞ்சய். தனக்கு தோதான விளையாட்டு துணையில்லாமல் வம்பு செய்து கொண்டிருந்தவன், தற்போது இளம் இரட்டையர்களை வழிநடத்தும் தளபதி நிலைக்கு உயர்ந்திருந்தான்.
விடிகாலை கிளம்பி மதியம் இரண்டு மணிக்குள் வந்து சேர்ந்திருந்தனர் தேனிலவு தம்பதியினர். வழி முழுவதும் இனம் காண முடியாத பதட்டத்தில், குழப்பத்தில் சகஜமாய் கூட அவர்களால் பேசிக் கொள்ள முடியவில்லை.
வண்டியை விட்டு இறங்கியதும் திண்ணையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தது நொடிநேரம் நிதானித்து, பின் உள்ளே சென்றனர். ஹக்கீமும் அவர்களைப் பார்த்து மெலிதாக முகம் மலர்ந்து, “யாஹ் அல்லா!” என முணுமுணுத்துக் கொண்டார்.
தான் நினைத்து வந்த வேலை எளிதாக முடிந்து விடுமென்ற நம்பிக்கை முதன்முதலாய் அவரது மனதை குளிர்வித்தது. அரவிந்தனின் கண்களும் கூர்நாசியும் ஆண் குழந்தையை நினைவுப்படுத்த, பெண் குழந்தையின் முகஜாடை அப்பட்டமாய் சுமதியை சார்ந்திருந்தது.
சுதாமதி, சாருமதி இருவரும் தாய் பரிமளத்தின் முகச் சாயலைக் கொண்டிருக்க, அரவிந்தன், ராம்சங்கர், சுமதி மூவரும் அவர்களது தகப்பனாரின் பிரதிபலிப்பாய் பிறந்திருந்தனர். இந்த உருவ ஒற்றுமையே தற்போது ஹக்கீமிற்கு நம்பிக்கை கொடுத்திருந்தது.
வெளியே இருந்து கதிரவனை அழைத்தவர், “வந்தவங்க மொதல்ல பசியாறட்டும்… நிதானமா பேசுவோம். ஆனா இன்னைக்கே பேசி முடிப்போம்!” உறுதியாக கூறிவிட்டு அமர்ந்தார்.
அரவிந்தனும் மதிய உணவினை முடித்துக் கொண்ட நேரத்தில், சுருக்கமாக ஹக்கீம் வந்திருக்கும் காரணத்தை அவனிடத்தில் விளக்கி இருந்தார் கதிரவன்.
“ஊருக்கு பெரிய மனுசனா, மதிப்பா தெரியுறாரு மாப்புள! அதுக்காக நம்ம வீட்டு பையனைப் பத்தி தப்பா சொல்றதைத் தான் ஏத்துக்க முடியல… அவர்கிட்ட இருக்கிற ஆதாரத்தை குடும்பத்து ஆம்பளைகிட்ட மட்டுமே காட்டுவேன்னு சட்டமா சொல்லவும்தான், உங்களை உடனே வரச் சொல்ல வேண்டியதா போயிடுச்சு!” கதிரவன் மெதுவாக தற்போதைய நிலவரத்தை கூறியிருந்தார்.
கிருஷ்ணாக்ஷிக்கு வீட்டின் நடப்பைப் பார்த்து, கதிரவன் சொல்வதைக் கேட்டு, மனமெங்கும் கலவையான எண்ணங்கள் எழுந்து கலவரப்படுத்தின. இரண்டு தமக்கைகளும் வந்திருந்தனர்.
சுமதியை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுமே பெரும் கலக்கத்துடன் நின்றிருந்தாள். நிறைமாதம்… தேவையற்ற எண்ணவோட்டங்களை மனதினில் தேங்கி வைத்துக் கொள்ளக் கூடாது என்ற திடமான உணர்வும் அவளை உந்தித்தள்ள, “என்னன்னு பார்த்திடலாம் ண்ணே…” ஊக்கப்படுத்தினாள்.
“நீ ஜாக்கிரதையா இருடா!” என்றவன், மனைவியிடம், “பார்த்துக்கோ!” என பெண்களின் பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்தவனாய் பேச அமர்ந்தான்.
வீட்டிற்குள் வந்து அமர்ந்த ஹக்கீம் மற்றும் அவரது நண்பரை வெகு நிதானமாகவே பார்த்தான் அரவிந்தன். கோபமோ ஆத்திரமோ இல்லாத பண்பட்ட நிலைக்கு சென்று விட்டிருந்தது அவனது மனது. ஒற்றை பார்வைக்கே எதிராளி பேச்சை நிறுத்தி விடுவர், அத்தனை தீர்க்கம் நிறைந்திருந்தது அவனது கண்களில்…
“சொல்லுங்கய்யா… உங்க தேவை என்ன?” அரவிந்தன் பேச ஆரம்பிக்க, ஹக்கீமும் தனக்கான அறிமுகத்தை சொல்லி முடித்து, அவன் முன்னே இருந்த சிறிய மேசையில் பல புகைப்படங்களை வெளியில் எடுத்து அனைவரின் பார்வைக்கு வைத்தார்.
“இதெல்லாம் இந்தக் காலத்து பிள்ளைங்க கிட்ட சகஜம்தான்!” பார்வையிட்டபடியே எளிதாகச் சொன்ன கதிரவனின் முகமும் அருவெருப்பில் கசங்கிப் போனது.
பல புகைப்படங்களில் ராம்சங்கர், ஹனியா இருவரும் நெருக்கமாய் நின்று இதழோடு இதழ் பதித்து அணைத்துக் கொண்டு இருக்க, இன்னும் அத்துமீறிய வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அங்கே பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
‘கண்கள் கூசிவிடுமோ… பார்வை அவிழ்ந்து போகுமோ!’ எனும் அவதியில், சுதாமதி விரைந்து வந்து புகைப்படத்தினை குப்புற கவிழ்த்து வைத்தார்.
அது மட்டுமில்லாமல் இருவரும் பல்வேறு பார்ட்டிகளில் இணைந்து நெருக்கமுடன் நடனமாடிக் கழித்த காணொளிகளை தன்னிடம் இருந்த டேப்பில் போட்டுக் காண்பித்தார் ஹக்கீம்.
பார்க்கவே சகிக்க இயலாத காட்சிகளை பாதியில் நிறுத்தி விட்டு பல்லைக் கடித்த அரவிந்தன், “விசயத்துக்கு வாங்கய்யா!” பொறுமையை கை விட்டவனாக பேசினான்.
”நீங்க வந்ததுமே உங்களுக்கு தகவல் சொல்லி இருப்பாங்க… இன்னும் உடைச்சு சொல்லணும்னா நான் கூட்டிட்டு வந்த இந்த ரெண்டு குழந்தைகளும், உங்க வீட்டு பையனுக்கும் என் பொண்ணுக்கும் பொறந்த பசங்க…” இறுக்கத்தை தத்தெடுத்த ஹக்கீமின் குரல் மேலும் தொடர ஆரம்பித்தது.
“நான் காமிச்சதை எல்லாம் ஆதாராம எடுத்துக்க முடியாதுன்னு எனக்கும் நல்லாவே தெரியும். இந்த காலத்துப் பிள்ளைங்க பழக்க வழக்கம் அப்படி!
எல்லாரும் சொல்ற டிஎன்ஏ டெஸ்ட் பண்றதுக்கு இப்ப இந்த வீட்டு பையன் இங்கே இல்ல… எனக்கும் அந்த பரிசோதனை செய்யுறதுல விருப்பம் இல்ல. மனசுளவுல ரணப்பட்டு திருந்தி வந்திருக்கிற என் பொண்ணு சொன்ன வார்த்தையில எனக்கு நம்பிக்கை இருக்கு. எங்களை அவ ஏமாத்த நினைச்சிருந்தா… எத்தனையோ காரணம் சொல்லி குழந்தை பொறந்த விசயத்தை எங்களுக்கு தெரிவிக்காம மறைச்சுருக்கலாம்.
எல்லாம் கையை மீறிப் போன பிறகு இனி என்ன செய்யுறது, குழந்தைகளை எப்படி வளக்கறதுன்னு வழி தெரியாம எங்களைத் தேடி வந்துட்டா! என் மார்க்கத்துக்கு நிகரா, என் பொண்ணோட வாழ்க்கையை பாக்குறேன்!
இந்த பிள்ளைகளை காரணம் காட்டி இவங்க ரெண்டு பேரையும் வேண்டா வெறுப்பா குடும்ப வாழ்க்கையில இணைச்சு வைக்க நான் விரும்பல…” என அமைதியாக சொல்லி கொண்டிருந்தவர், சட்டென ஆவேசப்பட்டார்.
“செஞ்ச தப்புக்கு நியாயம் பேசி, பொண்ணையும் பிள்ளையையும் கை கழுவிட்டு போன நாதாரியை என் பொண்ணுக்கு பக்கத்துல நிப்பாட்டி வச்சு அழகு பாக்குற பெரிய மனசு நிச்சயமா எனக்கில்ல… அவனை பாத்தா என் அருவா மட்டுமே பேசும்! இந்த ரெண்டு குழந்தையும் உங்க குடும்ப சொத்து. உங்க வீட்டுப் புள்ளையோட இரத்தம். இந்த வீட்டு வாரிசை இங்கே கொண்டு வந்து சேர்க்கிறதோட என் கடமை முடிஞ்சது.
இந்த குழந்தைகளை ஏத்துகிட்டு வளப்பீங்களோ… இல்ல, பொறுப்பை தட்டிக் கழிச்சு அனாதை ஆசிரமத்துல சேர்ப்பீங்களோ… அதுக்கும் மேல அடையாளம் தெரியாத விதமா கண்காணாத இடத்துக்கு கொண்டு போயி விடுவீங்களோ… அது உங்க இஷ்டம்.
உங்க முடிவுல நானோ, என் பொண்ணோ, என் குடும்பத்தை சார்ந்தவங்களோ தலையிட மாட்டோம். இதை எழுத்து பூர்வமா உறுதி கொடுக்க நான் தயாரா இருக்கேன்! என் பொறுப்பு இங்கே இறக்கி வைக்க வேண்டியது. அதை செஞ்சு முடிச்சிட்டேன். இனி உங்க பாடு! இதுக்கும் மேல நீங்க போலீஸ், கோர்ட்ன்னு போனாலும் நான் சந்திக்க தயாரா இருக்கேன்!” என்று நீளமாக பேசி அனைவரின் முகம் பார்த்தார் ஹக்கீம்.
அவர் சொன்னதை கேட்டுக்கொண்டு நின்றவர்களுக்கு பதில் பேச வார்த்தை வரவில்லை. ஆணித்தரமான ஆதாரமான பரிசோதனை மூலங்கள் இல்லை என்றாலும் குழந்தைகளின் முகஜாடை, இவர்களின் வீட்டு வாரிசு என்று அடித்துச் சொன்னது. ஆனால் மனதார ஏற்றுக் கொள்ளத்தான் அங்குள்ளவர்களுக்கு பெரிதான தயக்கம் வந்திருந்தது.
உறுதியாகத் தெரியாமல் எதையும் அனுமானமாகக் கூட சொல்லி விட முடியாதே! சர்வ ஜாக்கிரதையாக பதில் பேச வேண்டும். அனைவரின் முகம் பார்த்தவனாக தனது அலைபேசியில் தம்பியை அழைத்தான் அரவிந்தன்.
எப்பொழுதும் காணொளி அழைப்பில், முகம் பார்த்துதான் தம்பியிடம் பேசுவான். அவ்வாறே அப்போதும் அழைக்க, உடனே இணைப்பில் வந்தான் ராம்சங்கர்.
“என்ன ண்ணே… இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணி இருக்க? எதுவும் அவசரமா?” எனக் கேட்டவனுக்கு லண்டனில் இரவு பதினோரு மணி.
அக்கறையுடன் பேசுபவனை பார்க்கும்போது, ‘இவனா தனது குழந்தைகளின் பொறுப்பினை தட்டிக் கழித்த பாவி?’ என எண்ணத் தோன்றும். லவுட் ஸ்பீக்கரில் அவனது பேச்சினை அனைவரும் மூச்சு விட மறந்து உன்னிப்பாக கேட்கத் தொடங்கினர்.
“அவசரமில்ல ராம்… ஆனா பேசியே ஆகணும். என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுடா!” நிதானமாக பேசத் தொடங்கினான் அரவிந்தன்.
“பில்ட்-அப் எல்லாம் பயங்கரமா இருக்கே… அப்படி என்ன ண்னே கேக்கப் போற?” என்றபடி பொறியில் சிக்கியது பெருச்சாளி.
“உன் பிளாட்டுல நீ மட்டுந்தான் தங்கி இருக்கியா?”
“ஆமா ண்ணே…”
“உண்மையை சொல்லு ராம்…”
“ம்ப்ச்… இதுல என்ன பொய் சொல்லிடப் போறேன்? வீட்டை சுத்தி காமிக்கவா? அப்படியாவது என்னை நம்புறியா?”
“சரி, இப்ப தனியா இருக்கே! இதுக்கு முன்னாடி?”
“இதுக்கு முன்னாடியும் தனியா இருந்துருக்கேன்!” என்றவன் பொறுமையகன்று, “உனக்கு என்ன விவரம் தெரியணும்? நேரடியாக கேளு… உண்மையை சொல்றேன்!” கடுகடுத்தான் ராம்.
“நல்லது ராம்! என் பாதி வேலையை குறைச்சிட்ட… இப்ப நீ சொல்லப் போற பதில் நேர்மையா, உண்மையா இருக்கணும். நம்மை பெத்தவங்க மேல சத்தியம் பண்ணிச் சொல்லு…” என்றவன் ஆழ மூச்செடுத்துக் கொண்டு,
“ஹனியாவுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? இப்ப அவ இருக்கிற இடம் தெரியுமா?”
அரவிந்தன் நேரடியாகக் கேட்டதும் திகில் அடைந்தவனாக ஸ்தம்பித்தான் ராம்சங்கர். அவனது திகைப்பே அவனை காட்டிக் கொடுத்தது.
“ஹனியா…” என இழுக்க,
“அவளைத் தெரியாதுன்னு பொய் சொல்லாதே!”
“அது… அது… இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியா போயிட்டா ண்ணே!”
“போகும் போது எப்படி, யார் கூட போனா? அவளுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? உள்ளது உள்ளபடி பதில் வரணும் ராம்!”
நொடிநேரம் யோசிப்பு. பின்னர் மாட்டிக்கொண்ட அவஸ்தையில் மூச்சிழுப்பு ராமின் முகத்தில்…
“நானும் அவளும் டூ இயர்ஸ் லிவ்இன்-ல இருந்தோம்.”
“ஒஹ்… அப்புறம் பிரிஞ்சிட்டீங்களா?”
“ஆமா, நான் தனியா தான் இருக்கேன்!”
“நீங்க பிரிஞ்சு எத்தனை நாள் ஆச்சு? எதுக்காக பிரிஞ்சீங்க?”
“ஒன்றரை வருசத்துக்கு மேலே ஆச்சு… வொர்க் பிளேஸ் மாறிடுச்சு ண்ணே!”
“பொய் சொல்றடா!”
“இல்ல ண்ணே… எனக்கு பிராஞ்ச் மாத்திட்டாங்க… அதான் தனியா வந்துட்டேன். நம்பு!” என கெஞ்ச,
“சரி, நீங்க சுமூகமாகத்தான் பிரிஞ்சீங்களா? அப்புறமா அவளோட நெலம என்னன்னு உனக்கு தெரியாதா?”
“லிவ்-இன்ல பிரியுறது, பார்ட்னர் மாத்திக்கிறது எல்லாம் சகஜம் ண்ணே…”
“பிரிஞ்சு போன பிறகு பேசிக்கவே இல்லையா நீங்க?” எனக் கேட்டதும் அவனிடத்தில் அமைதி. உள்ளுக்குள் பீதி பரவியது.
“பிராமிஸ் பண்ணி இருக்க ராம்… உண்மையை சொல்லு! அந்த பொண்ணு பேசினாளா? அதுக்கு நீ என்ன பதில் சொன்ன? உன்னை விட்டுப் பிரிஞ்சதுக்கு அப்புறம் அவளோட நெலம என்ன?” கடினக்குரலில் அழுத்தமாகக் கேட்க, இயந்திரத்தனமாய் பதில் வந்து விழுந்தது.
“கன்சீவா இருக்கேன்னு சொன்னா… கல்யாணம் பண்ணிபோம்ன்னு கம்பெல் பண்ணினா! எனக்கு மேரேஜ், பேபி ரெண்டுலயும் உடன்பாடு இல்ல. அதான், சேர்ந்து வாழ மட்டுமே பேசிகிட்டோம்… மத்த எந்த விஷயத்துக்கும் கம்பெல் பண்ணாதேன்னு சொல்லிட்டு அவளை விட்டு விலகிட்டேன்!” இறங்கிய குரலில் கூறிமுடித்து எச்சில் முழங்கினான்.
“அப்புறம் அவ குழந்தை பெத்துகிட்டளா?”
“ஹாங்… ட்வின்ஸ் பிறந்திருக்குன்னு பிக் அனுப்பி மெசேஜ் பண்ணா… எனக்கு அதைப் பாக்கவே அலர்ஜியா இருந்தது. அதுவுமில்லாம இதை வச்சே என்னை லாக் பண்ணவும் சான்ஸ் இருக்குன்னு அவளை மொத்தமா பிளாக் பண்ணிட்டேன்!” மிடறு விழுங்கி மொத்தமாக கூறி முடிக்கவும், அலைபேசியில் காரிதுப்பாத குறையாக வெறுப்பான பார்வையை உமிழ்ந்தான் அரவிந்தன்
“ஃபிரெண்ட்ஷிப் வித் பெனிபிட்ஸ்-ல லைஃப் என்ஜாய் பண்றது தப்பில்ல ண்ணே… போற இடத்துல எல்லாம் குடும்ப கௌரவத்தை நினைச்சு தயங்கிட்டு நின்னா, இந்தக் காலத்துல சந்தோசமா வாழ முடியாது ண்ணே…
“இது தப்பு, கேவலம்னு தோணலையா ராம்… தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை நம்பி உன் பிள்ளைகளை பெத்து வைச்சிருக்க பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற?”
“சாரி ண்ணே… எப்பவும் ஒரே பதில்தான். விஷயம் தெரிஞ்சதுமே அவகிட்ட வேண்டாம்னு சொல்லிட்டேன். அதையும் மீறி அவளோட ஆசைக்கு, அவ பிள்ளைய பெத்துருக்கா! இதுல நான் எங்கே வர்றேன்?”
“அந்த குழந்தைகளுக்கு அப்பாங்கிற அடையாளத்தை நீ கொடுத்திருக்கடா!”
“இந்த சென்டிமெண்டல் லாக்-ல சிக்கிடக் கூடாதுன்னு தான் அவளையே அவாயிட் பண்ணிட்டு வந்தேன். இப்பவும் அதேதான்! நீ என்ன எடுத்துச் சொன்னாலும் மேரேஜ், ஃபாமிலி கமிட்மெண்ட்ஸ் எனக்கு வேணாம்.
தூரமா இருந்து பழகற சந்தோசம் எனக்கு போதும். பொழுதுக்கும் பொதிமுட்டையை சுமந்துட்டு திரியுற கழுதையா நான் இருக்க விரும்பல…” என்றவனின் பார்வை அண்ணனை ஜாடையாக உரசிப் பார்க்க, கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே வெகுண்டு போயினர்.
“ஆக மொத்தம் எங்க எல்லாரையும் கழுதை கூட்டம்னு சொல்றியா ராம்?” கோபமாக சீறினார் கதிரவன்.
அந்த நேரம்தான் இந்தப் பேச்சு வார்த்தை அனைவரின் முன்பும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதிர்ந்தான் ராம்சங்கர்.
“அண்ணே… பக்கத்துல மாமா இருக்காறா?”
“எல்லாருமே இருக்காங்க ராம்! ஹனியாவோட அப்பா உன் ரெண்டு பிள்ளைகளையும் எடுத்துட்டு, நம்ம வீட்டுல ஒப்படைக்க வந்திருக்காரு! இப்ப என்ன பதில் சொல்றது?” கோபமோ, துவேசமோ இல்லாத வெறுமை மட்டுமே விரவிக் கிடந்தது அரவிந்தனின் கேள்வியில்.
“நீங்க எப்படி லாக் பண்ணினாலும் என் பதில் நோ தான்! எனக்கு வேண்டாம்… இதை எங்கேனாலும் சொல்ல நான் ரெடி!” ராம் ஆவேசமாய் கூறியதும்,
“பரதேசி நாயே… நேருல வந்து சட்டையை பிடிக்க முடியாதுங்கிற தைரியத்துல பேசுறியா லே?” பல்லிடுக்கில் கோபத்தை அடக்கி வசைபாடினார் ஹக்கீம்.
‘அந்தக் குடும்பத்தை பார்த்த வரையில் எவ்வித பாதகமும் சொல்ல முடியவில்லை. ஆனால் இவன் மட்டும்தான் வௌவாலாக தலைகீழாக தொங்கிக்கொண்டு துஷ்டனாக இருக்கிறான்.’ என்பதும் அவருக்கு புரிந்து போனது.
இனி என்ன எனும்படியாக அனைவரும் அரவிந்தனின் முகம் பார்க்க, அவனுமே தம்பியின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தான்.
“உங்க மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். என்னை கிராஸ் குவஸ்டீன் பண்ற ரைட்ஸ் உங்க பொண்ணுக்கே இல்லாத போது, நீங்க எப்படி என்னை கேள்வி கேக்கலாம். குழந்தைங்கள் உங்க பொண்ணோட சொத்து. அதை வைச்சுகிறதும் வேண்டாம்னு நிராகரிக்கிறதும் உங்க இஷ்டம். என்னோட இந்த முடிவும் மாறாது!”
“ரெண்டுநாள் நல்லா யோசனை பண்ணிட்டு சொல்லு ராம்!” அரவிந்தன் இடையிட்டு எச்சரிக்க,
“தேவையில்ல ண்ணே… எந்நேரமும் கழுத்துக்கு கத்தியா சொந்தபந்தம் இருக்கக்கூடாதுன்னு தான், நான் வெளிநாட்டுக்கு வந்ததே… எனக்கு என் சந்தோசம் மட்டுமே முக்கியம். இதுல என்ன தப்பு இருக்கு?”
கறாரான பேச்சு… குற்றவுணர்வோ பரிதவிப்போ இல்லாத அலட்சிய பாவனை, யாரையும் எதிர்த்து நிற்கும் கண்மூடித்தனமாக திமிர்த்தனமுமாக பேசிய சகோதரனை அந்த நிமிடமே வெறுத்து ஒதுக்கினான் அரவிந்தன்.
“அற்ப சந்தோசத்துக்காக சாக்கடையில புரண்ட பன்னிய ஆதரிக்கிற மனசு எனக்கோ என்னைச் சேர்ந்தவங்களுக்கோ இல்ல ராம்… உன்னோட உறுதியான முடிவுல திடமா நின்னுக்கோ! எப்போவும் எங்களைத் தேடி வந்துடாதே!” கடினப்பட்டு வந்த அரவிந்தனின் வார்த்தைகள் ராம்சங்கர் உடனான பேச்சோடு ஒட்டு மொத்த உறவையும் வெட்டி முறித்திருந்தது.