பூந்தளிர் ஆட… 13
பூந்தளிர் ஆட… 13
பூந்தளிர்-13
அரவிந்தலோசனின் மறுநாள் விடியல் அத்தனை கோபத்தையும் எரிச்சலையும் தாங்கிக் கொண்டு விடிந்தது. இருமலோடு கரகரத்து அழும் குழந்தையின் அழுகுரலில் இவன் கண் விழித்துப் பார்க்க, அம்மு அறையின் கதவருகே அமர்ந்து தரையை தட்டிக் கொண்டே அழுது கொண்டிருந்தாள்.
“ஏய், ஏன் அழுகுற?” கோபமாக அதட்டியவன்,
“சாலா எங்கே போனா?” குழந்தையிடம் கேட்பவனாக பேசிவிட்டு அறையைப் பார்வையால் அலசினான். அவள் எங்கும் இல்லை.
குழந்தை சமயோசிதமாய் கதவை தட்டி அழுகையில் கரைய, “கீழே போயிருக்கா போல… அதான் கதவு கிட்ட உக்காந்திருக்கு.” என்றவன் எழ முற்பட, பயத்தில் அம்முவின் குரல் மேலும் உயர்ந்தது.
“அட, என்னைப் பார்த்து பயப்படுறியா? நேத்துல இருந்து நீதான் எல்லார் கண்ணுலயும் பூச்சி பறக்க வைச்சுட்டு இருக்க!” பேசியபடியே அம்முவின் அருகில் வர, என்ன புரிந்ததோ அரவிந்தனின் காலைப் பிடித்துக்கொண்டு சட்டென்று எழுந்து நின்றாள் குழந்தை.
“என்னவாம் உனக்கு?” கேட்டவனாக கதவின் மேல் கையை வைக்க, அவனது இரவு உடையை பற்றி இழுத்து, ஒரு கையை அகல விரித்தாள் அம்மு.
குழந்தையின் செயலைப் பார்த்ததும் இவனுக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. தாய்மாமனாக ஐந்து பிள்ளைகளை தோளில் போட்டு வளர்த்தவன் தானே! எத்தனை நேரம்தான் குழந்தையிடத்தில் கோபத்தை காட்டுவான்?
“காரியத்துல கண்ணா இருக்கியே அம்மு!” என்றவன் சிரிப்போடு குழந்தையை அள்ளிக்கொள்ள, அழுகை மாயமாய் மறைந்து போனது.
“சாலாவ தேடுவோமா?” அம்முவிடம் பேச்சுக் கொடுக்க, அழகாய் வெளியே கை காட்டினாள்.
அழுகை குறைந்த விசும்பலோடு குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே வந்தான். அங்கே காலை ஏழு மணியின் பரபரப்பு வழக்கம் போல் தொற்றிக் கொண்டிருக்க கண்களால் மனைவியைத் தேடினான்.
“அண்ணி பெரிய கிச்சன்ல இருக்காங்க ண்ணே!” வேலைக்காரப் பெண் செல்வி, மாவு வாளியை தூக்கிக் கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள்.
தினப்படி வேலை நடக்கும் பெரிய சமையற்கூடத்திற்கு வந்து நின்றான். அங்கே சாமான்களை எடுத்துக் கொடுத்து விட்டு, அடுப்பை பற்ற வைத்துக் கொண்டிருந்தாள் கிருஷ்ணா.
வீட்டு எஜமானி அடுப்பை பற்ற வைத்து, வேலையை துவக்கி வைப்பது அந்த வீட்டின் வழமையாக இருக்க, கிருஷ்ணா அதன்படியே செய்துவிட்டு நெய் டின்னை உடைக்க முயன்ற நேரத்தில்,
“இந்த வேலைய எப்ப இருந்து பாக்க ஆரம்பிச்சே?” அங்கே வந்து நின்ற அரவிந்தன் கடுப்பாகக் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் கிருஷ்ணா.
“ஷப்பா… நீங்களா? நானும் யாரோன்னு பயந்துட்டேன்.” என்றவள் குழந்தையை பார்த்து, “அம்மு, அதுக்குள்ள முழிச்சுட்டாளா? மருந்து மாத்திரைக்கெல்லாம் பெரியவங்களுக்கு தான் அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வரும்போல…” இவள் பேச ஆரம்பிக்க,
“பேசினது போதும், பிடி இவளை!” அரவிந்தன் கடுகடுக்க,
“அட, நம்ம மாஸ்டருக்கு கோபப்படக் கூடத் தெரியுமா?” அதிசயமாகப் பார்த்தாள் செல்வி.
“பக்கா குடும்பஸ்தனா புரமோட் ஆகுறாரு செல்வி! நேத்துல இருந்து ஒரே சரவெடிதான்! அப்படித்தானே மாஸ்டர்?” சிரிப்போடு கை துடைத்துக் கொண்டே குழந்தயை வாங்கிக் கொள்ள, சப்பென்று கிருஷ்ணாவின் கன்னத்தில் அடித்தாள் அம்மு.
“அடி குட்டிப் பிசாசு! அவரைச் சொன்னா உனக்கு கோபம் வருதா?” குழந்தையை கடிந்த நேரத்தில் பரிமளம் வந்து நின்றார்.
“இப்பதான் எந்திரிச்சு வர்றியாமா?” முகச்சுழிப்போடு கேட்டான் அரவிந்தன்.
“ஆமாப்பா, ஏன் கேக்குற?”
“எப்ப இருந்து இந்த வேலையெல்லாம் இவ தலையில கட்டுன?” குறையாத கோபத்துடன் கேட்க,
“என்னங்க இது?” இடையிட்ட கிருஷ்ணாவை கடுப்புடன் பார்த்தான்.
“உன்கிட்ட கேட்டப்போ, பதில் சொன்னியா நீ? இடையில வராதே!” மனைவியின் வாயை அடைத்தவன், தாயின் முகம் பார்க்க,
“உடம்பு முன்ன மாதிரி வளைய மாட்டுது அரவிந்தா! அதான்…” பரிமளம் இழுக்கும்போதே,
“நான்தான் காலைநேரம் கிச்சனை பாத்துக்கறேன்னு சொன்னேங்க! பதினைஞ்சு நாளா இப்டி மாத்தி பாக்க போயிதான் அத்தைக்கு பீபி கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கு.” காரணம் கூறினாள் கிருஷ்ணா
“பதினைஞ்சு நாளாவா? என்கிட்டே நீ சொல்லவே இல்லையே?”
“நீங்க எந்திரிக்கிற நேரம் என் வேலை இங்கே முடிஞ்சிருக்கும். அதான் உங்களுக்கு தெரியல. அதனால என்ன? நம்ம வீட்டு வேலைதானே!” சமாளித்தவளை முறைத்தான்.
“வீட்டு வேலை, இந்த குட்டிச்சாத்தான் வேலை எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்வேன்னு தெரிஞ்சிருந்தா, உன்னை தேனியில இருந்து கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன். அங்கேயே இருந்து ஒழுங்கா பாடம் எடுக்கிற வேலையை மட்டுமே பாக்கச் சொல்லியிருப்பேன்!” சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ளினான்.
“அம்மா, உனக்கு முடியலன்னா… ரெண்டு ஆளை கூட அதிகமாக வேலைக்கு வச்சுக்கோ! இப்படி ஒருத்தி தலைமேல எல்லா வேலையும் கட்டப் பாக்காதே!” வேலையாட்களின் முன்பே வார்த்தைகளை தணலாய் கொட்டி முடிக்க, பரிமளத்தின் மனது பெரிதாய் அடிவாங்கியது.
யார் எப்படிப் பேசினாலும் கோபம் கொள்ளாமல், தனது மனதில் இருப்பதை புன்னகையோடு உரைப்பவன் அரவிந்தன். இன்று ஏனோ பெற்றவளை குற்றமாகச் சொல்ல அவரின் மனம் வெகுவாய் கலங்கிப் போனது.
“அப்படியென்ன பெரிய பொறுப்பை அவ தலையில நான் சுமத்திட்டேன்?” தாளமுடியாமல் தாய் கேட்க,
“கடுப்பை கிளப்பாதேம்மா! நான் பாக்கிற நேரமெல்லாம் இவ ஏதாவது ஒரு கை வேலையாத்தான் இருக்கா!” நேருக்குநேராய் சொல்லிவிட்டு,
“இப்படியே இருந்தா, என்னை மறந்து போயிடுவ நீ!” மனைவிக்கும் நல்வாக்கு கூறிவிட்டு மேலே சென்றான்.
‘என் மனைவி, என் அருகில் இருப்பதில்லை.’ என்கிற குற்றச்சாட்டு மறைமுகமாக இருக்க, பரிமளம் பதில் பேசத் தெரியாமல் நின்றார்.
“மனசுல எதுவும் வச்சிக்காதீங்க அத்தே… நேத்துல இருந்து கொஞ்சம் சிடுசிடுன்னுதான் இருக்காரு!”
“இப்படி எல்லாம் இவன் பேசுறவன் இல்ல கிருஷ்ணா… எல்லாம் இந்த சின்னதுகள பார்த்துதான் இவனுமே விலகிப் போக நினைக்கிறான் போல!” மகனின் கோபத்திற்கு காரணம் கண்டுபிடித்து வேதனைப்பட்டார்.
“கவலைப்படாதீங்க அத்தே… உங்க உடம்புக்கு நல்லதில்ல!” கிருஷ்ணா கூறும் பொழுதே,
“மாமியாள அப்புறமா சமாதானப்படுத்திக்கலாம். நீ மொத உம் புருசனைப் போயி பாரு ஆத்தா! இனிமேட்டு அவன் இருக்கிற நேரம் நீ கீழே இறங்காதே!” அறிவுரையுடன் அவளை மேலே அனுப்பி வைத்தார் மனோன்மணி.
கிருஷ்ணாவிற்கும் கணவனின் பேச்சு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது. ‘இத்தனை கோபமில்லாமல் சற்று நாசூக்காய் அம்மாவிடம் பேசி இருக்கலாம். ஏன்தான் இப்படியோ?’ ஆதங்கப்பட்டது அவள் உள்ளம்.
‘நேற்றைக்கு என்மீது உண்டான கோபத்தை இன்னும் தூக்கிச் சுமந்து கொண்டு நிற்கிறானோ?’ யோசித்த வேளையில், முன்தினம் இருவருமே பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது.
மருத்துவமனை சென்று வந்த, நள்ளிரவை தாண்டிய வேளையில், ‘உன் மனதில் எடுத்திருக்கும் முடிவு என்ன?’ என அரவிந்தன் கேட்டதற்கு,
“பிள்ளைகளுக்கு பேர் வச்சது அவ்வளவு பெரிய தப்பா?” எதிர்கேள்வி கேட்டு நின்றாள் கிருஷ்ணா.
“அது உனக்கு வேண்டாத வேலைன்னு சொல்வேன். இன்னும் ஒரு வாரமோ பத்துநாளோ இங்கேயிருந்து போகப்போற புள்ளைங்க மேல இத்தனை அக்கறை தேவையில்லாதது, நமக்கு அவசியம் இல்லாததும் கூட…” அடக்கப்பட்ட கோபத்தில் பதில் அளித்தான்.
“இங்கே இருக்கிற வரைக்கும் அவங்க, என் பொறுப்புன்னு சொன்ன பிறகு என்னால உங்களை மாதிரி நினைக்க முடியாது ரவி!”
“அதுக்காக ஹாஸ்பிடல்ல பெத்தவங்க பேரா, நம்ம பேரை சொல்வியா? அந்தத் தறுதலைங்க பேரை சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?” தான் ரௌத்திரமானதற்கு காரணத்தை கொட்டி விட்டான் அரவிந்தன்.
“தன்னோட குட்டியை காப்பாத்துற ஐந்தறிவு நாயை விட கேவலமாத்தான், அந்த ரெண்டு தறுதலைகளையும் பாக்கறேன். தன்னோட நியாயத்தை மட்டுமே பெருசா நினைச்சு, பொறுப்பு கழிஞ்சதுன்னு இங்கே விட்டுட்டு போன பெரிய மனுசனையும் அவங்க லிஸ்டுல சேர்த்துட்டேன்! அப்பேற்பட்ட கேவலமானவங்க பேரச் சொல்லி குழந்தைகளை அடையாளப்படுத்த எனக்கு மனசு வரல. அதான், அப்படி சொன்னேன்!”
“நீயே வலியப் போயி, சுமைய வாங்கிக்கிற சாலா! இது நல்லதுக்கு இல்ல!”
“அனாதையா இருந்திடலாம் ரவி! ஆனா ஒரு வீட்டுல அனாவசியமான ஜீவனா மட்டும் ஒரு பொழுது கூட யாரும் வாழ்ந்துடக் கூடாது. இந்த குழந்தைங்க இங்கே இருக்கற வரைக்கும் அப்படி பாக்க எனக்கு இஷ்டம் இல்ல. என்னோட இந்த எண்ணத்தை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டாலும் எனக்கு கவலை இல்லை. இங்கே இருக்கிற வரைக்கும் இவங்களை இந்த வீட்டு ஆளா மட்டுமே பாக்க நினைக்கிறேன்!”
“இப்படி பாவம் பார்த்து பாசம் வைக்காதே! பின்னாடி அவஸ்தைபடப் போறது நீதான்! அப்போ உனக்காக பரிஞ்சு பேச யாரும் வரமாட்டாங்க! நான் உள்பட…” கறாராகக் கூறி மனைவியை எச்சரித்தான்.
“என் கஷ்டத்தை உங்க மேல இறக்கி வைக்க மாட்டேன்!” வெடுக்கென்று கூறிவிட, கணவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.
“அப்புறம் எதுக்குடி இந்த நடுராத்திரியில என்னை இழுத்துட்டு வேகமா ஆஸ்பத்திரிக்கு கெளம்புன? தைரியமா நீயே வண்டியை வரவைச்சு நீ மட்டும் போயிருக்கலாமே?” குதர்க்கமாய் கேட்க
“நான் அப்படி போயிருந்தாலும் பொண்டாட்டி மேல இருக்கிற அக்கறையில நீங்க எங்கூட வந்திருப்பீங்க ரவி!” கணவனைப் புரிந்து கொண்டவளாகப் பேசியவள்,
“இதுக்கு மேல பேச வேணாம். எனக்கு தூக்கம் வருது.” என்றுவிட்டு கீழே படுக்கையை விரித்து குழந்தையோடு உறங்கிப் போனாள்.
‘சரியானதொரு பதிலைச் சொல்லாமல் மிதப்பாக தான் பேசியதின் எதிர்வினையை இப்போது கணவன் ஆரம்பித்துள்ளான்.’ என்றுணரும் போது புன்னகையோடு இயல்பான கோபமும் சேர்ந்து கொள்ள, கணவனை கடிந்து கொண்டாள் கிருஷ்ணா.
“பெரியவங்க முகம் பாக்காம பேசினது கொஞ்சங்கூட நல்லா இல்ல மாஸ்டர்! என்மேல இருக்கற கோபத்தை அங்கே இறக்கி வைச்சுட்டு வந்திருக்கீங்க! உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கல.”
“நான் ஒன்னும் கடவுள் அவதாரம் இல்லடி! சாதாரண மனுஷன்தான். எல்லா நேரமும் சிரிச்சுட்டு இருக்கணும்னா நான் பைத்தியமாதான் மாறணும்.”
“கடவுளே… வீடு இல்ல ஊரே ரெண்டு படும்போல உங்க கோபத்துல…” காதுகளை பொத்திக் கொண்டு அவனுக்கு தேவையானதை செய்து கொடுக்க ஆரம்பித்தாள் அப்பொழுதும் சிரிப்பேனா என முறுக்கிக் கண்டு அலைந்தான் அரவிந்தன்.
என்றும் இல்லாத திருநாளாக காலை காபியில் இருந்து உணவையும் தனது அறைக்கே வரவழைத்து உண்ண, கீழே பெற்றவளின் மனம் சொல்ல முடியாத வருத்தத்தில் அழுந்தத் தொடங்கியது.
பிறந்த வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாலும் தினசரி அம்மாவை அழைத்து பேசுவதை மகள்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அதன்படியே அன்றைய காலைநேரம் சுதாமதி அம்மாவை அழைத்துப் பேச ஆரம்பிக்க, நேற்று இரவில் தொடங்கி தற்போது அரவிந்தன் கோபம் கொண்டு அறைக்குள் உணவை முடித்துக் கொண்டது வரை கூறி முடித்தார் பரிமளம்
“மனசே ஆற மாட்டுது சுதா! இந்த பையன் இப்படி மாறிப்போவான்னு நான் நினைச்சுகூட பாக்கல… பொண்டாட்டி மேல காட்டுற கரிசனத்துல பாதி, எனக்காகன்னு பார்த்தா கூட, நான் எவ்வளவுக்கு தவிச்சுட்டு இருக்கேன்னு அவனுக்கு புரிஞ்சு போயிடும்.” ஆதங்கத்தை கொட்டி தழுதழுத்து விட்டார்.
“இவேன் இப்படின்னு உனக்கு இப்பதேன் புரிஞ்சுதா ஆத்தா? எப்போ பொண்டாட்டிக்கு பார்த்து அவளை வேலைக்கு அனுப்பி வைச்சானோ… அப்பவே உனக்கு தெரிஞ்சுருக்க வேணாமா?” புகையை நன்றாக ஊதி நெருப்பாக்கத் தொடங்கினார் சுதாமதி.
“அவ மேல என்ன தப்பிருக்கு? இவேன்தான் எல்லாத்தையும் இழுத்து வைச்சு பேசுறான்!” பரிமளம் மருமகளுக்காக பேச,
“அட அம்மா, அவ நல்ல பிள்ளையா நடமாடிட்டு, புருசனை பின்னாடி இருந்து தூண்டி விடுறா! அதுகூட தெரியலையா உனக்கு? உன் புள்ள, அவ புருஷனா மாறி ரொம்ப நாளாச்சு. வீணா கண்ண கசக்காதே! எந்த சாக்குபோக்கும் சொல்லாம இந்த குட்டிபிசாசுகள எங்கேயாவது விட்டுட்டு வர்ற வழியப் பாருங்க!” வேண்டாத பொல்லாப்புகளை பெற்றவளின் மனதில் ஏற்றி வைத்து பேச்சினை முடித்தார் சுதாமதி.
பரிமளத்தின் குழப்பக் காடுகளில் அடைமழை கொட்டித் தீர்த்தது. எங்கு திரும்பினாலும் தான் தனித்து நிற்பதாகவே எண்ணிக் கொண்டார். ஏற்கனவே இளைய மகனின் சீரழிவு மற்றும் மகள்களின் பாராமுகத்தில் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருக்க, இப்பொழுது பெரிய மகனின் நடவடிக்கைகளைப் பார்த்து உறவுகளின் மீதான நம்பிக்கை முற்றிலும் தளர்த்தி இருந்தார்.
இளம் வயதில் கணவரின் அகலா மரணத்திலும் கூட இத்தனை தூரம் கலங்கி நின்றிருக்க மாட்டார். ஐந்து பிள்ளைகளின் அருகாமையும் மற்றொரு தாயாக வழிக்காட்டிய நாத்தனார் கொடுத்த நம்பிக்கையுமே அவரை தன்னம்பிக்கை கொள்ள வைத்து, சோர்ந்து போகவிடாமல் எதிர்காலத்தை வெற்றி காணச் செய்திருந்தது.
இன்று அந்த நம்பிக்கையும் பாசமும் தன்னை நிராதரவாய் விட்டுச் சென்றதைப் போன்ற மாயத்தோற்றம் அவரை தலைகீழாய் சிந்திக்க வைத்தது.
சுதாமதியிடம் இவர் பேசிய பேச்சு, கை கால் முளைத்து வீட்டு மாப்பிள்ளைகளுக்கும் கிருஷ்ணாவின் பிறந்த வீட்டிற்கும் பல கோணங்களில் சென்றடைந்தது
நடப்பவைகளை கேட்டு கோவர்தனன் மிகுந்த கோபம் கொண்டார். வீடென்றால் பலவித பிரச்சனைகள் வருமென்று விசலாம் பாட்டி சமாதானம் கூறினாலும், அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கணவரின் கூற்றுக்கு தப்பாமல் தாளம் போட்டார் கோமளவல்லி.
“இவங்க வீட்டு புள்ள செஞ்ச தப்புக்கு, நம்ம வீட்டுப் பொண்ணு பொதி சுமக்கிறதும் இல்லாம, இப்ப பழியும் வந்து சேருதா? என்னனு விசாரிச்சுட்டு நியாயம் கேட்டுட்டு வாங்க!” கணவனை முடக்கி விட்டார் மனைவி.
தங்களது ஆதங்கத்தை கதிரவனிடம் கொட்டி வைக்க, ஆதரவாகப் பேசி, அவர்களின் விசுவாசியாக மாறிப்போனார் கதிரவன். என்னே ஏதென்று கேட்டு முடிவெடுப்போம் என்று கூறி கோவர்தனை மதுரைக்கு வருமாறு அழைத்தும் விட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து கிருஷ்ணாவைப் பாக்க வருவதைப் போல கோவர்த்தனன் மனைவியோடு அரவிந்தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
விருந்தாளிகள் வந்ததை ஒட்டி மதியம் உணவு நேரத்தில் அரவிந்தனும் வீட்டிற்கு வந்துவிட, அந்த நேரத்தில் கதிரவனும் முகிலனும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“வாங்க மாமா!” மனம் நிறைந்து அவர்களை வரவேற்ற அரவிந்தன், “நானே உங்கள பாக்க வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க! பெரிய மனுசன்னு ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கிறீங்க மாமா!” மனம் திறந்து பாராட்டி பேச,
“உன் பாராட்டை கேக்க நான் வரல மாப்புள… கோவர்தன் தம்பி அழைச்சு, நான் இங்கே வந்திருக்கேன்!” கதிரவன் சொல்ல குழப்பமாக அவரை பார்த்தான் அவிந்தன்
வீட்டில் இருந்த பெண்களுக்கும் அவர் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. கிருஷ்ணாவும் அக்காவின் முகம் பார்க்க, பொறு என்று பார்வையால் மட்டுமே பதில் அளித்தாள் கோமளவல்லி.
“உங்களை விட்டுட்டு விருந்து சாப்பிட மனசு வந்திருக்காது மாமா!” வழக்கமான தனது விளையாட்டுப் பேச்சில் அரவிந்தன் சமாளிப்பாக சொல்லவும், அவனது பேச்சினை தடுத்து நிறுத்தினார் கதிரவன்.
“மொதல்ல அவங்க பேசட்டும் அரவிந்தா… அப்புறம் நீ பேசலாம்.” என்றவர் கோவர்தனனின் முகம் பாக்க அவரோ பெரும் தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்.
அவருக்கு அத்தனை எளிதில் தர்க்கம் வளர்த்து நியாயம் கேட்க மனம் வரவில்லை. அதன் காரணம் கிருஷ்ணாவின் முகத்தில் தென்பட்ட மலர்ந்த சிரிப்பு. கள்ளம் கபடம் இல்லாமல் நிறைவான மனதுடன் வரவேற்ற பரிமளம், மனோன்மணியின் கனிவான பேச்சு.
அதற்கும் மேலே தங்களுக்காக தனது வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்த அரவிந்தனின் பெருந்தன்மை. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு இவர்களின் மேலே குற்றம் கூற பெரும் தயக்கம் வந்திருந்தது.
ஆனாலும் நடப்பவை யாவும் தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு பாதகமாக இருக்கும் நிலையில், தான் எண்ணி வந்ததை பேசத் தொடங்கினார்.
“அது ஒண்ணுமில்ல சகல… கொஞ்சநாள் கிருஷ்ணாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமுனு வந்திருக்கோம்.” சொல்லி முடித்து அனைவரின் முகம் பார்த்தார்.
“எதுவும் விசேஷம் வைக்கப் போறீங்களா மாமா?” ஆர்வமுடன் கேட்டாள் கிருஷ்ணா.
“அதெல்லாம் ஒன்னுமில்ல ம்மா!”
“ஸ்கூல் வொர்க் எதுவும் பென்டிங் இருக்கா ண்ணே?” கேட்டது அரவிந்தன்.
“இல்ல தம்பி, எங்க வீட்டுப் பொண்ணை அழைச்சிட்டுப் போயி சீராட்ட காரணம் வேணுமா?” சற்று கடுசாக பேசியதும் பரிமளத்திற்கு ஏதோ புரிவது போல இருந்தது.
“வாக்கப்பட்டு வந்த பொறவு, பொறந்த வீட்டுக்கு காரணத்தோட சீராடப் போனாத்தான் என் வீட்டு மருமவளுக்கு பெருமை தம்பி! இங்கே வேலை தலைக்கு மேல கெடக்கு. ஒரு பதினைஞ்சு நாள் போகட்டும். நாங்களே அனுப்பி வைக்கிறோம்.” கறாராகப் பேசினார் பரிமளம்.
“வீட்டு மருமவளா, வேலை எடுத்து செய்யுறதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன் அத்தே… ஆனா வேண்டாம்னு தட்டிக் கழிச்ச புள்ளைக பொறுப்பை அவ தலைமேல ஏத்தி வைக்கிறதுதான் எங்களுக்கு சரியாப்படல!” கோவர்த்தனன் கூறியதும் மூத்த பெண்களின் மனம் சோர்ந்து போனது.
“ஏன் மாமா இந்த விசயத்தை பிரச்சனை ஆக்குறீங்க?” எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.” கிருஷ்ணா தன்மையாகக் கூறினாலும் கேட்டுக் கொள்ளும் நிலையில் கோவர்தனன் இல்லை.
“உன் தலைமேல பாரம் ஏறுதுடி! உனக்குதான் தெரியல!” அக்கா புரிய வைக்க முயற்சிக்க, தங்கை பலமாக மறுத்தாள்.
“எந்த சமாதானமும் சொல்லாதே கிருஷ்ணா! இந்த குழந்தைங்கள வெளியே கொண்டு போயி விடுற வரைக்கும் நீ இங்கே இருக்க வேணாம். எங்க கூட வந்துடு!” முடிவாகக் கூறவும் அரவிந்தனுக்கே கோபம் வந்தது.
“அவளே கஷ்டமில்லன்னு சொல்லும்போது எதுக்கு இத்தனை அழுத்தம் கொடுக்கிறீங்க ண்ணே?”
“பின்னே எங்க வீட்டுப் பொண்ணு ஆயா வேலை பார்த்துட்டு இருக்கறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கச் சொல்றீங்களா தம்பி?” கோமளவல்லி குரலை உயர்த்த,
“உங்க வீட்டுப் பொண்ணையே, அவங்க மாமியார் இதே காரணம் சொல்லி கூட்டிட்டு போயிட்டாங்க! அதும் நெறமாசமா இருக்கிற புள்ளத்தாச்சிய… அப்போ நாங்க மட்டும் என்ன…” மேற்கொண்டு எல்லை மீறி வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டார் கோவர்தனன்.
“அரவிந்தா… பேசிட்டே இருந்தா, முடிவு கிடைக்காது. நீ தங்கச்சிய அனுப்பி வை! எவ்வளவு முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அந்த சின்னதுகள தட்டிக் கழிக்கப் பாரு! எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா இரு!” தீர்மானமாகக் கூறிய கதிரவன், பெண்களின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“யார் என்ன அபிப்பிராயம் சொன்னாலும் காதுல வாங்கி, தேங்கி நிக்கிறத மொதல்ல நிறுத்து. பொம்பளைங்க மனசு எப்பவும் எல்லாரையும் ஒரே மாதிரி பாசத்தோட மட்டுமே பாக்கும். அதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை அந்தரத்துல ஆட ஆரம்பிச்சிடும். இப்ப நீ பதில் சொல்ல முடியாம திணறிட்டு நிக்கிற மாதிரி…” சுட்டிக்காட்டிப் பேச பொறுமையிழந்து போனான் அரவிந்தன்.
“ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இப்படி குழப்பிட்டே இருந்தா, நான் எதைன்னு பாக்க? யார் சொல்றதை தான் கேக்குறது? பெரியவங்க சொல்றதை தட்டாம கேட்டுச் செய்யணும்னு வளர்த்து விட்டுட்டு, இப்ப நீங்களே அது தப்புன்னு சொன்னா நான் என்னதான் பண்றது மாமா? இந்த பிரச்சனையில தொழில்ல கூட என் கவனம் சிதறிப் போகுது. என்னை யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்களா?” சலிப்போடு ஆதங்கத்தை கொட்டியவன், கோவர்தனனை பார்த்து,
“ஒரு வாரம் பொறுங்க ண்ணே… இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். அதை விட்டுட்டு பெரிய பேச்செல்லாம் பேச வேண்டாம். என் பொண்டாட்டியை எப்படி மதிப்பா வச்சு வாழணும்னு, எனக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியமில்ல” சமாதானமாக கூறிவிட்டு, கதிரவனை அழுத்தமாய் பார்த்தான்.
“நான், நீங்க பார்த்து வளந்த பையன் மாமா! எனக்காக பேசுறதை விட்டுட்டு, இவருக்கு பரிஞ்சுட்டு வந்துருக்கீங்களே… இவ்வளவு தானா உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உறவு?” பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான்
“உன்னை யாருய்யா தள்ளி நிறுத்துனது? இப்பவும் நீ என் மனசுக்கு பிடிச்ச மாப்புள தான். உன்னை மாப்பிள்ளையாக்கி உறவை பலப்படுத்திக்க பெண் பிள்ளை இல்லையேன்னு வருத்தப்பட்ட அதே மாமனாதான் இப்பவும் இருக்கேன். அதுக்காக இங்கே நடக்கிற அழிச்சாட்டியத்துக்கு பரிஞ்சு பேசி, என்னால அமைதியா இருக்க முடியாது. உன் வாழ்க்கை மட்டுமில்ல அந்த பொண்ணோட ஆசையும் மண்ணாப் போறதை வேடிக்கை பாக்கச் சொல்றியா அரவிந்தா?” காட்டமாகவே கேட்டார் கதிரவன்.
“முப்பது வயசுக்கும் மேல, அம்மா குடும்பம்னு பார்த்து உனக்காக எப்போ நீ வாழப்போற? உன்னை நம்பி வந்தவளுக்காவது நீ நியாயம் செய்ய வேணாமா?”
“இப்ப நான் என்ன வாழாம போயிட்டேன்? பேசிட்டே இருந்தா முடிவு கிடைக்காது மாமா!”
“நீ தனிக்குடித்தனம் போயிடு அரவிந்தா… சுலபமா முடிவு கிடைச்சிடும்!” சட்டென்று அதிராமல் பேசிய பரிமளவல்லியை பார்த்து அனைவருமே திகைத்தனர்.
“நீயும் ஏன்மா இப்படி பேசுற?”
“சரியாதான் சொல்றேன் தம்பி! இந்த சின்னதுகளால சொந்த பந்தங்களை பகைச்சிட்டு நீ வாழ வேண்டாம். நான் இன்னும் பாத்து வருசத்துக்கு மேல இருப்பேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. நான் இதுகளை வளத்துக்கறேன். ஒரு வயசுக்கு பிறகு இதுக ரெண்டும் தானா வளந்துட்டு போகட்டும். நீ யாரையும் பகைச்சிட்டோ உறவை முறிச்சுகிட்டோ தனிச்சு நிக்க வேணாம். நீ தனிக்குடித்தனம் போயிடுய்யா!” வேதனையோடு தீர்மானமாகக் கூறியவர்,
“எனக்கு எப்பவும் போல என் நாத்தனார் துணைக்கு இருப்பாங்க!” எனக் கூறி மனோன்மணியின் முகம் பார்க்க, அவருமே ஆறுதலாக தம்பி மனைவி கைப்பிடித்து பேச்சற்று நின்றார்.
அனாதை இல்லத்திற்கோ, விடுதிகளுக்கோ இந்தப் பிள்ளைகளை அனுப்புவதற்கு தான் தாயராக இல்லை என்பதை மறைமுகமாக உறுதியுடன் கூறி முடிக்க, பதில் பேச முடியாமல் அனைவருமே அதிர்ந்து போயினர்.