பூந்தளிர் ஆட… 6
பூந்தளிர் ஆட… 6
பூந்தளிர்-6
மறுநாளின் விடியலில் விசால கிருஷ்ணாக்ஷி அடைந்த வியப்பிற்கு அளவீடுகள் இல்லை. எதிர்பாராததை எதிர்பார்த்தாள்தான்! ஆனால், ‘இப்படியுமா. இவ்வளவுமா?’ மனதிற்குள் எழுந்த மலைப்பு அடங்கவே வெகுநேரம் ஆயிற்று. அத்தனையும் ஆச்சரியங்களாகக் கண்டு அகமகிழ்ந்த விசயங்கள்!
அதிகாலை ஐந்தரை மணிக்கு இவள் குளித்து கீழே வரும் நேரத்தில், அங்கே சுற்று வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் கிருஷ்ணாவை புன்னகையோடு வரவேற்று விட்டு தங்களது வேலைகளில் ஆழ்ந்து போயினர்.
அந்தச் சமயத்தில் கூடத்திற்கு வந்த சுதாமதியும், “உள்ளே போயி விளக்கு பொருத்திடு கிருஷ்ணா!” என்று பூஜையறையை கை காட்டிட, அந்தச் சிறிய அறைக்குள் சென்றாள். வெகு நேர்த்தியாய் இருந்தது அந்த சிறிய பூஜையறை.
புன்னகை முகத்தோடு மருமகளை வரவேற்ற பரிமளவல்லி, “கொழுந்து பூவ படங்களுக்கு மாலையா போட்டுட்டு, விக்கிரகத்துக்கு தனியா வெள்ள பூ சாத்திடு கிருஷ்ணா. திருமஞ்சனம் பண்ணின பிறகு நெய் விளக்கு ஏத்திடு!” என்றவர் கணவரின் படத்திற்கு மட்டும் தனது கைகளால் மாலை சாற்றிவிட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யத் தொடங்கி விட்டார்.
“செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை அப்புறம் மத்த விசேச நாள்ல இப்படித்தான் சாமி கும்பிடுவோம் அண்ணி. பூஜை முடிஞ்ச பிறகுதான் காபி, பலகாரம் எடுத்துக்கணும்!” என்றவாறே சுமதி உதவிக்கு வந்தாள்.
வீட்டுப்பெண் முறைமைகளைச் சொல்லச் சொல்ல மருமகள் அவ்வாறே செய்துவர, பூஜையை சிறப்பாக முடித்தனர். இத்தனை அதிகப்படியான அனுஷ்டானங்களை அவள் வீட்டில் கடைபிடித்ததாய் கிருஷ்ணாவிற்கு ஞாபகம் இல்லை. தினமும் இருவேளை விளக்கேற்றி இறைவனை வழிபடுவார்கள், அவ்வளவே!
காலைநேர உற்சாக பானமாக கருப்பட்டி காபியை கையில் திணித்த சாருமதி, “இங்கன இதேன் வழக்கம் கிருஷ்ணா. உனக்கு பிடிக்குமா?” பழக்க வழக்கத்தை கேட்க ஆரம்பித்தாள்.
“எனக்கு ஃபில்டர் காபி பழக்கம் அண்ணி!”
“நம்ம அரவிந்தன் அரைமணி நேரத்துக்கு ஒருக்கா காபி குடுத்தாலும் குடிச்சிட்டே இருப்பான். எல்லாரும் சொல்லிச் சொல்லி கொஞ்சம் குறைஞ்சிருக்கு!” சுதாமதி கூற,
“உன் பேரைச் சொல்லி இனி ஒரு ரவுண்டு ஃபில்டர் காபி அதிகமாக சாப்பிடப் போறான்.” பெருமை பேசிச் சிரித்தாள் சாருமதி.
“நீயும் இதையே குடிச்சாகணும்னு கட்டாயம் இல்ல. வழக்கத்தை மாத்திக்கிட்டா நாள் முழுக்க சோர்ந்து போயி உக்காரத் தோணும். செத்தநேரம் கழிச்சு ஃபில்டர் காபி போட்டுத் தரச் சொல்றேன். சிக்கரி சேக்கலாம் தானே?” சாருமதி கேட்க,
“நானே ஃபில்டர் போட்டுக்கறேன் அண்ணி. உங்களுக்கு எதுக்கு சிரமம்?” என்றவளின் கண்கள் அந்தப் பெரிய ஹாலை சுற்றி வந்து அலசிப் பார்த்தது.
காலை ஆறு மணியைத் தொட்ட வேளையில் அத்தனை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்தப் பெரிய வீடு. சமையலறையை ஒட்டிய பெரிய கூடத்தில் தனித் தனியாக இருந்த நான்கு அடுப்புகளில் பெரியதான குழிப்பனியார கல்சட்டியை ஏற்றி இருந்தனர். சுமார் நாற்பதில் இருந்து ஐம்பது பனியாரம் வரை ஊற்றி எடுக்கலாம்.
அதனைக் கண்டு வியந்த கிருஷ்ணாவின் பார்வையை கண்டே விளக்கம் கூற ஆரம்பித்தாள் சுமதி.
“இங்கன காலம்பர நாலு மணிக்கு சேவ(சேவல்) கூவியே ஆகணும் அண்ணி. இனிப்பும் காரமும் சேர்த்து தெனமும் ரெண்டாயிரம் இனிப்பு பனியாரம் சுட்டு வைக்கணும்.” எனக் கூறியதும் விழி விரித்தாள் கிருஷ்ணா.
“எதுக்கு இவ்வளவு? சேல்ஸ் பண்றீங்களா?”
“எல்லாமே டிபன் சென்டர், ஹோட்டலுக்கு பட்டுவாடா ஆகிடும். நம்ம வீட்டுல இனிப்பு பனியார மாவும், ஆப்பமாவும் மட்டுந்தான் காலம்பர ஏழு மணி வரைக்கும் விப்போம். அதுக்கு தலைவி நம்ம மணி அத்தைதான்!” என்றவள் வெளித்திண்ணைக்கு அழைத்து சென்று காண்பித்தாள்.
அந்த தளர்ந்த வயதிலும் காலைநேரம் குளித்து முடித்தே வியாபாரத்திற்கு அமர்ந்திருந்தார் மனோன்மணி. சிலர் மாவுகளை பாத்திரத்தில் வாங்கிக் கொண்டனர். பலர் வெறுங்கையுடன் வந்தாலும் அதற்கென தனியாக இருந்த அரைப்படி சைஸ் பிளாஸ்டிக் டப்பாவில் மாவினை வாங்கிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர். அதுவும் விற்பனையில் சேர்த்தியே!
“ஆப்பமாவு, பனியார மாவு மேக்கிங் எல்லாம் அத்தையோடது. ஏழு மணி வரைக்கும்தான் இவங்களுக்கு இங்கே டியூட்டி! அதுக்கு மேல அரைமணி நேரம் கூடுதலா திண்ணையில உக்காந்திருந்தாலும் அண்ணேன் கத்தி விட்ரும்!” சிரித்துக் கொண்டே சொன்ன சுமதியை முறைத்தார் மனோன்மணி.
“வேணும்ன்னே இப்படிச் சொல்லி என்னை சிக்க வைச்சு வேடிக்கை பாக்குறதுல இந்த குட்டிக்கு தனி ஆனந்தம் கண்ணு, இவ சொல்பேச்சு கேக்காதே!” நொடிப்பாக கூறி காலைநேர வம்பை ஆரம்பித்தார் மனோன்மணி.
“இந்த வயசுல இத்தனை வேலை செய்யணுமா பாட்டி?” அக்கறையாக கிருஷ்ணா கேட்க,
“இதெல்லாம் வேலையே இல்லத்தா… ஏழு மணிக்கு மேல இட்லி மாவு வெயாபாரத்துக்கு கொண்டாந்து இறக்கிடுவாக! அதுக்கு இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு அரவிந்தன் எடுத்து வைக்க சொல்லுவாப்புல!” மேற்கொண்டு விளக்கம் கூறிய பெரியவரின் பேச்சில் பரபரப்பானாள் கிருஷ்ணா.
“இட்லி மாவா? அதுக்கு யாரு உக்காருவா?” சுவாரசியமாய் கேட்டாள்.
“வேற யாரு? உங்க மாமியாருதான்! ஏழுக்கு ஆரம்பிச்சு ஒன்பது மணி வரைக்கும் இங்கே இருந்துட்டு, அப்புறம் உள்ளாற கொண்டு போயிடுவாக! மாவு கேட்டு வாரவகளுக்கு நேரங் காலமே இருக்காது அண்ணி!”
“எல்லா நேரமும் மாவு இருக்குமா சுமதி?” மலைப்பாக கேட்க,
“பின்ன… நம்ம வீட்டு ஸ்பெசாலிட்டியே அதுதானே! இருபத்திநாலு மணிநேரமும் மாவு கிடைக்கும். டிபன் சென்டரு, ஹோட்டல் நடத்துறவக தான் முக்காவாசி அள்ளிட்டுப் போவாக. தெனமும் எழுபதுல இருந்து நூறு கிலோ ஆட்டி வைப்போம்.
இப்ப புதுசா பாக்கெட் மாவும் போட்டு கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். மாவு ஆட்டுறதுக்கே நாலுபேர் தனியா இருக்காக. அவுகளுக்கு வேலையே காலையில பனியார டெலிவரி முடிஞ்ச பிறகு கிரைண்டர்ல மாவு ஆட்டி வைக்கிறதுதான்!” சுமதி சொல்லச் சொல்ல கிருஷ்ணாவின் தலை கிறுகிறுத்துப் போனது.
அந்த நேரத்தில் மாவு வாங்குவதற்கு வந்த மக்கள், “பெரியாத்தா!” என மனோன்மணியை அழைத்துப் பேசி, புதுப்பெண்ணையும் நலம் விசாரித்து விட்டுச் செல்ல, காலைப்பொழுதில் அத்தனை பரபரப்பினை எதிர்கொண்டாள் கிருஷ்ணா.
“மசாலா தயாரிப்பு தானே சொன்னாங்க! இதெல்லாம் சொல்லலையே?” கிருஷ்ணாவின் அடுத்த கேள்வி! இன்றைக்கு முழுமைக்கும் கேள்விகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
“இதெல்லாம் முழுக்க முழுக்க வீட்டுப் பொம்பளைங்க பண்ற பிசினஸ். அண்ணேன் ஆர்டர் எடுத்துக் குடுக்கறதோட சரி. மத்தபடி அரிசி, உளுந்து கொள்முதல், புராடெக்ட் சேல்ஸ் அன்ட் டெலிவரி பண்றதெல்லாம் பெரியாத்தா, சின்னாத்தா வேலைதான்!” என தனது அம்மா, அத்தையை கை காண்பித்தாள் சுமதி.
“அதென்ன கழுத… கணக்கா அனுப்பி வைக்கிறதுன்னு சொல்லாம டெலிவரி அதுஇதுன்னு என்னென்னமோ சொல்லிட்டு திரியுற?” சுமதியிடம் முகம் சுழித்தார் மனோன்மணி.
“உன் பாஷையில இங்கிலீபீசுல சொல்றேன் அத்தை!” கேலிபேசி செல்லக்கொட்டினை பரிசாக வாங்கிக் கொண்டாள்.
“கேக்கறதுக்கே கண்ணு கட்டுது சுமதி! எப்படி இதெல்லாம் முடியுது?” மிரண்ட குரலில் கேட்டாள் கிருஷ்ணா.
“அட… இப்பதேன் வேலைக்கு ஆள் வச்சு செய்யுறாங்க! அதுக்கு முன்னாடி நாங்க மூனு பொண்ணுங்க, அப்புறம் அரவிந்தன், ராம் பண்ற ஒத்தாசையில அம்மாவும் அத்தையும் பட்டைய கிளப்புவாங்க!” பின்னால் வந்து நின்ற சாருமதி பெருமையாகக் கூற,
“நாங்க வளர வளர ஆர்டரும் கூடிப் போச்சு! புள்ளைங்க எல்லாம் கல்யாணம், வேலைன்னு பிரிஞ்சு போகவும் இவுகளுக்கும் வயசாகி உடம்பு படுத்தவும்தான் வேலைக்கு ஆளுகளை சேத்துகிட்டாக! இல்லாட்டின்னா நாத்தியும் தம்பி பொண்டாட்டியும் லேசுல அடுத்தவுகளை வேலைக்கு சேர்த்துக்கிட மாட்டாக!” கூடுதலாக கூறி, கிருஷ்ணாவின் வியப்பின் அளவை மேலும் ஏற்றி விட்டாள் சுதாமதி.
“நான் எல்லாம் உக்காந்த இடத்துல ஒரு மணிநேரம் டியூசன் எடுத்துட்டு ஸ்கூலுக்கு ஓடிப் போற ஆளு! அதுக்கே மலையை புரட்டிப் போட்ட எஃபெக்ட் குடுப்பேன். காபி டம்ளர் கூட கழுவி வைக்காத சோம்பேறி நானு! இவங்க செய்யுறதை பார்த்து தலை கிறுகிறுன்னு சுத்துது!” மீண்டும் கலக்கமாக கூறிய கிருஷ்ணாவை இழுத்து பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார் மனோன்மணி.
“உங்களுக்கு கொஞ்சமும் கூறு இல்லடி பொண்ணுகளா! வந்த புள்ளைக்கு மொத வீட்டை சுத்திக் காமிக்கிறதை விட்டுட்டு பெரும பேசிட்டு திரியுராளுக!” என கடிந்து கொண்டவர் கிருஷ்ணாவை பார்த்து,
“இதொன்னும் பெரிய கம்பசூத்திரம் இல்ல ராசாத்தி. கண்ணு பார்த்திட்டே இருந்தா, கை தானா செய்யப் பழகிடும். உனக்கு எல்லாமே புதுசா தெரியுறதால மலைப்பா தோணுது த்தா! சொல்லப்போனா நாங்க இங்கே மேற்பார்வை மட்டும்தான் பாக்குறோம். எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு.” இலகுவாய்க் கூறி அவளை சகஜமாக்கினார்.
“அடியே சின்னக்குட்டி… ஒரு வாரம் கழிச்சு இங்கன இருக்கற நடைமுறைய மெதுவா அலட்டாம சொல்லிக்கலாம். இப்ப புள்ளைய உள்ளார கூட்டிட்டு போ! பாக்கிறவங்க கண்ணு ஒன்னு போல இருக்காது.” என்றவாறே புதுப்பெண்ணை உள்ளே அனுப்பி வைத்தார்.
ஏழு மணிக்கு அரவிந்தன் கீழே வரும் வரையில் மூன்று நாத்தனார்களின் பிடியில் சிக்கி, அவர்கள் சொல்வதை மனதில் நிறுத்திக் கொள்ளும் கிளிப்பிள்ளையாகவே மாறிப் போனாள் கிருஷ்ணா.
இருபக்கமும் நீளமாக கட்டபட்டிருந்த வெளிப்புறத் திண்ணை, அதைத் தாண்டிய பெரிய வரவேற்பறை, அதன் பக்கத்திற்கு இரண்டாக நான்கு அறைகளும் அதனை ஒட்டிய பூஜையறை, சமையலறையும் அதை விட்டு கீழே இறங்கினால் பெரிய முற்றத்து வராண்டா என வீட்டின் கீழ்த்தளம் விஸ்தாரமாய் விரிந்து இருந்தது.
அதே அளவுள்ள மாடியில் பாதிக்கு மேலே கம்பிவலை அடிக்கப்பட்டு, அடுத்ததாக இரண்டு குடித்தனம் வாழும்படியான அமைப்பில் அறைகள் கட்டப்பட்டு இருந்தன.
அதில் ஒரு பகுதியை அரவிந்தன் உபயோகித்துக் கொள்ள, மற்றொரு பகுதியை விருந்தினர் வந்து தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
“யாராவது ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இங்கன வந்து தங்குறாப்புலயே வருவாக அண்ணி.” வீட்டை சுற்றிக் காட்டியபடியே கூறினாள் சுமதி.
“ம்ம்… நேத்து பார்த்தேன், உங்க பக்க ஜனக்கட்டுதான் நிறைய பேரு வந்தாங்க!” கிருஷ்ணாவும் ஆமோதிக்க,
“அப்பா சொந்தம், அத்தை புகுந்த வீட்டு சனங்க, எங்க பாட்டி வீட்டு உறவு, அதோட சம்மந்தக்காரங்க வீடுன்னு ஏகத்துக்கும் இருக்கு. யாருக்கும் மனசு நோகாம பதில் சொல்லி பேசி அனுப்பணும். அதுக்கே இங்கே அத்தைக்கும் அம்மாவுக்கும் பொழுது சரியா போயிடும். அதனாலேயே எல்லா வேலைக்கும் ஆள் வச்சு மேலுக்கு சொல்றதோட நின்னுடுவாங்க!” பேசியபடியே கீழிறங்கி வந்தனர்.
“உங்க அண்ணனுக்கு காபி கொண்டுப் போயி குடுத்துட்டு வந்துடவா சுமதி?”
“இதெல்லாம் இங்கே பழக்கமில்ல அண்ணி. யாரா இருந்தாலும் முன்னறைக்கு வந்து உக்காந்தா தான் காபி கொடுப்போம். இந்த ரூல்ஸை எல்லாருமே தப்பாம ஃபாலோ பண்ணுவோம்!” என்றபடியே மீண்டும் வரவேற்பறையை வந்தடைந்தனர்.
‘மனைவியென ஒருத்தி வந்த பிறகும் இதே விதியை கடைபிடிப்பானா அரவிந்தன்?’ திடீர் சந்தேகம் கிருஷ்ணாவின் மனதிற்குள் முளைத்து அதே வேகத்தில் அமிழ்ந்தும் போனது. வருங்காலத்தை கணித்து வைத்து ஏமாற இவள் தயாராக இல்லை.
மனோன்மணி காபி குடித்து முடித்து ஓய்வெடுக்கச் சென்ற சமயத்தில், பரிமளம் தனது வேலையை ஆரம்பித்திருந்தார். காலைச் சமையலில் ஆரம்பித்து பின்கட்டு வேலையாட்களுக்கு வேண்டியதை கொடுத்து விட்டு அவர்களுக்கான பணிகளைச் சொல்வது என அனைத்திலும் அவரின் பேச்சே அங்கே சாஸ்வதமாகிக் கொண்டிருந்தது. அவரின் ஒற்றைச் சொல்லில் அந்த வீடே இயங்கிக் கொண்டிருந்தது.
“இங்கன எல்லாருக்கும் சீக்கிரமே எழுந்திருச்சு பழக்கம் கிருஷ்ணா. காலம்பர பரபரப்பு அடங்கினதுக்கு அப்புறம் அவங்கவங்க சௌகரியப்படி ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியதுதான்.” நடப்பினைக் கூறிய பரிமளவல்லி,
“உன் வசதி எப்படியோ அப்படி இருந்துக்கலாம் கிருஷ்ணா! உனக்கும் வெள்ளன எந்திருச்சு பழக்கமா? இல்ல, இங்க புது இடங்கிறதால தூக்கம் வரலையா?” வாஞ்சையுடன் கேட்டார்.
“காலையில டியூசன் எடுக்குறதால இந்த நேரம் எந்திருச்சுவேன் அத்தே! ஆனா, இங்கே நடக்கிற ஆர்ப்பாட்டம் எங்க வீட்டுல இருக்காது. ரொம்ப அமைதியா இருப்போம்.” என்று சொல்லும் போதே அரவிந்தனும் குளித்து முடித்து கீழே வந்துவிட, தங்களின் அறையை சுத்தம் செய்யவென மேலே சென்று விட்டாள் கிருஷ்ணா.
புது மணமக்களை யாரும் ஆராய்ச்சியாக கூட உற்று நோக்கவில்லை. அதுவே புதுப்பெண்ணிற்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. எப்படி அனைவரின் பார்வைக்கும் பதிலளிக்கப் போகிறோம் என்ற யோசனையோடு கீழே இறங்கி வந்தவளுக்கு, அடுத்தடுத்து அங்கே நடக்கும் வேலைகளும் பேச்சுகளும் சேர்ந்து முன்தின சோர்வை முற்றிலும் போக்கியிருந்தன.
“ரெண்டு நாள் குடவுனுக்கு லீவு விட்ருக்கு சாலா, அங்கே பொறவு கூட்டிட்டு போயி காட்டுறேன். இப்ப ரெடியாயிட்டு வா, கோவிலுக்கு போயிட்டு வருவோம்!” அரவிந்தன் அழைக்க, மறுக்காமல் சிறு ஒப்பனையுடன் தயாராகிச் சென்றாள்.
ஆசைப் பார்வைகள், கனிவான பேச்சுகளோடு கோவிலுக்கு சென்று விட்டு காலை உணவை முடித்த சூட்டோடு மறுவீட்டு விருந்திற்கு கிளம்பிச் சென்றனர்.
புதுமணத் தம்பதிகளை அழைத்து செல்வதற்காக அங்கே தங்கியிருந்த கோவர்த்தனன், காரியங்களை விரைவு படுத்தியதில் மதிய விருந்து பெண்ணின் வீட்டில் அமர்களப்பட்டது.
தனது மகேந்திரா எஸ்யூவி-யில் மாமனார் வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தான் அரவிந்தன். புறப்படும் நேரத்தில் மனோன்மணி ஆசையுடன் கொடுத்த பட்டு வேட்டியும், கொட்டாஞ்சி சில்க் காட்டன் சேலையும் புதுமணத் தம்பதியரை இன்னும் அழகாய் மெருகேற்றிக் காட்டியது.
“உங்ககிட்ட வேன் மட்டும்தான் இருக்கும்ன்னு நெனைச்சேன் மாஸ்டர்!” காரினை கண்ஜாடையில் காட்டி பேசினாள் கிருஷ்ணா.
“ஏன் அப்படி?”
“அன்னைக்கு அதுலதானே பொண்ணு பாக்க வந்தீங்க!”
“அது சரக்கு டெலிவரிக்கு போற வண்டி சாலா. வேணும்ங்கிறப்போ சீட் ஃபிக்ஸ் பண்ணிட்டு குடும்பமா அதுல கெளம்பிடுவோம். நாலுபேர் மட்டும் போறதுக்குன்னா இந்த காரை வெளியே எடுப்போம்.”
“அப்போ உங்க ரொட்டீனுக்கு எதுல சவாரி பண்ணுவீங்க?”
“வீட்டுல பல்சர் இருக்கு. ரொம்ப மழை, சேரும் சகதியுமா இருந்தா சைக்கிள்தான். சமயத்துல நடராஜா சர்வீசும் உண்டு.” எனக் கூறியதும் புருவத்தை உயர்த்தினாள் கிருஷ்ணா.
“ஒரே நாள்ல உங்க குடும்பத்தை பாத்து வியக்கேன் மாஸ்டர்!” விளையாட்டாக கூற, புருவம் சுருக்கினான் அரவிந்தன்.
“எங்க குடும்பமா?”
“பின்ன… பக்கத்து வீட்டு குடும்பத்தையா பாராட்டுனேன்?”
“ஒருவேளை அந்த பக்கத்து வீடு நீதானோ?” அரவிந்தன் வெடுக்கென்று கேட்டதில், கணவனது புருவ நெறிப்பிற்கு காரணம் புரிந்து போனது.
அவசரமாய் நாக்கினை கடித்துக் கொண்டு, “சாரி மாஸ்டர்! ம்ஹூம்… சாரி ரவி! புது இடம், புது ஹஸ்பெண்ட் இன்னும் பழகிக்கலம்மா!” குழைந்து பேசி கெஞ்சியதில் இறங்கி வந்தான்.
“அப்போ பழகுற வரைக்கும் உன்கிட்ட படிக்க வர்ற புள்ளைகளை யாரோ எவரோன்னு தான் பாப்பீங்களா டீச்சர்?” விளையாட்டாய் இவன் கேட்டதும் கிருஷ்ணாவின் முகம் சுருங்கிப் போனது.
“ரொம்ப நல்ல கணிப்புதான். என்னைப்பத்தி!” உதடு சுழித்தவள்,
“சாக்லேட் கொடுத்து, மெதுவா பேச்சு கொடுத்து பத்தே நிமிசத்துல புள்ளகள வழிக்கு கண்டு வந்துடுவேனாக்கும்!” என பெருமை பேசிட,
“எப்படி? நேத்து நான் உன்னை வழிக்கு கொண்டு வந்த மாதிரியா?” கண்சிமிட்டி கேட்க, செல்ல முறைப்பில் கணவனின் தொடையை கிள்ளி வைத்தாள் மனைவி.
“பின்னாடி அக்கா மாமா இருக்காங்க சாலா, அடக்கி வாசி!” கிசுகிசுத்தவனாய் கார் ஓட்டுவதில் கவனமானான்.
சகலத்திலும் கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து செயலாற்றுவதை தனது புகுந்த வீட்டு உறவுகள் கடமையாகவே செய்து வருகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணாவின் மனம் கர்வத்துடன் பெருமைபட்டுக் கொண்டது.
***
திருச்சி விமான நிலையம், அன்றைய காலைநேர பரபரப்புடன் பயணிகளை வரவேற்றுக் கொண்டிருந்தது. விமானத்தில் இறங்கிய வேகத்தோடு ஆளுக்கொரு குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு விமானநிலைய ஹெல்ப் டெஸ்கினை நாடினர் இரண்டு இளம்பெண்கள்.
வயது, அழகு, அளவுகளில் ஒற்றுமை தெரிய நெடுநாளைய வெளிநாட்டு வாசம் என தேகத்தின் ரோஜாநிற சிவப்பு அழகாய் எடுத்துக் காட்டியது. பெண்களின் நடை நிற்கவும் கையில் இருந்த மழலைகள் அழுகையில் வீறிடவும் மிகச் சரியாக இருந்தது.
அந்தப் பெண்களின் அவஸ்தையை உணர்ந்து கொண்ட ஹெல்ப் டெஸ்க் அட்டெண்டர் அவர்களை பயணிகளின் ஓய்வறை இருக்கும் திசையை காட்டி அங்கே செல்லுமாறு கூறினாள்.
“தேங்க்ஸ்!” என்ற ஒற்றை மொழியுடன் அந்த அறைக்கு விரைந்தவர்கள் பிள்ளைகளுக்கு பசியாற்றும் வேளையில் இறங்கினர். பெண் குழந்தை தாயிடம் பசியாற, ஆண் குழந்தைக்கு என்ஃபாமில் கலக்கி கொடுத்தாள் மற்றொருத்தி.
“ம்ப்ச்… இவன் சரியான சேட்டைகாரனா இருக்கான் ஹனி. சிப்பர்ல ஃபீட் பண்றாங்கன்னு இவனுக்கு எப்படித்தான் தெரியுதோ? பாரு, அப்படியே வெளியே தள்ளுறான் நாட்டிபாய்!” சிரிப்போடு அலுத்துக் கொண்டாள் சில்வியா.
தோழியின் குற்றச்சாட்டில் மெல்லிய புன்னைகையோடு மகனைக் கண்டு சிரித்தாள் ஹனியா. “எவ்ளோ கியூட்டா தள்ளி விடுறான் இல்ல?” அன்னையாக சிலாகிக்க,
“ம்க்கும்… பெருமைதான் உனக்கு, சீக்கிரம் அவளை கொடுத்துட்டு இவனை தூக்கிக்கோ!” சில்வியாவின் குரலில் சலிப்பு தெறித்தது.
“இவனுக்கு பார்த்தே இவளுக்கு சரியா ஃபீட் பண்ணாம இருக்கேன். கொஞ்சம் பொறுடி!” என்றவளாக மடியில் பசியாற்றும் பெண் குழந்தையை வாஞ்சையுடன் பார்த்தாள் ஹனியா.
சமத்தாய் அம்மாவின் மார்பில் ஒன்றிக் கொண்டு தனது பசியை தணித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்குழந்தை.
“என்னமோ போ… இந்த டூ டேய்ஸ்ல பேபி சிட்டர் இல்லாம இதுங்களை கேர் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. இட்ஸ் டூ ஹார்ட் புராஜெக்ட் யூ க்நோ!” பெருமூச்செடுத்து பிள்ளை வளர்ப்பினை கடினமாக்கினாள் சில்வியா.
தோழியின் ஒவ்வொரு சலிப்பான பேச்சிற்கும் உள்ளுக்குள் நொந்து நூலாகிக் கொண்டிருந்தாள் ஹனியா. இது போன்று குறைந்தபட்சம் நூறு முறையாவது சொல்லி முடித்திருப்பாள் சில்வியா.
கடனே என்று கேட்டுக் கொள்வதை தவிர வேறு வழியெதுவும் தென்படவில்லை அவளுக்கு! தற்போது தனக்கிருக்கும் ஒரே ஆதரவு இவள்தான் என்று புரிந்து கொண்டதில் இவளைக் கடிந்து பேசி பகைத்துக் கொள்ளவும் ஹனியாவிற்கு விருப்பமில்லை.
தனியாக இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று சேரும் சாமர்த்தியம் சத்தியமாக தனக்கில்லை என்பதை உணர்ந்து கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு சில்வியாவின் பேச்சினை சகித்துக் கொண்டிருகிறாள் ஹனியா.
“சீக்கிரம் கேப் புக் பண்ணி தஞ்சாவூருக்கு உன்னை கொண்டு போய் விட்டுறேன் ஹனி! அப்போதான் நானும் நைட் சென்னைக்கு கிளம்ப முடியும்.” சில்வியா பேசிக்கொண்டே செல்ல, ஹனியாவின் முகத்தில் கலக்கமும் மனதில் கலவரமும் ஒரேசேர குடிகொண்டது.
இளைமையின் சதிராட்டங்களும், எதிர்காலத்தின் மீதான அலட்சியங்களும், பெற்றோரை மதிக்காத மெத்தனங்களுமே இவளின் இன்றைய நிலைக்கு முழுமுதற் காரணங்களாகி இருந்தன.
“ஃபாமிலி, பிரக்னேன்சி, பேபி கேரிங் இஷ்யூஸ் இப்படி எதையும் பேஸ் பண்ணாம, லைஃப்-ஐ ஹாப்பியா என்ஜாய் பண்ணத்தான் ஃபிரண்ட்ஸ்ஷிப் வித் பெனிஃபிட்ஸ்-ங்கிற பேருல லிவ்-இன் ரிலேஷன்ல இருக்கோம். இதுலயும் வந்து நம்ம பேபி, ஃபாமிலின்னு சென்டிமென்ட்டா பேசினா எப்படி ஹனி? ஜஸ்ட் லிவ் இட்! அப்படி முடியலன்னா நாம பிரேக்-அப் பண்ணிக்கலாம்.” அலட்டாமல் கூறிச் சென்றவனின் முகமும் அசட்டையான பேச்சும் கண் முன்னே நிழலாடியது.
‘இது தனக்கு நேர்ந்த அவமதிப்பா? காலத்தின் கட்டாய மாற்றமா?’ எதுவும் புரியாத குழப்பத்தில், தன் மீதுள்ள ஈர்ப்பில் மோகத்தில் அவன் மீண்டும் வருவான் எனக் காத்திருந்தாள் ஹனியா. காலங்கள் கரைந்ததே தவிர எதிர்பார்த்தவன் வரவே இல்லை.
குழந்தை பிறந்த செய்தியை, மழலைகளின் புகைப்படத்தை இணையம் வழியாக பல தகவல் தொழில் நுட்ப முனையத்தில் அவனுக்கு அனுப்பியும் வைத்தாள்.
‘சோ க்யூட். காட் பிளஸ் யுவர் கிட்ஸ் அன்ட் டேக் கேர் ஹனி!’ ஒற்றை வரியில் வாழ்த்து கூறியதோடு அமைதியாகி விட்டான்.
குடும்பச் சூழ்நிலையில் வாழ்ந்து பழக்கமில்லாத பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு பராமரிப்பது மலையை புரட்டிப் போடும் சாதனையாகவே தோன்றியது.
பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதத்தை கடத்தியவள், ஒரு கட்டத்தில் தான் பெற்ற மழலைகளின் பாரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாமல் திண்டாடி விட்டாள். அத்தோடு பிரசவம் முடிந்த அயர்ச்சியும் சேர்ந்து கொள்ள புத்தி பேதலிக்கும் நிலைக்கே சென்று விட்டாள்.
தினத்திற்கும் ஒன்றாக பிள்ளைகளின் உடல் சுகவீனங்களும் சேர்ந்து கொள்ள, இதற்கு மேல் முடியாதென எண்ணி, பெற்றோரின் கவனிப்பில் குழந்தைகளை விட்டுவிட முடிவெடுத்து தோழியின் துணையோடு இந்தியாவிற்கும் வந்து சேர்ந்து விட்டாள்.
தனது தவற்றினை முழுமையாக அறிந்து, தெரிந்து, தெளிந்து கொள்ளாத பட்சத்தில் பெற்றோரை நாடி இவள் வந்த காரியம் நன்மை பயக்குமா? அவர்கள் இவளையும் இவள் பெற்ற மழலைச் செல்வங்களையும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற பெருத்த யோசனையில் ஹனியாவின் முகம் வெகுவாய் கசங்கிப் போனது.
இனி தளிர்களோடும் கதையில் பயணிப்போம் நண்பர்களே!!!