பூந்தளிர் ஆட… 8

பூந்தளிர் ஆட… 8

பூந்தளிர்- 8

முடிவினில் மாற்றமில்லை எனும் போது கேட்பதற்கும் கேள்விகள் இல்லாமல் போய் விடுகின்றன. அரவிந்தனிடம் அத்தனை சுலபத்தில் யாரும் அப்படி கேள்விகளை கேட்டு விடவும் முடியாது.

மலையாய் குவிந்து கிடக்கும் வேலையின் அவசரத்தை முன்னிட்டே விரைந்து மனைவியை தேனியில் விட்டுவிட்டு தனது தொழிலை கவனிக்க ஆரம்பித்தான் அரவிந்தன்.

விசால கிருஷ்ணாக்ஷியின் வீட்டில், பெண் வேலையைத் தொடரப் போவதை நினைத்து பூரித்தாலும் விசாலம் பாட்டிக்கும் பங்கஜம் அம்மாவிற்கும் உள்ளுக்குள் சிறு சுணக்கம் ஏற்படத்தான் செய்தது.

புது மணவாழ்வின் ஆரம்பப் பக்கங்கள் எந்த நேரத்தில் புரட்டினாலும் அழகாய் ரசிக்க வைப்பவை. அத்தகைய தருணங்களை அனுபவிக்க முடியாமல் இழக்க நேரிடுகின்றதே என்று கோமளவல்லி வெளிப்படையாகவே தனது கவலையை வெளிப்படுத்தி விட்டார்.

கோவர்த்தனன் புது மாப்பிள்ளையை பெருமையோடு பார்த்தார். “என் மாப்ள மாதிரி இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்னு உங்க கதிர் மாமா பெருமை பேசினதும் தப்பில்ல தம்பி!” பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.

“அட என்னண்ணே? இதுக்கு போயி…” அரவிந்தன் சங்கோஜத்தில் நெளிய,

“கிருஷ்ணா, இந்த வாத்தியார் வேலையை அவளோட லட்சியமாவே நினைக்கிறா அரவிந்த்! இந்தக் கல்யாணம் அவளோட லட்சியத்தை புதைச்சிடுமோன்னு பயந்துட்டு இருந்தேன்.” என உணர்ந்து கூறினார்.

“அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் ண்ணே… படிப்பை சொல்லிக் கொடுக்க பள்ளிக்கூடம் போனா மட்டுமே முடியும்னு நினைக்கிறதும் தப்பான கணிப்பு.” என்றவனை சிந்தனையோடு பார்த்தார்.

“யோசனை பண்ணிட்டு இருக்கேண்ணே… அடுத்த வருஷம் முடிவு பண்ணிடலாம்.” தீர்மானமாக கூறியவனை பார்த்து பிரமித்தார்.

“எந்த காலத்திலயும் கிருஷ்ணாவோட லட்சியத்துக்கு தடங்கல் வராது. இனி அவளோட பொறுப்பு என் கையில!” அரவிந்தன் சிரித்தபடி கூற, பெண் வீட்டார், மாப்பிள்ளையை தேவதூதனாய் வியந்து பார்த்த நிமிடங்கள் அவை!

எந்தவித சலசலப்பும் இல்லாமல் முதல் வாரம் அமைதியாகவே கழிந்தது. தினப்படி கணவனின் காலை வாழ்த்தும் இரவில் பரிவான ஆசையான முத்தமுமே கிருஷ்ணாவிற்கு போதுமானதாக இருந்தது.

அரவிந்தனின் வீட்டில் இருந்து புது மருமகளை விசாரிக்கவோ அவளிடம் பேசவோ யாரும் முன்வரவில்லை. இந்தப் பின்னடைவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிற ரீதியில் தேனியில் அனைவரும் சகஜமாய் எடுத்துக் கொண்டனர்.

அந்தவார ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரைக்கு கிளம்பும் போது, தனக்கு சொல்லப்பட்ட அதிகப்படியான அறிவுரையில் கிருஷ்ணாவின் மனதினில் புரியாத கலக்கம் குடிகொண்டது.

“எந்த மாதிரி ஜாடை பேச்சு வந்தாலும் காதுல வாங்கிட்டு அமைதியா இருக்க கத்துக்கோ! சுணங்காம பேசுறேன்னு சட்டுசட்டுன்னு அதிகப் பிரசங்கியா பதில் சொல்லிட்டு இருக்காதே அச்சு!” அம்மாவின் முதல் அறிவுரை அவளுக்கு கடுப்பைக் கிளப்பியது.

“வீட்டுக்கு போனதும் பாரபட்சம் பாக்காம எல்லாரையும் விசாரிச்சு பேசிடு அச்சும்மா… நீ பேசுற ஒவ்வொரு பேச்சும் உன் மாமியாளுக்கு தெரியணும்.” விசாலம் பாட்டி கண்டிப்புடன் கூற, இவளுக்கு வெலவெலத்து போனது.

“இன்னைக்கு போயிட்டு நாளைக்கு காலையில திரும்பி வரப்போறேன். அதுக்கு இத்தனை அட்வைஸா பாட்டி?”

“வாழ்க்கை என்ன, ஃபார்முலா போட்டு விடை கண்டுபிடிக்கிற உங்க கணக்கு பாடம்ன்னு நினைச்சீங்களா டீச்சர்? குடும்ப அரசியல்ல நீ கடைசி பெஞ்சு. பெரியவங்க சொல்றதை பொறுமையா கேட்டுக்கோ!” கோமளவல்லி சிரிப்புடன் கூற, வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டாள் கிருஷ்ணா.

இவளுக்குள்ளும் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது. கணவனைத் தவிர்த்து வேறு யாரும் இவளிடம் பேசவில்லை. இவளுக்கு பேச வேண்டுமென்று நினைத்தாலும் நேரம் சூழ்நிலை ஒத்து வரவில்லை.

கணிதத்தில் தகுதி பெற்றவள் என்பதால் அதற்கான சிறப்பு வகுப்புகளை தவிர்க்க முடியாமல், மாட்டிக்கொண்டு முழித்தாள் கிருஷ்ணா. காலை ஆறு மணிக்கு டியூசனில் ஆரம்பிக்கும் இவளது கற்பிக்கும் வேலை, பள்ளி வேலையோடு பயணித்து இரவு ஒன்பது மணி வரை நீடித்து அனைத்தையும் மறக்கடிக்க வைத்து விடுகிறது.

இத்தனை தாமதமாக அலைபேசியில் அழைத்து பெரியவர்களின் ஓய்வு நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது என நினைத்ததால், இவளுமே புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம் பேச முயற்சிக்கவில்லை.

எதார்த்தமான செயல்தான் என்றாலும் இதில் குற்றம் கண்டுபிடித்து குதர்க்கம் பேசும் சாணக்கியத்தனம் இருக்கும் என்பதை அக்கா எடுத்துச் சொல்லச் சொல்ல வீட்டுப்பாடம் செய்து முடிக்காத பிள்ளையின் பீதியடைந்த மனநிலைக்கு தள்ளப்பட்டாள் கிருஷ்ணா.

அன்று அதிகாலை மனைவியை அழைத்துச் செல்ல கிளம்பி வந்த அரவிந்தன் காலை உணவை முடித்து கொண்டு, மனைவியோடு கிளம்பி விட்டான்.

“எனக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு வீட்டுல எல்லார்கிட்டயும் கோபத்தை சம்பாதிச்சிட்டீங்களோன்னு தோணுது ரவி!” மதுரைக்கு காரில் செல்லும் போது கணவனது தோளில் சாய்ந்தபடி தனது மனநிலையை சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சாலா? எப்பவும் போலத்தானே என்கிட்டே எல்லாரும் பேசுறாங்க!” என்றவனின் வாய் பேசினாலும், மனைவியின் நெற்றியில் இதழொற்றி அவளை இதமாக்க மறக்கவில்லை.

இனிமையான பயணம் காதலின் இன்பங்களை வாரியிறைக்க, அவர்களின் உலகத்தில் யாருக்கும் அனுமதி கொடுக்காமல் ஒருவருக்குள் ஒருவராய் அணைப்பில் லயித்து பயணித்தனர்.

“ஆனா, என்கிட்டே யாரும் பேசலையே ரவி?” ஆதங்கம் கொள்ள,

“நீ பேசுனியா?” அமைதியாய் அதிராமல் கேட்டான்

“இல்ல…” தயக்கத்துடன் கூறி, அவனது முகம் பார்த்தவள்,

“என் வேலை அப்படிப்பா… எக்ஸாம், ரிவிசன் டெஸ்ட், டியூசன்னு டைம் கிடைக்கல. கிடைக்கிற லேட் டைம்ல கால் பண்ணி, அவங்களை டிஸ்டர்ப் பண்ண எனக்கும் பிடிக்கல!” சிறுமியாக முகம் சுருக்கிட, மனைவியை கூர்மையாகப் பார்த்தான் அரவிந்தன்.

“அப்போ, உன் வீட்டுல கூட நீ யாருகிட்டயும் பேசுறதில்லையா?” என்றதும் சன்னமாக அதிர்ந்தாள்.

‘குதர்க்கமாக கேட்டானா… அக்கறையோடு விசாரித்தானா?” புரியாமல் முழித்தாள்.

“தப்பா எடுத்துக்காதீங்க மாஸ்டர். புருஷன் வீடு, குடும்பம்னு எல்லாம் புரிபடுறதுக்கு முன்னாடியே, அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். இதுல யார் எந்த ரகம்னு தெரியாம எப்படி நான் சட்டுன்னு பேச முடியும்?” அமைதியாகக் கூறினாலும், ‘என்னைப் புரிந்து கொள்ளேன்!’ என்கிற கோரிக்கை அவளின் பேச்சில் இருந்தது.

“இப்பகூட உங்ககிட்ட இதைப் பத்தி பேசலாமா வேண்டாமான்னு புரியாம குழம்பிட்டு இருக்கேன். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?” எனச் சிணுங்கியவளாக அவனை நேருக்குநேராக பார்க்க, கணவனது பார்வையில் உல்லாசம் தெரிந்தது.

“பரவாயில்ல… இதுக்காகத்தான் அன்னைக்கே கல்யாணத்தை தள்ளி வைக்கச் சொன்னேன்னு எல்லாரும் சொல்ற வழக்கமான டயலாக்கை நீ சொல்லல.” சிரித்தபடி மனைவியை நெருக்கிக் கொண்டான்.

“என் வேலைக்கு நீங்க பொறுப்புன்னு சொன்ன பிறகு, நான் எதுக்கு இப்படி அபத்தமா நினைக்கணும்? எனக்கு தயக்கம் இருக்கே தவிர, எதுவும் பிடிக்காம இல்லை ரவி!” காதோரம் ஒலித்த மனைவின் குழைவு, கணவனுக்கான ரசாயாண மாற்றங்களை உண்டு பண்ணியது.

“நல்லா பேசுற சாலா!”

“உங்களை விடவா?”

“ஆஹான்… மாஸ்டர் கிட்ட டியூஷன் படிச்ச எஃபெக்டோ?” கண்சிமிட்டிக் கூறியவனை குறும்பாகப் பார்த்தாள்.

“எங்கே நான் தப்பா பேசிடுவேனோன்னு பயந்து, எனக்கு டன் கணக்குல அட்வைஸ் சொல்லி அனுப்பி இருக்காங்க!” தளர்வாய் சிரித்தவள், பிறந்த வீட்டில் தனக்கு சொல்லப்பட்ட அறிவுரைகளை, தனது பயத்தை தடுமாற்றத்துடன் சொல்லியும் முடித்தாள்.

“ஹஹா… டீச்சருக்கே ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துட்டாங்க போலிருக்கு.”

“சிரிக்காதீங்க மாஸ்டர்! என்ன பேசுவாங்களோ, எப்படி நடந்துப்பாங்களோன்னு நானே கலங்கிட்டு இருக்கேன்!”

“தப்பு பண்ணியிருந்தா மட்டுமே பயப்படணும் சாலா!”

“வாஸ்தவம் தான். ஆனா, அன்னைக்கு அத்தை என்னை உத்து பாத்தா பார்வையே சரியில்ல. அவங்ககிட்ட அபிப்பிராயம் கேக்காம, நானா முடிவெடுத்து உங்களை சொல்ல வச்ச மாதிரி அழுத்தமா பார்த்தாங்க!” அன்றைய தினம், தான் தடுமாறியதை கூறி விட்டாள்.

“அம்மாக்கு வெளி உலகம் அவ்வளவா தெரியாது சாலா. வீட்டு வேலை எவ்ளோனாலும் இழுத்து போட்டு செய்றவங்க, வெளியே போக அப்படி பயப்படுவாங்க. அவங்களோட பார்வையில தப்பு இருக்காது, கேள்வி இருக்கும். அவ்வளவுதான்!”

“ஷப்பா… எப்படி எல்லாரையும் ஃபிங்கர் டிப்ஸ்ல புரிஞ்சு வைச்சுருக்கீங்க ரவி?”

“பதினைஞ்சு வயசுல வியாபாரியா இந்த உலகத்தை பாக்க ஆரம்பிச்சவனுக்கு இதெல்லாம் பெரிய விசயமே கிடையாது. அம்மாவும் அத்தையும் சேர்ந்து மசலாப்பொடி, ஊறுகாய், இட்லி மாவுன்னு வீட்டுல தயாரிச்சு கொடுத்ததை டிரை சைக்கிள்ல வச்சு தெருத்தெருவா வித்துட்டு வந்திருக்கேன்!

அப்போ எல்லாம் நிமிசத்துக்கு நிமிஷம் மாறுற மனுஷங்களோட மனநிலையை கண்கூட பார்த்து அடுத்தவங்க மனசை படிக்க கத்துகிட்டேன்!” அந்நாளின் நினைவில் அரவிந்தன் பேச ஆரம்பிக்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் கிருஷ்ணா.

“நாம ஒருத்தர்கிட்ட வியாபாரம் பண்றோமோ இல்லையோ. அவங்ககூட தோழமையை உருவாக்கிறது ரொம்ப முக்கியம். அந்த நட்புதான் இன்னைக்கு ஒரு ரூபாய்க்கு வியாபாரம் பண்ணாதவன், நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் பண்ண நம்மளத் தேடி வருவான்!” இலகுவாய் கூறி விட்டு,

‘புரியுதா?’ என தலையாட்டி கேட்க, “வாவ்!” என விழி விரித்து மென்மையான முத்தப் பரிசொன்றை கொடுத்தாள்.

“என் தொழில் ரகசியம் இதுதானுங்க டீச்சர்! இந்த ரகசியத்தை வெளியே சொன்னா உங்க கபாலம் தெறிச்சு, மூளை கரைஞ்சு களிமண்ணா போயிடும், பாத்துகிடுங்க!” பொய்யாய் மிரட்டலும் விட, அடக்க மாட்டாமல் சிரித்தாள் கிருஷ்ணா.

“என் சக்கரைத்தேவனய்யா நீர்! உமக்குள்ள பாகா கரைஞ்சு காணாம போவேனே ஒழிய, கட்டியாகி கள்ளச்சரக்கு ஆகமாட்டேன்!” கணவனின் கன்னம் கிள்ளி சிரித்தாள்.

தடையின்றி பேசிய இருவரின் பேச்சுகளும், காதல் பரிமாற்றங்களும் ஒரு வாரத்தின் பிரிவினை ஈடுகட்டும் கொசுறாக அமைந்து விட, உற்சாக மனநிலையுடன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் கிருஷ்ணா.

தேனியில் கிளம்பும் போது இருந்த அவளின் கலக்கமான மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. ‘யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான்!’ என்பதை செயலில் காட்டிவிட வேண்டுமென்ற வேகமும் அவளுக்கு கூடுதல் பலத்தை அளித்து விட, உற்சாக மனநிலையுடன் திண்ணையில் அமர்ந்திருந்த மனோன்மணியை பார்த்து புன்னகையுடன் விசாரித்தாள்.

“எப்படி இருக்கீங்க பாட்டி? சண்டே உங்களுக்கு லீவு இல்லையா?” எனக் கேட்டவள் அப்போதைய நேரத்தை பார்த்தாள்.

காலை ஏழு மணி. இந்த வீட்டின் பரபரப்பு இந்த நேரத்தில் எப்படியிருக்கும் என சொல்வழிச் செய்தியாக அறிந்து கொண்டவள்தான், இன்று செயல்படுத்தும் முறைகளைப் பார்க்க ஆர்வம் கொண்டாள்.

“தெனமும் பாக்குற ரெண்டு மணிநேர கொசுறு வேலைக்கெல்லாம் லீவெடுத்தா உடம்பு துருப்பிடுச்சு போயிடும் தாயீ! வந்தவ வாசல்லயே நிக்காம உள்ளார போயி மாமியார பாரு!” அமர்த்தலாக கூறி உள்ளே அனுப்பினார் மனோன்மணி.

“சண்டே. ஃபன் டே எல்லாம் சாலரி பீப்பிளுக்கு மட்டுந்தான் சாலா!” ஆரம்பித்த அரவிந்தனை கையெடுத்து கும்பிட்டாள்.

“டியூசன் வேண்டாம் மாஸ்டர். நீங்க சொல்ற எல்லாத்தையும் ஸ்டாக் வச்சுக்க என் மூளையில ஸ்டோரேஜ் கம்மி!” என்றவளாக சமையலறையை பார்த்து நடக்க, புன்னகையுடன் அரவிந்தனும் தனது அறைக்கு சென்று விட்டான்.

அந்த வீட்டில் அன்றைய நாளின் ஓட்டங்கள் ஆரம்பமாகி இருந்தன. “இந்த ஞாயித்துக்கிழமை வந்தா மட்டும் எந்த பூதம் வந்து மண்டைக்குள்ள உக்காருதோ தெரியல! வரமாட்டேன்னு முன்னாடியே சொல்லியும் தொலைக்காம, எங்களை பதற வைக்கிராளுக!” என கடுகடுத்தபடி, யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார் பரிமளவல்லி.

அன்றைய தினம் நான்கு பெண்கள் முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்திருக்க, அந்தக் கடுப்பில் இவர் கொதித்துக் கொண்டிருந்தார். இந்த விசயம் தெரியாமல் தானாக சென்று பேசினாள் மருமகள்.

“என்ன பிரச்சனை அத்தே? எதுக்கு இவ்வளவு டென்சனா இருக்கீங்க?” போய் நின்றதும் கிருஷ்ணா கேட்க, அவளையும் கடுப்பாய் பார்த்தார்.

“உள்ளார வந்ததும் அப்படியே வந்துட்டியா? தொழில் நடக்குற இடத்துல கை கால் அலம்பிட்டு சுத்தமா வரணும் கிருஷ்ணா.” சற்று உஷ்ணமாய் சொன்னவர் குரலை தழைத்துக் கொண்டு,

“போயி புடவைய மாத்திட்டு வா… கொஞ்சநேரம் இங்கன நின்னாலும் உடுப்புல மாவு தெறிச்சிடும்!” எனக் கூற சரியென்று தலையாட்டுவதை தவிர வேறென்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

இருவருமாக சேர்ந்து முன்னறைக்கு வந்த நேரத்தில், “அம்மா, இன்னைக்கு குடவுன்ல வேலை இருக்கு. மதியம் வர லேட்டாகும்.” என்றபடி அரவிந்தன் வர, அவனை முறைத்தார் பரிமளவல்லி.

“இன்னைக்கு பொண்ணுங்க யாரும் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க அரவிந்தா! ஏன் எதுக்குன்னு விசாரிக்க மாட்டியா?” மகனிடமும் கடுப்புடனே பேச, கிருஷ்ணாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

“எனக்கு வேலை இருக்கிறாப்புல, அவங்களுக்கும் வேலை இருக்கும், விடுங்கம்மா!”

“என்ன வேலை இருந்தாலும் ஞாயித்துக்கிழமை மதிய சாப்பாடு இங்கனதான் சாப்பிடுவாகன்னு உனக்கு தெரியும் தானே? இன்னைக்கு என்ன புதுசா காரணம் சொல்லி சமாளிக்கிற!” அவரின் கேள்விக்கு பெருமூச்சு விட்டபடி நின்றான் அரவிந்தன்.

‘சரிதான், இன்னைக்கு இவங்க ஒரு முடிவுலதான் இருப்பாங்க போல. இதுக்கு தான் வாயை தொறக்காம இருக்கணும்னு வீட்டுல சொல்லி விட்டாகளோ! இப்ப நான் என்ன செய்ய?’ திருதிருத்தபடி நின்றாள் கிருஷ்ணா.

“கல்யாணம் முடிஞ்ச வீடு மாதிரியா இருக்கு? புதுப் பொண்ணை பாக்க வாரவக, மொகம் சுருக்கிட்டு போறாக! நேத்து எங்க சின்னமனூர் அத்த வந்து, இன்னும் மறுவீட்டு விருந்து உம் மருமவளுக்கு முடியலையான்னு கேட்டுட்டு போகுது.

வேலைதான் முக்கியம்னு மருமக கிளம்பி போயிருக்கான்னு சொன்னா. இந்த வீட்டுல நீ என்னாவா இருக்க? உன்னால தடுத்து நிறுத்த முடியலையான்னு என்னையே திருப்பி கேட்டுட்டு போகுது என் அத்தே! இந்த பொல்லாப்ப எல்லாம் எங்கே போயி சொல்ல முட்டிக்க?” கொட்டித் தீர்க்கும் அடைமழையாக ஒரே மூச்சில் பரிமளம் பேசி முடித்த நேரத்தில் தனது வேலையை முடித்துக் கொண்டு அங்கே வந்தார் மனோன்மணி.

“இந்தா பரிமளம்… உன்னை கோபப்படாதேன்னு சொல்லி இருக்கேன்ல! என்னத்துக்கு இத்தனை வெசனப்பட்டுட்டு இருக்க? எல்லாம் அரவிந்தன் பாத்துப்பான். இனிமே அவனும் அவன் பொண்டாட்டியும் சேர்ந்துதான் குடும்ப பொறுப்பை தாங்கிக்கணும். நீ புலம்பாம வேலையைப் பாரு!” அத்தையும் தன் பங்கிற்கு நொடித்துக் கொண்டார்.

“எனக்கு ஒன்னும் புரியல பாட்டி. யாரவது வெவரமா சொல்லுங்களேன்!” பொதுவாய் கேட்டாள் கிருஷ்ணா.

பேசுபவர்கள் எல்லாம் பேசி முடிக்கட்டும் எனும் பாவனையுடன் மௌனமாய் சோபாவில் சென்று அமைதியாய் அமர்ந்து கொண்டான் அரவிந்தன்.

“பெரிய மாப்பிள்ளைய கலந்துக்காம இவன் இஷ்டத்துக்கு முடிவெடுத்து, உன்னை வேலைக்கு அனுப்புனதுல அவர் ரொம்ப கோவமா இருக்காரு! அன்னையில இருந்து இப்ப வரைக்கும் சுதா இந்த வீட்டு வாசப்படிய மிதிக்கல… அவ என்ன சொல்றளோ அதையே தான் சாருமதியும் செய்வா!” பரிமளம் படபடப்புடன் சொன்னதும் திடுக்கிட்டாள் கிருஷ்ணா.

“மிஞ்சிப் போனா நாலுநாள் நீ இந்த வீட்டுல இருந்திருப்பியா? அதுக்குள்ள இந்த வீட்டுப் பொண்ணுக எட்டி நிக்க நீ காரணமாயிட்ட!” நேரடியாக மருமகளை குற்றம் சாட்டினார் மாமியார்.

“நான் எதுவும் வேணும்னு பண்ணல அத்தே… நான் வேலைக்கு போனதுக்கு, அவங்க ஏன் இங்கே வராம இருக்கணும்?” கிருஷ்ணா அவசரமாக கூறவும்,

“பெரியவங்க முன்னாடி பதில் பேசாதே சாலா!” மனைவியின் வாயை அடைத்தவன்,

“இவ வேலைக்கு போனது பிரச்சனையா? இல்ல. யாருகிட்டயும் கலந்துக்காம நானா முடிவெடுத்தது பிரச்சனையா? சொல்லும்மா… நான் பதில் சொல்றேன்!” அழுத்தமாக கேட்டான் அரவிந்தன்.

மருந்துக்கும் கூட அவனது முகத்தில் கோபம் இல்லை. வெறுப்பு, ஆத்திரம் என எதையும் அவன் வெளிப்படுத்தவில்லை. சாதரணமாகவே பேசினான்.

ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே. அவன் முகத்தில் தேங்கி நிற்கும் மெல்லிய புன்னகை கீற்று காணாமல் போயிருந்தது. இதுதான் இவனது கோபத்தின் அடையாளமோ! கிருஷ்ணா கணவனையே உற்றுப் பார்த்தாள்.

“நான் இருக்கிற வரைக்கும் எம் பொண்ணுங்க இந்த வீட்டுல எப்பவும் போல வந்துட்டும் போயிட்டும் இருக்கணும்ய்யா… நீ என்னை எப்படினாலும் நினைச்சுக்கோ! ஆனா, என் வீட்டு மாப்பிள்ளைங்க மனசு சுணங்கிப் போயி, அதை என் பொண்ணுக கிட்ட இறக்கி வைக்கக் கூடாது.” அழுத்தமாய், தீர்மானமாய் கூறி முடித்தார் பரிமளம்.

அப்பாவியான அவரிடத்தில் இத்தனை உறுதியான வார்த்தைகளை கிருஷ்ணா எதிர்பார்க்கவில்லை. தனது மகள், மாப்பிள்ளை என வரும் பொழுது, எந்தத் தாயின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்பதை அரவிந்தன் புரிந்து வைத்திருந்தபடியால், அமைதியாக தலையாட்டிக் கொண்டான்.

“அவசர வேலையிருக்கும்மா… ஒரு மணி நேரத்துல வந்து கிருஷ்ணாவையும் கூட்டிட்டு மாமாவ பார்த்து பேசி, கையோட கூட்டிட்டு வர்றேன். நீ மதிய சாப்பாட்டுக்கு ரெடி பண்ணு! கைவேலைக்கு ஆள் பத்தலன்னா சொல்லு. குடவுன்ல இருந்து ரெண்டுபேரை அனுப்பி வைக்கிறேன்!” என்றவன் அவசரமாக புறப்பட்டுச் சென்றான்.

“ம்க்கும்… வர்ற ஒருநாள்ல இவன் குடவுனு, அங்கே இங்கேன்னு அலைஞ்சிட்டு இருந்தா, குடும்பம் நடத்தின மாதிரித்தான்! இதையெல்லாம் யோசிக்காம அன்னைக்கு புருஷன் சொன்னதும் கிளம்பிப் போயாச்சு!” ஆறாத குற்றச்சாட்டுகள் மனத் தாங்கல்களாக வெளிப்பட, மாமியாரை புரியாத புதிராகப் பார்த்தாள் கிருஷ்ணா.

“இவ அங்கேயும் இவன் இங்கேயும் இருக்கவா கல்யாணம் கட்டி வைச்சோம்? கல்யாணம் பண்ண கையோட காலகாலத்துல ஒரு பிள்ளைய பெத்துக் கொடுத்துட்டு உங்க சோலிக் கழுதைய பார்த்திருக்கலாம்ல. என்னத்துக்கு அவசரமா முடிவெடுத்து, இப்ப பேச்சு வாங்கி அவதிப்படணும்?” மனோன்மணியும் குறைபாட்டாக பேசிவிட கிருஷ்ணாவின் கண்கள் தளும்பி விட்டன.

திருமணம் முடிந்து முழுதாய் முப்பது நாட்கள் கூட முடியவில்லை. அதற்குள் இத்தனை பேச்சு! இன்னும் மூன்று நாத்தனார்களின் பேச்சையும் முகத்திருப்பலையும் தாங்கிக் கொண்டு ஆவேசப்படாமல் இருக்க வேண்டும். இன்றைய பொழுது போவதற்குள் இன்னும் எத்தனை அவதிகளோ!

நிமிடத்திற்கு நிமிடம் மனதோடு குமைந்து கொண்டிருந்தவளின் முன்னே சூடான காபி நீட்டப்பட நிமிர்ந்து பார்த்தாள். வீட்டு வேலையாள் லக்ஷ்மி நின்றிருந்தார்.

“உம் மாமியா வெடுக்குன்னு பேசிட்டான்னு வெசனப்படாதே தாயீ! அவுகளுக்கு பொண்ணுக, பிள்ளை, மாப்பிள்ளை தான் உலகமே! இப்ப இப்படி பேசுறவங்க இன்னும் கொஞ்சநேரத்துல உனக்காக தாங்கிப் பேசத்தான் செய்வாக! மனசுல எதையும் வச்சுக்காம வெளியே கொட்றதால வர்ற சுணக்கம் இது. உங்க ரூமுக்கு போயி செத்தநேரம் கண்ணசருத்தா! அரவிந்தன் தம்பி நேக்கா பேசி சமாளிச்சிடும்.” அவர் எடுத்துக் கூறியதில் கிருஷ்ணாவின் மனதும் ஓரளவிற்கு சமன்பட்டது. ஆனால் குழப்பங்கள் மட்டும் தீரவில்லை.

“நீங்க சொல்றதை என்னால நம்ப முடியலம்மா! எனக்கு இந்த கொஞ்சநேரமே கண்ணை கட்டுது. இவங்களே இவ்வளவு கோபமா பேசும்போது, இன்னும் இந்த வீட்டு பொண்ணுங்க எப்படி பேசப் போறாங்களோ?” மிரட்சியுடன் முடித்தாள்.

அந்த நேரத்தில் இருவர் கூடுதலாக சுற்று வேலைக்கு வந்து நிற்க, வழக்கம் போல பரிமளத்தின் வார்த்தைகள் கட்டளையாக்கப்பட, அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் கிருஷ்ணா.

ஆதங்கப் பேச்சு, அங்கலாய்ப்பு எல்லாம் பெற்ற மகனிடம் மட்டுமே இறக்கி வைப்பார் போல. வேலையாட்களிடம் ஆளுமையாக இருப்பதால்தான் இத்தனை பேரை அதட்டி உருட்டி வேலை வாங்க முடிகிறது என அவளது எண்ணங்களின் முடிவுகள் நீண்டு கொண்டே சென்றன.

சற்று நேரத்தில் கிருஷ்ணாவின் அலைபேசியில் சுமதியின் அழைப்பு வந்து அவளை திசை திருப்பியது. பெரும் தயக்கத்துடனே ஏற்றாள்.

“சொல்லு சுமதி!”

“என்ன அண்ணி? அரண்டு போயிட்டீங்களா!”

“அப்படியெல்லாம் இல்ல.” என அவசரமாகக் கூறியவள்,

“தெரிஞ்சே கேக்குறியே… உங்க அண்ணன் சொன்னாரா?” பாவமான குரலில் கேட்டாள் கிருஷ்ணா.

“ம்ம்… அண்ணனோட கோல்கீப்பர் போஸ்ட் இன்னும் என் கையை விட்டு போகலண்ணி! பலமா மந்திரிச்சுட்டாங்க போல?” விளையாட்டாக சுமதி கேட்க,

“உனக்குமே கோபமா சுமதி? எடுத்துச் சொல்லியிருந்தா, நான் பெரியவங்ககிட்ட கேட்டுட்டு வேலைக்கு போயிருப்பேன்!” வருத்தமாய் பேசினாள் கிருஷ்ணா.

“ஐயோ அண்ணி, ஒரு வாரமா நான் மாமியார் வீட்டுல இருக்கேன். இவங்க இப்படி குசும்பு பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல!”

“அங்கே என்ன விசேசம்?”

“என் மாமியாருக்கு உடம்பு சரியில்லன்னு பார்த்துக்க வந்தேன். இப்ப அவங்கதான் என்னை பாத்துக்கறாங்க.”

“என்ன சொல்ற? உனக்கென்ன உடம்புக்கு!”

“என் குட்டிபையன் அண்ணனாகப் போறான். இங்கே வந்த ரெண்டு நாள்ல தெரிய வந்தது. கொஞ்சநாள் எங்கேயும் போகாதேன்னு மாமியார் சொன்னதை தட்ட முடியல.”

“கங்கிராட்ஸ் சுமதி… அப்போ உங்க அண்ணனுக்கு தான் வேலை ஜாஸ்தின்னு சொல்லு!”

“வேற வழி தெரியலண்ணி! மாமியார் சொல்பேச்சு கேக்காம போனா, உங்க தம்பி சாமியாடுவாரு. அவருக்கு விபூதி பூசி மலையிறக்கிறது எல்லாம் ரொம்பப் பெரிய டாஸ்க். என்னால முடியாது!” சுமதி தன்போக்கில் பேசிக்கொண்டே செல்லவும் கவலை மறந்து சிரித்தாள் கிருஷ்ணா.

“அண்ணேன் எல்லாம் சொல்லுச்சு… எங்க ரெண்டு அக்காவையும் ஒரே தராசுல நிறுத்திடலாம். இது இன்னைக்கு நேத்து இல்ல. அவுக கல்யாணம் முடிஞ்ச நாள்தொட்டு நடக்கிற சங்கதி தான்! அண்ணேன் பேசி வழிக்கு கொண்டு வந்துடும். நீங்க பதட்டபடாம நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாருங்க போதும்!” என கிருஷ்ணாவை தைரியப்படுத்தினாள் சுமதி.

“நிஜமாவா சொல்ற சுமதி?”

“இன்னைக்கு டெஸ்ட் மேட்ச் பார்த்துட்டு நீங்களே சொல்வீங்க பாருங்க!” என மேற்கொண்டு சில நிமிடங்கள் சமாதானமாகப் பேசியவள் கிருஷ்ணாவின் மனபாரத்தை அகற்றிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அப்பொழுது பரிமளத்தின் பார்வை மருமகளை சிநேகமாய் பார்த்து புன்னகைக்க, எதற்கு வம்பென்று பதிலுக்கு சிரித்தாள் கிருஷ்ணா.

“உனக்கு என்ன புடிக்கும் கிருஷ்ணா? அசைவம் சாப்பிடுவ தானே? மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா, மீன் வறுவல் சொல்லி இருக்கேன். உனக்கு என்ன வேணும்னு சொன்னா அதையும் சேர்த்து செய்யச் சொல்லிடுவேன்!” என கேட்டு நின்ற மாமியாரை விழி உயர்த்திப் பார்த்தாள்.

அவளின் மனம் சற்றே அதிர்ந்து ஆச்சரியப்படத்தான் செய்தது. ‘நான் என்ன பேசணும்னு சீக்கிரமா வந்து டியூசன் எடுங்க மாஸ்டர்!’ என கணவனை பரபரப்புடன் தேடினாள் கிருஷ்ணா.

Leave a Reply

error: Content is protected !!