பூந்தளிர் ஆட… 9
பூந்தளிர் ஆட… 9
பூந்தளிர்-9
கூடல் மாநகரின் உச்சிவெயில் மொத்தமும் தனது தலையில் விழுந்ததைப் போல் அத்தனை சோர்வுடன் இருந்தாள் கிருஷ்ணாக்ஷி. இன்றைய காலைப்பொழுதில் ஆரம்பித்த அலைகழிப்பு உடலோடு மனதையும் சேர்த்து வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
அன்பாக பலவற்றைப் பேசியே, மனைவியை கதிரவனின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அரவிந்தன்.
“எங்கே இருந்தாலும் உனக்கு என்ன பேசணும்னு தோணுதோ, அதையே பேசு சாலா! எந்த தயக்கமும் வேண்டாம். இது உன் குடும்பம். நம்ம வீடு! இதை மட்டும் மனசுல நிறுத்திக்கோ!” என்றவனின் சமாதானங்கள், ஆதங்கத்தில் அல்லாடியவளின் மனதை சற்றே ஆற்றுப்படுத்தியது.
கதிரவன் வீட்டிலேயே சாருமதியின் குடும்பமும் கூடியிருந்தது. ‘ஆஹா. இவர்கள் பேசி வைத்தே செய்கிறார்களா?’ விடையறியாத கேள்வியுடன் கணவனைப் பார்க்க, எந்த பதிலையும் சொல்லாமல் மெலிதாய் சிரித்தான் அரவிந்தன்.
“ம்க்கும்… எல்லாத்துக்கும் இப்படியே சிரிச்சு வைங்க, என் பொழப்பு வெளங்கிடும்!” மனைவியின் முணுமுணுப்பில் அவனது சிரிப்பின் டெசிபல் சற்றே உயர்ந்தது. அதையும் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“சிரிக்கிறதுல கூட ரூல்ஸ் அன்ட் ரெஸ்ட்ரிக்ஷன் ஃபாலோ பண்ணணுமா மாஸ்டர்? உங்களால எப்படித்தான் முடியுதோ!” இயலாமையுடன் விழி விரித்தாள்.
சுதாமதி, சாருமதி இருவருக்குமே இரண்டிரண்டு மகன்கள். கதிரவன் வீட்டுப் போர்டிகோவில் அவர்களின் நான்கு பிள்ளைகளும் அமர்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் அருகில் சென்று அமர்ந்தான் அரவிந்தன்.
பெண்கள் தொலைக்காட்சியிலும் ஆண்கள் ரம்மியிலும் வீட்டின் உள்ளே லயித்திருப்பர் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
“என்னடா? பாட்டி வீட்டுக்கு வராம இங்கே உக்காந்து விளையாடிட்டு இருக்கீங்க!” கேட்டபடி ஸ்ட்ரைக்கரை இழுத்து அடித்தான் அரவிந்தன்.
அடித்த வேகத்தில் முன்பின், இடம் வலம் என நாலாபக்கமும் வேகமாகச் சறுக்கிச் சென்று வந்த ஸ்ட்ரைக்கர், கருப்பு, வெள்ளை காயின்களை ஒரு குழியில் தள்ளிவிட்டு, அதுவும் மற்றொரு குழியில் படு சமர்த்தாய் போய் விழுந்தது.
“ச்சோ மாமா… இது தர்ஷன் டெர்ம். உங்களால அவனுக்கு மைனஸ் விழுந்துருச்சு!” சாருமதியின் மகன் விமலன் சொல்ல,
“ஏன் மாமா. இப்படி சொதப்பலா ஆடுறீங்க?” மூக்கால் அழுதபடி சுதாவின் மகன் தர்ஷன் தன்னிடமுள்ள கருப்பு காயினை பலகையில் வைத்தான்.
“எல்லாம் கேம் தானேடா!” என்றபடி அவர்களுக்கு இணையாக இன்னும் இரண்டு முறை ஸ்ட்ரைக்கரை இழுத்து விட்டான் அரவிந்தன்.
விளையாட்டின் மும்மூரத்தில் பிள்ளைகள், கிருஷ்ணா வந்து நின்றதை கவனித்திருக்கவில்லை.
“உள்ளே போகாம இங்கேயே உக்காந்துட்டீங்களா?” அவளின் குரல் கேட்டதும்தான், நான்கு பிள்ளைகளும் பரபரத்தனர். எல்லோரிலும் சிறியவன் நித்திலன், இவர்கள் வந்திருப்பதைப் கூறுவதற்கு விரைந்து உள்ளே ஓடினான்.
“வெல்கம் டு அவர் ஸ்வீட் ஹோம் அத்தை!” பெரியவனான வர்ஷன் வரவேற்க,
“அடப்பாவி மாப்பிள்ளகளா… அத்தைக்கு முன்னாடி வந்த மாமாவுக்கு இந்த சிவப்பு கம்பள வரவேற்பு இல்லையாடா? எம் பொண்ணை உங்கள்ல யாருக்கும் கட்டிக் கொடுக்க மாட்டேன்டா, பாத்துகிடுங்க!” அரவிந்தன் பொய்யாய் முறுக்கிக் கொண்ட நேரத்தில், புதுமணத் தம்பதிகளை வரவேற்க கதிரவன் வாசலுக்கே வந்து விட்டார்.
அவருக்கு பின்னே அனைவருமே சிரித்த முகத்துடன் வந்து நின்றனர். எந்த இடத்திலும் தான் சொல்வதும் செய்வதும் மட்டுமே முடிவாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் கதிரவன், பிறரை மதித்து நடப்பதிலும் முதல் மனிதராக நிற்பார். அவ்வாறே இப்பொழுதும் வந்து நின்றார்.
“வா மாப்ள… வாம்மா தங்கச்சி!” நிறைவான மனதோடு வரவேற்றவர்,
“தேரும் திருவிழாவும் அம்மையப்பனுக்கு தான் மாப்ள… சொக்கநாதருக்கு கிடையாது. பவுசும் மவுசும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மட்டும்தான்! அதான், எம் பையன் உங்கள ஜோடியா பார்த்ததும் அதுக்கு தக்கன மரியாதைய கொடுத்திட்டான்!” மகனைத் தாங்கிப் பேசவும் மறக்கவில்லை.
“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா மாமா?” அரவிந்தன் சொல்ல,
“இத நீ சொல்றியே, அங்கே நிக்கிற மாப்ள… மொதல்ல உள்ளே வாய்யா!” சாருவின் கணவன் முகிலனும் முன்னே வந்து வரவேற்றார்.
“இந்தா சுதா, தங்கச்சியை உள்ளே கூட்டிட்டு போ! மொகம் வாடித் தெரியுது.” கதிரவன் கரிசனத்தோடு சொல்ல, சுதாமதியும் சாருமதியும் வந்து கிருஷ்ணாவை உள்ளே அழைத்து சென்றனர்.
“எதுக்கு டல்லா இருக்கே கிருஷ்ணா?” சுதாமதி விசாரிக்க,
“காலையில இருந்து அலைச்சல் அண்ணி, அது ஒத்துக்கல போல!”
“ஒருநாள் நிம்மதியா வீட்டுல இருக்க வேண்டியது தானே. எதுக்கு இங்கிட்டும் அங்கிட்டும் அலைஞ்சிட்டு இருக்கே நீயி?” சாருமதி கேட்க,
‘உங்களுக்காக நேந்துகிட்ட வேண்டுதல்தான்!’ என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டவள், என்ன பதில் கூறுவதென்றே தெரியாமல் சிரித்து மழுப்பினாள் கிருஷ்ணா.
“கொஞ்சநேரம் உள்ளாற வந்து படு கிருஷ்ணா. கொஞ்சம் தெம்பா தெரிவே!” சுதா சொல்ல,
“வேண்டாம் ண்ணி.” கிருஷ்ணா மறுக்கும் பொழுதே,
“போம்மா தங்கச்சி… பொழுதுக்கும் உழைக்கிறவக அலட்டிக்கக் கூடாது.” கதிரவனின் கனிவான கண்டிப்பில் கிருஷ்ணா, கணவனின் முகம் பார்த்தாள்.
“அது, இன்னும் நம்ம வீடு சரியா பழகலல்ல மாமா… அதான் சங்கோஜப்படுறா! வீட்டுலயே அம்மா, அத்தை முன்னாடி கூட நின்னுட்டேதான் இருக்கா!” அரவிந்தனின் மழுப்பலில்,
“பரவாயில்லையே… நாலுநாள் இருப்புல எந்தம்பி இவ்ளோ கவனிச்சிருக்கான்.” சுதா கேலி பேச,
“பேசுற நேரத்துல சில்லுன்னு மோரோ, ஜூஸோ கொண்டாந்து குடுக்கா!” அக்காவை விரட்டினான் தம்பி.
“என் வீட்டுக்கே வந்து, என்னையவே விரட்டுறடா நீயி!”
“வந்தவன் வாயவே பார்த்துட்டு நின்னா, அவுகளாத் தான் கேட்டுப்பாங்க!” மனைவிக்கு பேச்சிலேயே கொட்டு வைத்தார் கதிரவன்.
“அட என்ன மாமா? தனியா இருக்குற நேரத்துல பாடம் நடத்துறதை விட்டுவிட்டு, என் முன்னாடி கிளாஸ் எடுக்கிறீக!” அரவிந்தன் கேலி பேசியதில்,
“படவா உன்ன…” முதுகில் செல்லமாய் அடித்தாள் சாருமதி.
நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்க்கும் பார்வையாளாக மாறியிருந்தாள் கிருஷ்ணா. ‘என்ன பதில் பேசினால், யார் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?’ என்கிற குழப்பம் அவளின் வாய்க்கு இறுக்கமானதொரு பூட்டினை போட்டு விட்டிருந்தது.
“இவேனுக்கு வகை தொகையில்லாம வாயை வளத்து விட்டுட்டு, இவேன் கூடயே மல்லுக்கு நில்லுங்க! அப்புறம் வளர்த்த கடா மாருல பாயுது, நெஞ்சுல முட்டுதுன்னு என்னைய போட்டு குடையுறது!” நொடித்துக் கொண்டே உள்ளே சென்றார் சுதாமதி.
“யக்காவ்… எதுனாலும் என் முன்னுக்கு வந்து பேசு, மாமாவை பேசாதே!” குரலை உயர்த்திய அரவிந்தன்,
“நீங்க செரியில்ல மாமா… அதேன் அக்கா இஷ்டத்துக்கு வாய விட்டுட்டு போகுது!” கதிரவனையும் குறை சொல்லத் தவறவில்லை.
அவனது பேச்சில் புருவம் உயர்த்திய கதிரவன், சாதரணமான குரலில், “என்ன சொல்ல வர்ற மாப்ள?” எனக் கேட்டார்.
“பின்னே என்ன மாமா? பேச்சு பேச்சோட இருக்கணும். அம்மா வீட்டுக்கு போறதும் வாரதும் நிக்கக்கூடாதுன்னு சத்தம் போட்டு, அக்காவை நீங்க அனுப்பி வைச்சிருக்கணுமா, இல்லையா?” சகஜமாய் இவன் கேட்ட தினுசில்,
“டேய் மாப்ள…” என கதிரவனும் முகிலனும் ஒன்றாய் குரலை உயர்த்தி விட்டனர்.
“அங்கே ரெண்டு பெருசுங்க, பொண்ணுங்க வரல. பேரப் பசங்கள பாக்க முடியலன்னு வெசனபட்டுட்டு இருக்காக! பெரியவங்க மனசு கஷ்டப்பட நாம ஏன் மாமா காரணமா இருக்கணும்?” என்றவன் தமக்கைகளின் முகம் பார்த்தான்.
இத்தனை பேச்சிற்கு நடுவே வந்தவர்களின் கையில் குளிர்ந்த பழச்சாறும் சாருமதியின் கையால் கொடுக்கப்பட்டிருந்தது.
“நான் சொன்னேன் தான் தம்பி! உங்க ரெண்டு மாமாவும் சேர்ந்து தான்…” சாருமதி இழுக்க,
“உன் வீட்டுக்காரருக்கு புரியுற மாதிரி நீ சொல்லியிருக்க மாட்டக்கா! மாமாவை குத்தம் சொல்லாதே!” என்றவன் முகிலனின் முகம் பார்த்து,
“சரிதானே மாமா… நாஞ் சொல்றது!” வேகமாகக் கேட்க, அவரோ பதில் பேசத் தெரியாமல் திருதிருத்து நின்றார்.
இவனுக்கு பரிந்து பேசினால் வீட்டில் மனைவியிடம் பொழுதுக்கும் பேச்சு வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும், இல்லையென்று சொன்னால் மதிப்பாய் பார்க்கும் மாப்பிள்ளையிடம் கடுப்பை சாம்பதித்துக் கொள்ள நேரிடும்.
இப்போது யார் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் முகிலன், கதிரவனின் முகம் பார்க்க, கிட்டத்தட்ட அவரும் அதே நிலையில்தான் இருந்தார்.
“நீ பொறந்த வீடுக்கா… எதுனாலும் அதிகாரமா எடுத்து சொல்ல உனக்கு உரிமை இருக்கு. இதை புரியுற மாதிரி சொல்லி நீ, நம்ம வீட்டுக்கு புறப்பட்டு வந்திருக்க வேணாமா?” மேற்கொண்டு பேசியவனை, அக்காவின் கணவர்களால் பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை.
“டேய் மாப்ள… சேம் சைட் கோல் போட்டு தாக்குறியேடா! எல்லா வீக்கெட்டையும் நீயே அவுட் பண்ணிட்டு இருந்தா நாங்க எல்லாம் என்ன பண்ண?” முகிலன் காதுக்குள் வந்து முணுமுணுக்க, அவரை பொய்யாய் முறைத்தான் அரவிந்தன்.
“பேசாதீங்க மாமா… நல்லது, கெட்டது உரிமையா எடுத்துச் சொல்ற இடத்துல இருந்துட்டு இப்படி முறுக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்? நானெல்லாம் உங்களைப் பார்த்து வாழக் கத்துக்கணும்னு நினைக்கிறவன் மாமா… என்னை சங்கடப்பட விட்டீகளே!” அசராமல் வாய் பேசியவனை அந்த வீட்டில் இருந்த அனைவரும் இமைக்க மறந்து பார்த்தார்கள்.
“மாமா, போடு ரகிட… ரகிட!” வர்ஷனின் கேலியில்,
“ஓடுங்கடா பசங்களா… வெளியே போயி விளையாடுங்க!” என விரட்டி விட்டான்.
கிருஷ்ணா திறந்த வாயை மூடாமல் கணவன் பேசுவதையே கண் சிமிட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். இத்தனை நேரம் அவளை அழுத்திய அசதி எல்லாம் போன இடம் தெரியவில்லை.
‘வாய் பேச்சில் வீரன் இவன். சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொள்ளும் சமர்த்தன். தனக்கான காரியங்களை முடித்துக் கொள்வதில் கள்ளன்!’ என வரிசை கட்டிப் பாடலாம் போலிருந்தது.
“ரொம்ப முன்னேறிட்ட மாப்ள… உன் பொஞ்சாதி சொல்ற விதத்துல சொன்னதாலதான், நீயும், அவ இஷ்டத்துக்கு வேலைக்கு போக சம்மதிச்சியா?” கதிரவன் அதிராமல் காயை நகர்த்தினார்.
‘வீணான பேச்சுகள் வேண்டாம், விஷயத்திற்கு வா!’ என்பதாக இருந்தது அவரின் பார்வை. அவரின் பேச்சினை சளைக்காமல் எதிர் கொண்டவன்,
“இப்ப கிருஷ்ணா வேலைக்கு போறதுல பிரச்சனையா? இல்ல, உங்களை கலந்துக்காம நானா முடிவெடுத்து அனுப்பி வைச்சது பிரச்சனையா? எது உங்களுக்கு கௌரவக் குறைச்சலைக் கொடுக்குது? சொல்லுங்க மாமா!” நேருக்கு நேராக கேட்க, எல்லாருமே பதில் பேச முடியாமல் வாயை அடைத்துக் கொண்டனர்.
“டேய் தம்பி… அவர் உங்க மாமாடா! வீட்டு மாப்பிள்ளைங்கிறதையும் தாண்டி, நம்ம குடும்பத்துக்கே மூத்தவர்!” மிரட்சியுடன் பேசிய சுதாமதி, கணவனின் முகம் பார்த்தார்.
குற்றம், குறை, குதர்க்கப் பேச்செல்லாம் மனைவியிடம் சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் கதிரவன். அதையும் மீறி எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால் அதை அரவிந்தனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வார். அதுவும் அவனது மனம் நோகாமல் சுட்டிக் காட்டுவார்.
இப்பொழுது அவன் செய்த காரியமே இவரின் மனத்தாங்கலுக்கு காரணமாகிப் போய்விட, அனைத்தையும் மனைவிடம் இறக்கி வைத்திருந்தார் கதிரவன்.
திருமணம் முடிந்த சொற்ப நாட்களில், பெரியவர்களிடத்தில் பேசிக் கொள்ளாத ஒன்றை, சாத்தியமாக்கிக் கொள்வதில் இருக்கும் சாதக பாதகங்களை கணிக்கத் தவறியிருந்தான் அரவிந்தன்.
மனைவி வந்ததும் தன்போக்கில் முடிவெடுக்கும் அவனது முடிவுதான் கதிரவனின் மனதை மடை மாற்றத் தொடங்கி இருந்தது.
இத்தனை நாட்களாக வீட்டு மாப்பிள்ளை, குடும்பத்தில் மூத்தவன் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவன், இப்பொழுது மரியாதை கொடுக்கத் தவறி விட்டான் என்பதே கதிரவனின் குற்றச்சாட்டு
அரவிந்தன் அதையே திருப்பி, ‘உரிமையாக வந்து கேட்க வேண்டிய இடத்தில் இருந்து விட்டு, இதென்ன சின்னபிள்ளைத்தனமாக நடந்து கொள்வது?’ எனும்படியாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால், எவ்வளவு நேரம்தான் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க முடியும்?
அதுவும் கணவனுக்கு என்று வரும் பொழுது பெண்களிடம் இருக்கும் இயல்பான உரிமையுணர்வும் தன்மானமும் சுதாமதிக்கும் மேலோங்கி விட, அனைவரின் முன்பு தம்பியை அதட்டி விட்டார்.
“அவர் பதில் சொல்லாம காது கொடுத்து கேக்கிறாருன்னு உன் இஷ்டத்துக்கு பேசுவியாடா? என்னமோ ஆனது ஆகிப் போச்சு. இனி இப்படி நடக்காதுன்னு சொல்லி, வீட்டுக்கு கூப்பிடுறத விட்டுட்டு, அவரை கேள்வி கேட்டுட்டு இருக்கிற நீயி! கல்யாணமான மிடுக்கு, வீராப்பை எல்லாம் உன் மாமனார் வீட்டுல காட்டிக்கோ! இங்கே நீ எப்பவும் எனக்கு தம்பியா மட்டுமே வா!” வார்த்தைகளில் நங்கூரமிட்டு விளையாட்டுப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுதாமதி.
அவரது பேச்சில் அனைவரும் நொடிநேரம் உறைந்து நிறைந்து நின்ற நேரத்தில் மௌனத்தை உடைத்தாள் கிருஷ்ணா.
“அவர் எப்பவும் உங்க தம்பிதான் அண்ணி. எதுவா இருந்தாலும் தாராளமா நீங்க எடுத்துச் சொல்லலாம். அவரை அதட்டி கேட்கவாவது நீங்க வந்திருக்கலாமே?”
‘கணவனுக்காக பரிந்து பேச நானும் இருக்கிறேன்!’ எனும் விதத்தில் கிருஷ்ணாவும் பேசிவிட, அந்தச் சூழ்நிலையை கதிரவனே முற்றிலும் விரும்பவில்லை.
புதிதாய் மணமுடித்து தனது வீட்டிற்கு முதன்முறையாக வந்திருக்கும் பெண், மனச் சுணக்கத்தோடு பேசுவதையோ மனபாரத்தோடு இங்கிருந்து செல்வதையோ அவர் கொஞ்சமும் கூட விரும்பவில்லை.
“இப்ப நீ சொல்றத, வீட்டுல வந்து சொல்லி எனக்கு புரிய வைச்சிருக்கலாமேக்கா? இதையும் கூட தப்பா எடுத்துக்கிட்டா எப்படி?” முகம் சுருக்கி அரவிந்தன் பேசியதில் தமக்கைகளின் மனமும் கசங்கிப் போனது.
இருவரும் சேர்ந்து கிருஷ்ணாவின் முகம் பார்த்தனர். ‘நான் என்ன செய்தேன்? இப்படி குற்றவாளியாக நிற்பதற்கு.’ என்பதைப் போல அப்பாவியாக தலைகுனிந்து நின்றிருந்தாள்.
“அறிவுகெட்டவனே… உன் அவசரத்துக்கு இவள அல்லாட வச்சுட்டு இருக்க!” சுதமதியின் அதிகப்படியான குற்றச்சாட்டில் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டான்.
“செத்தநேரம் சும்மா இரு சுதா! ஏதோ ஆர்வக்கோளாறுல முடிவெடுத்துட்டு, இப்ப தவிச்சுட்டு இருக்கான்! நீ வேற கூடக்கூட சொல்லிக் காமிச்சிட்டு இருக்க!” என பேச ஆரம்பித்தார் கதிரவன்.
“மாப்ள… உங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லாவே தெரியும்யா! நீ நூறு பேருக்கு சம்பளம் கொடுக்கிற இடத்துல இருக்கும்போது, உன் பொஞ்சாதி வெளியிடத்துல வேலைக்கு போறது பாக்கவும் கேக்கவும் நல்லவா இருக்கும்?
என்னதான் இந்தக்காலம் அந்தக்காலம்னு பேசினாலும் நம்ம குடும்பத்துக்குனு இருக்கிற கௌரவம் இறக்கம் காண நாமளே காரணமாகிடக் கூடாது. அதுக்குதேன் கல்யாணத்துக்கு முன்னாடி அவ்வளவு கண்டிப்பா பேசினேன்!
ஆனா நீங்க ரெண்டுபேரும் அதுல தீவிரமா இருக்கும்போது அதுக்கு தடங்கலா நான் எப்பவும் நின்னுருக்க மாட்டேன்! எனக்கு புரியற மாதிரி நீ எடுத்துச் சொல்லி இருக்கலாம்.
அதை விட்டுட்டு யாரோ எவரோ மாதிரி மொபைல்ல நீ தீர்மானமா சொல்லும்போது எனக்கும் மனசு விட்டுப் போச்சு அரவிந்தா! அதைதான் உங்க அக்கா கிட்ட இறக்கி வைச்சுட்டேன்! அவளும் இதுதேன் சாக்குன்னு அம்மா வீட்டுக்கு போகாம இருந்துட்டா!” என்று சமாதானமாகப் பேசியதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் அரவிந்தன்.
“புரியுது மாமா… முடிவு எடுக்கிறதை விட, அதை நமக்கு சாதகமா நடத்திக்கிறதுல தான் நம்ம சாதூரியமே இருக்குன்னு ரொம்ப நல்லாவே புரிய வைச்சுட்டீங்க… ஆனா, சந்தடி சாக்குல என் அக்காவை வில்லி ஆக்கிட்டீங்களே மாமா! எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க வீட்டுல உங்களுக்கு கஞ்சி கிடைக்காது. அதனால இப்பவே எங்கூட கெளம்பிடுங்க. மூனு வேளையும் ராஜ உபசாரம் செய்ய நான் காத்து கிடக்கேன்!” தீவிர பாவனையுடன் சொன்னதில், கிருஷ்ணா அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
இறுக்கமாய் நெறித்த அழுத்தங்கள் எல்லாம் அந்த நேரமே அங்கே உடைபட்டுப் போனது. ‘இதற்கா இத்தனை பாடு?’ என உள்ளுக்குள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் கிருஷ்ணா.
“கொஞ்சமாவது தணிஞ்சு பேசுறானா பாரு? அடேய், நீ இடத்தை காலி பண்ணு. நான் உங்க மாமா கூட தனியா பேச வேண்டியிருக்கு!” தம்பியை விரட்டிய சுதாமதி கணவனை முறைத்தார்.
“நான் சொன்னது சரியாப் போச்சு! இங்கே வேண்டாம் மாமா. இப்பவே நீங்க என்கூட வந்துருங்க. உங்க உசிருக்கு இங்கே உத்திரவாதம் இல்ல.” அரவிந்தன், அவரைக் கிளப்புவதிலேயே குறியாக இருக்க,
“டிரெஸ் எடுத்திட்டு வந்திடவா மாப்ள…” கதிரவனும் அவனோடு ஜோடி சேர்ந்து கொண்டார்.
“போற வழியில வாங்கிக்கலாம் மாமா, மொதல்ல கிளம்புங்க!” கேலி பேசியபடி அனைவரயும் கிளப்பி விட்டான்.
“கல்யாணம் முடிஞ்சு ஜோடியா தம்பி வந்திருக்கானேன்னு கறி சோறு ஆக்கி போட்டியாக்கா நீயி?” சுதாமதியை வம்பிற்கு இழுப்பதை குறைத்துக் கொள்ளவில்லை அரவிந்தன்.
“ம்க்கும்… இங்கே எங்களுக்கே கஞ்சி வடிக்கலையாம். உனக்கு கறி சோறு கேக்குதாடா?”
“ஏன்க்கா?”
“ஞாயித்துக்கிழமை சுட்டுப் போட்டாலும் உங்க அக்காக்களுக்கு சோறு வடிக்க உடம்பு வணங்காது மாப்ள…” முகிலன் ரகசியத்தை போட்டுடைக்க, சாருமதி ‘ஐயோ’ என தலையில் அடித்துக் கொண்டாள்
“அப்போ, நாங்க வரலன்னா என்னக்கா பண்ணியிருப்பீங்க?”
“என்னத்த பெரிசா பண்ணிடப் போறோம்? பார்சல்ல கொடுத்து விடுன்னு புள்ளைங்கள நம்ம வீட்டுக்கு அனுப்பி இருப்போம்!” சாருமதி மிதப்பாக பதில் சொன்னதில் அந்த இடமே கலகலத்துப் போனது.
“என்னால பெரிய சண்டை ஆகப் போகுதோன்னு ரொம்ப மனசு சங்கடப்பட்டுட்டு வந்தேண்ணி… ஆனா இப்படியொரு திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்ல.” மனம் நிறைந்த சிரிப்போடு கிருஷ்ணா பேச, ஆதரவாக கைகளை பிடித்துக் கொண்டார் சுதாமதி.
“இவங்க ரெண்டு பேருக்கும் இடையில மாமா, மாப்ள உறவை விட, அப்பா பையன் பாசம்தான் அதிகமா இருக்கும் கிருஷ்ணா! பதினைஞ்சு வயசுல என் தம்பி குடும்ப பாரத்தை தாங்கிக்கும் போது, கை கொடுத்து தூக்கி விட்டவரு உங்க அண்ணன்.
அப்பப்போ, இப்படி எதையாவது சொல்லி முட்டி மோதிகிட்டே தான் இருப்பாரு! அவனும் சலிக்காம பேசி வம்பு வளப்பான். ஆனா அம்மா வீட்டுக்கு வராம போகாம இருந்தில்ல… அவன் ஆர்வக்கோளாறுல இருக்கான்னு இவரும் புரிஞ்சுக்காம இந்த முறைதான் கொஞ்சம் கூடுதலா மனசு வருத்தி சொல்லவும் எனக்கும் என்னமோன்னு ஆகிப் போச்சு!” சுதாமதி தொடர்ந்து பேசிய நேரத்தில்,
“அட விடுக்கா… எந்நேரமும் லா… லா… லா பாட நம்ம வீடு என்ன வானத்தைப் போல சினிமாவா?” என சாருமதி இடைமறிக்க,
“பொம்பளைங்க மாநாடு ஆரம்பிச்சிடுச்சுடா அரவிந்தா, நாம கெளம்புவோம்! இவுகளுக்கு பார்சல் கொடுத்து விட்ரலாம். எனக்கு இப்பவே பசிக்குது!” என்றபடி கதிரவன் நேரத்தை பார்க்கும் போது மதியம் மணி இரண்டு.
அங்கே இருந்த இரண்டு கார், வண்டி என எல்லோரும் சேர்ந்து கிளம்பியதில் புதுமணத் தம்பதியர் வந்தது போலவே தனியாகத் திரும்பினர்.
“செம டிராஜடி, ஃபைட் சீன் எல்லாம் எதிர்பார்த்து வந்தேன் ரவி, இப்படி சப்புன்னு முடிஞ்சு போச்சே?” பொய்யாய் குறைபட்டாள் கிருஷ்ணா.
“உனக்கு வேடிக்கையா இருக்கா சாலா? நானுமே கொஞ்சம் யோசனை பண்ணிட்டுதான் வந்தேன்! எப்பவும் சொல்லி காட்டிட்டு மொகத்த சுருக்குவாங்களே தவிர வீட்டுக்கு வராம இருந்ததில்ல.”
“இதெல்லாம் வாடிக்கைன்னு என்கிட்டே சொல்லி இருக்கலாமே மாஸ்டர்!”
“அம்மா சத்தம் போட்டதுல எல்லாமே மறந்து போச்சு சாலா. எங்கப்பா இறந்த பிறகு எங்க குடும்பத்தை தூணா நின்னு தாங்கினதுல கதிரவன் மாமாவுக்கு பெரிய பங்கிருக்கு. என் பனிரெண்டு வயசுல அக்காவுக்கு கல்யாணம் முடிச்சாங்க. எங்கப்பா தவறும்போது எனக்கு பதினாலு வயசு.
அந்த நேரம் மாமா, என்னை படிக்க வைக்கிறேன்னு சொன்னாரு. அம்மாவும் அத்தையும் என்னோட இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க. என் மனசுல, நான் சுதந்திரமா செயல்படணும்னு முடிவு பண்ணிட்டேன்!
பத்து வருஷம் படிச்சு முடிச்சுட்டு பொழப்புக்கு வழியத் தேடுறத விட, அப்பவே தேடிப் போகலாம்னு முடிவெடுத்து அதை அப்படியே மாமாகிட்ட சொன்னேன். பெருமையா தட்டிக் கொடுத்து நான் எப்படி சம்பாதிக்கணும்னு நல்ல வழியக் காட்டினாரு.
அவருக்கான மதிப்பும் மரியாதையும் எந்த இடத்துலயும் குறையக்கூடாதுன்னு நினைக்கிறவரு. இத்தனை வருஷமா நம்ம வீட்டுல சின்னதா பொங்கல் வைச்சு சாமி கும்பிடுறதுக்கும் அவர்கிட்ட நல்லநாள் கேட்டுத்தான் செஞ்சு பழக்கம்.
உரிமை இருக்கிற இடத்துலதான் அதிக பாசமும் கோபமும் வெளிப்படும். அதுல ஒருவகை தான் இது!” அரவிந்தன் தொடர்ந்து பேசிக்கொண்டே வர, இடையிடாமல் கேட்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டாள் கிருஷ்ணா.
“உங்களை காக்கா பிடிக்கிறேனோ இல்லையோ, அவருக்கு ஜால்ரா அடிக்க இப்ப இருந்தே ரெடியாகுறேன் மாஸ்டர்!” இவள் விளையாட்டாய் பேச,
“அடிப்பாவி… நான் எவ்ளோ ஃபீலிங்கோட சொல்லிட்டு இருக்கேன்! நீ, என்னடான்னா. எங்களை காமெடி பீசா நினைச்சு பேசிட்டு இருக்க!” அவன் பல்லைக் கடித்த நேரத்தில் வீடும் வந்து சேர்ந்திருந்தது.
அதற்கடுத்து அன்றைய மிச்சப் பொழுதுகள், ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’யாய் கழிய, மாமியாரின் சினேக பாவனையை முழுமையாகப் புரிந்து கொண்டாள் கிருஷ்ணா.