பூவிதழ் – 1

பூவிதழ் – 1
அத்தியாயம் – 1
“ஆத்தா உன் கோவிலிலே.. அலங்கார வாசலிலே..
ஏற்ற வந்தோம் மாவிளக்கு.. எங்க குறையை நீ விலக்கு” என்று மைக்செட்டில் பக்தி பாடல் சத்தமாக ஒலிக்க, பத்திரகாளி அம்மனை அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து மனதார தரிசித்துவிட்டு வெளியே வந்தனர். சிவகாசி என்றாலே பட்டாசு நினைவு வருவதுபோல, சித்திரை மாதம் வரும் அம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.
“டேய் கோவிலில் கூட்டம் சும்மா களைகட்டுது இல்ல” என்று நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவன் கேட்க, தரை தட்டிய பட்டுவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மீசையை முறுக்கிவிட்டு, பின் கழுத்து காலரைத் தூக்கிவிட்டு நடந்தான் கலைச்செல்வன்.
அந்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்களின் பார்வை அவனைச்சுற்றி வட்டமிட, “ம்ஹும் உண்மைதான் மச்சான்” என்று கண்களால் சிரித்துக்கொண்டே சன்னிதானம் நோக்கி நடந்தான்.
ஆறடிக்கும் குறையாத உயரம், வேலை செய்து உரமேறிய தோள்களின் வனப்பை காட்டிக் கொடுத்தது அவன் அணிந்திருந்த சிவப்பு சட்டை. அலையலையாய் கேசமும், கூர்மையான விழிகள் சிரித்தபடியே இருக்க, நேரான நாசியும், முறுக்கிவிட்ட மீசையும், பற்கள் தெரியாமல் சிரிக்கும் அவனது வசீகரமான புன்னகைக்கு பெண்களின் மனம் அடிமையானது.
அவனுடன் நடந்து வந்த மற்றவர்களில் ஒருவன் மட்டும், “இந்த கோவிலுக்கு வந்த அத்தனை பெண்களோடு பார்வையும் உன் மீதே இருக்கு. எந்த உடை போட்டாலும், உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி கட்சிதமாக பொருந்துது என்றே புரியல” என்றான் பொறாமையுடன்.
அவனின் பின்னதலையை விளையாட்டாகத் தட்டிய கலைச்செல்வன், “அதுக்காக ஏன் இப்போ காரணம் இல்லாமல் பொங்கற? அதுக்கு எல்லாம் ஒரு முகராசி வேணும்” என்றவன் சொல்லிவிட்டு திரும்பும்போது அவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் மஞ்சரி.
இளஞ்சிவப்பு நிற பாவாடையும், ரவிக்கையும் அணிந்து பொன்னிறத்தில் தாவணி அணிந்திருந்த தன்னவளின் அழகில் அவன் மனம் மயங்கியது. ஏற்கனவே கோபியர்களின் கண்ணனான தன்னவனின் உடையைக் காட்டி, ‘ஏய் மாமா அழகாக இருக்கேனா?’ என்று பார்வையால் வினாவிட, கணப்பொழுதில் அவனைப் பார்வையால் அளந்தாள்.
ஆண்களே பார்த்து ஆசைப்படும் அளவிற்கு ஆணழகனாக இருந்த தன்னவனிடம், ‘இன்னைக்கு நீ சூப்பரா இருக்கிற’ என்றாள் விழி மொழியாக!
மற்றவர்கள் அறியாமல் அவளைப் பார்த்து உதடு குவித்து முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டு அவன் நகர, “அண்ணா உன்னைச் சுற்றி நாங்களும் இருக்கோம், அதை கொஞ்சம் நினைவில் வைச்சுக்கோ” குறும்புடன் ஞாபகப்படுத்தினான் தமிழரசன்.
“சின்ன பசங்க எல்லாம் இதைப் பார்க்க கூடாதுடா, அதனால் கண்ணை மூடிக்கோ” என்றவன் நக்கலாகக் கூறியபடி தன் வழியில் நடக்க, அதற்குள் அம்மனின் சன்னிதானம் வந்துவிட்டது. பெண்களின் வரிசையில் மஞ்சரியும், ஆண்களின் வரிசையில் கலைச்செல்வனும் நின்று சாமி கும்பிட்டு வெளியே வந்தனர்.
“கலை ஒரு நிமிஷம்” என்ற குரல்கேட்டு நின்று அவன் திரும்பிப் பார்க்க, “கோவிலுக்கு வந்துவிட்டு வெறும் நெற்றியுடன் போகக்கூடாதுன்னு தெரியாதா?” என்று சொல்லிவிட்டு அவனின் நெற்றியில் திருநீறு வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் முகம் பூவாய் மலர்ந்தது.
அவனின் பின்னோடு நின்றிருந்த மற்றவர்களைக் கண்டு, “அவரிடம் கொஞ்சம் தனியாக பேசணும்” என்று அவள் அழுத்தமாக சொல்ல, மற்ற ஐந்துபேரும் சரியென்று தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தனர்.
இருவரும் பிரகாரத்தின் ஓரிடத்தில் சென்று அமர, அவள் பூஜை செய்து எடுத்துட்டு வந்த தேங்காயை உடைத்து சாப்பிட தொடங்கினான். அவள் விஷயத்தை எப்படி தொடங்குவது என்று புரியாமல் தடுமாறிட, தன்னிடம் ஏதோ கேட்க தயங்குகிறாள் என்பதை தெளிவாக உணர்ந்தான்.
“என்ன விஷயம்?” என்றதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் சந்தேகத்துடன் படிந்தது. அதை உணர்ந்தவன் கேள்வியாக புருவத்தை ஏற்றி இறக்கினான்.
இனி பேசாமல் இருந்தால் தவறாக நினைப்பான் என்று எண்ணி, “நான் ஒரு விஷயம் கேள்விபட்டேன். அது உண்மையான்னு தெரிஞ்சிக்கணும்” என்றவள் நேரடியாக விஷயத்திற்கு வர, அவன் உதடுகளில் மர்மப்புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.
“அதுதான் விஷயம் உன் தொண்டைக்குழி வரை வந்துவிட்டதே! ம்ஹும் வாயைத் திறந்து கேளு” என்றான் குறுநகையுடன்.
“நீ போனவாரம் வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு எங்கே போயிருந்தே!” என்றாள் கோபமாக.
அவள் சிவந்த முகம் அவனுக்கொரு தனி கதையைச் சொல்ல, “நீ கேட்கதைப் பார்த்தால் எனக்கு என்னவோ சந்தேகமாக இருக்கே. ஆமா பசங்ககிட்ட என்னைப்பற்றி விசாரித்தாயா?” என்றவன் பார்வையில் இருந்த வித்தியாசம் அவளைப் பதட்டமடைய வைத்தது.
கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே அவனை நேசிக்கிறாள். ஆனால் வீட்டினருக்கு அவன் மீது அவ்வளவு நல்ல எண்ணம் கிடையாது. அவளின் பிடிவாதம் உணர்ந்த குடும்பத்தினர், அவனைப்பற்றி வெளியே விசாரித்தனர். அவனுக்கு உள்ளூருக்குள் நல்ல பெயர் இருந்தது.
அவனது குணம் சரியில்லை என்று நிரூபிக்க நினைத்த சமையத்தில் தான் அவன் முக்கியமான வேலை என்று சொல்லி கேரளா கிளம்பிச் சென்றான். அவன் சென்ற ஹோட்டலுக்கு சென்று விசாரித்தபோது, அவன் பற்றிய முழு விவரமும் கைக்கு கிட்டியது.
கண்மண் தெரியாமல் குடிப்பது, சிகரெட் பிடிப்பது என்று தொடங்கி கடைசியில் பெண்கள் விஷயத்திலும் அவன் கொஞ்சம் சரியில்லை என்ற உண்மைத் தெரிய வந்தது.
அதைப்பற்றி அவளிடம் சொன்னபோது, “இல்ல என்னோட கலை மீது பொய் குற்றசாட்டு வைக்கிறீங்க. அவன் அப்படிபட்ட ஆளையே கிடையாது” என்று வீட்டினர் வாதாடிய மஞ்சரி அவன் வரும் நாளுக்காக காத்திருந்தாள்.
அதை நினைத்தபடி அவள் மெளனமாக இருக்க, “என்னுடன் இருக்கும் பசங்களுக்கு தெரியாத விஷயம் உன் காதுவரை வந்திருக்கு இல்ல” என்று சரியாக கணிக்க, சட்டென்று நிமிர்ந்து அவன் விழிகளைத் தடுமாற்றத்துடன் நோக்கினாள் மஞ்சரி.
“அப்போ உண்மைதான் இல்லையா? ஆமா உன்னிடம் வெளியூர் போவதாக சொல்லிவிட்டு கேரளா வரை போயிருந்தேன். அங்கே ஒரு பெண் என்னோடு ஒருநாள் இருக்கணும்னு சொன்னாள்” என்றவன் பாதியில் நிறுத்திட, கண்களில் கண்ணீர் கரையுடைக்க காத்திருந்தது.
அவனை விரும்பிய மனதோ, ‘இல்லை அவன் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை’ என்று உருப்போட்டு கொண்டிருந்தது.
மஞ்சரியின் முகத்தில் இருந்த வலியை உணராமல், “கரும்பு தின்ன கூலி வேற கொடுக்கணுமா? அதுதான் நல்ல ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு வந்தேன்” என்று ரசனையுடன் கூறிய கலைச்செல்வன் பார்வை தன்னவளின் மீது சுவாரசியமாக படிந்து மீண்டது.
அவன் வாய் வழியாக வந்த உண்மையைக் கேட்டு, அவள் மனம் சுக்குநூறாக உடைந்து சிதறிட, “நீ எனக்கு துரோகம் செய்யறேன்னு உனக்கு புரியலையா கலை” என்றவள் அழுகையை அடக்கி பொறுமையாக கேட்க, அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.
அவளின் கரம்பிடித்து அழுத்திவிட்டு, “இங்கே பாரு! நானாக ஒரு பெண்ணைத் தேடி போயிருந்தால் நீ என்மீது கோபப்படுவதில் நியாயம் இருக்கு. நெருப்பில் விழுந்தால் உயிர் போகும் என்று தெரிந்தே வந்து விழுகும் விட்டில் பூச்சி மாதிரி இருப்பவர்களிடம் விளக்கம் சொல்லி புரிய வைக்க முடியாது. என் அழகில் மயங்கி வந்து விழுகும் பெண்களை தொடாமல் விரதம் காக்க நானும் ராமன் கிடையாது” என்று சொன்னதும், அவளது அழுகை அதிகரித்தது.
அவள் வீட்டினர் சொன்னது அனைத்தும் உண்மை. தன்னை பெற்று வளர்த்தியவர்கள் தனக்கு தீங்கு நினைப்பார்களா என்று யோசிக்காமல், அவர்களிடம் இவன் நல்லவன் என்று வாதாடியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது புரிந்து கொண்டாள்.
இத்தோடு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, “என்னைக் கல்யாணம் செய்தபிறகும் நீ இப்படித்தான் இருப்பியா?” என்றாள் தீர்க்கமான பார்வையுடன்.
அவளின் விழிகளில் தன் பார்வையை ஊடுருவி, “இதுக்கு எனக்கு என்ன பதில் சொல்றது என்று புரியல. நீ ஒருத்தி தான் உலகம்னு என்னால் வாழ முடியும்னு உறுதியாக சொல்ல முடியாது” அவன் உண்மைப் போட்டு உடைக்க, சட்டென்று அவனின் பிடியில் இருந்த கரங்களை வெடுக்கென்று உருவிக்கொண்டாள்.
“இங்கே பாரு! நீ சின்ன விஷயத்தைத் தேவையில்லாமல் பேசி பெருசு பண்ற. இது நல்லது இல்ல” என்றவன் கண்டிப்புடன் கூற, தன் மனதின் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு அவனை ஏறிட்டாள் மஞ்சரி.
“உன்னை மாதிரி இன்னைக்கு சந்தோசத்தை மட்டும் எதிர்பார்த்து என்னால் வாழ முடியாது. என் புருஷன் எனக்கு மட்டும்தான் என்று நினைப்பது தான் பெண்களின் இயல்பான குணம். மலர்விட்டு மலர் தாவும் உன்னைத் திருமணம் பண்ணிகிட்டு என்னால் நிம்மதி இழந்து காலம் முழுக்க கண்ணீர்விட முடியாது” என்று அவள் தன் மனதினைத் தெளிவாக கூறிவிட, இப்போது அவளை நிதானமாக ஏறிட்டான் கலைச்செல்வன்.
அவள் தன்னைவிட்டு விலகி செல்வதை நினைத்தும் வருத்தாமல், “இங்கே பாரு! இந்த ஊரில் யாருமே ராமன் கிடையாது. எல்லாமே ஒரு வகையில் சந்தர்ப்பவாதிகள் தான். தங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும்போது அதை பயன்படுத்திகிட்டு, மற்றவர்களுக்காக யோக்கியன் வேஷம் போடுவாங்க. ஆனால் நான் அப்படி இல்ல” என்றவன் இடைவெளிவிட, அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
“அப்புறம் நீ எந்த தவறுமே செய்யாத உத்தம புத்திரனா?” என்று அவனிடம் எரிந்து விழுக, “ஹே! நான் அப்படி சொல்லவே இல்ல. நானும் கொஞ்சம் நல்லவன்தான்னு சொல்றேன். இதுக்கு மேல் நீ என்ன முடிவெடுத்தாலும், அதில் நான் குறிக்கிட மாட்டேன்” என்றான் தெளிவாக.
இப்போது அவன் விழிகளை நேராக நோக்கியவள், “இவ்வளவு நடந்தபிறகு யோசிக்க நமக்குள் ஒண்ணுமே இல்ல. நீ போகின்ற பாதையில் என்னால வர முடியாது. அதனால் இப்போதே இங்கேயே எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” என்றவள் கலங்கிய கண்களோடு எழுந்து நின்றாள்.
அவன் உதடுகளில் மென்னகை அரும்பிட, “உன் இஷ்டம்! இப்பவும் நீ எடுக்க முடிவு தப்புன்னு தான் சொல்வேன். என்னை மாதிரி உண்மை விளம்பிகள் ஊருக்குள் ரொம்ப கம்மிதான். கொஞ்சநாள் கழித்து நான் எவ்வளவோ பரவால்லா என்று நினைத்து என்னை தேடி வந்துவிடாதே” என்று சொல்லிவிட்டு தன் வழியில் நடக்க தொடங்கிவிட்டான்.
அவனது வார்த்தைகள் உள்ளத்தைக் காயப்படுத்திட, “உன்னை மாதிரி உண்மை விளம்பி வேண்டும் என்று என்னைக்கும் உன்னைத் தேடி வர மாட்டேன். எனக்கென்று கண்டிப்பாக ஒருத்தன் வருவான். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமாக வாழத்தான் போறேன்” என்றாள் அழுகையூடே.
சட்டென்று நின்ற இடத்தில் இருந்து அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ம்ஹும் நீ சந்தோசமாக வாழும்மா! நீ எங்கிருந்தாலும் நல்ல இருக்கணும்னு இதோ இந்த கோவிலில் இருக்கும் அம்பாளிடம் வேண்டிக்கிறேன்” அவள் நின்ற திசைக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தன்னுடைய காதல் கானல் நீராகி போனதே என்ற வருத்தத்திற்கு பதிலாக, ‘இப்படியொரு பாவியை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்க பார்த்தேனே! யார் செய்த புண்ணியமோ என்னை இவனிடம் இருந்து காப்பாத்தி இருக்கு’ என்ற பெருமூச்சு அவளிடம் வெளிப்பட்டது.
அதுவரை நெஞ்சினை அழுத்திய வலி கொஞ்சம் குறைய, தனக்கு துணை நின்ற தெய்வத்திற்கு நன்றி சொல்லி, ‘முதல் வேலையாக இந்த விஷயத்தைப் பற்றி வீட்டினரிடம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்ற முடிவுடன் கோவிலில் இருந்து கிளம்பிச் சென்றாள்.
அவன் நண்பர்களைத் தேடி செல்லும்போது, “இந்த பொண்ணுங்களுக்கு நிஜமாகவே இவ்வளவு நீளமாக தலைமுடி வளருமா?” என்று கவியரசு கேட்க,
“இந்த காலத்தில் பாப் கட்டிங் வெட்டிட்டு சுத்தும் பெண்கள் தான் அதிகம். இது எல்லாம் ஜவுரி முடியாத்தான் இருக்கும்” என்றான் சிவநேசன்.
“அதை நம்பவே முடியலயே!” என்று தினகரன் சொல்லும்போது அங்கே வந்தான் கலைச்செல்வன்.
“என்ன அண்ணா நீ மட்டும் வருகிற? ஆமா அண்ணி எங்கே?” என்று தமிழரசன் கேட்க, “அவ அப்போவே வீட்டுக்கு போயிட்டாள். அப்புறம் இந்த அண்ணி என்று சொல்வதை இப்போவே நிறுத்திக்கடா” என்றான் கண்டிப்புடன்.
அவன் பேச்சில் இருந்தே, ‘ஏதோ சரியில்லை’ என்று உணர்ந்தவன், “சரிண்ணா” என்று சொல்லிவிட, அவனும் நண்பர்களுடன் பேச்சில் இணைந்துவிட்டான்.
அவனிடம் சற்றுமுன் பேசிய விஷயத்தைக் கூற, “கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்கள் ஜவுரி வைத்து பின்னி இருக்கிறார்கள் என்று சொல்றீயா?” என்று கலைச்செல்வன் கேட்க, “ஆமா அண்ணா” என்றான்.
தேர் கடைகளுக்கு நடுவே நடந்து சென்றபோது, தன் நண்பர்கள் சொன்னது உண்மையா என்று பரிசோதிக்க எண்ணி, தன் முன்னே நடந்து சென்ற பெண்ணின் ஜடையை விளையாட்டாக பிடித்து இழுத்தான்.
ஒரு சில பெண்களின் ஜவுரி அவன் கையோடு வந்துவிட, “மாப்பிள்ள நீ சொன்னது உண்மைதான்” என்றவன் பார்வை அவள் மீது படிந்தது.
மற்ற ஐந்து பெரும் அந்த பெண்ணைப் பார்த்து சிரிக்க, “கோவிலுக்கு வந்தாலும் இவனுங்க தொல்லைத் தாங்க முடியல” என்று அவனைத் திட்டு தீர்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் அந்தப்பெண்.
அப்போது அவனைக் கடந்து சென்ற பெண்ணின் கூந்தல் இடையைத் தழுவிட, ‘இவளோடது உண்மையான முடியாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் அவளின் பின்னோடு சென்றான். அங்கே வந்த பக்தர்கள் கூட்டத்தில் மற்றவர்கள் பின் தங்கிவிட்டனர்.
அதை உணராமல் அவளைப் பின்தொடர்ந்து சென்றவன், திடீரென்று அவளின் பின்னலைப் பிடித்து வெடுக்கென்று இழுக்க, “ஏய்!” என்றவளின் கரம் அவன் கன்னத்தைப் பதம் பார்த்தது.
ஒரு நொடி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல், பொறி கலங்கி நின்றவனைக் கண்டு திடுகிட்டவள், ‘ஐயோ! நான் அடித்தது தெரிந்தால் அவ்வளவு தான்’ என்று மானசீகமாக தலையில் கை வைத்தபடி, கண்ணிமைக்கும் நொடியில் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.