ப்ரியங்கள் இசைகின்றனவே! 01

ப்ரியங்கள் இசைகின்றனவே! 01

இசை 1

வானத்தின் கதவுகள் மெல்ல மெல்ல மூடும் தருணமது. காரிருள் மேகங்கள் புடை சூழ வருகை தந்து, அந்த ஆதவனையே தன்னிலை மறக்க செய்து, அழகிய மஞ்சள் நிற வெளிச்சத்தை இனிய சாரலோடு பொழியும் தருணமாய் அமைந்திருந்தது அந்த மாலை பொழுது.

நேரம் ஆறு மணி, திருவான்மியூர்.

தென்றல் காற்று சிலு சிலுவென வீச, அப்போது அங்கே வந்த ஒருவன் தனது ராயல் என்ஃபீல்டை பக்கத்திலிருந்த பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்து, கலைந்திருந்த சிகையை சரிசெய்து கூலர்ஸை மாட்டினான்.

அவனை பார்த்தால் அனைவரையும்  திரும்பி பார்க்க வைத்திடும் நிறம் தான். ஆறடி உயரம். திடகாத்திரமான உடல்.துல்கர் சல்மானின் ஜாடையில் லாங் ஸ்டுப்பில் தாடி வைத்திருக்க, அது அவனின் முகத்தை மேலும் அழகாய் வசீகரத்துடன் காட்டியது.

தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவன், வண்டியில் ஒருபக்க கால் ஊன்றி அமர்ந்தவாக்கில் நின்றான்.

அலை அலையாய் பாயும் அவன் கேசத்தை கோதிக் கொண்டவாறே பார்வையை எங்கிலும் அலையவிட்டிருந்தான்.

அவனின் தேவதையின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் சைட்டடிக்க நிற்கிறான்.

அவனின் அழகு தேவதை வரும்வரை சும்மா இராமல் தனது ப்லே லிஸ்டிலிருந்து ‘தேடும் கண் பார்வை’ எஸ்.பி.பி பாடிய பாடலை போட்டவன், இசையோடு அவனின் ப்ரியமானவளுக்காய் காத்திருந்தான்.

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு…

தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

சரியாக அந்த பாடலின் இந்த வரிகள் வரவும், அவனின் தேவதை அவசர அவசரமாய் வேலை முடித்து அவள் தோழி இனியாவுடன் வெளி வந்தாள்.

பார்த்ததும் நாயகனின் கண்கள் இரண்டும் பளிச்சிட, அதனை அவளுக்கு காட்டாது மறைத்தது அவனின் கூலர்ஸ்.

கால்கள் தானாக அவள் பக்கம் செல்ல துடியாய் துடிக்க,மனமோ அவளின் வருகையில் வேகமாய் துடித்து ஆர்பரிக்க, அவனை கண்ட அவளின் முகமோ இருளலடிந்தது.

அவனாக பேசுவதற்கு முன்பு தான் கிளம்பிட வேண்டியது தான் என்றெண்ணி வேக நடையிட்டாள்.

அதையெல்லாம் கண்டு கொள்பவன் நம் நாயகன் அல்லவே!

அவளை பின்தொடர்ந்தவன், “அடியேய் திமிரழகி! கொஞ்சம் இந்த அத்தானை பார்த்து நிக்கிறது” போகும் தன் காதல் தேவதையை கண்டு வம்பிழுத்தான் தேவதையின் வருங்கால நாயகன்.

திரும்பி பார்க்காது அவள் நடையை வேகப்படுத்த, அவள் இதழ்களோ அவனை திட்டும் வேலையில் தீவிரமாய் செயல்பட்டது.

“என் அழகியே கொஞ்சம் இந்த அத்தானுக்கு கருணை காட்டுறது” அவள் பின்னாடியே இவனும் வாலிபன் போல் துள்ளலுடன் நடையிட்டான்.

அவளோ திரும்பி பார்த்து எவ்வளவு முறைக்க முடியுமோ முறைத்து வைத்து திரும்பிக் கொண்டாள்.

நம் நாயகனோ சும்மா இராமல், “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி” இளையராஜா பாடலை பாட, அவள் கைகளோ அனிச்சையாக அவள் காதுகளை  இவன் குரல் கேட்காதவாறு மூடிக்கொண்டது.

அதில் அவள் கையில் மாட்டியிருந்த நான்கு கண்ணாடி வளையல்களும் ஆடி அவனின் செவிப்பறைக்குள் அது இசையாய் இறங்க, மேலும் அவளை வம்பிழுக்க தொடங்கினான்.

வலையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல்
காற்றும் வீசுது” என நேரத்திற்கு தகுந்தமாறி பாடல் பாடி அவளை வெறுப்பேற்றி பார்க்க, இவனுக்கு ஏற்றவாறு இயற்கை கூட தென்றல் வீசி அவனின் தேகத்தை அனிச்சையாய் தீண்டி சென்றது.

கோபமாக அவன் முன்பு முகம் சிவக்க நின்றவளை பார்க்க பார்க்க அவளை கட்டிக்கொள்ளும் ஆசை தான் வந்தது அவனுக்கு.

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் கௌதம். நான் எத்தனையோ தடவை உங்களுக்கு என்னோட மறுப்பை சொல்லிட்டேன். அதுவும் இல்லாம நான் ஒரு குழந்தைக்கு அம்மா. இப்படி நீங்க செய்றது நல்லாவே இல்ல. தயவு செஞ்சி என் வாழ்க்கைய விட்டு போக பாருங்க. அதுதான் உங்களுக்கு நல்லது” கட்டுக்கடங்காத கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக கூற, அவனோ அவள் வாயசைக்கும் இதழ்களை பார்வையாலே சிறையெடுக்க முயன்று கொண்டிருந்தான்.

அவளோ அவன் மனதை மாற்றும் பொருட்டு பேசிக்கொண்டே போக, அவனோ கண்ணடித்து அவளின் மென்மையான கன்னத்தில் ஒரு தட்டு தட்டி “நீயும் இதையே எத்தனை நாட்களுக்கு தான் சொல்ல போற. இந்த ஜென்மத்துல கடவுள் என்னைய தான் உனக்கு புருஷனா அப்பாயிண்ட் செய்திருக்காரு. அதை மறுக்காத ரோஷி. இன்னையோடு கோட்டா முடிஞ்சு போச்சி அழகி. நாளைக்கு மீதியை தொடரலாம். பாய் செல்லம்” என்று பறக்கும் முத்தத்தை வழங்கிவிட்டு சிட்டாக அவனின் ராயல் என்ஃபீல்டில் பறந்தான்.

அவன் கௌதம்… ஆர்.ஜே கௌதம். இருபத்தியொன்பது வயதே ஆன எலிஜிப்பில் பேச்சிலர்.

போகும் அவனை பற்கள் நறநறக்க விழி சுருங்கி பாரத்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவள் ரோஷினி… மூன்று வயது குழந்தைக்கு தாய்… நம் நாயகனின் கனவுக்காதலி. இருபத்தி மூன்று வயதுடைய இளம் அரிவை.

இருவரையும் பார்த்த இனியாவிற்கு மனம் கவலையுற்றது.

தன் அண்ணனும் தோழியும் நன்முறையில் அவர்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டுமென கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.

சரியாக அவளை அழைத்து செல்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான் அவளின் தரு. கூடவே அவர்களின் ஒரு வயது மகனும்.

“என்ன மிஸஸ். வெற்றிமாறன் மேல என்ன தெரியுதுன்னு பார்த்திட்டு இருக்கீங்க?” கிண்டலாய் மொழிய,

“கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா தரு?”

“எஸ்…எஸ்…அப்படி தானே டா மகனே” என மகனிடமும் கேட்க, குட்டியோ எதுவும் புரியவில்லை என்றாலும் “ம்மா…ம்மா” என்றது.

“சரி சொல்லு என்னத்தை அத்தனை தீவிரமா பார்த்திட்டு இருந்தேன்னு?”

“என் வாழ்க்கையோட ஒளிவட்டம் ஏன் இப்படி மங்கலா தெரியுதுன்னு பார்த்தேன் தரு” என்றாள் அத்தனை தீவிரமாக…

“அது ஒளிவட்டத்துனால இல்ல சில். உன் நல்ல கண்ணு நொல்ல கண்ணா ஆனதுனால தெரியாம இருந்திருக்கும்” சொல்ல, கணவனை செல்ல அடி அடித்தாள்.

“வா வீட்டுக்கு போலாம்”என்றவன் அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.

மனைவியின் குரலில் சிறு சோகம் வெளிப்பட்டதோ என தோன்றியதுமே அதற்கு பின்னான நேரத்தை அவளுக்காய் ஒதுக்கி விட்டான்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. இரண்டு நாட்களுக்கு தன்னால் வர முடியாது என ஆஃபிஸிற்கு அழைத்து சொன்னவன், அவனின் அன்றைய நிகழ்ச்சியை கௌதமை நடத்த சொல்லிவிட்டு மொபைலை ஆஃப் செய்து தூர எறிந்தான்.

இதனால் கௌதமின் நிகழ்ச்சியோடு வெற்றியின் நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டது.

நண்பனை மனதில் வசைப்பாடியவன், லவ் குரு ஷோவை ஆரம்பித்து அவனின் ராஜாதி ராஜா ஷோவையும் முடித்த பிறகே ஸ்டூடியோ விட்டு வெளிவந்தான்.

தொடர்ந்து மூன்று மணிநேரம் பேசியதால், அங்கிருந்தவர்களிடம் சிறு தலையசைப்போடு விடைபெற்று வீடு திரும்பினான் கௌதம்.

நேரம், பன்னிரண்டு மணி…

ராம் நகர், வேளச்சேரி.

“அப்பப்பா.. என்ன வேலை டா சாமி. வாயே வலிக்குது. யாரு கேட்டா இப்படியான ஒரு ஷோவை. இப்படி என் வாய் வலிக்க பேச வைக்கிறாங்களே. இந்த வெற்றி பையன் மட்டும் கையில கிடைச்சான் சும்மாவே விட மாட்டேன்” கடுப்புடனே அந்த அர்த்த இராத்திரியில் புலம்பிய நிலையில் கதவை திறந்தான் கௌதம்.

கதவை திறந்தது தான் தாமதம் இருட்டில் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட,கடுப்பாய் வந்தது அவனுக்கு.

‘ச்சை இது வீடா குப்பத்தொட்டியான்னே தெர்ல’ உள்ளுக்குள் திட்டியப்படியே லைட்டை ஆன் செய்தான்.

அதன் பின் தான் வீடு இருக்கும் லட்சணம் அழகாய் அடுத்தவர் கண்களுக்கு புலப்பட்டது.

பெரிதாக அந்த வீட்டில் எந்த பொருளும் இல்லை தான். அவனுக்கு தேவையான சில பொருட்களை மட்டுமே வாங்கி வைத்திருந்தான்.

மூன்று மாதத்திற்கு முன்பு தான் இவ்வீட்டை வாங்கியிருக்க, மனைவியோடு சென்று தான் வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்க வேண்டுமென வைராக்கியத்துடன் இருக்கிறான்.

அதனால் பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே கிடப்பதனால், வீடு பார்க்க குப்பை தொட்டியை விட மோசமாய் காணப்பட்டது.

அதனை பார்த்ததும் பெரும் மூச்சொன்றை வெளியிட்டவனுக்கு வாழ்க்கை சலிப்பாக தெரிந்தது.

இது வசிக்கும் வீடு தான் என்றாலும் பார்ப்போருக்கு அப்படி தெரியாது.

ஏனோ பல நாட்களாக பூட்டி இருந்த வீடு போல் தான் காணப்படும்.

பேச்சிலர் வீடு என்றால் எப்படி இருக்குமோ அப்படியே தான் நம் நாயகனின் வீடும் இருந்தது.

வீட்டை ஒரு சுற்று சுற்றி பார்த்தான் அவன்.

“ச்சை கண்றாவியா இருக்கு வீடு. இந்த வீட்டையா இத்தனை லட்சம் கொடுத்து வாங்கினேன்” வெளிப்படையாக சொல்ல,

அவனின் மனசாட்சியோ,” வாங்கும் போது வீடு வீடா தான் இருந்தது. நீ வந்ததும் தான் இப்படி ஆகிடுச்சி” என குட்டு வைத்தது.

மனசாட்சியை ஓரம் கட்டியவன், குப்பை போல் வைத்திருந்த வீட்டிற்குள் நுழைய மீண்டும் ஏதோ ஒன்று தட்டுபட, அதனை கையில் எடுத்தான்.

அது ஒரு பார்சல். முழுவதுமாக பேக் செய்திருக்க, அந்த செவ்வக வடிவிலான பெட்டியை உன்னிட்டு பார்வையிட்டவனுக்கு அப்போது தான் ஞாபகமே வந்தது‌‌.

மதியம் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து பிடி( Production Director)  அழைக்க, தூக்க கலக்கத்தில் காதில் எடுத்து வைத்தவனுக்கு அவரின் கத்தல் தான் கேட்டது‌.

“ஏன் சார் இப்படி தூங்குற பிள்ளைய எழுப்புறீங்க? அதையும் தூக்க கலக்கத்திலே கேட்க,

“பிள்ளையா டா நீங்க தொல்லைங்க டா. எனக்குன்னு வந்து சேந்துருக்கீங்க ரெண்டு பேரும். எழுந்திருச்சி சீக்கிரமே கிளம்பி ஆஃபிஸ் வா கௌதம்” அவசரப்படுத்தியிருக்க, அதனாலே அரக்க பறக்க கிளம்பி வெளியே வந்தவனுக்கு பார்சல் ஒன்று வந்திருப்பதாக சொல்லி அந்த பெட்டியை நீட்டவும், வேலைக்கு செல்லும் அவசரத்தில் வாங்கி வீட்டினுள் போட்டவன் கிளம்பி சென்றிருந்தான்.

இப்போது தான் அது என்ன பார்சல் என்றே நினைவு வர, அதனுடன் தானாகவே அவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

“பாப்பு குட்டிக்கு வாங்கினது. இப்பவே போய் கொடுத்திட்டு வந்திடலாமா? தூங்கிருப்பாளோ?” யோசிக்கையிலே மகளின் நினைவோடு அவளின் அன்னை நினைவும் சேர்ந்து அவன் மனதை ஆக்கிரமித்தன.

ரோஷினியுடனான முதல் சந்திப்பிலே, அவளிடம் திட்டயும் பெற்று பிள்ளை கடத்தும் கோஸ்ட்டியிலும் சேர்ந்திருந்தான் கௌதம்.

முதலில் ரோஷினியின் மீது காதலெல்லாம் வரவில்லை. ஓரிரு முறை வெற்றி இனியா வீட்டில் தங்கையின் தோழியாக பார்த்ததுண்டு அவ்வளவு தான்.

அதற்குமேல் பார்த்ததுமில்லை. பேசிக் கொண்டதுமில்லை.

ஆனால் எப்போது சஷ்வித்தா கொஞ்சும் மொழியில் தன்னை அப்பா என்று ஆசையாக அழைத்தாளோ, அன்று சஷ்வியின் அன்னையாக கௌதமின் மனதினுள் நுழைந்திருந்தாள்.

அவள் மீதான அன்பு சஷ்வி அழைத்த உரிமையினால் உருவானது.

அந்த அன்பு ப்ரியமாய்…ப்ரியம் நேசமாய்…நேசம் இப்போது காதலாய் அவன் மனதில் விருட்சமெடுத்தது.

அன்றைய தினத்திலே அவன்  நேரே திருமணமத்தை பற்றி பேசி அவளிடம் அடியும் வாங்கியிருந்தான்.

அவளின் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், அவள் தான் தன் மனைவி என ஸ்திரமாய் முடிவெடுத்து காத்திருக்க, காலங்கள் ஓடியதே ஒழிய அவளின் மனம் கிஞ்சித்தும் மாறவில்லை.

கனவு லோகத்தில் அவளுடன் ஒரு சிறிய வாழ்வை வாழ்ந்தவனுக்கு, நிஜத்தில் அப்படியில்லாது போக வருத்தம் தான். ஆனாலும் ரோஷினியை தன்னை கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்தியதுமில்லை. வற்புறுத்த போறதுமில்லை அவன்.

அவனின் ப்ரியமானவள் வசிக்கும் நெஞ்சாங்கூட்டை ஒருமுறை தட்டி பார்த்தவன், மகளுக்காக வாங்கிய பொம்மையை பத்திர படுத்திய பின் உறங்க சென்றுவிட்டான்.

பல நாள் அவளின் நினைவிலே இரவு உணவு உண்ண வேண்டும் என்பதை மறந்து உறங்கி விடுவான். அதே தான் இன்றும் நடந்தது.

படுக்கையில் கவிழ்ந்தவனுக்கு உறக்கம் எட்டாக் கனியாய் போக, எப்போதும் தூங்கும் முன்பு கேட்கும் இளையராஜாவின் பாடலை மெல்லிய ஒலியில் இசைக்கவிட்டிருந்தான்.

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே

பனியாக உருகி
நதியாக மாறி அலை வீசி
விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன்
நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக்
கலந்தே நின்றேன் இது
எந்தன் வாழ்வில் நீ
போட்டக் கோலம் இது
எந்தன் வாழ்வில் நீ
போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது
சோகம் பிறந்ததே நீயில்லாத
வாழ்வு இங்கு கானல்தான்…

அவளது சிறு காதல்  பார்வைக்காகவென ஏங்கி காத்திருக்கிறது அவன் மனது.

காத்திருப்பு கானல் ஆகுமோ?

அடுத்தநாள் விடியலில் புத்துணர்வோடு எழுந்த கௌதம், முதல் வேலையாக செய்தது அவன் வீட்டு முன்பு நின்று எதிர் வீட்டு பெண்ணின் வருகைக்காக காத்திருந்தது தான்.

error: Content is protected !!