ப்ரியங்கள் இசைக்கின்றனவே! 04
ப்ரியங்கள் இசைக்கின்றனவே! 04
ப்ரியங்கள் இசைக்கின்றனவே!
ப்ரியம் 04
இரவு நேரம்
எட்டு மணி போலவே மகளுக்கு உணவை கொடுத்து மாத்திரைகளை முழுங்க வைத்தவள், அவள் உறங்கும் வரை மகளுக்கு தட்டி கொடுத்தாள்.
மாத்திரைகள் போட்டதால் விரைவிலே தூங்கியிருக்க, உறக்கமென்பது தாய்க்கு வெகுதூரம் சென்றிருந்தது.
காலையிலிருந்து நடந்ததை அசைப்போட்டு பார்த்தவளுக்கு, நிச்சயம் கௌதம் எளிதில் தன்னை விட்டு விலகுவான் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை.
மனம் கலங்கி தவித்தது. அவளின் கடந்த காலம் என்பது இன்னும் நிழலாக தொடர்ந்த மையமாகவே தான் இருந்தது.
தான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய நிறைய இருக்க, இதில் கௌதமை பற்றி நினைக்கவெல்லாம் நேரமில்லை.
தான் ஒரு நொடி அசந்தாலும் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
இங்கே அவள் பணயம் வைத்திருப்பது அவளது வாழ்க்கை மட்டுமல்லாது தந்தையின் வாழ்க்கையும் சேர்த்து தான்.
எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கனவுகளோடு சுற்றி வந்த தன்னை இப்படியொரு நிலைக்கு தள்ளிவிட்ட விதியை என்ன சொல்வது?
கஷ்டங்களை காணலாம் ஆனால் அதுவே வாழ்க்கையாக இருக்க கூடாதே.
கௌதமை நினைக்க கூடாது நினைக்க கூடாது என்றே அவளின் சிந்தனை முழுவதுமாய் வலம் வந்தான்.
ஜன்னல் வழியாக நட்சத்திரங்களுக்கு நடுவில் தனித்து நின்று ஜூவாலையாய் நின்றிருந்த நிலவை வெறித்து பார்வையிட்டிருந்தாள் ரோஷினி.
அவளுமே இப்படி தான் அனைவரும் கூடே இருந்தும் இல்லாத நிலை.
தாய், தந்தை, அக்கா என அழகான அளவான குடும்பத்தோடு மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவளுக்கு யார் கண் பட்டதோ, இன்று இப்படி அக்குடும்பமே சிதைந்து போய் நிற்கிறது.
அவளுக்கு துணை அவள் மகள் சஷ்வித்தா மட்டுமே. அவளுக்கு துணை தான்.
எப்போது டா தனக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீரும் அக்கடா என்று அமரலாம் தான் பார்க்கிறாள். எங்கே முடிகிறது?
கழுத்தை நெருக்கி கொண்டிருக்கும் கடந்த கால பக்கங்களை விரைவிலே தூர எறிந்து எரித்திட நினைத்தாள்.
இப்படியே தனக்குள் உழன்று கொண்டிருந்தவள், இறுதியாய் கௌதமை தன் வாழ்க்கையை விட்டு நிரந்தரமாய் அகற்றிட வேணும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் நேரத்தில் மகள் தூக்கத்திலே அன்னையை தேடவும் கௌதமை மறந்து அவளிடம் சென்று விட்டாள்.
******
ரேடியோ எஃவம் – ஸ்டூடியோ
“மச்சான்! எனக்கு முன்னவே வந்துட்ட போலையே?” கேட்டப் படி நண்பனின் பக்கத்தில் வந்தமர்ந்தான் வெற்றி.
“அதையே நான்னு ‘ஏன்டா அறிவுக்கெட்டவனே உனக்கு வேலைக்கு வர நேரமா இதுன்னு’ கூட கேக்கலாம் மச்சான்” நக்கலையே அத்தனை சீரியசாக சொன்னான்.
“உனக்கென்னப்பா நீயி சிங்கில்.. நான் அப்படியா “சொல்லி சலிக்க,
“ஹோ சாருக்கு கல்யாண வாழ்க்கை அலுப்பு தட்டிருச்சோ?”சற்று நண்பனை சீண்டி பார்க்க கேட்கவும்,
“அது அப்படி சொல்லல மச்சான். அதை எப்படி சொல்றது. ஒன்ஸ் உனக்கு கல்யாணம் ஆனதும் புரியவரும் டா” கூற, பெருமூச்சொன்றை வெளியிட்டான் கௌதம்.
அவனுக்கு ஆயசமாக இருந்தது. ரோஷினி தன் காதலுக்கு எப்போது சம்மதம் சொல்ல எப்போது திருமண நடக்க, நினைக்கையிலே அலுப்பாய் உணர்ந்தான்.
“அதை விட்டு தள்ளு. ஆமா உன் எக்ஸ் என்ன ஆனா டா?” கௌதம் தீவிர விசாரணையில் ஈடுபட, நண்பனை அறியாது பதில் பேசினான்.
“இப்போ ராமோட பெங்களூர்ல இருந்து, அவங்க அப்பாவோட பிஸ்னஸை பார்த்துக்கிட்டு இருக்கா”சொன்னதும்,
“ஹோ, அப்போ இன்னும் நீங்க உங்க எக்ஸோட காண்டேக்ல தான் இருக்கீங்க அப்படி தானே மச்சான்” இடக்காக கேட்ட நண்பனிடம், மாட்டிக்கொண்டதில் அலறினான் வெற்றி.
“ஏன் டா? உனக்கு இந்த கொலைவெறி?”
“இரு மச்சான். இதை தங்கச்சிக்கிட்ட கேட்டே சொல்றேன்”மொபைலை எடுத்து அவனின் தங்கைக்கு அழைப்பு விடுக்க போக, அதனை பிடுங்கியவன்,
“என் குடும்பத்துல கும்மியடிச்சிடாத சாமி. யாழினியோட நம்பர் கூட என்கிட்ட இல்ல டா. எல்லாம் ராம் சொல்லி தான் தெரிய வந்தது. நானும் கேட்டுக்கிட்டேன் அவ்வளவு தான்” நண்பனிடம் சரணடைவதை தவிர்த்து அவனுக்கு வேறு வழியில்லை.
எப்போது மனைவியின் குடும்பத்தில் இவனை அவர்களுள் ஒருவனாக அவனை ஏற்றனரோ, அன்றிலிருந்து மூத்தவனாக தான் தான் அனைத்தையும் முன்னிருந்து பார்க்க வேண்டுமென்று, வெற்றியின் உசிரை அவ்வப்போது இதுபோல் எடுத்துவிடுவான்.
இனியாவின் குடும்பம் இவனை ஏற்பதற்கு முன்பே தன் தங்கை என்று மார்த்தட்டி கொண்டு தன்னிடமே சண்டைக்கு நின்றவன், இப்போது சொல்லவா வேண்டும்.
முழுநேரமும் தங்கைக்கு அண்ணனாக இருந்து வந்தான்.
“உனக்கு நான் நண்பன் டா. அதை அப்பப்போ ஞாபகத்துல வச்சிக்க” சொன்னவன், நேரமாவதை உணர்ந்து எந்திரிக்க,
“மச்சானா இருந்தாலும் சரி மாப்பிள்ளையாய் இருந்தாலும் சரி, ஐயம் ஆல்வேஸ் வாச்சிங் யூ”என இருவிரல்கள் கொண்டு அதனை செய்து காட்ட, அவனின் முதுகில் அடிப்போட்ட வெற்றி,
“என்னை பார்க்கிற நேரம் அங்க என் தங்கச்சியை பார்த்தா கூட ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கு. இல்லன்னா நீ கடைசி வரைக்கும் பேச்சிலர் தான் மச்சி”சொல்லி அவனிடமிருந்து நழுவி சென்றுவிட்டான் வெற்றிமாறன்.
சரியாக அவன் அவனின் ஷோவை ஆரம்பித்து விட, முடியும் தருவாயில் எப்போதும் போல் அவனின் மனைவி தான் கடைசி அழைப்பாளராக பேசி வைத்தாள்.
இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விடயங்கள் மாறினாலும், இந்த அழைப்புகளை மற்றும் மாற்றிக் கொண்டதே இல்லை இருவரும்.
வெற்றி வெளிவந்ததும் அவனது ஷோவை ஆரம்பித்தான் கௌதம்.
எத்தனை விதமான மனக்கசப்புகள் இருந்தாலும், ஸ்டூடியோக்குள் வந்த பிறகு அது அத்தனையையும் மறந்து, அந்த நேர நிகழ்ச்சியில் தன்னை பொறுத்தி கொள்வான்.
அதிலும் அனைத்து பாடல்களும் இளையராஜா பாடலாக இருக்க, அனைத்தும் அவன் மனதை மயக்கி வேறொரு உலகத்திற்கு அழைத்து சென்றுவிடும்.
இப்போதும் அனைத்தையும் மறந்த கௌதம் நிகழ்ச்சியில் லயித்திருந்தான்.
இரவு, பன்னிரெண்டு மணிப்போல் அவன் வசிக்கும் தெருவிற்க்குள் நுழைந்து பாதி தூரம் வந்ததுமே, வண்டியை நிறுத்தி விட்டு தள்ளிக்கொண்டு வந்தான் கௌதம்.
சஷ்வித்தாவிற்கு சிறிது சத்தம் கேட்டால் போதும், தூங்கி கொண்டிருந்தாலும் முழிப்பு தட்டி விடும் என்பது அவன் இங்கே வந்த சில நாழிகையிலே கண்டுப் பிடித்திருந்தான்.
தனது வண்டியின் சத்தம் வேறு பெரிதாய் கேட்க, அதனாலே குழந்தை எழுந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
அவளை சமாதானம் செய்து உறங்க வைக்கவே பெரிதும் பாடு பட வேண்டியதாய் போனது ரோஷினிக்கு.
எப்போது இவ்விடயம் இனியாவின் மூலம் அறிந்தானோ, அன்றையிலிருந்து இதனை கடைபிடித்து வருகிறான்.
வண்டியை தள்ளிக்கொண்டு வந்தவன், ஓரமாய் நிறுத்தி அதற்கு கவர் போட்டு பக்காவாக அனைத்தையும் செய்து முடித்த பிறகே வீட்டை திறந்தான்.
சரியாக அவன் வீட்டிற்குள் நுழைந்த நேரம், அவனின் அழைப்பு மணி இம்சித்தது.
“இந்த நேரத்துல யாரு நம்மளை தொந்தரவு செய்றது?” சலிப்போடு மொபைலை எடுத்து பார்க்க, அதில் காந்திமதி கால்லிங் என திரையில் தெரியவும், அத்தனை நேரம் இருந்த சோர்வு எல்லாம் மறைந்து முகத்தில் ஒரு வித அகக்களி கொண்டான்.
“ஹலோ!!!” சொல்லவுமே, எதிர்புறத்தில் காச் மூச்சென சண்டை போட தொடங்கிவிட்டார் காந்திமதி.
“அறிவுகெட்டவனே! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவுன்னு ஒன்னு கடவுள் கொடுத்திருக்காரா இல்லையா டா. இங்க ஊருக்கு வந்தா மட்டும் அம்மா ஆட்டு குட்டின்னு என் பின்னாடி சுத்த வேண்டியது. இப்படி ஊரு எல்லைய தாண்டியதும், நான் வேண்டாதவளா ஆகிடுறேன் இல்லையா?” மூக்கு விடைக்க அன்னை சண்டை போடவும் அவரின் வார்த்தைகள் அனைத்தும் தேனாய் அவன் செவிக்குள் பாய்ந்தது.
“என்ன ஒரு அழகான குரல்!” மனதிற்குள் பாராட்டுகிறேன் என நினைத்து வெளிப்படையாக சொல்ல, அதற்கும் ஒரு பாட்டு பாடி வைத்தார்.
“என்ன இந்த நேரத்தில கூப்பிட்டு இருக்கீங்க?” அக்கறையுடன் கெளதம் வினவ,
“நீங்க தான் எந்நேரமும் பிசியாச்சே. அதான் இப்போ கூப்பிட்டேன்” அவர் சொல்ல, இளித்து வைத்தான் கெளதம்.
சிறிது நேரம் பேசிய இருவரும் கடைசியில்,” உடம்பை போட்டு வருத்திக்காத கெளதம். நேரத்துக்கு சாப்பிடு. சாப்பிடாம படுக்காத, அப்டி செய்றன்னு தெரிஞ்சது அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது. இப்போவே சொல்லிட்டேன் பார்த்துக்கோ” அக்கறையுடன் ஆரம்பித்து மிரட்டலுடன் முடித்திருந்தார்.
அனைத்திற்கும் சரி சரியென பதில் கூறிய பின்பு வைத்தவன், முகம் கொள்ளா புன்னகையுடனே சமையலறைக்கு சென்றான்.
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அங்கு எதுவும் இல்லை. இனியா தான் இரு வாரத்திருக்கு ஒரு முறை வந்து வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் அரைத்த மாவை எடுத்து வந்து குளிர்சாதன பெட்டியில் வைப்பாள். அது இன்னமும் மீதி இருக்க, மூன்று தோசையை வார்த்து அதற்கு தொட்டு கொள்வதிற்க்காக பூண்டு சட்னி செய்தவன் மெதுவாய் அந்த அர்த்த ராத்திரியில் ரசித்து உண்டான்.
பின், எப்போதும் போல் அவனின் அறையில் இசையை இசைக்க விட்டிருந்தான்.
காந்திமதியிடம் பேசிய பின்பு மனதினுள் இருந்த பாரம் அனைத்தும் நொடிப்பொழுதில் ஐஸ் கட்டி போல் கரைந்து விட்டிருந்தது. புத்துணர்வாக உணர்ந்தான் கெளதம்.
காந்திமதி போன்றதொரு அன்னையை தனக்கு காட்டியதற்கு கடவுளிடம் ஒரு நன்றியை தெரிவித்தான்.
பின் பாடல்களோடு அவனும் கலந்தான். கலக்க வைத்திருந்தது இளையராஜாவின் இசையும் அதன் வரிகளும்.
ஊரார் ஒதுக்கி
வச்ச ஓவியம் என்னை
பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி
பொண்ணாட்டம்
நெஞ்சோடு வெச்சேனே
காப்பாத்தி எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான் உன்
பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்
என்னாசை காத்தோடு
போகாது எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது…
பாடலோடு லயித்திருந்தவனுக்கு இந்த வரிகள் அவனுக்காகவே வாலி எழுதி இளையராஜா இசையமைத்தது போல் தோன்ற, வரிகளை அப்படியே முணுமுணுத்தவன் அவனின் அழகிய ராட்சசியின் நினைப்போடு உறங்கி போனான்.
இரவு அன்னையோடு பேசியது, அதற்கு பின்னான அவனின் ராட்சசியின் நினைவு என காலையிலே அவனுக்கு அப்படியொரு உற்சாகம்.
எப்போதும் போல் காலையில் அவளிடம் அட்டெண்டன்ஸ் போட்டவன், தூரத்தில் இருந்தே வருங்கால காதலியை கண்களால் நிரப்பினான்.
அன்று சீக்கிரமே வேலைக்கு செல்ல வேண்டி இருந்ததனால் விரைவிலே கிளம்பி சென்றிருக்க, மதியம் போல் அழைத்து மகளின் நலனை குறித்து விசாரித்திருந்தான்.
இவன் பேசி முடித்து வைத்திருக்க, இங்கே ரோஷினிக்கு ஒரே காந்தல் அவன் மீது.
இவனை தன் வாழ்விலிருந்து விலக்க நினைத்தால், இவனோ உரிமையான பார்வை, பேச்சு, பழக்கம் என அதிகப்படியான செயல்கள் தான் கௌதமிடமிருந்து.
ரோஷினி அவனை மனதில் வதைத்தபடியே மகளின் பக்கத்தில் அமர்ந்திருக்க, அவளிடம் மதிய உணவை நீட்டி இருந்தாள் இனியா.
தனியொரு உலகில் சஞ்சரித்து உழன்று கொண்டிருந்தவளை, நிஜ உலகிற்கு வரவழைத்திருந்தாள்.
“நீ வர வர இந்த உலகத்திலே இருக்கிறது இல்ல. அப்படி என்ன தான் யோசிப்ப?”
“பச், அப்டிலாம் ஒன்னும் இல்ல டி. பாப்பாக்கு இப்படி ஆனதுல கொஞ்சம் மூட் ஆஃப் அவளோ தான்” என்றாள்.
“சரி, சாப்பிடு” என்றவள்,” போன்ல யாரு?” என உணவை உள்ளே தள்ளியவாறே கேட்டாள்.
“எல்லாம் உன் நொண்ணன் தான்” சடைத்து கொண்டாள் பெண்ணவள்.
“எதுக்கு கால் செய்திருதாங்க?”
“பாப்பாவை பத்தி கேக்க தான் கூப்பிட்டாங்க”
“சரி, உனக்கும் தெரியும் அண்ணா உன் மேலையும் பாப்பா மேலையும் எவ்ளோ பாசம் வச்சி இருக்காங்கன்னு? அதுக்காகவாது நீ மனசை மாத்திக்க கூடாதா ரோ?” மெல்ல இந்த பேச்சினை ஆரம்பித்தாள் இனியா.
“எல்லா விஷயமும் தெரிஞ்சிட்டு நீயே இப்படி பேசினா நான் என்னடி பண்றது” வருந்தும் குரலில் சொல்ல,
“எல்லாமும் தெரிஞ்சதால தான் இப்படி கேக்கவே செய்றேன் ரோ. உனக்கு அண்ணனை பிடிக்காம இருந்து அண்ணாவோட காதலை மறுத்தா பரவால்ல விட்டுடலாம். ஆனா யாருக்கோ பயந்து நீ அண்ணனை மறுக்கிறது சரியில்ல ரோ. அண்ணன் கண்டிப்பா உனக்கு துணை நிக்கும் டி”
“இல்ல நீ அவனை பத்தி தெரியாம பேசுற. என் இடத்துல நீ இருந்தாலும் இப்படியான ஒரு முடிவை தான் நீ எடுப்ப இனியா”
“கண்டிப்பா மாட்டேன் டி. சப்போஸ் நான் உன் இடத்துல இருந்தா, வெற்றிகிட்ட எல்லாத்தையும் சொல்லி அவன் முடிவுல விட்டுடுவேன். அவனுக்கு அப்பவும் என்மேல காதல் இருந்ததுன்னா, வெற்றியோட கையை பிடிச்சுக்கிட்டு அந்த எமனே முன்ன இருந்தாலும் எதிர்த்து நிற்பேன்” என்றாள் அவளின் குரலில் அழுத்தம் கொடுத்து.
“நீ ஈசியா சொல்லிட்ட. என்னால அப்படி எல்லாம் யோசிக்க முடியாது. அதிலும் கௌதமை அவன் முன்னால நிறுத்த முடியவே முடியாது” ஸ்வரத்தே இல்லாத குரலில் வாதையுடன் சொன்னாள். கண்கள் வேறு கலங்கி போக, அதனை இனியாவிற்கு தெரியாமல் துடைத்து கொண்டாள்.
ரோஷினியை அழுத்தமான பார்வை பார்த்த இனியா,” உன்னோட பேச்சுல ஒன்னே ஒன்னு நல்லா புரியுது. உனக்கு யாரோ அவன் மீது பயம் இருக்கு. அதுக்கெல்லாம் அண்ணா மீது உனக்கு காதல் இல்லாமல்லாம் இல்ல. என்ன ஒன்னு உனக்கு இன்னும் அது புரியல அவளோ தான். சீக்கிரமே புரிஞ்சிக்கிற நாள் வரும்” பேசியவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.