தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ, இயற்கை எழில்மிகு அமைந்த மாவட்டமாகும். அதிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது தான் இந்த தாமரைக்குளம் என்ற கிராமம்.
ஊருக்குள் நுழையும்போதே கண்களை பளிச்சிடும் அளவிற்கு எங்கிலும் பச்சை பசேல் என்று தான் காணப்படும்.
இந்த கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் தான். குறிப்பாக மா, நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் தென்னை.
இக்கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
முன்னர் எப்படியோ இப்போது பெரிதாய் மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் எல்லாம் வாடி வதங்க தொடங்கி விட, விவசாயிகளுக்கு விதைகள், பயிர்கள் என்பது அவர்களது குழந்தைகள் போல், அது இப்படி வாடவும் உயிரே இல்லாது போனது போல் ஆனது.
முதலில் ஊர் மக்கள் படும் கஷ்டத்தை காண சகிக்காது, ஊர் பெரியவர் ஆடலரசு மக்களுக்கு கடனுக்காய் பணம் கொடுத்து உதவி செய்ய, அதை இப்போது அவரின் மூத்த வாரிசான பாண்டியன் வட்டிக்கு கொடுத்து வாங்கி வந்தான்.
அதிலும் அதிக வட்டி போட, வெளியிடத்தில் கடன் வாங்கவும் அனுமதிப்பது இல்லை. மக்கள் தான் அவன் கையில் சிக்கி திண்டாடினர்.
பெரியவர் மீது எத்தனை எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனரோ, அதெல்லாம் மூத்தவனிடம் சுத்தமாக இல்லை… வெறும் பயம் மட்டுமே அவர்களிடம் காணப்பட்டது.
அந்த ஊரையே அவனின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் பாண்டியன். அவனை மீறி ஒரு செயல் நடந்தால் கூட அதை அடியோடு அழித்து விட்டு தான் மற்றைய வேலையிலே இறங்குவான். அதுவரையிலும் தூக்கம் என்பது வெகு தூரமே.
அடிதடி பஞ்சாயத்து என்பதெல்லாம் ஏதோ ஒரு விளையாட்டு போல் அவனுக்கு.
மதியம் போல் தன் வீட்டு முற்றத்தில் வந்து அமர்ந்தவனை சுற்றி நான்கு ஐந்து தடியாட்கள் நின்றனர்.
“என்னாலே, எல்லா பையலுகளும் சரியா காசு கொடுத்தறாய்ங்க தானே” சாவகாசமாய் கேட்கவும்,
“ஆமாங்க அண்ணே. எல்லாம் சரியா கொடுத்திடுறானுங்க. காச திருப்பி கொடுக்கலன்னா என்ன நடக்கும்னு அவனுங்களுக்கு தெரியுமே அண்ணே” சொல்லி அவனின் விசுவாசி ஒருவன் சிரிக்க, அவனோடு விஷமமாய் சிரித்தவன் அவனின் தோளில் கைப்போட்டு நெருக்கியவன்,
“அதே இது உனக்கும் தெரிஞ்சிருக்கணும்ல. என் முன்னாடியே சிரிக்கிற. வகுந்து புடுவேன் வகுந்து ஜாக்கிரதை” சொல்லி அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டான். அந்த ஒரு குத்துக்கே நா தள்ளிவிட்டது அவனுக்கு.
“மன்னிச்சிடுங்க அண்ணே” அவன் காலில் உடனே விழுந்து விட்டான். இல்லையென்றால் அவனிடம் யார் மிதிபட்டு சாவது. அந்த பயம் தான்.
அப்போது “அண்ணே” என்று கத்தியவாறே ஒருவன் மூச்சு வாங்க ஓடி வந்தவன், அண்ணனின் அருகில் மூச்சிரைக்க நின்றான்.
“என்னலே, இத்தனை வேகமா ஓடியார? ஊருக்குள்ள நமக்கு தெரியாம ஏதும் சம்பவமா?” கேட்டவாறே காதை கொடைந்தான்.
“அண்ணே! நம்ம சின்ன அம்மணி எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடுச்சினே” மகிழ்வோடு கூச்சலிட,
“நெசமா தான் அண்ணே சொல்லுதேன். சின்ன அம்மணியை கண்டு பிடிச்சாச்சி”
“என்னாலே நீ சொல்றதை நம்ப முடிலயே? என்கிட்ட ஏதும் உன் விளையாட்டை காட்டுன ஒட்ட நறுக்கிப்புடுவேன் பார்த்துக்கோ” நம்ப முடியாது மீண்டும் கேட்டவன், அவனை எச்சரிக்கவும் மறக்க வில்லை.
“அங்கால நம்ம பசங்க பார்த்துட்டு சொன்னாங்க அண்ணே. சின்ன அம்மணி மெதராசுல தான் இருகாங்க” என்றதும் தான் தாமதம், இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன், நாவில் வைத்து மென்று கொண்டிருந்த வெத்தலையை துப்பினான்.
அவன் முகத்தில் வேறு அம்மணியை கண்டு பிடித்ததில் ஒளி வட்டம் தென்பட்டது.
“ஓ, என் மாமனாரு பெத்து போட்ட பொட்ட கழுதை அங்கன தான் இருக்குதா.அப்போ நமக்கு இங்கன என்ன வேலக்கிடக்குது. வண்டியை மெதராசுக்கு கிளப்பு” சொல்லியபடி உள்ளே வந்தவன், மங்கையின் நினைவில் அன்றிரவு அனைவர்க்கும் சரக்கு வாங்கி கொடுத்து குதுகளமாக இருந்தான்.
பாட்டும் கட்சேரியுமாய் அன்றைய தினத்தை போக்கியவன், அடுத்த இரண்டு நாளில் அவளின் மொத்த விவரத்தையும் கை பிடியில் வைத்திருந்தான்.
உடனே சென்னை செல்ல முடியாத காரணத்தினால், அம்மணியின் பாதுகாப்பிற்காக அவனின் ஆட்களை அவளுக்கு தெரியாமல் வேலைக்கு வைத்தான். இருபத்தி நாலு மணிநேரமும் அவளை பற்றின விவரத்தை அறிந்த நிலையிலே, அந்த ஊரில் கடல் ஒன்று இல்லாமலே மிதக்க தொடங்கினான் பாண்டி.
அவனின் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்த்த அன்னை ராசாத்தியின் முகம் யோசனையில் புருவங்கள் இரண்டும் இடுங்கியது.
மகன் இத்தனை சந்தோசத்தில் சுற்றுகிறான் என்றால், ஏதோ ஒன்று பெரிதாக செய்திருக்கணும் இல்லையெனில் செய்ய இருக்கனும். இதில் ஏதோ ஒன்று தான் மகனின் சந்தோசத்திற்கு காரணமாக இருக்கும் என நினைத்தார்.
மகனின் செயலில் இந்த தாய் வருந்தாத நாளில்லை. இப்டி செய்யாதே என்று சொன்னதற்கே தன் கழுத்தை பிடித்து நெருக்கியவன், இவனின் சந்தோசத்திற்கு எதையும் செய்வான் எந்தளவிற்கும் செய்ய துணிவான்.
வீட்டின் நடுக்கூடத்தில் பெரிதாய் மாட்டப் பட்டிருந்த கணவரின் புகைப்படத்தை பார்த்தவர்,” இத்தனை சீக்கிரத்துல எங்களை விட்டுட்டு போயிருக்க கூடாதுங்க. நீங்க எந்த ஊருக்காக எல்லாத்தையும் பண்ணிங்களோ, இப்போ அதை எல்லாம் வச்சியே பாண்டி இங்க இருக்கிறவங்க கிட்ட ஒரண்ட இழுத்துட்டு இருக்கான்” கணவரிடம் சொல்லி கரைந்தவர், பக்கத்தில் இருந்த சின்ன மகன் மற்றும் மருமகளின் படத்தையும் பார்த்தார்.
“நீங்க மூணு பேரும் சேர்ந்து தான் இந்த ஊரை காப்பாத்தணும்” வேண்டியவர், மாட்டு தொழுவத்திற்கு சென்று மாடுகளுக்கு தண்ணீர் ஊற்ற தொடங்கினார்.
இப்படியே மேலும் ஒருவாரம் கடந்த நிலையில், பாண்டிக்கு எப்போதும் போல் சென்னையிலிருந்து அழைப்பு வர, சிரித்த முகத்துடனே எடுத்தான்.
“என்னலே, என் பொஞ்சாதி எப்படி இருக்கா?” ஆசையாய் வினவ,
“அண்ணே! இங்க…” என எப்படி சொல்வது என்று தெரியாமல் முழி பிதுங்க,
“ஆமானே. அவன பத்தி எல்லாத்தையும் விசாரிச்சாச்சு. சின்ன அம்மணி இங்க வந்ததுல இருந்தே, அவன் அவங்க கிட்ட சலம்பிக்கிட்டு தான் இருக்கான். அம்மணியும் அவனோட நல்லா பேசுதாங்கன்னே” மெல்ல தீயை பற்ற வைக்க, அது சரியாக பத்த வேண்டிய இடத்தில் பற்றியது.
“இன்னும் நாலு நாள்ல காதலர் தினம் வர இருக்கு. ஏதாவது ஸ்பெஷல் ப்ரோக்ராம் பண்ணலாமே” என கௌதம் மற்றும் வெற்றியை அமர வைத்து பீடி பேசிக்கொண்டு இருக்க, அவர்கள் இருவரோ காதலர் தினத்தில் என்ன செய்து அவர்கள் தேவதைகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம் என சிந்திக்க செய்தனர்.
“என்ன ஏதாவது ஐடியா இருக்கா?” என அவர் கேட்டு இருவரின் முகத்தையும் பார்க்க, இருவரும் தீவிர சிந்தனையில் இருப்பதை கண்டு ஆச்சரியம் கொண்டார்.
ஒரு ப்ரோக்ராமிற்காக இத்தனை தீவிர யோசனை செய்யும் இவர்கள் இருவரின் வேலை பற்றினை கண்டு மெய்சிலிர்த்து போனார் அந்த மனிதர்.
“சரி யோசிச்சு சொல்லுங்க. டேக் யுவர் ஓன் டைம். பட் ரொம்ப டிலே பண்ணிடாதீங்க” கூறி இருவரின் தோளிலும் தட்டி கொடுத்து விடைபெற்றார்.
அவர் சென்று சிறிது நேரம் வரையிலுமே இருவரும் அவரவர் உலகத்தில் தான் சஞ்சரித்தனர்.
பின் கௌதம் தான் முதலில் சுயம் பெற்றவன், வெற்றியை ஏறிட்டான். அவன் இன்னும் அதே நிலை தான்.
“வெற்றி” என அவனை உலுக்கவும் நிழலிருந்து நிஜத்திற்கு மீண்டும் வந்தான்.
“ஆமா, பீடி ஏதோ பேசணும்னு கூப்பிட்டாரே டா. அவரை காணோம்?” கௌதம் கேள்வியாய் நண்பனை காண,
“தெர்லயே டா” என்றான் அவனும்.
“சரி விடு. திரும்ப அவரே சொல்லுவாரு அப்போ கேட்டுக்கலாம்” என இருவரும் வெளி வந்தனர்.
அதன் பின் இருவருமே வேலையில் மூழ்கிப் போனார்கள்.
கௌதம் மற்றும் வெற்றி இந்த ஃபீல்டிற்குள் வந்து இதோடு ஒன்பது வருடங்கள் கடந்து விட, பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்க இருந்தனர்.
மீண்டும் பீடி வந்து கேட்கவும் இருவரும் ஒரு சேர முழித்து வைக்க, அவர்கள் இருவரையும் பார்த்து சடைத்து கொண்டார்.
அதற்குள் கெளதம் தனக்கு தோன்றிய திட்டத்தை கூறினான்.
“சரி, அப்படின்னா எந்த செலிபிரிட்டியை கூப்பிடுறது? ஏதும் சஜஷன் இருக்கா?” இருவரையும் நோக்க, அதற்கு வெற்றி பதிலளித்தான்.
“சார், எங்களோட சீனியர்ஸ் இப்போ டெலிவிஷன் லைன்ல இருக்கிறவங்களை ஏன் கூப்பிட கூடாது?”
“வருவங்களான்னு தெர்லயே” சற்று யோசனையுடனே அவர் தயக்கம் காட்ட,
“நாங்க வரவைக்குறோம் சார். கண்டிப்பா வருவாங்க” என இருவருமே அவருக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
இதில் கௌதமிற்கு அன்று ஒரு கல்லூரியில் பேசுவதற்காக அழைப்பிதழ் வந்திருக்க, போகலாமா வேண்டாமா என்ற யோசனையிலே உழன்று கொண்டிருந்தான்.
அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
இதுபோல் அவனை இதுநாள்வரை யாரும் எங்கும் பேசுவதற்காக அழைத்ததில்லை. இப்போது புதிதாய் இவனை அழைத்திருக்க சற்று தயக்கம் காட்டினான்.
“எதுக்கு இத்தனை யோசனை?சரின்னு சொல்ல வேண்டியது தானே மச்சான்” கஃபேட்டேரியாவில் அமர்ந்திருந்த கௌதமின் அருகில் இருவருக்குமான சமோசாவுடன் வந்தமர்ந்தான் வெற்றி.
“இங்க பேசுறது வேற, அங்க போய் எல்லார் முன்னாடியும் பேசுறது வேற டா. நம்ம ஏதாவது பேச போய் அது வேற எதுலயும் முடிஞ்சிட கூடாது. அதும் அது வேற வுமன்ஸ் காலேஜ். அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு ” தன் கலக்கத்தை நண்பனிடம் பகிர்ந்து கொள்ள,
“மச்சான்! இதுக்கெல்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது டா. தைரியமா போ, எல்லாமே நல்லதா முடியும்” நண்பனிற்கு தக்க தைரியத்தை வழங்கி ஊக்குவித்தான் வெற்றி.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே சஷ்வி அவனுக்கு அழைத்திருக்க, மற்றவையை விடுத்து மகளிடம் பேச சென்றுவிட்டான்.
“சொல்லுங்க குட்டி? இப்போ பாப்புக்கு கை வலி பரவால்லயா? ” அன்பொழுக மகளிடம் விசாரித்தான்.
அதற்குள் செவி வழி ரோஷினியின் குரல் அனிச்சையாய் விழுந்தது.
“சஷ்வி, இங்க வா நேரமாகிடுச்சி பாரு” என கத்திக் கொண்டிருந்தாள் ரோஷினி. அதற்குள் மொபைல் கட்டாகியிருந்தது.
அவளின் சத்தம் கேட்கவுமே குழந்தை எதற்காக அழைத்திருப்பால் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது கிளம்பி அவள் வீட்டிற்கு செல்வதற்குள் இருவரும் மருத்துவமனை சென்றிடுவார்கள் என கணக்கிட்டவன், நேரே மருத்துவமனைக்கே சென்றான்.
அவர்கள் வரும் முன் இவன் அங்கே இருக்க, அவனை அங்கு பார்த்ததில் ஆச்சரியம் இல்லை, மலைப்பாய் உணர்ந்தாள்.
இவனை திருத்த முடியாது என நன்கு புரிந்து கொண்டாள்.
கெளதம் இப்படி இருக்க ஏதோ ஒரு வகையில் தானும் தன் மகளும் தான் காரணம் என புரிகிறது. இப்போது தவிர்த்து என்ன பயன்?
மழை சாரலாய் ஆரம்பித்து தூறல் போடும் போதே ஒதுங்கி இருந்திருக்க வேண்டும், அப்போதெல்லாம் தூறல் தானே என சாதாரணமாய் விட்டுவிட்டு இப்போது வெள்ளமாய் உருமாறிய பின் செய்த தவறை நினைத்து என்னாகப் போகிறது?
அதனை எப்படி கடக்க என்பதை தான் பார்க்க வேண்டும். அதில் இந்த இனியா வேறு அவளை குழப்பிவிட்டு சென்றிருக்க மனதோடு தவித்து போனாள். எதிலும் ஒன்றமுடியவில்லை
கௌதமை கண்டு அசையாது நின்றிருந்தவளின், தோள் தட்டினான் கெளதம். அதே போல் மகளும் அன்னையை மெதுவாய் தட்டினாள்.
“என்ன எவ்வளோ நேரம் வெளியவே குழந்தையை வச்சிட்டு நிக்கிறதா இருக்க ரோஷினி?” சாதாரணமாய் அவளை நெருங்கி கேள்வி கேட்டவாரே குழந்தையை வாங்க முற்பட, அவனின் நெருக்கத்தில் பெண்ணவளின் நெஞ்சம் அடித்துக்கொண்டது.
நெஞ்சம் படபடக்க அவனின் நெருக்கத்தில் மூச்சை இழுத்து பிடித்து அசையாது நிற்க, மெலிதாய் இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள மின்சாரம் பாய்ந்தது இருவருக்குள்ளும். அதிலும் பெண்ணவளுக்கு சிலிர்த்து விட்டது.
அதற்குள் குழந்தையை கையில் வாங்கியவன் நகர்ந்துவிட்டான். பெண் தான் ஒரு நொடி நிகழ்விலிருந்து வெளிவரவே சிரமப்பட்டாள்.
அவளை ஓர பார்வை பார்த்த கெளதம், நமட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு முன்னே சென்றுவிட்டான்.
ரோஷினி தான் தன் படபடப்பு குறையும் வரை அங்கேயே நின்றவள், வெயில் முகத்தில் பட்டு சுட்டெரிக்கவும் தன்னிலை பெற்று வேகமாய் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
இதனையெல்லாம் தூரத்திலிருந்து பார்வையிட்டிருந்தவனுக்கு கண்கள் இரண்டும் கோபத்தில் சிவப்பேறியது. விரல்களை இறுக்க மூடிய கை, கோபத்தில் ஸ்டெரிங்கில் முஷ்டியால் குத்தினான். சினம் கொண்ட காளையாய் சீற நேரம் பார்த்திருந்தான் பாண்டியன்.
முதல் குறியை முடிவெடுத்தவன், அவர்கள் வெளிவரும் வரை காத்திருந்து பதுங்கி இருந்து பாய நினைத்து அங்கிருந்து வண்டியை கிளம்பினான் பாண்டியன். அவனின் கோபத்திற்கு ஏற்ப வண்டியும் சீறி பாய்ந்தது.