ப்ரியங்கள் இசைக்கின்றனவே! 06

ப்ரியங்கள் இசைக்கின்றனவே! 06

ப்ரியங்கள் இசைக்கின்றனவே!

ப்ரியம் 06

குழந்தை ஓரளவிற்கு தேறியிருக்க, மகளை மீண்டும் டேக் கேரில் விட்டுட்டு வேலைக்கு செல்ல துவங்கியிருந்தாள் ரோஷினி.

ஒருவாரம் வீட்டிலிருந்த நிலையில் வேலை செய்திருந்தாலும், நிறுவனத்திற்கு சென்றதும் வேலை பளு அவளை இழுத்துக் கொண்டது.

அவள் இல்லாத நாட்களில் அவளுடன் வேலை செய்பவர்கள் திண்டாடி தான் போனார்கள்.

அதனாலயே அவள் வந்ததும் அவளை பிடித்து கொண்டு, அது இது என்ன கேள்வி கேட்டு ஒருவழி செய்துவிட்டனர்.

அப்படி இருந்தும் அவள் ஒரு முக சுளிப்பை கூட காட்டாது இன்முகத்துடன் அவர்கள் கேட்டதை சொல்லி கொடுத்தாள்.

அனைவரிடமும் காட்டும் இன்முகம், கௌதமிடம் மட்டும் கோபமாய் வெளிவரும்.

இவளின் இடத்தில் வேறு எந்த பெண்ணாக இருந்திருந்தாலும், இன்னேரத்திற்கு கௌதமின் காதலை ஏற்றிருப்பர். இல்லையெனில் யோசிக்கவாது செய்திருப்பர்.

ஆனால் இவளோ, அவனை அடியோடு விலகவும் விலக்கவும் நினைத்தாள்.

கௌதமை தன்னிடமிருந்து விலக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தாள்.

இனியா எத்தனையோ முறை கௌதமிற்கு தெரியாமல் அவனிற்காக பேசியிருந்தாலுமே, அவளுக்குமே அது தோல்வியில் தான் முடியும்.

எதற்கு இத்தனை பிடிவாதமாக இருக்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை.

ரோஷினி, கௌதமை பிடிக்கவில்லை என்று ஒரு நாளைக்கு  பலமுறை சொல்வாள்.

ஆனால் உண்மையில் அவளுக்கு அவனை பிடிக்குமா பிடிக்காதா என்பதே தெரியாது. ஏன் இன்றளவும் அவனை பிடித்தம் என்ற வரையறைக்குள் அவள் கொண்டு வந்ததில்லை .

பல நேரங்களில் எரிந்து விழுபவள், சில நேரத்தில் அமைதியாய் கடந்து விடுவாள்.

அவளின் உலகினுள் யாரையும் அனுமதித்திட கூட என்பதில் அத்தனை திண்ணம்.

ஏன் என்று கேட்டால் அவளிடமிருந்து சரியான பதில் வராது.

அவளின் கடந்த காலம் இனியாவிற்கு தெரிந்தாலும், முழுதாக அவளிடம் சொல்லியிருக்கவில்லை ரோஷினி.

கௌதமை என்ன செய்தால், அவன் தன்னை விட்டு விலகுவான் என்ற சிந்தனையை மூளைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. ஓடவிட்டு கொண்டேயிருந்தாள்.

ஆனால் எதுவுமே சிக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்.

அதனை எல்லாம் தவிடு புடியாக்கும் படி தான் பாண்டியனின் வருகை என தெரியாமல் அவளுக்குள் மூழ்கியிருந்தாள் பெண்.

பாண்டியன் ஊர் வந்த நாளிலிருந்து இருவரையும் கவனிக்க மறக்கவில்லை.

கண் கொத்தி பாம்பாக இருந்து இருவரையும் கவனித்த நிலையிலே தான் இருந்தான். அவனின் ஆட்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் தெரியாமலே அவர்களை சுற்றி வந்தனர்.

மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் அவனின் பிடியில் அவர்கள் அறியாமலே சிக்கியிருந்தனர்.

கௌதமோ காதலர் தினத்தன்று தன் காதலை எப்படியேனும் அவளுக்கு உணர்த்திட வேண்டுமென முனைப்புடன் இறங்கியிருந்தான்.

அதற்காகவே அவளுக்காக கடைக் கடையாய்  தேடி அலைந்து ஆராய்ந்து பல நொட்டைகளை சொல்லி என இறுதியில் அந்த பரிசினை அவளுக்காய் வாங்கியிருந்தான்.

அது அவன் கைகளுக்குள் வந்ததுமே அவனுக்குள் எழுந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

அப்படியொரு அகக்களிப்பு அவனுள்.வெளியே தெரியாமல் சாதாரணமாய் தன்னை காட்டிக்க பெரிதாய் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிருந்தது.

அப்படியிருந்தும் அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று கடை ஊழியரை சிரிக்க வைத்து, வாழ்த்தவும் வைத்தது.

மென்னகையுடன் அதனை ஏற்றவன், கடையிலிருந்து வெளி வந்தான்.

கடந்த இரண்டு வருடங்களாய் எப்படியோ, இந்த வருடம் அவளுள் ஏதோ ஒரு சிறு மாற்றம் தென்படவும், அவனை இப்படியான ஒரு பரிசை வாங்க வைத்தது.

அவன் மனம் உல்லாச நிலையில் இருக்க, அவனை சுற்றி நடப்பதை கணிக்க மறந்திருந்தான்.

இப்படி இருவருமே இருவரின் நினைவோடு உழன்று கொண்டிருக்க, எங்கனம் அவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை பற்றி அறிந்து கொள்ள.

இப்படியே நாட்கள் சென்று நாளை காதலர்கள் தினமென இருக்க, மனம் அடித்து கொண்டது இருவருக்கும்.

கௌதமிற்கு, தான் காதலை சொல்ல போகிறோம். எத்தனையோ முறை எப்படியெல்லாமோ காதலை சொல்லி இருந்தாலும், இந்த முறை சிறிது பிரத்யேகமானது.

தான் சொன்னதும் அவளின் ரியாக்ஷன்கள் எப்படி இருக்கும்? மீண்டும் தன்னை நிராகரிக்கப்பாளோ அல்லது தன்னை ஏற்று என் வாழ்வில் அடியெடுத்து வைப்பாளா என அவனின் சிந்தனை ஓட்டத்தில் நெஞ்சம் அதன் அழுத்தம் தாங்காது அடித்து கொண்டது.

உலகமெங்கும் வியாபித்திருக்கின்றது என்றால் அது காதல் தான். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை காதலை கொண்டாடுகின்றனர்.

காதல் சுவையானது. சுமையாகத் தோன்றினாலும் அது சுகமானது. அபார சக்தி கொண்டது. அது கோழையை வீரனாக்கும். வீராதி வீரனை சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம். ஏமாற்றங்களும் ஏற்படலாம்.

காதலில் எதிர்ப்பார்ப்பும் உண்டு. அதனால் உண்டான ஏமாற்றங்களும் உண்டு. எதனையும் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

ஒருவர் காதலித்தால் இன்னொருவரும் கண்டிப்பாக காதலிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை.

காதலில் சுகமும் உண்டு. வலியும் உண்டு.

அதில் தான் அடங்கியிருந்தான் கௌதமும்.

அவனிற்கு காதல் சரி பங்காய் இரண்டையும் கொடுத்திருந்தது. காதல் இனிமையையும் கசப்பையும் ஒரே பொழுதில் காட்டியது.

இரண்டையும் ஏற்று அதன் போக்கில் வாழ்ந்தான்.

மொட்டை மாடியிலிருந்து தன் காதல் பரிசினை அவன் நெஞ்சில் வைத்து காதல் தேவதையின் நினைவில் மூழ்கியிருக்க, திடிரென அவன் கண்களில் ஒரு ஒளிவட்டம். ஜூவாலையாய் மின்னியது.

அவன் கண்கள் பதிந்த திசையினை நோக்க, அவனின் ப்ரியமானவள் அவனுக்கு அழகாய் காட்சியளித்தாள்.

விண்ணுலகிலிருந்து  பூமிக்கு வந்த தேவதை போல் அத்தனை அழகையும் மொத்தமாய் ஒற்றையாளாய் ஒத்திகைக்கு எடுத்திருந்தாள் ரோஷினி.

அப்போது தான் தலைக்கு ஊற்றியிருப்பாள் போலும், எந்த ஒப்பனையும் இல்லாது மஞ்சள் பூசிய முகம், நிலா வெளிச்சத்தில் சிறிதாய் மின்னிய அவளின் ஒற்றை கல் பதித்த வெள்ளை மூக்குத்தியில்  அவன் கண்கள் நிலையாய் நின்றுவிட்டது.

காதல் மழை அவனுள் அடித்து பெய்து அருவியாய் நீர்வீழ்ச்சியில் கொட்ட, குருதி சூடேற இதயமோ இரைச்சலிட்டது.

அவனின் ப்ரியமானவள் அத்தனை அவஸ்தைகளுக்கும் சொந்தக்காரியான ரோஷினி அமைதியாய் கீழே இடப்புறத்தில் இருந்த கையிற்றில் துணியை காயப் போட்ட படி இருந்தாள்.

“அடியேய் திமிரழகி!!!” ஆராவாரத்துடன் சத்தமிட்டு அழைத்தான்.

ரோஷினியோ அவனின் அழைப்பை செவிக்குள் வாங்கினாலும் செவி சாய்க்கவில்லை.

அப்போது தான் டீவி பார்ப்பதற்காக அமர்ந்த பங்கஜம் கௌதமின் செயலில் தலையில் அடித்து கொண்டார் ‘இது திருந்தாத கேஸ் என்று’.

“அடியேய்!!! இந்த அத்தானை கொஞ்சம் நிமிர்ந்து தான் பார்க்கிறது. அத்தனை வெட்கமா அத்தானை காண?” ரோஷினியை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, முகத்தில் செயிர் கூடி போய் கண்கள் சிவக்க அவனை பார்த்தாள்.

“அம்மாடியோய்…”ஆச்சரியம் காட்டியவன் விழியாலே தன்னவளை பருகியவனின் ரோமங்கள் சிலிர்த்து அடங்கியது.

காதல் அவனுள் கிளர்ந்து விட்டு எழ, மெல்லின காதல் அவனுள் வன்மையாய் பரவியது.

ஒற்றை பார்வையிலே அவனை அசைத்து விட்டிருந்தாள் பெண்ணவள்.

சினம் கொண்ட பார்வைக்கே இந்த நிலையென்றால், அவள் காதல் பார்வை பார்த்தால் இவனின் நிலை… அதோ கதி தான்.

இது சரியில்லை என்று நினைத்தவன், தன் ஆசைகளை அடக்கி நிதானத்திற்கு வந்தவன் காதலாய் புன்னகைத்தான்.

காதலன் கௌதம்… ஆர்.ஜே கௌதமாக மாறிய தருணமது.

“என் அழகியே !!! திஸ் இஸ் ஃபார் யூ ப்யூட்டி” என பறக்கும் முத்தத்தை பறக்க விட்டவன் அவனின் ப்லே லிஸ்ட்டிலிருந்து ஒரு பாடலை எடுத்து அவனுக்கு தேவையான வரிகளை ப்லே செய்திருந்தான்.

“உனக்கு தான் டி என் செல்லமே. நல்லா கேட்டுட்டு பதிலை கூறு. அத்தான் வெயிட்டிங் மா”

ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்
யம்மா…
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரிய…
வங்கத்துல வெளஞ்ச
மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி…
யம்மா இங்குமங்கும் பூசிவரும்
எழிலிருக்கும் அரசி…

 கூடியிருப்போம்
கூண்டுக் கிளியே …
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே…
ஜாடை சொல்லி தான் பாடி
அழைச்சேன் …
சம்மதமுன்னு சொல்லு கிளியே…

அவனின் இதழ்களும் கூட அனிச்சையாய் பாடல் வரிகளை அசைக்க, கைகள் தானாக தாளமிட, பார்வை என்னவோ அவனின் பெண் மீது தான்.

அவளும் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை தான் அந்த காதலனால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம்.

அதற்குள் சீரியலில் மூழ்கி இருந்த பங்கஜம் அவனின் அட்டகாசம் தாங்காதவர் வெளியே வந்து,” அடேய் அறிவில்லாதவனே! உனக்கு காதல் பண்ண ஒரு நேரங்காலம் இல்லையா டா. நீ எப்போ இந்த தெருக்கு வந்தியோ அப்பவே எங்க காது போச்சு” என அவனை விடாமல் மூச்சு வாங்க திட்டி தீர்த்தார்.

அவர் என்ன கடுப்பில் இருந்தாரோ அத்தனையையும் இவன் மீது இறக்கியிருந்தார்.

“போ போய் வேல வெட்டியை பாரு. உனக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தானோ, அவனை உதைக்கனும்” சொல்லிவிட்டு உள்ளே சென்று மீண்டும் டீவி முன் அமர்ந்து விட்டார்.

அவரின் திட்டுதல்களை ஒரு சிரிப்போடு வாங்கியிருந்தான் கௌதம்.

இது எப்போதும் நடப்பது தான். இந்த தெருவிலே இவன் மீதும் ரோஷினி மீதும் அக்கறை கொண்ட ஒரே மனிஷி இவர் தான்.

அதனாலே தான் அது தந்த உரிமையில் இவனை திட்டியிருந்தார்.

அவ்வளவு நேரம் கடுகடுவென முகத்தை வைத்திருந்த ரோஷினியின் இதழில் வெளியே தெரியாத ஒரு புன்னகை மெலிதாய் உதிர்த்தது.

துணியை காயப் போட்டு முடித்தவள், வீட்டிற்குள் புகுந்து கொண்டாள்.

அதன் பின் அவனுமே கீழே சென்று வேலைக்கு தயாராகி வெளி வந்தான்.

எதிர் வீட்டில் மூடியிருந்த அந்த கதவை ஒரு முறை பார்த்தவன், அந்த வீட்டிற்கு ஒரு பாய் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.

இதனையெல்லாம் அடுத்த தெருவில், அவர்கள் இருவரது வீடு தெரியும் படி இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியவன், அங்கு நடந்த கூத்தை எல்லாம் எரிச்சலுடன் இறுகிய முகத்துடன் கண்டிருந்தான்.

பார்த்தவனுக்கு கௌதமை அடித்து நொறுக்கும் ஆவேசம். ஆவேசப்பட்டால் வேலைக்காகது என்றுணர்ந்தவன், காத்திருந்து அடிக்க நினைத்தான்.

தன்னை ஏமாற்றும் ரோஷினிக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க எண்ணினான். அது அவளுள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே கூடாது. அந்த பாடம் அவள் உயிரோடு இருக்கும்வரை அனுப்பவிக்க ஆசைக் கொண்டான்.

அங்கே ஸ்டூடியோக்குள் நுழையும் நேரம் வெற்றி அவனின் நிகழ்ச்சியை திறம்பட செய்து கொண்டிருக்க, நண்பனை கண்டதும் புன்னகைத்தான்.

பதிலுக்கு புன்னகைத்தவன், அடுத்து அவனுக்கு தேவையானவற்றிக்கு சிறிது நோட்ஸ் எடுத்து கொண்டான்.

சரியாக பத்து மணிக்கு அவனின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

எப்போதும் போல் இம்முறையும் புத்துணர்வோடு நிகழ்ச்சியை தொடங்கினான்.

இங்கே வருவதற்கு முன்பு நடந்த காதல் கலாட்டாக்களில், மேலும் அவனை ரசனையுடன் பேச வைத்தது.

விடிய விடிய பேசு என்று சொன்னாலும் சளைக்காமல் செய்வான்.

‘காக்கா வெள்ளையா இருக்கு டா’ சொல்லி கிண்டலடித்தாலும், ‘அதுவும் நல்லதுக்கு தானே’ என்பான்.

அப்படியொரு மனநிலை தான் அவனது. அவனின் மனம் முழுவதையும் ஆக்ரமித்திருந்தாள் அவனின் பெண்.

பெரியவள் ஒருவிதமாய் அவனை ஆட்டி வைக்கிறாள் என்றால் சிறியவள் வேறு விதமாய் அதனை செய்கிறாள். இறுதியில் இவனை ஆட்டி வைக்கவென பிறந்த அவனின் பொற்செல்வங்கள் இருவரும்…

காதல், அவனை பித்தனாக்கி அலையவிட்டிருந்தது.

ஷோ முடித்து எப்போதும் அயர்ச்சியுடன் வீட்டிற்கு வரும் கௌதம், இன்று முகம் கொள்ளா புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்தான்.

வரும்போதே ரோட்டு கடையில் இரவு உணவிற்கு இரண்டு முட்டை தோசையை வாங்கி வந்தவன், அமைதியாய் உண்டான்.

பின், அடுத்தநாளுக்கான உடையை எடுத்து அயன் செய்து வைத்தவன், மகளை காதலியையும் இதயத்தில் சுமந்தவாறே உறங்கி போனான்.

விடியலில் சீக்கிரமே எழுந்த கௌதம் விரைவிலே கிளம்பிவிட்டான்.

எட்டு மணிப்போல் வேலைக்கு போகவென கிளம்பி மகளுடன் வெளி வந்த ரோஷினியை ஆர்வத்துடன் எதிர்கொண்டான் கௌதம்.

கௌதமை கண்டதும் குழந்தை அவனிடம் தாவ, மகளை வாங்கி கொண்டவன் ஆசை தீர மகளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

குழந்தையும் தனது இதழால் அவனின் கன்னத்தை ஈரப்படுத்தியது.

பின்னர், குழந்தை கேட்ட பொம்மையை வாங்கி வைத்திருந்தவன் அதனை கொடுக்க மறந்திருக்க, காதலர் தினத்தை கொண்டு முதல் பரிசாக எந்தவித வித எதிர்பார்ப்புமின்றி தன் மீது பாசம் வைத்த மகளுக்கு அதனை கொடுத்தான்.

அதுவரையிலும் அவர்களை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. அமைதியாய் கைக்கட்டி வேடிக்கை பார்த்தாள்.

மகளை ரோஷினியிடம் ஒப்படைத்தவன்,” எனக்காக காத்திரு ரோஷினி. நான் உனக்காக வாங்கின ஒன்றை கொடுக்கனும். கண்டிப்பா வந்திடுவேன். காத்திரு” சொல்லி கன்னத்தை தட்டி மகளுக்கு தெரியாமல் பறக்கும் முத்தமொன்றை கொடுத்தவன் சிட்டாக பறந்து விட்டான்.

சென்றவன் தான் அதன்பின் இரண்டு நாட்கள் ஆகியும் அவன் வரவில்லை. அவனை பற்றின எந்த விடயமும் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை.

அவன் இல்லாத அந்த இரண்டு நாளில் ரோஷினி அடியோடு மாறியிருந்தாள்.

error: Content is protected !!