காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அவன் பார்த்தது, அவன் அறையில் மாட்டப்பட்டியிருந்த ஒரு புகைப்படத்தை தான். தானாக இதழில் புன்னகை அரும்பியது.
அதில் அவன் குடும்பமாக நினைக்கும் அனைவரும் இருந்தனர்.
தினமும் அதில் தான் விழிப்பான். அவன் வாழ்க்கையை மாற்றிய செல்வங்கள் இவர்கள் எல்லாம்.
அதில் இருந்தவர்கள் ஞானவேல், காந்திமதி, இனியா, வெற்றி, அர்ஜூனன்,ரோஷினி, சஷ்வி மற்றும் அவன்.
அவனிற்கு இந்த சந்தோஷத்தை கொடுத்தது காந்திமதி தான்.
காந்திமதி, வெற்றி இனியாவிடம் எப்படியோ, தன்னிடம் அதிக பாசத்தை காட்டினார்.
அவரின் அன்பில் இத்தனை கால வடுவை எல்லாம் மறந்தே இருந்தான். இன்னும் சொல்லப்போனால் அவனின் இந்த புதிய வகை மாற்றத்திற்கு ஏதோ ஒரு காந்திமதியின் அன்பும் ஒரு காரணம்.
இந்த புகைப்படம் அர்ஜூனனின் மொட்டையடிக்கும் வைபவத்தில் எடுத்தது.
நிற்க மாட்டேன் என்று சொல்லி அகன்ற ரோஷினியை வம்படியாய் நிற்க வைத்து எடுத்து கொண்ட புகைப்படம் அது.
கௌதம் பக்கத்தில் தயக்கங்களுடன் சஷ்வியை இடுப்பில் வைத்தவாறு நின்றிருந்தாள். பார்க்கவே கண் கொள்ளா காட்சியாய் இருந்தது.
ஒரு நிமிடத்திற்கு குறையாமல் அந்த புகைப்படத்தினை கண்டவனின் மொபைலில் அறிவிப்பு சத்தம்.
அதை கண்டவனின் முகம் சிரிப்பில் விரிந்தது.
ஆன்லைன் உணவு பரிமாற்று செயலியிலிருந்து தான் வந்திருந்தது.
‘காதலிக்கு பிடித்த உணவை கொடுத்து வயிற்றை நிரப்பி மனதை வெல்லுங்கள் கௌதம். உங்களுடன் நான் இருக்கிறேன். என்னை மறந்திடாதீங்க..’ என்று வந்திருக்கவும் சிரிக்க மாட்டமாய் சிரித்தான்.
பின், முகம் கழுவி காலை கடன்களை முடித்தவன் ஆர அமர ஒரு டீயை போட்டு குடித்தான்.
அதற்குள்ளேயே நண்பனுக்கு அழைத்தவன், அவன் எடுத்ததும்” திருமண நாள் வாழ்த்துக்கள் மச்சான். என் தங்கச்சி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வெளிவந்தாலும் நீ செத்த டி”என அழகாய் அன்பாய் ஆத்மார்த்தமாய் வாழ்த்தவும் நண்பன் பல்லை கடித்தான்.
“டேய்…”பற்களை நறநறக்க,
“என்ன மச்சான் இத்தனை பாசமா கூப்பிடுற…?”
“இப்போ மட்டும் என் முன்னாடி நீ இருந்திருந்தின்னா அந்த பாசத்தை அப்படியே அருவியா கொட்டிருப்பேன் டா. ஜஸ்ட் மிஸ்” சிரித்த முகமாய் அவன் மொழியவும்,
“கேட்டியா தங்கச்சி. நான் தான் அப்பவே சொன்னேனே என் நண்பனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தின்னு” ராகமாய் இழுத்து இவன் சொல்லவும் வெற்றி ஜெர்க்காகினான்.
“சில். நான் ஏதோ விளையாட்டுக்கு தான் பேசினேன்” அவசர அவசரமாய் அவன் பதறிய குரலில் படபடப்பாய் பேச,
அப்போது தான் அறைக்குளிருந்து வெளி வந்த இனியா,” தரு, யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?” மகனை தூக்கி கொண்டு வரவும், வெற்றி கடுப்பாக அடக்கப்பட மாட்டாது சிரித்தான் கௌதம்.
“மச்சான் கிட்ட சில்…”கடுப்பை காட்டாது இருக்க பெரிதாய் சிரமப்பட்டான்.
“அண்ணாவா… இங்க கொடுங்க” என அதனை அவனிடமிருந்து வாங்கி பேசச் செய்தாள்.
“அண்ணா…” பாசமாய் அன்பொழுக தங்கை அழைக்க, பனிக்கட்டிப் போல் கரைந்தான் கௌதம்.
அண்ணா என்ற வார்த்தையை ஒன்னும் அவள் வாய் வழியாய் மட்டும் கூறவில்லை.மனதால் கூறுகிறாள் என்பதற்கு சாட்சியாய் தான் அர்ஜூனனை தன் மடியில் வைத்து மொட்டையடித்து தன்னை மாமனாய் உணர வைத்திருந்தாள் இனியா.
“திருமண நாள் வாழ்த்துக்கள் டா தங்கச்சி.இன்று போல் என்றும் மகிழ்ச்சியா இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா தங்கமே” மூத்தவனாய் ஆசி வழங்கி வாழ்த்தினான்.
“சரிங்க அண்ணா… பையன் இங்க ஒரே சேட்டை நான் அப்புறமா பேசுறேன்” என வைத்துவிட்டாள்.
பின்னர், கடிகையில் நேரத்தை காண அதுவோ ஏழரை என காட்ட, வேகமாய் கிளம்ப ஆரம்பித்தான்.
குளித்து முடித்து ஈரம் சொட்ட வெளி வந்து, கண்ணாடி முன் நின்றவனை காண காண அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
எழுந்ததிலிருந்து அவன் முகத்தில் சிரிப்பென்பது அப்படியே ஒட்டிக்கொண்டது.
காதலை சொல்லப் போகிறோம் என்ற நினைப்பே அவனை உவகை கொள்ள வைத்தது.
அதனுடனே கல்லூரிக்கு செல்ல கிளம்பினான்.
சாம்பல் நிற சட்டை அணிந்தவன், அதற்கு ஏற்ப கருப்பு நிற பேண்ட் என பக்கா ஃபார்மல்ஸில் கிளம்பியிருந்தான்.
எப்போதாவது தான் இப்படி ஃபார்மல்சில் கிளம்புவது.
அவனை காண அவனுக்கே பிடித்திருக்க, ரோஷினியை நினைக்கையில் புதிதாய் வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
ஆண்கள் வெட்கப்படும் தருணமே எப்போதும் அழகு தான்!
விடலை பையன் போல் காணப்பட்டான் கௌதம்.
மெல்லிய காற்றில் அசைந்தாடிய அலையலையான கேசம், அளவான நெற்றி அதில் சிறிதாய் சந்தனம், கூர்மையான நாசி, மீசை மறைத்திருந்த அதிரங்கள், அதையெல்லாம் விட அவனை மேலும் வசீகரிக்கும் விதமாய் அவன் வைத்திருந்த குறுந்தாடி என அவனை பார்க்கையில் விடலை பையன்களே தோற்று போய் விடுவார்கள்.
அதிலும் இன்று ஃபார்மல்ஸில் இருக்க, எத்தனை காதல் முன்மொழி வரப்போகிறதோ?
எத்தனை வந்தாலும் அவன் எதிர்ப்பார்ப்பது எல்லாம் ரோஷினியின் காதலை மட்டுமே.
கிளம்பலாம் என கதவை பூட்டும் நேரத்தில், மகளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசு ஞாபகத்திற்கு வர, அதனை எடுத்து கொண்டு எதிர் வீட்டிற்கு பயணப்பட்டான்.
நாலு அடியில் இருக்கும் வீட்டிற்கு செல்வதற்குள் அவன் மனம் அத்தனை வேகமாய் துடித்து விட்டது. நெஞ்சம் படபடக்க அவன் அவர்கள் வீட்டை நெருங்கவும் அவளே வெளி வந்திருந்தாள் மகளுடன்.
ரோஷினியை தினமும் காண்கிறான் தான். இருப்பினும் அவளை பார்க்க கண்களுக்கு தெவிட்டவில்லை. புதிராய் தான் தெரிந்தாள்.
அவளை கற்று கொள்ளவும் தன்னை அவளுக்கு கற்பிக்கவும், விருப்பமும் ஆசையும் மலையளவு இருக்கிறது தான். அதற்கெல்லாம் பெண்ணின் ஒற்றை சம்மதம் வேண்டும்.
அதற்காக தான் காத்திருக்கிறான். காத்திருப்பதும் கூட சுகமாய் தான் இருந்தது.
அவன் பெண் என்று வந்தாலே, அனைத்தையும் ரசிக்க தான் கற்றுக்கொண்டான். கற்று கொடுத்தாள் அவள்.
ரோஷினியிடம் எப்படியோ பேசிவிட்டு விடை பெற்றவன், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் காஞ்சிபுரத்திலுள்ள பெண்கள் படிக்கும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்திருந்தான்.
வண்டியில் வந்ததால், கலைந்திருந்த சிகையை சரிசெய்து கோதியவன், உள்ளே சென்றான்.
அதற்குள் அவனை அழைக்க வெளியவே வந்து விட்டார் அவனுக்கு அழைப்பிதழ் வைத்த நபர்.
பெண்கள் கல்லூரி என்பதால், புதிதாய் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த ஆடவனை கண்டவர்கள் அவனின் அழகிலும் மோகனத்திலும் பெண்கள் மயங்கி போயினர்.
அவர்களின் கண்கள் அவனை விட்டு நகர மறுத்திட, அவர்களுமே அதற்கு வழிவகுக்கவில்லை.
சிங்கிளாக இருந்த பெண்களுக்கு எல்லாம் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்பது போல் தான் இருந்தது. அதுவே கமிடட்டாக இருந்த பெண்களுக்கு ‘அவசரப்பட்டு விட்டோமோ’ சோக கீதம் வாசித்தனர்.
பின், அந்த நபர் அவனை ஆசிரியர்களுக்கான அறைக்கு அழைத்து வந்தவர், அவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தவும் மறக்கவில்லை.
கௌதம் யாரென்று தெரிந்த பின், ஆசிரியர்கள் விரும்பியே வந்து தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
‘என்னோட மன அழுத்தமெல்லாம் உங்க ஷோ கேட்கும்போது அப்படியே பறந்து போயிடும்.’
‘நான் ராஜா சாரோட பெரிய ஃபேன். அதுக்காகவே உங்க ஷோ கேட்பேன்.’
இப்படியான பலர் அவனிடம் பகிர்ந்து கொண்டனர்.
அதையெல்லாம் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டான். பெரிதாய் அவர்களிடம் பேசவில்லை என்றாலும் ஒதுக்கவில்லை அவன்.
அப்போது அவனுக்கு வெற்றி அழைக்க, சிறிது தூரம் தள்ளி நின்று எடுத்தான்.
“என்ன டா…?”
“காலேஜ்க்கு போயிட்டியான்னு கேக்க தான் கூப்பிட்டேன்” என்றான்.
“ஹான். இப்போ தான் வந்து கொஞ்ச நேரம் இருக்கும் “
“சரி. நல்லப்படியா பேசிட்டு வா. எனக்கு வேலை இருக்கு வைக்கிறேன்” என வைத்து விட்டான்.
பின், அவனுக்கான சிற்றுண்டி தர, முதலில் மறுத்தவன் அவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட சொல்லவும் அவர்களுக்காய் சிறிது உண்டான்.
இவனுடன் இன்னும் இருவரை அழைத்திருக்க, அவர்களுடன் பேசியப்படி உண்டு முடித்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
இது டிபார்ட்மெண்ட் நடத்தும் மீட் என்பதால், பெரிதாய் கூட்டமில்லை.
விஸ்காம் படிக்கும் மாணவிகள் மட்டுமே இருந்தனர். போக போக பக்கத்து டிபார்ட்மெண்ட் பெண்களும் வந்து விட்டனர்.
ஆரம்பத்தில் கௌதமுடன் வந்தவர்கள் பேச, அமைதியாய் கேட்டிருந்தனர். சிலர் உறங்கியும் போனார்கள்.
மூன்றாவதாக கௌதம் பேச எந்திரிக்க, கரகோஷங்கள் அந்த அறையை அதிர வைத்தது.
மென்னகையுடனே ஆரம்பித்தான். முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவன், அவன் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவன் வேலை செய்யும் இடத்தில் என்ன மாதிரியான வேலைகள் நடக்கும் என்பன பற்றி எல்லாம் சொன்னான்.
இப்படியே ஒரு முக்கால் மணி நேரம் செல்ல, இறுதியாக “உங்களுக்கு ஏதும் கேள்வி இருந்தா கேட்கலாம்” எனவுமே அனைவரும் கோரசாக அதனை கேட்டனர்.
“சிங்களா… கமிட்டெடா…?” ஆராவாரத்துடன் ஆர்பாட்டமாய் கேட்க, ஆசிரியர்கள் அவர்களை அடக்க முயற்சித்தனர்.
அவர்கள் கேட்டதில் குறுநகை புரிந்தவன், அமைதியாய் இருந்தான்.
“சொல்லுங்க…” கூச்சலிட்டனர் பெண்கள்.
“நான் சிங்கிளும் இல்லை கமிட்டெடும் இல்லை. ஆனா மூணு வயசு குழந்தைக்கு அப்பா” இதனை சொல்லும் போதே அவன் முகத்தில் பெருமை குடிக் கொண்டிருந்தது.
அன்னை இன்னும் ஏற்கவில்லை என்றாலும் மகள் தனக்கென தனி இடத்தையும் பிரத்யேகமான இடத்தையும் தந்திருந்தாளே.
இவன் கூறவுமே பெண்களின் முகம் வாடிவிட்டது.
“சிய்யரப் கேர்ள்ஸ்…”சமாதானம் பேசி முடித்து கீழே இறங்கினான்.
சிறிது நேரம் அங்கேயே இருந்தவன், மதியம் போல் கிளம்பிவிட்டான்.
வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்தவன், அவன் வாங்கி வைத்திருந்த அந்த பரிசினை எடுத்து பார்த்தவன் ரோஷினியிடம் தனக்காக காத்திருக்கும் படி மெசேஜ் அனுப்பிவைத்தான்.
பின் குதுகலத்துடனே வண்டியை எடுத்தவன், எப்போதும் போல் ஒருபக்க காதினில் ப்ளூடூத் ஹெட்செட் மாட்டி உற்சாகத்துடன் கிளம்பினான்.
சிறிது தூரம் வந்தவனின் வண்டி பிரேக் பிடிக்காது போக, தள்ளாடியது. எங்கேயாவது ஓரம் கட்டலாம் என பார்த்தால், அது முடியாமல் போக வண்டியின் வேகம் தாளாது கெளதம் திண்டாட, எதிர்புறத்தில் வந்த லாரியில் மோதி வண்டியோடு தூக்கி எறியப்பட்டான்.
தனக்கு நேரும் நிகழ்வை தடுக்க வழியறியாது, பெண்ணவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசினை பாக்கெட்டிலிருந்து எடுத்து நெஞ்சோடு வைத்து அழுத்தம் கொடுத்தவனின் கண்ணில் சிறு துளி கண்ணீர்.
“என்னை மன்னிச்சுடு ரோஷினி…” மன்னிப்பு வேண்டியவன், தூர எரியப்பட, வாய் மொழியில் இறுதியாக ரோஷினி என்ற வார்த்தை உதிர்த்தன.
ஆபிஸில் இருந்த ரோஷினிக்கு அப்போது விக்கலெடுக்க, “யாரோ உன்ன நினைக்கிறாங்க ரோஷினி” சிரிப்போடு அவளை மற்றவர்கள் கிண்டல் செய்ய,
புரிந்தது இது யார் வேலையாக இருக்கும் என. பல்லை கடித்தாள்.
*****
மாலை வேளை மகளை டேக்கேரிலிருந்து அழைத்து வந்தவள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவென பக்கத்திலிருந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்றாள்.
தேவையான பொருட்களை வாங்கும்போது எதிர்ச்சியாய் அங்கே இளையராஜாவின் இசையில் பாடல் மெல்லிய சத்தத்தில் ஒலிக்க, கௌதமின் நினைவு தானாய் வந்து ஒட்டிக்கொண்டது.
காலையிலிருந்து மதியம் வரையிலும் விடாது மெசேஜ் செய்தவன், அதன்பின் ஒரு மெஸேஜும் இல்லை. அப்போது தொல்லை விட்டது என நினைத்தவளின் மூளை இப்போது ஏன் மெசேஜ் அனுப்பவில்லை என யோசிக்க செய்தது.
அந்த யோசனையே அவளுக்கு பிடிக்கவில்லை. தன்னுள் இப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் கௌதமின் மீது ஆத்திரமாய் வந்தது.
இவளின் யோசனையில் பிள்ளையை கவனிக்க மறந்திருக்க, பின்னாலிருந்து ஒரு குரல்.
அந்த குரலை கேட்டதுமே அவள் உயிர்நாடி எல்லாம் பயத்தில் நடுங்கியது. யாருக்கு தெரியாமல் இத்தனை காலமாய் மறைந்து வாழ்ந்தாலோ அவனின் குரல். பாண்டியனின் குரல். அதனுடன் சேர்ந்து மகளின் குரலும் செவிக்குள் இறங்க உடனே திரும்பினாள்.
“அம்மணி… இப்படியா நம்ம கொழந்தைய தனந்த்தனியா வுடுறது. என்ன புள்ள நீ? பாரு நம்ம புள்ள எம்புட்டு பயந்து கிடக்குதுன்னு?” சொல்லி மகளின் அழுகாச்சியை நிறுத்த முயல, சிலை போல் நின்றிருந்தாள் ரோஷினி.
“அம்மணி என்ன அத்தானை காணவும் அப்படியே சந்தோசத்துல மெதக்குற போலயே ” பேசியப்படியே சற்று நெருங்கி வந்து அவள் தோளில் கை போட வரவும் சுயம் பெற்றவள் தள்ளி நின்று குழந்தையை பிடுங்கினாள்.
“யார் நீ…?” தெரியாதது போலவே அவள் கேட்க,
“உன்ற புருஷனாக்கும்…” கரப்பட்ட பல்லை காட்டி இளித்தான் பாண்டி.
“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல மிஸ்டர்…” சொல்லி நகர்ந்து விட்டாள்.
பக்கத்தில் நின்ற அவனின் ஆட்களிடம்,”சின்ன அம்மணி என்னமா பேசிட்டு போகுது பாரேன். எனக்கு ஏத்த பொஞ்சாதி தான்” சொன்னவன் கோபமாய் செல்லும் ரோஷினியின் பின்னே வந்து “நாளைக்கு வருவேன் பொஞ்சாதி. கிளம்பி இரு நம்ம ஊருக்கு போலாம். இல்ல உன்ற அப்பன்காரன் உசுரோட இருக்க மாட்டான்” சத்தமாய் மொழிந்தவன் அவளை கடந்து சென்றான்.
ஆனால் அடுத்த நாளே அவள் செய்து வைத்து வேலையால், அன்றே வீடு புகுந்து விட்டான் அவனின் ஆட்களோடு.