அந்த அதிகாலை பொழுதில், தலையில் கட்டுடன் வந்து இறங்கிய மகனை காணவும் பதறிப்போனார் காந்திமதி.
“டேய்ய்…!!!” பதறியவர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“என்னாச்சு? எப்படி இந்த அடி ?” ஆராய்ச்சி பார்வையுடன் அவர் விசாரிக்க,
“அம்மா இதெல்லாம் நிக்க வச்சிட்டு தான் பேசுவியா, பாவம் அண்ணனே ட்ராவல் டையர்டோட நிக்குறாரு. உள்ள போக விடு மா” என்றாள் இனியா தூங்கும் மகனை தூக்கி வைத்து கொண்டு.
“உனக்கிருக்கு. உள்ள வாங்க ரெண்டு பேரும். வாங்க மாப்பிள்ளை” என அனைவரையும் வரவேற்றவர் பேரனை வாங்கி கொண்டு உள்ளே சென்றார்.
மூவரும் அமர, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தவர் கௌதமின் பக்கத்தில் அமர்ந்து அவனின் தலையில் மெல்ல கை வைத்து பார்த்தார்.
“ரொம்ப வலிக்குதா? எப்படி அடிபட்டுச்சி?” என்று கேட்கையிலே கௌதமின் விழிகளில் நீர் திரண்டு விட, பரிதவித்தது அந்த தாய் மனது.
பெற்றால் தான் பிள்ளையா என்ன, பிள்ளையாய் பாவித்த பின்பு எந்த பிள்ளைகளாய் இருந்தாலும் தாய் மனம் அவர்களுக்காய் துடிக்க தான் செய்யும்.
அதே தான் இங்கேயும். இப்போது கௌதம் இருக்கும் இடத்தில் இனியாவாக இருந்தாலும் இதே போல் கவலைப்பட்டிருப்பார்.
பிறந்ததிலிருந்து பாசம் என்பதையே கண்டிராத கௌதமின் மீது அதித பாசத்தை கொண்டுள்ளார் காந்திமதி.
தன் மகளிடமே தனித்து நின்றவரால் ஏனோ இப்பையனிடமிருந்து தூர நிற்க முடியவில்லை.
ஏதோ ஒரு விசை அவரை அவன் பால் ஈர்த்தது. அது தான் அவனை தன் மகனாக ஏற்க வைத்து, அதற்கான முயன்றுதலையும் செய்ய வைத்தது.
“கௌதம் என்ன இது சின்ன பையன் மாதிரி அழுதுக்கிட்டு?” அவன் கண்ணீரை தன் கரத்தால் துடைத்தவாறே காந்திமதி பேச, அவரையே தான் கண்கொட்டாமல் பார்த்திருந்தான்.
அவனுக்கு இவரின் அன்பு எப்போதும் திகட்ட வைக்கிறது. தாய் பாசம் இப்படி தான் இருக்கும் என்பதை உணர வைத்தவர் இவர் தான். அதற்கான பெரிய பங்கு தங்கையையே சாரும். அவளின் பங்கு இல்லையெனில் தான் இந்நிலையில் இருந்திருக்க இயலாது.
அர்ஜூனன் அவள் வயிற்றில் கருவுற்றிருந்த நிலையில் தான் அதனை செய்து காட்டிருந்தாள்.
ஒருநாள் அனைவரையும் கூடத்தில் அமர்த்திருந்த இனியா அமைதியாகவே இருக்க,
“என்ன டா எல்லாரையும் வர சொல்லிருக்க?” ஞானவேல் மகளிடம் அன்பொழுக கேட்க,
“இருங்க பா. சொல்றேன்” என்றவள் கணவனை காண, அவனோ பேசு என சைகை செய்யவுமே காந்திமதியையும் ஞானவேலையும் முன் நிறுத்தினாள்.
அனைவரும் என்னவென்பது போல் பார்க்க,” நான் ப்ரெக்னன்ட் ஆனதும் நீங்க ரெண்டு பேருமே உனக்கு என்ன வேணும்னு கேளு செஞ்சி தரோம்னு சொன்னீங்க இல்லையா?” கேட்டவளை இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்ட பின் ஆமாம் என்றனர்.
“இப்பவும் அதே தான் டா. சொல்லு உனக்கு என்ன வேணும்னு?” ஞானவேல் மகளின் எந்தவிதமான கோரிக்கையை கேட்டாலும் நிறைவேற்றிட வேண்டும் என்றதில் கேட்டார்.
அவர் கேட்டதற்கு பதில் சொல்லாது அமைதியாகவே இருக்க, சரியாக அந்த நேரம் பார்த்து குழந்தைகளுடன் வெளியே சென்றிருந்த கௌதம் உள்ளே நுழைந்தான்.
குழந்தைகளுக்காக திண்பண்டம் வாங்க சென்றவன், அப்போது வருகை தர குடும்பமே கூடியிருப்பதை கண்டு விலக எத்தனித்தான்.
அதற்குள் அவனை தடுத்து நிறுத்திய இனியா அனைவருக்கும் முன்பு அவனை நிறுத்தியவள், கௌதமை ஏறிட்டாள்.
“என்னடா மா? ஏதாவது வேணுமா என்ன?” பாசத்துடன் கௌதம் வினவ,
“ஆமாம்…”
“சொல்லு என்ன வேணும்னு இப்பவே இந்த அண்ணன் உனக்காக வாங்கிட்டு வரேன்” என்று சொன்னாலும் நண்பனை ஓரப்பார்வை பார்வை பார்க்க, அவனோ கையை கட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
கௌதமின் கரத்தை பிடித்து தூக்கி காண்பித்தவள்,”எனக்கு இந்த அண்ணன் அண்ணனா வேணும் பா. நான் பெருசா உங்க கிட்ட எதுவுமே கேட்டத்தில்லை. ஆனா இப்போ இந்த அண்ணனை கேக்குறேன்” தன் ஆசையை மெல்ல சொல்ல, அனைவருமே அங்கே திகைத்து நின்றனர்.
அதிலும் கௌதமிற்கு சொல்லவே வேணாம். அவன் திகைப்பின் உச்சத்தை எட்டியிருந்தான்.
“அவன் இப்பவும் உனக்கு அண்ணன் தானே மா. நாங்க உன்னைய கௌதமை அண்ணான்னு கூப்பிட கூடாதுன்னு ஒருநாளும் சொன்னதில்லையே ” ஞானவேல் மகள் பேசுவது புரியாது கேட்க, காந்திமதிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.
“எனக்கு இந்த அண்ணன் சொந்த அண்ணனா வேணும். சொந்தம் கொண்டாட அண்ணனா வேணும்”மகள் சொல்லவுமே காந்திமதியின் விழிகள் கௌதமை ஏறிட, அவனோ மூச்சை இழுத்து பிடித்த நிலையில் கண்கள் கலங்க இனியாவை கண்டவாறு நின்றிருந்தான்.
“சரி… இனி எங்களுக்கு ஒரு பிள்ளை இல்லை இரண்டு பிள்ளைகள். ஏங்க, கௌதமை நம்ம வாரிசாக்க என்ன பண்ணனும்னு பாருங்க” என்றவர் கௌதமின் அருகே வந்தார்.
கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, அப்படியே தரையில் மண்டியிட்டு விட்டான்.
இங்கே நடப்பதை இரண்டு குழந்தைகளும் பார்ப்பதை உணர்ந்து பூங்கோதை இருவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
“அண்ணா…”இனியா பதறி அவனை போலவே தரையில் மண்டியிட, அவளை தாங்கி பிடித்தவன் அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தானே ஒழிய வார்த்தைகள் வெளி வர மறுத்தன. தொண்டை குழியில் வார்த்தைகள் சேர்ந்து சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.
அவன் இப்போது எந்த மாதிரியான உணர்வுகளுக்குள் சிக்கி கொண்டிருப்பான் என உணர்ந்து, அவனை ஒரு தாயாய் இருந்து அணைத்து கொண்டாள்.
அத்தனை நேரம் பிரம்மையில் இருந்தவன் வெளி வந்ததும் வாய்விட்டு அழுதான்.
அப்போதே அவனை காந்திமதி தேற்றி,அவனை சொந்த மகனாக ஏற்கவும் செய்தார்.
இவையெல்லாம் இப்போது நினைக்கும்போது கூட அவன் கண்கள் தானாய் கண்ணீர் தேங்கி வழிந்தது.
“இப்படியே அழுதுட்டு இருந்தா, உன் மாமனை பாருடான்னு தூங்கிட்டு இருக்கிற அர்ஜூனனை எழுப்பி காட்ட போறேன் பாரு” காந்திமதி மிரட்டல் விடவும் சிரித்துவிட்டான் கௌதம்.
“இப்படி சிரிச்சா எவ்வளவு நல்லா இருக்கு. போ போய் ரெஸ்ட் எடு” என மகனை அறைக்கு அனுப்பி வைத்தவர், மகளையும் மருமகனையும் பிடித்து கொண்டார்.
“அவனுக்கு எப்படி இப்படி ஆச்சி? இதை ஏன் எங்கிட்ட ரெண்டு பேரும் சொல்லலை?” சற்று கோபத்துடனே கேட்டார்.
“உங்களை கஷ்டப்படுத்த வேணாம்னு தான் சொல்லலை அத்தை…”
“எது கஷ்டம்னு சொல்றீங்க மாப்பிள்ளை? மகனுக்கு ஆக்சிடென்ட் ஆனது கூட தெரியாம இருந்திருக்கோமே அதுவா?” காந்திமதி வேதனையுடன் கேட்கவே வெற்றி மற்றும் இனியாவால் எதுவும் பேச முடியவில்லை.
“சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை அத்தை. உங்களை எல்லாம் பயமுறுத்த வேண்டாம்னு தான் சொல்லல”
“நீங்க எத்தனை காரணங்களை அடுக்கினாலும், நீங்க ரெண்டு பேரும் பண்ணது தப்பு தான். குடும்பம்னா வெறும் சந்தோஷத்துல மட்டும் பங்கெடுத்துக்குறவங்க கிடையாது. கஷ்ட நஷ்டத்துலையும் கூட இருக்கிறது தான். இனி இப்படி ஒரு தப்பை செய்யாதீங்க. போங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று சில பல அறிவுரைக்கு பின்னர் இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்.
இரண்டு நாட்கள் அங்கே இருந்த வெற்றி தாய் தந்தையை பார்த்து விட்டு ஊர் திரும்பி விட்டான்.
மகனின் நிலையை கண்டு ஒரு அன்னையாய் பெரிதும் பரிதவித்தார்.
அவனுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்தார். கௌதமை சிறு பிள்ளை போல் கவனித்து கொள்ள, அதை பார்த்த இனியா வாயை பிளந்து விட்டாள்.
“அப்பா இது உண்மையிலேயே என்னோட அம்மா தானா ப்பா?” ஆச்சரியத்துடன் வினவ,
“உன் அம்மாவே தான். கௌதம் வந்ததுக்கப்புறம் உங்க அம்மா நிறையவே மாறிட்டா ” மனைவியின் மாறுதல்களை உணர்ந்து உளமார்ந்து கூற,
தந்தையின் தோளில் சாய்ந்து கொண்ட இனியா, “கௌதம் அண்ணா உங்களுக்கே பிறந்திருக்கலாம் பா. இத்தனை வருஷம் தனியா இருந்து கஷ்டப்பட்டிருக்க மாட்டாரு” சற்று கவலை நிறைந்த குரலில் சொல்ல,
“யாருக்கு பிறந்திருந்தா என்ன, இப்போ கௌதம் என்னோட பையன் அவ்வளவு தான். அவன் இல்லாமல் நம்ம குடும்பம் முழுமையடையாது இனியா ” என்றவரை,பெருமை பொங்க பார்த்தாள் இனியா.
அடுத்து வந்த ஒரு வாரமும் கௌதம் அமைதியாய் அவன் நேரத்தை கழிக்க, அவனுக்கான தேவையை அவன் குடும்பம் செய்து கொடுத்தது.
திருச்சி வந்தது சில மாறுதல்களை அவனுக்கு புகுத்திருக்க, அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது என்னவோ அவனின் மருமகன் அர்ஜூனன் தான்.
அவனின் மழலை மொழிகள் தான் கௌதமை சிறிது சிறிதாய் மாற்றியது.
சிறிது தெளிந்த பின் தான் சிந்திக்கவே தொடங்கினான். அன்றைய நாளிலிருந்து நடந்த அனைத்தையும் மூளைக்குள் ஓடவிட்டான்.
அனைத்தையும் சிந்தித்து பார்த்தவனுக்கு ஏனோ தவராகபட்டது. அதிலும் அன்று அவளை பார்த்த போது குழந்தை இருந்த சுவடே தெரியவில்லை. என்னமோ ஒன்று நடந்திருக்கு. அது என்னவாக இருக்கும் என மண்டைக்குள் பல கேள்விகள் முளைக்க தொடங்கியது.
இவனுக்குள் கேள்விகள் சுழன்றது போல், தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி எடுத்து கொண்டிருந்தது.
கெளதம் யோசனையில் மூழ்கி இருந்த வேளையில் இனியா அவனுக்கான சூப் எடுத்துக்கொண்டு வர, அவனுக்குள் தோன்றிய கேள்வியை அவளிடம் கேட்க தொடங்கினான்.
“இனியா,நான் ஹாஸ்பிடல் இருந்த டைம்ல ரோஷி கிட்ட பேசுனியா?”
“இல்ல அண்ணா. உங்கள பத்தி கேட்கலாம்னு கூப்பிடும்போதே அவ எடுக்கல. அதுக்கப்றம் மொபைல் ஸ்விட்ச் ஆஃப்னே தான் வந்துச்சி. ஏன் இப்போ இதை கேக்குறீங்க?”
“இல்ல டா. ரோஷி ஏதோ பிரச்சனைல இருக்கா. நம்ம அங்க இருந்தவரைக்குமே பாப்புவோட ஒரு சத்தம் கூட கேக்கல அந்த வீடே அமைதியா இருந்த மாதிரி தான் இருந்துச்சி. ஏதோ தப்பா இருக்கு இனியா மா. நான் தான் யோசிக்காம செயல்பட்டுட்டேனோன்னு தோணுது” ஒருவித பயத்துடனே அவன் பேச, இனியா தமையனை சமாதானம் செய்ய முயன்றாள்.
அதற்குள் பங்கஜத்திடமிருந்து அழைப்பு வர, வேகமாய் அதனை ஏற்றான்.
“ஹலோ ஆண்டி!!!” என்று சொன்னது தான் தாமதம், எதிர்ப்புறத்திலிருந்த பங்கஜம் கத்த தொடங்கிவிட்டார்.
“நீ என்ன பண்ணி வச்சியிருக்க கௌதம்? நான் அப்பவே சொன்னேன் உன்னோட செயல் எதுவும் அந்த பொண்ணை பாதிச்சிட கூடாதுன்னு. ஆனா இப்போ என்ன நடந்திருக்கு பாரு? உன்னால அந்த பொண்ணோட பேரு கெட்டு போனது தான் மிச்சம். சண்டால அந்த பொண்ணோட வாழ்க்கையையே கொடுத்துட்டியே டா பாவி” என பொரிந்து தள்ள, கௌதமிற்கு ஒன்றும் புரியவில்லை.
“ஆண்டி என்ன ஆச்சு? ரோஷிக்கு என்ன பிரச்சினை?” ஒருவித அச்சத்துடனே கேட்க,
“உன்ன யாரு டா நடு ஜாமத்துல அந்த பொண்ணு வீட்டுக்கு போக சொன்னது. நான் தான் முன்னாடியே சொன்னேனே யாரோ அந்த பொண்ணு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு குழந்தையை தூக்கிட்டு போய்ட்டாங்கன்னு. இப்போ அவளை நீ வச்சியிருக்கிற மாதிரி அவள தப்பா பேசி ரொம்ப நோகடிச்சிருக்காங்க. உனக்கு நம்ம தெருவை பத்தி தெரியாதா என்ன? கொஞ்சமாவது அறிவு வேணாம் யாராது தனியா இருக்கிற பொண்ணு வீட்டுக்கு அந்த நேரத்துல போவாங்களா? நீ செஞ்ச ஒரு விஷயம் அந்த பொண்ணை எப்படி காட்டியிற்கு பாரு “என அவர் அடுக்க அடுக்க, இவனின் இதயத்தில் அடுத்தடுத்தாய் இடிகள் வந்து இறங்கியது.
அவர் சொன்னதை கேட்டு வேகமாய் எழுந்திட, இனியா அவனை புரியாது பார்த்திருந்தாள்.
“அண்ணா என்னாச்சி?”
கௌதமோ சிலைப்போல் நின்றான். அவனின் அணுக்கள் யாவும் செயல்பாட்டை நிறுத்தியிருந்தது. பூமியே சுழல்வது நின்றது போல் அவனின் உலகம் பங்கஜம் பேசியதில் அப்படியே நின்றுவிட்டது.
“அண்ணா… அண்ணா… என்னாச்சு? ரோக்கு என்ன? அவ நல்லா தானே னா இருக்கா?” அண்ணனை காண்கையிலே ஏதோ சரியில்லை என்று புரிந்தது.
“அண்ணா…” என்று அவன் தோளில் கை வைத்து அழைக்கவும் தான் சுயநினைவு பெற்றவன், அப்படியே அமர்ந்து விட்டான்.
ஒரு ஐந்து நிமிடம் தான் அமர்ந்திருப்பான் அதற்கு அடுத்த நிமிடமே ஒரு பையை எடுத்து அதில் துணியை அடுக்க துவங்கிவிட்டான்.
“அண்ணா என்ன பண்ற நீ? முதல அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லு?” என கௌதமை பிடித்து நிறுத்தையிலே காந்திமதியும் வந்து விட, இருவரையும் பார்த்தவர் மகனின் முகத்தில் வந்துபோகும் பாவனைகளிலே தெரிந்து கொண்டார் ஏதோ ஒன்று சரியில்லை என்று.
உள்ளே நுழைந்தவர் பக்கத்தில் இருந்த பையை பார்த்து ” எதுக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்க கெளதம்?” காந்திமதி மகனை விசாரிக்க,
“ம்மா, நான் சென்னைக்கு போறேன். அங்க என்னோட ரோஷினி ஏதோ பிரச்சனைல இருக்கா. இப்போ நான் அவக்கூட இருக்கனும் ம்மா. நான் போறேன் என்னை தடுக்காதிங்க” சொல்லி தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
“எப்படி போவ? சென்னைல ரெட் அலெர்ட் போட்டு இருக்கிறது தெரியாதா? அங்க அப்படி ஒரு மழை பெய்யும்போது உன்னால எப்படி போக முடியும் கெளதம்?”
“நான் எப்படியாவது போய்க்குறேன். என்னை தடுக்காதிங்க ப்ளீஸ்” என்றவனின் குரலில் அத்தனை தவிப்பு, வலி. எதையோ பெரிதாய் இழக்க போகிற மாதிரியான பாவனை. காந்திமதியால் மகனை அப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை.
என்ன நினைத்தாரோ மகனை அதன்பின் தடுக்கவில்லை. அமைதியாய் அவனுக்கான வழியை விட்டார். இனியா தான் அன்னையின் முடிவிற்கு எதிராய் நிற்க, அவளை எப்படியோ சரி செய்து சென்னை கிளம்பிவிட்டான் கெளதம்.
எப்படியோ சென்னை வந்தவன், ரோஷினியை அப்படியொரு நிலையில் காண்கையில் அவன் உயிரே அவனை விட்டு பிரிந்தது போலான வலி.
அவளை கண்ட அந்த நொடி, அவள் மீது நான் வைத்தது உண்மையான நேசம் தானா என்று சிந்திக்கும் அளவிற்கு அவளின் நிலை அங்கு மோசமாய் இருந்தது.