மயங்கினேன்.! கிறங்கினேன்.!

eiS8VZ63923-6fcd10f9

மயங்கினேன்.! கிறங்கினேன்.!

அத்தியாயம் 06

 

தாயும் தந்தையும் ஊருக்கு சென்றதும் மனம் சோர்ந்து போனது அவனுக்கு.

ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக் குறியாக்குகிறோம் என்று தெரியாமலே , அவனின் வாழ்வை பற்றி மட்டுமே சிந்திக்கலானான் வெற்றிமாறன்.

அவனுக்கு எப்படியாவது இசையோடு சேரவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க , அவளுக்கான கடிதத்தை எழுத தொடங்கினான்.

அதில் அவன் தெரிவித்திருவந்தது என்னவோ ,’ உன்னை சந்திக்கும் நாள் வந்து விட்டது பெண்ணே. வேகமாக ஒரு நாளை குறித்து சொல் .நம் சந்திப்பிற்க்காக காத்திருக்கிறேன்.. இட்ஸ் வெரி அர்ஜென்ட் இசை ‘என்றது தான்.

அதனை கொண்டு போய் ஸ்பீடு போஸ்ட் செய்தவன் , தன் வேலையில் கவனத்தை செலுத்தி இருந்தான்.

அப்போது அவனது கேபினுக்கு வந்த கௌதம் ,” என்ன மச்சி , ஒரே காதல் மூட் தான் போலயே ” என்று கிண்டல் செய்ய

“ஞே” என விழித்தான் வெற்றி..

” என்ன டா உளறி கிட்டு இருக்க..? நான் என்ன காதல் மோட்ல இருக்கேன் ” என புரியாமல் வினவ

” என்ன மச்சி , இப்படி தயிர் சாதம் மாதிரி பேசுற..?” என கலாய்க்க

கௌதம் பேசுவது புரியாமல் அவனை பார்த்து முறைக்க தொடங்கினான் .

” மச்சி ! எனக்கு என்னவோ உனக்கு ஒரு டெஸ்ட் எடுத்து பார்க்கணும்னு தோணுது டா ” என சீறியசாய் சொல்ல

” என்ன டெஸ்ட்.? அப்புறம் எதுக்கு டெஸ்ட் டா .?” என புரியாமல் அவன் வினவ

” அதான் மச்சான் , நீ அதுக்கெல்லாம் செட்டாவியான்னு பார்க்க தான். இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு நீ நடந்துக்கிறதை பார்த்தா இந்த டெஸ்ட் தேவையோன்னு தோணுது டா ” என படு சீரியசாக கௌதம் சொன்னான்.

அதனை கேட்ட வெற்றிக்கு கோவம் பற்றிக் கொண்டு வந்தது.

” கௌதம் ” என பல்லிடுக்கில் அவன் முறைத்தவாறே சொல்ல

‘ எதுக்கு இப்போ பார்ட்டி தேவையில்லாம முறைக்கிது ‘ என மனதோடு நினைத்தவன் அதை கேட்கவும் செய்தான்.

” எதுக்கு மச்சான் , இப்படி ஸ்ட்ராபெரி மாதிரி முகமெல்லாம் சிவக்குது. இதெல்லாம் நீ அந்த பொண்ணை பார்த்து பண்ணா கூட சரி , ஆனா நீ என்ன பார்த்து வெக்கபடுறீயே . இது சரியில்லையே ” என்று சொல்லி விட்டு தீவிர யோசனையில் மூழ்கிபோனான்.

” சனியன் , எனக்குன்னு வந்துருக்கான் பாரு ” என்று முணங்கிய வெற்றி , ” அறிவுக்கெட்டவனே  ” என அவன் முதுகில் ஒன்று போட்டான்.

” இப்போ எதுக்கு டா , என்னைய அடிச்ச..?”

” ஆசைக்கு தான் “

“ஞே” என கௌதம் விழித்து ‘கா’ விட்டான் கோபம் என்பதை காட்ட

அவனின் செயலில் கோபம் மறைந்து சிரித்து விட்டான் வெற்றிமாறன்.

அதனை கண்ட அப்போது தான் கௌதமிற்கு நிம்மதியாக இருந்தது.

அவனும் தான் சில காலமாக நண்பனை பார்க்கிறானே , ஏதோ யோசனையிலும் கவலையிலும் அவன் முகம் வாடி இருந்தது. அதை மாற்ற தான் இப்படி பேசினான்.

” இப்பவாது சிரிச்சியே டா . உன்ன சிரிக்க வைக்க நான் என்ன எல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு ” என்று முதுகை தேய்க்க

தன்னை அவன் கவனித்திருக்கான் என்பதே வெற்றிக்கு ஏனோ சந்தோஷமாக தான் இருந்தது.

சென்னை வந்து இங்கே சேர்ந்த புதிதில் அவனுக்கு தோல் கொடுத்து உதவி செய்த நண்பன் கௌதம். அவனிடம் மட்டுமே அவன் மனம் திறந்து பேசுவது எல்லாம் .‌ அவன் பேசாத ஒரு விடயம் என்றால் அது இசை ! அவனின் இசையை பற்றியது மட்டுமே..

மற்றவர் இடத்தில் நட்பாக பழகினாலும் , ஒரு எல்லைக்குள்ளே அனைவரையும் நிறுத்தி வைத்து விடுவான் வெற்றிமாறன்.

அவனின் பேச்சிற்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தவனுக்கு , இசையை பற்றிய எண்ணம் வந்தது.

‘அவளிடம் அந்த லெட்டர் எப்போது செல்லுமோ ‘ என்று யோசித்தான்.

” மச்சி , நீ சந்தோஷமா தான் இருக்கியா..??” என்று நண்பனை பார்த்து கேட்க

” ஹான் டா ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் ” என்று வார்த்தையால் சொல்லி அந்த இடத்தை விட்டு நாசுக்காக நகர்ந்து விட்டான் வெற்றி.

கௌதமுக்கு ஏதோ தவறாக இருப்பது போல் தோன்ற , அது என்னவென்று தெரியாமல் குழம்பி போனான்.

இரவு ஷோவை முடித்து விட்டு வந்தவனுக்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.

அவனை இசை தன் எழுத்துக்களால் காதலால் மயக்கி கிறங்கி நிற்க வைத்திருக்க , அவனோ கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மேல் பைத்தியமாகி கொண்டிருந்தான்.

பார்த்து வர காதலிலே , சிலர் புரிதலின்றி பிரிந்து செல்கின்றனர்.சிலர் இது தான் வாழ்க்கை என்று கூட நிதர்சனம் புரிந்து செல்வது உண்டு. ஆனால் இதில் அவள் பெயரையும் அவளது எழுத்துக்களையும் கொண்டு மட்டுமே அவளின் மேல் உயிரையே வைத்து காதல் செய்கிறான் காளையவன்.

அவனின் நிலை அறியாத பேதையவளோ , எப்போதும்  நாள்ளை கடத்துவது போல் கடத்தி சென்றாள்.

அவளுக்கு வெற்றி என்றவனின் ஞாபகம் இருந்ததோ.? இல்லையோ.? ஆனால் வெற்றி அவள் நினைப்பாவே அழைந்து திரிந்தான். அவனின் சுயம் சிறிது சிறிதாக இசை என்ற பெண்ணால் தொலைய தொடங்கியது.

முதலில் அவள் செய்த வேலையை கடந்த ஒரு வாரமாக அவன் செய்து கொண்டிருந்தான்.

அதாவது ஏதாவது தன் பெயரில் போஸ்ட் வந்திருக்கிறதா என்று தினம் காலையிலும் இரவிலும் செக்யூரிட்டியிடம் கேட்டு கொண்டிருக்கிறான்.

பதினைந்து நாட்கள் என்ற நிலைமாறி , ஏழு நாட்கள்  குறைந்து வெறும் எட்டு நாட்களே மீதம் இருந்தது.

அவனது தவிப்பு அவளுக்கு புரிந்ததோ என்னவோ , அவளே அன்றைய நாளின் இறுதியில் அவனுக்கு அழைத்திருந்தாள்.

மாடியில் நின்று நிலவொளியை இரசித்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளுக்காக அவன் வைத்திருந்த ப்ரத்யோக பாட்டு பாடியது..

பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென

தென்றலாக நீ
வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்

அந்த பாடலை கேட்டவுடன் , தாறுமாறாக துடித்த இதயத்தோடே அதை கைகள் நடுங்க எடுத்தான் வெற்றிமாறன்.

அவனுக்கு ஏனோ அவளது அழைப்பை கண்டதும் அப்படி ஒரு சந்தோஷம் . அதை சொல்ல வார்த்தைகள் இல்லை அவனுக்கு.

அவனால் பேச கூட முடியவில்லை , ஏனோ மூச்சு வாங்கியது. அவள் அழைக்க மாட்டாளா என்று பல நாள் தூங்கா இரவு போல் கண்விழித்து போனையே வெறித்து பார்த்து கொண்டிருப்பான். இப்போது அவளாக அழைத்து விட்டாள் , அந்த சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.

“மாறா…” என்று மென்மையான குரலில் இசை அவனை அழைக்க

வேக வேகமாக துடித்த இதயம் வெளியே வந்திடும் போல் இருந்தது வெற்றிக்கு.

“மாறா…” என்று மீண்டும் அதே மென்மையோடு அழைத்தாள் அவனது இசை.

அவனும் பேச முயற்சித்து கொண்டு தான் இருக்கிறான். ஆனால் வார்த்தைகள் சந்தோஷத்தில் காற்றோடு காற்றாக கலந்து அவளிடம் சேர சென்றது.

” மாறா.! என்ன ஆச்சி , ஏன் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க..?” என்ற கேள்வியில் பாசமும் பதற்றமும் நிறைந்திருந்தது.

” அதெல்லாம் ஒன்னும் இல்லை டா . ஐம் குட் ” என்றான் சிரமப்பட்டு

” எப்படி இருக்கீங்க..??”

” நீ இல்லாம கொஞ்சம் கவலையா தான் இருக்கேன்.  ஆனா, இப்போ ரொம்ப ஹாப்பி இந்த வெற்றி ” என்றான் உள்ளார்ந்த குரலில்…

அதில் அவளது கண்ணங்கள் இரண்டும் செம்மையுற்றது. அதனை கொண்டு அவளது இதழ் மெதுவாக விரித்து ” மாறா” என்றது.

அதிலே அவளின் செயல் இப்போது எப்படி இருக்கும் என்று யூகித்து விட்டான்.

” இப்படி , தூரமா இருந்து வெட்கப்படுறியே டா. இதை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கலையே ” என்று காதலோடு சோகமாக சொல்வது போல் சொன்னான்.

” தூரமா இருக்கிறது தான் இப்போதைக்கு நல்லது மாறா..” என்றாள் மெல்லிய குரலில்..

“நான் உனக்கு ஒரு லெட்டர் அனுப்பி இருந்தேனே நீ பார்க்கலையா என்ன ” என்று கவலையோடு சேர்ந்து ஏக்கத்தோடு கேட்டான்.

” இ..ல்…ல இன்..னும் பா..ர்க்கலை. கொஞ்சம் வேலை அதான்  ” என தட்டு தடுமாறி சொன்னவளுக்கு கண்கள் மேசை மீது பிரிக்கப் பட்டிருந்த லெட்டரை வெறித்தது.

“சரி பரவால்லை . அதை நானே சொல்லிடுறேன் “

“ம்ம்ம் சொல்லுங்க ” என்றவளுக்கு பதற்றமாக இருந்தது .

” நான் உன்னைய பார்க்கனும் இசை. நான் ஒரு பெரிய பிரச்சனைல சிக்க இருக்கேன். அதுல இருந்து தப்பிக்க எனக்கு உன்னோட காதல் தேவைப்படுது டா . எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று தெரிந்திருந்தால் , நான் அப்படி பண்ணி இருக்கவே மாட்டேன் ” என்று சொன்னவனின் குரல் குற்றவுணர்ச்சியில் கரகரத்தது.

அவன் பேசி முடித்த பிறகு அவள் ஏதாவது பேசுவால் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.

“இசை.. நாம மீட் பண்ணலாம் இல்லையா..??” என்று ஏக்கத்தோடு கேட்டான்.

” அது.. அது வந்து.. எப்படி சொல்.. சொல்றது.. நான்.. இங்க.. எனக்கு..மா..ப்..” என்று திக்கியவள் நிறுத்தி ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து வெளியிட்டவள் ,

” பாக்கலாம் மாறா ” என்றாள் ஏதோ முடிவெடுத்தவள் போல்..

” ஏன் இசை ஏதோ பயந்தது போல பேசுற.? நாம இப்போ மீட் பண்றதுல ஏதாவது பிரச்சனை இருக்கா என்ன..?” என‌ காதலன் காதலியின் பேச்சில் கவலையுற்று கேட்க

“பச் , அதெல்லாம் இல்ல நாம மீட் பண்ணலாம் ” என்று தேதியை பார்த்தாள்.

“ஃபெப் 12 மீட் பண்ணலாம் ” என்க

“அதுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே ” என்று அவசரமாக சொன்னான்.

” அன்னைக்கு தான் என்னால மீட் பண்ண வரமுடியும் மாறா. ப்ளிஸ் ட்ரை டூ அன்டர்ஸ்டேன்ட் “என்றவள்

” சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வைக்கிறேன் ” என்று அவன் பதிலை கூட எதிர்பாராமல் வைத்து விட்டாள் இசை..

அவளின் இச்செயலில் குழம்பி போனான் காளையவன்.

என்றாவது ஒரு நாள் அவள் அழைப்பால் , அதுவும் ஒரே எண்ணில் இருந்து அழைக்க மாட்டாள் . எப்போதாவது அவளது எண்ணில் இருந்து அழைப்பு விடுவாள் இசை. அதனாலே அவளுக்காக அந்த பாடலை வைத்திருந்தான் வெற்றிமாறன்.

அவள் அழைக்கும் போதெல்லாம் , அவள் ‘ வைக்கட்டுமா ‘ என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்ட பின்பு தான் வைக்கவே செய்வாள்.‌ஆனால் இன்று , ‘ வைக்கிறேன் ‘ என்று சொல்லி வைத்து விட்டாள்.

அவனது மூலை இதனை யோசிக்க முயன்றாலும் , அதற்கு முட்டுக்கட்டையாக மனசு வந்து அந்த யோசனையை தடுத்திருந்தது.

அவளின் குரலில் கிறங்கிப்போனவன் , எதனை பற்றியும் சிந்திக்காமல் அவளின் நினைவுகளில் உறங்கி போனான்.

அடுத்த நாளில் இருந்தே , எப்படி அவளிடம் தன்னை அறிமுகம் செய்யவேண்டும் , எவ்வாறு அவளிடம் பேச வேண்டும் என்று பயிற்சி எடுக்க தொடங்கி இருந்தான்.

அதுமட்டுமின்றி கூகுள் ஆண்டவரையும் தொல்லை செய்து, தன்னை தானே அவளுக்காக மாற்ற தொடங்கியிருந்தான் வெற்றிமாறன்.

அடுத்து வந்த ஐந்து நாட்கள் சென்றதே தெரியாமல் சென்றது அவனுக்கு.‌ அடுத்த நாளுக்காக ஒரு எதிர்ப்பார்ப்போடு காத்திருக்க தொடங்கினான் வெற்றி.

அவனின் முகம் சந்தோஷத்தில் மின்னியதை கண்ட கௌதமிற்க்கு நிம்மதியாக இருந்தது.

‘ஏதோ சரியில்லையோ ‘என்று நினைத்தவனுக்கு நண்பனின் இந்த புன்னகை முகம் ‘அதெல்லாம் இல்லை’ என்று எடுத்துக் காட்டியது.

ஆனால் அடுத்தநாள் இந்த புன்னகை முகம் மறைந்து , ஒரு விதமான கடின தன்மை கொண்டிருக்க போகிறது என்று அறியாமல் போனான் கௌதம்..

__

அடுத்த நாள் அழகாகவும் பலத்திருப்பங்களையும் கொண்டு சூரியன் அதன் உதயத்தை தொடுத்திருந்தது.

விடியற்காலையில் விழித்த வெற்றிக்கு தன் காதலியை காணப் போகும் ஆவல் பெருகி இருந்தது.

அதன் வெளிப்பாட்டாக முகத்தில் அக்மார்க் புன்னகை குடிக்கொண்டிருந்தது.

காலையில் எழுந்ததும் , அவன் சுறுசுறுப்பாக இருந்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்தவன் அவளுக்காக பார்த்து பார்த்து கிளம்பத் தொடங்கினான் வெற்றி.

வெற்றி , இந்த நான்கு வருடத்தில் ஒரு நாளும் தன்னை யாராவது இரசிக்க வேண்டும் என்றெண்ணி எல்லாம் கிளம்பியது இல்லை. காலையில் எழுந்திருப்பதே நேரம் தாமதமாக தான் இருக்கும் .இதில்  விரைந்து எழுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வேக வேகமாக ஏனோ தானோ என்று சமையல் செய்து விட்டு எஃவமிற்கு செல்ல ஆயத்தமாவான்.

இன்று தான் தன்னை அவள் இரசிக்க வேண்டும் என்றெண்ணி அவளுக்காக பார்த்து பார்த்து தயாராகினான்.

சிறிது நேரத்திலேயே கிளம்பியவன், ஆங்காங்கே குப்பை போல் கிடந்த அவனது சட்டைகள் யாவும் அவனை பாவமாக பார்த்து வைத்தது.

அதற்கும் மனசாட்சி என்பது ஒன்று இருந்திருந்தால் ,’ ஒழுங்கா பீரோவில் இருந்த எங்களை இப்படி செய்துவிட்டாயே ‘ என்று அவனை துவசம் செய்திருக்கிருக்கும். நல்ல வேலை அவன் தப்பித்து விட்டான்.

ஐந்தரை போல் கிளம்பி அவனது எஃவம் ஸ்டேஷனுக்கு சென்றவன் , அன்றைய உற்சாகத்துடன் காலை ஷோவை தொடங்கி வைத்தான்.

எப்போதும் பல தரப்பட்ட மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்தவன் , இன்றும் அதேபோல் என்பதை விட ஒரு படி மேலவே அவனது ஷோ இன்று நன்றாக சென்றது..

காலை ஏழு மணிப்போல் ஷோ முடித்து வந்தவனின் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது.

” பாருடா , இன்னைக்கு மச்சான் முகத்துல தான் இந்த சென்னையோட மொத்தம் வெளிச்சமும் இருக்குது போலயே ” என்று தன் நண்பனை கலாய்க்க

” கலாய்ச்சுக்க கலாய்ச்சுக்க , இன்னைக்கு உனக்கு டஃப் கொடுக்க போறதும் இல்லை, அடிக்கப் போறதும் இல்லை மாப்பி ” என்றவன் சிரித்த முகத்தோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

நேரம் செல்ல செல்ல எப்போது டா மாலை ஆகும் என்று இருந்தது.

கௌதமோடு இருந்தாலும் ,அவன் அவனது உலகில் தான் சுற்றிக் கொண்டு இருந்தான்.

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ,’ பிசிக்கலி ப்ரசண்ட் மெண்டலி ஆப்சண்ட் ‘.

மூன்று மணிப்போல் கிளம்பியவன் , கொதமிடம் வந்து ” மச்சி நான் கொஞ்சம் வெளிய பொய்ட்டு வரேன்.நீ கொஞ்சம் அதுவரைக்கும் பார்த்துக்கோ ” என்று சொல்லி விட்டு சந்தோஷமாக கிளம்பினான்.

அவளுக்காகவே பார்த்து பார்த்து வாங்கிய கிஃப்ட்டோட அவளை பார்க்க கிளம்பி சென்றான் வெற்றிமாறன்.

அவளை பார்ப்பதற்காக ஒரு பூங்காவிற்கு சென்று அமர்ந்தவன் , அவள் வரும் நேரத்திற்க்காக காத்திருக்க தொடங்கினான்.

அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு நேரங்கள் ஏனோ யுகமாய் கடக்க தொடங்கியது.

அவள் எப்படி இருப்பாள்.? அழகாய் இருப்பாளா , இல்லை அடுத்தவர்களை கவரா வண்ணம் இருப்பாளா.? என அவன் எதை பற்றியும் சிந்திக்கவில்லை.

அவள் எப்படி இருந்தாலும் , அவனை பொறுத்தவரை அது அவனின் இசை… இசைமாறன் அவ்வளவு தான் என தன் பெயரோடு அவள் பெயரையும் இணைத்து கொண்டான்.

மூன்றைக்கே வந்தவனுக்கு ஏனோ நேரங்கள் கடக்க மறுப்பது போல் தோன்றியது.

அவளிடம் எப்படியாவது பேசி , தன்னுடனே அழைத்து செல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான் வெற்றிமாறன்.

‘3:45’

‘3:50’

‘3:59’ என நேரத்தை பார்ப்பதும் , அவள் வசிக்கும் இதயத்தை நீவு வதுமாக இருந்தான்.

‘4:00’ மணிக்கு அவன் வைத்திருந்த அலாரம் அடிக்க, அதை அணைத்தவனுக்கு பார்வை எங்கும் சுழலப்பட்டது.

நான்கை கடந்து மணி செல்லவும் , ப்ரகாசமாக இருந்த முகம் சிறிது சிறிதாக சுருங்க தொடங்கிய நேரம் பின்னாடியில் இருந்து ” மாறா…” என்ற அழைப்பு வரவும் இதயம் தாறுமாறாக துடித்தது.

Leave a Reply

error: Content is protected !!