மெல்லினம்…மேலினம்…04

eiOK3PH501

மெல்லினம்…மேலினம்…04

 

மெல்லினமல்ல மேலினம் 

மெல்லினம் 04

ரோஜாவின் வாழ்வில் எது மாறினாலும், பேச்சியின் பேச்சுகளுக்கு மட்டும் மாற்றம் என்பதே இல்லை. அதிலும் எப்போது ஊர் தலைவரின் ஆதரவு அவளுக்கு கிடைத்ததோ, அப்போதிலிருந்து மேலும் அவளை வதைக்க செய்தார்.

 

‘இந்த சனியன் இருக்கும் வரை நமக்கு ஆபத்து தான்’ நினைத்தவர் அவளை துரத்திவிட முடிவெடுத்தார். அதிலும் இங்கு திரும்பி வரமுடியாத அளவிற்கு இருக்கவேண்டுமென நினைக்க, அப்போது தோன்றியது தான் இந்த திருமணம்.

 

சரியான நேரத்திற்காக காத்திருந்தவர், கனகவேல் வெளியூர் சென்றிருந்த நேரமாய் பார்த்து தராகரிடம் சொல்லி ரோஜாவிற்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தார்.

 

அதிலே கிடைத்த மாப்பிள்ளை தான் கோபால்.

 

மூன்று தங்கைகளுக்கு திருமணம் முடிப்பதற்குள் அவருக்கு திருமண வயது கடந்து விட, இருந்தாலும் பார்க்கலாம் என்று தான் ஆரம்பித்தனர்.

 

கோபாலுக்கு ரோஜாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. தனக்கு திருமணமே நடக்காதோ என்று சோகத்தில் இருந்தவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது.

 

பேச்சு இவர் தான் மாப்பிள்ளை என மூவருக்கும் அறிமுகப்படுத்த, அதிர்ச்சியாகிவிட்டனர்.

 

“அத்தை! ரோஜா சின்ன புள்ள அவளுக்கு போய், அவளை விட இரண்டு மடங்கு வயசுல பெரியவரா இருக்கிறவனை மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்திருக்கீங்க. ஏன் இப்படி செய்றீங்க? அப்படி என்ன உங்களுக்கு ரோசா பண்ணிட்டா?” ஆத்திரத்துடன் கூடிய ஆதங்கமாக கேட்க,

 

“இது என்னங்கடி அந்நியாயமா இருக்கு. எனக்கும் என் புருஷனுக்கும் கூட வயசு வித்தியாசம் அதிகம்.‌ஏன் உனக்கும் எம் மவனுக்கும் கூட தான் வயசு வித்தியாசம் இருக்கு. இதெல்லாம் காரணமா சொல்லி ஒரு நல்ல பையனை விட சொல்லுறியா நீ” என கத்தி விட்டிருந்தார் பேச்சி.

 

அனைத்திற்கும் அமைதியாய் இருந்தாள் ரோஜா. அவளுக்கு வாழும் விருப்பம் என்பதே இல்லாமல் போனது.

 

உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருந்தாள் அவள். தொலைக்க செய்து கொண்டிருந்தார் பேச்சி.

 

மூவரும் மாறி மாறி அவரிடம் பேசிப் பார்க்க அவரோ விடாப்பிடியாக நின்று திருமணம் வரைக்கும் கொண்டு வந்திருந்தார்.

 

நாளை திருமணம்… எளிமையாக அவர்களின் குல தெய்வ கோவிலில் வைத்திருந்தனர்.

 

*****

 

சென்னையிலோ இரண்டு வருட எல்.எல்.பி படிப்பை முடித்தவன், NET (National Eligibility Test) தேர்வெழுதி ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலையில் சேர்ந்தான்.

 

இப்போது அங்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. முதல் நாள் இங்கே வேலைக்கு வரும்போது சிறிது கஷ்டமாக தான் இருந்தது.

 

அவன் ஆசை ஆசையாக எடுத்து படித்தது. தான் ஒரு பெரிய வக்கீலாக வர வேண்டுமென கனவோடு நுழைந்தவன், இப்போது பல வக்கீல்களை உருவாக்கும் பொறுப்பில் இருக்கிறான்.

 

இதனையும் இரசித்து செய்ய எண்ணி, அதனை கடைபிடித்தும் வருகிறான்.

 

அன்று ஞாயிறாக இருக்க, டீக்கடையில் அமர்ந்து “சேட்டா, ஒரு சாய். லைட் ஷுகர்” என அமர்ந்தான் சிம்மன்.

 

அவனுடன்,”எனக்கு பால் மாஸ்டர். சக்கரை கொஞ்சம் தூக்கலா” சொல்லி அமர்ந்தான் அவனுடன் வேலை செய்யும் ஆனந்த்.

 

“உனக்கு சீக்கிரமே சக்கரை வியாதி வரப்போது பார்த்திட்டே இரு” என ஆவி பறக்க வந்த டீயின் வாசத்தை சுவாசித்தான்.

 

“உன்ன மாதிரி பேருக்கு சக்கரை போட்டு குடிக்க சொல்றியா என்ன, அதெல்லாம் நம்மால முடியாது பா. இந்தா அந்த தடிமாடு கூட்டத்துக்கு முன்னாடி க்ளாஸ் எடுக்கணும்னா இந்த சக்கரை வேணும் டா” என்றான் ஆனந்த்.

 

“அப்படி என்னத்தை பண்ணிட்டானுங்க நம்ம பசங்க?” கேட்டப்படி அங்கே வந்தமர்ந்தான் சரவணன்.

 

“என்ன சார் இந்த பக்கம் காத்து வீசுது?”கிண்டலாய் ஆனந்த் கேட்க,

 

“ஏன் கேக்க மாட்ட, நீங்க நிம்மதியா ஏசி காத்துல உட்கார்ந்து வேலை பார்க்குறீங்க. நான் அப்படியா தெரு தெருவா அழையிறேன் டா”என்றவாறே நேந்திரம் பழ பஜ்ஜியை சுவைக்கலானான்.

 

“உண்மையை சொல்லு, இப்போ எங்களை பார்க்க வந்தியா இல்ல இந்த பஜ்ஜியை முக்கிட்டு போலாம்னு வந்தியா மேன்” கேட்டு முறைக்க,

 

“எப்படி மச்சான் இப்படி சரியா கண்டு பிடிச்ச? இதுக்கு தான் உன்ன லாயர் ஆக சொன்னதே. உன்ன மாதிரி ஆளு தான் மச்சான் நீதிமன்றத்துக்கு தேவை படுறாங்க” சிரிக்காமல் அவன் சொல்ல, நண்பனை மொத்தி எடுத்தான் ஆனந்த்.

 

“வக்கீலு! வாய் ரொம்ப நீளுது மேன் உனக்கு”

 

“அது தான் மச்சான் இந்த வேலைக்கே முக்கியம்”என, இருவரும் மாறி மாறி நக்கலடித்து கொண்டிருக்க, சிம்மன் தீவிர யோசனையில் இருந்தான்.

 

“மிஸ்டர்.நரசிம்மன்”

 

“மிஸ்டர்.நரசிம்மன்”

 

“டேய் சிம்மா..!!!” என சரவணன் கத்தியும் பார்த்துவிட்டான். எங்கே சிம்மன் அசைந்தபாடில்லை.

 

“என்ன டா ஆச்சி இவனுக்கு?” சரவணன் ஆனந்திடம் கேட்க,

 

“அதை ஏன் மச்சான் கேக்குற, ஒரு பத்து பதினைந்து நாளாவே சார் இப்படி தான். பிசிக்கலா ப்ரசண்டு பட் மெண்டலி சார் அப்செண்ட்” ஆனந்த் கூறவும், துணுக்குற்றான்.

 

“இவன் இப்பவும் அப்படியே தான் இருக்கானா டா?” வேதனையுடன் சரவணன் கேட்க, ஆமாம் என்றான்.

 

“எனக்கு ஒன்னு மட்டும் புரியல டா. இவன் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிறான்? நானும் இவனை நாலு வருஷமா பார்க்கிறேன். இவனோடு சிரிப்புல உயிர்ப்பே இருக்காது. இவன் ஏன் இப்படி இருக்கானும் எனக்கு தெரியல. எதையும் வாயை திறந்து சொல்றதில்லை”மனம் வருந்தி ஆனந்த் பேச, 

 

“விடு மச்சான்…” என்றான்.

 

ஆனந்த் சிம்மனுடன் பிஜி ஒன்றாக படித்தவன், அவனுடனே கல்லூரியிலும் வேலைக்கு சேர்ந்து விட்டான்.

 

சிம்மனுடன் பழகிய பின்பு, சரவணனுடனா நட்பு கிடைத்தது ஆனந்திற்கு.

 

அப்போதிலிருந்து மூவரும் நெருங்கிய நண்பர்களாகினர்.

 

சரவணனும் ஆனந்தும் உலுக்கிய உலுக்கலில் சுயம் பெற்றான் சிம்மன்.

 

“வா மச்சான்! எப்போ வந்த டா?” சரவணனை கண்டு கேட்க, அவனை முறைத்தான் சரவணன்.

 

“எதுக்கு இப்படி முறைக்கிற?”

 

“அப்புறம் முறைக்காம கொஞ்ச சொல்றியா மானே தேனேன்னு. நான் வந்தே அரைமணி நேரம் ஆச்சி எரும” சூடாக வரவும்,

 

“சரி, சில்லுன்னு ஒரு பாதாம் பால் குடி. நீ பார்க்க சூடா தெரியுற.நானே வாங்கி தரேன்” சொல்ல, மேலும் முறைத்தான்.

 

அதற்குள் ஆனந்த் இரண்டு வடையை உள்ளுக்குள் தள்ளிவிட்டான்.

 

“சரி சொல்லு, இப்போ எதுக்கு சார் கப்பல் கவுந்தது போல் உட்கார்ந்திருக்கீங்க?”

 

“ஊர்ல இருந்து எந்த செய்தியும் வரல மச்சான். அங்க அவங்க நல்லா தானே இருப்பாங்க?” ஒரு வித பதற்றத்துடனே கேட்டான்.

 

“நல்லா தான் இருப்பாங்க மச்சான். எதுக்கு உனக்கு இத்தனை டென்ஷன்?”

 

“இல்ல மச்சான்‌ அவங்க பாட்டி ஒருமாதிரி டா‌‌. சாரும் வேற இப்போ ஊர்ல இல்ல. அவங்க ரோஜாவை என்ன வேணும்னாலும் செய்ய வாய்ப்பிருக்கு டா” 

 

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது டா. கவலைப்படாத” என நண்பனை சமாதானம் செய்து விட்டு, அவர்களுடன் அன்றைய தினத்தை செலவழித்து அவன் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டான் சரவணன்.

 

சிம்மனிற்கு தான் ஒரு வித உறுத்தல் மனதோரம் இருந்து கொண்டே இருந்தது.

 

அதற்கு தகுந்தாற்போல் அன்று இரவே அவனுக்கு ஃபோன் வந்தது.

 

அடுத்தநாளுக்கு எடுக்கப்போகும் வகுப்பிற்கான நோட்ஸ் எடுத்து கொண்டிருந்த நேரமாய் பார்த்து கனகவேலிடமிருந்து அழைப்பு வர,மனம் துணுக்குற்றது.

 

ஆம், கனகவேல் தான் சிம்மனின் நம்பகமான ஆள். அவரை கொண்டு அங்கு நடக்கிற அனைத்தையும் தெரிந்து கொண்டு உதவி செய்கிறான்.

 

மணியை பார்க்க, அதுவோ பத்தரை என காட்டியது.

 

அழைப்பை எடுத்தவன்,” சொல்லுங்க சார். என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்கீங்க? அங்க ஏதும் பிரச்சனை இல்லையே?” கேள்விகள் அடுக்கினான்.

 

“பிரச்சனை தான் தம்பி…”

 

“என்ன ஆச்சி சார்?” இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான். அவனின் குரலில் சிறு மாற்றங்கள் கூட இருந்தது.

 

“அந்த அம்மா பேச்சி, ரோசாக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு” சொல்லவும் அவன் உடல் இறுகியது. விறைத்தது.ஏன்னென்றே தெரியாத கோபம் அவனுள் கனன்றது.

 

“என்ன சார் சொல்றீங்க?”

 

“ஆமா தம்பி நாளைக்கு காலையில அவங்களோட குல தெய்வ கோவில கல்யாணத்தை வச்சிருக்காங்க” என்றதும் தான் தாமதம்,

 

“சரி, நான் பார்த்துக்கிறேன்” என வைத்துவிட்டான்‌.

 

இருபது வயது என்பது அவளிற்கு திருமண வயது தான் இருந்தாலும், அவள் சிறு பெண் போலவே. அவளுக்கு எப்படி இவர்கள் திருமணம் செய்து வைக்கலாம் என கோவம் கொண்டான்.

 

உடனே கிளம்ப ஆயத்தமாகினான் சிம்மன். ஆனந்தனிடம் இதனை பற்றி மேலோட்டமாய் சொல்லி கிளம்ப எத்தனிக்க, அவனின் நிதானமின்னை ஆனந்தை யோசிக்க செய்து அவனுடன் கிளம்பவும் வைத்தது.

 

போகும் வழியில் சரவணனிற்கு விவரம் கிடத்தப்பட, சிம்மனை பார்த்துக்கொள்ள சொன்னான்.

 

“சிம்மனோட பலவீனம் அந்த குடும்பம் மச்சான். அதிலும் முக்கியமானவங்க ரோஜா. அவங்களுக்காக அவன் என்ன வேணாலும் செய்யலாம். நீ கொஞ்சம் கவனமா இரு”சொல்லி வைத்திருக்க, சிம்மனை தான் நோட்டம் விட்டான் ஆனந்த்.

 

எப்போதும் காணும் சிம்மன் இது இல்லையோ என்று தோன்றியது.

 

அவனின் முகத்தில் அப்படியொரு இறுக்கம். மென்மை குடிக்கொண்டிருக்கும் முகத்தில் இப்போது வன்மை நிறைந்து காணப்பட்டது.

 

அவனின் கோவம் அவன் வண்டியை ஓட்டும் வேகத்திலும் விதத்திலுமே தெரிய, ஆனந்த் தான் நாளை தான் உயிரோடு இருப்போமா என்று 

அஞ்சினான்.

 

“மச்சான் கொஞ்சம் பொறுமையா போ டா. இத்தனை வேகம் ஆகாது”என்க,

 

எங்கே அவன் காதினில் அது விழுந்தாள் தானே. அவனின் காதிற்குள் ரிங்காரமாய் கனகவேல் சொன்னது தான் ஓடியது.

 

இந்த சிறு வயதில் அந்த பெண் படும் கஷ்டத்தை காதினில் கேட்பவனுக்கு கோவம் கட்டுக்கடங்காமல் வரும்.

 

ஆனாலும் தன்னை கட்டுபடுத்தி கொல்பவனுக்கு, இந்த திருமண செய்தி அவனுள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பி இருந்தது.

 

பேச்சியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர் இப்போது இங்கே இருந்தால் அவரை கொன்றுவிடும் ஆவேசம் அவனுள்.

 

அவர் சொன்னால் அவள் ஏன் இந்த திருமணத்திற்கு சம்மதம் கூறினாள்? அதிலும் அவள் அன்னை மாமா எல்லாம் இதற்கு எப்படி சம்மதம் கூறினார்கள்? என அவர்கள் மீதும் கோவம் வந்தது. மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை.

 

சந்திரனோ மேகங்களுக்கிடையே இருந்து நட்சத்திரங்களுடன் புடைசூழ வானமென்னும் சிம்மாசனத்தில் இருந்து அழகாய் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்.

 

ஒரு நொடி அந்த நிலவை கண்கொண்டு பார்த்தவன்,’ நான் வந்திட்டு இருக்கேன்.எனக்காக வெயிட் பண்ணு மா’ என்றான்.

 

அதேநேரம் ரோஜாவும் அந்த நிலவை தான் வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

 

அதிகாலை பொழுது திருமணம் வைத்திருந்ததால் விரைவிலே எழுந்த பெரியவர்கள், திருமண வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.

 

“நீ ஏன் டி இப்படி அமைதியா இருக்க? இந்த கல்யாணத்துக்கு எதுக்கு சம்மதம் சொன்ன?” கௌரி ஆற்றாமையுடன் கேட்க,

 

“எனக்கு வேற வழி தெரியல அத்த. அப்பாயிக்கு என்னை ஒழிச்சு கட்டிடனும். நான் இங்க இருக்கிற வரைக்கும் அம்மாவை கஷ்டப்படுத்திட்டே தான் இருப்பாங்க. அதான் சம்மதம் சொல்லிட்டேன்” விரக்தியாக பேச, மனம் கலங்கியது.

 

‘என் மருமகளுக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தை தர. அவளை காப்பாத்து பா’ என வேண்டினார்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் ஐயர் மந்திரங்கள் ஓத, மணமகனான கோபால் பக்கத்தில் அமர்த்தப்பட்டாள் ரோஜா.

 

சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்ட, சரியாக தாலி கட்டும் நேரத்தில் கிறீச்சிட்டு வந்து நின்றது அந்த கார்.

 

கார் வந்து நின்ற வேகத்தில் மணல் புழுதியாய் பறக்க, அனைவரும் கண்களை மூடினர்.

 

“எடுபட்ட பயலே வண்டியை இப்படியா நிறுத்துவ”பேச்சி சத்தம் போட,

 

அழுத்தமான காலடியில் அவர்களை நோக்கி நடந்து வந்தான் சிம்மன்… நரசிம்மன்.

 

அனைவரும் தங்களை நோக்கி வருபவனை யாரென்று பார்க்க, அவனின் விழிகளோ கலங்கிய நிலையில் மாலையுடன் அமர்ந்திருந்த ரோஜாவை பார்த்தப்படி தான் வந்தான்.

 

அவனின் விழிகள் ரோஜாவை விட்டு நீங்கவுமில்லை. அகலவுமில்லை.

 

மனையின் அருகே வந்தவன் ரோஜாவை பார்த்து கைகளை நீட்டினான்.

 

அவளோ அவனை பார்த்து திருதிருவென முழிக்க,” எந்திரி மா. போகலாம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

அங்கிருந்த சொந்தங்களுக்கு இவன் யாரென்று தெரியவில்லை. வேடிக்கை பார்த்த படி நிற்க, பேச்சி தான் பேசினார்.

 

“எடுப்பட்ட பயலே யாரா நீ? எங்க வூட்டு பொண்ண வான்னு கையை நீட்டி கூப்பிடுற?” சீற,

 

“ஏது ரோஜா உங்க வீட்டு பொண்ணா? அவளை அப்படியா நீங்க நடத்துனீங்க?” மார்புக்கு நடுவில் கைகளை கட்டி பொறுமையாக கேட்டாலும் அழுத்தமாய் கேட்டான்.

 

“அது உனக்கெதுக்கு? நீ யாரு, அதை சொல்லு முதல்ல?” 

 

“அது உங்களுக்கு தேவையில்லாதது. வயசுல பெரியவங்கன்னு பார்க்கிறேன்” என்றவன் ஒரு ஓரமாய் நின்றிருந்த சுந்தரியிடம் வந்தான்.

 

“நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கல. இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா சங்கரன் அங்கிளோட ஆத்மாக்கு ஒரு நிம்மதியே இல்லாம போயிருக்கும்” சொன்னதும் கண்ணில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் வழிந்தோடியது.

 

“நீங்க யாரு? உங்களுக்கு எப்படி எங்களை எல்லாம் தெரிந்திருக்கு?” முத்தையன் குறுக்கே வந்து விசாரிக்க,

 

“சங்கரன் அங்கிளுக்கு பதிலா வந்திருக்கேன்…”என்றான்.

 

பின்,” இந்த கல்யாணம் நடக்காது. நான் ரோஜாவை கூட்டிட்டு போறேன்” அப்போதும் கண்ணீரோடு அமர்ந்திருந்தவளின் கையை பிடித்து எழுந்திருக்க உதவி செய்தான்.

 

ரோஜாவின் கையை இறுக பிடித்து கொண்டவன்,” உனக்கு இனி இங்க பாதுகாப்பு இல்லை ரோஜா என்னோட வந்திடு”எனும்போதே கனகவேலும் வந்தார்.

 

“அந்த பையன் சொல்றதும் சரி தான். நீ இந்த பையன் கூட போயிடு மா. அது தான் உனக்கு பாதுகாப்பு” சொல்ல, ஏதும் போசாது அன்னையை கலங்கிய நிலையில் பார்த்தாள்.

 

அவரோ அழுகையுடனே,” நீ போ மா. அதான் ஐயாவே சொல்றாருல. இங்க இருந்தா, உன்னைய உசுரோட விடுவாங்களான்னு தெரியாது”சொல்லி சம்மதம் தெரிவித்தார்.

 

ஆனால் ஊர் மக்கள் அப்படி விடவில்லை.

 

“நீ என்ன பேசுற சுந்தரி, அந்த பையன் யாரோ எவனோ அவனை நம்பி வயசு புள்ளைய அனுப்புறேன்னு சொல்ற?” கூட்டத்தில் ஒருவர் கேட்க, அதனையே மற்றவர்களும் பிடித்து கொண்டனர்.

 

இப்படியே பேச்சு தடித்து செல்ல, பொறுத்து பொறுத்து பார்த்த சிம்மன் பொறுமையை இழந்தான்.

 

“நிறுத்துங்க. உங்களுக்கு என்ன உங்க ஊர் பொண்ணை தானே கூட்டிட்டு போக கூடாது. எங்க வீட்டு பொண்ணா கூட்டிட்டு போலாம் தானே” சொன்னதும் தாமதிக்காமல் கழுத்தில் மாட்டியிருந்த அன்னையின் பொன் தாலியை எடுத்து ரோஜாவின் கழுத்தில் அணி வித்திருந்தான்.

 

இவையெல்லாம் நொடிப்பொழுதில் நடந்து விட, அப்போது தான் உள்ளே வந்த ஆனந்த் இந்த காட்சியை கண்டு வாயை பிளந்து விட்டான்.

 

“இப்போ நான் கூட்டிட்டு போலாம் தானே…” என்றவன் ரோஜாவின் கையை பிடித்து அவளை அங்கிருந்து அழைத்து சென்றான்.

 

மகளை கண்ணீருடன் கனகவேல் சொன்ன ஒரு காரணத்திற்காக அவனுடன் அனுப்பி வைத்தார் சுந்தரி.

 

கோவிலுக்குள் வெறும் ரோஜாவாக வந்தவள், செல்லும் போது ரோஜா நரசிம்மனாக அவர்களிடமிருந்து விடைப்பெற்றாள்.

error: Content is protected !!