மெல்லினம்…மேலினம் 05

ei9NJYO15042

மெல்லினம்…மேலினம் 05

மெல்லினமல்ல மேலினம் 

மெல்லினம் 05

கதிரவன் பூமியில் தன் ஆதிக்கத்தை துவங்கியிருக்க, மெது மெதுவாய் சூரியகாந்தி மலரத்துவங்கிய நேரம், அந்த தார் சாலையில் புழுதி பறக்க வண்டியை ஓட்டிச் சென்றான் சிம்மன்.

அறந்தாங்கி வரும்வரை வண்டியின் வேகம் குறையவில்லை. அவனின் கோபத்திற்கு இணங்க வண்டியின் வேகம் அதிகரித்தது.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆனந்திற்கு தான் பக்..பக்..என இருந்தது.

‘இவன் வண்டியை ஓட்டுறானா, இல்லை பறக்குறானா? இத்தனை வேகமா போறான்’ நினைக்கத் தான் முடிந்தது அவனால்.

வாயை திறந்து பேச முடியவில்லை. அவனின் கோப முகம் ஆனந்தை அமைதி கொள்ள வைத்தது. 

அப்படியே பின்னே திரும்பி அந்த பெண்ணை பார்க்க, அவளோ ஜன்னல் ஓரமாய் தலைசாய்த்து உறங்கி கொண்டிருந்தாள்.

பார்த்த ஆனந்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவ்விடத்தில் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் இன்னேரத்திற்கு இருவரையும் ஒருவழி செய்திருப்பாள்.

இந்த பெண்ணோ தூங்கி கொண்டு வந்தாள். வினோதமாக தெரிந்தாள்.

ஆனால் ரோஜாவிற்கு ரொம்ப நாட்களுக்கு பிறகான நிம்மதியான உறக்கம்.

பேச்சியிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாலும், ஒருவித பயத்துடனே தான் இருந்தாள்.

யாரேனும் வந்து இத்திருமணத்தை நிறுத்திவிட மாட்டார்களா என்ற நப்பாசையும் கூட இருந்தது.

மனதினுள் ஒரு நாளுக்கு ஆயிரமுறையாவது கடவுளிடம் மன்றாடியிருப்பாள்.

அவர் அனுப்பியது தான் இவர் என நம்பினாள். அதிலும் தான் மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் கனகவேலே இவருடன் போக சொல்லி விட, அவர் மீதுள்ள நம்பிக்கையை இவன் மீதும் ஒரு துளி வைத்தாள்.

தந்தை இறப்பிற்கு பின்பு, அவர் தான் தங்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தார்.

அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என கண்மூடித்தனமாக நம்பினாள்.

ஆனால் அவள் எதிர்பாராத விதமாய் அவள் கழுத்தில் தாலியை கட்டி வண்டியிலும் ஏற்றி இப்போது அறந்தாங்கியையும் நெருங்க போகிறது வண்டி.

அறந்தாங்கி வந்ததும் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினான் சிம்மன்.

“என்ன மச்சான்..?”

“ஒரு டீ குடிச்சிட்டு போகலாம் டா” சொல்லி அவன் இறங்க, அவனுடன் ஆனந்தும் இறங்கினான்.

முதலில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கியவன், முகத்தில் அடித்து கழுவினான்.

அதன்பின் சூடான் டீ வாங்கி, இரண்டு பிஸ்கட்டை தொட்டு சாப்பிட்டான்.

சிம்மனின் பக்கத்தில் அமர்ந்த ஆனந்த்,” மச்சான், அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” என,

“இனி தான் யோசிக்கணும் டா. கல்யாணத்தை நிறுத்த வந்த இடத்துல நானே கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கலை”

“பார்த்தா அப்படியேதும் தெர்லயே மச்சான். இதை செய்ய நீ கொஞ்சம் கூட யோசிக்கல. உண்மையை சொல்லு?” ஆனந்திற்கு சந்தேகமாக இருந்தது.

“அப்படிலாம் ஏதும் இல்லை டா. நீயா உன்னோட கற்பனையை ஓட்ட விடாத” என்றவனை அப்போதும் சந்தேக கண்களுடனே தான் பார்த்தான்.

“சரி நீ என்னமோ சொல்ற நானும் கேட்டுக்குறேன்” சொல்லி டீயை அருந்தினான்.

அதன் பின் வண்டி கிளம்ப, இப்போது ஆனந்த் ஓட்ட பக்கத்தில் அமைதியாய் இமை மூடிய நிலையில் வந்தான் சிம்மன்.

நேற்றிரவிலிருந்து வண்டி ஓட்டியது சோர்வாக இருக்க, அப்படியே உறங்கியும் போனான்.

இருவருமே அந்த கார் பயணத்தில் நிம்மதியான ஒரு உறக்கத்தை உறங்கினர்.

அடுத்த ஒருமணிநேரத்தில் கண் விழித்த சிம்மன்,” இப்போ எங்க டா வந்திருக்கோம்?”கேட்க,

“திருச்சி ரீச்சாகியாச்சி மச்சான்”என்கவும், 

பின்னே திரும்பி அந்த பெண்ணை பார்த்தவன், அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து,” வண்டியை சத்திரத்துக்கு விடு. காலை டிஃபன் முடிச்சிட்டு போய்டலாம்”சொல்ல, வண்டியை சத்திரத்திற்கு விட்டான்.

சத்திரத்தில் ஒரு பேர் போன ஹோட்டலின் முன் நிறுத்த, இருவரும் இறங்கினர்.

“மச்சான்! அந்த பொண்ணு?” 

“நீ முன்னாடி போ. நான் எழுப்பி கூட்டிட்டு வரேன்”என்று நண்பனை முன்னே அனுப்பி வைத்தான்.

பின் கதவை திறந்தவனுக்கு ரோஜாவை எப்படி எழுப்புவது என்று தெரியவில்லை. சிறு தயக்கமும் கூட.

“ரோஜா…”

“ரோஜா…”

“ரோஜா…”

அவளின் பெயரை சொல்லி எழுப்ப முயற்சி செய்ய, அவளோ ஆழ்ந்த உறக்கம்.

கல்லூரியில் அத்தனை மாணவ மாணவிகளை மெய்க்கும் அவனுக்கு, இவளை எழுப்ப முடியவில்லை.

“ஏங்க! ரோஜா” என அவளின் வலக்கரத்தை சுரண்ட, அதில் பதறிப்போய் உடனே கண் விழித்து விட்டாள்.

ஒரு நிமிடம் தான் எங்கிருக்கோம் என தன்னை குனிந்து பார்த்தவளுக்கு கழுத்தில் புதிதாய் தொங்கிய தாலியை பார்த்ததும் தான் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது.

“ரோஜா…” மீண்டும் அழைக்க,

“ஹான்”என்றவள் முழித்தாள்.

புதிதாக யாரென்று தெரியாத ஒருவனின் கையை பிடித்து கனகவேல் சொன்னதற்காக வந்துவிட்டாலும், இப்போது சிறிது பக்கத்தில் வைத்து பார்க்கவும் நடுங்கினாள்.

அவளின் நடுக்கத்தை உணர்ந்தவன்,” பயப்பட வேணாம். சாப்பிட கூப்பிடலாமேன்னு தான் எழுப்பினேன்”சொல்ல, சற்று தன்னை நிதானித்தாள்.

ரோஜாவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவன்,” காரை விட்டு இறங்கிறதுக்கு முன்னாடி‌ ஒருதடவை உன்னோட ட்ரெஸை சரி பண்ணிட்டு இறங்கு மா” அவள் விழிகளை பார்த்தவாறே கூற, ரோஜா ஒரு ஆடவன் முன்பு இப்படியா என தர்ம சங்கடமாக உணர்ந்தாள்.

சொன்னவன் காரை சாற்றி திரும்பி நின்று கொண்டான் காவலாக.

ரோஜா தனது உடையை சரிசெய்து பின் குத்தியவள், கதவை திறக்க தெரியாது திண்டாட, அவனே திறந்து விட்டான்.

பின் இருவரும் ஹோட்டலுக்குள் வர, ஆனந்த் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

“எவ்வளவு நேரம் தான் உங்களுக்காக வெயிட் பண்றது, அதான் லைட்டா சாப்பிடலாமேன்னு ஆர்டர் கொடுத்தேன்” சொன்னவாறே உணவில் கவனம் வைத்தான்.

ரோஜாவிடம்,” என்ன சாப்பிடுற?” என்க,

“இல்ல…எனக்கு எதுவும் “பேசவே தடுமாறினாள்.

“சாப்பிடாம இருக்க கூடாது. அதிலும் காலை உணவை மிஸ் பண்ண கூடாது ரோஜா” கண்டிப்புடன் சொல்லி, வெயிட்டரை வர சொன்னான்.

அவரும் வந்ததும் அன்றைய பட்டியலை ஒப்புவிக்க,”உனக்கு என்ன வேணும், எதுனாலும் ஆர்டர் செய்து சாப்பிடு” சொல்ல,

நேற்றிரவிலிருந்து சாப்பிடாதது, விடியற்காலையிலே எழுந்து குளித்ததில் வேறு பசியெடுக்க, சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள்.

“ஆர்டர் பண்ணலையா?” சிம்மன் கேட்க,

“இல்ல…”என சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

ஊரைவிட்டு எங்கேயும் சென்றதில்லை. அங்கு இருப்பதோ சிறிய சிறிய ஹோட்டல்கள். இதுவோ பெரிதாக இருக்க பெண்ணிற்கு பயம் வந்தது.

அவளின் எண்ணவோட்டங்களை புரிந்து கொண்டவன்,” தோசை சாப்பிடுவியா?” என கேட்டு, அவள் ஆம் என்பதுபோல் தலையசைக்கவும் இருவருக்கும் தோசையை சொன்னான்.

ஐந்து நிமிடத்தில் தோசை வந்து விட, உண்ண துவங்கினார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பயணம் துவங்கியது.

விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருக்கும்போது கேட்டான்.

“செங்கல்பட்டா, சென்னையா மச்சான்?”கேட்ட ஆனந்திடம் என்ன சொல்லுவதென்றே அவனுக்கு தெரியலை.

சிறிது யோசித்தவன், “சென்னைக்கே போகலாம் மச்சான். அங்க போய் எதுனாலும் பார்த்துக்கலாம்”சொல்லி விட,

அதன்பின் வண்டியை சென்னைக்கே விட்டான் ஆனந்த்.

அவர்கள் சென்னை வந்தடையும் முன்பே சரவணன் அவர்களுக்காக காத்திருந்தான். கூடவே அவனின் அன்னையும்.

இருவரும் இறங்கி விட, சரவணனின் தாயார் கண்கள் பின்னே சென்றது.

“எங்கடா என் மருமகள்?” ஆர்வமாய் பார்க்க, 

அவளுக்காக பின் கதவை திறந்து விட்டான் சிம்மன்.

அவளோ ஒரு வித தயக்கத்துடனே கீழே இறங்க, அவளை புன்சிரிப்புடன் வரவேற்றார் சரவணனின் தாயார் வேணி.

“வா மா!!!” என அன்புடன் வரவேற்க, அவளோ புதிய ஆட்களை கண்டு நடுங்கினாள்.

“ஆண்டி!!! கொஞ்சம் பயந்த பொண்ணு” சிம்மன் அவளுக்காய் பேச,

“நம்ம கிட்ட வந்துட்டால, இனி மாறிடு வா” என்றவர் சிம்மனோடு நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்.

பின், சிம்மன் அவளின் கைப்பிடித்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான்.

முதன்முறை ஒரு புதியவனின் வீட்டிற்குள் வருகிறாள், அதிலும் அந்த புதியவன் கணவனாக இருக்க, ஒருவித படபடப்புடனும் சொல்ல தெரியாத உணர்வோடும் அவனின் கரங்கோர்த்து வலது கால் வைத்து உள்ளே வந்தாள்.

சரவணன் இவை அனைத்தையும் ஒரு ஓரமாய் இருந்து பார்த்திட செய்தான்.

இதுதான் அவன் முதன்முறை ரோஜாவை பார்ப்பது. ஏனோ அந்த பெண்ணை காண்கையில் நண்பனின் தியாகம் தான் நினைவில் வர, அவளை பிடிக்காமல் போய்விட்டது.

இதில் ரோஜாவின் தவறு எதுவும் இல்லையென்றால், அவனின் இந்த நிலைக்கு காரணமோ ரோஜா தான்.

முகத்தை உற்றென்று வைத்தவாறே அனைத்தையும் கண்டிருந்த சரவணனை நோக்கி மெல்ல வந்தான் ஆனந்த்.

“வக்கீலு! அந்த பொண்ணை ஏன் டா அப்படி பாக்குற?” மெதுவான குரலில் கிசுகிசுக்க,

திரும்பி அவனின் மீதும் கோப பார்வையை பதிக்க,

“முறைக்காத என்னென்னு சொல்லு டா” என்றான்.

“என்னத்தை சொல்றது எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்” கடுப்பான குரலில் சொல்ல,

“உனக்கு பிடிக்கணும்னு எந்த நிர்பந்தமும் இல்லை டா. சிம்மனுக்கு பிடிச்சா போதும்”என இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே வேணி இருவரையும் வைத்து சடங்குகளை செய்து முடித்தார்.

பொம்மை போல் அனைத்தையும் செய்து முடித்த ரோஜா, அடுத்து என்ன என்பது போல் வேணியை பார்க்க, அவரோ சிம்மனிடம் கண் ஜாடை செய்தார்‌.

நண்பனுடன் இருந்த சிம்மன், ரோஜாவின் பக்கம் வந்து,” இங்க நானும் ஆனந்தும் சேர்ந்து தான் தங்கியிருக்கோம். இன்னைக்கு ஒருநாள் இங்க தங்கிக்கோ. நாளைக்கு வேற எதாவது ஏற்பாடு செய்றேன்” சொல்லி அவனின் அறையை அவளுக்கு காண்பித்தான்.

“அந்த ரூம் தான் என்னோடது. அங்க நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” சொல்ல,

அவள் எதையோ கேக்க முற்பட்டு கேட்க முடியாமல் தயங்குவதை கண்ட சிம்மன்,” என்கிட்ட எதாவது கேட்கணுமா?” என்றான்.

“ம்ம்ம்…” என தலையசைக்க,

“கேளு மா”

“உங்க… உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா?” என்றிருந்தாள்.

அவள் கேட்டத்தில் அங்கிருந்தோர்களுக்கு ஒருவித சங்கட்டம் தான். 

யாரென்றே தெரியாத ஒருவனை நம்பி இதுவரை வந்துவிட்டாள்.

அவனை பற்றி ஒன்றும் தெரியவில்லை. நல்லவனா? கெட்டவனா? படித்தவனா?என்ன வேலை செய்கிறான்? குடும்பம்? என எதுவும் தெரியவில்லை. பரிதாப நிலை தான் அவளினது.  

ரோஜா இப்படி கேட்கவும் தனது முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான்.

“சாரி. முதல்ல என்ன பத்தி சொல்லியிருக்கனும். சொல்லாதது தப்பு தான்”என மன்னிப்பை வேண்டினான்.

“நான் நரசிம்மன். இங்க தான் பக்கத்துல ஒரு காலேஜ்ல அசிஸ்டன்ட் ப்ரோஃபசரா இருக்கேன். அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. மத்தப்படி என்னோட ரிலேட்டிவ்ஸ் எல்லாம் செங்கல்பட்டுல உள்ள சித்தாலப்பாக்கம்ல  இருக்காங்க‌” சொல்லி முடித்து அவள் முகம் காண, அவளோ அப்படியே நின்றாள்.

“சரி, போய் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு” என அனுப்பி வைத்தான்.

அவள் அறைக்கு சென்றதும், அந்த அறையை சுற்றி பார்த்தாள்.

பார்த்தவளுக்கு ஆச்சரியம் தான். பத்துக்கு பத்து வீட்டில் இருந்தவளுக்கு இந்த வீடு வித்தியாசமாய் தெரிந்தது‌. அழகாகவும் இருக்க, சிறிய பயம் கூட வந்தது.

கண்கள் சொக்க ஒரு தலகாணியை மட்டும் எடுத்து கொண்டவள், ஓரமாய் தரையில் படுத்து விட்டாள். 

வெளியில் சரவணன் நண்பனை பிடித்து கொண்டான்.

“நீ என்ன பண்ணியிருக்கன்னு தெரிஞ்சு தான் பண்ணியா டா?இது என்ன பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதுன்னு நினைச்சியா? அவ்வளவு ஈசியா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்க” சற்று கோபமாய் கேட்க,

“தெரிஞ்சு செஞ்சேனா தெரியாம செஞ்சேனோ தெரியாது டா. ஆனா தப்பா ஏதும் செய்யல.என்னால அந்த பொண்ணோட வாழ்க்கை வீணாகிட கூடாது மச்சான். அதுக்காக எதுவும் செய்வேன்” அத்தனை உறுதியாய் கூற, கடுப்பானான் சரவணன்.

“அப்போ உன்னோட வாழ்க்கை? அது எப்படி போனாலும் பரவாயில்லையா டா?”

“எனக்கென்ன மச்சான், இத்தனை வருஷம் கிடையாத நிம்மதி இப்போ கிடைச்சிருக்கு டா. அதுவே போதும்”என்று விட, 

சரவணன் அடுத்து பேசும் முன்பு வேணி மகனை அடக்கினார்.

இரண்டு மணிநேரத்திற்கு மேல் அடித்து போட்டது போல் தூங்கிய ரோஜா, மெதுவாய் கண் விழித்தாள்.

மணியை பார்க்க, அதுவோ ஏழு என காட்ட வேகமாய் எழுந்து கொண்டாள்.

பாத்ரூம் செல்லலாம் என உள்ளே இருந்த அறைக்குள் சென்றவளுக்கு, வெஸ்டர்ன் டாய்லெட்டை கண்டு பேய் முழி முழித்தாள்.

அதையே பார்த்தவளுக்கு, எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை.

மெதுவாய் வெளியே வந்தவள், சுற்றிலும் சிம்மனை தேட பால்கனியில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்த சரவணன் கண்ணில் படவும் சற்று தயங்கினாள்.

சரவணனே அவளை கண்டு விட, மொபைலை ஹோல்டில் போட்டு விட்டு,” என்ன எதாவது வேணுமா?” என்க,

“இ..இல்..ல அ…வ..ங்க” திக்கி திணற,

“வெளிய போயிருக்கான் இப்போ வந்திடுவான். அம்மா இருக்காங்க அவங்களை வர சொல்றேன்” என்றவன் வேணியை அவளிடம் அனுப்பி வைத்தான்.

வேணியும் ரோஜாவிடம் வந்தவர், அவளுக்கு உதவி செய்தார்.

அரைமணி நேரத்தில் ரோஜாவிற்கு தேவையான அத்தியாவசி பொருட்களை வாங்கி வந்திருக்க, அதனை அவளிடம் கொடுத்தான்.

“இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு கடைக்கு போய் துணி வாங்கலாம்”சொல்ல, மண்டையை நாலாபுறமும் ஆட்டினாள்.

சரவணன், சிம்மன் ரோஜாவை தனியே விட்டு சென்றதற்கும் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்தான்.

ஆனந்த் தான் அவனை இழுத்து செல்ல வேண்டியதாயிற்று.

அடுத்தநாள் சொன்னது போல் ரோஜாவை தி.நகர் அழைத்து வந்து அவளுக்கு தேவையாக துணிமணிகளை வாங்கி குவித்தான்.

ரோஜாவிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தான். ரோஜா அவனுடன் அமைதியாய் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.

சிறு குழந்தை போல் ரோஜா சென்னையை சுற்றி பார்த்து வியந்தாள்.

இப்படியே ஒருவாரம் மேல் கழிய, விவரம் தெரியப்பட்டு சித்தாலப்பாக்கத்திலிருந்து சிம்மனின் தாத்தா வேதநாயகம் அழைத்து விட்டார்.

(சித்தாலப்பாக்கம் ஊர் இருக்கு. ஆனா அது எப்படி இருக்கும்னு கூட தெரியாது. எல்லாம் என்னோட கற்பனைல சொல்றது தான்.)

 

error: Content is protected !!