மோகனங்கள் பேசுதடி!06

மோகனங்கள் பேசுதடி!06
மோகனம் 06
விஷ்வா இந்தியா வந்து இன்றோடு ஒருவாரம் ஆகிவிட்டது.
குன்னூர் வந்ததில் இருந்து, தந்தையை குறித்த கேள்வியை கேட்க மட்டுமே வாய்யை திறக்கும் விஷ்வா, மற்ற நேரத்தில் கம் போட்டு வாயை ஒட்டிக்கொண்டது போல் அமைதியாகிவிடுவான்.
மருத்துவமனையில் இருந்தவரை அவன் குடும்பத்திற்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் வீட்டிற்கு வந்த பொழுதினில் இருந்து தான் அவனின் செய்கை வித்தியாசப்படுவதை உணர்ந்தனர்.
இதனை முதலில் அறிந்த மஞ்சுளா, மகனை நினைத்து குழப்பத்துடன் இருந்தார். நான்கு வருடத்திற்கு முன்பு இவன் இப்படி இல்லையே. சிறகில்லாமல் பறந்தவன்.அன்னை பின்பே சுற்றி வந்தவன் இப்போது என்னவென்றால் தாயை கண்டு ஒதுங்கி செல்கிறான்.குடும்பத்தை தவிர்க்கிறான்.
மகனை நினைத்து மஞ்சுளா கவலைக்கொண்டார்.
இப்படியே இரண்டு நாட்கள் சென்றுவிட,கங்காதரனை பார்ப்பதிலே மஞ்சுளாவிற்க்கு நேரம் சென்றது.
அடுத்த நாள் காலையில் அருணை தவிர்த்து அனைவரும் சிற்றுண்டி உண்டு கொண்டிருக்க, மஞ்சுளாவின் பார்வை மொத்தமும் இரண்டாவது மகன் மீது தான் இருந்தது.
அதை விஷ்வா உணர்ந்தாலும் கண்டுகொள்ளாது அமைதியாக உணவருந்தினான்.
அருண் காலையிலேயே சாக்லேட் பேக்டரி சென்றுவிட, கங்காதரன் அமைதியாக அவருக்கு கொடுத்த உணவை உண்டார்.
மகன் தட்டு காலியாவதை கண்ட மஞ்சுளா, சுட சுட இட்லியை அவன் தட்டில் வைக்க போக, தட்டின் மேல் கை வைத்து தடுக்கலானான்.
“என்ன சாப்பிடுற நீ? நீ சாப்பிடற சாப்பாடு எப்படி டா உனக்கு பத்தும். பாரு இந்த நாலு வருஷத்துல எப்படி மெலிஞ்சு போயிருக்கன்னு ” என சிக்ஸ் பேக் வைத்து உடலை கட்சிதமாக வைத்திருக்கும் மகனை பார்த்து மஞ்சுளா கடிய,கேட்டிருந்த விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் வந்த புன்னகையை இதலுக்குள்ளே அடக்கினான்.
“ஒழுங்கு மரியாதையா இந்த ஒரு இட்லியாவது நீ இப்போ சாப்பிடற”அதட்டலுடன் கூறி இட்லியை வைக்க பார்க்க, அவரது கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“போதும் மா “சொல்லி தட்டோடு எழுந்தவன், திரும்பி நடக்க பார்க்க அன்னை குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
“உனக்கு இப்போ எங்கள பிடிக்காம போய்டுச்சா விஷ்வா?”அன்னை பரிதவிப்புடன் மகனை பார்த்து விசனப்பட்டார்.
அவனோ அன்னையை நோக்கி அழுத்தமான பார்வையை பதித்த விஷ்வா அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
போகும் மகனை வியாகூலத்துடன் பார்த்திருந்தார். அவருக்கு அவனது பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை.
தன் கவலையை மனதிருக்குளே போட்டு வைக்க விரும்பாமல் இதற்கான ஒரு தீர்வினை கண்டறிய முயன்றார் மஞ்சுளா.
அதற்கான நாள்ளையும் விஷ்வாவே ஏற்படுத்தி கொடுத்திருந்தான்.
விஷ்வாவிருக்கு அவனது விடுப்பு நாள் முடிவடைய இன்னும் இறுதினங்களே இருக்க, லண்டன் செல்வதற்கான எல்லா ஏற்பாட்டையும் துரிதப்படுத்தினான்.
இவனது முயற்சியை அறிந்த மஞ்சுளா ஜீவாவை அழைத்து,” போ போய் விஷ்வாவ நான் கூப்பிட்டேன்னு கூட்டிட்டு வா ஜீவா” சீற்றத்தை அடக்கியவாறு சொல்ல,
அவனோ சற்று தயங்கியவாறே,” மேடம், அண்ணா என்கிட்ட யாரும் என்னை தொந்தரவு பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” மெல்லிய குரலில் கூற,
“இப்ப கூட்டிட்டு வரல நான் என்ன செய்வேனே தெரியாது ஜீவா.”அவரது குரலில் அத்தனை கோபம் காணப்பட்டது.
“இதோ போறேன் மா”என்று மாடியேறி விஷ்வாவின் அறை முன்பு நின்றவன், கதவை தட்ட தயங்கி கையை தூக்கவும் இறக்கவுமாக இருந்தான்.
ஜீவாவிற்கு கஷ்டம் கொடுக்காமல் விஷ்வாவே வந்து கதவை திறந்து விட, ஜீவாவை கண்டு புருவமுயற்த்தினான் .
“இங்க என்ன பண்ற ஜீவா?”
“அ…அது வந்து “என இழுக்க,
“என்னன்னு சொல்லு டா?”
“அது வந்து உங்கள மேடம் கூப்பிட சொன்னாங்க”
“அவ்வளவு தான சரி வா”என்று அவன் தோல் மீது கை போட்டவாறே கீழே வந்தவன், அவர் முன்னாடி போய் நிற்க, மகனை ஆக்ரோஷத்துடன் பார்த்திருந்தார்.
மகனை முறைத்து பார்த்தவர்,” துறை கிளம்புறீங்க போல இருக்கே? போன முறையாவது கடைசி நேரத்திலாவது சொன்னிங்க. இந்த தடவை அது கூட கிடையாது போலையே?”நக்கல் பார்வையுடன் அமைதியான குரலில் அழுத்தத்துடன் கேட்டு அவன் செய்த செயலை உன்னிப்பாக சொல்லிக்காட்டினார்.
“சொல்லணும் தான் இருந்தேன்.”
“எப்போ? நாங்க செத்ததுக்கப்றமா விஷ்வா?”ஆற்றாமையுடன் கேட்கவே,விஷ்வாவின் கண்கள் அன்னையை ஏறிட்டது.
“ம்மா!”விஷ்வா அதிர,
“பரவால்லயே நான் தான் அம்மான்னு தெரிஞ்சுவச்சிருக்க போல.”
“என்ன பேசுறீங்க மா?”
“நீ என்ன அப்படி தான் பேச வைக்குற விஷ்வா. நாலு வருஷம் கண்ணுக்கு தெரியாத இடத்துல இருந்து எங்களை கஷ்ட படுத்தின. இப்போ இங்க வந்தும் எங்களை எல்லாம் பார்த்து ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்ருபியா டா” தன் ஆதங்கத்தை மஞ்சுளா கவலையுடன் வெளிப்படுத்தினார்.
“சாரி ம்மா.இத தவிர்த்து எனக்கு என்ன சொல்றதுனே தெர்ல ம்மா”
“ஒன்னு சொல்லலாம் விஷ்வா?” எதற்கோ அவர் அடிப்போட,விஷ்வா மனம் அன்னை என்ன சொல்வாரோ என்று அவரையே பார்த்திருந்தான். ஜீவா அப்போதே அவர்களை தனித்து விட்டு சற்று தள்ளி நின்றுகொண்டான்.
“ஊருக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்ட அப்படி தானே?”
“ஆமாம்”
“அப்போ கல்யாணத்தை பண்ணிட்டு அவளோட ஊருக்கு போ”சொல்லவும் விஷ்வாவின் கண்கள் விரிந்தது.
“முடியாது” சட்டென கூறிவிட்டான்.
“பண்ணி தான் ஆகணும் விஷ்வா”அழுத்தத்துடன் கூறவே, “என்னால கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது மா. வேற இருந்தா பேசலாம் இல்லனா நான் கிளம்புறேன். இனி இத பத்தி பேசாதீங்க . என் வாழ்க்கையில கல்யாணம்ன்ற ஒன்னு கிடையவே கிடையாது மா “அழுத்தத்துடன் சொல்லி மாடி ஏறிவிட்டான்.
“போ டா போ. நீயா நானான்னு பார்த்திடலாம்”சொல்லி அறைக்குள் சென்றுவிட்டார்.
இருவரையும் தூரத்திலிருந்து பார்த்த ஜீவாவிற்கு கஷ்டமாக இருந்தது.
சிறுவயதில் அன்னையை இழந்து தவித்து நின்ற தனக்கு ஆதரவு கொடுத்த குடும்பம், இன்று கஷ்டத்தில் தவிப்பதை பார்க்க பார்க்க ஜீவாவின் நெஞ்சம் வலித்தது.
அவசர அவசரமாக கடவுளிடம் ‘என் குடும்பத்தின் பிரச்னையை சீக்கிரமே தீர்த்து வைத்திடு பா’ என்று வேண்டுதல் வைத்தான்.
இங்கே அருவி எப்போதும் போல், காலையில் கிளம்பி பள்ளிக்கு சென்றுவிட மதியழகி ஸ்டடி லீவ் என்று வீட்டில் இருந்தாள்.
அவளை படிக்க விடாமல் மூர்த்தி ஏதோ ஒரு வேலையை கொடுத்த படியே இருக்க, சந்திராவிற்கு ஆத்திரமாக வந்தது.
“ஏங்க, அவ படிக்குற பொண்ணு. அவளை ஏன் தொந்தரவு பண்றீங்க? உங்களுக்கு எதுனாலும் என்கிட்ட சொல்லுங்க நான் பண்ணிதரேன்” பவ்யமாக கணவனின் முன்பு கேட்டு நிற்க,
“ஏன் உன் பொண்ணு படிச்சு கலெக்டரா ஆக போகுது. கடைசில ஏதோ ஒரு வீட்ல பாத்திரம் கழுவ தான போகுது. இதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு படிக்க வச்சிக்குட்டு. இப்பவே வீட்டு வேலை கத்துக்கிட்டு போற வீட்ல என் பேரையாவது காப்பாத்தட்டும்” சாதாரணமாக கூறிய கணவனை ‘என்ன மனிதவன் இவன் ‘ போன்றதொரு பார்வையை செலுத்த, “போடி போ வீட்ல ஏதாவது வேலை இருந்தா போய் பாரு.என்னை எதிர்த்து குரல் கொடுக்க நினைச்ச நீ சமைச்சி வச்ச சாப்பாட்டுல விஷத்த கலந்து வச்சிருவேன். எனக்கு அடங்கி இருக்குற வரைக்கும் தான் நீங்க எல்லாம் உயிரோட இருப்பீங்க” மிரட்டி விட்டு சென்ற கணவன் மீது ஆத்திரமாக வந்தது.
அடுத்தநாள் காலையில் அருவியும் விழியும் அரக்க பறக்க கிளம்பி கொண்டிருக்க,அப்போது அங்கே வந்த மூர்த்தி “ஏய்!” என அருவியை பார்த்து அழைக்க, அவள் காதில் அது விழவில்லை.
“ஏய்!” இப்போது சத்தமாக அழைக்க,
“இங்க யாருக்கும் ஏய்ன்னு சொல்லி பேர் வைக்கல. பேர் சொல்லி கூப்பிடுங்க” முறைப்புடன் கூறிய விழி கிளம்ப ஆயத்தமானாள்.
“சின்ன கழுதை என்ன வாய் ரொம்ப நீளுது. பேசுற வாயை அப்படியே அறுத்து விட்டுடுவேன் பார்த்துக்கோ.”
“உங்களுக்கு முன்னாடி…”அடுத்து சொல்வதற்குள் அவள் கையை பிடித்து தடுத்த அருவி,”பேசாம இரு விழி” தங்கையை அடக்கியவள் தந்தையின் முன்பு பவ்யமாக நின்றாள்.
“சொல்லுங்க ப்பா!”
“கிளம்பி வா வெளிய போகணும்” மொட்டையாக கூறி சென்றுவிட, மொத்த குடும்பமும் போகும் அவரை தான் கேள்வியுடன் பார்த்தது.
அடுத்த பத்து நிமிஷத்தில் மீண்டும் அவரது குரல் கேட்கவே, அவசர அவசரமாக கிளம்பி சென்றாள். போகும் முன்பு விழியிடம்,’அம்முவ மதியம் கூப்பிடுக்க விழி’சொல்லிச் சென்றிருந்தாள்.
அதுபோலவே மதியம் பூவினியை அழைக்க கல்லூரியிலிருந்து அகல்விழி வந்திருக்க, இன்னும் குட்டி வராமல் இருக்கவே அவளுக்காக காத்திருந்தாள்.
அந்த நேரம் பார்த்து ஒருவன் வேகமாக வந்து இடித்து விட்டு செல்லவும் விழி தடுமாறினாள்.
“ஏய்!கண்ணு என்ன பிண்ணாடியா வச்சிருக்க?” கோபமாய் விழி முன்னே செல்பவனை பார்த்து கத்த,
“யார பார்த்து கண்ணு தெர்லயா கேக்குற?” அதே விரைப்புடன் அருண் திரும்ப, இருவருமே ‘நீயா’ என்பது போல் ஒருசேர கத்தினர்.
“நீ இங்க என்ன பண்ணுற? உனக்கு இங்க என்ன வேலை?” இருவருமே ஒரேபோல் கேட்டு வைக்க, பதில் சொல்லாது ஒருவருக்கு ஒருவர் முறைத்தபடி நின்றனர்.
இருவரது மௌனத்தையும் முதலில் உடைத்தது என்னவோ அருண் தான்.
“சொல்லு உனக்கு இங்க என்ன வேலை?”
“அதே தான் நானும் கேக்குறேன் மிஸ்டர்?” இருவரும் மாறி மாறி அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு ஒருவருக்கொருவர் சளைக்காமல் நின்றனர்.
அப்போது பள்ளி மணியடிக்கவும் குழந்தைகள் தூக்க முடியா பையை தூக்கிக்கொண்டு ஓடோடி வந்தனர். அதில் பூவினியும் வர, சித்தியை பார்த்த குழந்தை குதுகளத்துடன் “சித்தி!” கூச்சல் போட்டவாறே ஓடிவந்தாள்.
அதில் இருவருமே திரும்பி பார்க்க, அத்தனை நேரம் அவர்கள் முகத்தில் இருந்த கடுமை மறைந்து புன்னகைத்தன.
“அம்மு!”பாசப்பயிர்ப்பை விழி வளர்க்க,
“மிஸ் தேனருவியோட சிஸ்டரா நீ?”
“இல்ல தேனாம்பேட்டை அருவியோட சிஸ்டர். போயா அந்த பக்கம்” அருணை தள்ளிவிட்டு அக்கா மகளை தூக்கச்சென்றாள்.
பூவினி சித்தியிடம் பள்ளியில் நடந்தவற்றை கதைக்கதையாக அளக்க, அவளும் ரசித்தவாறு கேட்டுக்கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
போகும் அவளை பார்த்து,”இவ எப்படி தான் தேனுக்கு தங்கச்சியோ தெர்ல. பஜாரி “முணுமுணுத்து விட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.
இங்கே அருவியை அழைத்து சென்ற மூர்த்தி நேராக சென்றது என்னவோ போட்டோ ஸ்டூடியோ தான்.
“ப்பா, இங்க எதுக்கு வந்திருக்கோம்?” அருவி புரியாது தந்தையிடம் கேட்க,அவரோ “ஹான், பூ பறிக்க போறோம்” நக்கலாய் பதில் கூறினார்.
அதற்கு பின் அருவி அமைதியாய் இருக்க, கடை பத்து மணிபோல் திறக்கவே முதல் ஆளாய் இருந்து அருவியின் நல்லதொரு புகைப்படம் எடுக்கப்பட்டது.
அதை வாங்கின மூர்த்தி தன் திட்டத்தை தொடக்கலானார்.