ராகம் 18
ராகம் 18
ராகம் 18
“ஸ்டார்ட், ரோல் கேமரா, ஆக்சன்!” என்ற வார்த்தைகளுக்குப் பின், அங்கிருந்த படகருவி அந்தக் காதல் காட்சியை பதிவு செய்ய ஆரம்பித்தது. எப்போதும் போல் நாயகனும் நாயகியும் காட்சியுடன் ஒன்றி உருகிக் கொண்டிருந்தார்கள்.
“டேக் ஓகே!” என்ற டைரக்டரின் அறிவிப்போடு, முதல் டேக்கில் அந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்தது.
“ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் டேக் எ ஷார்ட் பிரேக்.” என இடைவேளை விடப்பட்டது. படத்தின் நாயகனும் நாயகியும் தங்கள் இருக்கையில், தங்களை தளர்த்திக் கொண்டு அமர்ந்தனர்.
‘பிந்து சாப்பிட்டு இருப்பாளா?’ என தன் நாயகியின் சிந்தனையோடு நாயகன் ரிஷிவர்மாவின் கண்கள், பட நாயகியை அடைந்தது. அப்போது தொலைப்பேசியை அனைத்த அவளும் அவனை பார்த்து மென் புன்னகை சிந்தினாள். அதில் அவனுக்கு தேவையான பதில் கிடைத்தது. விழி மூடி இருக்கையில் சாய்ந்தான். இதுவே கடந்த ஒரு மாதமாக நடக்கிறது.
ஆம்! பிருந்தாவின் வளைகாப்பு முடிந்து அவள் பசுஞ்சோலைக்கு சென்று ஒரு மாதம் முடிந்திருந்தது. ரிஷிவர்மாவின் நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்தது, கூடவே மித்ராளினியாகிய அம்முவிற்கும்.
பிருந்தா கிளம்பிய மறுநாளே, ருத்ராவும் ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்கா கிளம்பி இருந்தான். அந்த ப்ராஜெக்ட்டை முடிக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் எடுக்கும். ‘முக்கிய ப்ராஜெக்ட். கட்டாயம் சென்றாக வேண்டும்.’ என தெரிவித்து விட்டு விமானத்தில் பறந்திருந்தான்.
ப்ராஜெக்டை காரணம் காட்டி அவன் சென்றிருந்தாலும், அவன் சென்றதற்கான உண்மையான காரணம் அம்மு. தன் பிரிவின் வலியை அவள் உணர்ந்தால், அதன் பிறகு விவாகரத்து கேட்க மாட்டாள் என நம்பினான். அதனால் மனமே இல்லாமல் அவளை பிரிந்து சென்றான். அதன் பிறகு அவளுடன் தொலைபேசியில் பேசுவதையும் குறைத்தான்.
எப்போதும் கையில் இருக்கும் வரை வைரத்தின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது கைவிட்டுப் போன பிறகு அதன் மதிப்பை உணர்ந்து இழப்பை நினைத்து தவிப்பார்கள். அதேபோல் அம்மு தன் வாழ்க்கை துணையை (தன்னை) கைவிட்ட பிறகு அந்த இழப்பை நினைத்து வருந்தக்கூடாது. அது கைநழுவி போகும் முன்பே உணர்ந்து தெளிய வேண்டும். அதற்கான ஒரே தீர்வு பிரிவு.
எப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவர்களையும் பிரிவு அசைத்துப் பார்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அது போல் இந்த பிரிவு நிச்சயம் அவளுள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினான் ருத்ரேஸ்வரன். நிரந்தர பிரிவை தடுப்பதற்காக தற்காலிக பிரிவை தேர்ந்தெடுத்தான் நீலாம்பரியின் கட்டவண்டி.
அவன் நம்பிக்கையை மெய்ப்பிப்பது போல், அம்முவும் அவன் பிரிவை நினைத்து வருந்தினாள். ஆனால் அதிலேயே உழல முடியாமல் அவளது நாட்களை அவளது வேலைகள் இழுத்துக் கொண்டது. கல்லூரி, ஈஸ்வர் ப்ரொடக்ஷன், அதனுடன் இணைந்து ஷூட்டிங் என அவளது நாட்கள் படு பிஸியாக சென்றது.
ஆம்! ஷூட்டிங்கே தான். சிறிய இடைவேளைக்குப் பிறகு, மித்ராளினி மீண்டும் ரிஷிவர்மாவுடன் இணைந்து நடிக்க உள்ளாள். நல்ல கதை கரு. அவள் நடித்தாள் சிறப்பாக இருக்கும் என புதுமுக இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க, மிகவும் சிந்தித்து நடிக்க சம்மதித்தாள்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அவள் திறமைகளை வீட்டில் முடக்கி வைக்க அவர்களுக்கு விருப்பமில்லை. ‘அம்மு விருப்பப்பட்டால் நடிக்கலாம்.’ என ஏக மனதாக ஒத்துக்கொண்டனர். ருத்ராவிற்கும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.
ரிஷியுடன் நடிப்பதால் மித்ராவுக்கு மறுப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அவளது ஒரே கவலை தாய்மை அடைந்திருக்கும் பிருந்தாவை, தன்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்பது மட்டுமே. இப்போதும் அவள் பிருந்தாவை முழு நேரமும் கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும், கிடைக்கும் நேரங்களை அவளுடன் செலவு செய்தாள். ஆனால் படத்தில் நடிக்க ஆரம்பித்தால் அவளது நேரம் அனைத்தையும் அது விழுங்கிக் கொள்ளும். இப்போது கிடைக்கும் சிறிது நேரம் கூட இல்லாமல் போகும் என்பதே அவளது தயக்கத்திற்கான காரணம்.
“பிருந்தாவை நாங்க நல்லா பார்த்துக்க மாட்டோம்ன்னு நினைக்கிறியா அம்மு.” என மனதாங்களாக கேட்டார் அம்பிகாதேவி.
“ஐயையோ அப்படியெல்லாம் இல்ல அத்தை. ஏதோ சொல்ல தெரியாத சங்கடம்.” என பதறினாள் அம்மு.
“அப்ப நீ எங்க மேல வச்ச நம்பிக்கை அவ்வளவுதான் இல்லையா?” கடுமையாகவே கேட்டிருந்தார்.
“அச்சோ இல்லை அத்தை. மனசு நெருடலா இருக்கு.”
“நம்பிக்கை இருந்துச்சுன்னா நெருடல் எங்கிருந்து வரும்?” என முறைப்புடன் கேட்டு அவளை மேலும் அதிர வைத்தவர், கூடவே சம்மதமும் சொல்ல வைத்தார் ருத்ராவின் அன்னை அம்பிகாதேவி.
‘மன நெருடலை உணர்ந்து இந்தப் படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம்…’ என அவள் மனம் வருந்தப் போகும் நாள் வெகு தூரமில்லை. இந்தப் படம் முடிவதற்குள் பல அனர்த்தங்களை சந்திக்கப் போகிறார்கள். வரைமுறையற்ற கிசுகிசுகளில் சிக்கப் போகிறார்கள். அதனாலயே விவாகரத்துக்கு சம்மதித்து நீதிமன்ற வளாகத்தில் நிற்கப் போகிறார்கள் என தெரியாமல் போனது விதியின் சதியன்றி வேறு என்னவென்று நான் சொல்ல???
தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதன் இலக்கை சரியாக அடைவதை நினைத்து எதிர் வீட்டு ஜன்னலின் மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. ஒருவனின் ஆனந்தம் நால்வரின் வருத்தத்தின் ஆரம்பம். அவனது அந்த ஆனந்தம் நீடிக்குமா???
ஒரு பாவமும் செய்யாத பாவையரின் கண்ணீர் அவனை சுனாமியாக தாக்கப் போகிறது. வேங்கையென சீரும் காளையவனின் கோபம் அவனை சுட்டெரிக்க போகிறது எனத் தெரியாமல், இப்போது அவன் சந்தோஷித்துக் கொண்டிருப்பதை விதியின் சதியின்றி வேறு என்னவென்று நான் சொல்ல???
★★★
சிறு ஓய்விற்கு பிறகு ரிஷிவர்மாவும் மித்ராளினியும் அடுத்த காட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். உதவி இயக்குனர் அந்த காட்சியை அவர்களுக்கு விவரித்து கொண்டிருந்தார். அதை கவனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள் இருவரும். அவர்களது அடுத்த காட்சியின் படபிடிப்பு தொடங்கியது.
தன் காட்சியை நடித்து முடித்த அஜய் கண்ணா அவன் இருக்கையில் அமர்ந்து, அவர்கள் நடிப்பதை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆம்! ரிஷி, மித்ரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது சாட்சாத் அஜய் கண்ணாவே. மீண்டும் கதாநாயகன், நாயகி, வில்லன் மூவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். இந்த காம்பினேஷன் மீண்டும் வெற்றி பெறுமா??? இது நல்லதிற்கா???
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய் கண்ணாவின் நினைவுகள், இரண்டு மாதத்திற்கு முன் மித்ராளினியுடன் பேசிய நாளிற்கும், அதன் பிறகு நடந்த நிகழ்விற்கும் சென்றது.
மாமியாரின் அதிரடியில் இந்த படத்தில் நடிப்பதற்கு அவள் சம்மதம் தெரிவித்திருந்தாலும், ‘தான் எடுத்த முடிவு சரியா?’ என மனதை குழப்பிக் கொண்டிருந்தாள்.
அப்படிப்பட்ட ஒரு நாள் அவள் அந்த குழப்பத்துடன் இருக்கும்போது, “ஐம் டூ ஹேப்பி ஏஞ்சல். அகைன் வீ ஆர் கோயிங் டு ஜாயின் ஃபார் மேக் எ க்ரேட் சக்சஸ்.” (நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் தேவதையே. மீண்டும் ஒரு பெரிய வெற்றிக்காக நாம் இணைய போகிறோம்.) என, இன்ஸ்டியூட்டில் அவளை பார்த்த அஜய் கண்ணா தன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் தெரிவித்தான்.
மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை. கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவளது புரியாத பார்வையை பார்த்துக் கொண்டே, “ஹே ஏஞ்சல்! உனக்கு விஷயமே தெரியாதா! நான் உனக்கு வில்லன்மா.” கேலியாக வளைந்தது அவன் உதடுகள்.
“ப்ச்! இருக்க டென்ஷன்ல நீங்க வேற, விளையாடாம என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?” அலுத்து கொண்டாள்.
“நீ நடிக்கப் போற படத்துல நான் தான் உனக்கும், உன் ஹீரோவுக்கும் வில்லன்.” என கண்ணடித்தான்.
“ஓஓஓ” அவன் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது பெண் அவளுக்கு. புரிந்த பிறகும் பெரிதாக எந்த வித பிரதிபலிப்பும் அவளிடம் இல்லை. அதை உணராத அஜய் கண்ணா தொடர்ந்து பேசி அவனது மகிழ்ச்சியை காட்டினான்.
அவனது மகிழ்ச்சியை கண்டு மித்ராவுக்கு சலிப்பாக இருந்தது. “ப்ச்! ரொம்ப மனக்கோட்டை கட்டாதிங்க கண்ணா, அந்த படத்தில் கமிட்டாகுறதான்னு நான் இன்னும் டிசைட் பண்ணல.”
அவனது மகிழ்ச்சி அனைத்தும் வடிய, “நீ சம்மதம் சொன்னதா ஃபீல்ட்ல பேசுகிறாங்க!” இப்போது குழப்பம் இடம் மாறியது.
“ஆமா சம்மதம் சொல்லி இருக்கேன். ஆனா இன்னும் காண்ட்ராக்ட் அக்ரிமெண்ட்ல சைன் பண்ணல. ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.” என்றாள்.
“உனக்கு என்ன கன்ஃப்யூஷன் ஏஞ்சல்? என்கிட்ட சொல்ல முடிஞ்சா செல்லு.”
“என்னோட சிஸ்டர், அதுதான் ரிஷியோட வய்ஃப் கன்சிவா இருக்கா. இப்ப சிக்ஸ் மந்த். நெக்ஸ்ட் மந்த் வளைகாப்பு போடணும். அப்புறம் டெலிவரி பார்க்கணும். அவளுக்குன்னு நான் மட்டும் தான் இருக்கேன். அதே மாதிரி வருவுக்கும் நான் தான் செய்யனும்.”
“சரி இதுக்கும் நீ படத்துல நடிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?” அவனுக்கு புரியவில்லை.
“நான் படத்துல கமிட்டாகிட்டா, அது முடிகிறதுக்கு மினிமம் ஃபோர் மந்த்ஸ் ஆகும். இப்பவே அவளைப் பார்த்துக்க முடியாம இன்ஸ்டியூட், ஆபீஸ்ன்னு சுத்திகிட்டு இருக்கேன். இதோட சேர்ந்து படத்திலும் நடிச்சா அவளை பார்க்கக்கூட முடியாது.” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
அவளை பரிவாக பார்த்தவன், “உங்க வீட்ல ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?”
“அத்தை, பாட்டி எல்லாரும் பார்த்துக்கிறேன்னு சொல்றாங்க. எனக்கு தான் மனசு ஏத்துக்க மாட்டேங்குது.”
“அதுதான் அவங்க பாத்துக்கிறேன்னு சொல்றாங்கல, அப்புறம் நீ நடிக்கிறதுக்கு என்ன?”
“விதியின் சதியால் அப்பாவை சின்ன வயசுல பறி கொடுத்துட்டோம். அம்மாவை தீக்கு இறையாக்கிட்டோம். வரு ஆல்ரெடி இந்த படத்தில் கமிட்டாகிட்டான். சோ அவனாலும் பிந்து கூட இருக்க முடியாது. அதோட நானும் அவ கூட இல்லைனா அவளுக்கு கஷ்டமா இருக்கும். அதுதான் என்ன பண்றதுன்னு குழப்பம்.”
“உன் சிஸ்டர் என்ன சொல்றாங்க?”
“அவ எதுலயுமே தலையிடல. உங்க இஷ்டம்ங்கற மாதிரி இருக்கிறா.”
“அவங்க அமைதியா இருக்கிறதை பார்க்கும் போது, அவங்க எதிர்பார்க்கிறது உன்னோட முன்னேற்றத்தையா இருக்கலாம்; அவங்களால் உன்னோட முன்னேற்றம் பாதிக்க கூடாதுன்னு நினைச்சிருக்கலாம்; நீ ரொம்ப யோசிச்சு உன்னை ஸ்ட்ரெயின் பண்ணிக்காத. இந்த படத்தோட கதையை படிச்சேன். நல்ல கான்செப்ட். அவார்ட் வாங்கித் தரதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கு. தேவையில்லாததை நினைச்சு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாத.” என தன்னால் முடிந்த அறிவுரையை வழங்கினான்.
‘அப்படியும் இருக்குமோ?’ என நினைத்த மித்ரா, அடுத்த ஓரிரு நாட்களிலேயே அக்ரிமெண்டில் கையெழுத்திட்டிருந்தாள். கால் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டு பட பூஜை நடந்தது. அடுத்தடுத்த வேலைகள் வேகமாக முடிந்து படபிடிப்பும் தொடங்கியது. மித்ராவின் படிப்பு பாதிக்காமல் மாலையிலும் இரவிலும் அவளுக்கான காட்சிகள் சூட்டிங் செய்யப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மித்ரா, மீண்டும் ரிஷிவுடன் இணைந்து நடிக்க போகிறாள் என்ற தகவல் பரவவும், இவர்களை பற்றிய கிசுகிசுக்கள் நாளிதழ்களில் வெளிவர தொடங்கியது. இவர்களை இணைத்து வந்த செய்தியை எப்போதும் போல் அவர்கள் தூசு போல் கடந்து விட்டார்கள். ஆனால் அனைவரும் அது போல் கடந்து விடுவார்களா என்ன???
★★★
அந்த நேரம் அடுத்த பிரச்சனையை கிளப்பினாள் பிருந்தா, ‘தான் பிறந்து வளர்ந்த மண்ணில், தன் தாயின் சுவாச காற்று இருக்கும் இடத்தில், தன் குழந்தை பிறக்க வேண்டும்!!!’ என.
வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். அவள் எதற்கும் மசிவதாக இல்லை. ‘என் அன்னையின் ஆசிர்வாதம் என் குழந்தைக்கு வேண்டும்!’ என உறுதியாக நின்றாள். எப்போதுவும் மென்மையாக இருக்கும் பெண் அடம்பிடிக்கவும், வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதித்து, வளைகாப்பை நல்லபடியாக முடித்து, பிருந்தாவையும் அவளுக்குத் துணையாக எலிசாவையும் பாட்டியுடன் பசுஞ்சோலைக்கு அனுப்பினார்கள்.
அடுத்த இடியாக ருத்ரா அமெரிக்கா கிளம்பவும், அனைவரும் நிலை குலைந்து போனார்கள். இப்போது அனைவரின் மனதையும் பயம் கவ்வி கொண்டது. அம்மு ருத்ராவின் ஊடலை உணர்ந்தவர்கள் அல்லவா!!! இந்த தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவு ஆகிவிடுமோ என அஞ்சினார்கள். அவர்களது அச்சம் சரிதான் என்பது போல் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியது.
பசுஞ்சோலைக்கு போகும் பிருந்தாவின் முடிவு ரிஷிக்கு பிடிக்கவில்லை. அனைவரும் அவ்வளவு சொல்லியும், கேட்காமல் சென்ற அவளின் மேல் கோபம் கொண்டான். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டது. அவனுடன் தொலைபேசியில் கூட பேசாமல் போக்கு காட்டினாள் பிருந்தா. அதில் ரிஷியின் முகம் சுருங்கி போனது. எப்போதும் போல் அவனுக்கு துணையாக இருந்து ஆறுதல் அளித்தாள் அவனின் மிரு பேபி.
பிருந்தா பசுஞ்சோலை சென்றதையும், ருத்ரா வெளிநாடு சென்றதையும் வைத்து கட்டுக்கதைகள் பரப்பப்பட்டது. அதோடு ரிஷி, மித்ரா ஒருவருக்கு ஒருவர் நல்ல நட்போடு துணையாக இருந்ததும் செய்திகளில் திரித்து சொல்லப்பட்டது. இது அனைத்திற்கும் ஒருவன் பின்னணியில் இருக்கிறான் என்பது தெரியாமல், இவர்கள் அந்த செய்தியை புறக்கணித்தனர்.
மித்ரா, ரிஷி இருவரும் எப்போதும் போல் தங்கள் மனதில் உள்ள கவலைகளை மறைத்து, புன்னகை எனும் அரிதாரத்தை பூசிக் கொண்டார்கள். ரிஷிவர்மாவும் அஜய் கண்ணாவும் எதிர் எதிர் துருவமாக ஒட்டாமல் முறைத்து நின்றனர். இவர்களுக்கு நடுவில் மாட்டிய மித்ரா அவதியற்றாள்.
இரவு பகல் பாராத அனைவரின் அயராத உழைப்பில் நாட்கள் ரெக்கையின்றி பறந்தது. இதோ இப்போது நல்லபடியாக சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
‘பரவாயில்லை நான் சொன்னதை கேட்டு நடிக்க ஒத்துக்கிட்டா! ஏதோ இதுலயாவது நான் சொன்னதை கேட்டாலே, சந்தோஷம்.’ என தன் நினைவுகளிலிருந்து மீண்ட அஜய் கண்ணா நினைத்தான்.
உண்மையில் நல்ல மனதோடு சொன்னானா??? அல்லது அவளை தன் வலையில் வீழ்த்த அடுத்த அஸ்திரத்தை எய்தினானோ???
அவனது பார்வை ரிஷியுடன் இணைந்து நடிக்கும் மித்ராவை வட்டமிட்டது. ஒரு பெருமூச்சுடன், ‘ஏன் ஏஞ்சல் என்னை உனக்கு பிடிக்காமல் போச்சு? நான் உன்னை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய தப்பா?’ என மனம் வெதும்பினான் அஜய் கண்ணா.
★★★
சிறு சிறு பிரச்சனைகளுடன் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வை மொத்தமாக திருப்பி போட்டது அந்த ஒரு நாள்.
பசுஞ்சோலையில் பிருந்தாவுக்கு குழந்தை பிறந்த நான்காவது நாள்.
அமெரிக்காவின் தென் பகுதியில் தன் ப்ராஜெக்ட்டில் முழுமூச்சாக ருத்ரா ஈடுபட்டிருந்த அந்த நாள்.
அதே அமெரிக்காவின் வட பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில்:
ரிஷிவர்மாவின் கைகள் பூச்செண்டென மித்ராவை ஏந்த, பூம்பாவையின் கரமோ மாலையென ஆடவன் தோள் சேர, இருவர் விழிகளும் மயக்கத்துடன் தழுவிக்கொள்ள, கால்
கள் தளாட தன் அறைக்குள் நுழைந்த ரிஷிவர்மா கதவை மூடும் காட்சியின் வீடியோ பதிவுகள் வைரலானது.
தாளம் தப்பிய இந்த ராகம் இசைக்குமா???