ராகம் 8

ராகம் 8

ராகம் 8

உறக்கமா? மயக்கமா? என தெரியாதளவு, இரவு முழுவதும் தன்னை மறந்து துயில் கொண்டிருந்த தன்னவளை, கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ருத்ரேஸ்வரன். மனம் முழுதும் வேதனையின் அரசாட்சி. 

அவளது கரத்தை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டு, “ஐ அம் சாரி அம்மு. உன்னோட இந்த நிலைக்கு ஒரு வகையில் நானும் காரணம். என்னை மன்னிச்சிடு.” என திரும்பத் திரும்ப, தன் சுயநினைவில் இல்லாதவளிடம் மன்னிப்பை யாசித்தான்.

விடிவதற்கு சொற்ப நேரமே இருக்கும்போது, அவன் உடலும் மனமும் சோர்ந்து போய் தானாக உறக்கத்தை தழுவியது. விடிந்தது கூட தெரியாமல் ஆழ்ந்து உறங்கினான்.

சூரியக்கதிர் முகத்தில் அறைய மெல்ல உறக்கத்திலிருந்து எழுந்தாள் அம்மு. இரவில் நடந்த அனைத்தும் கண்முன் காட்சியாக தோன்றியது. அது கனவா? நினைவா? என புரியாமல் குழம்பி தவித்தது அந்த பேதை உள்ளம்.

தன்னருகில் படுத்திருந்த தன்னவனை திரும்பி பார்த்தாள். இரவு நடந்த அனைத்தும் உண்மை என சாட்சி சொல்லியது, அவன் உடலிலிருந்த கன்றிபோன காயங்கள்.

தன் கைகளை பொக்கிஷம் போல் பாதுகாப்பாக பிடித்திருந்த அவனின் அன்பு புரிந்தது. அவன் உடலெங்கும் தான் செய்த லீலைகளின் கோலம் முகத்தில் அறைந்தது. மனமெங்கும் குற்ற உணர்வு சூழ்ந்தது. எவ்வளவு ஆசையோடும் எதிர்பார்ப்போடும் ஆரம்பித்த நாள், மிகுந்த கசப்போடு முடிந்ததை நினைத்து உள்ளம் வேதனை கொண்டது.

அவன் பிடியிலிருந்த தன் கரத்தை, அவன் உறக்கம் களையக் கூடாது என மெல்ல விடுவித்தாள். விடுபட்ட கரத்தை கொண்டு, தான் ஏற்படுத்திய காயத்தை வருடினாள். மனதுடன் சேர்ந்து கண்களும் கலங்கியது.

“குட் மார்னிங் அம்மு. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு அழகான விடியல்.” எதுவுமே நடவாதது போல் ருத்ரேஷ்வரனின் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. 

“நீ… நீ… தூங்…கலை…யா?” குற்ற உணர்வோடு வார்த்தைகள் திக்கியது.

“தூங்கிட்டு தான் இருந்தேன். நீ அசையவும் நானும் முழிச்சிட்டேன்.”

“என்னால உன்னோட நிம்மதி போச்சு. இப்போ உன் தூக்கமும் போச்சா?” சோர்ந்து போன வார்த்தைகள் பெண்ணிடம்.

இப்போது அவளது மனநிலை எப்படி இருக்கும் என புரிந்தவன், எழுந்து அவள் முகம் பார்க்க அமர்ந்து, “எனக்கு எதிரிங்க ஜாஸ்தி அம்மு. அதனால் எப்பவும் விழிப்போட இருப்பேன். இப்ப சில வருஷங்களா சின்ன சத்தம் கேட்டாலும் முழிச்சிடுவேன். இதுக்கு நீ எந்த வகையிலும் காரணமில்லை.” என்றான் மென்மையாக.

“ஆனா இதுக்கு நான் தானே காரணம்.” என அவன் உடலிலிருந்த காயத்தை வருடினாள்‌.

அவள் கரத்தை பற்றியவன், அவள் விழிகளுக்குள் ஊடுருவி, “இந்த காயத்தை ஏற்படுத்தினது நீயா இருக்கலாம். ஆனா அதுக்கு காரணம் நான் தான.”

“நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு நீ எப்படி காரணமாவ?”

“உனக்கு நடந்த அநீதிக்கு ஒருவகையில் நானும் காரணம். அதை மறக்க முடியாம, உன் சுய நினைவில் இல்லாதப்ப நடந்ததுக்கு, நீயும் எப்படி காரணமாவ?” கேள்வியாகவே முடித்தான்.

“இதுக்கு தான் சொன்னேன் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு.”

அவளை தன் மார்புடன் அணைத்தவன், “என் வாழ்க்கையில் வேற யாருக்கும் இடமில்லை.” என்றான் உறுதியாக.

“ஒரு கணவனுக்கு நியாயமா தர வேண்டியதை கூட, என்னால் தர முடியாம போச்சு.”

“எனக்கு அது தேவையில்லை.”

அவனது அணைப்பிலிருந்து விலகியவள், “ப்ச்! வாய் வார்த்தையா சொல்றதுக்கு நல்லா இருக்கும். நடைமுறைக்கு சாத்தியப்படாது. கொஞ்ச நாள்ல எல்லாம் சலிச்சு போயிடும்.”

“இங்க பார் அம்மு. ஒரு மனுஷனுக்கு அந்த தேவை இருக்கும். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் அது மட்டும் வாழ்க்கை இல்லை.”

“அதுவும் தேவைதான?”

“ஒரு கணவன் மனைவிகிட்ட முதலில் எதிர்பார்க்கிறது அன்பையும், காதலையும். அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம். கட்டிலுக்கு மட்டும் தேவைனா எத்தனையோ பெண்கள் உலகத்தில் இருக்காங்க. நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது மனைவிக்கான அன்பையும் காதலையும்.”

“அப்ப அந்த தேவைக்கு, வேற எவளையாவது தேடி போவியா? உன்னைக் கொன்னு போடுவேன் ஜாக்கிரதை.” ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள். 

‘வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்க சொன்ன மூஞ்சிய பார்.’ என மனதில் நினைத்தவனின் முகம் புன்னகையை பூசியது.

“என்ன இளிக்கற? அப்ப அந்த ஐடியா இருக்கா?” முறைத்தாள். அவனது புன்னகை மேலும் விரிந்தது.

“பாத்தியா நீ சிரிக்கிற. அப்ப வேற ஒருத்தியை தேடி போவ.” என்றவளின் முகம் அழுகைக்கு தயாரானது.

“அப்ப, அப்ப குழந்தை மாதிரியே பிஹேவ் பண்ற அம்மு. சோ ஸ்வீட்.” என அவளது மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன், “இப்படி கண்ணை உருட்டி, உருட்டி என்னை வசியம் பண்ற வசியக்காரி உன்னை விட்டுட்டு போவேனாடி? இனி இந்த கை உன்னைத் தவிர வேறு யாரையும் தீண்டாது. இது நான் உனக்கு கொடுக்குற ப்ராமிஸ்.”

அவன் சத்தியத்தில் மகிழ்ந்தவள், “நீ ஒன்னும் ப்ராமிஸ் பண்ண வேண்டாம் போ.” போலியாக முறுக்கினாள்.

“அப்ப நான் வேற யார்க்கிட்டயாவது போகவா?” அவளை சீண்டினான்.

புசுபுசுவென கோபம் தலைக்கு ஏற, அவனை பிடித்து படுக்கையில் தள்ளியவள், “இனி உனக்கு அந்த நினைப்பு வருமா? நினைப்பு என்ன நினைப்பு, அப்படி வார்த்தை கூட உன் வாய்ல வரக்கூடாது.” என அவன் முடியை பிடித்து ஆட்டி, அவனை அடி பின்னி எடுத்தாள்.

சுகமாக அவள் அடியை சிறிது நேரம் வாங்கியவன், “மை நீலாம்பரி இஸ் பேக்.” என அவளது கரத்தை பிடித்து தடுத்து, “ஏண்டி நேத்து அம்மாகிட்ட விளையாட்டுக்கு சொல்றேன்னு பார்த்தா, உண்மையா அடிக்கிற?”

“ஆமாண்டா அப்படித்தான் அடிப்பேன். இன்னொரு தடவ வேற யார் கிட்டயாவது போறேன்னு சொல்லு, சாப்பாட்டுல விஷத்தை வச்சு கொன்னுடறேன். வேண்டாம் வேண்டாம் நீ தூங்கும் போது அம்மிக்கல்ல தலையில போட்டு கொன்னுடறேன். அதுவும் வேண்டாம..” என தொடர்ந்தவளின் வாயை அடைத்தவன், “சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு என்னை மர்டர் செய்யறதுக்கான லிஸ்ட்டை அடுக்கிட்டே போற?” என பயந்தவன் போல் நடித்தான் அந்த சிம்ம ராஜா.

“ஆமா நீ வேற எவளையாவது பார்த்தனா, நான் சொன்னதுல ஏதாவது ஒன்னை கண்டிப்பா செய்வேன்.”

“டேய் ருத்ரா இனி நீ தூங்கும்போது ஹெல்மெட் போட்டுட்டு தூங்கணும் போல. ஸ்ட்ராங்கான ஹெல்மெட் வாங்கிடனும்.” என தனக்குத்தானே சத்தமாக முனங்கினான்.

ஏதோ சிந்தனையில், அவனது பேச்சை கவனிக்காதவள், “நைட் உன்னை ரொம்ப டிஸ்சப்பாய்ண்ட் பண்ணிட்டேன்ல? எவ்வளவு ஆசையோடு இருந்த.”

‘என்னது மறுபடியும் முதல்ல இருந்தா? இப்பதான் மை நீலாம்பரி இஸ் பேக்ன்னு சந்தோஷப்பட்டேன்.’ என மனதில் கதறியவன், “அப்போ உனக்கு அந்த ஆசை இல்லையா?” பெண் மௌனமாக தலை குனிந்தாள்.

குனிந்த அவள் தலையை தன் கரங்களால் நிமிர்த்தி, “இதுல சங்கடப்பட்டு தலை குனிய எதுவுமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் பொதுவானது. நான் உன்னை தேடுறதும், நீ என் மேல் ஆசைப்படுறதும் இயல்பான ஒன்னு. நேத்து நைட்டோட நம்ம வாழ்க்கை முடிஞ்சு போயிடாது. இன்னும் எத்தனையோ இரவுகள் இருக்கு. உன்னோட மனசுல இருக்குற பழைய கசப்புகள் எல்லாம் மறைஞ்சு, என்கூட நீ சந்தோசமா வாழ்வ. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.”

‘எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.’ என பார்த்தவளின் பிறை நெற்றியில் இதழ் பதித்து, “எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதுவரை கூடல் இல்லாத அழகான வாழ்க்கையை வாழலாம்.” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி, “போ போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்து. நீ இப்படியே என் முன்னாடி இருந்தா அப்புறம் நடக்க போற விபரீதங்களுக்கு நான் பொறுப்பில்லை.” குறும்பாக கண் சிமிட்டினான்.

பிறகே தன் மேல் புடவை இல்லாமல், வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் இருப்பது உரைக்க, முகம் சிவந்தவள் தன் தளிர் கரம் கொண்டு அவன் கண்களை மறைத்தாள்.‌ “நீ என் கண்ணோட வேலையை தடுத்தா, அப்புறம் கை வேலை பார்க்க ஆரம்பிச்சிடும்.” மீண்டும் சீண்டினான்.

“எனக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சுனு சொன்ன, ஆனா இப்ப பார்த்தா உனக்கு தான் ரொம்ப ஜாஸ்தியான மாதிரி தெரியுது.” என அவன் தலையில் நறுக்கென கொட்டியவள் குளியலறை நுழைந்தாள். 

“ஹே நீலாம்பரி, நான் ஏற்கனவே சொன்னேன், உன்கிட்ட என் கேரக்டர், ஆட்டிட்யூட் எல்லாம் டோட்டலா சேஞ்சு ஆயிடுது. இந்த மயக்கு மோகினி என்னை என்னமோ செஞ்சுட்டா.” என அவள் காதில் கேட்க சத்தமாக கத்தினான்.

என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூப்போல் கொய்தவளே

என்னை ஏதோ செய்தவளே

பூப்போல் பூப்போல் என்

நெஞ்சை கொய்தவள்

★★★

பெற்றோர்களை சிறுவயதில் இழந்து, தன் ஒரே உறவான தாத்தாவையும் வாலிப வயதில் இழந்தான். அளவுக்கதிகமான சொத்து கைவசமிருக்க, தட்டிக் கேட்க உறவினர்களின்றி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என, மேல் தட்டு கலாச்சாரத்தில் ஊறி,  தனிக்காட்டு ராஜாவாக, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தான் ரிஷி வர்மா. 

அதற்கு அவன் தொழிலாக தேர்ந்தெடுத்த கவர்ச்சி உலகம் பெரிதும் உதவியது. அவனின் அழகு, கவர்ச்சி, திறமை அனைத்தும் அவனை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அவனின் அழகுக்கும் புகழுக்கும் மயங்கிய பெண்கள், திரை துறையில் கால் பதிக்கும் ஆசையில், அவனுடன் எல்லைகள் கடந்து பழகினர். ரிஷியும் தன் தனிமைக்கு துணையாக, இளமையின் தேடலுக்காக அவர்களை நாடினான். அவன் வாழ்க்கையில் அம்மு வரும் வரை, அது அவனுக்கு தவறாக தெரியவில்லை.

எப்போது அம்முவை உருக்குலைந்த ஓவியமாக கண்டானோ, அன்று முதல் அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ததில் அவனது தனிமை விலகியது.  தவறான பழக்கவழக்கங்கள் அடியோடு நின்றது. ஒருவர் கண்ணை பார்த்து, மற்றவர் மனதை அறிந்து கொள்ளுமளவு, அவர்களது நட்பு இறுகியது. 

ஒருவேளை ருத்ரேஷ்வரன் என்ற நபர், அம்முவின் வாழ்க்கையில் இல்லாமல் இருந்திருந்தால், அவர்கள் பழக்கம் நட்பை தாண்டி திருமணத்தில் முடிந்திருக்கலாம். இப்போது அதற்கான வாய்ப்பு  இல்லாததால் நட்புடன் பயணிப்பர்.

கடந்த ஐந்து வருடங்களாக கண் படும் தூரத்திலேயே இருந்த பெண்ணை, இரவு முழுவதும் காணாத ரிஷியின் மனம் தவித்தது. அவளுக்கு துணையாக, பாதுகாப்பாக எப்போதும் அவளுடனே இருந்தவனுக்கு, இந்த சின்ன இடைவெளி கூட வருத்தத்தை அளித்தது.

பிருந்தாவுடனான கூடலுக்கு பின் அரைகுறையாக கண்ணசந்தவன், மனதில் சொல்லத் தெரியாத வருத்தம். அவள் நிலையை உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டானோ என்னவோ? அதனால் விடிந்ததும் பெரிய வீட்டுக்கு ஓடி வந்து விட்டான்.

அவனை வரவேற்ற லட்சுமியும் அம்பிகாவும் அவனுக்கு தேநீர் வழங்கிவிட்டு, காலை விருந்து தயாரிக்க பாட்டியுடன் சமையலறை புகுந்து கொண்டனர்.  ஆண்கள் வெளியே சென்றுவிட்டார்கள் போல் யாரும் கண்ணில் பட காணோம்.

அம்முவின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தான் ரிஷி வர்மா. எப்போதும் எழுந்ததும் அவள் முகத்தை பார்த்து பழக்கம்.

அம்மு தயாராகி கீழே வரும் போது ஆவலாக அமர்ந்திருந்த ரிஷியை கண்டாள். அவனை கண்டதும் சூரிய கதிரை கண்டு மலரும் சூரியகாந்தி போல் அவளது முகம் மலர்ந்தது.

“வரு” என அவனை விரைந்து நெருங்கினாள். அவனின் முகமும் மலர்ந்தது, அவளது அந்த ஒற்றை வார்த்தை கேட்கும் வரை.

ஆம்! அவளது வரு என்ற ஒரு வார்த்தை அவனை நிதானிக்க வைத்தது. அவள் எப்போதும் அழைக்கும் அதே வார்த்தை, ஆனால் ஏதோ ஒரு மாற்றத்தை அதில் உணர்ந்தான். ரஷியின் கண்கள் அவளை கூர்ந்து கவனித்தது. அவள் முகம் புன்னகையை பூசியிருந்தாலும், விழிகளில் ஏதோ ஒரு தவிப்பு. மிருவின் விழியிலிருந்த கலக்கத்தை உடனே புரிந்து கொண்டான். அவன் மனதிலும் கலக்கம் சூழ ஆரம்பித்தது.

வார்த்தைகளின்றி அவள் மனதை அறிந்து கொள்ளும் ஆத்மார்த்தமான நட்பு. ‘நீ செல்லும் முட்பாதையில் துணை இருந்து, அதை நந்தவனமாக மாற்றுவேன்’ என நம்பிக்கை அளிக்கும் அழகான நட்பு. ‘நான் எப்போதும் உனக்கு கை கொடுப்பேன்.’ என்ற தூய நட்பு.

தன் வலது கையை நீட்டி அழைத்தான். அந்த கரத்தை இறுக பற்றி அவனருகில் அமர்ந்தவள், அவனது தோள் சாய்ந்தாள். தன் கையை பிடித்திருந்த அவளது கரத்திலிருந்த நடுக்கம், அவளது பயத்தின் அளவை தெளிவாக உணர்த்தியது. அவள் பயம் எதற்காக இருக்கும் என புரிந்தவனின் மனம் ரணமாக எரிந்தது. தன் கண்களை இறுக மூடி தன் உணர்வை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“மிரு கோயில்ல பொங்கல் வைக்கணும்ன்னு பாட்டி சொன்னாங்க. அதை முடிச்சிட்டு சென்னை கிளம்பலாம். நாளைக்கு ரிசப்ஷன் டிரஸ் வீட்டுக்கு வந்துடும். அதை போட்டு பார்த்து ஆல்டர் பண்ணிக்கோங்க. ஃபங்ஷன் சாப்பாட்டில் ஏதாவது டிஷை மாத்தனும்னா, கேட்டரிங் ஆட்கள்கிட்ட சொல்லிடு.” என வரிசையாக அடுத்தடுத்து செய்ய வேண்டியதை சொல்லி, அவள் மனதை திசை திருப்பினான்.

இந்த காட்சியை வீட்டுக்குள் நுழைந்த பிருந்தாவும், தன் அறை வாசலிலிருந்து ருத்ராவும் கண்டனர்.

ருத்ரா மனதில் முள் தைத்தது போல் சுருக்கென்றே வலி தோன்றியது. பின் ஏதோ முடிவு செய்தவனாக தன் அறைக்குள் சென்று மறைந்தான். பிருந்தா அவர்களை நெருங்கினாள். 

புன்னகை தாங்கியிருந்த அம்முவின் முகத்திலிருந்து எதையும் உணராத பிந்து, ரிஷியை கண்டு முகம் சிவந்தவள், அம்முவை அழைத்துக் கொண்டு சமையலறை புகுந்தாள். 

ருத்ராவின் நம்பிக்கை மெய்க்குமா??

ஸ்ருதி சேராத இந்த ராகம் ரசிக்குமா??

 

Leave a Reply

error: Content is protected !!