ராகம் 9
ராகம் 9
ராகம் 9
தன்னை பார்த்து முகம் சிவந்து சென்ற பிந்துவின் மீது ரிஷியின் பார்வை பதிந்து விலகியது. ஆனால் அதை உணரும் நிலையில் அவன் இல்லை. இப்போது அவனுடைய கவலையெல்லாம் அம்முவின் வாழ்க்கையை பற்றியிருந்தது.
இத்தனை வருடங்களாக அம்முவுடனே இருந்தவனுக்கு, என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தது. சம்பவம் (வன்கொடுமை) நடந்த புதிதில் ஆண்களை கண்டாலே பயந்து நடுங்கிய, அம்முவின் முகம் கண்முன் தோன்றி அவனை வதைத்தது.
ஆரம்பத்தில் சில தினங்கள், தான் உட்பட ஆண்கள் யார் கிட்ட வந்தாலும் பேயை கண்டது போல் பயந்து நடுங்கினாள். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அந்த சம்பவத்திலிருந்து வெளியே வந்தால். அதன் பிறகே அவளின் பூர்விகத்தை பற்றி தெரிந்து, பெரிய வீட்டை தொடர்பு கொண்டு, கார்த்திக்கிடம் பேசி பிருந்தாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான் ரிஷி வர்மா .
இந்த சில வருடங்களாக அவளுக்கு அந்த பாதிப்பு இல்லை. ஆனால் அது ஆழ் மனதில் புதைந்து இருந்திருக்கிறது. இப்போது ருத்ராவின் நெருக்கம், அதை மேலெழுப்பி அவளுக்கு பயத்தை குடுத்திருக்கிறது என சரியாகவே புரிந்து கொண்டான். புரிந்த விஷயம் அத்தனை உவப்பானதாக இல்லை.
அம்முவின் நிலையை ருத்ராவால் புரிந்துகொண்டு, அவளை ஏற்றுக்கொள்ள முடியுமா என பயந்தான். ஆழ் கடலில் தத்தளிக்கும் அவளை, ருத்ரா கரையேற்றுவானா என தவித்தான். இதனால் மிருவின் வாழ்வு பாதிக்குமா என அஞ்சினான். ஒரு ஆணாக ருத்ராவின் உணர்வுகளை நினைத்து கவலை கொண்டான். இப்போது அவன் மனம் முழுதும் அம்மு ருத்ராவின் வாழ்வை நினைத்து தவித்தது.
இதைக் குறித்து ருத்ராவிடம் பேச வேண்டும் என முடிவு செய்தான்.
★★★
சைவ உணவில் காலை விருந்து அமர்க்களப்பட்டது. குலதெய்வ கோயிலுக்கு செல்வதால் அசைவ வகைகளை தவிர்த்திருந்தனர்.
காலை உணவை முடித்த பிறகு அனைவரும் ருத்ரேஸ்வரனின் தந்தை வழி குலதெய்வ கோயிலுக்கு புறப்பட்டனர்.
பசுச்சோலை கிராமத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது அந்த கோவில். நீண்ட வருடங்களுக்குப் பிறகு செல்கிறார்கள். அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே கிளம்பினார்கள்.
அந்த இடத்தை காணும் போதே மனதுக்கு இதமாக இருந்தது. பச்சை பசேலென்ற அழகான வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்திருந்த, ஒரு சிறிய மலையின் மேலிருந்தது அவர்கள் குலதெய்வ கோவில். மலையை ஒட்டி சிறிய ஓடை சலசலத்து ஓடியது.
காரை விட்டு இறங்கிய அம்முவின் கண்கள் அந்த ஓடையை கண்டதும், அதுவரை இருந்த வெறுமை மாறி ஆசை மின்னியது. ஓரக் கண்ணால் ருத்ராவையும் ரிஷியையும் கண்டாள். அவர்கள் கவனம் தன் மேல் இல்லை என்பதை உணர்ந்து, அடுத்த காரிலிருந்து இறங்கிய ரேகாவுக்கு சைகை காட்டினாள். அவளும் சைகையிலே சம்மதத்தை கூறினாள். உடனே அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட தொடங்கினாள் அம்மு.
பெண்கள் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, அவர்களுடன் இணைந்து கொண்டாள் பிருந்தா. ஆண்கள் காலாற நடந்து வர கிளம்பி விட்டார்கள். அவர்களுடன் கார்த்திக் குழந்தையை தூக்கி சென்றான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அம்முவும் ரேகாவும், யார் கவனத்தையும் கவறாமல் அங்கிருந்து நழுவி, ஆண்கள் சென்றதற்கு எதிர்பக்கமாக சென்று நீரோடையை அடைந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஆண்கள் திரும்பினார்கள். ரிஷியுடன் பேசிக்கொண்டு வந்த ருத்ராவின் கண்கள் தன்னவளை தேடி அலைந்தது. அவளை காணாமல் புருவங்கள் முடிச்சிட்டன.
ருத்ராவின் திடீர் அமைதியை உணர்ந்த ரிஷி நிமிர, குழப்பத்துடன் அலைபாய்ந்த அவன் முகத்தை கண்டான். அவன் அம்முவை தேடுவதை உணர்ந்தவன், சிரிப்புடன் அவனும் தேடினான். அவர்கள் தேடும் நபர் அங்கிருந்தால் தானே அவர்கள் கண்ணில் அகப்பட. அவள்தான் எப்போதோ கம்பி நீட்டி இருந்தாலே.
அவர்களை நெருங்கிய கார்த்திக், “பாப்பா அழுகுது. இந்த ரேகா எங்க போனா தெரியலை. ஆமா நீங்க யாரை தேடுறீங்க?” என்றான் ரேகாவை தேடிக்கொண்டே.
“மிருவை தேடுறோம்.” பதில் வந்தது ரிஷியிடம் .
“ஓ.. ரேகா… அம்மு ரெண்டு பேரையும் காண..” எதையோ புரிந்து கொண்ட கார்த்திக்கின் பேச்சு சட்டென்று நின்றது.
அவன் புரிந்து கொண்டதை ரிஷியும் புரிந்து கொண்டான். “ரெண்டு கூட்டு களவாணிகள் வேலையா?” என்றான் ரிஷி சிரிப்புடன்.
“அப்படிதான் நினைக்கிறேன்.” கார்த்திக்கும் சிரிப்பில் இணைந்து கொண்டான். இவர்களது பேச்சு புரியாத ருத்ரா, “எனக்கு ஒன்னும் புரியல?”
“என் கூட வா. காட்டுறேன். அப்ப புரியும்.” என அவனையும் இழுத்துக் கொண்டு, நீரோடை சென்றார்கள்.
அங்கு பெண்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நீரை இறைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த பட்டுப் புடவை நன்றாக நனைந்திருந்தது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு, திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க, அங்கு ஆடவர் மூவரும் இவர்களை முறைத்து நின்றார்கள்.
“போச்சு நல்லா மாட்டிக்கிட்டோம்” என அம்மு கிசுகிசுக்க, “ஆமாண்டி, இப்ப என்ன பண்றது?” ரேகாவும் அதேபோல் கிசுகிசுத்தாள். “எவ்வளவோ பாத்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா? விடு சமாளிச்சுக்கலாம்.” என்றால் அம்மு அசால்டாக.
“அப்படிங்கற! இப்ப பார் என்னோட பெர்பார்மன்ஸ” என்ற ரேகா, ஓடையை விட்டு வெளியே வந்து, “பாப்பா பசில அழுகுதா அத்தான்? என்கிட்ட குடுங்க இனி நான் பார்த்துக்குறேன்.” என குழந்தையை வாங்க கை நீட்டினாள்.
குழந்தையை அவளிடம் தராமல், “இப்படி நனைஞ்சு போயிருக்க. ஈரத்தோடு பாப்பாவ தூக்கி சளி பிடிக்கிறதுக்கா?” என முறைத்தான் கார்த்திக். ‘அச்சச்சோ இந்த மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டோமே.’ மனதில் நினைத்தவள், பாவமாக அம்முவை திரும்பி பார்த்தாள். அவளும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் முழித்து நின்றாள்.
அசட்டு சிரிப்புடன் மீண்டும் கார்த்திக்கிடம் திரும்பிய ரேகா, “எனக்கு ஒரு டிரஸ் கார்ல இருக்கு அத்தான். அத மாத்திட்டு பாப்பாவ தூக்கிக்கறேன். வாங்க சீக்கிரம் போகலாம்.” என அவனை இழுத்துச் சென்றாள்.
“ரேகா.. ரேகா.. ரேகா நில்லடி.” என அம்மு கூப்பிடுவது காதில் விழுகாதவள் போல் அங்கிருந்து நழுவினாள். ‘துரோகி ரேகா’ என மனதில் திட்டியவள் அசடு வழிய ஆடவர்களை கண்டாள்.
“என்ன மிரு இது? சின்ன புள்ள மாதிரி விளையாடி, டிரஸெல்லாம் ஈரம் பண்ணியிருக்க. உடம்புக்கு ஏதாவது வரப்போகுது. உனக்கு மாத்திக்க வேற டிரஸ் இருக்கா?” என அக்கறையாக ரிஷி கேட்டான்.
“வேற ட்ரெஸ் இல்ல வரு. ஆனா இந்த வெயில்ல அப்படியே காத்தாட நடந்தா காஞ்சிரும்.”
அவள் பதிலில், ருத்ரா கோபம் கொள்வானோ? என நினைத்த ரிஷியின் பார்வை ருத்ராவை அடைந்தது. ஆனால் ருத்ராவோ, அம்முவை கண்டு தன்னை மறந்து நின்றான்.
“ருத்ரா… ருத்ரா..” என இரு முறை அழைத்தும் அவனிடம் பதிலில்லை. அவன் கடந்த காலத்திற்குள் பயணித்திருக்கும் போது எப்படி பதில் வரும்? திரும்பினால் அம்முவிடமும் இதே நிலை. தலையில் அடித்துக் கொண்ட ரிஷி, “என்னமோ பண்ணுங்க? சீக்கிரம் வந்து சேருங்க.” என அவர்களுக்கு தனிமையளித்து அகன்றான்.
அம்மு, ருத்ரா இருவரின் நினைவும் ஐந்து வருடங்களுக்கு முன் ஆற்றில் நடந்த நிகழ்வுக்கு சென்றது.
சிறு பெண்ணாக கவலைகளின்றி சுற்றி திரிந்த அம்முவிற்கு, அவளது பெண்மையை புரிய வைத்தது அன்றைய ருத்ராவின் தொடுகை. அதற்கு முன்பும் தண்டனை என்ற பெயரில் அவளுக்கு முத்தமிட்டிருக்கிறான். அதை எளிதாக கடந்தும் விட்டாள். ஆனால் அன்று அந்த ஆற்றங்கரையில் வைத்து, அவன் அத்துமீறியதை அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.
அவன் கை ஜாலத்தில் அவள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு பெண்ணின் உடல் தேவையை பற்றி புரிந்துக்கொண்ட தினம் அது. அவள் தேகத்திலும் மனதிலும் பல மாற்றங்களை விதைத்தது அவனது தொடுகை.
எத்தனை நாள் விழிமூடி அந்த ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறாள். அவனால் மட்டுமே தன் பெண்மையை மலர வைக்க முடியும், என்ற உண்மையை வெகு தாமதமாக புரிந்துக்கொண்டாள்.
அன்று கோபத்திலிருந்த இரு உள்ளமும், அடி மனதில் புதைந்திருந்த தங்கள் காதலை உணராமல் போனது விதிசெய்த சதி. அதை அவர்கள் உணர்ந்து தெளியும் வேலை, காலம் கடந்திருந்தது.
அப்போது அவன் கைகளில் உருகி குழைந்த தன் தேகத்தை நினைத்தவளின் முகம் இப்போது சிவந்தது. அவளது சிவந்த முகத்தை ஆசையோடு பார்த்தான் ருத்ரேஷ்வரன்.
பாவம் அவனால் பார்க்க மட்டும் தானே முடியும்?
★★★
அம்முவின் புடவை காய்வதற்காக சிறிது நேரம் அங்கு வெயிலில் சுற்றியவர்கள் கோயிலை அடைந்தார்கள்.
அம்முவின் முகம் நன்றாகவே தெளிந்திருந்தது. பொய் புன்னகை மறைந்து முகம் மலர்ந்து விகாசித்தது. ரிஷியின் மனம் நிம்மதி கொண்டது.
ரிஷிக்கு நெருங்கிய சொந்தமென்று யாரும் இல்லாததால், அவர்களுக்கும் சேர்த்து இங்கேயே பூஜைகள் நடந்தது. இரு பானைகளில் சர்க்கரை பொங்கல் செய்து சுவாமிக்கு படையலிட்டனர். புதுமண தம்பதிகளின் வாழ்க்கையும் இதே போல் தித்திப்பாக இருக்க வேண்டும் என வேண்டி, அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து, மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவர்களது மகிழ்ச்சியை கூட்டுவது போல், பப்பு ஒரு இனிய செய்தியோடு மாலையில் அவர்களை சந்தித்தான்.
★★★
கோவிலில் இருந்து திரும்பியவர்களுக்கு இப்போது கறி விருந்து தொடங்கியது. திருமணமான தம்பதிகளுக்கு கறி விருந்து வழங்குவது வழக்கம். குறிப்பாக கிராமங்களில் இது ஒரு கட்டாய சடங்கு. சொந்த பந்தம், உறவினர்கள் அனைவரையும் அழைத்து இந்த விருந்தை கொடுப்பார்கள்.
அடுத்து சென்னையில் வரவேற்பு இருப்பதால், உடனடியாக இவர்கள் கிளம்ப வேண்டிய சூழல். இப்போது கிளம்பினால் மீண்டும் எப்போது வருவார்கள் என தெரியாது. அதனால் கறி விருந்தை தாமதிக்காமல் உடனே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கிராமிய உணவை பற்றி சொல்லவும் வேண்டுமா? அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் போதே, வாசனை மூக்கை துழைத்தது. பசி இல்லாத வயிற்றிலும், பசியை தூண்டி விடும் மனம். அம்மியில் அரைத்து செய்த மசாலாவின் மனமே அலாதி. அப்புறம் சுவையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
நடப்பது, ஓடுவது, நீந்துவது அனைத்தும் உணவாக மாறி இருந்தது. ஊரில் உள்ள அனைவருமே தங்கள் வீட்டு விசேஷம் போல் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார்கள். ரிஷி, ருத்ரா இருவருக்குமே இது ஒரு புது அனுபவமாக இருந்தது.
ஒற்றை பிள்ளையாக, சொகுசான மேல் தட்டு வர்க்கத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு, இந்த கிராம மக்களின் எளிய வாழ்க்கை முறையையும், ஒற்றுமையுடன் இருக்கும் அவர்களது பாசத்தையும் அதிசயமாக கண்டார்கள். அதே சமயம் ரசிக்கவும் செய்தார்கள்.
அவர்கள் கோவிலில் இருந்து வரவே தாமதமாகிவிட, விருந்து முடியவும் தாமதமானது. அதனால் அவர்களது பயணம் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
★★★
அனைவரும் வரவேற்பறையில் பேசிக் கொண்டிருக்கும் போது, பப்பு ஸ்வீட்டுடன் மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்தான். அவனுடன் சோட்டு, கிட்டு, பிங்கி மூவரும் தொங்கிப் போன முகத்துடன் வந்தனர்.
நேரே அம்முவிடம் வந்து, ஒரு ஸ்வீட்டை எடுத்து அவள் வாயில் திணித்தவன், “அம்மு நானும் சென்னை வாசி ஆகிட்டேன். சீக்கிரம் சென்னை காலேஜ்ல சேரப் போறேன்.” என மகிழ்ச்சியான செய்தியை கூறினான். அவன் சொன்னதை கேட்டு மகிழ்ந்த அம்முவின் கண்களில் நீர் நிறைந்த விட்டது. இனிப்பை அவன் வாயில் திணித்து வாழ்த்தினாள்.
ஆம்! அவனுக்கு சென்னையில் நல்ல பொறியியல் கல்லூரியில், மெரிட்டில் இடம் கிடைத்திருக்கிறது. அங்கு விடுதியில் தங்கி படிப்பை தொடர போகிறான்.
அந்த செய்தியில் அனைவரும் மகிழ்ந்தனர். இனிப்பை அனைவருக்கும் கொடுத்தான்.
அப்போது சோகமாக நின்றவர்களை பார்த்த பிந்து, “நீங்க மூணு பேரும் ஏன் சோகமா இருக்கீங்க?”
“அவன் சென்னை போறான்ல அதுதான் பிந்து அக்கா.” சோட்டு.
“நல்ல விஷயம்தானா. அதுக்கு எதுக்கு சோகமா இருக்கீங்க?” புரியாமல் பிந்து கேட்டாள்.
“இல்லை எங்கள விட்டுட்டு அவன் மட்டும் போறான்.” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த கிட்டு.
“அதுக்கு?” பிந்துவுக்கு சிரிப்பு வந்தது.
“இல்ல நாங்க அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். முதல் அம்மு போனா, இப்போ இவனும் போறான், அதுதான் சோகமாகிட்டோம்.” வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் பிங்கி. அவளின் ஆக்ஷனில் அனைவருமே சிரித்துவிட்டனர்.
“ஏன்டா அவன் காலேஜ் படிக்க தானே வரான். என்னமோ ஊர் சுத்த உங்கள விட்டுட்டு கிளம்புற மாதிரி பேசுறீங்க?” என்றான் ரிஷி சிரிப்புடன்.
“போங்க மாமா. நாங்களே அவனை பிரியப் போறோம்ன்னு ரொம்ப சோகமா இருக்கோம்.” சிணுங்கினால் பிங்கி.
ஜெர்கான ரிஷி, “என்ன தீடீர்னு மாமா சொல்லுற?”
“பிந்து அக்காவை கல்யாணம் பண்ண உங்களை மாமான்னு தான சொல்ல முடியும்.”
“பிந்து அக்காவா? அப்ப அம்முவை ஏன் அக்கா சொல்லல?”
“அம்மு எங்க ஃப்ரெண்ட். அவளை அக்கா சொல்ல மாட்டோம்.” என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்தான் சோட்டு.
“விடுங்க ரிஷி அவங்க எப்பவும் அப்படித்தான்” என்றாள் பிந்து சிரிப்புடன்.
“அப்ப சரி. அதை விடுங்க.” எளிதாக ஒதுக்கினான் ரிஷி.
“அதுலாம் முடியாது எங்க பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க.” கிட்டு விடாப்பிடியாக நின்றான்.
“நானா?” அலறினான் ரிஷி.
“நீங்களே தான்” என நமட்டு சிரிப்புடன் சொன்னாள் பிங்கி.
அவளை செல்லமாக முறைத்தவன், “பேசாம அடுத்த வருஷம் நீங்களும் வந்து சென்னைல காலேஜ் சேர்ந்துக்கோங்க. அப்ப எல்லாரும் ஒண்ணா இருப்பீங்க.” என ஆலோசனை வழங்கினான் ரிஷிவர்மா.
“இதுவும் நல்ல ஐடியா. நாங்க இல்லாம அவன நிம்மதியா இருக்க விட்டுடுவோமா?” என்றான் கிட்டு வில்லன் சிரிப்புடன்.
இங்கு இப்படி இவர்கள் வழக்காடிக் கொண்டிருக்க, ருத்ரா சிந்தனையின் பிடியில்.
ருத்ராவின் அமைதியை கவனித்த கார்த்திக் அவனை நெருங்கி, “என்ன ஆச்சு ருத்ரா?”
அவனை தீர்க்கமாக பார்த்த ருத்ராவின் பார்வை அம்முவிடம் திரும்பியது.
அவன் ஒரு கேள்வி கேட்க, அதை கேட்ட அனைவரும் அதிர்ந்து அவனை கண்டனர்.
ராகம் இசைக்கும்…