வெண்பனி 15

வெண்பனி 15
பனி 15
கௌதம் கிருஷ்ணா பனிமலரின் திருமணத்திற்கு முன்தினம்.
மணமகள் அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் பெண். விடிந்தால் கௌவுதமின் மனைவி. நினைவே கசந்து வழிந்தது. ஆனால் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
அறை குழுமையாக இருந்தாலும், அவளது மனதில் உள்ள புழுக்கம் நிம்மதியை இழக்க செய்தது. அதற்கு மேலும் படுத்திருக்க முடியாமல், மொட்டை மாடிக்கு சென்று ஈரக்காற்றை சுவாசித்து, தன் மன புழுக்கத்தை குறைக்க முயன்றாள். அதில் வெற்றி கிட்டியிருக்கலாம், கௌதம் அங்கு வராமலிருந்தால்.
“ஹாய் பேப்! என்னை மாதிரியே உனக்கும் தூக்கம் வரலையா? நாளைக்கு இந்த நேரம், நீ எனக்கு சொந்தமாகியிருப்ப. அதை நினைச்சாலே வானத்தில் பறக்கற மாதிரியிருக்கு.” என அவளருகில் நின்றவன் மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனால் அதன் பிரதிபலிப்பு பெண்ணிடமில்லை.
அவனை கண்டவளின் முகத்திலோ அப்பட்டமான வெறுப்பு. அவளின் அமைதியை உணர்ந்து அவளது முகம் பார்த்தான். அதில் மலர்ச்சி இல்லை. அதற்கு மாறாக இருந்த வெறுப்பை கண்டு மனம் வருந்தினான். அவனது மகிழ்ச்சி அப்படியே வடிந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் வெறித்திருந்த, நிலவை இவனும் வெறித்தான். அங்கு கௌதம் விரும்பாத மௌனம் ஆட்சி செய்தது.
அந்த மௌனத்தை கலைத்தது,”நீ நினைச்சது நடக்க போகுது. இப்போ உனக்கு சந்தோஷமா கௌதம்?” என்ற பனிமலரின் வெற்று குரல். அந்த வெறுமை குரல் அவன் உயிர் வரை சென்று தாக்கியது. அவளை திரும்பிப் பார்த்தான். அவளோ நிலவை விட்டு பார்வையை துளிகூட விலக்கவில்லை.”நான் ஒரு மடச்சி, உங்கிட்ட போய் கேட்கறேன் பார்? அதுதான் உன் சந்தோஷம் உன் துள்ளல் பேச்சில தெரியுதே.” என்று குத்தி பேசினாள்.
அவளின் குத்தல் பேச்சு சரியாக அவனை தாக்கியது,”சாரி புள்ள, நான் பண்ணது தப்பு தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. எனக்கு நீ வேணும் அவ்வளவுதான். உன்னை அடைய நியாயம், தர்மம் எதையும் பார்க்க மாட்டேன்” என குரலில் வருத்தம் இருந்தாலும் உறுதியாகக் கூறினான்.
மலருக்கு மனம் வலித்தது.’எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டான். இவனுக்கு என் மனதை பற்றி கவலையே இல்லையா?’ என நினைத்தவுடன், ஒரு கசந்த முறுவல் தோன்றியது.
“நியாயம், தர்மம் எதையும் பார்க்க மாட்ட சரிதான். அதோட சேர்த்து என் மனசையும் பார்க்க மாட்ட. கரெக்டா?”
“எனக்கு தெரியும் உன் மனசுல யாரும் இல்ல.”
“என் மனசில் யாரும் இல்லைனா உன்னை கட்டிக்கனுமா? எனக்குன்னு ஆசை, எதிர்பார்ப்பு எதுவும் இருக்காதா? சொல்லு” சீறினாள்.
“உன்னோட ஆசை என்ன? நான் நிறைவேத்துறேன்.” உறுதியிருந்தது.
“நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்? வேண்டாம் விட்டுடு”
“என்னன்னு சொல்லு?”
“விடுன்னு சொல்றேன்ல” எரிச்சல் எட்டி பார்த்தது.
“என் தலையை அடமானம் வைச்சாவது, உன்னோட ஆசையை நடத்தி காட்டுறேன்.”
“அது உன்னால முடியாது “
“நீ சொல்லு முடியுமா? முடியாதான்னு? நான் முடிவு பண்ணிக்கிறேன்”
“எனக்கு வரப்போற கணவன், என்னை மட்டும் மனசுல நினைச்சு, என் கூட மட்டும் வாழற, ஸ்ரீராமனா இருக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். இப்ப அதை உன்னால் நிறைவேத்த முடியுமா?” என்றாள் எள்ளல் குரலில்.
அவளின் ஆசையில் ஆணின் மனம் அடிபட்டு போனது. தன் வருத்தத்தை மறைத்து,”இதுவரை நான் ஸ்ரீராமனா இருந்ததில்லை. ஆனால் இப்போ உனக்கு சத்தியம் பண்றேன், நான் தாலி கட்டும் பெண்ணை தவிர, இனி வேற யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன்.” என உறுதி அளித்தான்.
பெண் அவனை நம்பாத பார்வை பார்த்தாள். “விடிஞ்சா கல்யாணம். நீ சத்தியம் பண்ணலைனாலும் நடக்கும். இனி ஒன்னும் பண்ண முடியாது. ஆனா ஒன்னு கௌதம், ஜெயிச்சுட்டோம்னு நெனச்சு ரொம்ப சந்தோஷப்பட்டுகாத, உன்னால எப்பவும் என் மனச ஜெயிக்க முடியாது.”
இப்போது வருத்தம் மறைந்து, அழகான புன்முறுவல் பூத்தது ஆணின் முகத்தில். “வெயிட் அண்ட் வாட்ச் பேப். எப்படி உன் மனச ஜெயிக்கிறேன்னு?”
அவன் கூறியதை கேட்டு அவனை முறைத்தவள் தனது அறைக்கு சென்றுவிட்டாள். இப்போது அந்த நிலவை ரசித்தான் முகத்தில் வாடாத அதே புன்முறுவலோடு.
நிலவில் அவனுக்கு தெரிந்தது, தங்களின் முதல் சந்திப்பில் கண்ட அவளது வசீகரிக்கும் முகம். பனிமலர், அன்பரசனுடன் பைக்கில் வந்து இறங்கிய காட்சி. தலைக்கவசத்தை கழட்டி ஆவலோடு கல்லூரியை வலம் வந்த அவளது கண்கள். அன்று அவள் முகத்திலிருந்த மலர்ச்சியும், கண்களிலிருந்த துறுதுறுப்பும், இவனை ஈர்த்தது. எப்போதும் அந்த மலர்ச்சியை காண இவன் மனம் ஏங்கியது.
ஆனால் இப்போது அவள் முகம் களையிழந்து காணப்பட்டது. அவளது மொத்த சந்தோஷத்தையும் பறிகொடுத்த தோற்றம். அவள் சந்தோஷத்தை பறித்தது தானே, அதை நினைக்கும் போதே அவன் முகத்திலிருந்த புன்னகை தேய்ந்தது.
அவள் புன்னகையை மீட்டெடுக்க வேண்டும். அது எப்படி? அடுத்து? என்ற கேள்வி, அவன் முன் பூதாகரமாக நின்றது.
†††††
காலை விடிந்தது
அது பெண்ணுக்கு அழகாக விடிந்ததா? என்பது பிற்காலத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆண் அவனுக்கு அழகாக இல்லை.
‘இன்னும் சிறிது நேரத்தில் அனைத்தும் முடிந்து விடும்’ என விரக்தியில் அமர்ந்திருந்தாள் பெண். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட புரியாமல், தான் உடுத்தும் புடவையின் நிறம் கூட உணராமல் பனி சிலையாக மாறி இருந்தாள்.
அழகு நிலைய பெண்ணின் கைவண்ணத்தில் ஜொலித்தாள். ஆனால் அந்த ஜொலிப்பு கண்களிலும் முகத்திலும் பிரதிபலிக்கவில்லை.
மணப்பெண் முழு அலங்காரத்தில் தயாராகி விட்டாள். இனி மாலை அணிவித்து மணவறைக்கு அழைத்துச் செல்வதே பாக்கி. அவளது அருகில் இருந்த ஒரு சில சொந்தகார பெண்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அலங்கார பெண்ணும் கிளம்பியிருந்தாள்.
இந்த நிலையில் மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சிலையாக அமர்ந்திருந்த பெண்ணின் செவியை தீண்டியது அந்த சலசலப்பு. முகத்தில் குழப்பம் சூழ மணமகள் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவளைக் கண்ட சுகந்தியின் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு.”வாடியம்மா வா. நீ நல்லா சீவி சிங்காரிச்சுக்கிட்டு நிக்கிற. உன்னை கட்டிக்க நெனச்ச பாவத்துக்கு, அந்தப் பையன் இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு கிடக்கான்.” என குரலை உயர்த்தி கத்தினார் சுகந்தி.
பனிமலருக்கோ என்ன நடக்கிறது? என ஒன்றும் புரியவில்லை. முகத்தில் குழப்பம் சூழ அங்கு கூடியிருந்த அனைவரின் முகம் கண்டாள். அனைவரின் முகத்திலும் வருத்தத்தின் சாயல். பிறகே அவர் சொன்னது உரைக்க, அவசரமாக பார்வை மணவறைக்கு சென்றது. அதுவோ அவளது மனதை போல் வெறுமையாக இருந்தது.
‘கௌதமுக்கு என்ன ஆச்சு? யாரிடம் கேட்பது? இந்த அரசு எங்கே போனான்?’ என அவளின் பார்வை சுழன்றது. அவள் தேடியவனோ கண்களில் படவில்லை.
இதற்குள் தீப்தி பேச ஆரம்பித்திருந்தாள். “கௌதம் மாதிரி ஒரு அழகனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ரொம்ப ஆடுனயே? இப்ப உனக்கு கடவுள் வச்சான் பாரு ஆப்பு.” என எள்ளி நகையாடினாள்.
இப்போது பொறுமை பறந்தது,”கௌதம் எங்க தீப்தி?”
“அவன் எங்கே இருப்பான்? உன்னை கட்டிக்க ஆசைப்பட்டான்ல, அதுதான் இப்ப ஆஸ்பத்திரில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கான்.”
“அச்சச்சோ கௌதமுக்கு என்ன ஆச்சு? எதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினாங்க?” உண்மையில் பதறித்தான் போனாள். ஒருவர் கஷ்டத்தில் சந்தோஷப்படுபவர்கள் மனிதர்களே அல்லவே?
“ம்ம் உன்னோட துரதிஷ்டம் அவனையும் பிடிச்சிருச்சு.” தீப்தியிடம் அலட்சியம்.
“தேவை இல்லாம பேசாத” கோபம் எட்டிப் பார்த்தது பனிமலர்க்கு.
“என் பொண்ண ஏன் அடக்க பாக்குற? அவ சொல்றதுல என்ன தப்பிருக்கு? பிறக்கும்போதே ஆத்தால முழுங்கின. அடுத்தடுத்து உன்னோட பாட்டி, தாத்தாவ முழுங்குன. இப்ப தாலி கட்டுறதுக்கு முன்னாடியே, மாப்பிள்ளையை அடிபட்டு படுக்கையில் போட்டுட்ட.”
பனிமலர்க்கு அவமானம் பிடுங்கி தின்றது. விழி நீர் திரண்டு நின்றது. இப்பவோ, அப்பவோ எந்த நிமிடம் வேணாலும் உதிர்ந்து விடும் அபாயம். கண்ணீர் விழியை தாண்டாமல் கட்டுப்படுத்தி நின்றாள். அதில் முகம் கண்றி சிவந்தது.
அவளது அவல நிலையை கண்டு, சுகந்திக்கும் தீப்திக்கும் ஏக மகிழ்ச்சி. மற்றவர்கள் வருத்தத்தில் மகிழும் இவர்கள் மனிதர்களா?
சுகந்திக்கு, ‘தன் வாழ்க்கையை பறித்தவளின் மகள்’ என்ற வன்மம். தீப்திக்கு ‘தன்னைவிட அழகில் சிறந்தவள்’ என்ற பொறாமை. ‘சிறுவயதிலிருந்தே அவள் துரதிஷ்டமானவள் என குத்தி காட்டி பேசுவது, கதிர் அரசனிடம் நெருங்காமல் பார்த்துக் கொண்டது, எப்போதும் அவளை அலட்சியமாக நடத்துவது’ என தன் பொறாமையை ஒவ்வொரு செயல்களிலும் காட்டிக் கொண்டிருந்தாள்.
அவர்களது பேச்சு நீண்டு கொண்டேயிருந்தது. அவர்களை அடக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு, தியாகராஜனும் சுசீலாவும் ஒரு மூலையில் நின்றனர். கார்த்திக், என்னதான் மகளின் மீது பாசத்தை கொட்டவில்லை என்றாலும், ஓரத்தில் சிறிதாக வலித்தது, தன் மீனாவின் சாயலில் இருக்கும் பெண்ணின் எதிர்காலத்தை நினைத்து.
“நல்லவேளை தாலி கட்டல, ஒரு வேளை கட்டி இருந்தா, அந்த பையன் மேலோகம் போயிருப்பான். உன்னோட ராசிக்கு உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது. உன்னை கல்யாணம் பண்ணிக்க எவன் முன் வருவான்?” என, சுகந்தியிடமிருந்து வார்த்தைகள் விஷ அம்புகளாய் வெளி வந்தது.
சரியாக அந்த நேரம், மண்டபத்தினுள் நுழைந்த அன்பரசனின் செவிகளை இந்த வார்த்தைகள் தீண்டியது.
இரவு தனலட்சுமியுடன் சண்டையிட்டு வீட்டுக்கு சென்றவன், ‘எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும்’ என மனதில் உறுதி பூண்டான். இந்த நினைவிலேயே நேரம் கடந்து உறக்கத்தை தழுவியவன், காலை விழிக்கும் போதும் தாமதமாகியிருந்தது.
அடித்துப் பிடித்து தயாராகி, மண்டப பார்க்கிங்கில் அவன் வாகனத்தை நிறுத்தும் போது, கௌதம் மருத்துவமனையில் இருக்கும் தகவல் சேர்ந்தது. அதில் பனிமலரின் நிலையை நினைத்து, பதறி போய் வந்த அன்பரசனுக்கு, இந்த வார்த்தைகள் பெருஞ்சீற்றத்தை உண்டாக்கியது.
எதைப்பற்றியும் சிந்திக்காமல், அவன் வாயிலிருந்து வந்திருந்தது, தன் நட்பை உயிருடன் கொல்லும் வார்த்தைகள்,”நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
அதே நேரம் கௌதமை, மருத்துவமனையில் சந்தித்து விட்டு, மண்டபத்தினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள் பழனிவேல், பருவதம்மாள் தம்பதியர் உடன் கதிர் அரசன்.
†††††
அவன் கூறியதை கேட்ட அனைவரிடமும் திகைப்பு. இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்த, சுகந்தியின் வாய் தன்னால் மூடியது.
சொற்கள் வெளிவந்த பிறகே, தான் கூறியது மூளையில் உரைத்தது அன்பரசனுக்கு. சில நொடிகள் ஸ்தம்பித்தவன் பனிமலரை காண, பெண்ணோ அவனை பார்வையால் சுட்டு பொசிக்கிக் கொண்டிருந்தாள்.
“ஐயோ மொட்டு! என்னை மன்னிச்சிடுடி. அவங்க உன்ன தப்பா பேசவும், அதை தாங்க முடியாம அப்படி சொல்லிட்டேன்.” என மன்னிப்பை யாசித்தவன், அவளை நெருங்கி அவள் கரத்தை பற்ற போனான், ஆனால் பனிமலரோ அவனை நெருங்க விடாமல், பின்னால் நகர்ந்தாள். அதில் ஆணின் மனம் காயப்பட்டு போனது.
“மொட்டு, மலர் ப்ளீஸ் டி. என்னை தப்பா நினைக்காத” என இறைஞ்சி நின்றான் அந்த ஆண்மகன்.
“இத்தனை நாள் பழகிய நம் நட்பை, களங்கப்படுத்திட்டியே அரசு? உன் கூட இருக்கும்போது எனக்கு எப்போதும் கிடைக்காமல் போன, என் அம்மாவின் அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தேனே, அப்பாவின் பாதுகாப்பை உணர்ந்தேனே, ஆசிரியரின் வழிகாட்டலை உணர்ந்தேனே, இது அனைத்தையும் ஒரே நொடியில் ஒன்றுமில்லாமல் தரைமட்டம் ஆக்கிட்டியே?” இப்போது கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகியது பெண்ணிடம்.
அவளை உயிராக நேசிக்கும் இரு ஆடவரின் மனமும் வலித்தது. ஒன்று நட்பாக, ஒன்று காதலாக.
“அதை நான் உணர்ந்து சொல்லடி. ஏதோ கோபத்தில் அப்படி சொல்லிட்டேன். உன்னை மனைவியா சத்தியமா என்னால் நினைச்சு கூட பார்க்க முடியாது” என கெஞ்சினான்.
“அது எனக்கு தெரியும். ஆனா உன்னைய விரும்பிட்டு இருக்க, அவளுக்கு புரியுமா?” என தனாவை காட்டினாள். அங்கு அவளோ கண்களில் கண்ணீரோடு, முகமெல்லாம் வீங்கி போய் உயிரை தொலைத்து நின்றிருந்தாள். இப்போது அன்பரசனின் முகம் இறுகியது.
“அவளைப் பத்தி பேசாத மொட்டு. ஐ ஹேட் ஹேர்” வெறுப்பு அப்பட்டமாக வழிந்தது குரலில்.
அதை உணரும் நிலையில் பனிமலர் இல்லை. மேலும் ஏதோ சொல்ல வாயை திறந்தாள். அப்போது ஒரு குரல்,”அரசு நீ போய் மணவறையில் உட்கார். பனிமலரின் கழுத்தில் தாலி கட்டு” என கம்பீரமாக ஒலித்தது. அது பழனிவேலை அன்றி வேறு யார் குரலாக இருக்க முடியும்?
அன்பரசன் கூறியதை கேட்டே அனைவரும் திகைத்துப் போயிருந்தார்கள், இப்போது பழனிவேல் கூறியதை கேட்கவும் அதிர்ந்தார்கள். எந்தவித அதிர்வும் இல்லாமல் சந்தோஷித்தது ஒரு உள்ளம். அது கதிர் அரசனின் உள்ளம்.
இவ்வளவு நேரம் பெண்ணின் கண்ணீரை, காண முடியாமல் முகம் இறுக நின்றிருந்த கதிர் அரசனின் முகம் இப்போது இளகியது. காதலோடு பனிமலரின் முகம் கண்டான்.
சுகந்தியும், தீப்தியும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள். ‘ஐயையோ முதலுக்கே மோசமா போச்சு. பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா, வருத்தத்தோட போயிருக்கும். இப்ப அரசு அவ கழுத்துல தாலியை கட்டிட்டா, நம்ம ஆசைப்பட்டதெல்லாம் மண்ணோட மண்ணா போய்விடுமே?’ என பயந்து போனார் சுகந்தி.
‘என்னது என்னோட மாமா, அவளை கல்யாணம் பண்ணிக்கனுமா? சுத்த பைத்தியக்காரத்தனம்.’ என கோபத்தில் பொங்கினாள் தீப்தி.
பெரு விஷயங்களில் விட்டுக் கொடுத்து போனாலும், சில விஷயங்கள் இழுத்துப் பிடித்து விடுவார் பழனிவேல். அவரிடம் தாழ்ந்து போக வேண்டிய சூழ்நிலை,”மாமா என்ன பேசுறீங்க? அரசுக்கு தீப்தின்னு சின்ன வயசுல பேசி முடிவு பண்ணியது, இப்ப மாத்த பாக்குறீங்க?”
“சின்ன வயசுல முடிவு பண்ணினதெல்லாம் பெரியவங்களானாலும், மாறாமல் இருக்கணும்னு அவசியம் இல்ல.”
“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என தீப்தி, சுகந்தி இருவரும் ஒரே மனதாக எதிர்த்தார்கள்.
“இதில் உங்க சம்மதம் முக்கியம் இல்ல” என்ற பழனிவேலின் கண்கள் கதிர் அரசனை நோக்கியது.
“பனிக்கு சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்” என்றான் எந்தவித தயக்கமுமின்றி.
இத்தனை கூட்டத்திற்கு நடுவே, அன்பரசனை மறுத்தது போல் கதிரை மறுக்க முடியாத பெண் மௌனத்தை தன் சம்மதமாக்கினாள். அவள் சம்மதித்த மகிழ்ச்சியில், கதிர் வானில் பறக்காத குறை.
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு, அதை முகத்தில் காட்டாதவாறு மணமேடை ஏறினான் கதிர் அரசன்.
பர்வதம்மாள் தன் மகள் சுசீலாவிடம் கண்ணைக்காட்ட, அவர் பனிமலரை மணவறையில் கதிரின் அருகில் அமர்த்தினார்.
மனம் நிறைந்த குழப்பத்துடன் கதிரிடம் மாங்கல்யம் வாங்கினாள் பனிமலர்.
பனியின் திடத்தில் கதிர் தோற்று உறையுமா?
கதிரின் வெப்பத்தில் பனி உருகி குழையுமா?