வெண்பனி 23

IMG-20220405-WA0023-66fba5ea

வெண்பனி 23

பனி 23

கதிரவன் மங்கிய அரை இருள், ஆள் அரவமற்ற சாலை, இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள், பறவைகளின் ரிங்காரம், தன் மனதிற்கு இனியவளுடன் பைக் பயணம். நாயகனும் நாயகியும் தனித்து செல்லும் அழகான பயணம்.

கோவிலில் கிடைத்த அமைதி மனதெங்கும் நிறைந்திருக்க, இப்போதும் அதே மௌனத்தோடு ஒரு பயணம். அந்த பயணத்தை கதிர் அரசன் மிகவும் ரசித்தான்.

‘இன்றைக்கே அனைத்தையும் பேசி விட வேண்டும்’ என்ற முடிவோடு, வேறு எங்கும் செல்லாமல் ரிசார்ட்டை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்.

குற்றால மெயின் அருவியிலிருந்து சற்றி தள்ளி இருந்தது அவர்களது ரிசார்ட். தனிமை விரும்பிகளுக்காக தொடங்கியது. அதனால் போக்குவரத்து எதுவுமின்றி, அவர்களது வாகனம் மட்டுமே அந்த சாலையில் பயணித்தது.

அவர்களுக்குள் இன்று ஏற்பட்ட கூடலின் தித்திப்பு, இன்னும் பெண்ணின் உடலை தகிக்க செய்தது. அந்த தகிப்பின் வெம்மை, பெண்ணின் முகத்தில் சிகப்பு வர்ணம் பூசிக் கொண்டது. கண்ணாடியில் அவள் முகம் கண்ட கதிரின் முகத்தில் வசீகர புன்னகை.

அழகாக ஆரம்பித்த பயணம், அதே அழகோடு ஸ்ணோ ரேஸ் ரிசார்டின் முன் முடிவடைந்தது. மனம் நிறைந்திருந்ததால், பசியும் இல்லை. அதனால் நேரே அவர்களது குடிலை அடைந்தனர்.

வரவேற்பறை சோபாவில் அமர்ந்த மலர்,’அடுத்து’ என்ற சிந்தனையின் பிடியில் தன் கைவிரல் நகங்களை கடித்தாள். சொல்ல தெரியாத தயக்கத்துடன் மௌனம் நிறைந்திருந்தது அந்த அறையில்.

“இது என்ன புது பழக்கம் பனி? நகம் கடிக்கிற.” கதிரின் குரலை கேட்டவுடன், டக்கென்று வாயிலிருந்து விரலை எடுத்தாள். அவளது செய்கையில் சிரிப்பு மலர்ந்தது ஆண் அவனுக்கு.

“பனி டிரஸ் மாத்தாத. கொஞ்ச நேரம் இதே புடவையில் இரு” என்று கதிர் சொல்லவும், மலர் அவனை வினோதமாக பார்த்தால். அதை கவனிக்காதவன் குளியலறை புகுந்தான்.

†††††

பெட்ரூமின் ஜன்னல் அருகே நின்று, கொட்டும் அருவியை வெறித்து, ‘எப்படி அவனிடம் கேட்பது?’ என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு, அவனே எடுத்துக் கொடுத்தான்.

அவளது பக்கவாட்டில் வந்து நின்றவன்,”இந்த புடவை பிடிச்சிருக்கா? உனக்காக ரொம்ப ஆசையா எடுத்தேன்.”

அவனின் நெருக்கத்தை உணர்ந்தும் பெண் திரும்பவில்லை. தன்னருகே சிற்பமாக நின்ற பெண்ணை கண்டதும் ஆணின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தது. அவளை ஆசையாக அணைக்க வந்த கதிரின் கரங்கள், அவள் கேட்ட கேள்வியில் உறைந்து நின்றது.

“என்னோட முகூர்த்த புடவை, எப்படி உனக்கு புடிச்ச மாதிரி இருக்கும்?”

தன்னை நெருங்கிய கரங்கள் ஸ்தம்பித்து நின்றதை உணர்ந்து மெல்ல திரும்பிய பெண், அவனின் விழியோடு விழி பார்த்து தீர்க்கமாக கேட்டாள்,

“சொல்லு கதிர், நான் கட்டியிருக்க புடவை, நீ பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்ததா? அந்த புடவை எப்படி எனக்கு முகூர்த்த புடவையா வந்தது? கௌதமுக்கும் எனக்கும் நடக்க இருந்த கல்யாணம், நிக்க போறது உனக்கு எப்படி தெரியும்? அப்படியே அவனோட ஆக்சிடென்ட பத்தி தெரிஞ்சாலும், உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்னு எப்படி தெரியும்? உன்னோட விருப்பமான புடவை, என்னோட முகூர்த்த புடவையா எப்படி மாறுச்சு?” எந்த வித தடுமாற்றமுமின்றி தெளிவாக கேட்டாள். 

அவள் கேட்ட கேள்வியில் தடுமாறி நின்றது என்னவோ கதிர் தான். ஏற்கனவே அவளிடம் அனைத்தையும் சொல்ல வேண்டுமென்ற முடிவில் இருந்தான். அதை எங்கு தொடங்கி? எப்படி முடிக்க? என வார்த்தைகள் தேடி தவித்தான்.

“ஏன் கதிர் பேசாம நிக்குற? உனக்கும் என் கல்யாணம் நின்னதுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை நீதான் கௌவுதம…” அதற்கு மேல் வார்த்தைகள் வரமறுத்தது பெண்ணிற்கு. அப்போதும் கதிர் வாயை திறக்கவில்லை. அவனது கைமுஸ்டிகள் இறுகியது.

“நம்ம காட்ல மாட்டிக்கிட்ட அன்னைக்கே, உனக்கு என் மேல விருப்பம் இருக்கிற மாதிரி தெரிஞ்சது. நானும் உன்கிட்ட இருந்து விலகி போனேன். உன்னோட ஆசைக்காக நானும், கௌவுதமும் விரும்புறோம்னு தெரிஞ்சு, கல்யாணத்தை நிறுத்த எதுவும் பண்ணுனியா?” இப்போது குரலில் தடுமாற்றம். அப்படி இருந்து விடக் கூடாது என மனம் பரிதவித்தது.

“அவனை விரும்பினேன்னு சொல்லாத.” வார்த்தைகள் கடுமையாக வந்தது கதிர் அரசனிடம்.

“நாங்க விரும்புறோம்னு சொல்லி தான், கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுனாங்க. அதை மறந்துட்டியா?” என்றாள் நக்கலாக.

“இப்படி தத்து பித்துன்னு உலரக்கூடாதுன்னு, ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ இன்னும் அதை விடலையா?” கடுமை கூடியது.

“நானும் கௌதமும் விரும்பினது உண்மை.” அவனை பேச வைத்து விடும் வேகம் மட்டுமே அவளிடம். வார்த்தைகளை உணரவே இல்லை.

“வேண்டாம் பனி மறுபடியும் உலராத. அவன் உன்னை மிரட்டி பணிய வெச்சான். அந்த கல்யாண பேச்சு வார்த்தை, கௌதமின் கட்டாயத்தில் மட்டுமே நடந்தது.” என்றான் உறுதியாக. அவனது உறுதியில் பெண்ணே ஆச்சரியப்பட்டு போனாள்.

“நான் அவனை விரும்பலைன்னு எப்படி சொல்ற?” என்றாள் ஆர்வமாக.

“உன்னோட ஒவ்வொரு அசைவும், இங்க மட்டும் இல்லாம, இங்கேயும் பதிஞ்சிருக்கு. அப்புறம் எப்படி எனக்கு தெரியாமல் போகும்?” என தன் நெஞ்சையும், தலையையும் சுட்டினான்.

‘மூளை, மனம் என அனைத்திலும் தன்னை நிரப்பியுள்ளேன்’ என சொல்லும் கணவனின் காதலில் பேச்சற்று போனாள். அவளது மௌனம் சில நொடிகள் மட்டுமே நீடித்தது.

“இந்த ரெண்டு வருஷமா, நீ என்னை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கலாம், அதுக்காக முழுசா புரிஞ்சுதா அர்த்தமா?” குரலில் அலட்சியத்தை கொண்டு வந்தாள். மனம் அடித்து சொன்னது,’நிச்சயம் இவனின் கண்காணிப்பு இரண்டு வருடம் மட்டுமில்லை.’ இவள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக இருந்தது கதரின் பதில்.

“நீ பொறந்ததுல இருந்து, இல்ல இல்ல நீ உன் அம்மா வயித்துல இருந்திலிருந்து, இங்க வச்சிருக்கேன். அப்புறம் எப்படி உன்னை பத்தி எனக்கு தெரியாம போகும்?” என தன் இதயத்தில் கரம் வைத்து சொன்னான்.

இப்போது உறைந்து நிற்பது பெண்ணின் முறை. சத்தியமாக இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ சில வருட காதலாக இருக்கலாம் என எண்ணினாள். ஆனால் அவன் சொல்வதோ, அவள் கனவிலும் எதிர்பார்க்காதது.

‘தான் பிறக்கும் முன்பிருந்தே, தன்னை மனதில் சுமந்தேன்’ என சொல்லும் தன் கணவனின் பாசம் எத்தகையது? அவனது காதலை கண்டு பிரம்மித்து போனாள்.’தான் அவன் காதலுக்கு பொருத்தமானவளா?’ மீண்டும் மனம் முரண்டியது.

உறைந்து நின்றவளை அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்து, அவளுக்கு எதிரே அதே படுக்கையில் அமர்ந்தவன், அவளது வலது கையை, தன் இரு கரங்களுக்குள் பொதித்து கொண்டு, ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டான். மனம் சமநிலை பட்ட பிறகு, அந்த பனி சிற்பத்தின் மேல் அவன் கொண்ட காதலை, வார்த்தைகள் மூலம் வடிக்க தொடங்கினான்.

காலையிலிருந்து அவனது ஆசையை, ஆலிங்கனத்தை உள்வாங்கி கொண்ட அதே படுக்கை, இப்போது அவனது காதலை உள்வாங்க, பனிமலரை போலவே காத்திருந்தது.

†††††

“நான் ரொம்ப சின்ன பையனா இருந்தேன். உங்க அம்மா கொஞ்ச நாள் என்னை பார்த்துக்கிட்டாங்க. எனக்கு சாப்பாடு ஊட்டி, கதை சொல்லி, சில சமயம் குளிக்க வச்சு, தூங்க வைக்கிறது எல்லாம் செஞ்சாங்க. அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் எதனாலையோ அத்தை உங்க ஆச்சி, தாத்தா வீட்டுக்கு போய்ட்டாங்க. மாமா, அதுதான் உங்க அப்பா, டெய்லியும் அங்க போவாங்க. நானும் அழுது அடம் பிடிச்சி அவங்க கூட போயிருவேன். காலையில் இருந்து சாயங்காலம் வரை, உங்க அம்மா கூட தான் இருப்பேன், என்றவன் கடந்த காலத்திற்குள் சென்று விட்டான்.

“ஏன் அத்தை நம்ம வீட்டுக்கு வராமல் இங்கேயே இருக்கீங்க?” என்ற மருமகனின் கேள்விக்கு, பனிமலரின் அன்னை மீனா,”கதிர் கண்ணா! அத்தை வயித்துல குட்டி பாப்பா இருக்கு, அது பிறக்கவும் நான் அங்க வந்துடுவேன்.”

ஆம்! அவனை அனைவரும் அரசு என்று அழைக்க, மீனாட்சி மட்டும் கதிர் என்று அழைப்பார். அவருக்கு அடுத்ததாக, பனிமலர் அவனை அவ்வாறு அழைத்தாள். அவளுக்கு மட்டுமே அந்த பெயரை சொல்லி அழைக்க உரிமை உண்டு, என அவளுக்குத் தெரியாமல் போனது இதுவரை.

“அப்ப குட்டி பாப்பா என்ன பண்ணும் அத்தை?” ஒன்றும் அறியா இரண்டரை வயது கதிரின் கேள்வியை கேட்டு, மீனாவிற்கு சிரிப்பு வந்தது.

“இது என்னடா கேள்வி? குட்டி பாப்பாவும் என்கூட அங்க வரும்” என்றார் மென்மையாக.

“குட்டி பாப்பா என்கூட விளையாடுமா அத்த? நான் அதுக்கு சாப்பாடு ஊட்டலாமா? நான் அதை குளிக்க வைக்கலாமா? டிரஸ் பண்ணலாமா?” வரிசையாக குழந்தை தனத்துடன் கேள்வியை முன் வைத்தான்.

“என் கதிர் கண்ணா! உன்னோட பாப்பா, உன்கூட விளையாடாம, வேற யார் கூட விளையாட போறா?” என அவனது மூக்கை செல்லமாக ஆட்டினார்.

“ஐ அப்ப பாப்பாவை நான் தூக்கலாமா?” என்றான் ஆசையாக.

“நிச்சயம் தூக்கலாம் அவ கொஞ்சம் பெரியவ ஆனதுக்கு அப்புறம்.”

“அப்ப பாப்பாவை எனக்கு கொடுத்துடு அத்தை, நான் அவளை கடைசி வரை பத்திரமா பாத்துக்கிறேன்.” என்றான் அறியாமையுடன்.

“உனக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கப் போறேன்? ஆனா கடைசி வரைக்கும் நீ எப்படி பாப்ப? அவளுக்கு கல்யாணமாகிட்டா அவ புருஷன் வீட்டுக்கு போயிடுவால.” என விளையாட்டாக சிந்திப்பது போல கூறினார். அவரது ஆசையும் அதில் மறைந்திருந்தது, அதை அவன் சின்ன இதழ்களால் கேட்க விருப்பினார்.

அதையே அவனும் கூறினான்,”அப்ப அவளை எனக்கே கல்யாணம் பண்ணி கொடுத்திடு. நான் அவளை பத்திரமா பாத்துக்கிறேன்.” அவர் மன ஆசைக்கு உயிர் கொடுத்தான். அன்று சிறு விதையாக விழுந்தது, இன்று விருட்சமாகி அவளை அடைந்தது. அறியாமல் கொடுத்த வாக்கை இன்று வரை நிறைவேற்றுகிறான். 

“அவ்வளவு தானே. நீ பெரியவனான பிறகும், உனக்கு அவளை பிடிச்சிருந்தா, உனக்கே அவளை கல்யாணம் பண்ணி வச்சுடறேன். என்ன சந்தோஷமா?” அவனது தலையை கலைத்தார்.

“ஐ ஜாலி ஜாலி” என கை கொட்டி சிரித்தவன்,”அத்த பாப்பாவுக்கு பேர் என்ன?”

“உன்னோட பொண்டாட்டிக்கு நீயே ஒரு பெயர் வை, கண்ணா”

மீனாவின் கூற்றில் மகிழ்ந்தவன், சிறிது நேரம் நாடியில் விரல் வைத்து யோசித்தான். அவனது குட்டி மூளைக்கு ஒரு பெயரும் பிடிபடவில்லை.

“அத்த எனக்கு ஒண்ணுமே தெரியல. நீயே சொல்லிடு.” என பாவமாக உதடு பிதுக்கினான். அவனது பாவனையில் உள்ளம் கொள்ளை போக, ஆசையாக அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சியவர்,”உன்னோட பாப்பா எப்படி இருக்கணும்?”

அவர் தன்னை கொஞ்சியது போலவே, அவர் கன்னத்தை பிடித்து கொஞ்சி,”உன்ன மாதிரி சாப்டா, அழகா, வெள்ளையா இருக்கணும்.”

இருவரும் ஆறமர பேசி முடிவு செய்த பெயரே பனிமலர். (பனி வெள்ளை நிறத்திலிருக்கும். மலர் மென்மையாக இருக்கும்.)

“அப்ப என்னோட பேரு அம்மா வச்சதா?” என்ற பனிமலரின் குரலை கேட்டு, நிகழ்காலத்திற்கு திரும்பினான்.

தான் பேசியதை, அவ்வளவு நேரம் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்த, பெண்ணின் கேள்விக்கு விடையாக,”ஆமா பனி, உன்னோட பெயர், நீ பிறக்குறதுக்கு முன்னாடியே, உங்க அம்மா செலக்ட் பண்ணுனது. அதை நான் தான் உனக்கு வச்சேன்.”

அவன் கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ந்தாள். அவளது விவரம் தெரிந்த பிறகு, தன் அன்னையைப் பற்றிய முதல் விரிவான பேச்சு. மீனாவின் பெற்றோர் இருந்தவரை அவரைப் பற்றி பேசி கேட்டிருக்கிறாள். அதன் பிறகு இன்று தான் கதிர் கூறி கேட்கிறாள். 

அவள் திடீரென முறைத்தாள். அவள் முறைப்பில் பயந்தவன்,’இப்ப என்ன பூதம் வர போகுதோ?’ என அவள் முகத்தை பயத்துடன் பார்த்தான். 

“அப்ப நான் அழகா இல்லைனா, என்னை கட்டி இருக்க மாட்டியா?” மனம் நெகிழ்ந்ததால், எடக்கான கேள்வி பிறந்தது பெண்ணிடம்.

‘ச்ச அவ்வளவு தான’ என இழுத்து பிடித்திருந்த மூச்சை விட்டவன். “நீ எப்படி இருந்தாலும், நீ மட்டும் தான் என்னோட பொண்டாட்டி. வேற யாராலும் அந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது” என்றான் உறுதியாக. பனி கதிரின் காதலில் உருகியது. 

சிறிது மௌனத்திற்கு பிறகு மீண்டும் கடந்த காலத்தை தொடர்ந்தான்,”உங்க அம்மாக்கு அடிபட்டிருந்தப்போ கார்ல கூட்டிட்டு போனாங்க. அப்பதான் இந்த செயினை கழட்டி என் கழுத்துல போட்டு, நீ இருந்த வயிற்றை தொட்டு காமிச்சாங்க. அப்ப எனக்கு புரியல. பெரியவன் ஆனதுக்கு அப்புறம், அந்த செயினை உனக்கு தர சொல்லி இருக்காங்கன்னு புரிஞ்சது.” முதலில் முகம் இறுக கூறியவன், அவள் கழுத்தில் இருந்த செயினை வருடியவாரே முடித்தான்.

“இந்த செயின் உங்கம்மா கழுத்திலேயே ரொம்ப வருஷமா இருந்தது. இது அவங்க உனக்கு கொடுத்த ஆசீர்வாதம்.”

இருவருக்கும் மனம் நெகிழ்ந்திருந்தது. தன் அன்னையின் பிரிவை நினைத்து, பெண்ணின் கண்களில் கண்ணீர் கோடாக இறங்கியது. அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து, அவளை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்.

அவர்களது பேச்சு தொடர்ந்தது. 

†††††

இங்கு வீட்டில், இரண்டு நாளாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை, சுகந்தி வெளியிட்டிருந்தார். “அந்த ராசி இல்லாதவ பெயரை, ரிசார்டுக்கு வச்சு, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டு வர பிளான் பண்ணிட்டானா, உன்னோட பையன்?” தன் அண்ணனிடம் வெடித்திருந்தார்.

“அதுவும் அவள் கையாலேயே ரிப்பன் வெட்ட வச்சு, திறப்பு விழா வேற நடத்தினாங்க? அதுக்கு இந்த வீட்டு பெரிய மனுஷங்களும் உடந்தை” என அவருடன் இணைந்து விஷத்தை கக்கினாள் தீப்தி.

Leave a Reply

error: Content is protected !!