வெண்பனி 24

IMG-20220405-WA0023-d12a95b3

வெண்பனி 24

பனி 24

கதிர் வாங்கி தந்த புடவையில் தேவதையென கிளம்பி, அன்புவுடன் ரிசார்ட் திறப்பு விழாவுக்கு சென்ற பனிமலரின் அழகை கண்ட, தீப்திக்கும் சுகந்திக்கும் வயிற்றில் தீ பிடித்தது. அதுக்கு நெய் வார்த்து, அணைய விடாமல் பார்த்து கொண்டது அடுத்தடுத்த நிகழ்வுகள்.

ஏக கடுப்புடன் யாரை கடித்து குதரலாம், என இருவரும் சுற்றினார்கள். நேற்றைய நாள் முழுவதும் ரிசார்டிலே முடிந்தது. கதிரும் பனியும் அங்கு தங்கியது, இன்னும் வீடு திரும்பாதது அனைத்தும் அவர்களது வஞ்சத்தை அதிகப்படுத்தியது. பொறுத்தது போதுமென மாலையில் பொங்கிவிட்டார்கள்.

தன் வெளி வேலைகளை முடித்து, களைப்பாக வீடு திரும்பிய தியாகராஜனை பிடித்துக் கொண்டார் சுகந்தி.”உன் பையன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கான்? அந்த ராசி இல்லாதவ பெயரை, ரிசார்டுக்கு வச்சு, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டு வர பிளான் பண்ணிட்டானா?”

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. அப்புறம் பேசலாம்.” என விலகி செல்லும் தியாகராஜனை விடாமல்,”அதுவும் அவள் கையாலே ரிப்பன் வெட்ட வச்சு, திறப்பு விழா வேற நடத்தினாங்க? அதுக்கு இந்த வீட்டு பெரிய மனுஷங்களும் உடந்தை” என, தன்  அன்னைக்கு தப்பாத பெண் என நிரூபித்தாள் தீப்தி.

தன் மகனை சொல்லவும் ஆத்திரம் வந்தது.”தீப்தி பெரியவங்க விஷயத்தில் நீ எதுக்கு தலையிடுற? அது உனக்கு தேவை இல்லாதது.  சுகந்தி உனக்கு என்ன பிரச்சினை?” என மருமகளை அடக்கி தங்கையிடம் முடித்தார்.

“எதுக்கு ரிசார்டுக்கு அவ பேர் வச்சான்?”

“அதை நீ அவன்கிட்ட தான் கேட்கணும்.” அலட்சியமான பதில்.

“அதுக்கு இந்த வீட்டு மனுஷங்களும் சப்போர்ட்.”

“அதையும் சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்கணும்.” என்ற தியாகு வாயை மூடினார்.

அனாதையாக அலைய வேண்டியவர்களை, வளர்த்து ஆளாக்கி, இன்று குடும்பமாக வாழ வைத்த, பெரியவர்களிடம் கேள்வி கேட்க முடியுமா? அவர்களிடம் எப்போதும் ஒரு மரியாதை கலந்த அன்பு இருந்தது.

பதில் வந்தது.”அந்த ரிசார்டை பேங்க்ல லோன் வாங்கி அவன் ஆரம்பிச்சிருக்கான். அதுக்கு அவங்க பேரை வைக்கிறான். அதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் பழனிவேல். இவ்வளவு நேரம் பொறுமையாக அங்கு நடந்த சம்பாஷணையை கேட்டிருந்தவர் வாயை திறந்தார்.

மாமனாரிடம் தன் பப்பு வேகாது, என தெரிந்த சுகந்தி மாமியாரிடம் தஞ்சமானார்.”பாருங்க அத்தை அவ ராசி இல்லாதவ. அவ பேரை ரிசார்டுக்கு வச்சிருக்கான். அப்புறம் எப்படி முன்னேறுவான்? அவனோட நல்லதுக்கு தான் கேட்கிறேன்?” கதிருக்காக உருகுவது போல் நடித்தார்.

“எத வச்சு அவராசி இல்லாதவ சொல்ற?” பர்வதம் குரலில் கடினத்துடன் கேட்டார்.

“என்னத்தை மறந்துட்டீங்களா? அவளுக்கு ஜாதகம் பார்த்த ஜோசியர் என்ன சொன்னார்?”

“என்ன சொன்னார்? நீயே சொல்லு?”

“அவளுக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னார். அதனால தானே நம்ம அவளோட பாட்டி, தாத்தாகிட்ட அனுப்பிச்சோம்.”

“ஜோசியர் சொன்னது எங்களுக்கு நல்லா ஞாபகமிருக்கு. அவளோட பிரச்சினை எல்லாம் கல்யாணம் வரைக்கும். அதுக்கப்புறம் எல்லாம் மாறிடும். அவளை உயிரா தாங்குற புருஷன் கிடைப்பான்னு சொன்னாங்க. அதே மாதிரி இப்ப அவ புருஷன் அவளை தாங்குறான். அதுல உனக்கு என்ன பிரச்சனை?”

சுகந்தி பேச்சற்று போனார். இப்படி ஒரு பதிலை தன் மாமியாரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவரிடம் பேச முடியாத ஆத்திரம், மீண்டும் தன் சகோதரனிடம் திரும்பியது.

“பார்ணா! நீதானே அவள வீட்டுக்குள்ள விட்ட. இப்ப என் பொண்ணோட வாழ்க்கையை, கேள்விக்குரியா மாத்திட்டா? அவ சந்தோஷமா இருப்பா. அரசுவை புருஷனா நெனச்ச, இவளோட நிலைமையை யாராவது நினைச்சு பார்த்தீங்களா?” என மூன்று மாதங்கள் கடந்து நீலி கண்ணீர் வடித்தார்.

‘நம்ம அம்மா சும்மா பிச்சு வாங்கறாங்க. நடிப்பில் அவங்களை மிஞ்ச ஒருத்தன் பிறந்து தான் வரணும். சான்சே இல்ல. என்னா நடிப்பு!’ என அன்னையின் நடிப்பை, மனதில் சிலாகித்து பாராட்டினாள் தீப்தி.

தியாகராஜனின் பார்வை தீப்தியை அடைந்தது. அவளும் வருந்துவது போல் முகத்தை மாற்றிக் கொண்டு நின்றாள். தியாகராஜனுக்கு குற்ற உணர்வு தலை தூக்கியது.

“இப்போ உன் பொண்ணுக்கு என்ன குறைச்சல்? அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.” என்றார் பழனிவேல்.

கார்த்திகேயன் வழக்கம் போல் எதிலும் தலையிடவில்லை. தன் மகனை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் இவர்களிடம் திரும்பி,

“இனி அவங்க ரெண்டு பேத்த பத்தி, நீங்க ரெண்டு பேரும் பேசக்கூடாது.” என்ற பழனிவேல், அதோட பேச்சை கத்தரித்து சுகந்தி, தீப்தியின் வாயை அடைத்தார். தன் தோல்வியில் சுகந்தியின் முகம் கறுத்தது. 

முதலில் மகனின் வாழ்வுக்காக பனிமலரை ஒதுக்கியவர்கள், இப்போது பேரனின் வாழ்விற்காக அவளை ஏற்றுக் கொண்டார்கள்.

மகனா? பேரனா?

தங்கையா? மகனா?

கடைசியில் ஜெயித்தது கதிர் அரசனின் காதல். விதியின் கைகளில் அது நிலைக்குமா?

மாற்றம் ஒன்றே மாறாதது. எப்போது? யார் வாழ்வில்? என்ன மாற்றம் வரும், அது தெரிந்துவிட்டால் சுவாரஸ்யம் ஏது?

விதியின் சதிராட்டத்தையும், தெய்வத்தின் தடுமாற்றத்தையும் கான சுவாரஸ்யம் குறையாமல் காத்திருப்போம்.

†††††

“நான் பிறக்குறதுக்கு முன்னாடி இருந்து என்னை விரும்பின நீ, ஏன் என்கிட்ட ஒரு தடவை கூட சொல்லலை?” என்றாள் பனிமலர் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“நான் உன்னை காதலிச்சனான்னு தெரியாதே?” என கையை விரித்தான்.

“நல்லா குழப்புற” உதடு சுழித்தாள்.

சுழித்த  அந்த உதடை இருவிரலில் பிடித்து,”முழுசா சொல்றதை கேட்கணும். பாதியில கேள்வி கேட்க கூடாது.”

அவன் கரத்தை தட்டி விட்டவள், “சொல்லும், சொல்லி தொலையும்.” என்றாள் சலிப்பது போல்.

“நீயே யோசி. நீ பிறக்கும்போது எனக்கு வயசு மூணு. அது காதலை பத்தி தெரிஞ்ச வயசா?”

“ஆமால! நான் அதை யோசிக்கவே இல்ல.” என அசடு வழிந்தால்.

“நீ எதை சரியா யோசிச்சிருக்க? இதை யோசிக்க.” என மண்டையில் செல்லமாக கொட்டினான்.

“இங்க பாரு கதிர், அடிக்கடி கொட்டுனா, நான் பொல்லாதவளா மாறிடுவேன். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.” என முறுக்கி கொண்டாள்.

“சொல்ல வேண்டாம்னா, போ. எனக்கு என்ன வந்தது?” என்றான் அலட்சியமாக.

எங்கே கதையை சொல்லாமல் விட்டு விடுவானோ? என்ற பயத்தில்,”சரி சரி ஏதோ அறியா பையன், தெரியாம கொட்டிட்ட. நான் உன்னை மன்னிச்சுடுறேன். யூ கன்டினியூ.” கன்னத்தில் கரம் பதித்து கேட்க தயாரானாள்.

“உனக்கு ரொம்ப சேட்டை ஜாஸ்தியாயிடுச்சு.” என செல்லமாக அவளின் நெற்றியில் முட்டியவன் தொடர்ந்தான்.

“அத்தை சாமிகிட்ட போயிட்டாங்கன்னு சொன்னாங்க. நீயும் பேபியா இருக்கும்போது நம்ம வீட்டுல இருந்த. சோ அத்தைக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி உன்ன கடைசி வரை பார்த்துக்கணும், அப்படிங்கறது மட்டுமே என் என்னமா இருந்துச்சு. உனக்கும் அன்புவுக்கும் பக்கத்திலேயே நான் இருப்பேன்.

மறுபடியும் கொஞ்ச நாளில உங்க தாத்தா பாட்டிகிட்ட, அத்தையை அனுச்ச மாதிரி உன்னையும் அனுப்பிடாங்க. எனக்கு கஷ்டமா இருக்கும். யாராவது உன்னை பார்க்க வந்தா, அவங்க கூட சேர்ந்து நானும் ஓடி வந்துடுவேன். ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதும் டெய்லி உன்னை பார்ப்பேன். நீ ஸ்கூல் சேரும் வரை, என் கூட மட்டும் விளையாடுவ. அதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஸ்கூலுக்கு போகவும் அன்பு கூட பிரிண்டான. அவன் கூடயே சுத்திட்டு என்கூட சரியா பழக மாட்ட. என்னோட பனி, என்கூட பேச மாட்டேங்கிறானு எனக்கு சரி கோபம் வரும். அந்த கோபத்துல உன்ன அடிக்கடி சீண்டிகிட்டே இருப்பேன்.

உங்க தாத்தா இறந்தப்ப நீ அவளோ அழுத. உன்ன அழுகாதன்னு சொல்லி சமாதானப்படுத்த, நான் வரதுக்கு முன்னாடி அன்பு அங்க வந்துட்டான். நானும் கோபத்தில் அங்க இருந்து வந்துட்டேன். அதுக்கப்புறம் நீ நம்ம வீட்டுக்கே வந்துட்ட.

நீ வயசுக்கு வர வரைக்கும், எனக்கு உன் மேல, என் பொண்டாட்டிங்கிற உரிமை மட்டும் இருந்துச்சு. அன்னைக்கு புடவை கட்டி உன்னை பார்த்ததும் காதலில் விழுந்தவன், அப்புறம் எந்திரிக்கவே இல்லை.” என்றவனின் பேச்சு தடைப்பட்டது அவளின் முறைப்பில்.

‘இப்ப எதுக்கு முறைக்குறான்னு தெரிலையே? என்ன சொதப்பினேன்?’ என மனதில் நினைத்தவன்,”கண்ணம்மா என்ன ஆச்சு? மாமனை இப்படி ஆசையா பாக்குற. எனக்கு வெக்க, வெக்கமா வருது.” குழைந்தான்.

அவன் குழைவில் வெகுண்டவள்,”நான் முறைகுறது உனக்கு ஆசையா பாக்குற மாதிரி இருக்கா? உன்னை கொல்ல போறேன் பார்.” என வாகாக அவன் மடியில் அமர்ந்து, அவனது தலை முடியை பிடித்து மாவாட்டுவது போல் ஆட்டினாள்.

ரிசார்ட்டில் தொடங்கி, பனியின் செல்ல சண்டை வரை, அவன் ஆசைப்பட்ட அனைத்தும், இந்த இரண்டு நாட்களாக நிறைவேறுகிறது. இந்த நிமிடம், உலகில் தான் மட்டுமே அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தான்.

ஆம்! அவனது பல வருட ஏக்கம், பனிமலர் தன்னிடம் உரிமையாக பழக வேண்டும், செல்ல சண்டையிட வேண்டும், கொஞ்சி பேச வேண்டும் என்பது. ஏக்கம் தீர்ந்தது இன்று.

“விடுடி ராட்சசி வலிக்குது.” பொய்யாக அலறினான். அவனின் இனிமையான இம்சையை சுகமாக தாங்கினான்.

“நான் ராட்சசியா?” என கேட்டு, அதற்கும் அவனை மொத்தி எடுத்தாள்.

ஒரு கட்டத்தில் உடல் வலியெடுக்க, தன் மடியில் இருந்தவளை படுக்கையில் சரித்து, அவள் மேல் இவனும் சரிந்தான். எதிர்பாராத திடீர் நெருக்கம், பெண்ணை தன் வசம் இழக்க வைத்தது.

அவளின் சில நொடி தடுமாற்றத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்தினான் கதிர்.”ஆமா, ராட்சசி தான்! என்னோட அழகான செல்ல ராட்சசி.” என்றான் குட்டி, குட்டி முத்தங்கள் பதித்து.

பனியின் வதனம் செவ்வானமாக சிவந்தது. சிறிது நேரம் செல்ல சிலுமிஷங்களை செய்து, அவளை கிரங்கடித்தவன், “எதுக்குடி என்னை முறைச்ச?” குரல் குழைந்தே வந்தது.

அவன் செய்தது ஞாபகம் வர, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது‌.”எதுக்குடா அன்னைக்கு, எனக்கு சடங்கு செய்ய மாட்டேன்னு சொன்ன?” பெண்ணின் முகம் கசங்கியது.

அவளது கசிங்கிய முகத்தை காண முடியாத கதிரின் மனம் வேதனையடைந்தது.”அதுவரை சின்ன பொண்ணா பார்த்த உன்னை, அன்னைக்கு புடவை கட்டி பெரிய பொண்ணா பார்க்கவும், என்னை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. எங்க உன் கிட்ட வந்தா, இது மாதிரி கட்டி புடிச்சு, கிஸ் பண்ணிடுவேன்னு பயம்.” என்றவன் சொன்னதை இப்போது செய்தான்.

அவனை தள்ளி விட்டவள்,”இந்த சலம்பல் வேலை எல்லாம், என்கிட்ட வேணாம். உண்மைய சொல்லு?”

“நிஜமாவே அன்னைக்கு எனக்கு அந்த பயம் இருந்துச்சு. அதுவும் இல்லாம அன்பு உன் மேல உயிரையே வச்சிருக்கான். அன்புக்கும் நீ மாமா பொண்ணு. அவன் உனக்கு செய்யறதுக்கு ஆசைப்படுவான்னு தோணுச்சு. தீப்திக்கு நான் எல்லாம் செஞ்சேன். அதனால கொஞ்சம் கடுமையா பேசி விலகி நின்னேன். எப்படியும் நீ என் மனைவி அதுல மாற்று கருத்தே இல்லை.” 

அவன் கூறியதை கேட்டவள் பாய்ந்து அவனை அணைத்து கொண்டாள். ‘எத்தனை பேரால் தங்கள் நட்பை (ஆண், பெண்) புரிந்து கொள்ள முடியும்?’ மனம் உருகி குழைந்தது.

“பனி உன்கிட்ட ஒன்னு கேட்கவா?” ஆதரவாக அவள் கூந்தலை வருடியவாறு கேட்டான்.

“ம்” பெண்ணிடம் தலையசைவு மட்டுமே.

அவன் கேட்ட கேள்வியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

 

Leave a Reply

error: Content is protected !!