வெண்பனி 26

IMG-20220405-WA0023-f1f142e9

வெண்பனி 26

பனி 26

சூரியன் மேற்கு கடலில் மூழ்கி, மெல்ல தன் உயிரை விட்டது. பறவைகள் தங்கள் கூட்டில் அடைந்தது. 

தன்னை சுற்றி இருள் பரவுவதை உணராமல், தன்னை மறந்து எங்கோ பார்வையை பதித்து, தோட்டத்தில் அமர்ந்திருந்தான் அன்பு‌. அவன் கரத்தில் மூன்று மாத இதழினி உறங்கி கொண்டிருந்தாள்.

அவனருகில் நின்ற உருவம், தன்னை மறந்து அவர்களை ரசித்திருந்தது. மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு, இப்போது தான் குழந்தையை காண்கிறது.

கணவு கண்டோ? அல்லது தனக்கு உயிர் கொடுத்தவரை உணர்ந்தோ? இதழினி தன் செப்பு இதழ் விரித்து சிரித்தாள். அந்த மலர் செண்டின் கொள்ளை அழகை, கண்ணிமைக்காமல் பார்த்திருந்தது அந்த உருவம்.

இரண்டு வருட ஏக்கம், ஒரு வருட காத்திருப்பு இப்போது கைகளில், அதை அனுபவிக்க முடியாமல் தவித்தது அந்த உருவம்.

இதழினியின் அசைவில் அன்புவின் கவனம் அவள் மீது திரும்பியது. தன் அன்னையை (பனிமலர்) உரித்து வைத்திருந்த குழந்தையை, கண்களில் நீர் சூழ பார்த்தான். தன் மொட்டுவை அச்சு வார்த்தது போலிருக்கும், அவளது குழந்தைக்கும், அவளது நிலை வந்துவிடுமோ என மனம் பரிதவித்தது.

குழந்தையை வெறித்திருந்த அன்புவின் தோளில் பதிந்தது அழுத்தமான ஆணின் கரம். அந்த ஸ்பரிசத்தை உணர்ந்த அன்பின் மோனம் களைந்தது. 

தன் கோபக் கண்களால் அந்த ஆணை முறைத்து,”என்னை  வற்புறுத்தி வெளிநாட்டுக்கு  அனுப்பிச்சது இதுக்குத்தானா? ஒரு ரெண்டு வருஷம் அவளை பத்திரமா பார்த்துக்க முடியலை, இப்படி மொத்தமா காவு கொடுத்துட்டு நிக்குறீங்க? ஏன் இப்படி பண்ணுனீங்க? எதுக்கு என்கிட்ட மறச்சீங்க? கடைசியா என் மொட்டுவை பார்க்க முடியாம பண்ணிட்டீங்களே, ஏன்? ஏன் என்னை இப்படி பாவியாக்கினீங்க?” கதரி துடித்தான் அன்பு.

அவனுக்கு மேற்கொண்டு வருத்தத்திலிருந்த கதிர் உடைந்து போனான்.

“ஐயோ அன்பு! நாங்களே எட்ட நின்னு தானே பார்த்தோம். எங்களையும் அவகிட்ட விடலையே. அவளுக்கு செய்ய வேண்டிய சாங்கியம் எதுக்குமே அவளை எங்க கிட்ட கொடுக்கலையே? என்னையும் புடிச்சு அடைச்சு வச்சுட்டாங்களே? அவ கும்பிட்ட ஈஸ்வரன் கூட அவளை கைவிட்டுட்டான். இதுக்குத்தானா அவ பொறந்ததுல இருந்து, என் நெஞ்சுல பொத்தி காதலை வளர்த்தேன்.” இதுவரை யாரிடமும் வெளிப்படுத்தாத துக்கம், தன் உடன் பிறப்பிடம் கரை உடைந்தது.

அவர்கள் மனம் வெம்பி துடிப்பதை பார்த்து,”அரசு அழுகாத. கதிர் மாமா அழுகாத.” என அவர்களுக்கு அருகில் நின்ற உருவமும் துடித்தது. பாவம் அதன் குரல் ஆடவர்களை அடையவில்லை.

அவன் கதறியதும் திகைத்த அன்பு, தன்னை சுதாரித்து,”என்ன சொல்ற அரசு? அவளுக்கு என்ன ஆச்சு? ஏன் என்கிட்ட சொல்லல?”

தன்னை சற்று தேற்றிக்கொண்ட கதிர், அன்று நடந்ததை சொல்லத் தொடங்கினான். அப்போது வெள்ளை டிரஸ் போட்ட மகாலட்சுமி (நர்ஸ் சித்ரா) குழந்தையை வாங்கி சென்றார்.

அவர்கள் செல்வதை தடுக்க முடியாமல், குழந்தையை தன் சிவந்த கண்களால் படம் பிடித்துக் கொண்டது உருவம். அவர்கள் உள்ளே சென்றதும் அதன் கவனம் தனக்காக துடிக்கும் ஜீவன்களை அடைந்தது.

அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாத தன் கையாலாகாத தனத்தை நினைத்து மனம் வெறுத்தது. அதன் கண்களிருந்து ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை. ஆனால் கண்கள் ரத்த சிவப்பில் எரிந்தது.

கதிரின் நினைவுகளும், உருவமாக நின்ற பனிமலரின் நினைவுகளும் அன்றைய தினத்திற்கு சென்றது.

†††††

கதிர், பனிமலரை பாரியூரில் விட்டு சென்று ஐந்து நாட்கள் முடிந்திருந்தது. அவன் இல்லாத ஏக்கம் பெண்ணை வாட்டி வதைத்தது. 

கடந்த மூன்று வருடங்களாக, அவர்கள் பிரிந்ததில்லை. அதிலும் கடைசி இரண்டு வருடம், இருபத்தி நான்கு மணி நேரமும் ஒன்றாக இருந்து, தன் காதலை பெண்ணுள் கடத்தி இருந்தான் கதிர் அரசன்.

கதிரின் அணைப்பு இல்லாமல் இரவு உறக்கத்தை தொலைத்தாள். பார்த்துப் பார்த்து உன்ன வைக்க, அவன் இல்லாமல் உணவை குறைத்தாள். சத்துள்ள ஆகாரத்தை வயிற்றில் உள்ள சிசுவிற்காக உள்ளே தள்ளினாள். உடல் எடை குறைந்தது. மொத்தத்தில் அவளின் நிலை,

பாலும் கசந்ததடி – சகியே படுக்கை நொந்ததடி கோலக்கிளி மொழியும் – செவியில் குத்தல் எடுத்ததடி

இந்த சில நாள் பிரிவு, பனிமலருக்கு கதிர் மீதான தன் காதலை உணர்த்தியது. அகமும், முகமும் மலர அவன் வருகைக்காக காத்திருந்தாள். முகம் மலர்ந்திருந்தாலும் உடலில் ஏதோ மாற்றம்.

யாரோ அடித்து போட்டது போல் உடல் வலித்தது. தலையும் பாரமாக இருந்தது. உடலும் அதிக அசதியை கொடுத்தது. இதெல்லாம் கர்ப கால உபாதைகள் என பெரிதாக கண்டு கொள்ளவில்லை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஓட்டுதல் இருந்திருந்தால், அவர்களிடம் கூறி ஆலோசனை கேட்டிருப்பாளோ என்னவோ? ஆனால் இப்போது அதுவும் இல்லை.

தொலைபேசியில் அன்புவுடனும் கதிருடனும் எப்போதும் போல் பேசினாள். அதனால் அவளது மாற்றத்தை அவர்கள் உணரவில்லை.

அவர்கள் பிரிந்த ஏழாவது நாள் மாலை நேரம், விடிந்தால் புது வருடம். மனம் ஏனோ கணவனின் அருகாமையை எண்ணி ஏங்கியது. எதை பற்றியும் சிந்திக்காமல் அவனை அழைத்து விட்டாள்.

“கதிர் மாமா எப்ப வருவ? எனக்கு உன்ன தேடுது” அழைப்பை ஏற்றவுடன், அவள் கொடுத்த இன்ப அதிர்ச்சியில், திகைத்தான் கதிர் அரசன்.

அதீத மகிழ்ச்சியில்,”பனி.. என்… கதிர் மாம… சொன்ன…?” என வார்த்தை திக்கி திணறியது.

“கதிர் மாமா! ஐ லவ் யூ” தன் காதலை சொல்லிவிட்டாள், கேட்டவனோ வானத்தில் மிதந்தான்.

“பனிமா, பனி” வார்த்தை வர மறுத்தது.

“பதிலுக்கு நீ சொல்ல மாட்டியா?” என ஏக்கமாக வந்தது அவளது வார்த்தைகள்.

“ஐ லவ் யூ டி கண்ணம்மா.” இதுவரை தன் செய்கையின் மூலம் காதலை உணர்த்தியவன், இப்போது மூன்றெழுத்து மந்திர வார்த்தையை உச்சரித்தான். பனியின் மேனி சிலிர்த்தது.

“எவ்வளவு?” பெண்ணின் குரல் கொஞ்சியது.

“வானளவு” என்றான் திடமாக. அவனது காதலுக்கு எல்லைகள் அற்ற வானமே அளவுகோல்.

“இன்னும் எத்தனை நாளுக்கு?” விடை தெரியும் ஆர்வம்.

“ஆல்வேஸ் யூ ஆர் தி ஒன் அண்ட் ஒன்லி லவ் ஃபார் மீ (என்றென்றும் என்னுடைய காதல் நீ மட்டுமே).” எப்போதும் இல்லாத உறுதி அந்த குரலில்.

அதற்கு மேல் பனிமலரின் உடல் ஒத்துழைக்காததால், திணறும் குரலை கட்டுப்படுத்தி, மீண்டும் “கதிர் மாமா! ஐ லவ் யூ” என அழைப்பை துண்டித்தாள்.

அவளின் திணறல் குரல் கதிரின் மனம், மூளை அனைத்தையும் தாக்கியது. அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என உணர்ந்தான். 

அவள் வாய்விட்டு அவனை அழைத்த பிறகும், அவள் உடல் நிலையை, அவள் சொல்லாமலே உணர்ந்த பிறகும் தாமதிப்பானேன்? அந்த மாலை நேரத்தில், பாரியூரை நோக்கி தன் காரை கிளப்பியிருந்தான் கதிர் அரசன்.

†††††

கடந்த இரண்டு நாட்களாக, உண்ணும் உணவின் சுவையை பனிமலரின் நாவு உணரவில்லை. அவளது உடலின் வெப்பம் அதிகரித்தது. மனம் ஏதோ எச்சரிக்கையை வழங்கியது. இதுதான் என உறுதியாக சொல்ல முடியாத தவிப்பு.

கர்ப காலத்தில், இது போல் சிறு சிறு உடல் உபாதைகள், வருவது சகஜம் என்பதால் அதை பெரிது படுத்தவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கும் அவளது மாற்றம் உறுத்தியது. கணவனை பிரிந்த ஏக்கம் என அவர்களும் மனதிற்குள் சிரித்து கொண்டனர்.

நேரமே சென்று படுத்தவளால் உறங்க முடியவில்லை. சிறிதாக மூச்சு திணறல் ஏற்பட்டது. எழுந்து அமர்ந்தவள் கடினப்பட்டு சுவாசத்தை இழுத்து மூச்சு விட்டாள். சற்று இலகுவாக சுவாசிக்க முடிந்தது.

சற்று பொறுத்து படுக்க மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூடவே இருமலும் வரத் தொடங்கியது. இப்போது மனம் விழித்து கொண்டது. தனக்கு வந்திருப்பது, பல உயிர்களை காவு வாங்கிய உயிர் கொள்ளி நோய் கொரோனாவா? மனம் திடுக்கிட்டது.

அதற்குள் பனிமலருக்கு இருமல் அதிகரித்தது, கூடவே மூச்சு திணறலும். உடல் வியர்வையில் குளித்தது. பெண்ணின் முகம் பீதியில் வெளிறியது. தன்னுடன் இணைந்து தன் வாரிசின் உயிரும் உள்ளதே? எப்படியாவது அதை காப்பாற்ற வேண்டும் என மனம் துடித்தது. 

சுவாசிக்க சிரமப்பட்டு கைபேசியை தேட, அந்தோ பரிதாபம், அவள் கை பட்டு அது நழுவி தரையில் விழுந்தது. கை கால்கள் வலுவிழந்தது. அசைய முடியாத தவிப்பு.

‘கதிர் மாமா எங்கிட்ட வந்துடு. எனக்கு என்னமோ பண்ணுது? கடைசியா ஒரு தடவையாவது உன்னை பாக்கணும். வந்திடு கதிர் மாமா.” என மனம் இடைவிடாமல் ஜெபித்தது.

நேரம் செல்ல செல்ல மூச்சுத் திணறல் அதிகரித்தது. மூளை மங்கத் தொடங்கியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

கண்களில் இருள் சூழும் போது, வெளிச்சமாக வந்து நின்றான் கதிர் அரசன். அவனை தன் விழித்திரையில் சிறையேடுத்து கண்களை மெல்ல மூடினாள். 

†††††

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தன் மனதின் அலக்கழிப்பையும், இப்போது பனிமலரின் திணறல் பேச்சையும் இணைத்து பார்த்த கதிர் அரசனின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

இப்போதே பறந்து சென்று தன் பனியை பத்திரமாக, தன் சிறகுக்குள் பொத்தி வைத்துக்கொள்ள முடியுமா? என ஏங்கிய கதிரின் எண்ணத்துக்கு தகுந்தது போல் காரும் சீறி பாய்ந்தது. 

இரவு பத்து மணியை நெருங்கிய போது, அவனது கார் அவர்கள் இல்லம் அடைந்தது. கதவை திறந்த அன்னை சுசிலாவை கண்டு கொள்ளாமல், மாடிப்படிகளில் தாவியேறி தன் அறையை அடைந்தான். 

அங்கு கண்ட காட்சியில் உயிர் உறைய,”பனி” என்ற சத்தத்தோடு அவனது மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவனிட்ட சத்தத்தில், அனைவரும் வரவேற்பு அறையில் கூடிவிட்டனர். 

அவன் வந்த வேகத்தையும், அவன் காட்டிய அவசரத்தையும் தவறாக புரிந்த சுசீலா, சிரிப்புடன் அவன் சென்ற பாதையை பார்த்து நின்றவர், அவனின் சத்தத்தில் பதறி அடித்து மாடியை நோக்கி ஓடினார். 

அங்கு பனிமலர் மூச்சுக்கு திணறி, அரை மயக்க நிலையில்,”கதிர் மாமா” என அரற்றி கொண்டிருக்க, அந்த கதிர் மாமனோ உயிர் உறைய சிலையாக சமைந்து நின்றான்.

“ஐயோ மலர் என்ன ஆச்சு?” என்று பதறி அவளை நெருங்க சென்றவர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கதிரின் தோளை பிடித்து உலுக்கினார். மூளை மரத்து நின்றிருந்த அவனோ, ஒன்றும் புரியாமல் மலங்க, மலங்க முழித்தான். 

“அரசு அவளை தூக்கிட்டு வா” 

“…” அன்னை சொல்வது செவியை தீண்டினாலும், மூளையை தீண்டவில்லை. அதுதான் பனியின் கோலம் கண்டு உறைந்து நின்று விட்டதே.

அவனது பித்து பிடித்த நிலையை கண்டு மனம் வெதும்பியவர்,”அரசு, டேய் அரசு” என அவன் முகத்தில் மாறி, மாறி அறைந்தார். அதில் சுய நினைவு அடைந்தவன் அவளை நோக்கி ஓட,”சீக்கிரம் அவளை தூக்கிட்டு வா. உடனே ஹாஸ்பிடல் கிளம்பலாம்.” 

அவளை பூங்குவியலாக தன் கரத்தில் அள்ளிக்கொண்டு வாசலை நோக்கி ஓடினான்.”கண்ணம்மா உனக்கு ஒண்ணுமில்லை. இதோ இப்போ ஹாஸ்பிடல் போய்டலாம். எல்லாம் சரியாயிடும்.” என வாய், அவளுக்கும் தனக்கும் ஆறுதல் சொல்லி கொண்டது.

கதிரின் கைகளில் இருந்த மலரை கண்டு அனைவரும் பதறினர். கார்த்திகேயனுக்கு மீனாவின் கடைசி நிமிடங்கள் கண் முன் தோன்றி மறைந்தது.

†††††

கதிர், பனிமலருடன் காரின் பின் இருக்கையில் ஏற, கார்த்திகேயன் காரை கிளப்பினார், அவர் அருகில் சுசிலா. மற்ற அனைவரும் அடுத்த காரில் ஏறி, மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

“கதிர் மாமா, நம்ம பாப்பா நல்லபடியா பிறக்குமா?” மூச்சு திணறலுக்கு நடுவே கேள்வி எழுப்பினாள்.

“நல்லபடியா பிறக்கும் பனிமா. நீ தைரியமாய் இரு”

“நீ, நம்ம பாப்பாவ அன்பா பாத்துக்குவயா? என்னை மாதிரி விட்டுடமாட்டியே?”

“நீ, நான், நம்ம பாப்பா எல்லாரும் சந்தோஷமா இருப்போம்டா.”

“நான் பிழைப்பேனு நம்பிக்கையே இல்லை. நம்ம பாப்பாவ நல்லா பாத்துக்கோ.”

அவள் பேசுவதை கேட்ட கதிருக்கு ‘இவ கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருந்தா நல்லா இருக்குமே’ என தோன்றியது.

“சொல்லு மாமா பார்த்துக்குவீல?” 

“இப்படி லூசு மாதிரி பினாத்தினா அறைஞ்சிடுவேன். இருக்க பல்லெல்லாம் கொட்டிப் போயிடும். நம்பிக்கையோடு இரு.” தன் இயலாமையை சீரலாக வெளிப்படுத்தினான்.

“எனக்கு நம்பிக்கை இல்லை மாமா.” பாவமாக உதடு பிதுக்கினாள். 

மூச்சு திணறலுடன் பேசி கொண்டிருப்பவளிடம், கோபத்தை காட்ட முடியாத கதிர் பொறுமையாக,

“இப்படி எல்லாம் பேசக்கூடாது கண்ணம்மா. இந்த பனி இல்லைன்னா கதிர் ஒன்னும் இல்லாமல் போயிடுவான். அடுத்த நிமிஷம் அவனும் உன் கூட வந்துடுவான்.”

அவன் வாயை தன் நடுங்கும் கரங்களால் மூடி,”இந்த பனி உன்னோட வெற்றிக்கு மட்டுமே காரணமா இருக்கணும் மாமா. தோல்வி என்பது உன் வாழ்க்கையில் இருக்கவே கூடாது. இந்த பனி உன்னை விட்டு எங்கும் போக மாட்டா. உன்னையும் நம்ம பாப்பாவையும் சுத்தியே வருவா. கதிரின் அன்பில், காதலில் எப்போதும் பனி உருகி கரைந்திருப்பாள்.”

“கண்ணம்மா” என்றவன் அவளை தன் மார்புடன் அணைத்து கொண்டான். 

“கதிர் மாமா, நம்ம பாப்பாவை என்னை மாதிரி அனாதையா விட்டிட மாட்டீல?” மீண்டும் அதையே கேட்டாள். 

பதில் தெரியாமல் அவள் நிம்மதியா இருக்க மாட்டாள் என்பதை உணர்ந்தவன்,”என் உயிரா பார்த்துக்குவேன்” உறுதி கூறினான்.

தன்னைப் போலவே தன் குழந்தையும் பெற்றோர் பாசம் அறியாது வளரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த பனிமலர், இந்த வாக்குறுதியின் மூலம், குழந்தைக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் கதிரின் வாழ்வுக்கும் ஒரு பிடிப்பை ஏற்படுத்தினாள்.

அவனது வாக்குறுதிக்காகவே காத்திருந்தது போல், அவள் விழிகள் சொருகியது. மூளை மெல்ல மயக்கத்திற்குள் செல்ல. “பனி, பனி கண்ணை மூடாத. ஏதாவது பேசு.” என அவளது கன்னத்தை தட்டி எழுப்பினான்.

சிறிது நேரத்திற்கு முன், அவள் வாயை மூடினால் நல்லா இருக்கும் என நினைத்தவன், இப்போது பேச சொல்லி எழுப்புகிறான். அதேபோல் அவனை மாமா என்று, அவள் அழைக்க வேண்டும் என சீண்டியவனுக்கு, இப்போது அவள் சொல்லும் மாமா கருத்தில் பதியவில்லை. விசித்திரமானது மனித மனம்.

இவ்வளவு நேரம் அவள் பேசியதை கேட்டவாறு வாகனத்தை ஒட்டிய கார்த்திகேயன், உயிரோடு மரணித்தார்.

அவரது நினைவுகள், தன் காதல் மனைவி மீனாட்சியிடம் சென்றது. அவளும் இப்படித்தானே எங்கள் குழந்தையை நினைத்து துடித்திருப்பாள். அவளுக்கு துரோகம் செய்து, எங்கள் குழந்தைக்கு அன்பு காட்டாத பாவியாகிட்டேன்.’இறைவா தவறு செய்த எனக்கு தண்டனை வழங்கு. என் மகளை காப்பாற்று.’ மனதார வேண்டினார்.

அவரது வேண்டுதலை நிராகரித்த இறைவன்,’அதற்குள் துவண்டு விடாதே. நீ பார்க்க வேண்டியது இன்னும் இருக்கிறது’ என மர்மமாக சிரித்தார்.

“பனி கண்ணை மூடாதே” என கதிரின் கதறல் கார்த்திகேயனின் மனதை பத பதைக்க வைத்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இதைத்தானோ? கார்த்திகேயனின் உயிர் துடித்தது இப்போது. இவர்களின் உணர்வு போராட்டத்தை காண முடியாத சுசிலாவும் மௌனமாக கண்ணீர் வடித்தார்.

கதிரின் தொடர் அழைப்பால், நிரந்தர உறக்கம் தடைப்பட, கண்களை திறந்த பனிமலர் சோம்பலாக புன்னகை சிந்தினாள்.”கதிர் மாமா, அரசுவையும் தனாவையும் சேர்த்து வைக்க வேண்டியது, உன்னோட பொறுப்பு. இது என்னோட கடைசி ஆசையா கூட இருக்கலாம்.”

“கண்ணம்மா இப்படி பேசாதடி. என்னை தவிக்க விட்டு போக முடிவு பண்ணிட்டியா?”

“உன்னை தொல்லை பண்ணாமல் நிம்மதியா இருக்க விடுவேன்னு நினைச்சியா? நெவர். இந்த ஜென்மத்துல உன்னை விட்டு நான் எங்கும் போக மாட்டேன்.” முடியாத நிலையிலும் அவனிடம் வம்பு செய்தாள்.

†††††

வாகனம் மருத்துவமனையே அடைய பனிமலரை அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து சென்றனர். செல்லும் முன் கார்த்திகேயனின் கரம், தன் மகளின் கரத்தை பற்றியது.”மலர் என்னை மன்னிச்சுடுடா. இப்போதான் நான் செஞ்ச தவறு புரியுது.” கண்ணீர் வடித்தார்.

அவள் படுத்திருக்கும் ஸ்ட்ரக்சரை, அவசர பிரிவுக்கு தள்ளிய ஊழியர், நிலைமை புரியாமல் பேசிய அவரை முறைத்து ஸ்ட்ரக்சரை வேகமாக தள்ளினார். அந்த அவசரத்திலும்,”அப்பா” என அழைத்து, ஒரே வார்த்தையில் தன் தந்தைக்கு மன்னிப்பை வழங்கினாள், அன்புக்காக ஏங்கிய பனிமலர்.

அவளை காணவுமே, அவளது நிலையை உணர்ந்தவர்கள், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார்கள்.

“ரெண்டு உயிரும் ஆபத்தில் இருக்கு. எங்களால் முடிந்ததை செய்கிறோம்.” என்றனர் மருத்துவர்கள்.

‘என் உயிரை எடுத்துக்கொண்டு. என் மகளை காப்பாற்று’ என கார்த்திகேயன் மனமுருக வேண்டினார். 

‘வயதான காலத்தில் நாங்கள் இருந்து என்ன செய்யப் போகிறோம்? எங்களை எடுத்துக் கொண்டு எங்கள் பேத்தியை காப்பாற்று’ என பர்வதம், பழனிவேல் வேண்டுதல்.

‘பனிமலருக்கு எதுவும் ஆகிவிட்டால், தன் மகன்களின் நிலை என்ன ஆவது?’ என பெற்றோர்களாக சுசிலா, தியாகராஜனின் உள்ளம் துடித்தது.

அனைவரின் எண்ணத்திற்கு நேர் மாறாக,’விட்டது சனியன்’ என சந்தோஷித்தார் சுகந்தி.

அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர்,”பெண் குழந்தை. முப்பது மூன்று வாரம் தான் முடிஞ்சிருக்கு. போதிய வளர்ச்சி இல்லை. அதனால் பேபியை இன்குபேட்டரில் வைக்கிறோம்.”

“டாக்டர் பனிமலர்.” சுகந்தி மட்டுமே பேசும் நிலையில் இருந்தார்.

“சாரி டூ சே திஸ். எங்களால் சின்ன உயிரை மட்டுமே காப்பாத்த முடிஞ்சது.” என இவர்கள் தலையில் இடியை இறக்கினார். 

“அவங்க கொரோனா பேஷன்ட். அதனால் பாடியை உங்ககிட்ட கொடுக்க மாட்டோம். தூர இருந்து அவங்களை பார்த்துக்கலாம். நீங்க எல்லாருமே கோரன்டைன்ல இருக்கணும். அதிலும் இவர்” என கதிரை காட்டி,”பேஷண்டோட க்ளோசா இருந்திருக்காங்க. அவரை ஹாஸ்பிடல அட்மிட் பண்ணி செக் பண்ணனும்.” என விடை பெற்றார்.

புது வருடத்தில் ஜெனித்த குழந்தைக்காக மகிழ்ச்சி அடைய முடியாமல், பனிமலரின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பனியின் இழப்பில் கதிரானவன் உறைந்து போனான். 

கதிரானவனை உருக்க, அவனது பனி மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும்.

அந்த அற்புதம் நிகழுமா? 

Leave a Reply

error: Content is protected !!