வெண்பனி 28

வெண்பனி 28
பனி 28
கதிரின் ஒளி முகத்தில் படர்ந்து கண்களை கூச வைக்க, பறவைகளின் ஒலி இன்னிசை மீட்டி அவனது துயில் கலைக்க, நீண்ட மாதங்களுக்கு பிறகு கதிர் அரசனின் விடியல் அழகாக இருந்தது.
“குட் மார்னிங் கண்ணம்மா.” என கண்களை மூடிய வாரே தன் உயிரானவளுக்கு வாழ்த்து கூறி இமை திறந்தான். அவன் கண் முன்னால் பனிமலரின் புகைப்படம் அழகாக சிரித்தது.
“என்னமோ தெரியல கண்ணம்மா? இன்னைக்கு மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐ லவ் யூ டி.” உற்சாகமாக கிளம்பினான்.
அவனது சந்தோஷ மனநிலை சுகந்தி பேசும் வரை நீடித்தது.
“அரசு கண்ணா எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்?” அவ்வளவு நம்பிக்கையோடு கேள்வி எழுப்பினார் சுகந்தி.
“தாத்தா, தனலட்சுமி வீட்டில் பேசுங்க. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம். ” என சுகந்தியின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தாத்தாவிடம் கூறினான்.
அவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் திகைத்து பார்த்தனர். ‘நிஜமாலுமே அரசு மறுமணத்துக்கு சம்மதித்து விட்டானா?’ என குழம்பினார்கள். நீங்கள் குழம்பவே வேண்டாம், என்னோட பதில் என்றும் மாறாது என அடுத்தடுத்த வரிகள் தெரிவித்தது.
“கண்ணா, தீப்தி இங்க இருக்கும்போது, தனலட்சுமி வீட்ல எதுக்கு பேசணும்?” மனதில் பயப்பந்து உருண்டது.
தனலட்சுமியை மலர், அன்புவின் தோழியாக அனைவருக்கும் தெரியும். ‘அரசுவின் திருமணத்துக்கும், தனலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்?’ என புரியாமல், அனைவரும் திகைக்க, ‘எங்கே அவளை விரும்புகிறேன் என்று சொல்லிவிடுவானோ?’ என சுகந்தி பயந்தார்.
“அன்பு, தனா கல்யாணத்துக்கும், தீப்திக்கும் என்ன சம்பந்தம்?” என புருவமேற்றினான்.
ஒன்றும் புரியாமல் முழித்தவர்களிடம், “அன்புவும் தனாவும் விரும்புறாங்க. அவங்க கல்யாணத்தை பத்தி அவங்க வீட்ல பேசுங்க.” என தெளிவாக கூறி, சுகந்தியின் மனதில் பாலை வார்த்தான்.
அனைவரின் பார்வையும் அன்புவை தொட்டது. ஆம் என தலை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தான். அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“கண்ணா நான் உனக்கும் தீப்திக்கும் எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்னு கேட்டேன்?” என்றார் சுகந்தி அழுத்தமாக.
“அதற்கான பதிலை நேத்தே சொல்லிட்டேன்.” என்றான் அதைவிட அழுத்தமாக.
“அவதான் உன்னை விட்டுட்டு போயிட்டாளே. இன்னும் ஏன் போனவளை நினைச்சுட்டு கிடக்க? இன்னொரு கல்யாணம் பண்ணி வாழ்க்கையை நிறைவா மாத்திக்க வேண்டாமா?”
“நாங்க வாழ்ந்தது சில வருஷமா இருந்தாலும், நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தோம். எனக்கு காலம் முழுக்க அது போதும். இனி என் மகளுக்காக மட்டுமே என் வாழ்க்கை.” உறுதியோடு சொன்னான்.
அந்த உறுதியை உடைத்துப் பார்க்கும் எண்ணத்துடன், “ஒரு பெண் குழந்தைக்கு அம்மா எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியுமா? ஒரு பெண் துணை இல்லாமல் அவளை எப்படி நீ வளர்க்க முடியும்?”
சில நொடிகள் சிந்தித்தான். அவன் சிந்தனை செய்வதை கண்ட சுகந்தியின் மனம் குதூகலம் அடைந்தது. எப்படியும் சம்மதம் சொல்லி விடுவான் என நம்பினார். அந்த நம்பிக்கையை உடைத்தான் நம் நாயகன்.
“சித்ரா அக்கா.” என சத்தமாக அழைத்தான்.
குடும்ப விஷயத்தில் தலையிடாமல், குழந்தை அறையிலிருந்த சித்ரா, குழந்தையுடன் வெளிவந்து “சொல்லுங்க தம்பி.”
“அக்கா பாப்பாவை உங்களால் எப்பவும் பார்த்துக்க முடியுமா?”
அவன் சொல்வது புரியாமல் கேள்வியாக அவனது முகத்தை கண்டார்.
“அக்கா எப்பவும், அதாவது பாப்பா பெரியவளாகிற வரைக்கும், உங்களால் அவளை பார்த்துக்க முடியுமா?” பொறுமையாக கதிர் விளக்கினான்.
அவன் சொன்னதை கேட்டு முகம் மலர,”அது என்னோட பாக்கியம் தம்பி. எனக்கு ஒரு மகள் இருந்தால்? எப்படி பார்த்துக்குவேனோ அது மாதிரி பார்த்துக்கிறேன்.” என்றார் உறுதியாக. ‘தாய் இல்லாமல், இவ்வளவு சிக்கலோடு இருக்கும் இந்த குழந்தைக்காக தான், கடவுள் எனக்கு ஒரு பிள்ளையை கொடுக்கவில்லையோ?’ என மனதில் நினைத்தார்.
“வேறென்ன வேணும்? இதழினிக்கு சித்தினா அது தனலட்சுமி, அன்புவோட மனைவி மட்டுமே. இனி என்னோட கல்யாணத்தை பத்தி யாரும் பேசக்கூடாது.”
“இருந்தாலும் பெண் குழந்…” என ஆரம்பித்தவரின் வார்த்தைகள் தடைப்பட்டது, கதிரின் “என் பனியும் பெண் குழந்தை தான். அம்மா இல்லாமல், அப்பா இருந்தும் இல்லாமல் வளர்ந்தாள். என் இதழினிக்கு நான் அப்பாவா மட்டுமில்லாமல், அம்மாவா இருந்தும் பார்த்துகுவேன். அது போதும் எங்களுக்கு.” என்ற வாக்கியத்தில்.
இனி குழந்தையின் பெயரை சொல்ல முடியாது என்பதை உணர்ந்தவர், அடுத்த ஆயுதத்தை எடுத்து தனக்குத்தானே ஆப்படித்துக் கொண்டார்.
“என்னதான் இருந்தாலும் உனக்கு ஒரு துணை வேண்டாமா?”
“துணை எதுக்கு?”
“??”
அவரது மௌனத்தை கண்ட கதிரே தொடர்ந்தான்,”ஒருத்தியை உருகி உருகி காதலிச்சு, கல்யாணம் பண்ணி, அவ பரலோகம் போகவும், அடுத்த மூணு மாசத்தில் வேற கல்யாணம் பண்ணி, அடுத்த ஒரு வருஷத்தில் புள்ள பெத்துக்குற துணையை பத்தி சொல்றீங்களா?” கதிரின் பார்வை கார்த்திகேயனை குத்தி கிழித்தது.
‘அவன் சொல்வது உண்மைதானே, என் மீனா இறந்து மூணு மாசத்தில், வேற கல்யாணம் பண்ணி, புள்ள பெத்து, அவளுக்கு துரோகம் பண்ணினேன். பிறக்கப் போகும் குழந்தையின் மீது தன் உயிரையே வைத்திருந்த, என் மீனாவின் வயிற்றில் வளர்ந்த என் உதிரத்துக்கு நல்ல தகப்பனா இல்லாமல் போனேன். நான் மீனாவை விரும்பியது பொய்யா? இல்லை உடல் தேவை காதலை மறக்க வைத்ததா? நான் என்ன மனிதன்?’ என கூனிக் குறுகிப் போனார் கார்த்திகேயன்.
கதிரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என முழித்தார் சுகந்தி.
“என் வாழ்க்கை என் பனியோட முடிஞ்சது. எனக்கு துணையா அவளோட நினைவுகள் இருக்கு. அது போதும்.”
அவனது உறுதியை கண்டு சுகந்தியின் கோபம் ஏறியது. வார்த்தைகள் தடித்தது.
“எப்படி இருந்தவன்? எப்ப இப்படி பொண்டாட்டி தாசனா மாறின? அவ ஒரு துரதிர்ஷ்டம் புடிச்சவ. அவ வந்தா குடும்பம் உருப்படாதுன்னு நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். யாராவது கேட்டீங்களா? அதே மாதிரி இப்போ ஆயிடுச்சு. நம்ம குடும்பத்தை பிடிச்ச சனியன் ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருக்கணும். அதை விட்டுட்டு இன்னும் அவளை பிடிச்சு தொங்கிக்கிட்…” என கதிரிடம் ஆரம்பித்து, அனைவரிடமும் வார்த்தைகளை சிதறடித்து கொண்டிருந்தவரின் பேச்சு நின்றது, கதிர் இட்ட, “போதும் நிறுத்துங்க” என்ற கர்ஜனையில்.
பொறுத்துப் பார்த்த கதிர் ஒரு கட்டத்தில் முடியாமல் கத்தி விட்டான். “போதும் நிறுத்துங்க. யாரைப் பத்தி என்ன பேசுறீங்க?”
அதே நேரம் அன்புவும், “வரம்பு மீறி பேசுறீங்க?” என கோபத்தில் எகுறினான். அன்புவை ஒரே பார்வையில் அடக்கிய கதிர், சிங்கமென சுகந்தியின் முன் நின்றான்.
அந்த கர்ஜனையில் சுகந்தி அடங்கி இருக்க வேண்டாமா??? ஆனால்… பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இன்று அந்த ஒரு நாள்.
“உண்மையைத்தானே சொன்னேன்.”
“என்ன உண்மையை கண்டீங்க நீங்க?”
“அவ ஒரு ராசி இல்லாதவ” என்று சுகந்தி கூற, அன்பு தீயென அவரை முறைத்தான்.
பல்லை கடித்து தன் உணர்வுகளை அடக்கிய கதிர், “அவ ராசி இல்லாதவன்னு, எப்படி சொல்றீங்க?” என அழுத்தம் திருத்தமாக கேட்டான்.
சுகந்தி இந்த இடத்திலாவது சுதாரித்திருக்க வேண்டாமா? இது அவரது விதியன்றி வேறென்ன?
“பிறக்கும்போதே ஆத்தாளை முழுங்கிட்டு பிறந்தா.” என்ற அவரின் வார்த்தை சிதறலில், கதிர் தன்னை முற்றும் இழந்தான்.
“மீனா அத்தையோட சாவுக்கு அவ காரணமா?” அவன் கண்கள் அவரை ஈட்டியாக குத்தியது.
இப்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சுகந்திக்கு பயம் பிடித்தது, கால்கள் நடுக்கம் கொண்டது, முகம் வியர்க்க தொடங்கியது. “ஆ.. ஆ..” ஆம் என்று சொல்ல முடியாமல் வார்த்தை தந்தியடித்தது .
“சொல்லுங்க. இவ்வளவு நேரம் பேசினீங்கல. இப்ப சொல்லுங்க. மீனா அத்தையோட சாவுக்கு யார் காரணம்?” அன்புவின் பார்வை சந்தேகமாக இருவரையும் மாறி மாறி பார்த்தது.
“இது என்ன கேள்வி அரசு? அது ஆக்சிடென்ட்.” இது பர்வதம்மாளின் வார்த்தை.
“இருங்க ஆச்சி, அதை உங்க மருமக சொல்லுவாங்க.” பேச்சு அவரிடம் இருந்தாலும், கதிரின் பார்வை சுகந்தியை விட்டு நகரவில்லை.
“என்ன நடந்தது அரசு?” சந்தேகமாக கேட்டார்கள் பழனிவேலும், தியாகராஜனும்.
கதிரின் ஆவேசமும், சுகந்தியின் பயம் நிறைந்த முகமும், அவர்களுக்கு எதையோ உணர்த்தியது. இவ்வளவு நேரம் அவர்கள் பேசியது கார்த்திகேயனின் செவியை தீண்டினாலும், மூளையை அடையவில்லை. ஆனால் இப்போது மூளையை அடைந்த விஷயம், அவரை திகைக்க வைத்தது. அனைவரின் பார்வையும் சுகந்தியின் பதிலை எதிர்பார்த்தது. அவள் பிரம்மை பிடித்தது போல் நின்றாள்.
“மாடிப்படி கிட்ட வச்சு மீனா அத்தை கூட சண்டை போட்டது யார்? அவங்களை மாடியில் இருந்து தள்ளி விட்டது யார்?”
கேட்ட விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அமைதி.
“சொல்லுங்க, இது அனைத்தையும் செஞ்சது யார்? இதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத, என் பனி மேல பழி போடுற உங்களுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“…”
“எதுக்கு மீனா அத்தையை கொன்னீங்க? அவங்க வாழ்க்கையை பறிக்க நினைச்சது எதுக்காக?”
“இல்ல, இல்ல, இல்ல நான் அவ வாழ்க்கையை பறிக்கல. அவ தான் என்னோட வாழ்க்கையை பறிச்சா. அவளை நான் கொள்ளல்ல. அவ மாடியில இருந்து தவறி விழுந்து செத்தா. அது ஆக்சிடென்ட்.” ஆவேசமாக கத்தினார்.
†††††
“எனக்கு சின்ன வயசுல இருந்தே மாமாவை ரொம்ப பிடிக்கும். அதுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு கல்யாணம் பேசினாங்க. என் மனசுல அவரை கணவனா நினச்சு வாழ ஆரம்பிச்சிட்டேன்.
திடீர்னு வந்து மீனாவ தான் கட்டிக்குவேன்னு மாமா சொன்னாங்க. வீட்ல எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. என்னால அதை தாங்கவே முடியல. அனாதையா இருந்த எங்களுக்கு ஆதரவு தந்த அத்தை மாமா கிட்ட உரிமையோட கேட்கவும் முடியல. என் மனச யாரும் பார்க்கல. என் கூட பிறந்த அண்ணன் கூட பார்க்கல.
என் கண் முன்னாடியே என் புருஷன், அவளுக்கு தாலி கட்டி, குடும்பம் நடத்துறார். அது எனக்கு எப்படி வலிச்சிருக்கும்? நீயே சொல்லு அரசு.”
பனிமலர், கௌவுதமின் திருமணம் நிச்சயமான போது தனக்கு வந்த கோபத்தை நினைத்தான் கதிர் அரசன். கௌதமை கொள்ளும் வெறி வந்தது மனதில் நிழலாடியது. எப்படியாவது அந்த கல்யாணத்தை நிறுத்தி, பனியை தனக்கு சொந்தமாக்கிக்க, தான் எடுத்த முயற்சிகளை நினைத்தவனின், உதட்டில் ரகசிய புன்னகை தோன்றியது. ஆனாலும் முகம் இறுக்கத்தை காட்டியது.
“அன்னைக்கு வீட்ல யாரும் இல்ல. அரசு தூங்கிட்டு இருந்தான். அப்ப ஏதோ எடுக்க அவ இங்க வந்தா. நான் மாமா படத்தை வச்சு பேசிகிட்டு இருக்கிறதை பார்த்து, சண்டை போட்டா. நானும் அவளை மாமாவை விட்டு விலகி போக சொல்லி சண்டை போட்டேன். சண்டை முத்திடுச்சு. அதில் கோபமா படி இறங்கும்போது, நிதானம் தவறி அவ கீழே விழுந்துட்டா. அதுக்கு நான் எப்படி பொறுப்பு? என் மனசுல ஆசையை வளர்த்துவிட்டுட்டு, அவர் உனக்கு இல்லைனு சொன்னா, நான் விட்டுகுடுக்கணுமா?”
அவர் கேட்பது சரிதானே. தவறு சுகந்தியின் மீது மட்டுமில்லையே? அவள் மனதில் ஆசையை வளர்த்த அனைவர் மீதும் உள்ளதே.
“அன்னைக்கு அந்த போட்டோவோட அவ என்னை பார்க்கலைனா, என்னோட காதலை யாருக்கும் தெரியாம மனசுல புதச்சு இருப்பேன். அவ கேட்கவும் கோவம் வந்திருச்சு. நானும் சண்டை போட்டேன். ஆனா அவ மாடில இருந்து தவறி விழுந்து செத்துப்போவான்னு நினைக்கல. அவளை காப்பாத்த ட்ரை பண்ணுனேன். முடியல. அந்த நேர கோபத்துல சண்டை வந்ததே தவிர அவ சாகணும்ன்னு நினைக்கல.” என ஓய்ந்துபோய் அமர்ந்தார். இத்தனை நாள் மனதை அழுத்திய பாரம் விலகியது.
அவர் சொல்லியதை கேட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
“இத்தனை நாள் இதை ஏன் சொல்லாமல் இருந்த அரசு?” என்ற தந்தையின் கேள்விக்கு, “அப்ப நான் ரொம்ப சின்ன பையன்பா, என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல. அதுக்கப்புறம் அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. நான் காலேஜ் படிக்கும்போது, இந்த சம்பவம் ஞாபகம் வந்தது. அதுக்கப்புறம் சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை வரும்னு மறச்சிட்டேன்.”
“அவங்க மொட்டுவை எவ்வளவு பேசுனாங்க? அவ ஆசைப்பட்ட படிப்பை கூட படிக்க முடியாம பண்ணாங்க. அப்பவாது சொல்லி இருக்கலாம்ல?” என்ற அன்புவின் ஆதங்கத்திற்கு,
ஒரு பெருமூச்சுடன், “எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வரும் போது நான் மதுரைல இருந்தேன். அப்ப இவங்க பனியை பேசுறது குறஞ்சுயிருந்தது. அவ விரும்பி அந்த படிப்பை படிச்சான்னு நினைச்சேன். நீங்க காலேஜ் முடிச்ச பிறகு தான் எனக்கு தெரிஞ்சுது.”
சிறிது இடைவேளை விட்டவன், சுகந்தியிடம் திரும்பி, “பனியை எதுக்கு வீட்டை விட்டு ஒதுக்கி வச்சீங்க?”
“அவளை பார்த்தா என் கண்முன்னாடி துடிச்ச, அவ அம்மா முகம் நியாபகம் வரும். கைவிட்டு போன பொக்கிஷம் திரும்ப கிடைச்சது போல் மாமா எனக்கு கிடைச்சார். அந்த குழந்தை கண் முன்னாள் இருந்தா ரெண்டு பேருக்கும் உறுத்தல் இருக்கும், அதுனால சின்ன விஷயத்தை பெருசு பண்ணி அவளை வீட்டை விட்டு அனுப்பினேன். அதுவுமில்லாமல் அவமேல் எல்லோரும் பாசத்தை வைத்தால், என்னையும் என் பொண்ணையும் ஒதிக்கிடுவாங்கன்னு பயம். அவகிட்ட யாரையும் ஓட்டவிடாம பண்ணுனேன்.”
இத்தனை வருடம் மனதில் பயத்தை வைத்து வெளியே அரக்கியாக இருந்த சுகந்தியை நினைத்து கலங்குவதா? இல்லை அனைத்து சொந்தம் இருந்தும் அனாதையாக இருந்த பனிமலரை நினைத்து கலங்குவதா? என தெரியாமல் தவித்தனர்.
இதில் அதிகம் அடி வாங்கியது கார்த்திகேயன். தன் மீனாவின் சாவிற்கு காரணமான பெண்ணுடனே, கூடி கழித்த தன் மீதே அருவருப்பு தோன்றியது. இவளது பேச்சைக் கேட்டு பனிமலரை ஒதுக்கி வைத்ததை, நினைத்தால் நெஞ்சம் வலிப்பது போலிருந்தது.
நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தார்.
†††††
கார்த்திகேயனை அடித்து பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒன்றும் இல்லை என தெரிந்த பிறகே அனைவரின் மனமும் அமைதி அடைந்தது.
அவருக்கு மயக்கம் தெளிந்து, அனைத்து பரிசோதனைகளையும் முடித்து, அவரை இல்லம் சேர்க்கும்போது மாலை கடந்து இரவை தொட்டிருந்தது.
கார்த்திகேயன், சுகந்தியுடன் பேசாமல் அவரை ஒதுக்கி வைத்தார். இத்தனை வருடம் குடும்பம் நடத்தியும், தான், அவர் மனதை துளி கூட கவரவில்லையா? என சுகந்தி மனதளவில் அடி வாங்கினார். தன் நிலை தன் மகளுக்கும் வரக்கூடாது, என அவள் விரும்பியவனுடன் இணைத்து வைக்க முடிவெடுத்து தொலைப்பேசியை கையில் எடுத்தார்.
கலவையான உணர்வுகளுடன் கதிர் தன் அறையில் நுழைந்து, பனியின் புகைப்படத்தின் முன் நின்றான்.
“இத்தனை நாள் உங்க அம்மா எப்படி இறந்தாங்கன்னு, சொல்லாமல் இருந்ததுக்கு என்னை மன்னிச்சுடு கண்ணம்மா. சுகந்தி அத்தை மேல எப்பவும் ஒரு கோபம் இருந்துகிட்டே இருந்துச்சு. இன்னைக்கு பேசும் போது அவங்க உணர்வு புரிஞ்சது. நானும் அந்த நிலையில் நின்னவன். உனக்கும், கௌதமுக்கும் கல்யாணம்னு தெரிஞ்சதும், நான் துடுச்ச துடிப்பு என் கண் முன்னாடி வந்துச்சு. மூணு வருஷத்துக்கு முன்னாடி, நான் இருந்த அதே இடத்தில், இருபத்தி ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இருந்திருக்காங்க. பாவம் அவங்க. உன்கிட்ட மறச்சதுக்கு மறுபடியும் சாரி.” என மனதார பனிமலரிடம் பேசியவன் படுக்கையில் விழுந்தான்.
படுத்த அடுத்த நொடி விருட்டென எழுந்தவன், தன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நேற்று இந்த படுக்கையில் நடந்த கூடலின் காட்சி மங்கலாக கண்முன் தோன்றியது.
அந்த மலர் கரங்கள் அவனை ஆறத் தழுவியது, தலைக்கோதியது, உடலை வருடியது, அதன் இதழ்கள் எண்ணற்ற முத்தங்களை பதித்தது. கண்மூடி அந்த நிமிடங்களை சுகமாக உள்வாங்கினான். இப்போதும் அந்த பெண்மையின் கதகதப்பு உடலை தகிக்க வைத்தது.
தத்ரூபமாக வந்த கனவை நினைத்தவனின், உடல் பனியா(ல்)க உறைந்து சில்லிட்டது.