வெண்பனி 5

IMG-20220405-WA0023-c8eaf8ce

வெண்பனி 5

பனி 5

யாருக்கும் பிடிக்காமல்

இந்த உலகையும் வெறுத்து

உன்னையும் வருத்திக்கொண்டு

இருப்பதை காட்டிலும்

பெரிய கொடுமை

இந்த உலகில் எதுவும் இல்லை.

கார்த்திகேயனுக்கும் சுகந்திக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் அதே காட்சி அரங்கேறியது.

சுகந்தி கர்ப்பம் தரித்தார். ஆனால் முன்பு போல், இப்போது அந்த வீட்டில் பரபரப்பு இல்லை. ஏற்கனவே அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் பிறந்ததால் பழகிவிட்டது போல?

வாந்தி, மயக்கம் என்பது போல கர்ப்ப கால உபாதைகள் சுகந்தியை ஆக்கிரமித்தது. சோர்ந்தே படுத்திருந்தார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, குழந்தையை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்தார் சுகந்தி.

ஒரு நாள், காலை உணவு வேளையில், அனைவரும் கூடியிருக்கும் போது நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தார்.

“அத்தை! இப்போதெல்லாம் வாந்தி, மயக்கமென சோர்ந்து படுத்துடறேன்.” என்றார் மெதுவாக.

‘இது கர்ப்பமாக இருக்கும் அனைவருக்கும் உள்ளது தானே. இதில் புதிதாக சொல்வதற்கு என்ன உள்ளது?’ என பர்வதமும் சுசிலாவும், சுகந்தியை கேள்வியாக பார்த்தனர்.”அது வந்து… அதனா… அதனால குழந்தையை கவனித்துக் கொள்ள முடியிறதில்லை.” என குற்றஉணர்வில் திக்குவது போல் நடித்தார்.

பனிமலரின் பெயரை சொல்லி திருமணம் நடந்திருந்தாலும், ஒரு நாளும் சுகந்தி குழந்தையை கவனித்துக் கொண்டதில்லை. அது அவர்கள் மனதில் பதிந்ததா என்பது சந்தேகமே.

“அதுனால என்ன? அதுதான் நாங்க பார்த்துக்கறோம்ல” என சுசிலா மென்மையாக கூறினார்.

“அது இல்ல அண்ணி” என தயங்கினார்.

‘சொல்ல வந்ததை சொல்லி முடி’ என்பதாக மட்டுமே இருந்தது அனைவரின் பார்வையும்.

“அரசு சின்னப் பையன். அன்புவும் கைக்குழந்தை. நீங்க ரெண்டு பேத்தையும் பார்த்துக்கிறதே கஷ்டமா இருக்கும். இதுல நானும் அப்பப்ப படுத்துகறேன். என்னை வேற பார்த்துக்கவேண்டியிருக்கு. அதனால…” என இழுத்தார். 

தன் மனதில் உள்ளதை சொல்வதற்கு சிறிது தயக்கமாக தானிருந்தது. இந்த வீட்டின் முதல் வாரிசு பனிமலர். அவளை இந்த வீட்டை விட்டு அனுப்ப, பெரியவர்கள் சம்மதிப்பார்களா என்பதில் வந்த தயக்கம். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும், பனிமலரை அந்த வீட்டை விட்டு அனுப்புவதில் உறுதியாக இருந்தார்.

கதிர் அரசன் பெரியவனாக இருந்தாலும், அவன் மகள் வழி வாரிசே. இந்த குடும்பத்தின் வாரிசு என்று பார்க்கும்போது பனிமலர் தான் மூத்தவள். 

“அதுக்கு?” இப்போது பர்வதம், சுகந்தியின் பார்வையை நேற்கொண்டு சந்தித்து கேள்வி எழுப்பினார்.

“குழந்தையை கொஞ்… நாள் மீனா அக்காவோட… அம்மா, அப்பா கிட்… குடுத்து பார்த்துக்கலாம்.” என மென்று முழுங்கி ஒரு வழியாக சொல்லி முடித்தார்.

“இத்தனை பேர் இருக்க வீட்டில், ஒரு குழந்தையை பார்த்துக்க முடியாதா? அவ இங்கதான் வளரணும். அங்க எல்லாம் அனுப்ப முடியாது.” என தீர்க்கமாக பதில் வந்தது பழனிவேலிடம்.

இவரிடமிருந்து மறுப்பை எதிர்பார்க்காத சுகந்தி,”இல்ல மாமா… அவளை அனுப்பிடலாம்…” குழந்தையை அனுப்புவதில் முனைப்பாக இருந்தார் சுகந்தி.

“அவளை அனுப்ப சொல்லுறதுக்கு இது மட்டும்தான் காரணமா?” என கூர்மையாக கேள்வி பிறந்தது அந்த அனுபவம் வாய்ந்தவரிடமிருந்து.

பழனிவேலிடம் பேசுவதற்கு எப்போதும் சுகந்திக்கு உதரலேடுக்கும். அதை ஒதுக்கிவிட்டு,”அது… மாமா… அவ பிறந்த நேரமே… சரியில்ல. பிறக்கும்போதே அவ அம்மாவை முழுங்கிட்டா… அவ இங்க இருந்தா, எனக்கும்… என் குழந்தைக்கும்… ஆபத்து வந்துருமோன்னு பயமா இருக்கு.” திக்கி திணறி மனதில் உள்ள விஷத்தை கக்கி முடித்தார். 

அவளது பேச்சை கேட்ட அனைவரும் ஸ்தம்பித்து போயினர். முதலில் சுதாரித்தது கார்த்திகேயன்.

“அவ சொல்றதும் கரெக்ட் தானே ப்பா? அவ மீனா வயிற்றில் உருவாகவும், மீனாவை இந்த வீட்டை விட்டு அனுப்பி, எங்களை பிரித்தாள். பிறக்கும் போதே என் மீனுவை கொன்னுட்டு, நிரந்தரமா எங்களை பிரிச்சுட்டா. இப்போ இவங்களுக்கும் ஏதாவது ஆகிடுச்சின்னா என்ன பண்ணுறது? கொஞ்ச நாள் குழந்தை அவங்க பாட்டி தாத்தா கூட இருக்கட்டும்.” என சுகந்திக்கு ஆதரவு கரம் நீட்டினார் கார்த்திகேயன்.

இந்த இடத்தில் ஒன்றை மறந்தார். மீனா அந்த வீட்டிலிருந்து செல்வதற்கு, பனிமலர் உருவாகியது மட்டும் காரணமல்ல, அன்பரசன் உருவாகியதும் ஒரு காரணமே. இதை எப்போது உணர்ந்து, அந்த சிறு மலருக்கு இழைத்த அநீதிக்கு மன்னிப்பு வேண்டுவார்?

“மீனாவுக்கு நேரம் சரியில்ல அவ போய்ட்டா. அதுக்கு இந்த குழந்தை எப்படி பொறுப்பாக முடியும்? அவ நம்ம வீட்டு வாரிசு. அவளை எப்படி அங்க அனுப்ப முடியும்?” என்று பழனிவேல் சற்று கோபமாகவே நியாயத்தை பேசினார்.

அவரது பேச்சைக் கேட்டு,’எங்கே தன் திட்டம் பலிக்காமல் போயிடுமோ?’ என சுகந்தி அரண்டு விட்டார். ‘அடுத்து என்ன பண்ணலாம்?’ என சிந்தனையில் இறங்கினார்.

“அவங்களுக்கும் இவள் மட்டும் தான் ஒரே பேத்தி. இவளை பார்த்துக்க அவங்களுக்கும் உரிமையிருக்கு. குழந்தையை அவங்க கிட்ட குடுங்க.” என உறுதியாக முடித்தார் கார்த்திகேயன். சுகந்தி போட்ட தூபம் கார்த்திகேயனிடம் நன்றாகவே வேலை செய்தது. சுகந்தியின் அரண்ட முகம் தெளிந்தது. 

கார்த்திகேயன் சில விஷங்களை மறந்தார் ‘மீனாவிற்கு இந்த குழந்தையின் மீது, எவ்வளவு பாசம் என்பதை சிந்திக்க மறந்தார்; என் உதிரத்தில் பிறக்க போகும் உங்கள் உயிர் துளி, என மீனா அவ்வளவு வலியுறுத்தி சொன்னதை மறந்தார்; குழந்தையை புறக்கணிப்பதே, மீனாவிற்கு செய்யும் மிக பெரிய துரோகம் என்பதை மறந்தார்; அவர் செய்வது அனைத்தும், மீனாவுக்கு செய்யும் துரோகம் மட்டுமே என்பதை மறந்து, இவர் பிதற்றி கொண்டிருக்கிறார் என் மீனா என.

பெற்ற தகப்பனே, குழந்தையின் மேல் அக்கறையில்லாமல் அனுப்பும் போது, மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? 

ஆறு மாதங்கள் கூட முடியாத, பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தையான பனிமலரை, அவளது தாய் வழி பாட்டி, தாத்தா மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே சொந்தம் இந்த குழந்தை மட்டும் தானே? 

குழந்தையை வீட்டிலிருந்து அனுப்பியதோடு மட்டும் அடங்குமா, சுகந்தியின் ஆட்டம்?

†††††

நாட்கள் நகர்ந்தது சுகந்திக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த முறையும் கார்த்திகேயனுக்கு பிறந்தது பெண் குழந்தையே. அதில் பெற்றோருக்கு சற்று வருத்தமே. ஆண் குழந்தையை வாரிசாக பார்க்கும் இந்த சமுதாயத்திலிருக்கும் அவர்கள், ஆண் வாரிசை எதிர்பார்ப்பது தவறு இல்லையே?

கதிர் அரசனுக்கு குழந்தையை பார்க்க ஆசையாக இருந்தாலும், அந்த குழந்தையை வாங்க அவன் கரம் நீளவில்லை. அவன் குழந்தையை தொடாமல் இருந்ததை கவனித்த சுகந்தி,

“அரசு இங்க வா” என அவனை அழைத்து குழந்தையிடம் நிற்க வைத்து,”இவதான் நீ கட்டிக்க போற பொண்ணு. உன்னோட பொண்டாட்டி. நீ தான் இவளை நல்லா பார்த்துக்கணும்” என அவன் மனதில் இப்போதே பதிய வைக்க முயன்றார். 

“இந்தா இவளை தூக்கிக்கோ” என அவனிடம் கொடுக்க முயன்றவரை, தடுத்து “இருக்கட்டுமத்தை. நான் இப்படி உங்க கையில இருக்கும்போது பார்த்துக்கிறேன்.” என பட்டும்படாமலும் கூறி முடித்தான். சுகந்தி அவனை புரியாமல் பார்த்தார்.

குழந்தைக்கு முப்பது நாட்கள் முடிந்த நிலையில், பெயர் சூட்டுவதற்கு நல்ல நேரம் பார்க்க குடும்ப ஜோசியரை வீட்டுக்கு அழைத்தனர். அவரும் நல்ல நேரம் குறித்துக் கொடுத்தார்.

“ஐயா! இந்த வீட்டின் முதல் வாரிசு பனிமலர். அவளோட தாய்வழி பெற்றோர்களுடன் இருக்கா. அவளை எப்போது இந்த வீட்டிற்கு, மீண்டும் அழைத்து வரலாம்?” என்று  கேள்வி எழுப்பினார் தியாகு. தங்கை செய்த பாவத்தை தீர்க்க முயன்றாரோ?

“குழந்தையோட ஜாதகத்தை குடுங்க. பார்த்து சொல்லுறேன்.” என்று அவர் கேட்க, அப்போதுதான் அவர்களுக்கு உரைத்தது, வீட்டில் நடந்த பிரச்சனைகளால்,’இரண்டு குழந்தைகளுக்கும் இன்னும் ஜாதகம் எழுதவில்லை’ என.

அதை மறைக்காமல் அவரிடம் சொல்ல,”அதனால் என்ன? அவங்க பிறந்த தேதியையும் நேரத்தையும் சொல்லுங்க நானே கணித்து எழுதி தரேன்” என எளிதாக தீர்வு கூறினார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்க போவது தெரியாமல். அவளது வாழ்க்கையில் அன்பு பாசத்தை பறிக்க போவது தெரியாமல். அவர் கரங்களால் பெண்ணவளின் விதி எழுதப்பட்டது.

முதலில் அன்பரசனின் ஜாதகத்தை எழுதி,”நல்ல ராசியான ஜாதகம். பெயரைப் போலவே அன்பை அனைவருக்கும் வாரி வழங்குவான். வெளிநாடு செல்லும் யோகம் இருக்கு. வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவான்.” என அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கினார்.

அடுத்ததாக பனிமலரின் ஜாதகத்தை கணிக்க, அவரது முகம் முற்றிலும் குழம்பிப்போனது. ஒரு தடவைக்கு இரு தடவை முயன்றும், மீண்டும் அவருக்கு அதே பதிலையே வழங்கியது போல். அவர் முகத்தினில் கவலை, மகிழ்ச்சி, ஆச்சரியம் என அனைத்தும் கலந்து ஜொலித்தது.

“நல்ல யோக ஜாதகம். இந்த மாதிரி ஒரு ஜாதகத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.” என முதலில் பர்வதம்மாளின் மனதில் பாலை வார்த்தவர், தன் தொடர் பேச்சினால், அடுப்பை பற்ற வைத்தார்.

“இந்த குழந்தை பிறக்கும் போதே ஒரு உயிர் இந்த மண்ணை விட்டு போயிருக்கும். அவளை சுற்றி வஞ்சங்கள் நிறைந்திருக்கும். அவளது திருமணம் வரை, பல இன்னல்களையும் இழப்புகளையும் சந்திப்பாள்.  அதன் பிறகு இந்த உலகிலகத்திலேயே, யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம், இந்த குழந்தைக்கு கிடைக்கும். அவளும், அவளது கணவனும் ராமர் சீதையை போல், ஒருவருக்கு ஒருத்தி என வாழ்வார்கள். அந்த ஆண்டவனால் கூட இவர்களை பிரிக்க முடியாது. அதேநேரம் சீதை அனுபவித்ததுபோல் பல இன்னல்களை இந்தப் பெண் கண்டிப்பாக அனுபவிப்பாள். பல கஷ்டங்களை அவள் கடந்து வர வேண்டும்.” என அனைவர் மனதையும் குழப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

“பாத்திங்களா, பாத்திங்களா. நான் சொன்னேன். யாரும் நம்பல. அவ ராசி இல்லாதவ. அவ இந்த வீட்ல இருந்தா நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் வரும். இனி அவ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது.” என சுகந்தி, அவர்களது குழம்பிய மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

ஜோசியர் கூறியது ‘அந்தப் பெண் அதிக கஷ்டத்தை அனுபவிப்பாளென்று’ ஆனால் சுகந்தி ஆடிய நாடகத்தில் குடும்பத்துக்கு கஷ்டமென மாற்றிவிட்டார்.

ஜாதகம், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகளில் அதிக பற்றுடைய பெரியோர்களும், அதை நம்பி பனிமலரை அந்த வீட்டுக்கு அழைத்து வருவதை மறந்துவிட்டனர். அன்புக்கு ஏங்கியே மனதலவில் அந்தப் பெண் அதிக கஷ்டத்தை அனுபவிப்பாள் என்பது புரியாமல் போனது தான் விந்தை. எப்போதாவது கடமைகென அனைவரும் அவளை சந்தித்து விட்டு வருவார்கள்.

ஏற்கனவே தன் மனைவியின் சாவிற்கு, இவள் தான் காரணம் என நினைத்திருத்த கார்த்திகேயன், இந்த நிகழ்விற்கு பின் பனிமலரை ஒட்டு மொத்தமாக தலை முழுகினார்.

பிறக்கும் போதே தாயை இழந்து, பெற்ற தகப்பன் உயிரோடு இருந்தும் இல்லாமல்ப்போய், தாத்தா, பாட்டியின் அரவணைப்பில், அன்பரசனின் தோழமையில், கதிர் அரசனின் கண்பார்வையில், வளர்ந்தாள் நம் நாயகி பனிமலர்.

கார்த்திகேயன் சுகந்தியின் குழந்தைக்கு தீப்தி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 

பனிமலருக்கு பத்து வயது ஆகும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் காலம் கடந்தது. பத்து வயதில் அவளது மூன்றாவது இழப்பு, அவள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்தது. அன்புக்காக ஏங்க வைத்தது.

†††††

ராஜேந்திரன், ரத்தினம்மாள் இவர்களே பனிமலரின் செல்ல தாத்தா பாட்டி. அவர்கள் இருவரும் தனது பேத்தியை, உள்ளங்கையில் வைத்து தாங்கினர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இவள் துரதிஷ்டமானவளென தூற்றி,  அக்கம்பக்கத்து குழந்தைகள் யாரும் அவளுடன்  விளையாட மாட்டார்கள். கொஞ்சம் பெரியவனான கதிர் அரசன் மட்டும், அவளை பார்க்கும் போது சிரித்து பேசி விட்டு செல்வான். தாத்தா வயல் வேலைக்கு சென்று விடுவார். அவள் தனிமையிலேயே, பாட்டியை மட்டும் துணையாக கொண்டு நாட்களை கடத்தினாள். 

இப்படிப்பட்ட நிலையில் தான், அவள் பள்ளி படிப்பை தொடங்கினாள். அவளுடன் ஒரே வகுப்பில் அன்பரசனும் இணைந்தான். இதுவரை அவர்களுக்கு அத்தை மகன், மாமன் மகள் என்ற அறிமுகம் மட்டுமே இருந்தது. 

‘எப்படியும் இவனும் நம்முடன் பேச மாட்டான்.’ என ஒதுங்கி சென்ற பனிமலரை தொடர்ந்து வந்து நட்பு பாராட்டினான் அன்பரசன். 

“ஹாய் மொட்டு! நான் அன்பரசன்” என நட்பு கரத்தை நீட்டினான்.

‘தன்னுடன் பேசினானா?’ என திகைத்துப் பார்த்த பெண்,”நான் மொட்டு இல்ல. மலர்.” கலகலவென சிரித்து நட்பு கரத்தை பற்றினாள்.

“நீ குட்டியா, அழகா, அந்த மொட்டு மாதிரிதான் இருக்க. எனக்கு நீ மொட்டு தான்” என அங்கிருந்த ரோஜா செடியில் இருந்த ரோஜா மொக்கை காட்டினான். 

“ஹே! நான் அவ்வளவு அழகா இருக்கேனா? அரசு” என அவனுக்கு செல்லப் பெயரை சூட்டினாள்.

அன்று முதல் ஒருவருக்கு ஒருவர், மொட்டுவாகவும் அரசுவாகவும் மாறினர். அவர்களது நட்பு இறுகி பெருகியது. அதை உடைக்க முயன்ற சுகந்தியின் அத்தனை முயற்சியும் தவிடு பொடியானது. இந்த இடைப்பட்ட நிலையில், கதிர் அரசன் அவளிடமிருந்து விலகி, எப்போதும் இவர்களை வம்பு செய்து கொண்டே இருப்பான்.

நாளுக்கு நாள் இவர்களது நட்பு பெருகிய அளவு, அவர்களது குறும்பும் பெருகியது. எது செய்தாலும் சேர்ந்து செய்து, சேர்ந்தே மாட்டிக் கொண்டு, தப்பித்து செல்வர். ஜோடி புறாக்களென பெயர் சூட்டும் அளவு அவர்களது நெருக்கம் இருந்தது.

ஜாதகம், ஜோசியம் என்ற மூடநம்பிக்கைகள் இல்லாத ரத்தினம்மாளுக்கு, தெய்வ நம்பிக்கை அதிகம். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று விடுவார். ஈஸ்வரனின் மீது உள்ள பற்றின் காரணமாகவே, ஆதி பரமேஸ்வரனின் பாதியானவளின் பெயரை, தன் குழந்தைக்கு மீனாட்சி என வைத்தார்.

அவருடன் வளர்ந்த பனிமலருக்கும், தெய்வ நம்பிக்கை என்பதை விட, ஈஸ்வரனின் மீது அலாதி பிரியம், காதல் என்று கூட சொல்லலாம். தன் மனதில் உள்ள குறைகள் அனைத்தையும், ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்வது போல் ஈஸ்வரனிடம் பகிர்ந்து கொள்வாள். அவளையே பின்பற்றும் அன்பரசுவுக்கும் இந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. 

அவர்கள் வாயிலிருந்து “ஈஸ்வரா” என்ற வார்த்தை, வராமல் இருந்த நாட்களை கண்டு கொள்ள முடியாது. 

அவர்களது பக்தியை சோதிப்பது போல் பரமேஸ்வரன் தனது ஆட்டத்தை தொடங்கினான் அவளது எட்டாவது வயதில். 

ஆண்டவனால் கூட பிரிக்க முடியாத, ராமர் சீதையின் உறவு பனிமலர்க்கு யாருடன் அமையப் போகிறது?

சுகந்தியால் கூட பிரிக்க முடியாத அன்பரசன் கூடவா? 

தீப்தியை தீண்ட கூட தயாராக இல்லாத கதிர் அரசன் கூடவா?

அல்லது வேறு யாரும் புதிதாக களம் இறங்குவார்களா?

Leave a Reply

error: Content is protected !!